நெருப்பின் நிழலில்

5
(1)

கிரேக்கத்தின் அடிமை வம்சம் முழுவதும் அங்கு கூடியிருந்தது. கறுப்பாய், குள்ளமாய் உழைத்து உழைத்து ஓடுதட்டிப்போன முகங்கள் அந்த மண்மேட்டையே ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தன.

எஜமானர்களிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை ஓய்வை போராடிப் பெற்றுத் தந்த அடிமைகளின் தலைவன் டயாலிஸிஸின் ஒரே வாரிசு, புரோமித்தஸ் இதோ வரப் போகிறான். அந்த ஞாயிற்றுக்கிழமை முழுதும் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. டயாலிசிஸின் உருவச் சிலை முன்பு சோமபானைத்தை படைத்துவிட்டு, எஞ்சியதை அனைவரும் குடித்து கும்மாளமிட்டபடி கூடியிருந்தனர் மக்கள்.

“என் மக்களே…!” காற்றுக் கிழிக்கிற குரலில் புரோமித்தஸ் அழைப்பு விடுத்தான். ஒரு சின்னக் கச்சை அவன் இடுப்பை சுற்றி மானம் காத்தது. அந்த லினன் துணியை ஒட்டி, ஒரு குறுவாள் ஒரு வகை கயிறு போன்ற வஸ்துவினால் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. இந்தக் குறுவாளை கொண்டு தானே மொத்த அடிமை வம்சத்தையும் அழிவுகளிலிருந்து காத்தான் புரோமித்தஸ்?!

வெளிச்சம் சிறிதுமற்ற இருட்டுப் பகுதியில், தன் கைகளை அடிமை முகங்களை நோக்கி நீட்டியிருந்தான் புரோமித்தஸ். அவனை நிழலுருவாய்க் காண்பதிலும், அவன் முன் நிற்கிறோம் என்ற உணர்வுகளிலும் உறைந்து போயிருந்தது கூட்டம்.

“என் மக்களே… டயாலிசிஸ் தந்தையின் ஆசீர்வதிக்கப்பட்ட அடிமை வீரர்களே… நம் வம்ச வரலாற்றில் இது ஒரு வெற்றிப் பயணம். இதற்கு முன்னால் இப்படியொரு அழைப்பு நம்மில் யாருக்கும் கிடைத்ததில்லை. ஒலிம்பிய மலையின் அப்பலோனியக் கடவுள்கள் உங்கள் புரோமித்தஸை அந்த புனித மலைக்கு அழைக்கிறார்கள்…” மக்கள் ஆரவாரம் செய்தனர். கறுப்புச் சூழ்ந்திருந்த அந்த அடர்ந்த இருளிலும் கூட்டத்தின் குதூகலம் புரோமித்தஸுக்குத் தெரிந்தது.

“இருளின் மக்களே… ஒலிம்பிய மலையின் உயரத்திலிருந்து உங்களுக்கு தேவையானவைகளை நான் தருகிறேன். தந்தையின் ஆணைப்படி ஞாயிறுகளைக் கொண்டாடுங்கள். அடிமைகளின் சுதந்திர நாள் அது ஒன்றே…” புரோமித்தஸ் புன்முறுவலோடு இருளுக்குள் நடக்கத் துவங்கினான். கூட்டத்தின் ஒரு பகுதியினர், புரோமித்தசின் பின்னால் ஒலிம்பிய மலையின் அடிவாரம் வரை வந்தனர். கல்மேட்டின் மீது கால்வைத்தபடி தன் மக்களை திரும்பிப் பார்த்து கையசைக்கிறான் புரோமித்தஸ்.

“போய் வருகிறேன்… டயாலிசிஸ் உங்களைக் காப்பார்.” ஒலிம்பிய மலையின் இருள் வெள்ளத்தின் இடையே நடந்து, சரிவாக ஏறினான். அப்பலோனியக் கடவுள்களின் காவல் படையினர் மலை வாயிலில் காத்துக் கொண்டிருந்தனர். புரோமித்தசைக் கண்ட வியப்பு, அவர்களுக்குள்ளும் ஆச்சரியம் பாய்ச்சியது.

“வாருங்கள் புரோமித்தஸ்… ஜுபிடர் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.” அவர்களோடு மலையின் மேல் நடக்கத் துவங்கினான். உச்சி மலையின் உச்சப் பகுதியில் புனித வாயில் அவர்களுக்காக அகலத் திறந்தது. உள்ளே நுழைந்ததும் புரோமித்தஸின் கண்களில் வெளிச்ச வெள்ளம் ஆச்சரியம் தந்தது.

“அப்பலோனிய காவலர்களே… அது என்ன?” புரோமித்தசின் கைகள் நெருப்பு வெளியை நோக்கி நீண்டு இருந்தன.

“அது தான் நெருப்பு. ஒலிம்பிய மலைக்கு வெளிச்சம் பாய்ச்சும் அபூர்வச் சூரியன்” பெருமை பொங்க பதில் சொன்னவாறே, அந்த அப்போலோனிய உலகின் அற்புதத்தைக் கடந்து போனார்கள். புரோமித்தஸ் திரும்பிப் பார்த்தான்.

“இந்த சொர்க்க நெருப்பின் சின்னப் பகுதி, நம் அடிமை மக்களின் இருளைப் போக்குமே!” மைய மண்டபத்தின் வாசல் வந்திருந்தது. காவலர்கள் உள்ளே கைநீட்டினர். “எங்கள் புனித மிகு ஜுபிடரின் சபை உங்களை வரவேற்கிறது. உங்கள் அடிவாரத்து அடிமைகளின் அழுக்குகளை எல்லாம் மனசிலிருந்து தூர எறிந்து விட்டு உள்ளே செல்லுங்கள்” வாயிலைச் சுற்றிலும் நிறைய காவலர்கள் நின்றிருந்தனர். புரோமித்தஸ் சிந்தனை வயப்பட்டவனாக உள்ளே நுழைந்து, புனித அரங்கில் புகுந்தான்.

“வாருங்கள் புரோமித்தஸ்… அடிமை உலகின் அன்பு வாரிசே… வருக, அப்பலோனியத் தலத்தின் அற்புதங்கள் உங்களை வரவேற்கிறது…” வரிசையாய் நின்றிருந்த ஸ்டார்ஸ், ஜியூஸ் மற்றும் ஜுபிடர் ஒருமித்த குரலில் வரவேற்றனர்.

“வரலாற்றில் நிகழ்ந்தே இராத – அடிமைக் கலப்பினத்தின் ஆதரவுக்குரல் இப்போது ஒலிக்கிறது. இருளின் மக்களை ஆசீர்வதித்ததற்கு வணங்குகிறேன்…” புரோமித்தஸ் புன்னகையோடு தலைகவிழ்ந்தான். ஜுபிடர் முகத்தில் உணர்ச்சிக் கலவைகள்.

“இல்லை புரோமித்தஸ்… இல்லை. எங்கள் அன்பும் – ஆசீர்வாதமும் உன் ஒருவனுக்கேயன்றி, அடிமைகளுக்கு இல்லை” புரோமித்தஸ் இதை எதிர்பார்க்கவில்லை, என்றாலும் மீண்டும் முறுவலித்தான்.

“புராண மக்களின் மேம்பட்ட கடவுள்காள்… நானும், என் கூட்டமும் வேறல்லவே.”

அப்பலோனியர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“இருக்கலாம் புரோமித்தஸ்… ஆனால் நாங்களும் – எம் மக்களும் இரு வேறாய் பிரிந்துள்ளோம். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு புனிதப் பாலம் மட்டுமே இருக்கிறது. சாதாரண மனிதர்கள் எங்களை அடைவதே அபூர்வம்…”

ஜியுஸ், ஜுபிடரை ஆமோதித்தார்.

“நீயும் இப்போது ஒலிம்பிய மலையில் ஒன்றாகிவிட்டாய். உன் மனிதத் தனங்களை இப்போதே இறக்கி வைத்து விடு…”

“ஆனால்… என் தந்தை டயாலிசிஸ் எனக்கு அப்படிப் போதிக்கவில்லை. நாம் மனிதர்களுக்குடையவர்கள். மனிதர்கள் நம்முடையவர்கள்”-புரோமித்தஸின் வார்த்தைகள் அப்பலோனியர்களை விடுவதாய் இல்லை.

“சரி புரோமித்தஸ்…. பிறகு விரிவாகப் பேசலாம். புராண பூமியில் விவாதங்களுக்கு இடமில்லை என்பதை மறந்து விடாதே. எங்கள் அழைப்பை ஏற்று புனித மையம் வந்திருக்கிறாய். உனக்கு என்ன வேண்டும் கேள்?” – ஜுபிடர் வினவ, புரோமித்தசின் புருவங்கள் முடிச்சிட்டன. ஒரு நிமிடம் கண்களை மூடி, பிறகு வாய் திறந்தான்.

“எது கேட்டாலும் தருவீர்களா ஜுபிடர்?” ஸ்டார்ஸ் கேலியாய் சிரித்து விட்டுச் சொன்னார் – “ஒரு அடிமைகளின் அரசன் கேட்பதை கொடுக்க முடியாத அளவிற்கு அப்பலோனியர் ஏழைகள் அல்லர்” புரோமித்தஸின் மனதில் நம்பிக்கை சுடர் விட்டது.

“சரி அப்படியானால்… புனித மையத்தின் வெளிச்ச நெருப்பை, என் இருள் மக்களுக்காக இப்போதே கொடுங்கள்…”

“புரோமித்தஸ்…”

ஜுபிடரின் அலறல் ஒலிம்பிய மலையையே உலுக்கியது. ஸ்டார்ஸும், ஜீயுஸும் அருகில் வந்தனர். “என்ன கேட்கிறோம்… யாருக்கு கேட்கிறோம் என்பதை தெரிந்து கொண்டு தான் கேட்கிறாயா புரோமித்தஸ்?” புரோமித்தஸ் இரு கைகளையும் இடுப்பில் தாங்கி நின்றான்.

“ஆமாம்… தெரிந்தும், புரிந்தும் தான் கேட்கிறேன். நெருப்பை தர முடியுமா? முடியாதா?” டயாலிசிஸின் வீர ரத்தம், புரோமித்தஸைப் பேச வைத்தது.

“அது புனித நெருப்பு. உன் மக்கள் அடைகிற அளவுக்கு அது தாழ்ந்து போகவில்லை. நீ ஒலிம்பிய மலையில் தங்குவதற்கு தகுதியற்றவன். திரும்பி உன் அடிமைகளிடமே ஓடிப் போ…” – ஜுபிடரின் உறுமல் மேகங்களை கதிகலக்கியது. புரோமித்தஸ் தன் குறுவாளினை உருவியபடியே சொன்னான் – “போகிறேன்… ஆனால் அந்தப் புனித நெருப்போடு! என் மக்களுக்குப் பயன்படும் எதையும், எங்கேயும் நான் விட்டு விட்டுப் போனதாய் சரித்திரம் இல்லை.”

அப்பலோனிய காவலர்கள் புரோமித்தசை சூழ்ந்து கொண்டார்கள். அவனின் ஒற்றை குறுவாள், அத்தனை பேரின் பெருவாள் சுழற்சியில் பணிந்து போனது.

“அவனை சிறையில் இடுங்கள்” ஜுபிடரின் ஆணையை ஏற்று புரோமித்தஸை சுற்றி காவலிற்கு நின்றனர்.

புரோமித்தஸின் மனம் கொந்தளித்தது. “இருட்டிலிருக்கும் என் மக்களுக்கு வெளிச்சம் தந்தே தீருவேன்.” உடலின் பலம் மொத்தமும் தசைகளில் ஏறி நின்றது. நரம்புகளின் முறுக்குகள் கூடி நிமிர்ந்து நின்றான் புரோமித்தஸ். “தேவனே… டயா..லி..சி..ஸ்” அவனின் உரத்தக் குரலில் காவலர்கள் கலைவதற்குள், சங்கிலிக் கண்ணிகள் அறுந்து தெறித்தன. உயர்த்திய கைகளோடு வரும் புரோமித்தசைக் கண்டு காவலர்கள் தெறித்தோடினர்.

மிக மெதுவாக சூரியன் கண்விழிக்கத் தொடங்கிய வேளையில், அதோ… புனித நெருப்பு ஒளிவிட்டு எரிந்து கொண்டிருந்தது. புரோமித்தஸ், மூச்சிறைக்க ஓடி அந்த ஒலிம்பிய மலையின் அற்புதத்தின் முன் மண்டியிட்டான்.“புனித நெருப்பே… அடிமைகளின் வாழ்வில் ஒளியேற்றப் போகும் உனக்கு என் வணக்கம்…” நெருப்பு எரிந்து கொண்டிருந்த மண் கலயத்தை இரு கைகளாலும் ஏந்தினான்.

உயர்த்திப் பிடித்த வெளிச்சத்தோடு ஒலிம்பிய மலையின் எல்லை நோக்கி ஓடினான் புரோமித்தஸ்.

இருளில் மூழ்கியிருந்த அடிமை மக்கள் குடில்களில் வெளிச்சம் படத் துவங்கியது.

அதோ… கிழக்கிலே சூரியனின் விடியல் – வானத்தின் கறுமையை, வெண்மையாக்கிக் கொண்டிருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “நெருப்பின் நிழலில்”

 1. Sakthi Bahadur

  தன் மக்களின் இருளை போக்க பாடுவருபவனே தலைவன் என்பதை உணர்த்தும் அருமையான சிறுகதை.

  கிரேக்க கதாபாத்திரங்களின் பின்னணியில் அடிமை மக்களின் உரிமைக்காக போராடும் தலைவனின் பாத்திரம்.

  இங்கு இருள் என்று குறிப்பிடுவதை மக்களின் அறியாமை கல்லாமை போன்றவற்றோடு பொருத்தி கொள்ளலாம்.

  ஒரு சிறுகதையின் மூலம் பல்வேறு சிந்தனைகளை தூண்டி விடும் தோழர் உமர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 2. ஜெகநாதன்.வீ. 9789177991

  இந்த கதையில் தந்தை டயாலிஸிஸ் தன் மக்களுக்கு விடுமுறை பெற்றுத்தந்தது போல அவரது மகன் புரோமித்தஸ் தன் மக்களுக்கு வெளிச்ச நெருப்பை பெற்றுத்தர போராடி வெற்றி காண்கிறான்.

  ஒரு வகையில் இது மகிழ்ச்சியை அளிக்கிறது. இருப்பினும் ஒரு கூட்டத்திற்கு நல்லது செய்வதற்கு என்று ஒரு குடும்பம் மட்டும் பாடுபடுவது போல காட்டுவது சற்றே மன்னராட்சி முறையையும் தற்கால வாரிசு அரசியலையும் நினைவூட்டத் தவறவில்லை.

  இதுவே இன்னுமொரு அடிமைப் பண்பை வளர்த்து விடாதா? மக்களின் கூட்டத்தில் இருந்து தகுதியானவர்கள் தலை எடுக்க வேண்டும். அவர்களை கூட்டம் ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டும்.

  ஆனால் மக்களின் மனநிலை ஏதாவதொரு அடிமை மனப்பாங்கோடே தொடர்வதையும் சேர்த்தே பதிவு செய்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: