நன்றி

0
(0)

கோபால் வேப்பங்குச்சியில் பல்துலக்கிக் கொண்டே சுற்றிலும் பார்த்தான். கிணற்று மோட்டார் சத்தத்தை மிஞ்சும் அளவுக்கு ரைஸ்மில் ஓடும் சத்தம் கேட்டதும் பட்டாளத்தார் நடராஜன் அடிக்கடி சொன்னது ஞாபகத்தில் தைத்தது.

இமயமலை போர்க்களப் பகுதியைப் பற்றி சொல்லும் போது கூர்மையாய் கூம்பிப் போய் நிற்கும் ஊசியிலை மரங்களும் அதில் படிந்த பனிப் பதிவுகளும் பற்றிச் சுவாரஸ்யமாய்ச் சொல்லுவார்.

“அங்கு இருட்டுகூட ‘வெள்ளிருட்டு’ என்று சொல்லும்படியாக இருக்கும். இளம் காலை நேரத்தில் புகையும் பனிமூட்டமும் பெரிய வெள்ளாவிப் பொதி புகைவது போல் இருக்கும். உச்சி வெயிலில் பனி உருகி வழிவது மலையிலிருந்து வெண்ணெய் வழிவது மாதிரியும், நம்ம ஊர் ரைஸ் மில்லில் மிளகாய்ப்பொடி அரைக்கும் போது மலைபோல் மிளகாய்ப் பொடி குவிந்திருப்பது போலவும் பனிநீர் வடிந்த மலைமுகடுகளில் சூரியக் கதிர் தகதகன்னு மின்னும்” என்று நடராஜன் சொல்லி வரும்போதே நாமும் பட்டாளத்தில் சேர்ந்திடலாம் போல ஆர்வம் பொங்கும். கீழத்தெரு, மேலத்தெரு, நடுத்தெரு விடலைகள் நடராஜனிடம் கதை கேட்டுக் கேட்டு தெருவிற்கு ஐந்தாறு பேர் இராணுவத்தில் சேர்ந்திட்டாங்க!

“ஏண்ணே இவ்வளவு பனியில் குளித்தீர், எப்படி தாங்கிக்குவீங்க!” என்று ஒரு வாலிபன் கேட்க.

“உல்லன் ஸ்வெட்டர், அதற்கு மேல் உடல் சூடாக இருக்க அளவாக பிராந்தி; இதமாக இழுக்க விலை உயர்ந்த சிகரெட் இப்படி பல வசதிகள்” என்று அவர் சொல்லும் போதே கூடியிருந்த இளைஞர்கள் உமிழுறி நாவால் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டனர்.

“ஏன்ணே அங்க சிகரெட் குடிச்சிருக்கீங்க, தண்ணீ அடிச்சிருக்கீங்க! இங்க சிகரெட் குடிப்பதையும், தண்ணீ அடிப்பதையும் வெறுக்கிறீங்க! குடிக்கிறவங்களையும் கண்டிக்கிறீங்களே?”

“கோபாலு, அந்தப் பகுதி குளிருக்கு அது அவசியம்! உடலுக்கும் தேவை! நம்ம பகுதி வெப்பத்துக்கு அது அனாவசியம்! உடலுக்கும் ஆபத்தானது!”

“என்ணே, மிலிட்டரியில் சுகமான விஷயங்களைப் பற்றியே சொல்றீங்களே.. அங்கு சிரமங்களே இல்லையா?” –

“இருக்கு! இதெல்லாம் சிரமம் பார்க்க முடியுமா? நாட்டை காக்கிற கடமை இல்லையா? இப்போ காட்டில விவசாயம் பார்க்கிறோம். எவ்வளவு சிக்கல் சிடுக்கு இருந்தாலும் ஊருக்கு சோறு போடற வேலைன்னு நினைக்கும்போது அந்தத் துன்பங்கள் துரும்பாகிப் போகுதில்ல! நாட்டை காக்கிற வேலையும் அப்படித் தான்” என்று சொல்லும் நடராஜனது மரக்கட்டை காலிலும் ஒரு துடிப்பும் மிடுக்கும், முகத்தில் ஜொளிப்பும் ஒளிரும்!

கார்கிலில் ஊடுருவல் சண்டை நடந்தபோது பத்திரிகையில் ஒரு செய்தி – “கார்கில் பகுதியில் பணியாற்றிய பரிச்சயம் உள்ள ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் சேவை வரவேற்கப்படுகிறது” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

நடராஜன் இந்தியா – பாகிஸ்தான் போரின் போது கார்கில் கண்ணிவெடி அகற்றும் படைப்பிரிவில் பணியாற்றினார். அப்பகுதி கரடு மேடு பள்ளங்கள், ஓடைகள், புதர்கள் நிறைந்த பகுதியில் அலைந்து திரிந்து பணியாற்றிய அனுபவம் அவர் அப்பகுதியில் பணியாற்றிய அனுபவத்தினை ஊர் மக்களிடம் சொல்லச் சொல்ல அந்நிலப் பகுதி வரைபடமாக அவரது மனதில் பசுமையாகப் பதிந்து இருந்தது. அப்பகுதியில் கண்ணிவெடி நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதுதான் இடது காலை இழந்து, இருபத்தைந்து வயதிலேயே பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டியதாகிவிட்டது.

நடராஜன் தனது அனுபவத்தை குறிப்பிட்டு விண்ணப்பித் திருப்பார் போலிருக்கிறது. மறுவாரமே ஒரு இராணுவத் துணைத் தளபதியும், ஒரு டாக்டரும் கொண்ட இராணுவக் குழு அந்த கிராமத்திற்கு வந்து விட்டது.

அவருடைய அனுபவத்தினையும் ஆர்வத்தினையும் ஒரு காலிழந்த நிலையில் உடல் வலுவையும் மனத் திடத்தையும் கண்டு சிலிர்த்துப் போனது இராணுவக் குழு. நடராஜனது மருத்துவ அறிக்கையை ஃபேக்ஸில் அனுப்பி இராணுவத்தின் உயர்நிலை அலுவலர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. நடராஜனுக்கு மிடுக்கும் துடிப்பும் கூடியது.

நடராஜனது பயணம் தயாரானது. ஊர் மக்கள் கீழத்தெரு, மேலத்தெரு, நடுத்தெரு வித்தியாசமில்லாமல் வழியனுப்பக் கூடினர். கோபால் பணியாற்றும் பள்ளித் தலைமையாசிரியர் தலைமையில் வழியனுப்பு விழாக் கூட்டம்! உற்சாகமாகப் பேசி வாழ்த்துகளும், வேண்டுதல்களும் தெரிவித்து அனுப்பி வைத்தனர்!

நடராஜனது மனைவிதான் புலம்பினார்… “ஊருக்குள்ளே விவசாய லோன் வாங்கித் தர்றது, ரேஷன் கார்டு, முதியோர் பென்ஷன், பட்டா வாங்கித் தர்றது. கோர்ட் கேஸ்களுக்கு துணைக்குப் போவது என்று அலைந்து திரிந்தாலும் பொழுதடைய வீட்டுக்கு வந்துருவார். பேரப்பிள்ளைக்கு பலகாரம் பண்டம்னு வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுவார். பிள்ளைகளுக்கு இலகுவாய்ப் புரியற மாதிரி பாடம் சொல்லித்தருவார். காலம்போன கடைசியில ஏன் இப்படி வம்பை விலைக்கு வாங்கிக்கணும். சிவனேன்னு வீட்டோட இருக்கலாமில்ல! வர்ற பென்ஷனும் விளையற வெள்ளாமையும் போதுமில்ல! என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாரே…! கோபாலு தம்பி உங்கள மாதிரி ஆளுக அவருக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா?”

நடராஜன் மனைவி லட்சுமியின் புலம்பலில் நியாயம் தெரிந்தாலும், நடராஜ அண்ணன், தைரியமும், சேவையுணர்வும் பாராட்டப்பட வேண்டியது தானே! வீடா, நாடான்னா நாடு தானே உசத்தி கோபால் தனக்குத் தானே பேசிக் கொண்டான்.

பொய்க்காலோடு போனாலும் நடராஜன், உயிரைப் பணயம் வைத்து தான் போராடி இருக்கிறார். போய் பதினைந்தாம் நாள் கடிதம் வந்தது. அடுத்த பதினைந்தாம் நாள் சம்பளப் பணம் வந்தது. கார்கில் போர்ச்செய்திகளை வெளியிட்ட தினசரிகள், நடராஜனது வீரத்தை, தியாகத்தை, முந்தைய அனுபவங்களை தற்போதைய மன தைரியத்தை வெகுவாகப் பாராட்டியும் செய்திகளை வெளியிட்டன.

நாற்பதாம் நாள் தந்தி வந்தது – நடராஜனது உடல் வருவதாக அன்றைய மாலைப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் நடராஜன் பற்றிய செய்திகளும் அவரது படமும், அவரது குடும்பத் காரது படங்களும் வெளியாயின. ஊரே மூச்சடைத்துப் போனது போல மவுனித்து துக்கித்தது. ஒவ்வொரு குடும்பத்திலும் விழுந்த மரணம் மாதிரி நெஞ்சடைத்து நின்றது.

நடராஜனது ராணுவக் குழு கார்கில் குன்று பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றிக் கொண்டே ஊடுருவல்காரர்களை விரட்டிச் சென்றது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியை நெருங்குகையில் கண்ணி வெடி நீக்கும் கருவியின் உணர்விலிருந்து தப்பிய கண்ணி வெடி ஒன்றில் நடராஜன் வலது காலை வைக்கத் தூக்கி எறியப்பட்டு பாறைமேல் விழ உடல், முகம் எல்லாம் சிதைந்தன. வெற்றியின் விளிம்பில் இந்த விபத்து கோரமாய் இருந்தது.

அவரது உடைகளிலிருந்த விவரக் குறிப்புகளிலிருந்துதான் அடையாளம் காணப்பட்டார். சிதைந்த உடல் உறுப்புகளைத் தைத்து ஓரளவு உருவப்படுத்தி, சிதைந்த முகம் தொப்பியால் மூடப்பட்டிருந்தது. மரமும் அலுமினியச் சட்டகமும் கொண்ட கண்ணாடி பெட்டகம் போன்ற பேழையில் அவரது உடல் வந்தது. மாநில அமைச்சர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், மாவட்ட உயரதிகாரிகள் புடைசூழ உடல் கிராமத்திற்குள் நுழைந்ததும் ஊரே அழுது கதறி அன்னம்பாரியது.

நடராஜனது தீரமிக்க வீரமரணம் குறித்த விவரமான அறிவிப்பும், அவரது தியாகமும் அழுவதற்கல்ல, போற்றி மதிக்கத்தக்கது என்ற வகையிலான அறிவிப்புகள் ஊர் மக்களின் அழுகையைக் குறைத் தாலும் நடராஜனது குடும்பத்தார் மனைவி, மகள், மருமகன், பேத்தியரின் அழுகையை அடக்க முடியவில்லை. உயிரிழப்புக்கு உடனடியாக என்ன பரிகாரம் செய்ய இயலும்!

பேண்டு வாத்தியம் இசைக்க துப்பாக்கிக் குண்டோசை முழங்க இராணுவ மரியாதையோடு, இரங்கல் கூட்டத்திற்குப் பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஊர்ப் பொது இடத்தில் அடக்கம் செய்து நினைவு மண்டபம் கட்டத் தோதவாக சமாதி எழுப்பி அதில் அமரதீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்படுவதாக இருந்தது.

“அந்தா இந்தாவென்று ஒரு வருஷம் ஓடிவிட்டது” – கோபால் பெருமூச்சு விட்டபடி மோட்டார் குழாயில் வாய் கொப்பளித்துக் குளித்தான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top