நேற்றையின் நிழல்

3.7
(3)

உடலில் ஒருவித பரபரப்பு. அடங்கு அடங்கு என்றாலும் மனம் றெக்கைகட்டி தரையில் நில்லாமல் தாவுகிறது. பிறந்த மண்ணில் கால் வைக்க மனம் பரபரக்கிறது. உடம்பெல்லாம் புல்லரிக்க இதயம் படபடக்க மேயச்சென்ற ஆடுகள் திரும்பி வரும்போது பசியின் மயக்கத்தில் ஒருவித எதிர்பார்ப்பால் அங்குமிங்கும் அலைக்கழிந்தபடி துள்ளிக் குதித்தோடும் இளம் குட்டிகள் போல மனம் ஒரு நிலைப்படாமல் தவித்தது. உடலும் உள்ளமும் இன்னும் மக்களையும் காணத் துடித்தபடி வேக மெடுக்கிறது. வருடங்கள் ஓடினாலும் ஞாபகப் பரப்புகள் சுற்றிச் சுற்றி அலையடிக்கிறது. கரிசல் மண் கண்மாயும் மண்ணுக்கே யுரிய மணமும் நிறமுமாய் கண்மாய்த் தண்ணீரும் உடம்பெல்லாம் சேற்றைப் பூசிக்கொண்டு தவளையாய்த் தண்ணீரில் கிடக்கும் சிறுவர்களும் ஊஞ்சலாடும் ஆல விழுதுகள் கண்மாய்த் தண்ணீரில் ஓட்டியும் ஓட்டாமலும் தன் நுனியை மட்டும் வெளுப்பாக்கி மெல்-சான காற்றில் அசைந்தாடுகிறது. கண்மாயைச் சுற்றி உள்ள புளியமரங்களில் காக்காய் குஞ்சு விளையாடி அலுத்து புளியம்பிஞ்சுகளை கிணற்றடியில் உரசி உரசி மாவாக்கி பல் கூச தின்று வீட்டில் கிடைக்கும் பூசைக்கு பயந்து தெருக்கோடியில் வீட்டி ருந்து அம்மா தேடிவரும் வரை ஒளிந்து பசியோடு வயிறு வ-க்க காத்திருந்ததும், தண்ணீர் வற்றியதும் கலங்கிய குட்டையை மேலும் கலக்கி அயிரை மீன்களும் கெண்டை கெளுத்திகளும் பிடித்து நாக்குச் சப்புக் கொட்ட சுவைத்ததும் பகலெல்லாம் வீட்டைப்பற்றிய நினைவின்றி இலந்தைப்பழம் பிடுங்கித் தின்பதும் ஓடை முட்களில் தேனைடுத்துச் சுவைப்பதுமாய் திரிந்த நாள்கள் லேசில் மறக்க முடியுமா:

ஊரில் சென்று இறங்கிய போது அரிதாய்த் தெரிந்த முகங்கள். ஒரு தலைமுறை என்பது முப்பது வருடங்கள் என்று யாரோ கூறியது சரிதான் போலும் பேசுவதற்குக் கூட மாச்சப்பட்டுக் கொண்டு செல்லும் மக்களோடு இயல்பாய் ஒன்றிப் பேச முடியாது. அண்ணியப் பட்டுப் போனேன். என்னதான் நாகரீகம் பெருக்கெடுத்து ஓடினாலும் உடை முதல் சில விசயங்கள் நல்ல வேளையாக பல பெரியவர்கள் தங்கள் அடையாளத்தை இழக்காது இருந்தார்கள் எப்போதும் போலவே சட்டை இல்லா மேனியுடன் கோடு போட்ட டவுசர் வெளியில் தெரிய கை-யைக் கயிறாய் உடுத்திக்கொண்டு மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்த கணபதி மச்சானுக்கு முகத்தில் பரவசம் ஆச்சர்யம் வாங்க மாப்ளே. எப்போ வந்தீக, வீட்டுல அக்கா இருக்குது. இருங்க மத்தியானம் வந்துடுதேன் மேச்சலுக்கு ஆடுகளுடன் சென்றார். மச்சான் மாறவேயில்லை எப்போதும் இப்படித்தான் யாருடன் பேசிக்கொண்டு இருந்தாலும் கண்கள் மட்டும் ஆடுகள் மேல்தான் இருக்கும். மனுசர்களிடம் பேசற மாதிரியே ஆடுகளிடமும் அவ்வப்போது பேசுவார் திட்டுவார் புதிதாய் பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யமாய் இருக்கும். ஆனாலும் இவர் ஆடுகளிடம் தான் அதிகம் பேசியிருப்பார் போல.

“இதுயாரு ரவிதானேய்யா கண்களை இடுக்கிக் கொண்டு நெற்றியின் மேல் கையை வைத்து காரைவிட்டுப் பெரியம்மா சுளுவாய் அடையாளம் கண்டதில் சந்தோசம் ஆச்சர்யம். “பெரியப்பா நல்ல இருக்காரா”. இருக்கார் அவருக்கென்ன சுரத்தில்லாமல். ஊரிலேயே தாட்டியமான குடும்பம். ஏகப்பட்ட நில புலன்கள் காடுகளில் ஆடையும் கோடையும் வேலை இருந்து கொண்டே இருக்கும். காலத்தில் மல்-க்காய் கட்டுகள் அம்பாரம் அம்பாரமாய் களங்களில் குவிந்து கிடக்கும். மல்-க்காய் அடிப்பு பத்துப் பதினைந்து நாட்கள் தொடர்ந்து இருக்கும். எட்டு மாடுகட்டும் பிணையல் கூட இருக்கும். அந்த அளவு களம் இருக்கும். ரெண்டு மூனு செட் விடிய விடிய களத்து வேலை அந்த இரவுகளில் சிரிப்பும் கும்மாளமுமாய் வேலை நடக்கும். முன்னந்தியில் கொஞ்ச நேரம் இருக்கும் பெரியப்பா தூங்கச் சென்றபின் தலைப்பா கட்டி இருக்கும் துண்டின் முனையில் ஒரு சின்ன பொட்டலம் பல்பெட்டிகடைக்குச் செல்லும் சேவுகளும் சீரணிகளும் களத்துக்கு வரும். ரெண்டு மூனுதரம் காப்பி வேறு. இதற்காகவே சிறுவர்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு பிணையல் சுற்றப் போவதுண்டு. ஏதாவது ஒரு மாடு வாலைத் தூக்கினால் போதும் உட்கார்ந்து இருக்கும் பெரியவர்கள் டேய் “சாணியைப் பிடிடா’ என்று குரல் கொடுப்பார்கள். இல்லையேல் காலையில் பொழியில் சாணிப்போக்கு காட்டிக் கொடுத்து விடும். சாணிவாசம் அவ்வப்போது வந்து கொண்டிருக்க மல்-க்காயின் மணம் விடிய விடிய அந்த ஏரியா முழுவதும் கமகமக்கும்.

பெரியப்பா தன் ஒரே மகள் இந்திராக்கா கல்யாணத்திற்கு தட்டு வண்டியிலேயே ஊர் ஊராய்ச் சென்று பத்தரிகை கொடுத்து வந்தார். திருமண அழைப்பாக வெற்றிலை பாக்கு மட்டுமே கொடுத்து அழைத்த அந்த நாட்களில் முதன் முதலாய் பத்திரிகை அடித்தது பெரியப்பதான். பெரியப்பாவின் பக்கத்தில் நிலக்கிழார் பட்டம் போல் ஒட்டியிருந்தது. பக்கத்து ஊரில் உள்ள வசதியானவர்கள் எல்லாருடைய பெயரும் அதில் இருந்தது. பல பெரு நிலக்கிழாரும் இதில் அடக்கம். தட்டு வண்டியும் கட்டை வண்டியுமே இருந்த ஊரில் கூட்டு வண்டியை காணச் செய்தது பெரியப்பாதான்.

சீரெங்காபுரம் முதலாளியிடம் இருந்து இரவல் வாங்கி வந்தார். பெண் அழைப்பு மாப்பிள்ளை அழைப்பு எல்லாம் அந்த வண்டியில் தான். உட்காரும் இடத்தில் பஞ்சு மெத்தையும் சிவப்புகரையில் கோடு போட்ட ஜமக்காள விரிப்பும் பல வண்ண பெயின்ட்டால் ஆன வண்டிச் சக்கரம் மினுமினுக்க எல்லாருக்கும் ஒரு காட்சிப் பொருளானது. கிட்ட வந்து தொட்டுப் பாராதவர்கள் யாருமில்லை. வண்டி இருந்த மூன்று நாட்களும் அதற்குப் பக்கத்தில் தான் விளையாட்டு புளியமரங்களும் கண்மாய்க் கரையும் அந்தச் சமயத்தில் மறந்து போனது.

ஊரிலேயே பெரிய வீடு என்றாலும் கார்த்திகை மாத அடை மழையில் கூட பெரியப்பா தொழுவத்தில்தான் படுத்திருப்பார் குறைந்தது ரெண்டு சோடி கனத்த மாடுகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ரெண்டு வருசத்துக்கு ஒருதரம் முத்துலாபுரம் மாட்டுத் தாவணிக்கு போய் நல்ல மாடுகளாய் பிடித்து வருவார். மேலே கை படக்கூடாது சுள்ளுன்னு பறக்கனும் அப்படிப்பட்ட மாடுகள்தான் பெரியப்பாவிற்குப் பிடிக்கும். அந்த சமயத்தில் ஒலைக் கொட்டான் நிறைய சேவுகளும் கருப்பட்டி மிட்டாயும் எங்களுக்கும் ஒரு பங்கு வரும்.

வயதானாலும் “சொகெத்தை இழக்காது வாய் நிறைய வெற்றிலை வெள்ளை வேட்டி ஜிப்பாவில் பெரியப்பா பக்கதில் மஞ்சப்பை எப்போதும் அமரும் கயிற்றுப் கட்டில் அடையாளம் காண சிரமப்பட்டார். சொன்னவுடன் முகத்தில் சந்தோசப் பெருக்கு பக்கத்தில் அமரவைத்து ஆசையாய் கைகளைப் பிடித்துக் கொண்டு பேசினார். “நின்னவன் நிமுந்து பாத்தா நடந்தவன் காததூரமுன்னு சும்மாவா சொன்னாங்க, ம் காலமும் நேரமும் நம்மள கேட்டுட்டா ஓடுது. ஒங்கொப்பனோட போயி டவுன்ல செட்டிலாயிட்டீங்க. ஒரு நல்லது பொல்லதுக்காச்சும் வரட்டும் வந்துட்டு போகலாமுல்ல. பெரியப்பா மூச்சு விடாமல் பேசிக்கொண்டு இருந்தார். தொழுவம் வெறிச்சோடிப் போயிருந்தது. மாடுகளை காணவில்லை.

ஒரே ஒரு வண்டி மட்டும் எலும்புக் கூடாய் தூக்கில் தொங்கவிட்டது போல உத்திரத்தில் மேக்காலுடன் சேர்த்து கட்டியிருந்தார்கள். எங்கும் நிறைந்து காணப்படும் ஏர்க்கால்களும் மேளிகளும் வடக்கயிறும் இருந்த சுவடே இல்லை. எலும்புக் கூடாய் வண்டியைப் பார்க்க பார்க்க மனதைப் பிசைந்தது. குப்பை அடிக்கவும் விளை பொருட்களை வீடு கொண்டு வந்து சேர்க்கவும் வீட்டுச் சாமான்கள் வாங்க டவுனுக்கு போவதற்குமாய் ஒரு ரதம் போல் வீட்டில் எல்லாமுமாய் இருந்த வண்டி. காணச் சகிக்காமல் பார்வையைத் திருப்பினேன். பிண்ணாக்கும் தவிடும் நுறைத்துப் போய் இருக்கும். குழுதாடி தொழுவத்தின் பின்புறம் குப்புறக் கிடந்தது. அது மட்டுமா, மனிதனுடைய வாழ்வையே திருப்பிப் போட்ட மாதிரியில்லவா தொழுவத்தைப் பார்க்க பார்க்க மனம் துவண்டு போனது. பெரியப்பா வெற்றிலையின் முதுகுக்கு சுண்ணாம்பு தடவிக் கொண்டிருந்தார். “என்ன பெரியப்பா மாடுகளையே காணோம்”

வண்டி மாடு அத்துப்போய் ரொம்ப நாளாச்சுய்யா. வெவசாயத்தை ஏறக்கட்டியாச்சி உழுதவன் கணக்குப்பாத்தா ஒழக்கு கூட மிஞ்சாதுன்னு சும்மாவா சொன்னாங்க. இப்ப வெல்லாம் வெவசாயம் பாக்கனுமின்னா வருசத்துக்கு ரெண்டு குருக்கத்தை விக்கனும். அப்படி இருக்குது தின கூ-. வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பா ஆயிடுச்சு. எல்லாம் மில் வேலைக்கும், தீப்பெட்டி ஆபீசுக்குமா போறாங்க. தனதாள் இருக்குறவங்க சும்மா போட்டா கேவலமின்னு. சோளஞ் சொங்கை போட்டு எடுக்காங்க. மழையும் முன்னப்போல இல்லை கெடுக்குது. வெற்றிலைச் சாறை புளிச் சென்று ஓரமாய் துப்பினார். துண்டால் கடைவாயைத் துடைத்துக் கொண்டு திரும்பவும் பேசினார். நம்ம காடுகள் பூராம் வேலிக்கருவல்தான் இருக்குது. செலவில்லாம ரெண்டு மூனு வருசத்துக் கொருதரம் காசு வருது. கண்கள் பளபளக்க பெருமூச்சு விட்டு ஆசுவாசமாய் கண்களை மூடித்திறந்தார். அடிமனசில் விவசாயம் தொலைந்து போன துக்கம்.

“இந்திராக்கா பசங்க….. எல்லோரும் மில்லு வேலைக்குப் போறாங்க. கடைசிப் பேரனுக்கு வர்ற இருவத்தி ஓராம் தேதி கல்யாணம். அதான் பத்திரிகை கொடுக்க கெளம்பிக்கிட்டு இருந்தேன். ஒருவினாடி யோசித்தவர், தப்பா எடுத்துக்க கூடாது என்னடா வந்த இடத்துல பத்திரிகை கொடுக்குறேன்னு. சேச்சே என்ன பெரியப்பா நீங்க குடும்பத்துலயே பெரிய ஆளு ஒங்களப் போய தப்பா நெனப்பேனா சும்மா கொடுங்க பெரியப்பா கைகள் நடுங்க நீட்டிய பத்திரிக்கையைப் பெற்றுக் கொண்டேன். என்னுடைய பேரனுக்கும் இன்னார் மகளுக்கும் வழக்கமான விவரங்களுடன் கீழே பெரியப்பாவின் பெயர். ஆர்வமாய்ப் பார்த்தேன். பட்டம் போல ஒட்டியிருக்கும் நிலக்கிழார் என்ற அடைமொழி இல்லை. என்னையும் அறியாமல் கைகளுடன் மனமும் நடுங்கியது. பேச நா எழவில்லை என் பார்வை பத்திரிகையிலேயே குடுத்திட்டு நின்றது. கண்களில் பரவிய நீர்ப்படலம் பத்திரிகையை மங்கலாக்கியது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 3.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “நேற்றையின் நிழல்”

 1. ச.லிங்கராசு

  கிராமமும் கிராமத்து மனிதர்களும்
  காலத்தின் ஓட்டத்தில் எவ்வளவுதூரம்
  போய் விட்டார்கள்.கதை நாயகனின்
  நினைவகள் எல்லாம் கனவுகளாகி
  விட்ட துயர் நம்மையும் பதம் பார்த்து
  விடுகிறது.பழம் பெருமை பேசித்திரியும் மனிதர்கள் மத்தியில்
  தன் நிலையுணர்ந்து ,நிலக்கிழார்
  அடைமொழி தவிர்த்த பெரியப்பா
  பெரிய அப்பாதான்.நாயகன் இதற்காக
  பெருமைப் படலாம்.

 2. SathyaRamaraj

  நிலக் கிழார் என்னும் கௌரவப் பெயர் இனிவரும் தலைமுறையினருக்குத் தெரியாமலேயே போய் விடக் கூடிய எத்தனையோ விஷயங்களில் ஒன்றாக இருந்து விடப் போகிறது.

  கண் முன்னே காட்சிப் படமாக விரியும் வகையில் மிகவும் யதார்த்தமான எழுத்துநடையும், விவரணைகளும்
  வாசிப்பைத் துரிதப்படுத்தியது.. ஆசிரியருக்குப் பாராட்டுகள்!

  சத்யா ராமராஜ்

 3. சீரழிந்து வரும் இன்றைய விவசாயத்தின் உருவமாக உடல் நலிந்த பெரியப்பா…. நல்ல கதை வாழ்த்துகள் தோழர்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: