நீக்கம்!

0
(0)

அந்த ஜீவ பூமியைக் கடைசியாய் ஒரு தடவை தரிசிக்க வேண்டும்போல் இருந்தது. சட்டை இல்லாத மேலுடம்பை நீளத் துண்டால் பொத்திக் கொண்டு காட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான.

வண்டிப் பாதையில் அரைக் கல் நடந்து, காட்டுக்குப் போகும் திருப்பத்தில் திரும்பி குப்பண கவுண்டர் தோட்டத்துக்குள் நுழைந்தான். மோட்டார் ஓடிக் கொண்டிருந்தது. வெதுவெதுப்பான தண்ணீரில் கைகால் அலம்பிக் கொண்டான்.

துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தபடி வரப்புமேல் நடந்தான். தோட்டத்தை அடுத்து சீரங்க நாய்க்கர் காடு! அதையொட்டி இவன் நிலம்! தன் காட்டுக்குள் நுழைந்த போது மனது புல்லரித்தது. வெள்ளாமைக்கு இன்னும் விதை தூவவில்லை என்றாலும் அது ரெம்பவும் அழகாகத் தெரிந்தது. செவ்வல் மண்ணும் பச்சை நிறப் புல் பூண்டுமாய்…பயிர் முளைத்த வாலிபக் களை தென்பட வில்லை என்றாலும்….பிஞ்சுக் குழந்தையாய முறுவலித்தது.

சித்திரை உழவு போட்டதோடு நிற்கிறது. ஆடி பிறந்து இன்னும் மழை பெய்ய வில்லை. மழை பெய்தாலும் உழவு போடுவதாய் இல்லை. இன்று நிலம் கிரயம் ஆகப் போகிறது. பின் எதற்கு உழவு போட?

“விக்யப் போறமேன்னு தருசாப் போட்டுறாதீக| உழுது கிழுது செம்ம செஞ்சு ஒப்படைங்க| அது நம்ம மூத்த பொண்ணு மாதிரி, பொட்டப் புள்ளய அடுத்தவங்கையில புடுச்சுக் குடுக்குறப்ப அலங்காரம் பண்ணாமயா குடுத்துருவோம்?” என்று மனைவி சொன்னது நினைவுக்கு வந்தது.

‘சரி’ என்று ஒப்புக் கொண்டான். ஆனாலும் ஏருக்கு ஆகும் அசலவை நினைத்த போது பிரம்மிப்பாய் இருந்தது. ‘அந்த வேலை நமக்கு எதுக்கு?” என்று கைவிட்டு விட்டான்.

காட்டின் மையப் பகுதிக்குச் சென்று நின்று நாலாபுறமும் பார்வையைச் செலுத்தினான். குருவிகள் இங்கும் அங்கும் ‘விர்ட்’ ‘விர்ட்’ எனப் பறந்து இரை பொறுக்கின. சில காகங்கள் புழு பூச்சிகளைத் தூக்கிக் கொண்டு ஓடின. அவனுக்குப் பெருமிதமாய் இருந்தது. அவன் நிலம் எத்தனை ஜீவன்களுக்கு உயிர் தருகிறது!

அவன் காடு! நாலு குழி பரப்பளவுள்ள இந்த நிலம் பூராவும் அவனுக்குச் சொந்தமானது. பூட்டன், பாட்டன் காலத்தில் இருந்து பாதுகாக்கப் பட்டு வந்து, இந்தத் தலைமுறையில் இவனுக்குச் சொந்தமாகி இப்போது விலை பேசப் படுகிறது.

மனம் வலித்தது. கண்களுக்குள் இருட்டுக் கட்டியது. பைய நடந்து போய் வரப்புமேல் உட்கார்ந்தான்.

மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ்க்கை தந்த இந்தக் காடு, இன்று கிரயமாகப் போகிறது.

நாலஞ்சு வருஷத்துக்கு முந்தி ஒரு தடவை………சோளம் போட்டு தலை வெள்ளாமை எடுத்திருந்தான். நாலு குழியிலும் அறுபது மூடை தேறியிருந்தது. நூற்றைம்பது ரூபாய்க்கு சோளத் தட்டை விற்றான்.

“ஆத்தா கண்ணத் தொறந்துட்டா” என்று மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். “வருசா வருசம் இந்த மாதிரி வெளஞ்சாத்தான் அஞ்சு பத்து மிச்சம் வச்சு ஆளோட ஆளா சேந்துரலாமே!”

உண்மைதான்! இப்ப மாதிரி எப்பவும் அறுவடையானால் அஞ்சு பத்து மிச்சம் வைக்கலாம்| அதை வட்டிக்கு விட்டுப் பெருக்கலாம். பெருக்கிய பணத்தில் கிணறு வெட்டி பம்ப் செட் போட்டுக் காட்டைத் தோட்டமாக்கலாம். தோட்டத்து வருமானத்தை வைத்து வயக்காடு வாங்கி செழி;ப்படையலாம்.

“என்ன நான் சொல்றது?” என்றாள் மனைவி.

“நெசந்தேன்” என்றான் இவன்.

மனங்குளிர்ந்து ரெண்டு பேரும் பேசிக் கொண்டிருந்த போது மச்சக் காளை தவிக்கத் தவிக்க ஓடி வந்தான். “ அண்ணே அண்ணே! சடையண்ணே!”

“என்னடா மச்ச?” என்றான் இவன்.

“எம்பொஞ்சாதி பேறுகாலம் ஆகமாட்டாம கெடக்கா.”

விசுக்கென எழு;நதான். “மருத்துவச்சியக் கூட்டியாந்தியா?”

“கூப்பிட்டு வந்தேன்| இது என்னால ஆகாதுன்னுட்டா| ஆஸ்பத்திரிக்கித் தூக்கிட்டுப் போகச் சொல்லிட்டா| புள்ள தலைகீழாப் பெரண்டிருக்காம்.”

“அடப் பாவி!” தவ்விக் கொண்டு எழுந்து ஓடினான். கெஞ்சிக் கெதறி சீரங்க நாய்க்கரிடம் வில் வண்டியை இரவல் வாங்கி மச்சக் காளையின் சம்சாரத்தை ஏற்றிக் கொண்டு தேனிக்குப் போனான். பெரியாஸ்பத்திரியில் சேர்த்து விட்டான்.

உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார் டாக்டர்.

“சரிங்கய்யா” என்றான் இவன் மச்சக் காளையும் சம்மதித்தான்.

“ஆஸ்பத்திரியில இதுக்கான மருந்து ஸ்டாக் இல்ல| நீங்கதான் வெளியில வாங்கித் தரணும்.”

‘எவ்வளவங்கய்யா ஆகும்?”

“எரநூறோ முன்னூறோ ஆகலாம்.”

பகீரென்றது. உடனடியாக ஆபரேஷன் செய்தாக வேண்டும். ஒரு ஜீவாத்மாவைக் காப்பாற்ற வேண்டும். மடியைப் பிதுக்கிப் பார்த்தான். நூறு ரூபா இருந்தது. “நீ ஏதாச்சும் வச்சிருக்கியாடா?” என்றான் மச்சக் காளையைப் பார்த்து.

“பத்து ரூபா இருக்கு.”

“அத வச்சு என்னடா செய்யிறது?” கொஞ்ச நேரம் சிந்தித்தான். ஒரு யோசனை தோன்றியது.

“சரிடா மச்ச அய்யா எழுதித் தார மருந்துச் சீட்ட வாங்கிட்டு வா| நான் கமிஷங்கடையில இருக்கேன்.”

தொங்கு தொங்கென்று ஓடினான். தடையில் முதலாளி இருக்க வேண்டும். அவர் இருந்தாலும் காசு தர மனசிருக்க வேண்டும். ‘பகவான்தான் தொண” என்று கும்பிட்ட படி வேகNவுகமாய் நடந்தான்.

முதலாளி இருந்தார்.

“என்னய்யா ரூவா? ஆடிக்கொருவிச அம்மாவாசிக்கொருவிச ரெண்டு மூட கொண்டார| அட்வான்ஸ் ஏடுக்குற அளவுக்கு எனக்கு என்னய்யா லாபம்?”

தேனிக்கிப் பயறு பச்ச எப்பக் கொண்டாந்தாலும் ஒங்க கடைக்கித்தானே கொண்டாரேன்.”

“நீ கொண்டார அர மூட ஒரு மூடய நம்பித்தான் நாங்கட வச்சிருக்கனாக்கும்?”

அதுக்கில்லீங்க மொதலாளி, ஒரு அவசரச் செலவு.”

“என்ன தலபோற செலவு?” ஒரு தினுசாய்ப் பார்த்தார்.

“பக்கத்து வீட்டுப் புள்ள பெரசவம் ஆக மாட்டாம ஆஸ்பத்திரியில இருக்கு| ஆபரேஷன் பண்ணணுமாம்| வெளிய இருந்துதான் மருந்து வாங்கணும்னு சொல்லியிருக்காக.”

போனால் போகட்டும் என்று முதலாளி மனமிரங்கினார். நூறு ரூபா கொடுக்கச் சொல்லி கணக்குப் பிள்ளைக்கு உத்தரவு போட்டார்.

மருந்து வாங்கியாயிற்று, ஆபரேஷனும் முடிந்தது.

வீட்டில் கிடந்த சோளத்தில் பத்து மூடையைக் கமிஷன் கடையில் போட்டு மேலும் ஐநூறு ரூபாய் செலவு செய்தான். மச்சக் காளை சம்சாரம் பிழைத்தெழுந்தாள்.

“தர்மாஸ்பத்திரிக்கா இம்புட்டுச் செலவு?” என்று ஊர்க்காரர்கள் கேட்டார்கள்.

“தர்மாஸ்பத்திரிங்குறதாலதான் இம்புட்டோட போச்சு” என்றான் பத்தாவது படித்துக் கொண்டிருந்த இவன் மகன். “பள்ளிக் கோடத்துல படிப்புச் சொல்லித் தாரது ஓசி| புஸ்தகச் செலவ நம்மோடது| அதே மாதிரிதான் ஆஸ்பாத்தரியில ஆபரேஷன் ஓசி, மருந்துச் செலவு நம்மோடது.” அவன் இதழ்க் கடையில் கிண்டல் தழுவிய குறுநகை ஓடியது.

சீரங்க நாய்க்கர் ரெம்ப தூரம் மெச்சினார்.

“சடையா! நீ ரெம்பக் கெட்டிக்காரனப்பா| அவசரத்துக்கு ஒதவி பண்ணி மச்சக்காள சம்சாரத்த மட்டுமில்ல, அவங்குடும்பத்தவே காப்பாத்திட்ட.”

காப்பாத்தினது நானில்ல நாய்னா, என் நெலம், நெலத்துல மொளச்ச பயிரு.”

சுரீரென்று ஏதோ கடிக்கவே சுய நிலைக்கு வந்தான். தொடையைக் கட்டெறும்பு ஒன்று கவ்விக் கொண்டிருந்தது. தட்டிவிட்டு, கடித்த இடத்தில் எச்சிலைத் தொட்டுத் தடவினான். அப்படியும் தொடை கன்றிச் சிவந்தது.

மச்சக் காளையை மட்டும்தானா? இந்த ஊரில் எத்தனை பேரைக் காப்பாற்றியிருக்கிறது இந்தக் காடு? இன்று இது யாருக்கோ போய்ச் சேரப் போகிறது.

மகனைப் பற்றிய நினைவு வந்தது. பத்தாவது படித்து பரிட்சை எழுதி பாஸாகி விட்டான். பிறகு டைப் அடிக்கப் போய் அதிலேயும் ரெண்டு தடவை எழுதி சர்ட்டிஃபிகேட் வாங்கி விட்டான். ரெண்டு வருஷம் உருண்டோடி விட்டது| இன்னும வேலை கிடைக்கவில்லை.

சும்மா சொல்லக் கூடாது| அவனும் எவ்வளவோ முயன்றுதான் பார்த்தான். எங்கெங்கோ எழுதிப் போட்டான். எந்தெந்த ஊருக்கெல்லாமோ போய்விட்டு வந்தான். வேலை மட்டும் கிடைக்க வில்லை.

“அவனையும் சம்சாரித் தொழில்ல நொழச்சுர வேண்டியதுதான?” என்று மச்சக் காளை யோசனை கூறினான். மனைவி மறுத்து விட்டாள். “இந்தப் பரம்பரக்கி இனிமே சம்சாரித் தொழிலு வேண்டவே வேண்டாம். இது சாவஞ்செத்த தொழிலு, ஒண்ணு ஆபீஸ் வேலக்கிப் போகணும்| இல்லாட்டி யாவாரத்துல பழக்கி விடணும்.”

இவனுக்கும் அதுதான் சரியெனப் பட்டது. சில பெரிய படிப்புப் படித்தவர்களிடம் மகனுக்கு உதவி பண்ணச் சொல்லிக் கேட்டிருந்தான்.

போன வாரம் சீரங்க நாய்க்கர் ஒரு சேதி சொன்னார். “ஏஞ்சடையா! தேனி நூலு மில்லுல ஆளெடுக்குறாகளாம்| ஒம் மவன சேத்து விட்டுற வேண்டியதுதான?”

“சரி நாய்னா” என்றான். உதட்டிலும் கண்ணிலும்p உற்சாகம் தெரிந்தது. “நானு தெக்க வடக்க தெரியாதவன்| நீங்கதான் ஒதவி செய்யணும்.”

“ஒனக்கில்லாத ஒதவியா? பணத்த மட்டும ரெடி கண்ணு| அடுத்த வாரமே சேத்து விட்டுருவோம்.”

“எம்புட்டு நாய்னா செலவாகும்?”

“பத்தாயிரம் ஆகும்.”

உற்சாகம் உதிர்ந்து போயிற்று.

மனைவியிடம் போய் விஷயத்தைச் சொன்னான். அவளுக்கும் நெகாத் தெரியவயில்லை. பத்தாயிரத்துக்கு எங்கே போவது?

“காட்டக் கூட விக்ய வேண்டியதுதான?” மகன் கோளாறு சொன்னான்.

இவனுக்குக் குபீரென்றது. “காட்ட விக்யவா?”

“ஏன் வித்தா என்ன?”

“நமக்குச் சொந்தம்னு இருக்கதே அந்தக் கையல பூமிதானடா?”

பூமி இருந்து என்ன செய்ய? அத வச்சு நல்ல பொழப்புப் பொழக்ய முடியுதா?”

முடியவில்லைதான். ஆனாலும் சொந்தம் என்று சொல்ல கொஞ்சமேனும் இரு;நதால்தான் ஊருக்குள் மரியாதை.

“மில்லு வேலைன்னா லேசுன்னு நெனக்கிறீங்களா? ஐநூறுல இருந்து ஆயிரத்தைநூறு வரக்யும் சம்பளம் கெடக்யும். வேலையும் ஈஸி| மேலுக்கு சேட்டமில்லைன்னா சம்பளத்தோட லீவு! தீபாவளிக்கி ரெண்டாயிரம் மூவாயிரம்னு போனஸ் வேற.” உற்சாகமாய்ப் பேசினான். இந்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினான்.

“அவன் ஆசையை ஏங்கெடுக்கணும்?” என்று மனைவியும் ஒத்துப் பாடினாள். “அம்புட்டு சம்பளம் வந்தாத்தேன் அஞ்சு பத்து மிச்சம் வச்சு அஞ்சு வருசத்துல ஆளாயிரலாமே!”

நீண்ட பெருமூச்சுக்கும் மிக நீண்ட மௌனத்துக்கும் பிறகு காட்டை விற்பதென முடிவாயிற்று.

“என்ன சடையா?”

விசுக்கென்று உலுக்கி விழுந்து வரப்பில் இருந்து எழுந்தான். பூளாங்குச்சியால் பல் துலக்கியபடி சீரங்க நாய்க்கர் முன்னால் நின்றிருந்தார்.

“என்ன ஒரு மாதிரி இருக்க? ஒடம்புக்கு சேட்டமில்லையா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல| இன்னக்கிக் காட்டப் பத்திரம் முடிச்சுக் குடுக்கப் போறமேன்னுதான்….” கண்ணில் விசனம் பூத்து முகம் கருத்துப் போயிற்று. உதடு கோணியது.

“இது புஞ்சக் காடுதான? போனாப் போகுது விடு. நாளக்கி ஒம்மகன் சம்பாத்தியத்த வச்சு நஞ்சக் காடு வாங்கலாமில்ல?”

இருவரும் பேசிக் கொண்டே நடந்தார்கள். “நாளக்கிப் பணம் தந்தைன்னா அடுத்த வாரமே ஒம் மகன மில்லுல சேத்து விட ஏற்பாடு செஞ்சுரலாம்” என்றார் சீரங்க நாய்க்கர்.

“நாளக்கி என்ன நாய்னா? இன்னக்கிப் பத்திரத்துல கையெழுத்துப் போட்டதுமே பணத்த வாங்கி ஒங்க கையில குடுத்துர்றேன்| எப்படி செய்யணுமோ செஞ்சுக்கங்க.”

தனக்குக் கிடைக்கப் போகும் கமிஷன் தொகையை மனசக்குள் கணக்குப் போட்டார் சீரங்க நாய்க்கர்.

இருவரும் நடந்தார்கள். குப்பணக் கவுண்டர் தோட்டத்தைக் கடந்து வண்டிப் பாதையில் ஏறினார்கள். சடையன் நின்று திரும்பி தன் காட்டை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தான். காடு எங்கோ வெகுதூரம் விலகிச் செல்ல அந்த இடத்தில் பிரம்மாண்டமானதொரு நூல் மில்! அதன் தலை வாசலில் தன் மகனின் பிரவேசம்!

 

செம்மலர். பிப்ரவரி 1985

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top