நிராதரவாய்

0
(0)

காய்ந்த வாழை மட்டை போல் மரக்கட்டிலில் அசைவற்ற உடல். சில நேரங்களில் கண்கள் மட்டும் அலை பாய்கிறது. பல நேரங்களில் கண்களும் முடிக்கொள்ள இமைகளுக்குள் அசைவு மெ-தாய்த் தெரிகிறது. கடந்த ஐந்து நாட்களாக படுக்கையில் தான் எல்லாம். வயதான காலத்தில் கமலா பாட்டிதான் உடனிருந்து கவனிப்புகள் எல்லாம் ஊருக்குள் இவரின் பயணத்தை எதிர்பார்த்து மக்கள். “மக்கமாருகளுக்கு தகவல் சொல்லி மூணு நாளாச்சுது இன்னும் வரக்காணோமே”. “கிட்டத்துலயா இருக்காங்க ஒருத்தன் பெங்களூரிலும் ஒருத்தன் மெட்ராசிலும் முல்ல இருக்காங்க. வரணுமுல்ல” அவங்களை எதிர்பார்த்துதான் அந்த ஆத்மா இழுத்துக்கிட்டு பறிச்சுக்கிட்டு இருக்கு. இன்னேரம் வந்திருக்க வேண்டாமா?” “நாம் ஈசியா சொல்றோம் அவங்களுக்கு என்ன சோலியோ’ ஊருக்குள் ஆளாளுக்கு பலவிதமாய்ப் பேசிக் கொண்டார்கள்.

ஊருக்குள் காற்று வீர்…. வீர்ரென்று புழுதி வாரி அடித்தது. காற்றுடன் வெயில் போட்டி போட்டது மரங்கள் இலையை உதிர்த்து விட்டு மொட்டையாய் வெறுமையாய் நின்றது. சர்ர் ரென்று மெதுவாய் சப்தமிட்டு தூசி பறக்க அந்தக் கார்கள் வந்து நிற்பதை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நின்றது. பிள்ளை குட்டிகளோடு அண்ணன் தம்பி இரண்டு குடும்பங்களும் இதுவரை கிராமத்துக்கு வராத அக்குழந்தைகள் கூரை வீடுகளையும் சட்டை இல்லா அரை நிர்வாண மனிதர்களையும் ஒற்றை உடுப்பு கூட இல்லாமல் அம்மணத்துடன் வந்து நிற்கும் குழந்தைகளையும் தன் இஷ்டத்திற்கு ஊருக்குள் புரண்டு ஓடும் கழிவு நீரையும் தங்களையே வெறித்துப் பார்க்கும் மக்களையும் பார்த்து மிரட்சியுடன் விழிக்கின்றனர்.

அண்ணன் தம்பி இருவரும் அவசர அவரசமாய் வீட்டினுள் செல்கின்றனர். கட்டிலுக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்கள் மெதுவாய் வழி விட்டு ஒதுங்குகின்றனர். கமலாவிற்கு பிள்ளைகளைப் பார்த்தவுடன் மனதில் தெம்பு. அரக்கப் பரக்க எழுந்து வாங்கய்யா ஒங்க அப்பாவ பாருங்கய்யா” சொல்லும் போதே கண்களில் தாரையாய் கண்ணீர். “எய்யா புள்ளைங்க வந்திருக்காங்க பாருங்கய்யா. கண்ணைத் தொறந்து பாருங்கய்யா’ “அப்பா…. அப்பா….. மணி வந்திருக்கேம்பா தம்பி குமார் வந்திருக்காம்ப்பா …. அப்பா …. அப்பா ” குரல் கேட்டவுடன் காதோரம் சிலிர்க்கிறது. மூடிய இமைகளுக்குள் விழிகள் அலைபாய்கின்றன. உடலில் அசைவில்லை. இமைகள் மட்டும் மெ- தாய் நடுங்குகின்றன. கண்களைத் திறக்க பிரயாசைப்படுவது உணர முடிகிறது. உதடுகள் லேசாய் அசைகிறது. நீண்ட நேரத்திற்குப் பின் பெரு முயற்சி எடுத்து இமைகள் மெதுவாய் திறக்கின்றன. எதிரே மகன்கள் மருமக்கமார் பேரக்குழந்தைகள் என்று கட்டிலைச் சுற்றி கூட்டம். கண்களில் மட்டும் ஒளி பாய்ந்தது போன்ற மலர்ச்சி. சீரான மூச்சு தடுமாறுகிறது. எவ்வளவு முயற்சி செய்த போதும் வாய் திறக்க முடியவில்லை. சற்று நேரத்தில் கண்கள் குளமாக சுற்றி நின்றவர்கள் எல்லாம் அலை அலையாய் மங்கலாகின்றன.

குழந்தைகள் தங்கள் அம்மாவைப் பின் பக்கமாய்க் கட்டிப்பிடித்துக் கொண்டு பயந்த முகங்களோடு எட்டிப் பார்க்கின்றன. அந்த இடமே பெருத்த அமைதியில் ஆழ்ந்தது. யார் யாருக்கு என்ன கூறுவது. சம்பிரதாயமான வார்த்தைகளோ ஒப்புக்கு கூறும் சொற்களோ எதுவுமே எடுபடாத சூழ்நிலை. பாட்டிகிட்ட வாங்க கண்ணுகளா என்று பேரமார் இருவரை தன் மடியில் அமர்த்திக் கொண்டாள் கமலா. குழந்தைகளுக்கு புதிய இடம் புதிய நபர்கள் பாட்டியையே இப்போதுதான் முதன் முறையாக பார்க்கிறார்கள். எழுந்திருக்கவும் முடியவில்லை. உட்கார்ந்திருக்கவும் முடியவில்லை நெளிந்து கொண்டு இருந்தார்கள். வயதான இந்தப் பாட்டியின் உடம்பில் கோடு கோடாய்ச் சுருக்கங்கள் பஞ்சாய் இருந்த தலை கொண்டை போட்டு இருக்க வடவடப்பான அந்த நூல்ச் சேலை கொச்சையாய் ஒரு வாடை அடித்தது. மூத்த மகன் மணிக்கு கண்களில் இருந்து கண்ணீர் சாரை சாரையாய் வழிந்தோடியது. எவ்வளவு தாட்டியான ஆள் இப்படி கோழிக்குஞ்சாய் முடங்கிக் கிடக்கிறாரே. நெஞ்சு விம்மியது. பிராயத்தில் இவரை மிஞ்ச ஆள் கிடையாது. சுத்துப்பட்டியில் எல்லாம் இவரை எதிர்த்து கம்பு கட்ட யாருக்கும் துணிச்சல் இல்லை. ஆள் ஊருக்குள் நடந்து வரும் போதே பார்ப்பவர்கள் மிரளும் தோற்றம் ஒரு பக்கம் மட்டும் பித்தளைப் பூண் பிடித்து நெத்தி மட்ட மலங்கம்பு. ஊர்க்காவல்காரர் அத்தோடு விவசாயமும் அதில் வரும் வருமானம் எல்லாம் பிள்ளைகளின் படிப்புக்கே செலவழிப்பார். மணி உயர் கல்வி படிக்கும் போது விளைச்சல் இல்லாது செலவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆசை ஆசையாய் வளர்த்த ஆடுகளும் பூர்வீக புஞ்சைகளும் கைமாறின. பிள்ளைகளின் படிப்பு மேல் அவ்வளவு வெறி. படிப்பிற்கு தகுந்தாற் போல் வேலையும் கிடைக்க பெரிய பெரிய இடங்களில் இருந்து பெண் வீட்டார் தேடி வந்தனர்.

எப்பவாவது மணியும் குமாரும் வந்து பார்த்துவிட்டு செல்வார்கள். எவ்வளவோ வற்புறுத்தியும் மகன்களுடன் சென்று தங்க மறுத்துவிட்டார். கமலாவிற்கு பேரக்குழந்தைகளைப் பார்க்க வேண்டுமென்று அவ்வளவு ஆசை. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் சொல்வார்கள். “அவங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்காங்கம்மா. சின்னவனுக்கு ஒடம்புக்குச் சரியில்லை டாக்டர் அலையக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்.” “ஸ்கூல் பசங்களோட டூர் போயிருக்காங்கம்மா” கமலாவின் முகம் வாடிப்போகும்.

குமார் முகத்தைப் பொத்திக்கொண்டு விம்மினாள். அப்படியே மூலையில் சாய்ந்து உட்கார்ந்தான். உடல் குலுங்கியது. உடகார்ந்தான். குமார் ஆறாம் வகுப்பு படிக்கும் போது சைக்கிள் சக்கரத்தில் காலைக் கொடுத்து நடக்க முடியாமல் இருந்த போது ஒரு மாதம் காலையில் தூக்கிச் சென்று பள்ளியில் விடுவதும் மாலையில் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வருவதுமான காட்சிகள் மனதில் முட்டியது. அந்த நேரத்தில் கூட வீட்டில் இருக்க அப்பாவுக்கு சம்மதமில்லை. படிப்பு முடிந்து ஒரு தனியார் கம்பெனியில் நல்ல வேலை கிடைத்த போது டெப்பாசிட் கட்டுவதற்காக இருந்த ஒரே  பூர்வீகமான மந்தைப்புஞ்சையும் விற்றுக் கட்டியது கண்ணுக்குள் நிழலாடியது.

ஆயிற்று ஒருவாரம் உடல்நிலையில் எந்த மாற்றமுமில்லை. மணியின் மனைவி தனியே கூப்பிட்டு நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள். உங்களை இந்த நிலைக்கு உயர்த்தியவர் ஒங்க அப்பாதான். அவருக்கு எல்லா கடமைகளும் நீங்கதான் செய்யணும். இதை நான் ஒப்புக்கிறேன். ஆனா அவர் வாழ்ந்து முடிச்சிட்டார். ஒங்க பசங்க அப்படி இல்லை. ஒருநாள் பள்ளிக்கு போகாவிட்டாலும் பாடங்களை கத்துக்க முடியாது. முதல் ரேங்க் வாங்குற பசங்களை நாம் கெடுத்துடக்கூடாது. இதை உங்க அப்பாகூட ஒத்துக்குவார். தவிர இங்க இருக்குற கொசுக்கடியில் நோய் நொடின்னு வந்தா பாக்குறதுக்கு கூட ஆஸ்பத்திரி இல்ல. எங்களை ஊருல விட்டுட்டு வந்துட்டு எத்தனை நாள் வேணாலும் நீங்க இருந்துட்டு வாங்க.

குமாரின் மனைவி அவள் பங்குக்கு ஆரம்பித்து விட்டான். “அவசரமாய் கெளம்புனதில் போட்டது போட்டபடி கெடக்குது. ரெண்டு நாள்ள வந்துடுவோமுன்னு பக்கத்து வீட்டு அக்காகிட்ட சொல்லிவிட்டு வந்தது. ஒரு வாரத்துக்கு மேல ஆயிடுச்சு. அங்க இங்கன்னு திருட்டு நடக்குது. அதுமட்டுமல்ல புள்ளைங்களைப் பாருங்க நல்ல சாப்பாடு இல்லாம் பாதி ஆளா ஆயிடுச்சுங்க. குடிக்கறதுக்கு கூட நல்ல தண்ணீர் இல்லை. இதுக்கு மேல என்னால் இருக்க முடியாது’ தீர்மானமாய் கூறிவிட்டாள்.

ஊர்க்காவலுக்கு போனாருன்னா இரவு ஏழு மணி ஆயிடும் காடுகரைகளை எல்லாம் சுற்றிவர. ஒருத்தர் காட்டிலும் ஒரு பூட்டக் கருதுகூட களவு போயிடாது. ராத்திரி எந்த நேரமுன்னாலும் கம்மாத் தண்ணீரில்தான் குளிச்சுட்டு வருவார். பொங்கல் தீவாளிக்குத்தான் வீட்டுல எண்ணெய் தேய்ச்சு குளியல். பார்க்கத்தான் பயம் காட்டுபவராய்த் தெரிந்தாலும் கமலாவை ஒருநாள் கூட கோபமாய் பேசியிருக்க மாட்டார். அப்படி ஒரு அன்னியோன்யம் படுக்கையில் விழுந்தது முதல் தன்தைரியம் தெம்பு அனைத்தையும் சுத்தமாக இழந்திருந்த கமலாவிற்கு மகன்களின் வரவு ஒரு ஓரத்தில் தெம்பை கொடுத்திருந்தது என்னவோ நிஜம்.

“அம்மா” தயக்கமாய் ஆரம்பித்தான் மணி. “ஒருவாரம்தான் லீவு சொல்லிட்டு வந்தேன். போயி லீவை எக்ஸ்டன் பண்ணனும் பசங்களுக்கு படிப்பும் பாழாகிட்டு வருது.” மௌனமாய் தலையை நிமிர்ந்து பார்த்தாள் கமலா. மணி தலையைத் தொங்கப் போட்டான். “ஒரு முக்கியமான வேலையைப் பாதியிலேயே விட்டுட்டு வந்துட்டேம்மா போய் முடிச்சிட்டு உடனே வந்துடுறேம்மா” – குமார். தளர்ந்த நம்பிக்கையுடன் மெதுவாய்ச் சரியெனத் தலையாட்டினாள். “அம்மா எங்களுக்கு வேற வழியில்லை. ஒரேடியாய்த் தங்க முடியாத சூழ்நிலை. வேலை அப்படி செலவுக்கு இந்தப் பணத்தை வச்சிக்கிடுங்க. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுறோம்.”

வேட்டி ஈரமாகி இருந்தது. வென்னீரில் துணியை நனைத்துப் பிழிந்து உடம்பை துடைத்து விட்டாள். வெளுத்து வைத்திருந்த வேறு வேட்டி மாற்றி விட்டு விசிறி வைத்து மெதுவாய் வீசினாள்.

“போயிட்டு சீக்கிரம் வந்திடுவோம்மா”. “அத்தே வர்றோம்”. “போயிட்டு வர்றோம் பாட்டி”. ஏதாவது பேசினால் உடைந்து விடுவது போல் இருந்தாள் கமலா. மெதுவாய் கண்கலங்க தலையாட்டினாள். பேர மாரை உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தமிட்டு அனுப்பினாள்.

கார்கள் மெதுவாய்ச் சப்தமிட்டு புழுதி மண்டலம் எழுப்பிச் சென்றது. அசைவற்ற உடல் மெதுவாய்ச் சிர்த்தது. வேகவேகமாய் சீரற்ற மூச்சு . மெதுவாய்க் கண்கள் திறக்க கண்ணீர் வழிந்தோடியது. “எய்யா. என்ராசா நான் இருக்கேன்யா ஒங்களுக்கு ஒன்றும் ஆகாதுய்யா ஒன்னும் ஆகாது.” வெறிசோடிய வீட்டினுள் தனயே அரற்றிக் கொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்தாள் சிறிது நேரத்தில் மெ-யதாய் கண்கள் திறந்திருக்க எல்லா அசைவுகளும் ஒருமித்து நின்றன. கையைப் பிடித்தாள். காலை பிடித்து அசைத்தாள் முகத்தைத் திருப்பினாள் ம் ஹூம் ஒரு அசைவுமில்லை. எல்லாம் புரிந்து விட்டது. ‘ஐயோ என்னைத் தனியாய்த் தவிக்க விட்டுட்டுப் போயிட்டீங்களே என்று ஈனஸ்வரத்தில் கதற ஆரம்பித்தாள் கமலா பாட்டி.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top