நிகழ்தகவு

4
(1)

பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிறைந்தாய் போற்றி

தீயிடை. மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி…”

….போற்றித்திரு அகவலை சத்தமாய் பாடிக் கொண்டே ஈரத்துண்டோடு பூஜையறைக்குள் நுழைந்தார் கந்தசாமி. வயது ஐம்பதை தாண்டியதற்கு அடையாளமாய் கறுத்த தலைமுடியில் வெண்மை அங்கங்கே படர்ந்திருந்தது. மாநிறமான அவர் உடல் முழுவதும் நீர்முத்துக்கள், கீழே விழுவதற்காக தொங்கிக் கொண்டிருந்தன. நகர நாகரீகத்தில் சொகுசாக வளர்க்கப்பட்ட கட்டுமஸ்தான உடலின் பாரத்தைக் கூட தாங்க முடியாதது போல, அவரின் கால் அடிகளில் ஓலமிடும் மார்பில் தரை அதிர்வு.

“வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

போற்றி… போற்றி… ஈசனே போற்றி…’

கணீர் குரலில் போற்றிபாடி, சிவலிங்க பிரேமின் கீழிருந்த திருநீறை நெற்றி நிறைய பட்டையாய்ப் பூசினார். முன்பெல்லாம் கந்தசாமியின் மனைவி ஆனந்திதான் திருநீறுத் தட்டை நீட்டுவாள். ஒரு மழை இரவில் மூச்சுத் திணறல் அதிகமாகி, செயற்கை சுவாசத்தையும் மீறி உயிர்விட்டாள் ஆனந்தி. ஒரே பையன் மகேந்திரனும், ஐ.டி. முடித்து அமெரிக்காவில் ஒரு பெரிய கம்ப்யூட்டர் நிறுவத்தில் பெரிய பதவியில் இருக்கிறான். முன்பு வாரம் ஒருமுறை கடிதம் எழுதிவந்த மகேந்திரன், இப்போதெல்லாம் மாதம் ஒரு முறை ஈமெயிலில் லெட்டர் எழுதுகிறான். மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமென்றால் வேலை பிசியாகவல்லவா இருக்கும்? முதலில் ஈமெயில் அட்ரஸ் தயார் செய்ய இண்டர்நெட் சென்டருக்குப் போன போது கந்தசாமியைப் பார்த்திருக்க வேண்டுமே?. ஒரு அமெரிக்கப் பிரஜை போல, மிடுக்காக நடந்து வந்ததை இப்போதும் கந்தசாமியின் நண்பர் சேது நினைத்து சிரிப்பதுண்டு.

கந்தசாமிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவாளராக வேலை. தினம் தினம் உட்கார்ந்து நாற்காலியை தேய்க்கிற வேலை. வார இதழ்கள் சகிதமாய் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, எப்போதாவது கொஞ்சம் வேலை செய்து, அதிகநேரம் சும்மாவே இருந்து சரியாய் சம்பளம் வாங்கும் சராசரி வேலை என்பது கந்தசாமியின் எண்ணம். அதற்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டு, மகேந்திரனை ஒரு கம்ப்யூட்டர் வல்லுனராக்கி அமெரிக்கா அனுப்பியிருக்கிறார். சாதாரணமான ஒரு சென்னைவாசி, அமெரிக்காவை கனவாவது காணமுடியுமா?

லட்சுமிப்பாட்டி சமைத்து வைத்து விட்டுப்போன சாதத்தை டிபன்பாக்ஸில் மூடி, வழக்கம் போல் ஆபிசுக்கு கிளம்பினார் கந்தசாமி. மணி எட்டுதான் ஆகியிருந்தது. வரவேற்பறை சோபாவில் டிபன் பாக்ஸை வைத்துவிட்டு அப்படியே அமர்ந்தார். சில நேரங்களில் இப்படித்தான் காலையிலேயே மனசு காரணமில்லாது கவலைப்படும். அன்றைய தினசரிகளை மேலோட்டமாய்ப் புரட்டினார். பிரதமர் மேல்சபையில் பேசியதும், பாதுகாப்புத்துறை அமைச்சரின் வெளிநாட்டுப் பயணமுமாக… தினசரி செய்திகள் எதுவும் கந்தசாமியை ஈர்க்கவில்லை. அப்படியே தலையைச் சுழற்றி ஹால் முழுவதையும் பார்வையால் வருடினார்.

மகனுக்காக காத்திருக்கிற வீடு. ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்துப் பார்த்து கட்டிய வியர்வை வீடு.

ஹாலின் நடுவில், பிரேம் செய்யப்பட்ட அப்பா சிரித்தார். இருபது வருடங்களாய் பூக்கிற அதே புன்னகை. அந்தக் காலத்தில் மதுரைக்குப் பக்கம் ஆண்டிபட்டி கிராமத்திலேயே சின்னக் குடும்பம் கந்தசாமியின் குடும்பம் தான். ஏழு, எட்டு பிள்ளைகளாவது வீட்டுக்கு வீடு இருக்கும். கந்தசாமிக்கு முன்னால் பிறந்த நான்கு குழந்தைகளும், பிறந்து ஓரிரு நாளிலேயே செத்துப் போனதாம். ஐந்தாவது பிறந்த கந்தசாமி மட்டுமே இப்போது உயிரோடு இருக்கிறார். அப்பாவிற்கு கந்தசாமியின் மேல் அளவுகடந்த பாசம். அப்பாவின் கடைசி காலத்தில் கந்தசாமி சென்னைக்கு குடிபெயர்ந்தபிறகு, ஓரிரு மாதங்களிலேயே அப்பா இறந்து விட்டார்.

கந்தசாமிக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. எம்ப்ளாய்மெண்ட் ஆபிஸில் மதுரையில் வேலை கிடைத்த போது, கந்தசாமிக்கு ஆண்டிபட்டி ஒரு அசிங்கமாகவேபட்டது. பின்பு, ஆனந்தியை கைபிடித்து மகேந்திரன் பிறந்தவுடன்பிள்ளையின் படிப்பைச் சொல்லியே சென்னைக்கு வந்து விட்டார் கந்தசாமி. அப்பா கட்டிய கிராமத்து வீட்டை விற்று, சென்னைக்கு பணத்தை அனுப்பச் சொல்லி எழுதிய கந்தசாமியின் கடிதத்தை அப்பா கையில் வைத்துக் கொண்டு அழுததை மாமாதான் அடிக்கடி சொல்லுவார்.

அந்த விசயத்தைப்பற்றி எப்போதாவது, யாராவது பேசுகிற போதெல்லாம் கந்தசாமிக்கு மனசு வலிக்கும். கண்களில் நீர் முட்டிக் கொண்டு நிற்கும்.

“அந்த நிலையில் அப்பாவை தனியாக விட்டு விட்டு வந்திருக்கக் கூடாது.” “அப்பா இறந்த பிறகு கூட கிராமத்தை விட்டு வந்திருந்தால் இவ்வளவு பெரிய சுமை மனசில் ஏறியிருக்காது.”

தலை நரைத்த வயதில் இப்போது தோன்றுகிறது. சென்னைக் கனவில் கட்டுண்டு கிடந்த வாலிப வயசுக்கு, யார் சொல்லியும் எட்டவில்லை. ஒரு வேளை அது வாலிப வயசின் சாபமோ என்னமோ? அறிவுரை, யோசனை என்ற சொற்களையே கேட்க விரும்பாத வயசும் – மனசும். “அப்பா…” கந்தசாமியின் வாய் மெல்ல அந்த வார்த்தையை சொல்லிப்பார்த்துக் கொண்டது. உடலின் மொத்த ரத்தமும் இதயத்துக்கு போனது போன்ற கனம்.

மணி எட்டே முக்காலை தாண்டி விட்டிருந்தது. விருட்டென்று எழுந்தார் கந்தசாமி. டிபன் பாக்ஸையும், சில பேப்பர்களையும் கைப்பைக்குள் திணித்தார். வீட்டைப் பூட்டி, சாவியை மேல்பகுதி ஜன்னலில் வைத்தார். லட்சுமி பாட்டி வந்து, இரவு உணவு தயார் செய்வாள். அவள் சாவியை தேடக்கூடும். கொஞ்சம் வெளியே தள்ளியே தெரியும்படி சாவியை வைத்தார். ஓரமாய் சாய்ந்து நின்றிருந்த எம்.எய்டியை உதைத்து ஸ்டார்ட் செய்து, யார், எதற்கு, எங்கு போகிறார்கள் என்றே தெரியாத சாலையில் தானும் ஒருவராய் கலந்து, ஆபீஸை நோக்கிப் போனார் கந்தசாமி.

கண்கொத்திப் பாம்பாய் காத்திருக்கிற டிராஃபிக் போலீஸ், போகுமிடம் தெரியாமல் கரைந்து போகிற ஆம்னி வேன்கள், சிவப்பும் – மஞ்சளுமாய் கண்ணடித்துக் கொண்டிருக்கும் சிக்னல்கள், டவுன்பஸ் நிறையத் தொங்கும் புட்போர்டு மன்னர்கள்… என்று கொஞ்சம், கொஞ்சமாய் அப்பாவின் நினைவுகள் மறைந்து, ஆபிஸின் – இளைஞர்கள் வரிசை நினைவில் விழுந்தது. மூன்று வருடத்துக்கு ஒரு முறை தவறாது கார்டை புதுப்பிக்க வரும் நடுவயசுக்காரர்கள்; எப்போதாவது, யாருக்காவது குலுக்கலில் விழுகிற பரிசைப் போல அரசு வேலையை ‘ஜாக்பாட்’டாக நினைத்தா இவர்கள் கூடுகிறார்கள்? கந்தசாமிக்கு வியப்பாக இருக்கும். அத்தனை பேருக்கும் வேலை தர அரசால் முடியுமா? வேலை தர முடியாவிட்டால், சுய தொழில்களை துவங்கவாவது அரசு உதவி செய்ய வேண்டும். இவர்களும், அரசு வேலை மட்டுமே மோட்சம் என்று காத்துக் கிடக்கவும் கூடாது. யார் பக்கம் தவறென்பது விடையில்லா வினா என்று தான் கந்தசாமி நினைக்கிறார்.

இன்றும், கூட்டம் அதிகமாக இருந்தது. கந்தசாமி வண்டியை ஆபீஸின் ஓரத்தில் பார்க் செய்தார். காலை வெயில் நெற்றி நிறைய வியர்வையைக் கொடுத்திருந்தது. கர்சீப்பால் ஒற்றியபடியே உள்ளே நுழைந்தார் கந்தசாமி. இளைஞர்களை வரிசைப்படுத்திக் கொண்டிருந்த கிளார்க் குமரவேல் வணக்கம் சொன்னான். புன்னகையை பதிலாக அளித்து, பதிவாளர் அறையில் காலியாயிருந்த தன் நாற்காலியில் அமர்ந்தார்.

டேபிளில் ஒன்றிரண்டு ஃபைல்கள் மட்டுமே இருந்தன. அவசரமில்லாத, பதிவுக்கான கோப்புக்கள். வலது கையால் அதை தள்ளி ஓரத்தில் வைத்தார்.

“குமரவேல்…”

ஒரு சின்ன தாமதத்திற்குப் பின், பாய்ந்து வந்தான் குமரவேல்.

“முக்கியமான வேல எதாச்சும் பென்டிங் இருக்கா?” கந்தசாமியின் கேள்விக்கு, புருவம் கூட்டி யோசித்தான்.

“இல்ல சார்… வழக்கமான பைலுக தேன்…” மதுரைத் தமிழில் சொல்லி விட்டு, மீண்டும் ஓடி விட்டான். இவன் சுறுசுறுப்பு ஆபீசில் வெகு பிரசித்தம். தப்பி வந்த பிள்ளை . ஓடி ஓடி வேலை செய்வான்.

கந்தசாமி கம்ப்யூட்டரை பூத்துவாலையால் தூசு தட்டினார். சேரை முன்னே நகர்த்தி, ஆன் செய்தார். சின்ன ‘பீப்’ சத்தத்துடன் மடமடவென்று இங்கிலீஸ் எழுத்துக்கள் மின்னி மறைந்தன. கலர்கலராக ஜன்னல்களோடு விண்டோஸ் திறந்து கொண்டது.

‘முதல்ல… லெட்டர்ஸ் பார்க்கலாம்…’

கந்தசாமி ஆவலாய் இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் நுழைந்து, கடிதப்பகுதிக்கு மௌஸை நகர்ந்தினார்.

“யூ ஹேவ் எ மெய்ல்” – அழகான ஆங்கில எழுத்துக்கள் மின்னி மறைந்தன. மகேந்திரனின் கடிதமாகத்தான் இருக்கும். பாஸ் வேர்டைக் கொடுத்து கடிதத்தைப் பிரித்தார். மகேந்திரனே தான். அமெரிக்க கம்பெனியின் லெட்டர் பேடில் மகேந்திரனின் கையெழுத்து ஸ்கேன் செய்யப்பட்டு கடிதம் அழகாக இருந்தது. மிருதுவான ஆங்கிலத்தில் ஓடிய, கடிதத்தை மனசு தமிழில் வாங்கியது.

“அன்புள்ள அப்பா,

நான் நன்றாக நலமாக இருக்கிறேன்.

நீங்கள் நலம் தானே?

எனக்கு வேலை அதிகமாக இருந்ததால் கடிதம் எழுத நீண்ட இடைவெளியாகி விட்டது.

அப்பா ….

ஒரு மகிழ்ச்சியான செய்தி, எனக்கு எங்கள் நிறுவனத்தில் பதவி உயர்வு கிடைத்துள்ளது. முன்பு இருந்த வீட்டை விட இப்போது பெரிய வீடாக கொடுத்துள்ளார்கள். நான் இங்கேயே நிரந்தரமாகத் தங்க முடிவு செய்து விட்டேன். இந்த அமரிக்க வசதிகள் இல்லாத இந்தியாவை நினைத்தாலே பயமாக இருக்கிறது.

எனக்கு திருமணமாகி, என் வாரிசுகளை இன்னும் அதே பழைய கல்விமுறையில் விட எனக்கு விருப்பமில்லை. எனவே, நான் அமெரிக்காவில் நிரந்தர குடிமகனாக பதிவு செய்யவுள்ளேன்.

அங்கே, சென்னையில் உள்ள, எனக்குத் தருவதாக நீங்கள் வாக்களித்திருந்த அந்த பழைய வீட்டை விற்று பணத்தை என் அக்கௌண்டில் போட்டு விடுங்கள். அடுத்த மாதம் பங்குச் சந்தையில் நான் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன்.

நீங்களும் சில மாதங்களில் தயாராக….’

நீண்டு கொண்டிருந்த கடிதம் கந்தசாமிக்கு சரியாகத் தெரியவில்லை. கண்களில் படலமிட்டிருந்த நீர் மறைத்தது. ஏதோ ஒரு அம்பு திரும்பி வருவது போல தோன்றியது.

கந்தசாமிக்கு ஏனோ சம்மந்தமில்லாமல் அப்பா நினைவு வந்து போனது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top