நன்னயம்

0
(0)

ஊரெங்கும் ஒரே அமைதி. பயத்தின் மவுன அழுத்தம். ஊமை வெயிலின் புழுக்கம், ஒருபுறம் – நிம்மதியை சுவாசிக்க இயலாத நிசப்தம், மறுபுறம் – “அடி, வெட்டு, நொறுக்க, அள்ளு, பிடி.” கலவர மொழியில் ஊரின் கண்விழி பிதுங்கி நின்றது.

அந்த ரிக்ஷாக்காரர் வெகு வேகு வென்று வண்டியை மிதித்தார். உடலெல்லாம் வேர்வைப் பொழிவு பனியன் தொப்பலாக நனைந்து உடலோடு ஒட்டிக் கொள்ள வரிச் செலும்புகளின் வரிவடிவம் தெரிந்தது. நடு முதுகில் வகிடெத்தது போல் உழைப்பு நீர் ஓட்டம். மேல் மூச்சு கீழ் கீழ் மூச்சு வாங்க ரிக்ஷாவை மிதித்தார். முகத்தில் ஒழுங்கற்று வளர்ந்து குறுந்தாடியாய் உருவெடுத்த கோரை முடியும், ஒழுங்குபடுத்தாத தலைமுடியில் சுற்றப்பட்ட ஈரிழைத் துண்டும், நிலை கொள்ளாது அலைபாயும் கண்களும், அந்த ரிக்ஷாக்காரர் மனநிலை பாதிக்கப்பட்டவரோ எனச் சந்தேகம் தந்தது.

ரிக்ஷாவில் பயணித்து வரும் ராம்பிரசாத் சிங்கும், அவரது அப்பா விஸ்வநாத்சிங்கும் வாழ்வின் இறுதி நிமிடங்களில் சஞ்சரிப்பது போல் நிம்மதியின்றி துடித்துக் கொண்டு இருந்தனர்.

“ஹரே பகவான் நல்ல நேரமோ, கெட்ட நேரமோ தெரியலை! ஒரு கிறுக்கு ரிக்ஷாக்காரன்கிட்ட மாட்டிக்கிட்டமோ என்னமோ? தெரியலை, அவனும் அமானுஷ்யமான வெறியோடு ரிக்ஷாவை மிதிக்கிறான்! என்ன நடக்கப்போகுதோ, தெரியலை! இவ்வளவு சிரமமும் உன்னாலதான்டா ராம்பிரசாத்! நீ நல்ல பிள்ளையா, அந்தக் கலகக்காரக் கூட்டாளிகளோடு சேராமல் இருந்திருந்தால் எதுக்கு இப்போ ராமேஸ்வரம் வர்றோம்?

நீ துர்கா பூஜா ராம்லீலா விழாவில் வேற மதக்காரங்ககிட்ட கலவரம் பண்றவங்களோட சேர்றதினால தானே. நாம இங்கே கிளம்பி வந்தோம்? நீ நல்ல பிள்ளையாட்டம் காலேஜ் படிப்புண்டு நீ உண்டுண்ணு இருந்திருந்தா இந்த நிலைமை வர்ராதில்ல?

சரி, ராமேஸ்வரம் வந்தோம், சாமி கும்பிட்டோம்னு ஊருக்கு புறப்பட வேணாமா. எனக்கு குறைஞ்ச ரத்த அழுத்தம் இருந்தா என்ன என் பொண்டாட்டி பிள்ளைங்க முன்னால ராமேஸ்வரத்தில அந்த பகவான் ராம் காலடி பட்ட இடத்திலேயே செத்துட்டுப் போறேன்! நேரே அந்த புண்ணியத்தை அடைஞ்சிட்டுப் போறேன்!

இப்போ என்னடான்னா, யாரோ ஒரு டாக்டர் சொன்னான்னு, பொண்டாட்டி பிள்ளையை ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன்ல தனியே விட்டுட்டு நாம அப்பனும் மகனும் இங்கே அனாதையா கலவரத்தில சாகப் போறோம். உங்க அம்மாவும் தங்கையும் பாஷை தெரியாத தேசத்தில் அனாதையா மாட்டிகிட்டு முழிக்கப் போறாங்க! ஹரே பகவான், எல்லாம் அடங்காப் பிள்ளை உன்னால தானே…?

“பிதாஜி அமைதியா இருங்க! உங்க உடம்பை கவனிச்சுக்குங்க! நமக்கு ஒண்ணும் ஆகாது! ராம்நாத்புரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு பத்திரமாப் போயிருவோம். நீங்க எதை நினைச்சும் புலம்பாமல் கண்ணை மூடி இருங்க பிதாஜி, நமக்கு ஒன்னும் ஆகாது” அப்பாவும் மகனும் இந்தியில் பேசிக் கொண்டார்கள்.

ரிக்ஷா அந்தத் தெரு பெரிய சாலையை சந்திக்கக் கூடிய தெருமுனைக்கு பத்தடி தூரத்தில் நின்றது.

“ஹரே பாபு என்ன ஆச்சு? ஏன் ரிக்ஷாவை நிறுத்திட்டே?”

“ஒண்ணுமில்ல சேட்ஜி, ரிக்ஷா இங்கே நிற்கட்டும். மெயின் ரோட்டில் கலவரம் நடக்குதாம். இந்த ரோட்டு வழியாவே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிறலாமான்னு பார்த்துட்டு வர்றேன்.”

காதோரம் செருகியிருந்த ஒரு பீடியை எடுத்தார். அது | வேர்வையில் நனைந்திருந்தது. லேசாக கைலியில் துடைத்து விட்டு, பற்ற வைத்து ஊதிக் கொண்டே தெருமுனைக்கு ரிக்ஷாகாரர் விரைந்தார். இடப்புறமும் வலப்புறமும் பார்த்தார். இடப்புறம் ரோட்டில் சத்தம் ஏதுமில்லை! வலப்புறம் அரண்மனை போகும் சாலையில் கூச்சல் குழப்பம்! பீடியை குப்குப்பென்று இழுத்தபடி விரைவாகத் திரும்பினார். கடைசி இழுவையை உள்ளிழுத்து பீடித் துண்டை சாக்கடையில் சுண்டி எறிந்தார். கடைசி இழுவையில் தொண்டை கமறலை சரிசெய்ய காறி உமிழ்ந்துவிட்டு ரிக்ஷாவில் ஏறிமிதித்தார்.

இவ்வளவு நேரம் ரிஷாவிற்குள் மூச்சை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அப்பாவும் மகனும் நிம்மதியாக சுவாசித்தனர்.

“ஹரே ராம் என்ன ஆச்சு?” கவலைப்படாதீங்க”! ரயில்வே ஸ்டேஷன் போகிற வழியில்தான் கலவரமாம்! நான் உங்களை வேறொரு வழியில் கொண்டு போய் சேர்த்து விடுகிறேன்.”

“பாபு, ரயில் வர்ற நேரமாச்சு. கொஞ்சம் ஜல்தி மிதிக்கிறான். நம்மலை ஜல்தி கொண்டு போய் சேர்க்கிறான்! உங்களுக்கு பகவான் உதவி செய்கிறான்.” பெரியவர் தனது பயத்தினை நயமாக வெளிப் படுத்தினார்.

“கவலைப் படாதீங்க சேட்ஜீ, நான் ஜல்தி கொண்டு போய் சேர்த்திடுவேன்.”

ரிக்ஷா பாபு ஏன் இந்த கலாட்டா?” “ஒன்னுமில்லை ஜி! ரெண்டு ஜாதிக்காரங்களுக்குள்ளே தங்கள் வலிமையைக் காட்ட பேரணி நடத்திறதில பிரச்சினை! இந்த பிரச்சனையை ரவுடிகள் பயன்படுத்திக் கொண்டு கடைகளை உடைச்சு கலாட்டா பண்ணி சாமான்களை எல்லாம் அள்ளிக்கிட்டுப் போறான்க!”

அரே நம்ம மாநிலத்தில் தான் மதக்கலவரம்னா, இங்கே ஜாதிக் கலவரமா? நம்மலை படைச்ச பகவானுக்கு ஜாதி ஏது? மதம் ஏது? எல்லாம் ஒண்ணுதானே? ஏன் இந்த மனுசனுங்க இப்படி சண்டை போட்டு. சாகறான்க? நம்ம பையன் இந்த மாதிரி கூட்டத்திலச் சேரக்கூடாதுன்னுதான் நாம் ராமேஸ்வரம் வந்தது. இங்கேயும் கலவரமா? ஹரே பகவான்! விஸ்வநாத் மனம் புழுங்கி அங்கலாய்த்தார்.

ரிக்ஷாகாரர் கழுத்து நரம்பு புடைக்க வண்டியை மிதித்தார். வேர்வை வெள்ளம்! தெருமுனை முன்னே மீண்டும் வண்டியை நிறுத்தினார்.

தூரத்தில் காட்டுக் கூச்சலாய் சத்தம். துப்பாக்கி வெடிக்கும் ஓசை மெல்ல வண்டியை இழுத்து வந்து பிரதான சாலையிலிருந்து விலகி எதிர் சந்தில் நுழைந்தார். தெருவில் கதவோரமும் ஜன்னலோரமும் கவலை தோய்ந்த முகத்தோடு ஜனங்கள், ஒளிந்து ஒளிந்து பார்த்தனர். ஒவ்வொருவரின் முகத்திலும் பயபீதி.

தெரு ஜனங்களின் முகக் குறிப்பு விஸ்வநாத் சிங்கிற்கு அச்சத்தினை அதிகப்படுத்தியது. தனது பைஜாமா பையிலிருந்து துளசி மாலையை எடுத்து உருட்ட ஆரம்பித்தார். ரிக்ஷா சந்து சந்தாய் செல்லும் தெருக்களை கடந்து விரைந்தது.

ஆண்டுதோறும் துர்கா பூஜையை ஒட்டி நடக்கும் மதக்கலவரங் களை வீரவிளையாட்டாகக் கருதி வந்த ராம்பிரசாத்சிங்கிற்கும் இப்போது பயம் தொற்றிக் கொண்டது. மனித உயிரின் மதிப்பு புலப்பட ஆரம்பித்தது. மொழி தெரியாத இடத்தில் மாட்டிக் கொண்டோம் என்ற நினைப்பு! அவர்களது பாதுகாப்பின்மையை உணர வைத்தது. ராம்பிரசாத் கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டான். வினாடி முள்ளோடு அவனது கண்ணும் இதயமும் பரபரத்து படபடத்தது. வண்டி இன்னும் இரண்டு குறுக்குத் தெருக் களை கடந்து ஒரு பிரதான சாலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

ரிக்ஷாக்காரருக்கு காலெல்லாம் ஓய்ந்து வந்தது. வேர்வைப் பொழிவின் பிசுபிசுப்பு. வண்டியை மேற்கொண்டு மிதிக்க சள்ளை யாக இருந்தது. வண்டியை ஒரு வீட்டின் முன் நிறுத்தி கொஞ்சம் தண்ணீர் வாங்கிக் குடித்தால் தேவலை என்ற உணர்வு.

ஒரு வீட்டின் முன் வண்டி நின்றது. அந்த வீட்டுக்காரர் பயந்து பயந்து ஜன்னல் வழி எட்டிப் பார்த்தார்.

“ஒண்ணுமில்லை கொஞ்சம் செம்பில தண்ணீ கொடுங்க, குடிக்க.”

வீட்டுக்காரர் தயங்கி தயங்கி ஒரு செம்பில் தண்ணீர் கொடுத்தார்.

“சேட்ஜி உங்களுக்கும் தண்ணீ வேணுமா?” ரிக்ஷாக்காரர் நா வறண்டு போய்க் கேட்டார். அவர்களுக்கு வாயில் வார்த்தைகள் வரவில்லை. வேண்டாம் எனத் தலையாட்டினார்.

குண்டு சோடா பாட்டிலில் குடிக்கும்போது குண்டு நழுவி நழுவி உருள்வது போல் கடக்கடக்கென்று தண்ணீர் குடிக்கையில் கழுத்து சங்குக்காய் மேலும் கீழும் ஏறி இறங்க ஒரே மூச்சில் ஒரு செம்பு தண்ணீரையும் குடித்தார் ரிக்ஷாக்காரர். தண்ணீர் உள்ளே போகவும் ஒரே வேர்வைப் பிரவாகம். தலையில் கட்டியிருந்த ஈரிழைத் துண்டை உதறி முகத்தை, உடலை அழுந்தத் துடைத்தார். தண்ணீர் செம்பை கொடுத்து விட்டு ஒரு பீடியைப் பற்ற வைத்தார்.

விஸ்வநாத்சிங், டாக்டர் கொடுத்த மாத்திரையின் அரைத் தூக்க நிலையில் கைகள் துளசி மாலையில், லயித்தபடி இருந்தார். ரிக்ஷாக் காரர் பீடியை உறிஞ்சி புகையை விட்டார். ராம்பிரசாத்சிங்கிற்கு ரயில் நினைவு வர, கடிகாரத்தைப் பார்ப்பதும், ரிக்ஷாக்காரரின் முகத்தைப் பார்ப்பதுமாக இருந்தான்.

பார்ப்பதற்கு ஒரு கிறுக்கனைப் போல் தோன்றினாலும், ரிக்ஷாக்காரரின் விரைவையும் விடாமுயற்சியையும் உணர்ந்ததால் அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை.

ராம்பிரசாத்சிங்கின் மனவோட்டத்தினை உணர்ந்து கொண்ட ரிக்ஷாக்காரர், “இதோ ஜீ இன்னும் பத்து நிமிஷத்தில் போயிடலாம். கலவரப் பகுதியைத் தாண்டிவிட்டோம்” என்றபடி ரிஷாவை மிதித்தார். சந்திலிருந்து வண்டி பிரதான வீதியை எட்டும் போது ஒரு சிறு பள்ளத்தில் இறங்கி ஒரு குலுக்கலோடு ஏறியது. விஸ்வநாத்சிங் விழித்துக் கொண்டார்.

பிரதான வீதியில் போலீஸ் நடமாட்டம் இருந்தது. அங்குமிங்கும் சைக்கிள்களும் பிற இரண்டு சக்கர வாகனங்களும் போய்வந்து கொண்டிருந்தன. அப்பாவுக்கும் மகனுக்கும் முகத்தில் நிம்மதி ஒளிர்ந்தது.

“பிதாஜி. இந்தக் கலவரத்தின் கொடுமையை நம்மளை மாதிரி வழிபோக்கர்களும், சாதாரண ஜனங்களும் படற அவதியையும் இன்னிக்குத்தான் உணர்றேன்! இனிமேல் நான் அந்தக் கலவரக் காரக் கூட்டாளிகளோட சேரமாட்டேன்! இந்த மாதிரி புண்ணிய ஸ்தலங்களுக்கு வந்தா தன்கிட்ட உள்ள ஒரு கெட்ட வழக்கத்தினை விடறதா சங்கல்பம் எடுத்துக்குவாங்க! இன்னிக்கு பிதாஜி உங்க விருப்பப்படியே அடுத்த மத மனுஷங்களுக்கு சங்கடம் தர்ற எந்தக் காரியத்தையும் எந்த சந்தர்ப்பத்துலயும் செய்யமாட்டேன். இது அந்த பகவான் ராம் மீது சத்தியம்!” என்று கண்ணீர் பொங்கினான் கசடெல்லாம் கழுவியது போல முகத்தில் ஜொலிப்பு!

“அரே, மேரா பேட்டா இப்பத்தான் நீ மனுஷன்! ராமின் உண்மை பக்தன்!” மகனை கட்டித் தழுவி புளகாங்கிதப்பட்டார் விஸ்வநாத்சிங். தூரத்தில் ரயிலின் கூவல் சங்கநாதம் போல் ஒலித்தது.

ரிக்ஷாக்காரர் உற்சாகத்துடன் வண்டியை மிதித்துக் கொண்டிருந்தார். ரிக்ஷா ரயில்வே ஸ்டேஷனை அடைந்தது.

அப்பாவும் மகனும் உற்சாகமாக இறங்கினர். “அரே ரிக்ஷாவாலா பாபு. உங்க பேர் என்ன? சொல்லலையே?” என்றபடி பாக்கெட்டில் கையை விட்டார்.

“சேட்ஜி நம்ம பேர் அப்துல் முத்தலீப்” என்று இந்தியில் சொன்னார். “ஹரே பகவான் உங்களுக்கு இந்தி தெரியும்! விஸ்வநாத்சிங் பூரித்தவேளை…

“ரிக்ஷாகாரருக்கு இந்தி தெரியுமென்றால் அப்பாவும் அவனும் இந்தியில் பேசியதை எல்லாம் கேட்டிருப்பாரே! நான் அவரது மதத்தாருக்கு எதிராக நடந்துக்கிட்டதை எல்லாம் அறிந்திருப்பார் சிந்தனை மின்னல் ஒரு கணம் ராம்பிரசாத்தை கல்லாக்கி உயிர்ப் பித்தது. மனம் நெகிழ்ந்து போய் முத்தலீப்பின் கையைப் பற்றினான்.

விஸ்வநாத்சிங் நூறு ரூபாய் தாள் ஒன்றை கொடுத்து, “இது உங்க உதவிக்கு ஈடாகாது. இருந்தாலும், நம்ம அன்பின் அடையாளமாக இதை வச்சுக்குங்க! ஒரு முறை குடும்பத்தோட பனாரஸ்க்கு வந்து தங்கிப் போகணும்!

“ஜி, இவ்வளவு ரூவா எதுக்கு! இருபது ரூபாய் கொடுத்தா போதும்! காசுக்காக இவ்வளவு தூரம் சிரமப்பட்டு மிதிக்கலை! ரெண்டு வருஷத்துக்கு முன்னால பம்பாய்க்கு வேலை தேடிப்போன என் மகன் மதக் கலவரக் கும்பல்கிட்ட சிக்கி செத்தான். இது மாதிரி வேரெவருக்கும் ஆகக்கூடாது என்ற எண்ணம்! மனுசர் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுணுங்கிற நினைப்புதான் இவ்வளவு தூரம் ரிஷா மிதிக்க எனக்குத் தெம்பைத் தந்தது. கண்ணோரம் மகனது ரத்தம் துளிர்க்க முத்தலிபு இந்தியில் சொன்னார்.

அப்பாவும் மகனும் உருகிப் போய் நின்றனர். ஸ்டேஷனில் ரயில் நுழையும் சத்தம். மூவரும் வேகமாக ஓடினர். ரயிலில் விஸ்வநாத் சிங்கின் மனைவியும், மகளும் கையசைத்து, நின்றதும் அந்தப் பெட்டியில் அப்பாவும் மகனும் ஏறினர்.

விஸ்வநாத்சிங் தன் மனைவியிடம் சொன்னார். “அதோ அவர் தான் ராம் அவுதார் அப்துல்லா! அவர்தான் ரிக்ஷாவாலாவாக வந்து நம்மளைக் காப்பாற்றினார்!”

மனைவியும், மகளும் நன்றியோடு கைகூப்பினர். ரயில் புதிய உற்சாக கோஷமெழுப்பி புறப்பட்டது. முத்தலீபு ஆழ்ந்த நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். அதில் அவரது மகனின் ஆன்மா கலந்திருந்த சூடு பரவியிருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top