நைனா பாய்

5
(1)

வந்துட்டார்ண்ணே… பெர்சு வந்துட்டார்.. ணே…“ – போத்திநாயக்கர் தூரத்தில் வருகிறபோதே பெரியமாஸ்டர் மீரான்பாயிடம் ‘அலார’க் குரல் விடுத்தார் அடுப்படி மாஸ்டர் கிருஷ்ணமூர்த்தி.

பிராந்திக்கடைக்கு எதிர்ப்புறமிருந்த ஒருஒலிபெருக்கிக் கடையின் வாசலில் நின்றிருந்த வேப்பமரத்தடி நிழலில் பிளாஸ்டிக் சேர் போட்டு மீரான்மாஸ்டர் உட்கார்ந்திருந்தார். கடைக்காரர் உள்ளே ‘சீரியல்செட்’ பலபுக ளை எரியச்செய்து பீஸான- உடைந்த பல்புகளை நீக்கி புதியதை பற்றவைத்துக் கொண்டிருந்தார். கடைக்குள் கலர்கலராய் வெளிச்சம் மின்னுவதும் மறைவது மாய் பூச்சியாடிக்கொண்டிருந்தது.. மாலைநேரத்துக்காற்று வலுவிழந்து இதமாய் வீசியபடி இருந்தது. வாகனப்புகைகளின் வாசனையோடு.

பிராந்திக்கடையில் நின்று உற்றுப்பார்த்த போத்திநாயக்கர். வாகனப் போக்குவரத்தை அனுமானித்து சாலையைக் கடந்து வந்தார். நடையில் ஒரு அசாத்தியமான துள்ளல் விளையாடியது. அதுதான் அவருக்கான தனித்த அடையாளமாகவும் இருந்தது. ‘பேரம்பேத்தி எடுத்த நாளயிலயும் மனுசனுக்கு நடவேகம் மட்டுபபடலியே’ – என்பார்கள். நல்ல சிவந்த நிறம். உயரமும். வாடல்மிகுந்த மெலிந்த தேகம் தலையிலும் தாடையிலும் மாசு மரு இல்லாத வெள்ளைமயிர்கள் அடையாய் அடர்ந்திருந்தன.. நன்கு துவைத்து வெளுத்த வெள்ளை வேஷ்டியும், பழுப்புநிற அரைக்கைச் சட்டையும் அணிந்திருந்தா.          சாலையைக் கடந்ததும் மீரான் மாஸ்டரைக் கண்டுகொண்டார். நடையில் வேகமும் துள்ளலும் மேலும் அதிகரித்தன. அருகில் செல்லச் செல்ல அவரது வாய்பிளந்து சிரிப்பு உதயமானது.

”நைனாவப் பாத்தப் பெறகுதா மனசுல குளுமவருது…”  சொல்லியபடி மீரானுக்கு அருகாமையில் வந்து அவரது கையைப்பிடித்துக் குலுக்கிக் கொண்டே படிக்கட்டின் கீழ்ப்பகுதியில் அமர்ந்தார். கொஞ்சநேரம் கைப்பிடியினை விடவில்லை.

”உட்காருங்க.. உட்காருங்க..நைனா..” மீரான்பாய் மெல்ல தன்கைகளை விடுவித்துக் கொண்டார். போத்திநாயக்கர் கண்களை உருட்டி உட்கார்ந்திருக் கிற அத்தனைபேரையும் ஒருசுற்று பார்வையிட்டார்.  ” வேலையா நைனா..?” ஆட்களின் சேர்மானம் அவருக்கு அந்தக் கேள்வியினைத் தந்தது.

’இன்னிக்கி என்னா வேல.. அட்டமி நாள்ல..? அடுத்தவாரந்தா வேலையே.. “

”நீங்க எதுக்கு வந்திருக்கீங்களோ அந்த மாதிரித்தா.. நாங்களும் வந்து கெடக்கம்…“ கிருஷ்ணமூர்த்தியே இப்பவும் பதில் சொன்னார். ஆரம்பகாலத்தில் மீரான்பாய் – மாரிச்சாமியாக இருந்த காலத்தில் கிருஷ்ணமூர்த்தி அவருடன் கிடையாது. பக்கர் ராவுத்தரின் உதவியாளனாய்ச் சேர்ந்து பத்துவருசத்துக்கும் மேலாய் அவரிடம் வேலைபழகி, ஒருகட்டத்தில் சாதிக் கொடுமைக்காக சுன்னத்  செய்து கொண்டு மீரான்பாயாக மாறிய சில காலம் பக்கர்ராவுத்தர் அவ்னை தனிவேலைகளுக்கு அனுப்பிவைத்து சமையலின் அத்தனை நுணுக்கங் களையும் கற்றுத்தந்தார். அந்த விசுவாசதிற்காகவே பக்கர்ராவுத்தரின் பெயரை தன் சமையல் குழுவிற்குச் சூடியிருந்தார். அதுபோலவே ஆரம்பகாலத்தில் போத்திநாயக்கரின் காப்பிக்கடையில் பெஞ்சு துடைக்கும் சித்தாளாக எச்சில்வாளி தூக்கித்திரிந்ததையும் மறக்கவில்லை என அடிக்கடி சொல்லிக்கொள்வார்.

”அடுத்தவாரம்..னா என்னிக்கி நைனா..?” –  போத்திநாயக்கர் யாரையுமே நைனா’ போட்டுத்தான் அழைப்பார். அதுபோல அவரையும் எல்லோரும் நைனா என்றே கூப்பிடுவார்கள்.

”நாள.. வெள்ளிக்க்ழம.. போடில பிள்ளமார்மண்டபத்தில வேல…. வந்தீர்ரிகளா..?”  அடுத்துவரும் மூன்றுகேள்விகளுக்குமான பதில்களை சேர்த்துச் சொன்னார் மாஸ்டர்.

போடிநகரத்தையும் அந்த மண்டபத்தையும் ஒருவாறு மனசுக்குள் ஓட்டிப்பார்த்த நாயக்கர், “இங்கருந்து எப்பக் கெளம்பனும் நைனா..?” என நாலாவது கேள்வியைக் கேட்டார்.

”வெசாழக்கெழம மத்தியாணம் ஒரு ரெண்டு மணிவாக்கில இங்கன வந்திடுங்க..!”

”அப்பிடிச்சொல்லுங்க.. மத்தியாணமென்னா.. காலம்பெற்வே வந்திர்ரேன்” க்ண்களில் ஒளிபாய்ந்தது நாயக்கருக்கு.

”யே..ந் நைனா.. ஒங்க மகெ.ங் கட, எடம் மாறுதாம்..ல..?” கிருஷ்ணமூர்த்தி, நாயக்கரின் வாயைக் கிளறினார்..

”அதெல்லா நமளுக்குத் தெரியாது நைனா.!” படக்கென பேச்சைமுடித்துக் கொண்டார். மகனுக்கும் அவருக்குமான உறவு ஊரறிந்தது. மகனுக்குக் கல்யாணம் செய்வித்து மருமகளின் கையில் கடைநிர்வாகம் வந்தபிறகு இரண்டுபேருக்கும் பேச்சு வார்த்தை முடிந்துபோனது. தனிக்கட்டையாக இருந்தும் கடையிலோ வீட்டிலோ நாயக்கருக்கு மரியாதை கிடைக்கவில்லை. தான் உருவாக்கிய கடையிலயே, சப்ளை வேலைக்கு மட்டுமே தான் பயன்படுத்தப்படுவதை அவரால் ஏற்க முடியவில்லை. அவரைக் கல்லாவில் உட்கார வைக்க மருமகளுக்கு மனசில்லை. ஆகவே சொந்தக்கடையில் சம்பளம் வாங்கப்பிடிக்காமல் தனி வீடெடுத்துத் தங்கி விட்டார். காசுகொடுத்து காப்பி குடிக்கக்கூட அந்தப்பக்கம் போவது கிடையாது.

’ஒத்தப்பிள்ளயப் பெத்தவெம்பாடெல்லாம் இதுதான். அதுக்குத்தேன் கூட இன்னம் ரெண்டப் பெத்துக்கணுங்கறது..!” வேலைத்தளத்தில் பேச்சுவரும், “ஆட்டுக்குத் த்க்கனதே வால அளந்து நீட்டுவான் நைனா.. நாம கொற சொல்ல கூடாது..” என அமைதியாய்ப் பதில் சொல்லுவார். பெரிய அருள்வாக்கு போல எல்லோரும் வாங்கிக் கொள்வார்கள்.

”ணே.. மாஸ்டர்..ணே.. எங்களக் கொஞ்சம் கவனிங்க..!”  ஆண்டிபட்டியிலிருந்து வந்த சப்ளையர்கள் குரல் கொடுக்க லானார்கள். இப்படியேவிட்டால் மாஸ்டர், பெருசு’ கிட்ட பேச்சுக் கொடுத்தவாக்கில் கிளம்பி விட்டாரானால் சிக்கலு.

”எல்லாரையும் கவனிச்சுக்கிட்டுத் தானப்பா இருக்கெ.. என்னியத்தான் ஆருமே கவனிக்க மாட்டேங்கிறீக.. ரெம்பவும் அலுப்பாய்ச் சொன்னார் மீரான்பாய்.

”என்னாங் நைனா ஒரு வடிய்யாப் பேசுறீக.. டீ வாங்கிட்டு வரட்டுமா..?” போத்திநாயக்கர் விசுக்கென எழுந்தார். மாஸ்டர் கண்களை மூடியபடி வேண்டாமென தலையசைத்து மறுத்தார்.

”சீரட்டு..?”

”இருக்கு..” சட்டைப் பையிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டு, நாயக்கரை அமரச் செய்தார்.

“வேலய முடிச்சு ரெண்டு நாளாச்சு..ண்ணே. ஊருக்குள்ள இருக்க முடீல்ல வேலைக்கு வந்த இருபதுபேரும் பொண்டாடி பிள்ளைகளோட வீட்டுக்கு வந்திர்ராங்கெ.. வதிலு சொல்ல முடீல..!”

“வீட்லவந்து ஓக்காந்துக்கிறாங்க..ண்ணே. ஒங்களுக்கு வேலசெஞ்சு போட்டு நாங்க பேச்சு கேக்கவேண்டியிருக்கு” ஆண்டிபட்டியிலிருந்து வந்திருந்த இரண்டு பேர் மாறி மாறிப் பேசினார்கள்.

நேற்றைக்கு முந்தையதினம் தேனிகிராமக்கமிட்டி கல்யாண மண்டபத்தில் நாற்பதுபேர் கொண்டவேலை. ஏதோ ஒருமில்காரர் வீட்டுவிசேசம். முதல்நாள் இரவில் துவங்கி மறுநாள் காலைடிபன், மதியஉணவு வரை சாப்பாடு தயார் செய்ய வேண்டும், வேளைக்கு ஒன்பது முதல் இருபத்தியோரு வகையான் பதார்த்தங்கள் – ஆக்கிகொட்டி சப்ளைசெய்து இலைஎடுத்துப் போட்டு மண்டபத்தைக் காலிசெய்து வர, இடுப்பு ஒடிந்து போனது. மண்டபத்தில இரவுச்சாப்பாட்டில் வேலை துவங்கினாலும் காலையிலேயே மாஸ்டர் வரச்சொல்லிவிடுவார். லாரியில்வந்து இறங்குகிற காய்கறிகளை இறக்குவதிலிருந்து, பலசரக்கு அய்ட்டங்களைப் பிரித்து சிட்டை சரிபார்த்து மண்டபத்து ஸ்டோர் ரூமிலிருந்து பாத்திரங்களை எடுத்துவந்து பவுடர் போட்டுக்கழுவி, அல்வாவுக்கு கோதுமையை ஊறப்போட்டு ஆட்டி பால் எடுத்து இட்டிலிக்கு, அரிசி ஊறப்போட்டு காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தால் இரண்டுநாளும் சமைத்து பறிமாறி முடித்து மறுபடி அத்தனையையும் கழுவி ஒப்படைக்கவேண்டியதை ஒப்படைத்து மண்டபத்தைவிட்டு வெளியில்வர ரெண்டுநாள் ஓடி முடிந்துவிடும். எத்தனைவகை உணவுகள் சமைத்தாலும் ரசமும் மோர்சாதமும் தவிர எதுவும் தொண்டைக்குள் இறங்காது.

”யே.. ஒன்னிய வேலைக்கிக் கூப்பிட்டது யாரு..? நாங் கூப்ட்டனா..  என்னாப்பா ராசு.. ஒன்னாளு இப்பிடிப் பேசறான்..!” கிராமக்கமிட்டி மண்டபத்து வேலைக்குத்தான் ஆள்போதாமல், ஆண்டிபட்டி ஏரியாவிலிருந்து இருபதுபேரை திரட்டி வந்திருந்தான்.

“அவெ ஒரு அஞ்சுபேரக்கொண்டு வந்திருந்தான்..ணே..” என்ற கங்காணி, பேச்சை தனஆட்கள் பக்கம் திருப்பினான். “பேசாம்த்தே இருங்கப்பா, நாந்தே கேப்பேன்ல..”

“எனக்கு நீதேம் பொறுப்பு ராசு. கண்ட ஆளுககிட்ட கசகசன்னு பேசற தெல்லா பிடிக்காது. நாலு எடத்துல நான் கணக்கு முடிக்க் வேண்டிருக்கு. அது ஒங்களுக்கு தெரிமா சொந்தக்காசப் போட்டு ஆளுகளுக்கு நாஞ் சம்பளந்தாரவெ’ மீரான் கொஞ்சம் சத்தம் கொடுத்துப் பேசினார். சாலையில் நடக்கிறவர்களின் கவனத்தைக்கூட அது நிறுத்தியது.

ஒலிபெருக்கிக்காரர் ஒருசெட்டை முடித்துச் சுருட்டி வைத்துவிட்டு அடுத்தசெட்டைப் பிரித்து உதறினார். சமையல் ஆட்களின் பஞ்சாயத்து எரிச்சலாகத்தான் இருக்கிறது .சம்பந்தமே இல்லாமல் சத்தம் கொடுப்பார்கள். அதிலும் சாராயம் போட்டிருந்தால் பெரும் துன்பம்தான். உள்ளூர்காரர்கள். அவ்வப்போது சமையல் வேலையோடு மைக்செட்டுக்கும் சேர்த்துப் பேசிக்கொண்டு வருவார்கள். அப்ப்டி ஒரு காரணத்துக்காகவும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.     .

“யே.., மாரீ.. “ மீரான்பாய் சமையல் வேலைக்கு வருவதற்கு முன்னால் ’மாரிச்சாமி ஆப்பரேட்டரா’கத்தான் இருந்தார்.–இப்பவும்கூட ஆடி, புரட்டாசி மாதங்களில் சமையல் வேலையற்ற பொழுதுகளில் மைக்செட் போடக் கிளம்பிவிடுவார். அந்த பால்யகாலப் பழக்கத்தில் ஒலிபெருக்கிக் கடைக்காரருக்கு-மாரிச்சாமியை மீரான்பாயா கக் கூப்பிட மனமில்லை , ”யென்னாப்பா மாரி..  சவுண்டு கூடுதலாகுது.. ட்யூனக் கொஞ்சம் கொறச்சுப் பேசுங்க..” என்றுசொல்லி தனது இருப்பைக் காட்டிக்கொண்டார்.

“ணே.. இங்க யென்னா கட்டிப் பெரெண்டு மல்லா கட்றாக..?” கிஷ்ணமூர்த்தி மாஸ்டருக்காக குரல் கொடுத்தார்.

“சே கிஷ்ணா.. அது தப்பு. கடக்காரர் சொன்னா கேட்டுக்கணும்.. கடக்கி வாடக குடுக்கறவரு.. நாம ஓசில வந்து ஒக்கார்றம்.. ரைட் தலைவா..“ என்று தன்மையாய்ப் பேசிய மீரான்பாய், மீண்டும் ஆண்டிபட்டிக்கு வந்தார். “த்ம்பி சைடு கெராப்பு.. மண்டபத்துல நீ என்னா வேலபாத்த.. எப்பிடி ஓப்பி அடிச்ச எல்லாமுந்தெரியும்ப்பா.. சரி அது முடிஞ்சகத.. அடுத்த வேலைக்கி எனக்கு ஆள்வேணும்.. இன்னிக்கி வந்தமாதிரி வ்ந்து முடிச்சிக்குடுத்திட்டு மொத்தமா சம்பளத்த வாங்கிட்டுப் போங்க.. அதுக்குவேற ஆள்தேடிஅலயணுங்கிறயா..? ஆனா அந்த வேலைக்குப் பெறகு  அடுத்தவேலைக்கு நீ வரக்குடாது… ஆமா, கெளம்பு கெளம்பு.. !”

“அடுத்தவேலைக்கு வந்திருவம்..ணே சந்தேகப் படாதீங்க..அதுக்காக காச நிப்பாட்டுறது எப்படி..ண்ணே.. உள்ளூர்வேலைய விட்டுப்புட்டு ஒங்கள் நம்பிவர்ரம்ணா எங்க நெலமய ஓசியிங்க. டெய்லியுமா வேல..? இன்னிக்கி சம்பளத்த நாளக்கி வாங்கிக்கலாம்..ங்க..? மாசத்துல ஒருநாள் ரெண்டுநாள் அருந்தலான வேல. ஊருக்குப் போய்வர பஸ்சார்ஜ்க்கே பாதிக் காசு ஆயிருது.”  உருகினான்..

”அய்யய்ய.. இப்பிடியெல்லா ரோட்ல ஒக்காந்து கசரக்குடாது.. எனக்கென்னா, கேட்டரிங்குக்கு ஒரு போனப்போட்டா.. யூனி பாரத்தோட ஆளுக வந்து நின்னுட்டுப்போற்ங்கெ.. ஏதோ கிராமத்து ஆளுக நமக்குத்தோதுவா இருப்பாங்கன்னு வரச்சொன்னா.. இப்பிடிக் கேவலப்படுத்திறீகளே…!” கையை உதறிய மாஸ்டர், கிருஷ்ணமூர்த்தியிடம் காசைக் கொடுத்து சிகரட் வாங்கிவரச் சொன்னார்.

உடனே விருட்டென போத்திநாயக்கர் எழுந்தார். “ நா வாங்கிட்டு வாரெ நைனா..!”–அதுதான் சாக்கென கிருஷ்ணாமூர்த்தி காசை நீட்ட, மீரான் தடுத்து நாக்யரை உட்கார வைத்தார். அப்புறம் ஆண்டிபட்டி கங்காணியை கண்சிமிட்டி அழைத்தார். உள் பாக்கட்டிலிருந்து ஐநூறு ரூபாய்த்தாள் ஒன்றை எடுத்து நீட்டினார். “ ஒரு புல்.. வாங்கிக்க..”

“ கெளாசு…?.”

“ சேத்து வாங்கிட்டுவா..! “

“எத்தினி..? “

“”அவிங்களையுஞ் சேத்து எண்ணிக்க.. மீதக்காச அவுகளுக்குக் குடுத்து ஊருக்கு அனுப்பிச்சுவிடு. நாள வேல முடிஞ்சதும் பாக்கி நிறுத்தாமக் குடுத்துரலாம்.”  மாஸ்டரின் சொல்லுக்கு ப்வ்யமாய்த் தலையாட்டிய கங்காணி, துணைக்கு ஒருவனை அழைத்துக் கொண்டு பிரந்திக்கடைக்கு நடந்தான்.

“யேப்பா மாஸ்டரு.. இங்கன வச்சு பாட்ல ஓப்பன் பண்ணீறாதீகப்பா..!” – ஒலிபெருக்கி கடைக்காரர் முன்னெச் சரிக்கையாய் குரல் எழுப்பினார்.

விருட்டென பின்புறம் திரும்பிய மீரான்., “பா..ஸூ நாங்களும் சோத்தத்தான் திங்கறோம்.. அந்தா, அங்க அம்பட்டெங் கட தெறந்திருக்கில்ல. அங்க போயிருவம்.” என்ற்போது, கால்களில் புருபுருவென ஊர்வதுகண்டு பார்வையினைக் கீழே செலுத்தினார். மீரான். போத்திநாயக்கர், தனது அடர்ந்த தாடியை மீரானின் முழங்காலில் வைத்து அழுத்தியபடி சாய்ந்திருந்தார். சட்டென காலிலிருந்து அவரை விலக்கிய மிரான், ‘’ என்னாங்க நைனா.. “ என்றபடி தன் கால்களை உள்ளிழுத்துக் கொண்டார்.

“மாஸ்டர் காலு சில்ல்ல்லுன்னு குளுந்து கெடக்கு.. சாப்பிடலியா நைனா..” எனக் கேட்டவர், மேலும்,” விசாழக்கெழம காலம்பற வந்திரத்தான நைனா..? “ கேட்ட்படி மீரானின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். அப்போது அவரது விழிகள் பள்ளத்தில் கிடப்பதாய்த் தோன்றியது

“அப்பாதயே சொல்லிட்டேன்ல நைனா… வந்திருங்க.. வந்திருங்க..”

“வந்திர்ரே நைனா.. ஆள் கூடுதலா வந்திருச்சுன்னு கழட்டி விட்ற மாட்டீகள்ல.. சப்ளையெல்லா ஸ்பீடா பாக்கலாம் நைனா.. தேஙகாயக் கூட ஒடச்சுப்போடுங்க அம்பதுகாய்கூட துருவீர்லாம்..” என்றவர், ”பையெங் கூட சண்ட போட்டபிறகு ஏன்..னு கேக்க நாதியில்ல எனக்கு..”  மறுபடி மீரானின் கால்களை லாவிப் பிடித்தார் போத்திநாயக்கர். மனம்பதற எழுந்து கொண்டார் மாரிச்சாமி என்ற மீரான்மாஸ்டர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “நைனா பாய்”

 1. Sakthi Bahadur

  கல்லாவில் கம்பீரமாக அமர்ந்த போத்தி நாயக்கருக்கு மருமகள் கையில் கடை நிர்வாகம் சென்றவுடன் சொந்த கடையில் கையாளாக இருக்க விருப்பமில்லை. வயதான காலத்திலும் சமையல் கூலி வேலைக்கு கிளம்பிவிட்டார்.

  மாரியப்பன் சாதிக்கொடுமைகாக சுன்னத் செய்து கொண்டு மீரான் பாய் சமையல் மாஸ்டராக மாறிவிட்டார்.

  வலிமிகுந்த கதாபாத்திரங்களை மிக எளிமையான நடையில் நம் கண்முன் நிறுத்தும் தேர்ந்த கலைஞர் தோழர் காமுத்துரையின் சிறந்த படைப்பு நைனா பாய் சிறுகதை.

  கதையை எப்படி சொன்னாலும் அடுப்படி நெருப்பில் வெந்துந்து சுவையான உணவு தரும் சமையல் தொழிலாளர்கள் தங்களின் கூலிக்காசை சாராயத்திற்கு அழிப்பதை அவர் சொல்லத் தவறுவதே இல்லை.

  ஒற்றை மகனை பெற்றும் பலன் இல்லாமல் ஒரு நாள் கூலி வேலைக்காக காலில் விழுந்து கெஞ்சி கேட்கும் போத்திநாயக்கரின் நிலைதான் நாட்டில் பெரும்பாலான பெற்றோர்களுக்கு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: