பஞ்சுவின் காதல்

5
(1)

ஊரில் ஒரு சனம் இல்லை. கண்மாய் வேலைக்கும் கம்ப்பெனிகளுக்கும் சென்றுவிட்டார்கள். மனிதர்களையும் மற்ற உயிர்களையும் மட்டுமல்ல வீடுகளையும் ரோடுகளையும் தின்று தீர்க்க முடிவெடுத்த வெயில் நான்கு மாதங்களாக துவைக்காத லுங்கியாயினும் அழுக்கு ஒட்டிவிடும் என்பதற்காக பளிங்குக் கல்லில் உட்கார்ந்தாலும் பின்னால் தூக்கிவிட்டு உட்காரும் பழக்கம், இந்தப்பகுதி ஆட்கள் பலருக்கும் உண்டு. அப்படி ஓர் ஆள் பிள்ளையார் கோயிலைக் கடந்து கொண்டிருந்தான். அவன் புதருக்குள் சீட்டாடித் தோத்தவன் போல் கடுப்புடன் காணப்பட்டான். ஏழெட்டுச் சிறுவர்கள் கத்திக்கொண்டு ஊரை உயிர்ப்பித்தபடி ஓடினர். காஞ்சுபோன விருவெட்டு மாறாய் பால்வாடிக்கு நடந்து செல்லும் கிழவி. பள்ளிக்கு எப்போதும் போல் தாமதமாய்ச் செல்லும் பைக்கு வாத்தியார் மற்றும் சாணிக் கலரில் சாணியை புழுக்கைகளாய் உதிர்த்துவிட்டுச் செல்லும் திண்ணையிலும் ரோட்டிலுமாக சில ஆட்டுக்குட்டிகள். இவர்கள்தான் இப்போதைக்கு இந்த ஊரின் சனத்தொகை. ஒலிக்கும் ரசிக்க முடியாத செல்போன் மணியும் இதிலடங்கும். ஊருக்குள் பாய்ந்து திரும்பிய பேருந்திற்குள் கண்டக்டர் டிரைவர் மட்டுமே இருந்தார்கள், அப்படியெனில் இப்போது மணி 11.30 ஆகும்.  இந்தப் பேருந்து தாமரைப்பட்டியின் கடிகாரம்.

மேற்கூறிய இந்த ஊரின் சனத்தொகைப் பட்டியலில் விடுபட்ட இருவர் பஞ்சுவும் விருமாண்டியும். இருவரும் மிகவும் நெருக்கமாக உட்கார்ந்திருந்தனர். அவளுக்கு வயது இருப்பதும் இவனுக்கு இருபத்து மூன்றும் இருக்கும். இது விருமாண்டியின் தளம் உயர்ந்த பழங்காலத்து வீடு. விருமாண்டியின் பெற்றோர் ஆண்டிபட்டிக்கு ஒரு கேதத்திற்குப் போயிருக்கிறார்கள். பஞ்சுவின் பெற்றோர் மற்றும் பன்றிக் குட்டிகள் என்ன செய்து கொண்டிருப்பார்களென தெரியவில்லை. பெற்றோர் பக்கத்து நகராட்சியில் கக்கூஸ் அள்ளலாம் அல்லது செருப்புத் தைக்கலாம் இப்படி ஏதாவது வைத்துக்கொள்வோம். பிறகு பன்றிக் குட்டிகள்? என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

பஞ்சு நான்காம் வகுப்போடு நின்றிருக்க வேண்டும். இவன் எம்.ஏ வரலாறு முடித்திருக்கிறான். இவர்கள் இருவரும் காதலர்கள் என நான் சொல்லத் தேவையில்லை. சற்றுநேரத்திற்கும் முன்பைவிட இருவருக்குமான இடைவெளி இன்னும் குறைந்திருந்தது. இது எப்போதுமா என்றால் இல்லை. இவர்களின் பழைய காற்றாடி ஒன்று இவர்களின் மனதில் ரயிலை ஓடவிட்டுக் கொண்டிருந்தது. “ஒங்கப்பாவும் அம்மாவும் எப்ப வருவாங்க?” இது பதற்றத்துடனான அவளின் கேள்வி. “ஏன்” “சும்மாதான்” “பயப்படாத அவங்க வீடு வந்து சேர எப்படியும் சாயங்காலம் ஆகிடும்” இதற்கு அவளின் ஏற்புரை”ம்” என்ற ஓரெழுத்தில் முடிந்தது. இருவரின் வார்த்தைகளிலும் ஒலியறுந்து போக, சற்று நேரத்திற்குள் அங்கே இருவருக்குமான ஒரு பொய்ச்சாவு நிகழ்ந்து முடிகிறது. விலகியமர்ந்து மௌனித்தார்கள். இவனின் மனதிற்குள் சாயங்கால பறவைகள் சோர்வாய் வீடு திரும்பின. சிறியதாய் புன்னகைத்தான். அவளால் அழத்தான் முடிந்தது. காரணம், கடந்த பத்து தினங்களாக அவனிடம் ஒரு விசயம் பற்றிப் பேசிட வேண்டுமென தவித்தபடி சந்தர்ப்பங்களைத் தேடுகிறாள் ஆனால் கிடைக்கிற நேரங்களில் அதைப் பற்றிப்பேச சக்தியற்றவர்களாகிப் போகிறாள். இம்முறையும் அப்படித்தான்.

பன்றிகளையும் அவற்றின் குட்டிகளையும் போன்று வாழ்வை மிகுந்த சந்தோசத்துடன் களிக்க மனிதர்களால் கூட முடிவதில்லை. அதன் ஓட்டத்தையும் நடையையும் அதன் சிறு சிறு கத்தல்களையும் ரசிப்பதற்குக் கூட மனதில் ஒரு சுத்தம் வேண்டும். நம் குழந்தைகளைப்போலே…. “போலே” என்ன அதிகமாகவே துள்ளிக்குதித்து நம் மனதை நிரம்புகின்றன. நீள் வடிவில் குடைந்து செய்த பனைமரத் தொட்டியில் பன்றிகளுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தார் பஞ்சுவின் அப்பா. பஞ்சு பன்றிகளோடு சண்டை போட்டுத்தான் எடுத்து வரும் குடத் தண்ணீரை ஊற்ற வேண்டியிருந்தது. அப்பா அடியில் தங்கிவிடும் தவிட்டைக் கலக்கிவிட்டபடி பன்றியின் நீராகாரத்தை சுவையாக்கிக் கொண்டிருந்தார்.

வீட்டிற்குள்ளிருக்கும் பஞ்சுவின் அம்மா அடுப்பில் வைத்துள்ள வடைச்சட்டியிலிருந்து “டர்ரு….. டர்ரு…” வென இசைத்துக் கொண்டிருந்தாள் அல்லது வறுத்துக் கொண்டிருந்தாள். அது என்னவாக இருக்குமென்று குழம்ப வேண்டாம், கறியும் இருக்காது கத்தரிக்காயும் இருக்காது காரட்டும் பீன்சும் கனவில் கூட வரத் தயங்கும். வேறென்ன, இன்று காலையில் தான் குஞ்சுகள் பொறித்த அடைக்கோழி கீழிறக்கினார்கள் ஒரு வேளை அதன் கூமுட்டையாகக் கூட இருக்கலாம்.

“பஞ்சு…” வாசலில் உள்ள உரலில் உட்கார்ந்திருந்தவள் “என்னம்மா” என்றாள், “குளிடி “எதுக்கு” “ம்…. குளிக்கிறதுக்கெல்லாம் காரணமா வேணும்… வயசுப்புள்ள சுத்தமா இருக்க வேணாமா? ஒனக்கும் எட்டுக்குத்துக்கு எளையவனப்பாரு?” என பஞ்சுவின் அம்மா சொல்லி முடிப்பதற்குள் குளித்து, பள்ளிக் கூடத்து சட்டை டிரௌசரை மாட்டிக் கொண்டு நெற்றியில் திருநீறு பூசி சாப்பிட உட்கார்ந்தான் பஞ்சுவின் தம்பி. “அவன் படிக்கப்போறான், நா எங்க போப்பறேன்” “செருப்பெடித்தேன் பிஞ்சிரும்… கழுத குளிடின்டா குளிப்பியா, வாய்க்கு வாய் பேசிகிட்டே இருப்பியோ?” என அம்மாவின் வார்த்தைகள் முற்ற பஞ்சு அமைதியானாள். “அம்மா ஸ்கூலுக்கு லேட்டாகுது சோறு போடும்மா” “செத்த பொறு சாமி ஒனக்காகத்தான் தொட்டுக்கிறதுக்கு ரெடி பண்ணிக்கிருக்கேன்… எல்லாம் இந்த ரேசன் அரிசியினாலதான் வேகுவனான்டுருச்சு” என்றபடியே அடுப்புத் தீயை உள்ளே நறுக்கென்று தள்ளி ரெண்டு விறகை எடுத்து வைத்தாள். சில நாட்களுக்கு முன்புவரை விருமாண்டியின் காதலால் தன் உணர்வுக்குள்ளும் உடலுக்குள்ளும் ஒரு மாற்றத்தைக் கண்டவள் பஞ்சு. அது அவளின் இருட்டையெல்லாம் அழகாக்கியது. பார்க்கிற பொருட்களுக்கெல்லாம் வேறுவிதமான அர்த்தத்தைக் கற்பித்தது. கன்னத்தில் விழும் முடி காற்றோடு விளையாடும் பொழுதுகளை, திண்ணையில் உட்கார்ந்து தலைவாறும் போதெல்லாம் கிழக்கிலிருந்து உதிரும் ஒளிக்கற்றைகள் கழுத்தெங்கும் பரவுதலை, குளிக்கின்ற நேரம் கூடிப் போனதை விரைவாகத் தேய்கின்ற மஞ்சளை பன்றி விட்டைகள் பொறுக்கும் போது கூட நிலம் பரப்பிக்கிடந்த அவனின் ஞாபகத்தை எந்தப் பூவிலிருந்தும் நுகர முடியாத ஒரு வாசத்தை இப்படி அனைத்தையும் காதல் தடவியே வளர்த்தவள் இப்போதெல்லாம் வெளியில் வீட்டில் என பேதமின்றி பார்க்கிற பொருட்களெல்லாம் அவளிடமிருந்து அந்நியப்பட்டே தெரிந்தன. அவளுக்கென கூறப்படுகிற வார்த்தைகள் கூட மூளைக்குள் செல்லாமல் செவிகளோட நின்று விடுகின்றன. எந்த நிகழ்விற்குள்ளும் மூழ்க முடியாமல் மிதந்து கொண்டிருந்தாள்.

எதிர்காலம் பற்றி சுதாரித்துக் கொள்கிற சிந்தனை நிச்சயம் காதலில் இருக்காது. அப்படி இருந்தால் அது காதலாய் இருக்காது. ஆனால் சமூக ஏற்பாடுகள் காதல் பாடத்திற்குள் கணிதத்தைப் புகுத்தி விடுகிறது. பஞ்சுவின் மனசு நிரப்பப்படாத கோடிட்ட இடங்களாய் மாறிப் போயிருந்தது. கேள்விகளால் நிரம்பிக் கிடந்தாள். ஒரு பொருள் கேள்விகளால் மட்டுமே பூர்த்தி அடைந்துவிட முடியாது. பதில்கள்தான் ஊட்டம். பதில்கள்தான் மகிழ்ச்சி. உண்மையான நிறைவு பதில்களிலேதான் இருக்கிறது. பதில்களை வரவழைக்க திராணியற்றுப் போகிறபோது மேலும் மேலும் கேள்விகளே பலுகி மனம் மூச்சுத்திணறுகிறது.

தாமரைப்பட்டியின் சுடுகாட்டோரம் உள்ள புளியந்தோப்பில் பஞ்சு காத்திருந்தாள். இது பஞ்சுவும் விருமாண்டியும் அடிக்கடி சந்திக்கும் இடம். இது அவள் வெட்கம் தொலைத்த இடம். இங்கே இவர்கள் கோபமாகப் பேசியதே இல்லை. புளியம் பூக்களை விட அதிகம் சிரித்துக்கிடந்த இடம். ஒரு இன்டர்வியுக்குப் போவதாய் வீட்டில் சொல்லிவிட்டு நீட்டான பேண்ட் சட்டை அணிந்து வந்திருந்தான். புளிய மரத்தடிக் கல்லில் உச்சுனாப்புல உட்கார்ந்தான். குறுகுறுவென் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்கு அவ்வளவு அழகான கண்கள். இருவரும் சந்தித்த பின் அவளின் கண்களை அவன் பார்க்காத நொடியெல்லாம் அவனுக்கு நஷ்டம் என்றே சொல்லலாம். அதை அவன் உணராதவன் இல்லை. இருப்பினும் கன்னங்களின் சதைகள் மேலேற கண்சுருக்கி வெளியைப் பார்க்கிறான். அவனின் முகவெட்டு இரண்டை எழுதிச் சொல்லியது ஒன்று மனிதனை காயடிக்கிற வெயில், இன்னொன்று ஒரு முக்கியமான விசயமா பாக்கணும்னு” பஞ்சு தூது அனுப்பியது. இது அவன் எதிர்பாராதது. முக்கியமான விசயமென்ற கருத்தையே இவன் கதையில் எதிர்பாத்ததில்லை.

“சொல்லு பஞ்சு என்ன விசயமா என்னிய வரச்சொன்ன?”

“ஏன் விசயம் இருந்தாத்தான் ஒங்கள் வரச் சொல்லனுமா?” “அதுக்கில்ல எதும் முக்கியமான விசயமோன்னுதான்” எனத் தயங்கியபடி கூறினான். இதற்கெல்லாம் அவளின் கண்களில் நீர்கட்டியது. “என்னாச்சு எதும் பிரச்சனையா?” “இல்லை ” எனத் தலையாட்டிக்கொண்டிருக்கும் பொழுது இடது கண்ணிலிந்து கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. அவன் அமைதியாய் இருந்தான். “எனக்கு செட்டி குளத்துல மாப்பிள்ள பாத்துவிட்டாங்க” சொல்லியபடியே குலுங்கி அழுதாள். தன் உயிரை உடலை பகிர்ந்து கொண்டவள் பிரிந்துவிடப் போகிறாளே என்கிற ஆழ்மனத் துடிப்பு அவனை நெசமாவா?” எனக் கேட்க வைத்தது “ஆமா” என்பதை மௌனத்தாலே கூட அவளால் சொல்ல முடிந்தது. “ஏ(ன்) இதுக்குப் போயி அழுகுற என்ன விட்டு ஒன்ன பிரிய விட்டுறவனா ஊரே கூட திரண்டு நின்னு பாக்கட்டும், ஒன்ன எப்படி தூக்கிட்டுப்போயி தாலி கட்டப்போறேன் பாரு…? என்ன… எங்க வீட்டுல கொஞ்ச நாளைக்கு வெறப்பாத் திரியுவாங்க, நாலு ஆளுகளே வச்சுப் பேசுனா எல்லாம் சரியாப்போகும்…. அப்புறமும் கோபம் தீரலன்னா விடு….. ஒரு பேரனோ பேத்தியோ பெத்துக் குடுத்துட்டா கெழடுங்க சரண்டர் ஆகிரும்”. இப்படியெல்லாம் விருமாண்டி சொல்லலாம் தான் ஆனால் அமைதியே காத்தான். அவனின் சாதி சனத்திற்குள் ஒருத்தியை காதலித்திருந்தால் அது நடந்திருக்கும். இது வேறாக இருப்பதால் பம்முகிறான். அவனை அறியாமலே அவன் அவனுக்குள் ஒளியப் பார்க்கிறான். அவனின் காலடியில் தன் காதல் வெட்டுண்டு விழுவதை உணர்கிறாள். இவளாவது திருமணத்திற்கு முன் ரெண்டொரு வார்த்தையாவது விருமாண்டியிடம் பேசினாள். இந்த ஊரில் ஊமைகளாய் வாழ்ந்து வாழ்க்கைப்பட்டு செத்துப் போனோர் பட்டியல் உயிரோடு இருந்து கொண்டிருப்பவர்களை விட நீளும்.

குழந்தைக்கும் தெரியும் நெடுங்காலமாக இந்த மண்ணில் என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று சாமியை மட்டுமா உருவாக்கினோம், சாதியையும் தானே? படிக்காதவன் நேரடியாய் பேசுகிறான். படித்தவன் நுட்பமாக கையாளுகிறான். சக மனுசி தன் காதலைச் சொல்ல தன் காதலைக் கொண்டாட தன் காதலுக்காக வாதாடக் கூட முடியாமல் போய் யாருக்கோ கழுத்தை நீட்டப்போகிற அவலத்தை நினைத்து விம்முகிறாள்.

இன்று பஞ்சுவின் திருமணம். அவளை கடைசியாய்ச் சந்தித்த நாளிலிருந்தே காடுகரையெல்லாம் உட்கார்ந்து பீடி சிகரெட்டை புகைத்தான். விருமாண்டி நண்பர்களிடம் கடன் வாங்கி குடிக்கவும் செய்தான். முகத்தில் தாடி விட்டிருந்தான். இரவெல்லாம் தோட்டத்தில் மல்லாக்கா’ படுத்தபடியாக ஆகாய வீதிகளில் பஞ்சுவைத் தேடிக் கொண்டிருந்தான். காதல் சோகப் பாடல்கள் ஜநூறுக்கும் மேல் செல்லில் ஏத்தியிருந்தான். மேலும் இந்த ரக பாடல்கள் டி.வி. சேனல்களில் எஃப் எம் – களில் என எங்கு ஒலித்தாலும் உட்கார்ந்து விடுவான். இந்நேரம் பஞ்சுவின் தோழிகள் பலர் இவனின் கோலத்தைப் பற்றி அவளின் காதுகளில் போட்டிருக்க வேண்டும். இதன் மூலம் அவளுக்கு தம் மீது காதல் தோல்வி பரிதாபம் ஏற்பட்டிருக்கும் என அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தான். ஆனால் அவனது ஒவ்வொரு நடவடிக்கையையும் அறுவறுப்பானாள். தனது காதலை அவன் கொச்சைப் படுத்துவதாய் உணர்ந்தாள். அவனின் ஒப்பனைக்கு நடுவில் நிஜமும் துருத்திக்கொண்டு தெரிந்தது இவளுக்கு.

தனக்கு உடன்பாடில்லாத ஆனால் ஒப்புக்கொண்ட கல்யாணம் இது. தனக்கு மாப்பிள்ளை பார்த்த நாட்களில் தொடங்கிய துரயம் அவளை முழுவதுமாய் விழுங்கியிருந்தது. காட்டுப்பக்கம் வெளிக்குப் போகும்போது குளிக்கும் போது என இன்றைப்பொழுதின் ஒவ்வொரு நொடிக்குள்ளும் முட்கள் ஒழிந்திருந்து இவளைக் குத்தின. அதிலும் கல்யாணப் புடவையைக் கட்டி விடும் பொழுது பொத பொத வென்” அழுதே விட்டாள்.

ஊருக்குள் ஒரு லாரி சென்றது. அது கல்யாணப் பெண்ணையும் மற்ற ஆட்களையும் ஏற்றத்தான் செல்கிறது என்பதில் மற்றவர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம் விருமாண்டிக்கு இருக்காது. வீட்டிற்குள் சென்று பாய் விரிக்காமல் தலையணையை மட்டும் எடுத்துக்கொண்டு முகம் புதைத்துப் படுத்தான். அழக்கூட செய்தான் ஆனால் உள்ளுக்குள் திட்டுத்திட்டாய் படிந்திருக்கிற கறையை மட்டும் போக்கிட விருப்பமில்லை.

லாரியின் பின் சனங்கள் ஏறுவதற்கு ஏதவாக ஒரு இரும்புச் சேர் போடப்பட்டிருந்தது. யார் யாருக்காகவோ யார் யோரோ காத்திருந்தார்கள். ஒரு சிறுமியை அவனது அம்மா ஒண்ணுக்குப் போகவிட்டு ஏற்றினாள், காரணம் மாப்பிள்ளை ஊர் சற்று அதிக தூரம்.

“நீங்க நீட்டி நெளிச்சுக்கு இருக்கிறதப்பாத்தா மாப்பிள வீடு போறதுக்கெல்லாம் ஏழு மத்தியானம் ஆகிரும் போலருக்கு. சீக்கிரம் ஏறுங்கப்பா” என ஒரு பெரியவர் அதட்ட இளைஞர்கள் லாரியின் குரங்கு டாப்பில் இடம்பிடித்தார்கள். பிறகு ஒவ்வொருவராக ஏற ஆரம்பித்தார்கள். பஞ்சு மணக்கோலத்தில் வந்து மெதுவாக தோழிகளின் உதவியுடன் லாரியில் ஏறி உட்கார்ந்தனர். ஒரு கிழவி வெற்றிலை எச்சில் துப்புவதற்காக ஓரத்தில் உட்கார இடம் கேட்டு உட்கார்ந்து கொண்டாள். வேட்டியை தொங்கவிட்டபடி ஆண்கள் நின்று கொண்டும் கைப் பிள்ளைக்காரிகள் பாதுகாப்பான இடத்திலும் நிலை கொள்ள பக்கத்தூருக்கு வேற சோலியாக போகிறவர்கள் கூட கடைசியாக லாரியில் தொற்றிக்கொண்டனர்.

சின்னப் பயக யாரும் ஓரத்துல நிக்காதிங்கடா.. சைடுல் இருக்கிற சீமக்கருவேல முள்ளு மொகத்துல அடிச்சிறப்போது” என ஒருவர் சொல்ல சிலர் உட்கார, பல அகராதிகள் சொல்லை காதில் வாங்காததாய் நின்று கொண்டிருந்தன. கிளீனர் பின்னால் வந்து “யாரும் ஏறவேண்டியதிருக்கா எல்லாரும் உள்ள தள்ளி உக்காருங்க டோர சாத்தப் போறேன்?” எனச் சொல்லி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு டோரை தூக்கி சாத்தி சாவியைப் போட்டுவிட்டு, “போகலாம் ரைட்” எனச் சொல்ல வண்டி கிளம்ப ஓடிப்போயி முன்னால் ஏறிக்கொண்டார்.

ஊரை விட்டு லாரி நகர்கிற ஒவ்வொரு அடியும் பஞ்சுக்கு திக்… திக்” என்றது. விருமாண்டியின் முகத்தைப் பார்த்துவிட்டு அவனைக் கட்டிப்பிடித்து அழுதுவிட துடித்தாள். மருகினாள். லாரி கிளம்பி வந்து கொண்டிருப்பதற்கான சத்தம் விருமாண்டியின் காதுகளில் விழ அவனால் அந்த சூழலை எதிர்கொள்ள முடியாதவனாகத் தவித்துக் கொண்டிருக்க, லாரி விருமாண்டியின் வீட்டை சாதுவாய்க் கடந்தது. வேகமாய் எழுந்து வந்து ரோட்டில் நின்று பார்த்தான் லாரி ஓடி மறைந்திருந்தது. ஒரு மெல்லிய தூசுப்படலத்தைத்தவிர வேறு தடங்களற்று வெளி கிடந்தது. ஒரு போலி மனிதனாய் நின்று கொண்டிருந்தான்.

விருமாண்டியின் காதல் தோல்வியுற்ற பாவனை சிறிது நாட்களில் இன்னொரு காதலியைப் பெற்றுத்தரலாம். இந்த தாடி எடுக்கப்பட்டு, சோகப்பாடல் நீங்கி சொல்லிற்குள் மெல்ல குத்துப் பாடல்கள் நுழையலாம். இன்டர்நெட்டிலிருந்து பெண்களின் நிர்வாணப்படங்கள் டவுன் லோடாகலாம். அரசாங்கத்திலோ தனியார் கம்பெனியிலோ ஒரு வேலை, பிறகு விதவிதமான புத்தாடைகள், புது வீடு கல்யாணம், குழந்தைகள் தொப்பை மற்றும் பிற்காலத்தில் ஊர் தலைவராய்க் கூட விருமாண்டி மாறலாம், ஆனால் காதலைச் சுமந்தபடி பஞ்சுவின் கண்கள் விருமாண்டி வீட்டின் முன் காத்திருக்கின்றன.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “பஞ்சுவின் காதல்”

  1. Sakthi Bahadur

    சந்தர்ப்பவாத காதலை மையப்படுத்தி புனையப்பட்ட அருமையான கதை.

    ஆம் பெண்ணின் அழகில் லயித்து காதலால் கவர்ந்து தன் இச்சையை தீர்த்துக் கொள்வது… ஆனால் திருமணம் என்று வரும்போது சாதிக்கு பயந்து…. இல்லை இல்லை தன் சாதியை அப்போது தான் நினைவிற்கு… வந்து… தன் தலையை மறைத்துக் கொள்வது.

    இதை சந்தர்ப்பவாத காதல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது… சமூக அவலங்களில் முக்கியமானதை புனைவாக கொடுத்த தோழருக்கு வாழ்த்துக்கள்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: