நிர்ப்பயா

0
(0)

”அண்ணே…” மாலா  முந்தானையை தோளின் மேற்புறமாய் சுற்றிப் போட்டுக்கொண்டு வாசலில் நின்றவாறு அழைத்தாள்.

 

            பவுன்ராசு, வீட்டுக்குப் பின்புறமாய் இருந்த முருங்கை மரத்தினடியில் பல் துலக்கிக்கொண்டிருக்க, அவரது மனைவி லதா, அருகிலிருந்த குட்டையான சுவரில் ஏறி நின்று தொரட்டிக் கம்பால் முருங்கைக்காய் பறித்துக்கொண்டிருந்தாள்.

 

            ”யண்ணே..ய் …” என்று மறுமுறை அழைத்தவள், “லதா மதனி..” என குரலை சற்று உரத்துக் கூப்பிட்டாள்.

 

            ”யேங்க.. யாரோ ஒரு தங்கச்சி ஒங்கள கூப்புடுறாக…”  லதா கேலி செய்தாள்.

 

            ”யேன், ஒந் நாத்தனார் கூப்புட்டா நீ போக மாட்டியா…” சொல்லிக்கொண்டே அதுவரையிலும் வாயில் அதக்கி வைத்திருந்த எச்சிலை முருங்கை மரத்தின் வேரில் துப்பினார். தோளில் கிடந்த துண்டால் வாயைத்துடைத்தபடி வாசலுக்கு வந்தார். வாய்க்குள் பல்பொடியின் நுரை நீர்த்துப் போயிருந்தது.

 

            ”மாலா..வா..! ”

 

            ”உள்ளாறதே இருந்தீகளா..ண்ணே.! மதினியக் காணாம்..? “ அவருக்குப் பின்புறமாய் எட்டிப்பார்த்தாள்.

 

            ”முருங்கக்கா புடுங்கறா.. இன்னிக்கி வெள்ளிக்கிழம இல்லியா.. “

 

வாசலில்  சாக்குவிரித்துப் போட்டால் வீட்டுக்காயென்று கொஞ்சநேரத்தில் விற்றுப்போகும். அதும் இன்று வெள்ளிக்கிழமை  சாம்பார் வைக்காத வீடு பாவம் செய்தவீடு. பவுன்ராசுவின் அம்மாவும் அய்யாவும் இருந்தவரைக்கும் கீரையும் காயும் புடுங்கிக்கொள்ள எல்லோரையும் அனுமதித்தார்கள். தொரட்டிக் கம்பெல்லாம் கூட இரவல் தந்தார்கள்.

 

            இப்போது எல்லாமே விலையாகிப் போனது. காய் வாங்குகிறவர்களே விலையைக் கேட்கத் துவங்கிவிட்டார்கள்.

 

            மாலாவின் மௌனத்தை காசாக்க நினைத்த பவுன்ராசு, மனைவியைக் கூப்பிட்டார். “ லதா.., மாலாவுக்கு நாலுகாய் வேணுமாம்.., உண்மையிலேயே தங்கச்சி நீ மொதக்காய் வாங்குனா மிச்சமில்லாம ஏவாரமாகும்பா ஒம்மதினி, ’ராசியான கையி காசோட நிக்கிது . சீக்கிரமா வா” என கூவியவர் வாயில் மீதமிருந்த எச்சிலைத்துப்பி பல்துலக்கலை முடித்து வைத்தார்.

 

            ”முடிஞ்சிருச்சா ….ண்ணே” பவுன்ராசுவின் கூவலுக்கு மாற்றாக மாலா அமைதியாகக் கேட்டாள்.

 

            “சொல்லும்மா வேல முடிஞ்சிருச்சி..” என பவ்யமாய் செம்பையும் பிரஸ்சையும் கீழே வைத்தார். அவரது அந்த கோமாளித்தனமான பாவனை கண்டு மாலா அழகாய்ச் சிரித்தாள்.

 

            ”அண்ணனுக்கு எப்பவும் ஜோக்குதா. உங்க பல் தீத்தலக் கேக்கலண்ணே., ஒங்க மருமகளுக்கு மாலாவின் மகள் -சட்டிவிகேட்டு வாங்கச் சொன்னது முடிஞ்சதான்னு கேட்டேன். “ சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தாள்.

 

            அந்தச் சிரிப்பின் வசீகரத்தில் எப்பவும்போல மனம் பதறிய பவுன்ராசு , அதைமறைக்க பதிலுக்குத் தானும் சிரித்தார்.   

 

மாலாவின் மூத்தபெண் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறாள். அந்தப்பிள்ளைக்கு முதல் பட்டதாரி சான்றிதழ் தேவை. பவுன்ராசு, நகரத்து பசாரில் முக்கிய வீதியில் பழக்கடையும் ஜூஸ் கடையும் சேர்த்து நடத்தி வருகிறார். கடைக்கு கிராம அதிகாரியின் உதவியாளர்கள் வந்து போவார்கள். அவர்களின் துணை கொண்டு தாசில்தார் அலுவலகத்தில் ஆகவேண்டிய அத்தனை காரியங்களையும் பவுன்ராசு முடித்துக் கொடுப்பார். பழவியாபாரத்தோடு இது ஒரு தனி வியாபாரம். வருகிற பணத்தில் ஒருபங்கு இவருக்கும் உண்டு. பள்ளிகூடத்துக்கான வருமானச்சான்று, சாதி, இருப்பிடச்சான்று… திருமண உதவித்தொகை, ரேசன்அட்டை, வாரிசு சான்று.. என சகலவிதமான சான்றொப்பங்களும் வாங்கித்தருவார். அர்ஜண்ட், ஆர்டினரியும் கூட உண்டு.

 

            வி.ஏ.ஓ.வைப்பார்த்து, ஆர்.ஐ.ஆபீசை தேடி, தாசில்தாரின் அலுவலகத்தின் மாடிப்படியேறி, காத்திருந்து, கையெழுத்து வாங்கி, அதிலும் மறக்காமல் ஒவ்வொரு கையெழுத்தின் கீழும் ஞாபகமாய் முத்திரை குத்தச் சொல்லி… இரண்டுநாள் மூன்றுநாள் பொழுது ஓடிப்போகும். விஏஓ இருந்தால் ஆர்.ஐ.இருக்கமாட்டார். இருவரும் இருந்தால் தாசில்தார் வெளியில் போயிருப்பார். இதெல்லாம்போக படிவத்தை நிரப்புவது தனிக்கலை. அடித்தல் இருக்கக்கூடாது. இருந்தால் முதலிலிருந்து துவங்க வேண்டும். இந்தத் தொல்லைக்கு பலபேர் பயப்படுவதால் பவுன்ராசு போன்றோர் காட்டில் மழை.

 

            ” பர்ஸ்ட் கிராஜுவேசந்தான.. ம்மா” இழுத்தார். எட்டாத உயரத்துக் கனியை எம்பிஎம்பிப் பறிப்ப்துபோல மூளையைச் சுழட்டிச் சுழட்டித் தேடினார். “வந்திருச்சான்னு தெரியலியேம்மா.. கடைல இருக்கலாம். சும்மாருந்தா கடப்பக்கம் வாரியா.. இல்லாட்டி ராத்திரி வீட்டுக்கு வாரப்ப எடுத்து வாரேன்.. வந்துருக்கும்.”

 

            ”பதினோரு மணிக்கி வரட்டுமா.. ண்ணே..! “

 

            ”மதியத்துக்கு மேல வாம்மா.. ஒருவேள நேத்துகட்டுல வராம,  இன்னிக்கி கட்டுல வந்தாலும் குடுத்துருவேன்.”

 

            ”ரூவாயெல்லாங் குடுத்தாச்சு.. ண்ணே..”

 

            ”சரிமா சரிம்மா..” தலையை ஆட்டித் திரும்பிய போது, வாசலை மறித்து லதா நின்றிருந்தாள். கைமடக்கில் முருங்கைக் காய்கள்.

 

            ”ரெண்டு காய் குடுங்கக்கா..”

 

            பணம் கொடுத்து வாங்கிக்கொண்ட மாலா, “ரெண்டு மணிக்கிமேல வாரேன்…ணே.. “ என மறுபடியும் ஞாபகப்படுத்திவிட்டு நகர்ந்தாள்.

 

            ”எதுக்கு கடைக்கி வரச்சொல்றீங்க” லதாவின் சொல் சூடாயிருந்தது.

 

            ”ம்.. கடைல தனியா ரெஸ்ட்ரூம் கட்டிவச்சிருக்கில்ல அங்கன வச்சுக் கொஞ்ச..” பவுன்ராசுவும் சூடாகினார்.

 

            ”ஒன்னவச்சே ஒழுங்கா ஒப்பேத்த முடியல இன்னொன்னு தேவதே..”

 

            ”பின்ன, பொம்பளன்னா காலங்காத்தால என்ன கேக்கணும், எது பேசணும்னு கூறு வேணாம்..”

 

            ”கூறு கெட்டதுங்கறதுனாலதான ஆமபள இந்த ஆட்டம் போடுற.. சுதாரிச்சவ, ன்னா இந்நேரம் சுள்ளிய ஒடிச்சாப்ல ஒடிச்சு அடுப்புலவச்சு எரிச்சிருப்பாள்ல்..” விற்பனைக்கு கொண்டுவந்த முருங்கைக்காய்களை சாக்குவிரித்து வாசலில் அடுக்கியபடி பேசினாள்.

 

            ”சுள்ளி எலும்பு, நல்லி எலும்பெல்லா சூதானமா வச்சுகிட்டு, வந்து ஆகுற வேலையப் பாரு. அந்தமேனைக்கி அப்பீறப் போறே…” சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனார். இனிமேலும் நின்றால் சண்டைதான்.

 

            இப்படியாக அந்த காலைப்பொழுது எந்த வில்லங்கம் இல்லாமல் கழிந்தது. அது அந்தவீதிக்கு ஆச்சர்யமான நாள்தான். வாச்ல் தெளிப்பதில் ஆரம்பித்து, பவுன்ராசு கடைக்குப் போகும்மட்டும் விவிதபாரதியில் நாடகமில்லாகுறையைப் போக்கிவிடும். அளவுக்கு சூடும் சுறுசுறுப்புமாய் வாய்வார்த்தைகள் உருண்டுவரும். கடைக்கு லீவுவிட்ட அன்றுமட்டும் கொஞ்சநேரம் கூடுதல் ஒலிபரப்பு. கொசுறாக அடிதடியும் நிகழ வாய்ப்புண்டு. 

 

            தவிர, பவுன்ராசுவின் சொந்தமோ லதாவின் சொந்தமோ யாராவது வீட்டுக்கு விருந்தாடி வந்துவிட்டால்  முப்ப்பொழுதும் இடை நில்லா ஒலிபரப்புத்தான். இரவுச்சாப்பாட்டுக்குப் பிறகும் அது நீடிக்கும்போதுதான், வீதி உறக்கச் சடவில் நெளியும். போலீசில கூட புகார் செய்துவிட யோசிக்கும். யாராவது வெளியில்வந்து சண்டையை தீர்த்துவைக்க முயலுவார்கள். அப்படிவருகிறபோது  சமாதானம் செய்யவருகிறவர் உசாராக இருக்கவேண்டும். இருதரப்பிலும் யாருக்காவது ஒராளுக்கு சாதகமாய்ப் பேசினாலும் எதிராளிக்கு வைரியாய் மாறிவிட நேரிடும் அப்புறம் வந்தவரின் குடி கெட்டுப்போய்விடும்.

 

மாலா ஒராள்தான் தைரியமாய் வாசலில் வந்து நிற்பாள். வீட்டுக்குள் புகுந்து யாரையாவது ஒருத்தரைப் பிடித்து தரதரவென தெருவுக்கு இழுத்து வருவாள். அடுப்புத் தீயைக் கலைத்து விட்டதுபோல. பிரிந்த தீ துணையில்லாமல் தணிந்து விடும். சில சமயம் ஜோதியாய் நின்று எரியவும் செய்யும் அப்ப்டி ஒருநேரம் அவர்களை தனது வீட்டுக்குஇழுத்துச் சென்று படுக்கவைத்து விடுவாள்.

 

            உறக்கத்தைக் காத்த மகராசி என தெரு, மாலாவைப் பாராட்டும்.

 

            முன்னதாக, லதாவின் பிள்ளைகள் சண்டை ஆரம்பமானதுமே மாலதியின் வீட்டுக்கதவைத் தட்டிவிடுவார்கள். முன்புறத் திண்ணையில் எப்போதும் விரிப்பான்கிடக்கும். சண்டையின் இறுதிக்கட்டத்தில் பாட்டியோ அம்மாவோ வருகிறபோது அவர்களையும் சேர்த்துக்கட்டிப்பிடித்துக் கொண்டு உற்ங்குவார்கள். மாலா உள்வீட்டில் தன் மகளோடு உறங்குவாள். ஒருவேளை லதா மட்டும் வந்தால் அவளையும் தங்களோடு உள்ளே வந்து படுக்கச் சொல்வாள். ஆனால் லதாவோ வெளித்திண்ணையில் கூட படுக்க மாட்டாள். சமர்த்துக்கு உட்கார்ந்தபடியேதான் பொழுதைக் கழிப்பாள்.

 

            இடம் மாறிப்படுத்தால் உறக்கம் வராது ‘ என மாலாவிடம் பொய்சொல்லி சமாளிப்பாள்.

 

            ”நல்ல ராசியான எடமில்ல.. ஜாலியா ஒறக்கம் வரணுமே.. குளுகுளுன்னு இருக்குமே..”

 

அடுத்தநாள் காலையில் உப்புத்தண்ணிக் குழாயில் வரிசை போடும்போதோ, பிரதோசம், கார்த்திகை  என பூசைக்காக கருமாரியம்மன் கோயிலில் ச்ந்திக்கும் போதோ சம்பவத்தின் தொடர்ச்சியாக தெருவாசிகளின் பேச்சு நீளும். அதும் ராஜேஸ்வரி அக்காவுக்கு இது வெல்லக்கட்டியான சமாச்சாரம். நாக்கைச் சுழற்றிச் சுழற்றிப் பேசுவார்.

 

            அவருக்கு கோயில், குழாயடி என்கிற கணக்கெல்லாம் கிடையாது. “பூர்ணத்தக்கா மக, கலியாணம் முடிச்ச மறுவாரமே புருசெம் மூஞ்சில எச்சியக் காறித்துப்பீட்டு வந்திட்டாளாமே.. சேதி தெரியுமா..” என பூசாரியிடம் குங்குமம் வாங்கிக்கொண்டே கேட்பார். அவர் மூஞ்சி என வர்ணிப்பது இடுப்புக்குக் கீழான பகுதி என்பது தெருவாசிகளுக்கு மட்டுமே தெரிந்த சங்கேத வார்த்தை.

 

            ”நகையும் நட்டும் கொறையாம் வேணும்னு கேக்குற மாப்பிள்ளைக, தன்னிட்ட இருக்கற சாமனிலயும் பழுது இல்லாமப் பாத்துக்கணும்ல. வாடிப்போனதையும், வதங்கிப் போனதயும் வச்சிருந்தா எவதே சும்மருப்பா.. மம்பட்டிய எடுத்து செதுக்கி விட்ற மாட்டாளா..”

 

            ” ரெண்டு நல்ல வார்த்த பேசணுண்டுதே கோயில கட்டிவச்சாக.. இப்பிடியா.. சே..” என்று என்னதான் பேச்சைக் கட்டுப்படுத்தினாலும், ” யே.. கூடுற எடத்தில தாண்டி கொறயப் பேசமுடியும்.. இதுக்குன்னு ஒரு மாநாடா நடத்திப் பேசுவாக. “ கொஞ்சமும் கூசாமல் பேசுவார்.

 

            மாலாவைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். இன்னும் கூடுதலாய் ராஜேஸ்வரி அக்கா கூறுவார்.

 

சேலை ரவிக்கை என்று ஜவுளிகளை வாங்கி வீட்டில்வைத்து  ஏவாரம் பார்க்கிற மாலா, .ரொக்கம் தவணை என எல்லாமுறைகளிலும் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தாள். அதுமட்டுமில்லது  செண்ட், சவ்வாது, ஸ்பிரே போன்ற வாசனை திரவியங்கள், வெளிநாட்டு பவுடர், என மாலாவின் வீட்டினுள் நுழைந்தாலே வாசனையடிக்கும் விதமான தொழில் செய்து கொண்டிருந்தாள். மாலாவின் வீட்டுக்காரர்  எப்போதாவது ஒருநாள் வந்துபோவார் போலிருக்கிறது. இரண்டுபேருக்கும் அவ்வளவாக ஒட்டுதல் இல்லை என்கிறார்கள்.

 

இரண்டுபிள்ளைகள். இரண்டையுமே மாலாதான் படிக்கவைக்கிறாள் போலிருக்கிறது. பிள்ளைகள் இருவரும் ஆஸ்டலில் இருக்க, மாலா மட்டும் வீட்டில் தனி ஆள். இரவுபகல் என நேரங்காலமில்லாத ஏவாரம். பெண்களைவிட ஆண்களே அதிக வாடிக்கையாளர்கள். திடீர்திடீரென மதுரை, சென்னை என ஒருவாரம் சுற்றிவிட்டு வருவார். கொள்முதலுக்காக போவதாகச் சொல்லுவாள்.

 

எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்க்க மாலா ஒரு மாதிரி என்று முடிவு செய்தது தெரு. “எந்த நேரமும் ஒரு பொம்பளகிட்ட காசு பொழங்குதுன்னா.. அவ என்னாவா இருப்பா….? “ அவரவர் திறனுக்கேற்ப கற்பனை செய்து கொண்டனர்.

 

ஆனாலும்  தெருவாசிகள் அத்தனை பேருக்கும் ஏதாவது பிரச்சனை என்றால் அந்த இடத்தில் தானென வந்து நிற்கும் குணமிருந்த்து மாலாவுக்கு. . அதேசமயம் தன்னைப் பற்றி யாராவது அனாவசியமான வார்த்தைகளில் பேசக்கேட்டு விட்டால், அவ்வளவுதான் தட்சண்யம் பாராமல் பிதுக்கி எடுத்து விடுவாள். போலீஸ்காரர்களே சிலசமயம் அகப்பட்டு அவளிடம் தோற்றுப் போயிருக்கிறார்கள்.

 

“ ராஜேஸ்வரியக்கா.. நான் பாவம்.. என்னிய விட்ரு..” என்று லதா பொய் அழுகை அழுதாள்.

 

“ இல்லடி இவளே.. ஒரு கணக்குத்தே.. ஏன்னா, மாலா வீட்டுக்குள்ள போகும் போது யாரானாலும் சுதார்ப்பா இருக்கணும். இல்ல சாமானோட சாமானா நம்மளையும் வெலப் பேசிருவா… சரியா..”

 

மதியநேரம் பவுன்ராசுவுக்கு கடையில் வியாபாரம் மந்தமாயிருந்தது. உதவியாள் சாப்பிடப்போயிருந்தார்.

 

 ஜூஸ்பட்டறையை கழுவிச் சுத்தம் செய்துவிட்டு, வெளியில் சேர்போட்டு செய்தித் தாளை மேய்ந்து கொண்டிருந்தார். பவுன்ராசு. ஒவ்வொரு நிம்சமும் பட்டறையைக் கழுவிச் சுத்தம் செய்வதுதான் இந்தத் தொழிலில் முக்கியமான வேலை. பட்டறைக்கு அடிப்புறத்தில் சேமித்து வைக்கப்படுகிற பழக் கழிவுகளையும் அவ்வப்போது வெளியேற்றிவிட வேண்டும். இல்லையேல் புளிப்பு வாசனை ஏறி ஈக்களும் கொசுக்களும் எறும்புகளும் மொய்த்துவிடும். அதனால் மதிய நேரம் சேர்ந்தமட்டும் கழிவுகளை வெளியில் தள்ளிவிடுவார். கடை பளிச்சென இருந்தால்தான், நிம்மதியாய் ஏவாரம் பார்க்கமுடியும்.

 

இந்த நேரத்தில்தான் ஆர்.ஐ. அலுவலக சிப்பந்தி முருகன் அதிகாரிக்குப் பழம் வாங்க வருவான். அப்போது பவுன்ராசு தான் வாங்கி வைத்திருக்கும் ம்னுக்களை கொடுத்து அனுப்புவார். ஒருநாள் இரண்டு நாள் அவகாசத்தில் அத்தனை பேரிடமும் கையெழுத்து வாங்கி விடுவான்.

 

“ணே.. சார், ரஸ்தாளி பழம் ந்றுச்சு ந்றுச்னு இருக்குங்கறார். நல்லதாக் குடுங்க…” பைக்கை கடைமுன்னால் நிறுத்துகிறபோதே புகார் சொல்லியபடி இறங்கினான் முருகன்.

 

“அதுக்கு நா என்னா பண்ணட்டும்.  முருகா, பழம் பெருஸ்சா வேணுங்கற… பெருவெட்டு பழம்னாலே அது ஹைபிரிட் பழந்தான. அந்தக்கழுத அப்பிடித்தே இருக்கும். பேசாம நாளிப்பூ வாங்கிட்டுப்போ..”

 

எழுந்து கடைக்குள் சென்றவர், ஜூஸ் சாப்பிடுறியா..” கேட்டபடி மூடியைத் திறந்து மிக்சர்ஜூஸை டம்ளரில் ஊற்றிக்கொடுத்தார். இது இலவசம். வேறு ஏதாவது ஆரஞ்சோ, சாத்துக்குடியோ என்றால் அதுகணக்கு.

 

முருகன் கொண்டுவந்த பேப்பர்களை சரி பார்த்தார். சில வேளைகளில் முத்திரை போடாமல் வந்துவிடும். “யேம் முருகா… பஸ்ட் கிராஜுவேசன் ஒண்ணு வரலியேய்யா..”

 

“ஆ…மா..! மாலா அக்கா பாரமா..? கையெழுத்து ஆகிருச்சேண்ணே. வரலியா.. டேபிள்ல இருக்கும். நாளைக்கி வாரப்ப கொண்டுவாரேன். “ தனக்கான ஈவுப்பணத்தை முருகன் வாங்கிகொண்டிருந்த போது மாலா கடைக்குள் நுழைந்தாள்.

 

“ஒரு சாத்துக்குடி ஜூஸ் போடுண்ணே.” வெய்யிலின் கடுமையால் பாதிக்கப்பட்டவள் போல சேலைத்தலைப்பால் விசிறிக் கொண்டாள்.

 

“ஒக்காருக்கா… அண்ணே.. அக்காவுக்கு பேனப் போடுணே..” முருகன் பிரமாதமாய் மாலாவை வரவேற்றான்.

 

“தம்பி, நிய்யும் இங்கதான் இருக்கியா.. ஜூஸ் சாப்பிடுப்பா.. தம்பிக்கொண்ணு சேத்துப் போடுங்ணே..” என்றாள்.

 

“இப்பத்தேக்கா சாப்பிட்டுக் கிளாச வச்சேன்..” எச்சில்தம்ளரை எடுத்துக் காணபித்தான்.

 

“என்னா ஜூஸ் மா., மிச்சரா, ரோஸ்மில்க்கா..”

 

“சாத்துக்குடின்னு சொன்னாகள்ல… அக்காவ பாத்ததுல ஏவாரத்த மறந்தர்ரீக்.. ” முருகன் உற்சாகமாய்ப் பேசினான்.

 

“யே… உம்மையிலே கவனிக்கலப்பா..” என்றவர், “தங்கச்சி, பஸ்ட்கிராஜுவேசன் வாங்கத்தான் வந்துருக்கு. போய் எடுத்து வந்துரு.. முருகா ”

 

“ஆமா ராசா, புள்ள போன்மேல போன் போடுறா.. தங்கமாப் போச்சு. எடுத்துவா, ஒனக்குவார பொண்டாட்டி அம்புட்டும்  ஆம்பளப் புள்ளையா பெத்துப்போடுவா..”

 

“ஆத்தாடி..” என சிரித்தவன், ” அண்ணே அக்காவ நல்லா கவனுச்சுக்கங்க..” என்று கண்ணடித்துவிட்டு நகர்ந்தான்.

 

பைக்கில் ஏறிஉட்கார்ந்து கொண்ட முருகன், ஏதோ ஞாபகம் வந்தவனாய், “ யேக்கா, செண்ட் வந்திருச்சா.. சார் கேட்டாரு..” எனக் கூவினான்.

 

ஜூஸ் குடித்துக்கொண்டிருந்த மாலா, தம்ளரை கீழே வைத்துவிட்டு, வாயை கர்சிப்பால் துடைத்துக்கொண்டு பதிலுக்குக் கூவினார். “வந்திருச்சுப்பா..”

 

“வச்சிருக்கீகளா…”

 

“வீட்டுக்கு வா..”

 

“அப்ப, வீட்டுக்கு வந்தாதே காட்டுவீகளாக்கும்..” ஒரு சிரிப்பு சிரித்தபடி பைக்கைக் கிளப்பினான்.

 

“படவா… ரெம்பத்தான் பேசற.., அண்ணே இருக்கர்ர்னு பாக்கறேன்..”

 

            இரவுச்சாப்பாடு எடுத்துவைக்கும்போதே பவுன்ராசுவுக்கும் லதாவுக்கும் சண்டை ஆரம்பித்துவிட்டது. பிள்ளைகள் உள்வீட்டுக்குள் போய் கதவைச் சாத்திக் கொண்டு தூங்கலானார்கள். எத்தனை நாளைக்குத்தான் அயல் விட்டில் போய் உறங்குவது. அதனால் இப்போதெல்லாம் அப்பா வருவதற்குள் சாப்பாடு முடித்து படுத்துவிடுவதை  வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர்.

 

கடையிலிருந்து சேதாரமான பழங்களை வீட்டுக்குக் கொடுத்து அனுப்பிவிடுவார் பவுன்ராசு. ஒருகாலத்தில் அப்படியான பழங்களை வாங்குவதற்கு என்றே ஒருசிலர்  கடைக்கு வருவார்கள். தினமும் காலையில் பழங்களைப் பிரித்து அடுக்குகிறபோது அடிபட்டது, அழுகல், வாடல் என குறிப்பிட்ட வகை பழங்கள் ஒதுக்கி வைக்கப்படும்.

 

பள்ளிக்கூடத்தில் கடைபோட்டிருக்கும் பெண்கள், தெருவியாபாரம் செய்யும் கிழவிகள், தள்ளுவண்டிக்காரர்கள் அந்தப்பழங்களைக் குறிவைத்துக் கேட்ப்பார்கள். எண்ணிக்கை கணக்கெல்லாம் கிடையாது. குவியல் கணக்குதான் கண்பார்த்து விலைபோகும். கிராக்கி பண்ண முடியாது. மதியத்துக்குள் தள்ளிவிட வேண்டும் இல்லாவிட்டால் குப்பைக்குத்தான்.

 

இப்போது ஜூஸ்கடை இருப்பதால் அத்தனை சேதாரம் விழுவதில்லை. ஆதனால் அந்த ஏவாரிகள் இப்போது கடைக்கு வருவதில்லை. என்றாவது ஒருநாள் மிதமிஞ்சி சேதாரம் வருகிறபோது வீட்டுக்கு அனுப்பி விடுவார். அக்கம்பக்கத்து வீடுகளுக்கு குறைந்த விலைக்கு கொடுத்தும், வாசலில் கூறுகட்டி வைத்தும் சாமர்த்தியமாய் விற்று காசாக்கி விடுவது லதாவின் பாணி. அது பெரும்பாலும் லதாவின் சிறுவாடு காசில்தான் சேரும்.

 

இந்தமாதரி ஒரு கட்டிங் சேர்த்துப் போட்ட ஒருநாளில் பவுன்ராசுவுக்கு அந்தக் கணக்கை கேட்கத் தோணும்.

 

“இந்தமாசம் மட்டும் எட்டுக்கெழம பழம் அனுப்பிச்சு விட்டிருக்கேன் கொறச்சு வச்சாலும் எட்டுநூறு தேறும் ங்ஙொகொய்யா வீட்டுக்கு அனுப்பிச்சுவிட எங்காசுதானா கெடச்சது.” 

 

இதுபோதாதா சண்டைக்கு. பவுன்ராசு கேட்ட வினாடியில் சாப்பாடு போட்ட தட்டை இழுத்து விசிறிவிட்டாள். பாதிச் சாப்பாட்டில் பரிதாபமாய் உட்கார்ந்திருந்தார் கருப்பையா. நல்லபசி. போதையும் பசியும் சேர்ந்துகொள்ள  ஆக்ரோசமான வார்த்தைகள் பீறிட்டன.

 

“நான் சம்பாத்தியம் பண்ணுற வீட்ல எனக்கு சோறு இல்லியா..” கையை நக்கியபடி கேட்டார்.

 

“ம்.. அத ஒங்ஙய்யா, ஙஙோத்தா கிட்டக்கப் போய்க்கேளு. வசமா போடுவாக..” விருட்டென எழுந்து அடுக்களையை ஒதுக்க ஆரம்பித்தாள்.

 

எச்சில் கையோடு எழுந்த பவுன்ராசு லதாவின் இடுப்பில் எட்டிஉதைத்தார்.

 

வழக்கம்போல வீட்டுக்கொருவராய் தெருவாசிகள் வெளியில் கூடிவிட்டனர். சண்டையின் மைய இழையை யாராலும் யூக்கிக்க  முடியவில்லை.

 

‘லதாவை விவாகரத்து செய்யப்போவதாக ‘பவுன்ராசுவும் , இடுப்பில் எட்டி உதைத்தகாலை தன் தாய்வீட்டாரைக்கூட்டி வந்து பழிதீர்க்கப் போவதாக லதாவும் மாறிமாறி சவால் விட்டுக் கொண்டிருந்தனர்.

 

“ங்க பாரு பவுன்ராசு… ! “

 

“ ந்தாம்மா… லதா, ஒருவார்த்த கேளேன்.. ! “

 

சுற்றிலும் நின்றிருந்தவர்கள் ஆளுக்காள் இருவரையும் இழுத்துப் பார்த்தனர். ஒன்றுக்கும் வழியில்லை. அசந்து போனார்கள்.

 

கடைசியில் வழக்கம்போல மாலா சடாரென தன்வீட்டுக் கதவைத்திறந்து கொண்டு அவிழ்ந்த கூந்தலைத் தட்டி முடிந்தபடி வந்தாள்.

 

“அய்யய்யெ… என்னா இது கும்மர்ச்சம். நெதமும் இந்தப்பாடுதானா பக்கத்து வீட்ல ஆரும் குடியிருக்கறதா எங்குட்டும் பரதேசம் போகறதா.. ஒருத்தரும் தூங்க வேணாமா… உள்ளபோ மதினி.. “ என்று லதாவை தள்ளிக் கொண்டுபோய் வீட்டுக்குள்  விட்டாள். பவுன்ராசுவிடம் நின்று சத்தம் போட்டாள். ‘என்னாண்ணே… நீங்க.., எல்லாருக்கும் புத்தி சொல்ற ஒரு பெரியமனுசே.. வீதிக்கு வரலாமா..”

 

“தட்டுல போட்ட சோத்த எட்டி எறிஞ்சு விடுறாம்மா.. எம்புட்டு ஏத்தம்..”

 

“எல்லாம் காலைல பேசிக்கலாம்.. போய் ஒறங்குங்க “ அவரையும் வீட்டுக்குத் தள்ளினாள்.

 

கதவுப்பக்கம் பவுன்ராசு போனதும் உள்ளிருந்து லதா கதவைச் சாத்திக் கொண்டாள். “எட்டி மிதிச்சகாலு உள்ளாற வரக்கூடாது. வெளிலயே கெடந்து சாவட்டும்… ஒன்னைய உள்ள விட்டேன்னா நா எங்காத்தா ஒருத்திக்கு பெறக்கல.. ” 

 

உடனே விளக்கையும் அணைத்து விட்டாள்.

 

ஆளுக்காள் லதாவை அழைத்தார்கள். கதவைத்தட்டினார்கள். லதாவின் பிடிவாதம் தளரவில்லை. ஒவ்வொருத்தராய் நகர்ந்தனர்.

 

“விடும்மா.. அவளப்பாத்துக்குவம்..” பவுன்ராசு இருண்ட முகத்துடன் ரோட்டுப்பக்கம் கிளம்பினார்.

 

“இந்நேரத்தில எங்கண்ணே போறீக..” மாலாதான் நிறுத்தினாள்.

 

பவுன்ராசுவுக்கும் அது விளங்கவில்லை. சட்டைகூட வீட்டுக்குள் கிடக்கிறது. பனியனோடு எங்கே போக…

 

”வாங்கண்ணே, நம்மவீட்ல வந்து படுங்க, காலைல பேசிக்கலாம்..”  சொல்லிவிட்டு முன்னால் நடந்தாள் மாலா.

 

பவுன்ராசுவுக்கு அந்த கணம் ஒருவிதமான கிளர்ச்சியினை உண்டு பண்ணியது. தனக்கும் மனைவிக்கும் நடந்த சண்டை எல்லாம் சுத்தமாய் மறந்து போனது. மாலாவின் வீட்டுக்கு படுக்கப்போவதா.. மனசுக்குள் நல்லதும் கெட்டதுமான எண்ணங்கள் உருண்டு புரண்டன. வாய்ப்பை நழுவவிடலாமா என்றும், பலவிதமாக பேசப்படுகிற வீட்டில் போய்ப் படுப்பது தனக்கு நலம் பயக்குமா..

”யோசிக்காம வாங்கண்ணே ஒங்க மருமக்கமாரெல்லா இல்ல..”

 

.  நிறைய யோசித்தார். ஆனாலும் போவதுதவிர வேறு மார்க்கம் தெரியவில்லை.

 

”.. திண்ணைல பாய் போட்ருக்கே…ண்ணே.”

 

மாலாவின் குரல் இனிப்பதுபோல உணர்ந்தார்.

 

திண்ணையில் பாய்விரித்துக் கிடந்தது  தலையணை ஒன்றும் போடப்பட்டிருந்தது.

 

“கதவச் சாத்திக்க..ங்கண்ணே..” உள்வீட்டுக்குள் இருந்தவாறு குரல் கொடுத்தாள். அவளிருந்த அறையில் நீலநிற விளக்கு எரிந்து கொண்டிருப்பது பவுன்ராசுவுக்கு தெரிந்தது. கதவும்கூட சரிவர சாத்தப்படாமல் இருப்பதுபோல தெரிந்தது.

 

திண்ணையில் படுத்த பவுன்ராசுவுக்கு ரெம்பநேரமாய் உறக்கம் வரவில்லை. இரண்டு மூன்றுமுறை எழுந்து உட்கார்ந்தார். தண்ணீர்த் தாகமெடுப்பது போலிருந்தது. எச்சில் முழுங்கிப் பார்த்தார். தாகம் தணிந்தபாடில்லை. எழுந்து உள் வீட்டுப்பக்கமாய் நடந்தார். மாலா படுத்திருந்த அறையின் வெளிப்புறம் சமையல்கட்டு.. உள்ளே நுழைந்து பானையில் நீரை மொண்டு தாகம் தீர்த்தார். பனியனெல்லம் நீர் வழிந்தது.

 

சமையல்கட்டைவிட்டு வெளிக்கிளம்ப்புகையில் கண்கள் உள்வீட்டுப் பக்கம் போயின. மாலா மல்லாந்து கைகளை தலைக்குமேல் மடித்து வைத்துப் ப்டுத்திருந்தாள். கள்ளத்தனமாய் மேய்ந்த கண்கள், பவுன்ராசுவின் கால்களையும் சேர்த்து அந்த அறைக்குள் இழுத்தன.

 

யார்யாரோ வந்து போவதாய் சொல்கிறார்கள். அது இந்த அறையிலா, அந்தத் திண்ணையிலா.. தேவையில்லாத சிந்தனை உடம்பை வதைத்தது.

 

சாத்தி இருந்த கதவைத் தொடாமலே உள்ளே தன்னைத் திருகி நுழைத்தார்.

 

ஒயிலாகப் படுத்திருந்தாள் மாலா.

 

டவுசர் பக்கெட்டில் பணம் இருப்பதை உறுதி செய்துகொண்ட பவுன்ராசு,  மாலாவின் அருகில் சென்று படுத்தார்.

 

”           ண்ணே.. “ என அலறி எழுந்தாள் மாலா, பவுன்ராசு அவளை எழவிடாமல் கீழே அழுத்தினார்.

 

“வேணாம்ணே..” கைகூப்பினாள் மாலாவின் கண்களில் என்றுமிலாத பயமும் அதிர்ச்சியும் தேங்கி இருந்தன.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top