நம்பிக்கை

0
(0)

“இனி ஆடு மாடெல்லாம் காயிதம் மேயும்! கொக்கு நாரை யெல்லாம் உண்ணி பிடிச்சுத் தின்னும்! பட்டுப்பூச்சி மலஜலம் உறிஞ்ச அலையும்! காக்கா குருவி எல்லாம் கண்ணுல படாமப் போகும்! மரஞ்செடி வர்க்கமெல்லாம் மடிஞ்சு போகும்” காளியம்மா கிழவி பத்து வருஷத்துக்கு முன்ன சொன்னது. இப்ப ஒரு சொல்பிசகாம பலிச்சுப் போச்சே!

குருட்டுப்பய மானம் பெய்யாம ஏமாத்தி இப்படி நாடே காஞ்சு காடாப் போச்சே….

ம்ம்.. மனுஷ குத்தமா, தெய்வகுத்தமா? இதுக்கு யாரு நிவர்த்தி பண்ணப் போறாகளோ..

இங்க பாரு பனைமரமெல்லாம் பாதியிலே அணைஞ்ச பத்திக் குச்சியாட்டம் நிக்குதுக. இப்படித்தானே ஊரு உலகமெல்லாம் பஞ்சக் காடா இருக்கும்? விழுந்து சாகவாவது ஆறு குளத்தில தண்ணி இருக்கா? எல்லாம் கரும்பாறை. நஞ்சை புஞ்சையாகி. புஞ்சை வெடிச்சு புழுதிக்காடா போச்சு..” புலம்பியபடி புருசன் பிள்ளைகளோடு பஞ்சம் பிழைக்க வந்த பொன்னுத்தாய் குடும்பத்தோடு செங்கல் அறுத்து கிட்டிருக்கிறாள்.

புருஷன் மச்சக்காளை செம்மண் குவியலை வெட்டி வெட்டி இளக்கிப் போடுவான். அந்த மண்ணில் சிறு கல்லு சிண்டு சிடுக்குகளைப் பொறுக்கி பிள்ளைகள் சுத்தம் பண்ணுவார்கள்.

எட்டிப்பார்த்தால் மண்டை கிறுகிறுத்து கீழே தள்ளும் ஆழக்கிணற்றில் கிடக்கிற தண்ணியை நூறுகஜம் கயிற்றால் கமலையில் இறைப்பதற்குள் கைகள் இற்றுப்போகும். அந்தத் தண்ணீரை ஒரு சொட்டு சிந்தாமல் கொண்டு வந்து சுத்த செம்மண்ணில் ஊற்றி கெட்டிப்பாகு பதத்தில் சாந்தாக்கி தருவாள் பொன்னுத்தாய்.

அப்பன் மச்சக்காளை சாந்து சட்டிகளில் அள்ளி அள்ளித் தர பையனும் பிள்ளையும் சாந்துசட்டிகளை சுமந்து சிறுசிறு நடையில் தடுமாறி நடந்து அறுப்புக்களத்தில் சேர்ப்பார்கள் இத்தனை வேலையும் காலை ஒன்பதரை காரு போறதுக் குள்ளே முடிஞ்சிறும்.

கொஞ்சம் கூழோ. கஞ்சியோ குடித்த பின் அடுத்த கட்ட வேலை தொடங்கும்.

செம்மண் பதம் காய்வதற்குள் அதனை அச்சுப் பலகையில் இட்டு கிட்டித்து நிரப்புவார்கள். பின் வழியும் சாந்தை வழித்து அறுத்தெடுப்பார்கள். குத்த வைத்தபடி நிமிராமல் செங்கலை அறுத்தபடி நகருவார்கள். ஒரு நாளைக்கு ஐநூறு கல்லாவது அறுத்தால்தான் அந்தக் குடும்பம் அன்றாடம் அரை வயிற்றுக் கஞ்சியையாவது பார்க்கும்.

பொன்னுத்தாயும் மச்சக்காளையும் வேகுவேகுவென்று செங்கலை அறுத்துக் கொண்டிருந்தார்கள். வெயில் நெருப்பை கக்கிக் கொண்டிருந்தது. பிள்ளைகளும் அவர்கள் சத்துக்கு செம்மண் சாந்தை நிரப்பி கல்லை அறுத்துக் கொண்டிருந் தார்கள்.

“பொச கெட்டபய பொழைப்பு!

எதோ நாலு மழை பெஞ்சது. எதோ வகுத்துப்பாட்டுக்கு கூலி வேலை பார்த்தோம்! பிள்ளைகள் மதியக் கஞ்சிக்காவது பள்ளிக்கூடம் போச்சு. நாலு எழுத்து கத்துக்கிட்டுது. வளம் கொழிக்காட்டியும் கும்பிக் கஞ்சிக்கும், குண்டித் துணிக்கும் பாதகமில்லாம பொழைப்பு நடந்தது. அதுவும் கெட்டுப் போச்சு.

“மழைதண்ணி இல்லாம மக்களே மயங்கிச் சாகுது. இந்த மழையை நம்பி வெவசாயத்தை நம்பி எத்தனை நாளைக்கு அரைபட்டினி காப்பட்டினியா சாகுறதுண்ணு ஊரைவிட்டு வந்தோம். இதுவரைக்கும் கிட்ட நின்னுகூட பார்க்காத செங்கல் சூளையில வந்து இன்னைக்கு சீரழிஞ்சு செங்கல் அறுக்கிறோம்!”

“பொன்னுத்தாயி, அங்கிட்டு அடிக்கிற காத்து இங்கிட்டு அடிக்காதா, அங்கிட்டு பெய்யிற மழை இங்கிட்டு பெய்யாதா..? வா புள்ளே காலம் இப்படியேவா போயிரும்?”

முகத்தில வடியறது வேர்வையா. கண்ணீரா பேதம் தெரியாமல் நொட்டாங் கையில் தொடைத்துக் கொண்டாள் பொன்னுத்தாய்.

“அம்மா, அம்மா நான் கண்டுட்டேன், கண்டுட்டேன்” சிறுமி தங்கம் கத்தலைக் கேட்டு நிமிர்ந்தாள் பொன்னுத்தாய். “என்ன த்தா … என்ன து…?”

“அம்மா, அம்மா நாம செய்யிற செங்கல்லு ஏன் செகப்பா இருக்கு தெரியுமா.. நாம இரத்தம் மண்ணில சிந்துறதாலதான்.. தெரியுமா?”

“இல்லமா, அறுப்புக்கட்டையில நீட்டுகிட்டு இருந்த ஆணி குத்தி தங்கச்சி கையில ரத்தம் வருதும்மா…”

நீ திட்டுவேன்னு தங்கச்சி இப்படி பேச்சை மாத்தி சொல்லுதம்மா..!

மகள் வியாக்கியானமா பேசுறதுக்கு சந்தோஷப்படவா, ஆணி குத்தி ரத்தம் சிந்துறதுக்கு சங்கடப்படவா? அணிச்சையாய் ஓடி பிஞ்சுக்கையை கை கழுவுற தண்ணியில முக்கி நோகாமல் கை கழுவிவிட்டாள். அடைத்திருந்த செங்களிமண் அகலவும் இரத்தம் பொங்கியது.

பதறி மச்சக்காளை ஓடி வந்தான். பொன்னுத்தாய் சட்டென தலையில் கட்டியிருந்த முக்காட்டுத் துணியில ஒரு ஜான் கிழித்து தண்ணியில நனைச்சுக் கட்டுப்போட்டாள்.

“தாயி தங்கம், செத்த நேரம் சும்மா இரு தாயி. நீ குடிச்ச கஞ்சி எல்லாம் ரத்தமா வந்துடுச்சு”

“ம்ம் போம்மா. நீ தானே சொன்னே உழைச்சாத்தான் கஞ்சின்னு. நான் வேலை செய்யலைன்னா எப்படி கஞ்சி வரும்? அப்புறம் எப்படிம்மா இந்த வாரம் கறியும் சோறும் சாப்பிட முடியும்?”

பொன்னுத்தாயும், மச்சக்காளையும் வாயடைத்துப் போனார்கள். கண்ணீர் பொலபொலவென உருண்டது. பொன்னுத்தாய் சிறுமி தங்கத்தை தூக்கி இடுப்பில் இடுக்கி ஆறுதலாய் மர நிழலுக்குப் போனாள்.

சூளைக்கு கல்லுகள் சேர்ந்தன. அறுத்த கற்களை சேத மாகாமல் அடுக்கினார்கள்.

“ஏம்மா சந்தையில் இப்படித் தாம்மா மைசூர்பாக் அடுக்கி வச்சிருப்பாங்க?”

“ஆமா தாயி இந்த சனிக்கிழமை வாரச்சம்பளம் வாங்கினதும் உனக்கு அப்பாவை வாங்கிட்டு வந்து தரச் சொல்றேன்.”

“போம்மா எனக்கு இந்த தடவையாவது துப்பாக்கி வாங்கித்தரணும்! ராத்திரியில நம்ம வீட்டைச் சுத்தி ஊளை விடற நரிகளைச் சுட்டுக் கொல்லணும்!” என்றான் செல்வம்.

“சரி. வாங்குவோம்”

செங்கற்கள் விறுவிறுவென்று அடுக்கப்பட்டன. நாலா திசையிலும் விறகு எரிவதற்கு கால்வாய்களும் எதிர் திசையில் காற்றோட்ட சந்துகளும் அமைக்கப்பட்டன. பொழுது ஏற ஏற வேலைகளும் வேகமாய் நடந்தன. முதலாளி வந்து ஒரு பார்வை பார்த்ததும் செங்கல் சூளைக்கு மண்சாந்து பூசணும்.

மேற்கே சூரியனும் வெட்கப்பட்டு சிவந்து விழுந்தது. மச்சக் காளை கைகால்களைக் கழுவி குடிசைக் கொடியில் தொங்கின வேட்டியை உதறி அழுக்குத் தெரியாமல் மடிப்பை மாற்றிக் கட்டி முதலாளி வீட்டுக்குப் கூலி வாங்கப் போனான்.

பிள்ளைகள் அரிசி குருணை கஞ்சியை, கத்தரி வத்தல் கடிச்சுக்கிட்டு குடித்துத் தூங்கினர்.

“ராத்திரி எட்டரைக் காரும் திரும்பி போயிருச்சு. போன மனுஷனைக் காணோம்..” பொட்டக்காட்டில் ஒற்றைக்குடிசை. கருஞ்சதுர பூதமாய் உட்கார்ந்திருக்கும் செங்கற்சூளை. பொன்னுத் தாய்க்கு கஞ்சியும் செல்லலை. கண்ணும் அசரலை வெளியே வந்து நின்றாள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வெள்ளை வெளேர் நிலா வெளிச்சம் காஞ்சு கருத்தப்போன மண். அங்கங்கே இலை உதிர்ந்து நிற்கும் வேலிக் கருவேல முட்செடிகள். ரோட்டோரம் கருப்பு எலும்புக்கூடுகளாய் அய்ந்தாறு மரங்கள். பகல் வெக்கையின் மிச்ச சொச்சம் நிலா வெளிச்சத்தில் புழுங்கியது, காற்றைக் காணோம்.

“இருக்கிறதைப் பார்த்தா கிட்ட அணுசில மழையே பெய்யாது போலிருக்கே! இந்த நிலா வெளிச்சத்துக்கு ஊருக்குள்ளே இருந்தா குமரிகளும், எஞ்சோட்டுப் பொண்ணுகளும் வீட்டுக்கு வீடு தவசம் வாங்கி மழைக் கஞ்சி காச்சி அம்மனை குளுமை படுத்துவோம்! அம்மன் குளுந்தா பூமி குளிர மழையாவது பெய்யும். இந்த அத்து வானக் காட்டில் எதை நம்ப? குருட்டுப் பய தெய்வத்தையா? இந்தப் பொழைப்பையா?”

தொலைதூரத்தில் ஆள் வருவது தெரிந்தது. நடையைப் பார்த்தா மச்சக்காளைதான்.

“என்ன மச்சான் ஒரு சாமம் ஆகப் போகுது? ஏன் இம்புட்டு நேரம்?”

“என்னத்தா சொல்ல? எங்க போனாலும் நம்ம நிழலு கூட வருது. இந்தா இந்தப் பலகாரத்தைக் கொடியில கட்டிப் போடு!” கைகால் கழுவப் போனான்.

அவனுக்கு ஒரு அலுமினியத் தட்டில் கஞ்சி ஊற்றி கத்தரிக் காய் வற்றலை ஒரு கிண்ணத்தில் வைத்தாள். மீதமிருந்ததை தானும் ஒரு தட்டில் ஊற்றிக்கொண்டு உட்கார்ந்தாள்.

மவுனமாக சாப்பிட்டார்கள். “என்ன மச்சான். என்ன விஷயம். ஏன் இப்படி சோர்ந்து போயிருக்கே. என்னத்தையோ தொலைச்ச மாதிரி?”

“அட ஒண்ணுமில்ல பிள்ளை! இது வரைக்கும் அறுத்து அனுப்பின செங்கல்லெல்லாம் விலை போகலையாம். வித்த இடத்திலே இருந்து காசு வரலையாம். ஆத்து மணல் கிடைக் கலையாம். சிமெண்ட் இரும்பு விலை எல்லாம் ஏறியிருச்சாம். கட்டட வேலைக நடக்காம அங்கங்கே அப்படி அப்படியே நிற்குதாம். விற்ற செங்கல்லுக்கு காசு பெயரலையாம்..”

“இன்னும் மூணு மாசத்துக்கு செங்கல் அறுக்க வேணாம்! சூளை போட வேணாம்! இந்தா இந்த முன்னூறு ரூபாயை வச்சிகிட்டு ஊருபோய் சேருங்க. தொழில் முடக்கம் தீர்ந்த உடனே கணக்கு பார்த்து மிச்சப் பணம் தர்றேனுன்னு முதலாளி சொல்லிட்டார்.”

“அடக்கடவுளே! இந்தப் பொழைப்பிலையும் மண்ணு விழுந்திருச்சா? முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு விம்மினாள்.

பிறந்து வளர்ந்து பொழைச்ச ஊரு பொட்டலாப் போச்சு. இனி எந்த ஊரு போய் எந்தத் தொழில் பண்ண? படுத்தபடி பெருமூச்சு விட்டார்கள். உள்ளேயும் வெளியேயும் புழுக்கம் எப்போது எப்படி தூங்கினார்களோ தெரியவில்லை.

குடிசைக்குள் சிலுசிலுவென காற்று. விழிப்பு தட்டி எழுந்து வெளியே வந்து பார்த்தாள். உழுது போட்ட கரிசக்காடு போல கருமேகங்கள் அரிஅரியாய் திரண்டு கிடந்தன. செவலைமாடு போல ஒரு மேகம் கடந்து மறைந்தது. குளிர்காற்று வீசியது. அவள் முகத்தில் நம்பிக்கை மின்னல்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top