நவாப்பழம்

0
(0)

‘நவாப்பழம்னா ஈஸ்வரிக்கு ரொம்பப் பிடிக்கும். ஆடுகளை கண்மாய் ஓரமாய் பத்திவிட்டுவிட்டு இவள் நவாமரம் ஏறத் தோதுபார்த்தாள். சுற்றிலும் ஆள் பார்த்தாள்.

வெள்ளைப் போர்வை போர்த்திய நெருப்பாய் பதினோரு மணிவெயில்… வெண்சூடு! கண்திறக்க இயலாமல் கூசியது. நெற்றி மேல் கைநிழல் கூட்டி தூரத்தில் சுற்றிலும் பார்த்தாள். யாரும் வரக்காணோம்.

பாவாடையை மடித்து மரமேறத் தோதாக இறுக்கிக் கட்டிக் கொண்டாள். முக்கொம்பு கவ்வையாக அமைந்த கிளையில் வாகாய் நின்று, கைக்கெட்டிய பழங்களைப் பறித்துத் தாவணி மடிப்பில் போட்டுக் கொண்டாள். பழத்தின் கனிந்த ஈரத்தில் சூரிய ஒளி தெறித்து ஜாலம் செய்தது. மெல்ல இறங்கி மரத்தை உலுக்கினாள் உச்சியிலிருந்து கருநீலமழை! அவற்றில் பிசுபிசுப்பில்லாத ‘ஒப்பழமாய் பொறுக்கினாள்.

பக்கத்துத் தோட்டத்தில் ஆமணக்கு இலைகள் நான்கு பிடுங்கி மோட்டார் தொட்டியில் வெள்ளைப்பால் போகக் கழுவி உதறினாள். அதில் நவாப்பழங்களை வைத்து, தான் கொண்டுவந்தத் துண்டை நனைத்து அதில் வைத்து தளர்வாய் முடிந்து கழுத்தை சுற்றிப் போட்டுக்கொண்டாள். ஆடுகளைப் பார்த்தாள்… தோட்டம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. ஓடி சத்தம் கொடுத்து கண்மாய்ப் பக்கம் திருப்பி விட்டாள்.

வரப்பை ஒட்டிய வேப்பமர நிழலில் உட்கார்ந்தாள். இன்று காலை பட்டியிலிருந்து ஆடு பத்தி வரும்போது ஈஸ்வரியின் அம்மாவைப் பார்த்தாள். நேற்றிரவு ஈஸ்வரியை அவங்க அப்பா கூட்டி வந்தாராம்.. பொழுதோட போய்ப் பார்க்கணும் என்று நினைத்தாள். அதுமுதல் ஈஸ்ரியைப் பற்றிய நினைவு குருட்டு ஈயாக முகத்தையே சுற்றிச் சுற்றி வந்தது.

x x x

இவளும் ஈஸ்வரியும் ஒன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புவரை ஒன்றாகவே படித்து வந்தார்கள். எங்கு போனாலும் ஒன்றாகவே போவார்கள். இவள் நான்காம் வகுப்பு படிக்கும்போது அப்பா இறந்துவிட்டார். சாப்பாட்டுப் பிரச்சனை தீர்க்க ஆடு மேய்க்க வரவேண்டியதாயிற்று. ஈஸ்வரி ஆறாம் வகுப்புக்கு அடுத்த ஊருக்கு நடந்து போய் படிக்க வேண்டும். அங்கு சத்துணவு கிடைப்பது சிரமம். நோட்டுப் புத்தகம், யூனிபாரம், துணிமணி வாங்கிக் கொடுக்க முடியாது! பேசாம ஆடு மேய், போ!’ என்று ஈஸ்வரியின் அப்பா கட்டாயப்படுத்தினான். ஈஸ்வரி எவ்வளவோ வாதாடிப் பார்த்தாள். அடம்பிடித்தாள்! குடிகார அப்பன் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னான். ஈஸ்வரிக்காக வாதாடிய அவளது அம்மாவுக்கும் அடி விழுந்தது.

ஈஸ்வரியும் ஆடு மேய்க்க வருவது ஒரு பக்கம் சந்தோஷத் துணையாக இருந்தாலும் அவளாவது படித்திருக்கலாமே என்ற வாட்டமும் இருந்தது. இவளுக்கு அப்பா இல்லாததால் ஆடு மேய்க்க வரவேண்டியதாயிற்று. ஈஸ்வரிக்கு அப்பா இருப்பதால் ஆடு மேய்க்க வரவேண்டிய கட்டாயம் இந்த முரண்பாடு, சோகச் சிரிப்பை வரவழைத்தது.

ஈஸ்வரி கறுப்பாக இருந்தாலும் நல்ல களையாக இருப்பாள். சுருட்டை சுருட்டையாய் அடர்ந்த முடி ஆடு மேய்க்கும்போது ரப்பர் வளையம் சுற்றிக் கொண்டை போட்டுக் கொள்வாள். டீச்சர் மாதிரி இருப்பாள். அவள் ஆடுகளைக் கம்பு வைத்து மிரட்டும் போதும், அடிக்க ஓங்கும்போதும் மூன்றாம் வகுப்பு டீச்சரின் சாயலில் இருக்கும். ஆடுகளுக்கு ஏதோ சொல்லிக் கொடுப்பது போல் இருக்கும். இவளுக்குச் சிரிப்பு பூத்துவரும். பாவம் அவளாவது படித்திருந்திருக்கலாம். சண்டாள அப்பன் குடிகாரனாக இருந்ததால் இந்தத் துயரம்.

ஈஸ்வரியின் பேச்சும் செயலும் வித்தியாசமாக, ஒரு பெரிய மனுசத் தோரணையாகவும், சின்னப்பிள்ளை பிடிவாதமாகவும் இருக்கும்.

பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்திலிருந்து ஈஸ்வரிக்கு நவாப்பழம் ரொம்பப் பிடிக்கும். ஆடு மேய்க்கும்போது அவள் நவா மரங்களைச் சுற்றித்தான் இருப்பாள்.

“ஏன் ஈஸ்வரி உனக்கு நவாப்பழங்கள்னா இவ்வளவு பிரியம்?” என்று இவள் கேட்டாள்.

“நவாப்பழம் நம்ம மாதிரி ஏழை எளியதுக்கேத்த பழம்! வறட்சியில்தான் வளரும், பழுக்கும். நம்ம பொழைப்புமாதிரி கசந்தாலும் துவர்ந்தாலும் கொஞ்சநேரம் கழித்து இனிக்கும். பசி அடங்கும். தாகம் தீர்த்து மனசு குளிரும். நமக்கேத்த பழத்தை நாமதாண்டி சாப்பிடணும்!” அவளது கருவிழி நவாப்பழமாய் மின்ன சொல்லுவாள்.

“ஏண்டி ஈசு நீயும் கறுப்பு. நீ திங்கிற பழமும் கறுப்பாவா இருக்கணும்?” என்று இவள் சீண்டுவாள்.

“அடப்போடி.. நீயும் தான் நல்ல யானை செகப்பு.. என்னைச் சொல்ற! அங்கபாரு.. பொழுது விழும்போது செக்கச் செவேர்னு தீப்பழம் மாதிரி இருக்கில்ல.. அது பிடிக்கும்! வீட்ல விளக்கேத்தி எரியும்போது அந்த தீ நாக்கை தொட்டும் தொடாமல், பட்டும் படாமல், விளையாடப் பிடிக்கும். அந்த சிகப்பெல்லாம் நமக்கு வாய்க்குமா? இருக்கிறத ஏத்துக்கணும். நம்மகிட்ட இருக்கிறதை திறமையா மாத்திக்கணும்…”

“அம்மாடி! டீச்சரம்மா மாதிரி பெரிசு பெரிசா பேசுறா!” இவள் சொல்ல, ஈஸ்வரி வெட்கத்தோடு சிரிப்பாள். கருப்பட்டி பணியாரம் போல் கன்னம் திரண்டிருக்கும்.

இவளோடு ஈஸ்வரி ஆடு மேய்க்கிற காலமெல்லாம் ஏதோ ஒரு தேவதையோடு சேர்ந்து திரிகிற நினைவாக இருந்தது. இவளுக்கு இந்த சந்தோஷமும் கொடுத்து வைக்கவில்லை.

ஊரில் விவசாயம் குறைந்துவிட்டது. விவசாயக் கூலிகளெல்லாம் பக்கத்து டவுனுக்குக் கட்டட வேலைகளுக்குப் போனார்கள். ஈஸ்வரியின் அம்மாவும் கட்டட வேலைக்கு எல்லோரோடும் போய் வந்தாள்.

ஈஸ்வரியின் அப்பா, மனைவியின் கூலி பணத்தைப் பிடுங்கி குடித்துவிட்டு அவளை அடித்துக் கன்னா பின்னாவென பேசினான்.

அம்மாவுக்குப் பரிந்து ஈஸ்வரி பேசினால் அவளை அடித்து நொறுக்குவான். இந்தத் தொல்லை வேண்டாமென்று ஈஸ்வரியின் அம்மா, அவளைப் பக்கத்திலுள்ள பெரிய டவுனில் ஒரு டீச்சர் வீட்டில் வேலைக்குச் சேர்த்து விட்டாள். டீச்சராக வேண்டும் என்று நினைத்த ஈஸ்வரி, டீச்சர் வீட்டில் பத்துப் பாத்திரம் கழுவினாள். ஆடு மேய்ப்பதற்கு இது தேவலை என்றுதான் இவளுக்கும் பட்டது.

ஊரும் இப்போ ரொம்ப மாறிவிட்டது. தெருவுக்கு நாலைந்து வீட்டிலாவது டி.வி. இருக்கு. சித்தாளு வேலைக்குப் போற இவள் வயசுப் பிள்ளைகளும், மூத்தவர்களும் பவுடர் கிரீம்னு ஏதேதோ பூசிக்கிறாங்க. டவுனுக்கு போனதுக்கு அப்புறம் இந்த மூணு வருஷத்தில ஈஸ்வரி முகம்கூட கறுப்பும் மஞ்சளும் கலந்து கருவேப்பிலை கொழுந்து நிறமாயிடுச்சு.

போனவாரம் இப்படித்தான் ஈஸ்வரி வந்ததாகச் சொன்னார்கள். இவள் ஆசை ஆசையாய் அவளைப் பார்க்கத் துடித்துக் கொண் டிருந்தாள். அன்றைக்குப் பார்த்து அந்த வெள்ளைக்காரி இரண்டு குட்டிகளை ஈண்டுவிட்டாள். இவள் நிதானமாக இவளுக்கு தெரிந்த அளவு பக்குவமாய் அதற்கு பிரசவம் பார்த்து குட்டிகளைத் தூக்கிக் கொண்டு பைய பைய வெள்ளைக்காரியை நடத்தி, வீடு வந்து சேருவதற்குள் பஞ்சாயத்து டி.வியில் ஏழு மணி சேதி போட்டு விட்டார்கள்.

அதற்கப்புறம் அஞ்சாறு தண்ணியை மொண்டு ஊற்றிக் கொண்டு வேறு துணி மாற்றி ஈஸ்வரி வீட்டிற்கு ஓடினாள். ஈஸ்வரி அன்று மதியமே டவுனுக்குத் திரும்பிப் போய்விட்டதாகச் சொன்னார்கள். சப்பென்று போய்விட்டது. ஏதோ நடந்திருக்கும் என்ற உறுத்தல் மட்டும் தாங்க முடியவில்லை.

மறுநாள் பக்கத்து வீட்டுப் பாப்பா கிழவியிடம் கேட்டாள். ஈஸ்வரியின் அப்பன் யாரோ ஒரு கொத்தனார் வேலை பார்க்கிறவனை கட்டிக்கச் சொன்னாராம். நல்ல சம்பாத்தியமாம். அவனும் குடிகாரனாம். பல பொம்பளைகளை ‘தொடுப்பு’ வேறு வச்சிருக் கானாம். ஈஸ்வரி மாட்டேனுட்டாளாம். அப்பன்காரன் அடிக்கவே. அவள் கோவிச்சுக்கிட்டு டீச்சர் வீட்டு வேலைக்கே போயிட்டாளாம்.

இந்தத் தகவல் கேட்டதும் இவளுக்கு ஈரக்குலையை ஒரு திருகு  திருகிப் பிடுங்கினது மாதிரி இருந்தது. ‘சே என்ன மனுஷன்கள் பிள்ளைகள் மனசைப் பத்தித் தெரியாத அப்பனுங்க ஏன் பெத்தானுங்க. தனக்கு வாய்க்கும் புருஷன் யோக்கியவானாய் நல்ல உழைப்பாளியாய் இருக்கணும்… பொண்டாட்டியை அடிக்காம சமமாய் நடத்துகிறவனாய் இருக்கணும், ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுகிட்டு குடும்பம் நடத்தணும்னு ஈஸ்வரி சொல்லுவாள்.

இன்னிக்கு ஈஸ்வரியை மறுபடியும் கூட்டிட்டு வந்ததாக அவ அம்மா சொல்லுச்சு. இன்னிக்காவது பொழுதோடப் போய் அவளைப் பார்த்துப் பேசிட்டு வரணும். இல்லாட்டி தூக்கமும் வராது. கிறுக்கு பிடிச்சிறும்!

ஈஸ்வரியின் நினைவு இவளை பரபரப்பாக இயக்கியது. ஆடுகளை ஒதுக்குவதும் மேற்கே பொழுதைப் பார்ப்பதுமாய் இருந்தாள்.

ஈஸ்வரி வர்ணித்தது போல, தீப்பழத்தை விழுங்க நாக்கை நீட்டிய பல்லியாக மலை படுத்துக்கிடந்தது. ஆடுகளைப் பற்றினாள். நவாப்பழம் பத்திரமாக இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டாள். துணி முடிச்சில் லேசான நீலநிறக்கசிவு. ‘எப்படிப் பத்திரப்படுத்தினாலும் கசிய ஆரம்பிச்சிருச்சே!’ இத்தனைக்கும் பக்குவமான பழங்களைத்தான் எடுத்து வைத்திருந்தாள்.

எப்படித்தான் ஆடுகளைப் பத்தினாள் தெரியவில்லை. வீடு வந்து சேர்ந்தாள். ஊருக்குள் ஒரே பதட்டம். ஊமையழுகையாய் இருட்டு கசிந்திருந்தது, இவளது மனசை என்னவோ பிசைந்தது. ஆட்டைப் பட்டிக்குள் அடைத்தாள்.

நேரே ஈஸ்வரி வீட்டுக்கு ஓடினாள். வீட்டு முன் ஒரே கூட்டம். என்ன மறுபடியும் கல்யாணப் பேச்சா? இவள் பதறி ஓடினாள். பெண்கள் அழுகை பெரிதாகக் கேட்டது. கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே ஓடினாள்.

இவளைப் பார்த்ததும் ஈஸ்வரியின் அம்மா சத்தம் உயர்த்திக் கத்தினாள். “குடிகாரன கட்டிக்கமாட்டேன்னு சொன்னதுக்காக எம்புள்ளைய உயிரோடக் கொளுத்திட்டானே சண்டாளப்பாவி!”

ஈஸ்வரியின் உடல் வெந்து வெள்ளைத் துணி போர்த்திக்கிடந்தது. வெள்ளைத் துணியை மீறி கருநீலமை. ஒரே நிண நாற்றம். வெந்த தோலிலிருந்து நிணநீர் கருநீலமையோடு கசிந்து கொண்டிருந்தது.

இவளது தாவணி மடிப்பில் வைத்திருந்த நவாப்பழமும் நீலம்பாரித்த கண்ணீரைக் கசியவிட்டுக் கொண்டிருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top