வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து வீராயிக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்த ராக்கம்மா சொன்னாள்.
“பேச்சி வந்துருக்கா ….. நீ போயி பாத்தியா?”
“எந்தப் பேச்சி? ….. பெருமாளு பொண்டாட்டியா?”
தலை அரிப்பெடுக்க வீராயி வரட் வரட்டென்று சொறிந்தாள்.
“பொறுடி. …. அதே எடுக்கன்ல, சன்னப் பதவலா இருக்கு? ஈசப்புத்து மாதிரி எடுக்க எடுக்க வந்துட்டுல்ல இருக்கு …… பேசாம சீவக்காய் பொடில மூட்டப்பொடிய போட்டு தலக்கி தேச்சு முழுகு வாயிலகண்ணுல பட்றாம் ! ஒரு பேனு இருக்காது.”
மறுபடியும் தலையைச் சொறிந்து கொண்டாள்.
“எந்தப் பேச்சிய சொல்ற”
“அதாண்டி … மலக்கிப் போனாகள்ல …… செவனாண்டி பொண்டாட்டி?”
“அவளா? …. வந்துருக்காளா….? பெறகு போகனும்.”
“ஊரே போயி பாக்குது நீ பெறகுங்ற?”
“அப்படின்னா அவ முழுகாமலா வந்துருக்கா?”
பொசுக்கென்று சிரித்தார்கள்.
“பேரம் பேத்தி எடுத்தாச்சு ….. இனி முழுகாம இருந்தா நல்லாத்தே இருக்கும்.”
“அப்படின்னா அவ அதிசயமாவா வந்துருக்கா?”
“ஆமாடி…. அதிசயந்தே ….. மலக்கிப்போயி எழுத்துப் படிச்சிட்டு வந்துருக்கா …. அவபேர எழுதுறா… ஏம்பேர எழுதுறா…… எல்லார் பேரையும் எழுதுறா!! ”
“நெசமாத்தானா!!”
வீராயிக்கு நம்ப முடியவில்லை. திறந்தவாயும் மூடவில்லை. தலை அரிப்பெடுக்க உணர்வு வந்தது.
“அவ எழுதுன எழுத்து ஒனக்கு எப்படித் தெரியும்? நீ எங்க போயி
படிச்ச?”
“ஏம் பேரன் படிச்சிருக்கான்ல …… அவன கூடக் கூட்டிட்டுப் போனேன்.”
“என்ன பேச்சியப் பத்தியா பேசுறீங்க?” கேட்டுக் கொண்டு தங்கம்மாள் வந்தாள்.
“ஆமா ….. இவ நம்ப மாட்டளாம் …. நீ சொல்லு.”
“ஏம் பேரக் கூட எழுதுனா. மலக்கிப் போனதுக்கு எழுத்தாவது படிச்சாளே….”
“அங்க போயி எப்படி படிச்சா?”
“அங்க எல்லாரையும் படிக்க வச்சுட்டாங்களாம்.”
“அப்படியா!… வாங்க இப்பயே போயி பாப்பம்.
மூவரும் நடந்தார்கள்.”
“ராக்கு….. ஒம் பேரனையுங் கூப்புட்டுக்க.”
ஐந்தாவது படிக்கும் பேரனை கையோடு கூட்டிக் கொண்டு போனர்கள்.
“எதச் சொன்னாலும் எழுதுறா…. வீடு, மாடு, எரும, எது வேணுலும் எழுதுறா.”
இவர்கள் போன போது ஒரு கூட்டமே அங்கு இருந்தது. குடிசைக்கு வெளியில் உட்கார்ந்து சிலேட்டில் குச்சி வைத்து பேச்சி பெருமையாக எழுதிக் கொண்டிருந்தாள்.
“பாண்டி …. எழுது பாக்கலாம்” எழுதினாள்
“மாரிமுத்து ……” எழுதினாள்.
“ஏம் பேர எழுது …..” வீராயி சொன்னாள்.
நிமிர்ந்து பார்த்து விட்டு எழுதினாள். ராக்கம்மா பேரனை கூப்பிட்டு படிக்கச் சொன்னாள்.”
“வீராயி….”
நாமளும் படிக்கணும். அத பெறகு இவள்ட்ட கேக்கணும். மனதுக்குள் வீராயி நினைத்துக்கொண்டாள். ஒவ்வொருவருக்கும் இந்த நினைப்பு வந்தது.
வீராயிக்கு பேச்சி மதினி முறை வேண்டும். மனதுக்குள் லேசாக சிரித்துக் கொண்டு கேட்டாள்.
“சரி இப்ப நாஞ் சொல்ற பேர எழுது…. நாச்சிமுத்து” எழுதினாள்.
“இப்பச் சொல்றத எழுது …… என்ன?”
சிலேட்டை துடைத்துக் கொண்டாள். கூடியிருந்தவர்களை பார்த்து கண் சிமிட்டி விட்டு வீராயி சொன்னாள்.
“எழுது … செவனாண்டி . ….”
எழுதினாள் ராக்கம்மா பேரன் படித்தாள்.
“செவனாண்டி ….”
“ஐய்ய….. எழுதிட்டா … புருசம் பேர எழுதிட்டா … புருசம் பேர எழுதிட்டா .” |
இவளோடு சேர்ந்து கூட்டமும் கைதட்டி சிரித்தது. சிறுவர்களும் விபரம் புரியாமல் கைதட்டி சத்தம் போட்டார்கள்.
“புருசம் பேர எழுதிட்டா ….. புருசம் பேர எழுதிட்டா ….”