நரைப் பூ

0
(0)

பள்ளி ஆண்டு விழா. வளாகம் முழுவதும் ஒளி வெள்ளம். வண்ண வண்ண விளக்குகள். கண்கள் கூசின. “இதெல்லாம் நம்மளை மாதிரி பெற்றோர்களோட காசு தானே!” மனைவி சொன்னதும் ஆதவனால் சிரிக்கவும் முடியலை… சிரிக்காமல் இருக்கவும் முடியலை.

“ஆமாம். இதெல்லாம் இங்கே பேசக் கூடாது. யாரு காதிலையும் விழுந்திடப் போகுது. வம்பாப் போயிரும்,” என்று கிசுகிசுத்தார்.

நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. வண்ண வண்ணமாய் மின்னும் உடைகளில் நினைத்துப் பார்க்கவே கூசும் பாடல்களுக்கு சிறுமிகளின் நடன அசைவுகள். பெற்றோர்கள் வாய் பிளந்து புளகாங்கிதத்தில் உறைந்து போயிருந்தனர். இடையிடையே ஒளி வெள்ளத்தில் நிர்வாகத்தின் புகழ்க்குமிழ்கள் வானவில்லாய் ஜொலித்தன. ஒரு பக்கம் ஒளிப்பூச்சிகள். இன்னொருப்பக்கம் கொசுக்களின் காதோடுதான் பாடுவேன் என்ற ரீங்காரம். பெற்றோர்கள் நெளிந்தபடி மேடையின் பிணைக்கப்பட்ட கண்களாய் இருந்தனர்.

ஆதவனுக்கும் கமலாவுக்கும் பெருமையாகத்தான் இருந்தது. தனது இரண்டு பிள்ளைகளும் பேச்சுப் போட்டி, பாடல் ஒப்புவிப்பு போட்டி, படிப்பு, நடனம் என ஒவ்வொன்றிலும் பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்று ஒளிப்படங்களில் பதிவாகி இருந்தனர். நிகழ்ச்சியில் ‘ஜனகனமன’ பாடப்பட்டதும் பெற்றோர்களுக்கு ஒருவகையில் விடுதலையாக இருந்தது. ஒளி மிகுதியால் ஏற்பட்ட பார்வைமங்கலில் தடுமாறி தமது பிள்ளைகளோடு வாகனங்களை நோக்கிப் போனார்கள். மறுநாள் விடுமுறை அறிவிப்பு பிள்ளை களுக்கும், ஆசிரியர்களுக்கும் மட்டுமல்ல, அம்மாமார்களுக்கும் ஏகசந்தோசம். மறுநாள் பரபரப்போடு விடியாது அல்லவா-

கமலாவுக்கு இன்றிரவு சிற்றுண்டி தயாரிக்கும் வேலைக்கு விடுப்பு கொடுத்துவிட்டார் ஆதவன்! பிள்ளைகள் பரிசு வாங்கி யதற்கு கொண்டாடும் விதமாக நகரில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் இரவு டிபன். எல்லாருக்கும் சந்தோசம் தான். ஆதவன் உணவகத்திற்கு அருகிலுள்ள வங்கி தானியங்கி பணம் வழங்கு அறைக்குப் போய் வந்தார்.

கமலா சொன்னார், வருஷத்துக்கு ஒருநாள் தான் இப்படி சந்தோசம்!

“ஆமா, ஆமா இப்படி சின்ன சின்ன மகிழ்ச்சியில்தானே சிரமங்களை மறக்க முடியுது” என்ற ஆதவன் மகளை அழைத்தார்.

என்னப்பா? தேன்மொழி கேட்டாள்

“ஒண்ணுமில்லப்பா, நீங்க வேணுங்கிறதை சாப்பிடுங்க. ஆனா வாங்கிறதை மிச்சம் வைக்கக்கூடாது. எங்கே, யாரு ஜெயிக்கிறாங் கன்னு பார்ப்போம்!” பிள்ளைகள் மூவரும் சேர்ந்து ஐவருமாக இனிப்பிலிருந்து ஐஸ்கிரீம் வரை ஒருபிடி பிடித்தார்கள். அவரவர் இஷ்டம்தான்.

தேன்மொழிதான் கொஞ்சம் சோர்ந்திருந்தாள். அடிக்கடி அப்பாவின் முகத்தையே பார்த்தாள். அப்புறம் வெறெங்கோ பார்ப்பது போல மெல்ல மீண்டும் அப்பாவின் முகத்தைப் பார்ப்பதுமாக இருந்தாள்.

ஆதவனுக்கு இந்த பார்வை சற்று உறுத்தலாக இருந்தது. யோசித்து யோசித்துப் பார்த்தார். புரிபடவில்லை. வீட்டிற்குப் போய் கேட்டுக்கொள்ளலாம். சமாதானம் பண்ணிக் கொண்டார். தேன்மொழியின் பார்வையின் அர்த்த முடிச்சை ஆதவனது மன விரல்கள் அவிழ்க்க முடியாமல் தோற்றுக் கொண்டிருந்தன.

மனைவி கமலா சொன்னார், “பிள்ளை மேடை ஏறி பேசி, பாடி, ஆடி பரிசுகள் வாங்கியிருக்கு. கண் திருஷ்டி பட்டிருக்கும். வீட்டுக்குப் போய் உப்பு மிளகாய் சுற்றி நெருப்பில் போட்டால் சரியாகிரும்!”

வழக்கமாக தேன்மொழி எதையும் நயமாய் வெளிப்படுத்தும் சுபாவம் உள்ளவள். ஒருநாள் மாலையில் வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்தாள். திடீரென்று ஒரு பாட்டுப் பாடினாள். “வாய் இருக்கு வாய் இருக்கு பேச….! கையிருக்கு கையிருக்கு எழுத… காலிருக்கு காலிருக்கு.. காலிருக்கு… காலிருக்கு” என்று நீட்டிக் கொண்டே இருந்தாள்.

“அதென்னன்னு பாருங்க” என்று மனைவி சொல்லவும்தான் ஆதவன் கவனித்தார். தேன்மொழி “…….காலிருக்கு காலிருக்கு நடக்கமுடியலை…” என்று சொல்லி தனது காலைப் பார்த்தாள்.

அப்போதுதான் கவனித்தார்கள் தேன்மொழியின் இடது கால் அடிப்பட்டு ரத்தம் கசிந்திருந்தது. என்ன விவரம் என்று கேட்டனர். பள்ளியில் விளையாடும்போது கல் தடுக்கி காலில் சிறு காயம். ரத்தம் கசிந்திருந்தது. ஆதவன் பதறிப்போய் மருத்துவரிடம் அழைத்துப் போனார்.  சில நாட்களில் அது குணமானது.

இப்படி எதனையும் நயமாய் வெளிப்படுத்தும் இயல்பினள், இறுக்கத்தோடு இருக்கிறாள் என்ற ஆதங்க முடிச்சு இறுக்கத் தொடங்கியது.

வீட்டுக்குப் போனதும் கமலா பிள்ளைகளுக்கு பால் காய்ச்சிக் கொடுத்தார். பிள்ளைகள் யாழும், குழலியும் அரைத் தூக்கத்தில் சிணுங்கியபடி பாலைக் குடித்தனர். தேன்மொழி பாலைக் குடிக்காமல் அப்பாவின் முகத்தையே உற்றுப் பார்த்தபடி இருந்தாள். |

“தேனு, என்னடா, என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கே. உடம்பு எதுவும் நோகுதா?”

ஆதவன் கேட்டதுதான் தாமதம். தேன்மொழி பால் டம்ளரை அப்படியே வைத்துவிட்டு ஓடிவந்து அப்பாவை இறுகக் கட்டிக் கொண்டு விம்மி விசும்பி அப்பாவின் தலைமுடியைக் கோதினாள்.

“என்னப்பா, என்னடா? சும்மா சொல்லு என்ன பிரச்சனை?”

“இல்லப்பா உனக்கு தலைமுடி நரைச்சிருக்கில்ல… நீ சீக்கிரம் செத்துப் போயிருவியாமே!” குரல் உடைந்து அழுதபடியே சொன்னாள். “எங்க வகுப்பு உமா குரங்கு சொல்லுச்சுப்பா…”

ஆதவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. தலையில் அங்கங்கே பித்த நரை பூத்திருந்தது. வெள்ளிக் கம்பிகளாக கோணல் தென்னை போல நெளிந்தும் வளைந்தும் நரை முடிகள் நின்றன.

“ஓ. இதுவா பிரச்சினை?”

“ஆமாம்பா அந்த உமா குரங்கு பக்கத்து வீட்ல ஒருத்தரு தலை நரைச்சு செத்துப்போயிட்டாராம்பா…”

“தேனு இங்க பாருப்பா, நரைக்கும் சாவுக்கும் சம்பந்தம் இல்லப்பா. அங்க பாரு சுவத்தில் போட்டோவில் பெரியார் தலை எல்லாம் நரைச்சிருக்கே-அவரு தொன்னூற்று நாலு வயசு வரைக்கும் உயிரோட இருந்தாரு. அடுத்த படத்தில பாரு மார்க்சு. அவரு தலையும் நரைச்சுதான். இருக்கு. அவரும் எழுபது வயசுக்கு மேல உயிரோட இருந்தாரு. அங்கே பாரு காந்தி தாத்தா. வழுக்கையைச் சுத்தி பிறைநிலா மாதிரி நரைமுடி. அவரும் எழுபத்தொன்பது வயசுவரை உயிரோடு இருந்தாரு…”

“ஏம்பா பாரதியார் முண்டாசு கட்டி இருக்காரே அவருக்கு நரைக்கலையா?”

தேன்மொழியின் அப்பா திணறிப் போனார். மரணத்தின்போது பாரதியின் வயசை சொல்ல முடியுமா?

“தேனு, பாரதிக்கு முடியில்லை. வழுக்கைத் தலையை மறைக்கத்தான் தலைப் பாகைக் கட்டியிருந்தார். எண்பத்திரண்டு வயசுவரை வாழ்ந்த நேரு மாமா வழுக்கையை மறைக்க குல்லா போட்டிருந்தாரில்ல…”

உங்க தாத்தா வருவாரில்ல… அவரு தலை எல்லாம் நரைதான். அவருக்கு வயசு எண்பத்திரண்டு. இன்னும் நல்ல சுறுசுறுப்போடு இருக்காரில்ல! எனக்கு இப்போ வயசு முப்பத்தெட்டு. நான் இன்னும் நாற்பது வருசம் அதாவது குறைஞ்சது எழுபத்தெட்டு வயசு வரை யாவது உயிரோடு இருப்பேன். அதுக்குள்ளே நீ பெரிய டாக்டராகி உனக்கும் பாப்பா பிறந்திருக்கும். அதனால நரைக்கும் சாவுக்கும் தொடர்பில்லை. யாரோ, தெரியாம தப்பா சொல்லியிருக்காங்கடா….”

எதோ அரைகுறையாய் நம்பியவள்போல் அப்பாவின் தலையை மீண்டும் கோதிவிட்டுட்டு பாலைக் குடிக்கப் போனாள். “அம்மாடி பிள்ளைகளுக்கு எப்படி எல்லாம் சந்தேகம் வருது” என்று கமலா அண்ணம்பாரித்து நின்றார்.

“அப்பா மேல பிரியத்துல தேனு கேட்டுட்டா… ஏன்டா தேனு அப்படித்தானே?”

தேன்மொழி தலையாட்டிக்கொண்டே படுக்கைக்குப் போனாள்.

படுத்தாயிற்று. கண்கள் மூடினாலும் தூக்கம் வரவில்லை. மனக்கடல் கொந்தளித்து அலை எழும்பிக்கொண்டே இருந்தது. வீட்டின் அமைதியில் சுவர்க்கடிகார ஓசை இடியோசை போல இம்சித்தது. தனது வகுப்புத் தோழிகளின் அப்பாமார் போல ஈர்ப்பா, மிடுக்கா தன் அப்பா இருக்கணும்னு மகள் நினைக்கிறது தவறில்லையே…..

ஆதவனுக்கு தெரிந்த தலையில் மைபூசி இளமையாய் தோற்றமளிக்கும் நண்பர்கள், அவர்கள் ‘டை’ அடிப்பது குறித்து பேசிய பேச்சுக்களை நினைவுகூர்ந்தார்.

ஒருமுறை நண்பர் பிரபாகரன் கவிஞர் கந்தர்வனிடம் ‘டை’ அடிப்பது குறித்து கேட்டார்.

“தம்பி, தலைக்கு ‘டை’ அடிப்பது பார்ப்பதற்கு அழகாய்த்தான் இருக்கு. இந்த தலையலங்காரத்திற்கு செலவழிக்கும் நேரமும், காசும் அதைப் பராமரிக்கும் மனோபாவமும் எரிச்சலாக இருக்கிறது. பகல் வேஷக்காரன் போல் மனசு உறுத்துது. ஒருநாள் கவனப் பிசகாக இருந்துவிட்டால்கூட தன் முகமே தனக்கு அந்நியமாய் எதோ நோயாளியின் முகம் போலத் தோணுது. டை அடிக் கிறதுங்கிறது புலி வாலை பிடித்த கதைதான். விட்டா கவலை தின்னுடும். விடாம இருந்தா நேரத்தையும் உழைப்பையும் அது தின்னுடும்…”

இப்படி கந்தர்வன் சொன்னதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்த பிரபாகரன் மறுநாள் தலையில் மை பூசி “இளமையாக” வந்தார்.

“நீங்க உங்க அனுபவத்தைச் சொன்னீங்கண்ணே.” நாமளும் அடிச்சுப் பார்ப்போம்னு அடிச்சேண்ணே என்றார். கந்தர்வன் மவுனமாக சிரித்துக்கொண்டார். முதல் இரண்டு நாட்கள் கேலி பேசிய நண்பர்கள் சகஜமாகிவிட்டனர்.

ஒரு பதினைந்து நாள் கழித்து பிரபாகரனை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. பீழைப்பூ பூத்தது மாதிரி தலைமுடி எல்லாம் நரை பூத்துக்கிடந்தது.

“என்ன சார்,” என்று கேட்டதற்கு “எனக்கு டை ஒத்துக்கலை” என்று சுருக்கமாகச் சொன்னார். அவர் முகம் பத்து வருஷம் முந்தி முதிர்ந்தது மாதிரி பொதுபொதுத்து கரிய திட்டுக்கள் தெரிந்தன. ஆனால் கந்தர்வன் கடைசிவரை புலிவாலை பிடித்து அதன் மீது மிடுக்காக சவாரியும் செஞ்சுட்டார்.

இப்படி பல நிகழ்வுகள் நினைவுத் திரையில் தோன்றினாலும் தேன்மொழியின் உறுத்தும் பார்வை மனத்திரையில் பூனைபோல் தோன்றிக்கொண்டே இருந்தது. எப்போது தூங்கினார் தெரிய வில்லை. பால்காரரது மணி சத்தம் கேட்டு பதறி எழுந்தார்.

பால் வாங்கி வைத்துவிட்டு மனைவிக்கு சமையலுக்கு செய்ய வேண்டிய சிறுசிறு முன்னேற்பாடு வேலைகளை செய்தார். பிள்ளைகளை கமலா எழுப்பி தயார்படுத்திக் கொண்டிருந்தார். “அம்மா இன்னிக்கு லீவும்மா” என்று பிள்ளைகள் சொன்னாலும் அவர்களை எழுப்பி காலைக் கடன்களை முடிக்க விரட்டினார்.

டீ குடித்தார் ஆதவன். “இதோ வர்றேன் கமலா” என்று வெளியே போனார். பிள்ளைகள் குளித்து காலை டிபன் சாப்பிடத் தயாராகிவிட்டனர். “என்னம்மா அப்பாவைக் காணோம்?” தேன்மொழி கேட்டுக் கொண்டே இருந்தாள்.

தனது களிமண் நிற முகத்தினை எடுப்பாகக் காட்டும் வகையில் கருப்பு மை பூசிய தலையுடன் ஆதவன் உள்ளே நுழைந்தார். அவருக்கு பிள்ளைகள், மனைவி முகத்தில் விழிக்க கூச்சமாகவும் இருந்தது. அவரது தலையைப் பார்த்து அவர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ… என்ற ஆர்வமும் இருந்தது.

தேன்மொழி தான் முதலில் பார்த்தாள். “அய்யய்யே… அம்மா இங்கே பாரேன்… அப்பா முகம் காலேஜ் ஸ்டூடண்ட் முகம் மாதிரி இருக்கு. நல்லாவே இல்லம்மா….” என்றாள். ஒரு கணம் ஆதவன் உடலின் அனைத்து உடைகளையும் இழந்தது போல உணர்ந்தார். உடனே வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top