நிலை

0
(0)

அவ்வளவு சுபாவமாய் அவன் அறைக்குள் வந்து விட்டது அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவர் உட்கார்ந்திருந்ததற்கு நேர் எதிரே கிடந்த பெஞ்சில் உட்கார்ந்தான். மிகச் சாவதானமாக இரண்டு கைகளாலும் தலைமுடியை மேல் நோக்கி கோதிவிட்டுக் கொண்டே ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர் அவன் மேல் வைத்த கண் வாங்கவில்லை. இடுங்கிய கண்கள், முகத்தின் விகாரத்தை இன்னும் அதிகப்படுத்திய தாடி, சின்னதாய் சுரித்துப் போன மூக்கு, உணவை வெறுத்து எவ்வளவோ நாட்களானது போல பூஞ்சையான உடம்பு, ஒருவித அச்சத்தையும் சந்தேகத்தையும் உண்டு பண்ணியது. முதலில் அவன்,

“ராமகிருஷ்ணன் இருக்கிறாரா?” என்ற கேள்வியுடன் அறை வாசலில் நின்ற போதே பிடிக்காமல் போய் விட்டது. அதற்கு அவனது, ஒழுங்கற்று அங்கங்கே குத்திட்டுக் கொண்டு நிற்கும் தாடியாகவோ, அல்லது சட்டையில் பட்டனில்லாது மாட்டிக் கொண்டிருந்த ஊக்காகவோ கூட காரணமாய் இருக்கலாம். அவர் இல்லை என்று சொன்ன பிறகும் உள்ளே நுழைந்ததானது அவரைக் கொஞ்சம் திடுக்கிடச் செய்தது தான். அவரால் அதற்கு மேல் ஆபீஸ் வேலையாக கொண்டு வந்திருந்த ஸ்டேட்மெண்டை எழுத முடியவில்லை.

அவன் சற்றும் அவரிருப்பது பற்றிக் கவலைப்படாது சட்டையைக் கழற்றிவிட்டு பெஞ்சில் படுத்து கண்களை மூடிக் கொண்டான். அவனுடைய ஒவ்வொரு செய்கையிலும் தன் நிலை மீறிய நிதானம் இருந்தது. வாழ்க்கை வாழ்வதற்கான ஆதார ஸ்ருதியை இழந்து வெறுமனே அலைபவன் போல அசட்டையாய் வாழ்கிறான் என்பது பார்வையிலேயே யாவரும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் இருந்தான். மற்றொரு முறை அவன் கண்களைத் திறந்து மூடும் போது அவர்,

“நீங்க யாருன்னு…” மெல்லிசான குரலில் கேட்டார். ஆனால், அது அவரின் இயல்பான குரலில்லை என்றும் அவன் தெரிந்து கொண்டான். அவனது தோற்றம் அவருள் ஏற்படுத்திய வின்ளவே அது.

“ராமகிருஷ்ணனுக்கு ஃப்ரெண்ட்”மறுபடி கண்களை மூடிக்கொண்டான். அவர் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று அவனுக்குத் தெரியும். பக்கத்து அறைகளிலிருந்து பேச்சுச் சத்தங்கள் தெளிவில்லாமல் கேட்டது. கண்களை மூடி காட்சிகளை மறைத்தாலும் காதில் விழும் சப்தங்கள் காட்சியாய் மனதுள் விரிவதை மறுக்க முடியவில்லை. திருநெல்வேலிக்கு எப்போது வந்தாலும் நீ அறைக்கு வந்து இருக்கலாம் என்று சொல்லி விட்டுப்போயிருந்தான் ராமகிருஷ்ணன். அவன் ரெப்ரசென்டேட்டிவ்வாக வேலை பார்ப்பதில் இந்த அறையை நிழல் தங்கலுக்காக அமர்த்தியிருந்தான். அது அவனுக்குப் பிரயோஜனப்படுவதை விட நண்பர்களுக்குத்தான் அதிகம் பயன்பட்டது. இவரும் கூட அவனுடைய நண்பனாயிருப்பார். அவனால் யாரோடும் ஒட்டிக் கொள்ளமுடியும். அவன் போன தடவை கோவில்பட்டி வந்திருந்த போது சொல்லிவிட்டுப் போனான்.

“ஒரு வாரம் வேணா திருநெல்வேலிக்கு வாயேன். கொஞ்சம் மாறுதலாய் இருக்கும்.”

என்றாலும் எங்கும் ஒரே மாதிரி காற்றே இல்லாது புழுக்கமாய் இருந்தது. திரும்பி ஒருக்களித்துப் படுத்தான். அப்போதும் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.

அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் இப்படியொரு நிலைமை ஏற்படும் என்று நினைக்கவேயில்லை. ராமகிருஷ்ணனுக்கு இப்படியும் நண்பர்கள் இருப்பார்களா, ஒருவேளை ராமகிருஷ்ணனைப் பற்றிய விபரம் தெரிந்து வந்திருக்கும் வேற்றாளோ, உடனே பெட்டியைப் பூட்ட வேண்டும் என்று தோன்றியது. மெதுவாய் எழுந்து பெட்டியைத் திறந்து எதையோ எடுக்கிறாப் போல எடுத்து மீண்டும் அதை வைத்துவிட்டு மூடிப் பூட்டினார். பூட்டிய பின் சாவியைப் பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டார். அறைக்குள் சுற்று முற்றும் பார்த்தார். ஷெல்ஃபில் ஒரு கண்ணாடி, இரண்டு சீப்பு, அங்கங்கே எண்ணெய், பவுடர் சிந்திய பழைய கறைகள், ஒரு பழைய எண்ணெய் பாட்டில், பல்பொடி பாக்கெட், அறையின் இடது பக்க மூலையில் சுருண்டு கிடந்த பாய், கொடியில் கிடந்த ஜட்டி, சாரம், நாற்காலிக்குக் கீழே கிடந்த புல் வாரியல். சிறிய பெரு மூச்சுடன் நிம்மதியடைந்தார். ஜன்னலில் காயப்போட்டிருந்த பனியனை எடுத்து மடித்து வைத்தார். மறுபடியும் எழுத உட்கார்ந்தார். விரித்து எழுத ஆரம்பித்த போது அவன் புரண்டு படுத்தான். அவரால் அவன் மேலிருந்த பார்வையை எடுக்கவே முடியவில்லை. யாரையும் நம்பக் கூடாது என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார். அவருடைய கட்டுப்பாடற்ற சுதந்திரத்தில் அவன் இடைஞ்சல் பண்ணியதுமில்லாமல் அவரிருக்கிற நினைவே இன்றி அவன் அந்தச் சுதந்திரத்தை அநுபவித்தது அவருக்கு எரிச்சலாய் இருந்தது. பொய்யாக இருமிக் கொண்டார். ஏதோ ஒரு வகையில் அவன் மேல் வெறுப்பும் சுமூகமற்ற மனநிலையும் ஏற்பட்டுத் தீவிரமடைந்தது. அவனை எப்படியும் வெளியேற்றி விடுவது என்று உறுத்தலாய் தோன்றியே விட்டது. இதனாலொன்றும் ராமகிருஷ்ணன் வருத்தப்பட மாட்டான் என்றும் நினைக்கத் தொடங்கினார்.

யாரிடமோ, சொல்ல முக்கியமான விஷயத்தோடு அவசரமாய், பரபரக்கும் விழிகளோடு ஓடிக்கொண்டிருந்தவன் பாப்புலர் பெண்கள் தையல் பயிற்சிப் பள்ளிவாசலில் கிடந்த அளியில் விழுந்து விட்டான். ஏதோ குளிர்ச்சியான உணர்வும், உயிர் போகிற வாதையும் ஏற்பட அடி வயிற்றிலிருந்து குரல் கொடுத்தான். தொண்டை வரை காற்று வந்து நின்று விட்டது. கனவறுந்து கண் விழித்து எழுந்து உட்கார்ந்தான். அவர் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டிருந்தார். நினைவுகள் மறக்க இடம் மாறினால் போதாது போலிருக்கிறது. கொக்கிரகுளம் பாலத்திற்குக் கீழேயுள்ள ஆற்று மண்டபத்தில் இன்றைக்குக் காலையில் ரொம்ப நேரம் அமைதியான ஆற்றின் ஓட்டத்தையும், அதற்குச் சற்றும் சம்பந்தமில்லாத படிக்கு பாலத்தில் விரைந்து கொண்டிருந்த மனித சஞ்சாரங்களையும் பார்த்தபடி ஆச்சரியமடைந்தான். அந்த நேரத்தில் மட்டும் தான் அவனே வியக்கும்படி எந்தப் பழைய நினைவுகளற்றும் இருக்க முடிந்தது. கொஞ்சம் நாளாய் மிகுந்த தனிமையை விரும்பி நேசித்தான். இதிலொன்றும் பலனில்லை. அதிகநாள் இந்த நிலைமை நீடிக்கா தென்றும் கூட அவன் தெரிந்திருந்தான்.

அவர் தலையை வாரி விட்டுக்கொண்டிருந்தார். அப்போது தான் அவரைச் சரியாக நிமிர்ந்து பார்த்தான். உப்பிய கன்னங்களும், பயமும் சந்தேகமும் அவசரமும் நிறைந்த பரபரவென அலையும் சாம்பல் நிறக்கண்களும், அகன்று விரிந்த மூக்கும் சற்றே பூரித்த உடம்புமாய் இருந்தார். இப்போது தான் கல்யாணம் முடிந்திருக்கலாம். எல்லோருக்கும் கல்யாணத்திற்கப்புறம் வருகிற இனம் புரியாத திருப்தி உடம்பில் இருந்தது.

செருப்புக்குள் காலை நுழைத்தவர் கொஞ்சநேரம் எதையோ யோசிப்பவர் போல நின்றிருந்தார். எப்படிச் சொல்வது. அவன் முன்னே எது நடந்தாலும் எதுவும் தெரியாத பாவனையில் உட்கார்ந்திருக்கிறான். சரியான பித்துக்குளியாய் இருப்பான் போலிருக்கிறது. கடைசியில் மனம் தேறி,

“நான் சாப்பிடப்போறேன்… அப்படியே சினிமாவுக்குப் போனாலும் போவேன்… நீங்க…” என்று அவனையும் வெளிக்கிளப்பும் தொனியுடன் நிதானமாய் சொன்னார். எப்படியும் கிளம்பி விடுவான். பையிலிருந்த அறையின் சாவியைத் தடவிப் பார்த்துக் கொண்டார். அவன் லேசான புன்னகையுடன்,

“பரவால்ல… நீங்க போங்க… ராமகிருஷ்ணன் என்ட்ட ஒரு சாவி கொடுத்திருக்கான்…” சொல்லி முடித்ததும் அவர் முகம் கறுத்துப் போய் விட்டது. அவர் எப்படியும் இதை எதிர்பார்க்கவில்லை. அவர் போட்டிருந்த திட்டம் கணத்தில் இடிந்து நொறுங்கியதில் செய்வதறியாது திகைத்துப் போனார். அவர் மனசில் ஓடிய சிந்தனைகளுக்கேற்ப முகமும் கண்களும் பரபரத்தன. சுற்றும் முற்றும் பார்த்தார். நெற்றியைப் பிடித்துக் கொண்டார். சொல்ல முடியாத அவஸ்தையுடன் கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தவர் நம்பிக்கையிழந்த பார்வை ஒன்றை அவன் மேல் வீசிவிட்டு ஒன்றுமே சொல்லாமல் வேகமாக அறையை விட்டு போய் விட்டார். அவனுக்கு அவர் மேல் பரிதாப உணர்ச்சி பொங்கி வர, அறைக்கதவை மூடித் தாழ்ப்பாளிட்டான்.

அவன் எதிர்பார்த்தபடியே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. செயற்கையான சிரிப்புடன் அவர் உள்ளே வந்தார். முகபாவம் சற்றும் ஆரோக்கியமில்லாமல், பெட்டியை எடுத்து நாற்காலியின் மேல் வைத்து நிதானமாய் தூசியைத் துடைத்தார். பின்னர்பெட்டியைக்கையில்எடுத்துக்கொண்டு,

“சினிமா பார்த்துட்டு அப்படியே பஸ் ஏறிரலாம்… எதுக்கு

மெனக்கெடுவானேன்னு தான்…” அவசரமாய் சொன்னார். அவன் ஏதும் பதில் சொல்லாது லேசாய் சிரித்தான். மறுபடியும் ஒரு முறை அறையைச் சுற்றிப் பார்த்து விட்டு மிக அவசரமான காரியம் போல வேகமாக வெளியே சென்று விட்டார். அவனும் வராண்டாவில் வந்து நின்று அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் அறைக்குள் வந்து நிதானமாய் தாழ்ப்பாளிட்டான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top