நவீன காந்தாரிகள்

0
(0)

இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் விரைந்து கொண்டிருந்தது. அந்த மகளிருக்கான பொதுப்பெட்டியில் கூட்டம். தேன்கூட்டை தேனீர்கள் அப்பியது போல நெருக்கி மூச்சுத்திணறிக் கொண்டிருந்தது. இரவின் திரை விழவும் தூக்கம் ஆட்சியை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. இருக்கையில் இடம் கிடைத்தவர்கள் பலர் தூக்கத்தில். கிடைக்காதவர்கள் கீழே ஏக்கத்தில் ஒடுங்கிக் குந்தியிருந்தனர். துண்டு சேலை விரித்து சிறியதுகளைத் தூங்கச் செய்தார்கள். கொஞ்சம் தலைசாய யாராவது இறங்க மாட்டார்களா… அரைக்கண் பார்வையை சுழற்றிய வண்டியின் அசைவுக்கேற்ப தலையாட்டியபடி இருந்தனர். அலுப்பும் ஆயாசமும் இமைத் திரை களை இறக்கின.

நல்ல வேளை ராஜேஸ்வரி ஐந்தாவது நபராக சீட்டில் ஒட்டிக் கொண்டிருந்தாள். சிவகங்கையில் பாட்டி சாவின் மடியில் இருப்பதாகத் தகவல். அவசரத்திற்கு வண்டியில் இடம் கிடைக்க வில்லை. தக்கலிலும், இடமில்லை. கடைசி நேரத்தில் மகளிருக்கான பொதுப்பெட்டியில் தொற்றிக் கொண்டாள். மகள் பிரியா அம்மாவோடு ஒட்டிக்கொண்டாள். கணவனும் மகன் ரமேஷும் ஆண்களுக்கான பொதுப்பெட்டியில் தொற்றிக்கொண்டனர். மகன் ரமேஷ் அப்போவோடு ஒட்டுதலாக இருக்கமாட்டான். அப்பா ராஜசேகரன் இரு பிள்ளைகளிடமும் எப்பொழுதுமே பிரியத்தைக் காட்டியதில்லை. பெற்ற அப்பா என்ற அளவில்தான் ராஜசேகரனின் பந்தம். பாசம், பராமரிப்பு எல்லாம் அம்மாதான். ரமேஷ் செல் பேசியில் அடிக்கடி அம்மாவை அழைத்து, ‘வருகிறேன்’ என்று அடம் பிடித்துக்கொண்டிருந்தான். ஆண்பிள்ளைகள் இந்தப் பெட்டியில் வரக்கூடாது கண்ணு… அப்பாவோடு அணுசரித்து இருந்துக்க, கண்ணு என்று சமாதானம் செய்தபடி பயணம் தொடர்ந்தது.

வண்டி செங்கல்பட்டைத் தாண்டியதும் ஒரு சில பேர் மட்டும் குறைந்தனர். மங்கிய வெளிச்சத்தில் ராஜி சக பயணிகளின் முகங்களைப் பார்த்தாள். வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொருவரின் முகமும் ஒரு கதையை சொல்லாமல் சொல்வதாகத் தோன்றியது. பெருமூச்சுவிட்டபடி கண்களை மூடினாள்.

மனத்திரையில் காளியம்மாள் பாட்டி தோன்றினாள். காளியம்மா பாட்டி அவளது அம்மாவைப் பெற்றவள். அம்மா, ராஜேஸ்வரியை பெற்ற மறுவருசத்தில் இன்னொரு பிரசவக் கருச்சிதைவில் உயிரை விட்டாள். பாட்டிதான் அம்மாவாக இருந்து ஆட்டுப்பால், மாட்டுப்பால் கொடுத்து வளர்த்தாள். பாட்டியின் ஒரே மகன் ராஜசேகரன், ராஜேஸ்வரியை விட எட்டு வயது மூத்தவன். ராஜசேகரனுக்கு வங்கியில் வேலை கிடைத்த போது ராஜேஸ்வரி பிஎஸ்ஸி மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தாள். ராஜசேகரன் கல்லூரியில் படிக்கும்போது வயசுக்கேத்த சேட்டைகள் கொஞ்சம் அதிகம். சென்னை பட்டணத்தில் பேங்க் வேலை. மேலும் அவன் கெட்டுப்போகக்கூடாது என்று தீவிரமாக பெண் தேடினாள் காளியம்மாள். சரியான பெண் அமையவில்லை. சொந்தம் சுருத்துகள் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.

பேத்தி ராஜேஸ்வரியை வேறொரு நல்ல இடத்தில் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பாட்டி இருந்தாள். மகனின் குணம் அறிந்து அவனை நல்வழிப்படுத்த வேறு ஆள் இல்லை. இவளைக் கேட்டாள் பாட்டி.

ராஜி அழுதாள். “பாட்டி, மாமாவும் நானும் ஒன்னா தான் வளர்ந்தோம், விளையாண்டோம் ஆனா கல்யாணம் பண்ணிக்கிற ஆசை இல்லை. பெத்த தாய் முகம் பார்க்காம வளர்ந்த என்னை வளர்த்து படிக்க வச்சு ஆளாக்கினது நீதான்….! உனக்கு எது சரின்னு தெரியுதோ அதைச் செய். நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை” என்று சொல்லி பாட்டி மடியில் புதைந்தாள்.

பாட்டியும் தேம்பித்தேம்பி அழுது, “ராஜீ, நான் உங்கம்மா செத்ததிலிருந்து உன்னை மகளுக்கு மகளாய், பேத்திக்கு பேத்தியாய் வளர்த்தேன். இந்தப் போக்கிரி பயகிட்ட உன்னை மாட்டிவிட ஒரு நாள் கூட நினைச்சதில்லை. இன்னிக்கு காலசூழ்நிலையில் ஊருல ஒருத்தர்கூட பெண் கொடுக்க முன்வரலை. இப்படியே விட்டுட்டா அவன் வீணா கெட்டுப்போவான். இந்தக் குடும்பம் ஒண்ணுமில்லாமப் போயிடும் தாயி. அதனால உன்கிட்ட மன்றாடி மடியேந்தி நிக்கிறேன். நீ சின்ன பிள்ளையில் இருந்து அவன் கூட விளையாடி ஒண்ணா வளர்ந்தவ. நீ அவனை ஏத்துக்கலைன்னா         வேறுயாரு ஏத்துக்க முடியும்? நீ திருத்தலைன்னா வேறுயாரு அவனை உரிமையோடத் திருத்த முடியும்?” என்று குரல் உடைந்து ராஜியைக் கட்டிக்கொண்டாள் பாட்டி.

பாட்டியின் பாசச்சூடு, அவளை உருக்கியது. மெழுகானாள், பெண்டாட்டி பொம்மையாக மணப்பந்தலில் பிடித்து வைத்தார்கள். ராஜியும் பிஎஸ்ஸி இறுதியாண்டு பரீட்சை எழுதி முடித்ததும்தான் குடும்பம் நடத்தப் போனாள்.

வங்கி அலுவலரின் மனைவி என்ற அந்தஸ்து, பட்டினப் பிரவேச வாழ்க்கை, புதிதாக மணம் முடித்த தனிமை. ஆரம்பத்தில் இனிக்கத்தான் செய்தது. கணவன் வங்கிக்குப் போன நேரத்தில் இவளும் படிக்க ஆரம்பித்தாள். தொலைதூரக் கல்வி வீட்டருகே கிடைத்து. பகுதி நேர எம்சிஏ படித்தாள். இரண்டாண்டு படிப்பை குடும்பச் சுமையோடு நான் காண்டுகளாய் வைராக்கியமாகப் படித்துத் தேறினாள். இதற்கிடையில் ரமேஷும், பிரியாவும் பிறந்து விட்டார்கள்.

ராஜசேகரன் வங்கியில் நிறையக் கடன்களை வாங்கி சில புரோக்கர்களோடு சேர்ந்து ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தான். அவர்கள் எல்லாம் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பின்னணி உள்ளவர்கள். லீவு போட்டுக்கொண்டு அலைந்தான். குடிப்பழக்கம் தொற்றிக்கொண்டது. அரசியல் புரோக்கர்கள் போட்ட முதலைத் திரும்பத் தராமல் ஏமாற்றிவிட்டனர். கொன்றுவிடுவதாக மிரட்டினர். ஏமாற்றமானது குடியின் மடியில் நிரந்தரமாய் ஆறுதலைத் தேடியது. நடுச்சாமத்தில் தடுமாறி வீட்டுக்குள் நுழைந்து அடிப்பதும், உதைப்பதும், வழக்கமாகிவிட்டது.

சம்பளம் எல்லாம் கடன் பிடித்தத்திற்கு இரையாயின. வருமானம் இல்லை. வீட்டு வாடகைக்கு பாட்டி பணம் அனுப்பி வைத்தார். ராஜி அருகிலிருந்த ஒரு தனியார் கல்லூரிக்கு வேலைக்குப் போனாள். பத்தாயிரம் சம்பளமாகத் தந்தார்கள். பிள்ளைகளை காப்பாற்ற ஒரு வழி கிடைத்தது.

ராஜசேகரன் அடிக்கடி விடுப்பு எடுத்ததால் வங்கியின் ஒரு புறநகர் கிளைக்கு மாற்றிவிட்டனர். பாட்டி வந்து புத்திமதி சொன்னாள். இவளும் கெஞ்சினாள், கதறினாள். அலுவலகம் ஒழுங்காகப் போக ஆரம்பித்தான். கொஞ்ச நாளில் ஒரு புதிய வேதாளம் பிடித்துக்கொண்டது. ‘விட்ட காசையெல்லாம் பிடிக்கிறேன்’ என்று பங்கு மார்க்கெட்டில் ஜெயிக்கிறேன் என்று கிராமத்து நஞ்சையை விற்று பங்கு மார்க்கெட்டில் போட்டான்.

கரடியும் காளையும் விளையாடியதில் கரடியின் கைதான் ஓங்கியது. நஞ்சைக் கிரயம் எல்லாம் விரயம் ஆனது. விருப்ப ஓய்வு பெற்றான். கிடைத்த பணத்தை எல்லாம் வைத்து ஒரு பங்கு புரோக்கருடன் கூட்டு சேர்ந்து ஒரு நிறுவனம் நடத்தினான். அவனுடைய அனுபவமும் புத்திசாலித்தனமும் பிறருக்கு கைகொடுத்தது. இவனது கையைக் கடித்தது. போட்ட முதலும் போனது. அதே நிறுவனத்தில் பங்கு ஆலோசகராக வேலை என்ற பெயரில் உலவுகிறான்.

மகனின் நடத்தைகள் பாட்டியை நோயில் தள்ளியது. மகனுக்காகப் பேத்தியின் வாழ்வை பலி கொடுத்துவிட்டோமே… என்ற மன உறுத்தல் நாளுக்கு நாள் அவளை உருக்கியது. மரண வாசலில் கிடக்கிறாள் என்ற தகவல் வந்துதான் ஆளுக்கொரு பெட்டியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜியை அடிக்கடி “காந்தாரி மாதிரி வாழ்வாய்! என்று பாட்டி வாழ்த்துவாள்.

“ஏன் பாட்டி என்னை காந்தாரி மாதிரி வாழ்வாய் என்று சொல்றே….? ஒரு சீதை மாதிரி, ஒரு மகாலட்சுமி மாதிரி வாழ் வாய்னு சொல்லலாமில்ல பாட்டி?” என்று ஒரு நாள் ராஜி கேட்டே விட்டாள்.

வாய் நிறைந்த வெற்றிலை எச்சில் மணக்க குலுங்கிச் சிரித்தாள் பாட்டி. எச்சிலை ஒரு ஓரத்தில் துப்பிவிட்டுச் சொன்னாள்,

“ராஜி, சீதை சீதைன்னு சொல்றோமே…. அவ ராமனை கட்டினத்துக்குப் பிறகு நாய் படாத பாடுல்ல பட்டா…..? ராஜசுகமா அனுபவிச்சா…..? காட்டில கல்லுல முள்ளுல புருசனோட அலைஞ்சா…. அப்புறம் ராவணங்கிட்ட சிறைபட்டா… பிறகு புருஷன் சந்தேகத் தீயில் இறங்கினாள்! அதுக்கப்புறம் அனாதரவா காட்டில் போய் புள்ளையை பெத்தா… அது ஒரு சுகமான வாழ்க்கையைா? சரி மகாலட்சுமி மகாலட்சுமின்னு சொல்றோமே….. அவ எப்படி வாழ்ந்தானு கதை இருக்கா? பிள்ளை குட்டி பெத்து கிட்டதாகவாவது கதை இருக்கா…..?

காந்தரின்னா புருஷன் குருடனா இருந்தாலும் இவள் பேச்சை யில்ல அவன் கேட்டான். புருஷனுக்காகக் கண்ணைக் கட்டிக் கிட்டு வாழ்ந்தாலும் கடைசி வரைக்கும் ராஜரீகத்தோடு மகாராணி யாயில்ல வாழ்ந்தா……!” பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது.

“சேச்சே…. பாட்டி சொன்னது போல புருஷனுக்காக கண்ணைக் கட்டிக்கிட்டு வாழ்ந்தா பெத்த பிள்ளைகள் கதி என்ன ஆகிறது?” என்ற ஆவேசம் அவனை எதிர்பாராமல் வேலைக்குப் போனாள். பிள்கைளை நல்ல பள்ளிகளில் படிக்கவைத்தாள். பக்கத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. நினைவுச் சரடு அறுந்தது.

“ஏம்மா பிள்ளையை பால்கொடுத்து அமர்த்துமா!”

“பால் குடிக்கவும் மாட்டேன்றான். தூங்கவும் மாட்டேன்றான்”

“ஏன்”

“ஆயா கிட்டேயே இருந்து பழகிடுச்சு. அதுக்கு அம்மா மடிச் சூடு கூடத் தெரியலை! என்று தழுதழுத்தாள். கண்ணீர் பொலப் பொலவென உருண்டது.

“இப்படிக் கொடுமா” என்று ராஜி குழந்தையை வாங்கி மடியில கிடத்தி மெல்ல இதமாய் நெஞ்சில் தட்டினாள். அழுகை அடங்கியது. பால் பாட்டிலை வாயில் வைக்கவும் மெல்ல மெல்ல பருகத் தொடங்கியது.

அந்தப் பெண் மீண்டும் முகத்தை மூடி விம்மினாள். “என்னம்மா விபரம்?” என்றபடி ராஜி அவளது தலையை மெல்லக் கோதினாள். அவள் விம்மல் தணிந்து மெல்ல பேசினாள், “நான் பரமக்குடி. என் பேரு கவிதா. நானும் என் வீட்டுக்காரரும் தனித்தனியா சாப்டுவேர் கம்பெனியில வேலை பாக்கிறோம். ரெண்டு பேரும் ஒரே மாதிரி என்ஜினியர் வேலை பார்க்கிறோம். நல்ல சம்பளம்னு கல்யாணம் பண்ணிவச்சாங்க. ரெண்டு பேரும் வெவ்வேறு ஷிப்டுல வேலை பார்க்கிறோம். அவருக்கு நைட் ஷிப்டுனா எனக்கு பகல் ஷிப்டு. குழந்தை பெத்துக்காம இருக்கனும்னுதான் நினைச்சோம். குழந்தை உண்டாயிடுச்சு.

மூணு, மூணு மாசம்தான் எங்க அம்மாவும், அவங்க அம்மாவும் குழந்தையை பார்த்துகிட்டாங்க! அப்புறம் ஆயாகிட்டத்தான் குழந்தை வளர வேண்டிய கட்டாயம். எனக்கு லீவு கிடைக்காது. பகல்பூராவும் கம்ப்யூட்டரை பார்த்து பார்த்து கண்ணெல்லாம் சொருகிப்போய் வீட்டுக்கு வருவேன். குழந்தையை கண்ணு திறந்து பார்க்கக்கூட முடியாம சாப்பிட்டும், சாப்பிடாமத்தான் படுக்கையில விழுவேன். அப்புறம் அலாரம் சத்தம் கேட்டுத்தான் முழிப்பு. குழந்தை அழுதாலோ, கதறினாலோ கண்டுகொள்ளாத மெஷின் வாழ்க்கை !

நான் இப்படின்னா… அவரும் கம்ப்யூட்டர்ல இயங்கி இயங்கி மனம் ரிலாக்ஸாக்கனும்னு பீரு, வொயினு கேர்ள் பிரண்டுன்னு தடுமாற ஆரம்பிச்சுட்டார். எனக்கு வர்ற சம்பளத்தையும் ஏடிஎம் கார்டு மூலமா எடுத்து செலவு பண்ணீடுவாரு. வீட்டு வாடகை, குடும்பச் செலவுக்கு அவரைக் கெஞ்சிக் கூத்தாடித்தான் வாங்க முடியும். அதுவும் நேரில் பேச வாய்ப்பு இருக்காது. போன்லதான் பேசணும், அழணும், சிரிக்கணும், திட்டணும்.

என் பேச்சை அவரு கேட்க மாட்டேங்கிறாருன்னு, மாமனராரு மாமியாருகிட்டேச் சொன்னா… அனுசரிச்சுப் போம்மா காலப் போக்கில் சரியாயிடுவான்கிறாங்க. எங்க அம்மா அப்பா மோசம் போயிட்டேன்னு அழுது புலம்புறாங்க. இன்னும் எத்தனை நாளுக்குத்தான் இப்படி கண்ணைக் கட்டிகிட்டு பொழைக்க முடியும்? புருஷன்கூட பேச முடியலை. பெற்ற பிள்ளையைத் தூக்கி கொஞ்ச முடியல.

அவருகிட்டே சொன்னேன். அவரு கம்ப்யூட்டர் பிராப்ளங் களுக்கெல்லாம் ஈஸியா சொலியூஸன் சொல்லுவார். எங்க வாழ்க்கைக்கு சொலியூஸன் சொல்ல முடியலை. கேட்டா, மௌனமா இருப்பாரு. அடிப்பாரு, அழுவாரு, இல்லைன்னா குடிச்சிட்டு பிணமா கிடப்பாரு.

ஒரு லீவு நாளன்னிக்கு நான் படுத்திருக்கும் போது என் செல்லை எடுத்து யாரு, யாரு என் செல்லுல பேசியிருக்காங்கன்னு பதிவை பாத்தாரு. நான் எதேச்சையாக எழுந்திருச்சு, “என்ன தேடுறீங்க”ன்னு கேட்டேன். அவரு பதறி பதில் சொன்ன விதத்தில் இருந்து என் மீது சந்தேகப்படறாருன்னு தெரிஞ்சது. அவரு கேர்ள் பிரண்ட் வச்சிருக்க மாதிரி நான் பாய் பிரண்ட் வச்சிருக்கேனான்னு சந்தேகப்பட்டாரு.

அதான் இந்த வேலை வேணாம்னு முடிவெடுத்து பிள்ளையைத் தூக்கிட்டு கிளம்பிட்டேன். பரமக்குடியில் இருந்துகிட்டே பேங்க் வேலை, சர்வீஸ் கமிஷன்னு பரீட்சை எழுதி ஏதாவது வேலையில உட்காரலாம்னு முடிவெடுத்துட்டேன். பிறந்துட்டோம், பெத்துட்டோம், வாழ்ந்து ஜெயிச்சுக் காமிக்கணும்!”

கோடை மழை மாதிரி குமுறி கொட்டித் தீர்த்துவிட்டாள். அவள் முகம் இப்போது தெளிவா இருந்தது. “அக்கா உங்களை பார்த்தா என் பிரச்சனைகளை சொல்லி இறக்கி வைக்கணும் போலத் தோணுச்சு. இறக்கி வச்சுட்டேன். தப்பா நினைச்சுக்கா தீங்கக்கா.”

“சேச்சே அப்படி எல்லாம் நினைக்கமாட்டேன். எல்லாருக்கும் பிரச்சனை இருக்கு. ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் சொல்லி பிரச்சனையின் கடுமையை குறைச்சுக்கலாம். இது மாதிரி உணர்வை பகிரும் போதுதான் தீர்வு கிடைக்கும். நானும் உன்னை மாதிரி தான்!”

வண்டி மெல்ல ஊர்ந்தது. ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தாள். விழுப்புரம் வந்திருந்தது. ‘டீ, காபி, டீ, காபி”ன்னு சத்தம் கேட்டது. ஒரு பெண் தனது இடுப்பில் செருகியிருந்த சுருக்குப் பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் எடுத்து, “ஏப்பா ஒரு காபி கொடு” என்று கேட்டாள்.

“ம்ம் இப்படி சுதந்திரமா தன் காசில இருந்து செலவு பண்ண முடியுதா?” என்று எதிர் சீட்டிலிருந்த பெண் முனகி பெரு மூச்சு விட்டாள். ராஜியும், கவிதாவும் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்து முறுவலித்துக்கொண்டனர்.

“ஆமாம்மா, நீ சொல்றது சரிதான். கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் அனுபவிக்கும் சுதந்திரம் கூட நம்மை மாதிரி நடுத்தரக் குடும்பப் பெண்கள் அனுபவிக்க முடியலை. ஆமாம்மா உனக்கும் எங்களை மாதிரி பிரச்சனையா?” என்றாள் ராஜி.

“ஆமாக்கா, நான் ஒரு அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரி யராக இருக்கிறேன். மாதச் சம்பளம் ரூபாய் முப்பதாயிரம்னு ரிஜிஸ்டர்ல பார்த்து கையெழுத்துப் போடரதோட சரி. ஒரு மாதம் கூட கையில வாங்கி எண்ணிப் பார்த்ததில்லை. சம்பளம் பேங்கில என் கணக்கில் வரவாயிரும். எங்க வீட்டுக்காரரு அப்படியே ஏடிஎம் கார்டை சொருகி எடுத்திடுவாரு. அவசியச் செலவுக்குக் கூட மன்றாடி மல்லுக்கட்ட வேண்டியிருக்கு.”

“சரி உங்க வீட்டுக்காரரு கிட்ட நீ கணக்கு கேட்டதில்லையா?” “அட நீங்க வேற… கேட்டதுக்கு, உனக்கு என்ன செலவு? எல்லாமும் வாங்கி போட்டுர்றேன். தேவையான வசதி செஞ்சு தந்துடறேன். அப்புறம் கையில எதுக்கு காசு?” என்று கேள்விதான் பதிலா வரும். புருஷன்காரங்க என்ன சொன்னாலும் கேட்காம, என்ன செஞ்சாலும் கண்டுக்காமல்  மகன் இரண்டு இட்லி, வடை பொட்டலங்களை வாங்கி வந்தான். இந்த ஆன்ட்டிக்கு ஒன்று வாங்கிட்டு வா என்றாள் ராஜி.

“எனக்கு வேணாம்க்கா, பசிக்கலை” என்றாள் கவிதா. இந்த வயசில பசிக்காம இருக்கக்கூடாது. வாழணும்னா பசிக்கணும். பொட்டலம் வந்தது. பேராசியரும் கொண்டுவந்திருந்த பொட்டலத்தை அவிழ்த்தார். சாப்பிடத் தொடங்கினர். பயணம் தொடர்ந்தது.

அதிகாலை 3 மணி வாக்கில் சிவகங்கை வந்தது. பக்கத்திலிருந் தவர்களை எழுப்பி, சொல்லிவிட்டு ராஜி மகளோடு இறங்கினாள். மகனும் மகளும் தூக்கக் கலக்கத்திலேயே நடந்தார்கள். ராஜசேகரன் ஆட்டோ ஒன்று பிடித்து வந்தான். ஊர் அதிகாலைப் பனியில் வெள்ளை பூத்துக்கிடந்தது. நாய்கள் குரைக்கத் தெம்பின்றி முடங்கிக்கிடந்தன.

“நல்ல வேளை நாய்கள் ஊளைவிடும் சத்தம் எங்கேயும் கேட்க வில்லை. பாட்டி உயிருக்கு ஆபத்து எதுவும் இருக்காது. கோட்டான்களின் குமுறலும் இல்லை ,” ராஜிக்கு நிம்மதி வந்தது.

ஆட்டோ வீட்டுமுன் நின்றது. ஆட்டோ சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் விளக்கைப் போட்டுவிட்டு வெளியே எட்டிப் பார்த்தார்கள். பக்கத்து வீட்டு பொன்னம்மக்காள் வீதியில் இறங்கி வந்து, “வா ராஜி, வா சேகரு” என்றபடி சென்று குழந்தைகளை அணைத்துக்கொண்டாள்.

ராஜி, “பாட்டி எப்படி இருக்கிறது? என்று ஜாடையில் கேட்டாள். “நல்லா இருக்குது. தூங்குது”ன்னு ஜாடையிலே பதில் வந்தது.

வீட்டுக்குள் வெளிச்சம் தெரிந்தது. பாட்டி கட்டிலிலிருந்து இறங்கி மெல்ல மெல்ல வாசலருகே வந்தாள். பாட்டியின் உடல் கூன் விழுந்து சுருங்கிப் போயிருந்தது. கண்ணில் மட்டும் அபார வெளிச்சம்! ராஜி ஓடிப்போய் பாட்டியைக் கட்டிக்கொண்டாள்.” “வா தாயி, என்றழைத்தாள் பாட்டி. பிள்ளைகள் தூக்கக் கலக்கத்தில் கண்களை திறக்கமுடியாமல் தினறினர். பாட்டி, சேகர் கையை பிடித்தாள், “அம்மா உடம்புக்கு இப்ப எப்படிம்மா இருக்கு” என்ற படி நழுவி வீட்டுக்குள் சென்றான். ராஜி பிள்ளைகளுக்கு பாய் விரித்து படுக்கச் செய்தாள். சேகரும் படுத்துக்கொண்டான். ராஜிக்கு தூக்கம் பிடிக்கவில்லை. கண்கள் காந்தின. புருஷன் பிழைப்புப் கெட்டுப்போன நிலையில் பிள்ளைகளை எப்படியும் படிக்க வைத்து முன்னேற்றிவிட வேண்டுமே… என்ற ஆதங்கம் கொழுந்து விட்டு எரிந்தது. புஸ் புஸ் என்று பெருமூச்சுவிட்டாள் பாட்டி. கட்டிலில் உட்கார்ந்தபடி சிந்தனையிலே மூழ்கியிருந்தாள். ராஜி வேகமாய் எழுந்துபோய் பாட்டியின் மடியில் முகம் புதைத்து சத்தமின்றி கேவினாள். தாரை தாரையாய் கண்ணீர் மடியை நனைத்தது.

பாட்டி, ராஜியின் கண்ணீரை முந்தானையால துடைத்துவிட்டு தலையை கோதிவிட்டாள். “பாட்டி, மாமா இங்கேயே இருக்கட்டும். இருக்கிற புஞ்சை விவசாயத்தையும், உன்னையும் கவனிச்சுக்கிட்டு இங்கேயே இருக்கட்டும். நானு எப்படியாவது இந்த காலேஜ் வேலையில் இருந்துகிட்டே டியூஷன், கியூஷன் எடுத்து பிள்ளைகளை கரையேத்திருவேன்…..”

பாட்டி மெல்ல தீர்க்கமான குரலில் சொன்னாள், எனக்கு உடம்புக்கு எதுவுமில்லை. என் நோய் எல்லாம் உன் மீதான கவலை தான். உங்களை எல்லாம் வரவழைக்கிறதுக்கே முடியலைன்னு தாக்கல் தரச் சொன்னேன். நீ வீட்டை காலி பண்ணீட்டு இங்க வந்துரு. மானாமதுரை, மதுரைன்னு எங்காவது ஒரு காலேஜ்ல இத மாதிரி வேலை தேடிக்கலாம்.

இங்கே வந்துட்டா அவனும் அங்கே போகமாட்டான். இங்கே மெட்ராஸ் மாதிரி செலவும் அதிகமாகாது. பிள்ளைகளையும் கருத்தா படிக்க வச்சிடலாம். உன்னை நான் படிக்க வைக்கலையா… அவனும் எந்த திருகுதாளமும் செய்யிறதுக்கு வழியில்லை. அவன் செய்யறதை எல்லாம் கண்ணை மூடிக்கிட்டு ஊர் பார்த்துக்கிட்டு இருக்காது. ஊரும் உலகமும் உனக்கு ஆதரவாக இருக்கும். அவனும் பயந்து அடங்கிக் கிடப்பான். ஒரு வேளை இல்லாட்டாலும் மறு வேளை அவன் திருந்தறதுக்கு வகையிருக்கு. எம்பிள்ளை மேல் இருக்கிற பாசத்தைவிட உன் மேலையும், உன் பிள்ளைக மேலையும் தான் எனக்கு பாசமும் அக்கறையும். ஏன்னா நான் சொன்னதுக்காகத் தான் நீ கண்ணை மூடிக்கிட்டு கழுத்தை நீட்டின. உனக்கும் ஒன் பிள்ளைகளுக்கும் ஒரு வழிவகை பண்ணாம என் கட்டை வேகாது, என்றபடி ராஜியின் முகத்தை தன் தோளில் ஏந்தி இருத்தி அணைத்தாள்.

பாட்டியின் கண்ணீர் சூடு ராஜியின் உடம்பெல்லாம் சிலிர்த்தது. நம்பிக்கை ரத்தம் ஊற்றெடுத்தது போன்ற உணர்வு. எங்கோ சேவல் கூவும் சத்தம். காக்கை, குருவிகள் சத்தம், விடியலின் முன் அறிவிப்பு. இருட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top