நோக்கிப்பாய்தல்

4.5
(2)

“பேசாதடா.. பேசாதடா.. கல்லக் கொண்டி அடிச்சிடுவேன்..” –  சொல்லிக் கொண்டே இருந்த அந்த வாலிபன், சொன்னது போலவே வீதியில் கிடந்த உடைந்த செங்கல் ஒன்றை எடுத்து எதிரில் இருந்தவனின் முகத்தில் அடித்தான்.

 

அடிவாங்கியவனுக்கு நெற்றியில் பணியாரமாய்ப் புடைத்துவிட்டது.

 

அதற்குமேலும் அந்த இடத்தில் நிற்க கூழுப்பிள்ளைக்கு திராணியில்லை . அசைந்து அசைந்து தாங்கலான நடையுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

 

சுளீரென வெய்யில் ஏறிக்கொண்டிருக்கிற காலை நேரம், சனிக்கிழமைப் பொழுது. பள்ளிக்கூடத்துக்கான பரபரப்புக்கள் ஏதும் இல்லாமல் வீதி இயங்கிக் கொண்டிருந்தது. இருந்தாலும், வேலைக்குப் புறப்பட்டுச் செல்லுகிற அவதியும் ஆவலாதியும் குறையவில்லை.

 

தார்ச்சாலை முழுக்க பெட்ரோல் – டீசல் வாசனைதான். சைக்கிள்கள் மோட்டார் வண்டிகளாகவும், மாட்டுவண்டிகள், குட்டியானை என செல்லமாய் அழைக்கப்படுகிற சின்னலாரிகளாகவும் மாறிப் போய்விட்டான. காலமாற்றததோடு மனுசனும் மாறிப் போனான். சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் அடிதடியும் ஏச்சும் பொதுவிதியாகிப் போய்விட்டது.

 

வரசித்திவினாயகர் கோயிலில் நடைபெற்ற ஒரு பட்டிமன்றத்தில் கேட்டது ஞாபகத்திற்கு வந்தது. ‘அரசாங்கத்தின் மதுக்கொள்கையால், இன்னும் பத்து வருடத்தில் இன்றைய இளைஞர்களின் நிலமை படுமோசமாகப் போகிற அவலத்தை காணப்போகிறோம். கல்லீரல் கெட்டு, சக மனிசனை நேசிக்கிற சுபாவம் காலாவதியாகும்”  என்றார்.

 

அது நிஜமானதை கொஞ்ச நேரத்திற்கு முந்தைய நிகழ்ச்சி உறுதிப்படுத்தியது. அவர்கள் அண்ணன் தம்பிகள்தான், அவர்களுக்குள் கூட ஒத்துப் போக முடியவில்லை.

 

நல்லவேளை, அந்த வகையில் தனது பிள்ளைகள் தப்பித்துவிட்டார்கள். ஆளுக்கொரு தொழிலில் இருந்தாலும், இத்தகைய சகவாசம் ஏதும் இல்லை.

 

வழியில் கோயில் நிழலடி கொஞ்சம் நின்று போகச் சொன்னது. உடம்போ உட்கார்ந்து போகலாமே என்றது. மரத்தின் குளுமை அப்படி. கோவிலின் கீழ்ப்படியில் உட்கார்ந்து கொண்டார் . அது கருங்கல்லால் ஆகியிருந்தது. கல்லின் ஊடறுத்த ஜில்லிப்பு அமர்தலை விரித்துக் கொடுத்தது. கோவிலின் வாசல்கதவு மூடியிருந்தது. சாத்திய கதவிலும் ஊதுபத்தி சொருகப்பட்டு, வாசம் கசிந்து கொண்டிருந்தது. வாசலின் இடதுபுறமிருந்த பன்னீர்மரத்தின் நீளநீளமான பூக்கள் கீழே சிதறிக்கிடந்தன. கோவிலின் நிழல் படர்ந்த அந்தச் சூழலில் பூக்களின் சிதறல், மாக்கோலமிட்டது போல காட்சியளித்தது.

 

“என்னா.. கூழ் ண்ணே.., எழவு வீட்டுக்குப் போவலியா..?”

 

சைக்கிளோடு போன ஆள், ஒருகாலை ஊன்றிக் கொண்டுகேட்டார். ஏறுவெய்யிலில் எதிர்க்க நிற்பவரின் முகம் சரியாய்த் தெரியவில்லை பிள்ளைக்கு. கண்களில் மறைப்புக் கட்டிப் பார்த்தார்.

 

“கண்ணுதே வெய்யிலுக்குத் தெரியல சரி, கொரலுமா நெகாத் தெரியாமப் அடச்சுப் போயிருச்சு..?” –  நக்கலாய் சிரித்துக் கேட்டான் செவ்வாழையன்.

 

“செவடயனா..?, என்றவர், “ந்தா போகணுமப்பா.. பயக பூராம் ஆளுக்கொரு தொழில்ல இருக்கானுகளா, சட்டுன்னு கடையச் சாத்திற முடியலீல்ல..” –  நிதானமாகத்தான் பேசவந்தது. காலையில் சத்தமாய்ப் பேசினால் இளைப்பு வந்து மறிக்கிறது.

 

“அவிங்கள விடுண்ணே.. அவிங்க எதோ டயத்தப் பாத்து பொண்டுபிள்ளைகள கடய மாத்தச் சொல்லி வரட்டும். நீங்க பெரியமனுசெ முன்னுக்குப் போயி நின்டா..  கேத வீட்டாளுகளுக்கு ஒரு தெம்பா இருக்கும்ல.”

 

ஒன்றுவிட்ட சொந்தம்தான். ஆனால், பழக்கத்தில் – பாடுகளில், கூடுதலான நெருக்கம்  . தன்வீட்டில் ஒரு காரியமென்றால் அந்த வீட்டிலிருந்து தாய் பிள்ளை என செட்டோடு வந்து குவிந்து விடுவார்கள். உறவு சொல்லி அழைப்பதில்கூட ‘சின்னமாமா, பெரிய அத்தை’ என்று இடம் பிரித்துப் பேசுவதில்லை. ‘எங்க அத்தை, எங்க மதனி’ என்றே உரிமை மேலிடத்தான் கூப்பிடுவார்கள். அந்த வீட்டில் ஒருமரணம். நியாயப்படி பார்த்தால், குடும்பத்தில் அத்தனை பேரும் கடைகளைச் சாத்திவிட்டு இந்நேரம் அங்கே கிடை போட்டிருக்க வேண்டும்.

 

ரத்தினம்மாள் இருந்திருந்தால் இந்நேரம் பிள்ளைகளிடம் பேசி அவர்களைக் கிளப்பி இருப்பாள். அவளைப் போல தன்னால் பிள்ளைகளிடம் ஒட்ட முடியவில்லை. பெற்ற பிள்ளைகள்தான் என்றாலும் ஏதோ ஒரு விலகல் நிற்கத்தான் செய்கிற்து. சிறுவயசிலிருந்தே அப்படித்தான் நடந்தேறி வருகிறது. ஒருவேளை எல்லா வீட்டிலுமே அப்பாவின் நிலமை இதுதானோ.

 

இழவுச் செய்தியைக் கூட நடுவுலவன்தான் சொன்னான். போன் வந்ததாம், ‘அந்த’ அத்தையோட சம்பந்தகார அம்மாவாம்ல ..ப்பா’ –  சொல்லும் போதே தூரத்தை அழுத்திச் சொன்னான்.

 

“எங்களுக்கெல்லா.. அது யார்னே தெரியாதே மாமா.. நான் லாம் அவகளப் பாத்திருக்கனா..?” – இப்படிக் கேட்டது சின்ன மருமகள்.

 

“சின்ன்மனூர்ல இருந்தாகளே ப்பா.. இப்ப, இங்கியே வந்திட்டாகளோ..?” – மூத்தவன்.

 

“ஆமாப்பா.. பாரஸ்ட் ரோட்ல குடியிருக்காங்க.” –  கொஞ்சம் நடக்கிற தூரம்தான். வண்டியில் போனால் ஈசி, மினி பஸ் எனில் இறங்கி ரெண்டு சந்து திரும்ப வேண்டும்.

 

“மயிலு தானப்பா அவங்க பேரு..?”

 

நல்ல ஞாபகம் வைத்திருக்கிறான் மூத்தவன். “ஆமாப்பா”  என்றார்.

 

“ஒராளாச்சும் போகணும்லப்பா…”

 

மூத்தவனின் பேச்சில் கூழ்பிள்ளைக்கு முகம் சுண்டியது. என்ன பதில் சொல்வது. கேள்வி மட்டுமல்லாது, பதில்களையும் அவர்களே தயாரித்து விடுகிறார்கள். அவருக்கு பேச வார்த்தைகள் அற்றுப் போனது.

 

இதே மூத்தவனின் மச்சினன், கோயம்புத்தூரில் காலொடிந்து கிடந்தபோது, பெண் பிள்ளைகள் உட்பட, கிளம்பி வந்திருந்தார்கள். ‘எங்க மாமா மகனோட மச்சினெ, எனக்குத் தம்பி மொற,…’ என்று வெகு இயல்பாய் வந்து விசாரித்தது அவனுக்கு மறந்தா போயிருக்கும்….?

 

நீண்ட மௌனத்தின் பிறகு மெதுவாய் மூத்தவனிடம் பேசலானார். “தம்பிகளுக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம், நம்ம வீட்ல யாதொரு காரியம்னாலும் நான் னு வந்து நிக்கிற குடும்பம்.. எழவுச் சேதியக் கேட்டும் யார அனுப்பறது ன்னு கணக்குப் போடுறீக..” லேசாய்ச் சிரித்தபடிதான் கேட்டார். நெஞ்சுக்குள் அழுகை ரணம் கட்டி இருந்தது.

 

அதனை உணர்ந்தவனாய், “இல்லப்பா… போகணும்தே.. கட இருக்கேப்பா.. பக்கம்னாக்கூட, மாத்திமாத்திப் பாத்திட்டு வந்திடலாம்.”

 

அந்தவகையில் மூத்தவன் குடும்ப மானத்தைக் காத்திடுவான் என்ற நம்பிக்கை பிறந்தது பிள்ளைக்கு. ஒரு ஆறுதல்தான்.

 

“எந்நேரம் எடுக்குறாகளாம்..?”

 

“எப்பிடியும் மதியத்துக்கு மேலதான் தூக்கு வாங்க..”

 

“சரிங் ப்பா, நீங்க போயி வீட்ல சாப்ட்டுக் கெளம்புங்க..,’அந்தப்பிள்ள’ கிட்ட வீட்டு வேலயக் கொறச்சுக்கச் சொல்லணும். அது பாட்டுக்கு துணிய ஊற வச்சுட்டேன், மாவு ஆட்டணும் .. தண்ணி பிடிக்கணும்னு பட்டியல் போட்டான்னா சிக்கல்.” –  என்றபடி செல்போனை எடுத்து மனைவியை அழைத்தான்.

 

நிறையப் பேசினவன், கடைசியாய்.. “அதெல்லாம் பேசக்குடாது. நாம போயாகணும். சரி சரி, அப்பா வர்ராரு.. அவ்ருக்கு சாப்பாடப் போட்டு அனுப்பிச்சுட்டு ஒன் வேலய ஆரம்பி..!”

 

போனை சட்டைப் பையில் போட்டுக் கொண்டவன், “தம்பி வீட்ல ஆர்ப்பா வாராங்க..”  என விசாரித்தான்.

 

பகீரென்றது கூழ்ப் பிள்ளைக்கு. இணை போடப் போகிறானோ… “தெரியலப்பா.. போவாங்கெ..”  என்று தப்பித்தார்.

 

“சரி, ஆர் வேணாலும் வரட்டும்..பா, நீங்க கெளம்புங்க.. வீட்ல மாவு ஆட்டி கிட்டு இருக்காளாம்.. முடிச்சிட்டுத்தே கடக்கி வரமுடியும். அதனால நா முன்ன பின்ன வந்திர்ரே..!”  என்றபடி பஸ்சுக்கு பணம் எடுத்துக் கொடுத்தான்.

 

சேர்ந்தே போகலாம் என்று சொல்ல முடியாது. இரவு டிப்பனுக்கு மாவு ஆட்டுவதை நிறுத்திவிட்டு வா…! என்று கட்டளை இடவும் தனக்கு இடமில்லை. மாவு ஆட்டிக்கொண்டு இருக்கிறார்களா… இனிமேல்தான் துவங்க வேண்டுமோ.

 

யாரையாவது ஒருத்தனைக் கிளப்பிக் கொண்டு போய்விட்டால், ஒருவேளை வீட்டுக்கு ஒருத்தன் என்ற கணக்குப் போட்டு ஆண், பெண் யாராவது ஓராள் வந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக நினைத்தார்.

 

அப்படி நடந்தால், மாமா வீட்டிலிருந்து சின்னவர் பெரியவர் எல்லோரும் வந்து விட்டதான  நிறைவு அந்தவீட்டாருக்குக் கிட்டும். தனக்கும் குற்றவுணர்ச்சி எழாது.

 

தான்மட்டும் புறப்பட்டுப் போக, அசந்தர்ப்பமாக பிள்ளைகள் கிளம்பத் தாமதம் ஆகிறபோது ஒருத்தனுக் கொருத்தன் பேசி – ‘ அதான் பெரியவர் போய்ருக்கார்ல அவர் போனா சரித்தான்.. கேதவீடுதான… எல்லாரும் போய் நிக்கணுமா.. நாளப் பின்ன, பொம்பளப் பிள்ளைகள அனுப்பிச்சு விட்டு விசாரிக்கச் சொல்லலாம்” – என்று ஒருமித்த முடிவு எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

 

உறவுகளைப் பேணுவது என்பது இதுமாதிரியான சந்தர்ப்பங்களில்தான் அமையும். அதுவும் துக்கவீட்டுக்குப் போய்வருகிறது மாதிரியான ஆகச்சிறந்த காரியம் வேறெதுவும் இல்லை என்பது கூழ்பிள்ளையின் அய்யா சொல்லுவதுண்டு. அந்த வழி வந்த பழக்கம். சொந்த பந்தங்கள் மட்டுமல்லாது தெரிந்த-அறிந்த எவரானாலும் செய்தி கேள்விப்பட்ட மாத்திரத்தில் அதற்கென நேரத்தை ஒதுக்கி விடுவார்.

 

ரத்தினம்மாள் கூட கேலி சொல்வதுண்டு. “குழிதோண்டிக்குக் கூட எழவுச் சேதி வராது. எங்க வீட்டுக்காரருக்குத்தே பொணமே தேடிவந்து சொல்லிட்டுப் போகும்.”

 

மூத்தவன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டார். “போறது போறம் சித்த வெள்ளனமே போனம்னா..”  – இழுத்தார்.

 

“வந்திர்ரேம்ப்பா.. நம்ம வீட்டுக்கு ஒண்ணுன்னா அவங்கல்லா டாண்ணு வர்றாகல்ல…” –  காலை ஏவாரத்தின் கெடுபிடிகளுக்கு இடையில் மூத்தமகனின் ஆதூரமான அந்த வார்த்தைகள் கூழ்பிள்ளைக்கு ஆசுவாசத்தைக் கொடுத்தது.

 

நிழரோரமாய் நடக்கலானார். முழங்காலில் கட்டியிருந்த நீர், நடையை வீசிப் போகத்தடையாய் இருந்தது.அதன் போக்கில் எட்டுப்போடாவிட்டால் குலச்சியில் சுளீரென மின்வெட்டுப் போல முட்டிக்குள் வலி கீறிப் பாய்கிறது. மாத்திரை போட்டாலும் அந்த வேளைக்குத்தான் மட்டுப்படுகிறது. அடுத்த வேளையில் அதிகமாகிவிடுறது.

 

மூத்தவன் சரி, மற்றவர்களை எப்படிக் கிளப்ப..? ஒரு யோசனையும் புலப்படவில்லை. ரத்த உறவுகளில இறுக்கமான பேச்சுக்களைப் பேசிப் பேசி வளர்ந்த பிறகு, இதுமாதிரியான சமயங்களில் ஒரு இயலபான கலந்துரையாடலுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது.

 

மறுபடியும் ரத்தினம்தான் புத்தியில் வந்து நிற்கிறாள்.

 

மெதுவாய் நடக்கலானார்.

 

மூத்தவன் வீட்டில் எப்பவும் ராத்திரிதான் டிப்பன். காலையில் சோறு என்கிற போதே அயர்ச்சியாய் இருக்கிறது. நல்ல வேளையாய் இன்னார் வீட்டில்தான் சாப்பாடு என்கிற முறை வைக்கவில்லை. தேவைப்படுகிற இடத்தில் சாப்பிடுகிற சுதந்திரம் வாய்த்திருந்தது.

 

சமயத்தில் அதுவும் பிழையாகி எந்த வீட்டிலும் சாப்பாடு இல்லாது போகிற சம்பவமும் நேர்வதுண்டு.

 

“முன்கூட்டியே சொன்னாத்தான சோறு சேத்து ஆக்க முடியும்… ! வெலெயரிசிய வாங்கி வீணாக்க முடியுமா…” –  என்பார்கள்.

 

அதைப் பற்றியெல்லாம் அவ்ரும் கவலைப்படுவது கிடையாது. அப்படி உணவு கிடைக்காத பொழுதை,- இரைப்பைக்கு ஓய்வு என்று அன்றைக்கு- நோன்பென விரதம் மேற்கொள்வார்.

 

இன்றைக்கு மூத்தவன் வீட்டில் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

 

மெல்லவே நடந்து அவனது வீட்டை சமீபித்தார். வாசலில் பெண் பிள்ளைகள் நின்று பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. நடையினைச் சுருக்கி ஊர்ந்தார்.

 

“வீடுன்னா ஆயிரம் பாடு இருக்கும். ஊருன்னா நூறு நல்லது கெட்டது நடக்கத்தேஞ் செய்யும்.. அல்லாத்துக்கும் அல்லாரும் போயிர முடியும்மா.. நாம என்னா அவதாரக் கடவுளா.. ? அங்கியும் இங்கியுமா ஓடிப்போயி நிக்க.. “ –  நீட்டி முழக்கிப் பேசிக் கொண்டிருந்தது மூத்தமருமகள்.

 

“இல்லக்கா.. நாலு குடும்பமும் பேரம் பேத்தி எடுக்கற ஸ்டேஜுக்கு வந்தாச்சு. இப்பவும் போயி மொத்தஞ்சேந்து  கெளம்புங்கன்னா நடக்குற காரியமா..?” –  அடுத்து ஒலித்தது, மூன்றாவது மருமகளின் கீச்சுக்குரல்.

 

கூழ்பிள்ளை நடையை நிறுத்திக் கொண்டார். இந்தநேரம் சாப்பிடச் செல்வது உசிதமானதல்ல எனப்பட்டது.

 

“ஒங்களுக்குத்தே வேலயில்ல வெட்டியில்ல… போயி ஒக்காந்துட்டு வரவேண்டிய தான.. நீ வா நீ வான்னு தொயங்கட்டி தொந்தரவு.. ச்சே.. வயசு போயும் இன்னும் வீராப்பு போகலியே..”

 

இழவு வீட்டில் ’நக நக’ வென மேளம் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

 

“மாமா…”  – என்றபடி மயிலு மகன் அவரது கைப்பிடித்து சேரில் அமரவைத்தான்.

 

அழுதுகொண்டிருந்த பெண்கள் கூட்டத்திலிருந்து பெண்பிள்ளைகள் எழுந்துவந்து அவ்ரை நலம் விசாரித்தனர்.

 

கூழ்பிள்ளைக்கு துக்கம் மேலிட்டது. தொண்டையைச் செருமிக்க் கொண்டார்.

 

“பயகளுக்கு கட.. யேவாரம்.. எடுத்துவச்சு வரணும்.. பின்னாடி வந்திருவான்க..”  திணறித்  திணறிச் சொன்னார்.

 

“ஏவாரக்கடைய அடைக்கக் குடாது..மாமா.. ஓடிட்டே இருக்கணும்…முன்ன மாதிரியில்ல உலகம்.. திரும்பியெல்லா பாக்க முடியாது.  அதான் நீங்க வந்திருக்கீகள்ல.. “ – தத்துவமாகப் பேசினான் மயிலுமகன்.

 

தனது பிள்ளைகளின் பேச்சுப்  போலவே  அவனும் பேசினான்.

 

மாறித்தான் போனது உலகம். அதேநேரம் உறவுமுறைகள்..?

 

மாறுதல்ங்கறது ஒடஞ்சு செதறிப் போகறது கெடையாது. ஒண்ணு, அதவிட வலுவானதா ஆகணும். அதுதான் உண்மயான மாறுதல். ஏன் எல்லாரும் இத உணராமப் பேசுறாங்க…!

 

ஆறோட விதி, பாய்ச்சல்; ஊரோட விதி பெருத்தல்; மனிச உறவுகளோட விதி..?

 

கூழ்ப்பிள்ளைக்கு சமாதானமாகவில்லை அவன் பேச்சு.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

1 thought on “நோக்கிப்பாய்தல்”

 1. Sakthi Bahadur

  ஒருபுறம் செல்போன் இன்டர்நெட் இமெயில் என்று உலகம் உள்ளங்கை அளவில் சுருங்கி போனாலும், உறவுகளின் இடைவெளி நீண்டு கொண்டே செல்கிறது என்பதை விளக்கும் அருமையான கதை.

  ஆம் சாதாரண கிராமத்து சூழலில் பெட்டிக்கடை வைத்திருக்கும் பிள்ளைகளுக்கு தன் அத்தை வீட்டின் எழவுக்கு செல்ல நேரமில்லை.
  அந்த அளவிற்கு மனிதமனம் சுருங்கி விட்டது. இன்னமும் பழமை மாறா கூழு பிள்ளையின் தவிப்பு ….
  குடும்பத்தில் ஒருவர் வந்தாலே போதும் என்று திருப்தி பட்டுக் கொள்ளும் அளவிற்கு பழகிப்போன உறவுகளின் எதார்த்த நிலை…இன்றை மனித மனங்களின் நிலையை படம் பிடித்து காட்டும் அருமையான படைப்பு.

  தோழர் காமுத்துரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: