நனச்சு அடிச்சா நாலு பக்கந் தெறிக்கும்…

3.5
(2)

இப்படி நடக்கும் என்று நேற்றிரவு செல்வம் எதிர்பார்த்திருக்க மாட்டான். மைப்பூசி காகித்தால் துடைத்தெடுத்ததான வானத்தின் அழகில், கல்பனாவின் கண்களைப் போல சிமிட்டுகிற நடசத்திரங்களின் குறுகுறுப்பில் ஒற்றைப் பாய்மரப் படகின் பாய்களைப் போல நகர்கிற தேய்பிறை நிலவின் மூக்கினில் இவன் வாழ்கிற நகரத்தின் மேற்கே மலையில் விழுகிற அருவியைக் கயிறாக்கி கல்பனாவோடு ஊஞ்சலாடிய கனவைக் கலைத்த நாளிது.

கல்பனா., பல வீட்டுத் தாய்மார்கள் தன் மகனுக்கு மனைவியாய் வரப்போகிறவள் காலண்டர்களில் வருகிற மகாலட்சுமி மாதிரி இருக்க வேண்டுமென விரும்புகிற அழகு அவள் இல்லை என்றாலும் அவளது கண்கள் யாரையும் சில நுண்விநாடிகளில் வசியம் செய்துவிடும். அந்தக் கண்களோடு அவள் கொஞ்சிப் பேசுகிற வார்த்தைகள். தோட்டத்தில் வளர்க்கிற வேட்டைநாயின் வயிறைப் போன்ற அவளின் இடை வாகு. வாலிபத்தைத் தொட இருக்கிற ஜல்லிக்கட்டுக் காளையின் நடையழகை மிஞ்சுகிற அவளின் பின்னழகு, அவள் அணிகிற எந்த ஆடையாக இருந்தாலும் அவளது மார்பங்களை கவர்ச்சியுறச் செய்கிற அந்தப் பாங்கு.. பக்கத்துவீட்டில் அனாதையாய் குடியிருக்கும் செல்லாத்தா அப்பாயி கூட கலபனாவைச் சில சமயங்களில்..” ஏண்டி சும்மாவே இருக்க மாட்டீயா, எப்பாப்பாரு மாருல நோண்டிக்கிட்டே இருக்க, அங்கென்னாருக்கு.. ச்சும்மா துணிய இழுத்துக்கிட்டேவும் போடியங்கிட்டு.. வெரலொடிக்கமாட்டாம..” என வையும். அடடா இந்த அவளின் மாராப்பை சரி செய்கிற பாங்கே போதும் இளைஞர்கள் அவள் பின்னால் அணிவகுக்க. இப்படியொருத்தி செல்வத்திற்கு கிடைத்த சின்னக்கோபம் செல்வத்தின் நண்பன் சின்னச்சாமிக்கு இருந்தது. ஆனால் சின்னச்சாமிக்கு கல்பனாவின் மீது காதலோ மற்ற வேறெதுவுமோ இல்லை.

அந்தச் சின்னச்சாமி தான் இந்த நாளில் செல்வத்தின் கனவைக் கலைத்தவன், காணாமல் போயிருந்தான். இப்பொழுது அவனைத் தேடுகிற தலைவிதி செல்வத்திடம் ஈ என்று பல்லைக் காட்டியது.

சின்னச்சாமி ஒல்லியாய் உயரமாய் இருப்பான். கொஞ்சம் பார்க்க அம்சமான ஆள். வீட்டிற்கு ஒத்தப்பிள்ளை. சுருக்கென்று கோபப்படுகிற அவனுக்கு அவனது மூக்கும் காதுகளும் அவனைக் கொஞ்சம் துடுக்கானவனாய்க் காட்டின. இப்பொழுது அவன் அம்மாவைத் தவிர உறவென்று சொல்லிக் கொள்ள ஆட்கள் இருந்தாலும் அவர்கள் இல்லாத கணக்குத்தான். அவன் அப்பா இருந்தபோது வந்து ஒட்டி உறவாடியவர்கள் அவர் இறந்த பின்பு இவர்களை எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. எல்லாமே செல்வமும் செல்வத்தின் குடும்பமும் தான் அவர்களுக்கு.

செல்வத்திற்கு ஆன்மீகத்தில் நாட்டம் கூடுதல். அவன் விரும்புகிற ஸ்ரீலஸ்ரீசித்தியானந்தா சாமியார் மீது என்னதான் குற்றச்சாட்டுகள் வந்தாலும் நாத்திகம் பேசுகிற உலகில் ஆன்மீகத்திற்கு கிடைக்கிற பரிசு இதுதான் என்று தன்னைத்தானே தேற்றிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் கிடைக்கிற இடங்களில் இதைப் பிரச்சாரமும் செய்வான். எப்பொழுதும் பொழுதுவிடிய எழுந்து அவனது அகலஞ்சகலமான நெற்றியில் காவிப் பொட்டை நெடுக்காக இழுத்துவிட்டு நெடுஞ்சாண்கிடையாக அவனது குருவின் படத்தின் முன்னால் விழுந்து எழுந்து அவன் அம்மாவை ”அம்மா..” என்றழைக்கையில் இப்படி ஒருபிள்ளை பிறந்ததே கொடுப்பினை என்று பூரித்துப்போவாள் செல்வத்தின் அம்மா சிவகாமி. பெரியமுகமும் நீள மூக்கும் கொஞ்சம் உப்பிய வயிறும் நெற்றி ஏறிய மயிரும் என அவனைப் பார்க்கையில்,..

“கொஞ்சம் செவப்பா இருந்தா நீ ஐய்ய வீட்டாளுகதேன்”, என்று சொல்கிற தங்கை ராதிகாவைப் பார்த்து சிறிதாக சிரித்து பெருமிதத்தோடு,

”ஐய்யன்ல கருப்பா ஆள் இல்லைன்னு எவய்ஞ் சொன்னது.?”, என்று கேட்டுவிட்டு தானும் ஒரு ஐய்யன் என்கிற நினைப்பில் வாழ்பவன்.

இன்று இரவு கல்பனாவின் அப்பா அம்மா தங்கை மூவரும் வீடு திரும்புவதற்குள் ஒரு முறையாவது அவளோடு இருந்து விட வேண்டும் என்பது செல்வத்தின் ஆசை. இது அவனின் பல நாள் முயற்சி, இப்பொழுது கல்பனாவும் அதற்குச் சம்மத்திருக்கிறாள். இந்த மாதிரியான சந்தர்ப்பம் மீண்டும் வாய்க்குமா எனத் தெரியாது என்கிற வருத்தம் செல்வத்திற்கு இருந்தது.

இந்தச் சின்னச்சாமியை எப்படி எங்கே போய் தேடுவதென்று தெரியவில்லை, ஏன் அவன் தொலைந்து போனான் என்று யாரிடம் போய்க்கேட்பது..?, இந்த முடிவை அவன் எடுப்பதற்கான காரணமென்ன..?, உண்மையிலேயே தொலைந்து தான் போனானா..? சின்னசாமியின் அம்மா அப்படித்தான் சொல்கிறாள். குழப்பத்திலிருந்தான் செல்வம்.

இந்த மட்ட மத்தியானத்திற்கு முன்னதான மஞ்சள் வெயிலின் மென்மையான உக்கிரம் எழுப்பும் வியர்த்தலை விடவும் மனசு செல்வத்திற்கு மிகவும் புழுக்கமாயிருந்தது. அவனது யமஹா பைக்கும் காலையிலிருந்து இவன் திருகிய திருகில் தன்னைச் சமாளித்து உர் உர் என்று ஓடிக்கொண்டே இருக்கிறது.

நேற்று இரவு முழுவதும் கல்பனாவின் நினைவாகவே இருந்ததால் தூக்கமில்லாத உடம்பு அலுப்பும் சோர்வும் செல்வத்தின் கண்களை இறுக்கியிருந்தது. சின்னச்சாமி என்கிற அவன் காணாமல் போகாமலிருந்தால் இந்த அலுப்பு அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. நலிந்து போன தொழிலாயிருந்தாலும் அவன் நடத்துகிற தேன்மொழி சோடா கம்பெனியில் இருநூறு பாட்டில்களை ஒரே மூச்சில் சுத்தி கேஸ் ஏத்தி முடித்திருப்பான்.  என்ன இருந்தாலும் அவன் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் தொலைந்து போனது தவறு தான்.

இந்தச் சின்னச்சாமி சொல்லிவிட்டாவது போய்த் தொலைந்திருக்கலாம். அப்படி ஒன்றும் அவன் தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய ஆள் இல்லை செல்வத்திற்கு. செல்வம் எதைப் பேசினாலும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வெறுப்பேற்றுபவன். அதோடு மட்டுமல்லாமல் செல்வத்தின் தங்கை ராதிகா மீது சின்னச்சாமி ஒருகண் வைத்திருப்பதாக சந்தேகமும் இருந்தது செல்வத்திற்கு.

ராதிகா ரொம்பவும் அழகானவள் இன்னெல்லாம் சொல்லமுடியாது ஆனால் நம்பிக்கை மிஞ்சியவள். தன்னை அழகாய் காட்ட அவளுக்குப் பிடிக்காது. நல்லா கிண்டலடிக்கும் தொனியில் யாரையும் மிரட்டிவிடுவாள். செல்வத்திற்கு எக்குத்தப்பாய் இருப்பாள். சின்னச்சாமிக்கு செல்வத்தின் நெருக்கத்தை விடவும் இவளோடு நெருக்கந்தான். காதல்ன்னு சொல்லிட முடியாது. ராதிகாவின் குணமும் அவளது அலங்காரத் தொனியும் எந்த ஆணையும் ஈர்த்துறாதிங்கிற நெனப்பு செல்வத்திற்கிருந்தது;

“டேய் சாமியாருப்பயலே குருவுக்கேத்த சிஷ்யன்டா நீ.. பேசுறதெல்லாம் பிரம்மசர்யம் செய்யுறதெல்லாம் லோலாய்த்தனம்..” என்று செல்வத்தைக் கடுப்பேத்துவான் சின்னச்சாமி. சில நேரங்களில் நெஞ்சுச் சட்டையைப் பிடித்து உருளுவதும் ஆட்கள் விலக்கிவிட்ட பிறகு ஆளுக்கொரு திசையில் நின்று இருவரும் மாறி மாறி ஊளையிடுவதும் இவர்களுக்குள் சகஜமான ஒன்று.

“லேய் என்னிக்காவது ஒருநா ஏங் குருநாதனத் தேடி வருவடா நீ.. ஏன்னா ஏங் குருநாதன் மகிம அப்படி… அது மட்டும் நடக்கட்டும் ஒன்ன வெளக்கமாத்த நனச்சி அடிக்கிற அடில நீ நாலா பக்கமும் தெரிச்சு ஓடல.. என்னாண்டு கேள்றா..” என்பான் நீண்ட மூக்கைத் துருத்திக் கொண்டு செல்வம்.

“ போடாப் போடா அப்படி ஒன்னு நடந்தா.. அப்ப வோம் நெலமய நீயே யோசிக்க முடியாதுடா.. க்கேம்.”, என்பான் சின்னச்சாமி எகத்தாளமாய் கைகளை முறிக்கிக் கொண்டு.

இப்படிப்பட்ட சின்னச்சாமியை இவன் ஏன் தேட வேண்டும். என்ன ஏது என்று ஆராய்வதெல்லாம் சின்னச்சாமிக்குக் கிடையாது. யார் எதைப் பேசினாலும் அதற்குள் வியாக்கனம் பேசுவது அவனுக்கு கைவந்த கலை. அவன் வளர்ப்பு அப்படி. தன்னைத் தேடிவருபவர்களிடம் எதையாது பேசி காசைக் கரந்து விடும் செத்துப் போன அவனது அப்பாவின் காத்து அது. என்ன வியாக்கனம் பேசி யாரோடு சடைத்துக் கொண்டு வந்தாலும் திரும்பப் போய் ஒட்டிக் கொள்வான். விழுங்கவும் முடியாத துப்பவும்  முடியாத வகை அவன். அதையெல்லாம் தாண்டி இருவருக்குமான குடும்ப உறவு என்பது தொடுத்துக் கொண்டிருக்கிறது. வேற வேற சாதியானாலும் இவனுகளது அம்மாக்களுக்கு இவனுகளை விட்டால் வேற வழியுமில்லை.

செல்வத்தின் போன் அடித்தது. சின்னச்சாமியின் அம்மா அவன் வீட்டு வாசலிலேயே  காத்திருப்பதாகவும் சோறு தண்ணி ஏதும் உண்ணாமல் மயங்கும் நிலையில் இருப்பதாகவும் கல்பனா அவனுக்குத் தகவல் சொன்னாள். செல்வமும் அவளும் அன்யோன்யமாய் இன்று பேசுவதற்கான சூழல் இவன் காணாமல் போனதால் இவனைத் தேடுவதற்கான படலமாய் மாறிப்போயிருக்கிற கடுப்பில் இவன் இருந்தான். கல்பனாவின் குரல் இவனுக்கு சற்று ஆறுதலாய் இருந்தது. இருந்தாலும்..

”உனக்கு மட்டும் எப்படித் தான் இப்படிப்பட்ட ஆட்கள் கிடைக்கிறார்களோ.. உன்னையெல்லாம் நம்பி..” என  செல்வத்தை கல்பனா வேறு போனில் கடுப்பேத்தினாள்.  கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது செல்வத்திற்கு. இதுவரை பலமுறை போன் பண்ணிவிட்டாள். செல்போன் வேறு பேட்டரி சார்ஜ் குறைந்து கொண்டே வருகிறது. இது செத்துத் தொலைவதற்குள் அவனைக் கண்டுபிடித்து விட வேண்டும், இல்லையென்றால் கல்பனாவின் வசவுகளை வாங்கிகொண்டாவது இருக்கிற வாய்ப்பும் கெட்டுப்போகும். செல்வத்தின் தங்கை ராதிகாவும் அவனது அம்மாவும் எப்படியாவது சின்னச்சாமியைக் கண்டுபிடித்து அழைத்துவரும்படி சொல்லியிருக்கிறார்கள்.

”இந்தக் களவாணிப்பய இப்படிச் செஞ்சுட்டானே. அவம் மட்டும் சிக்கினாஞ் செத்தான்.  எங்க போனான், எப்பப் போனான்னு அவம் அம்மாவுக்கும் சொல்லத் தெரியல்ல., ச்சும்மா மொகத்தப் பாத்தே அழுகுது., அவனக் கண்டுபிடிச்சு நாலு ஒத ஒதச்சு அவங்கம்மாட்ட ஒப்படச்சுட்டு ஒங்க சங்காத்தமே வேணாம்.. இனி இந்தப் பக்கமா வராதிக நீங்களாச்சு ஒங்க மகனாச்சுன்னு கட்டன்ரேட்டா சொல்லிப்புடணும்.. அப்படியே ராதிகாவையும் அவனோடச் சிரிச்சுப் பேசுறது செஸ் வெளயாடுறதெல்லாம் நிப்பாட்டிக்கன்னு கண்டிச்சுவிட்றணும்” என நினைத்துக் கொண்டே கண்களை நாலாபுறமும் பரபரப்பாக்கினான் செல்வம்.

“அவனும் அவம் மூஞ்சி மொகறையும் அவம் ஆளுகளப் பாக்குறப் பார்வையும் ஒன்னும் நல்லாயில்ல என்னக்கி யார் வீட்டக் கெடுக்கப் போறானோ.. ஓந்தலையில விடியாம இருந்தா சரி.”  கல்பனாவும் செல்வத்திடம் அவனைப் பற்றி அடிக்கடி சொன்ன வார்த்தைகள் அவனை இன்னும் சூடாக்கியது. இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் ராதிகாவின் முகம் இவன் கண்ணுக்குள் அப்படி இப்படி வந்து போனது.  செல்வத்தின் முகமெல்லாம் கடுகடுவென மாறியிருந்தது. நாளெல்லாம் அலைந்த கலைப்பு வேறு. அவனைக் காணவில்லை என்கிற பதட்டத்தைவிட கல்பனாவோடு இருக்கமுடியாமல் போன தவிப்பே அதிகமாயிருந்தது.

இவனது யமஹா பைக்கும் பெட்ரோல் குறைந்து முட்டி முட்டி ஓடியது. நல்லவேளையாக பெட்ரோல்பங்க அருகிலேயே இருந்ததால் உள்ளே நுழைந்து பைக்கை நிறுத்தி டேங்க் மூடியைத்திறந்தான் பெட்ரோல் போடுகிற பையனிடம்..

“நூறு ரூபாய்க்குப் போடுப்பா..”  என்றான். உள்பனியன் போடாததால் வியர்த்த வியர்வையில் சட்டைப் பாக்கெட்டில் நனைந்திருந்த ரூபாயை எடுத்துக் கொடுத்தான். பெற்றுக் கொண்ட பெட்ரோல் நிரப்புகிற பையன்…

”சைபரப் பாத்துக்கங்க சார்..” என்றான்.

“இதெல்லாஞ் சரித்தேன்.. தெனந்தெனம் ஒத்தரூவா ரெண்டு ரூவாயாக் கூட்டி யானெ வெலக்கி ஏத்துவிட்டு.. சைபரப் பாக்கவாம்.. எல்லாம் சைபராத்தாம்பா கெடக்கோம், இங்க எரநூறுக்குப் போடு” என்று ரூபாயை நீட்டினார் நக்கலாய்ச் சொல்லிக்கொண்டே சிதம்பரம். அப்படியே வண்டியின் ஹேண்ட்பாரில் தொங்கிக்கொண்டிருந்த மிட்டாய் பாக்கெட்டுக்கள் நிறைந்த பிக்சாப்பர்களைச் சரிசெய்து கொண்டார். அவர் அதைச் சரி செய்த விதமும் அவர் அடித்த நக்கலையும் செல்வம் ரசித்தான்.

“அண்ணே டேங்க மூடிக்கிங்க.. வண்டிய நகட்டுங்க..” செல்வத்திடம் சொல்லிவிட்டு சிதம்பரத்தின் வண்டிக்கு ஆயில் ஊற்ற ஆரம்பித்தான் பெட்ரோல் போடுகிற பையன்.

செல்வம் வண்டியின் கிக்கரை மிதித்தான். சின்னச்சாமியின் மேலான கோபம் அதில் தெரிந்தது. வண்டி உரும..

“என்ன செல்வம் நல்லாருக்கேளா.. ஒம்ம ப்ரெண்டு சின்னச்சாமி இப்போல்லாம் வியாழனான்னா குரு பகவான தரிசிக்க வந்திர்றா.. சாயங்கால பஜனைக்கும் வந்திர்றான ஆச்சரியம் போங்கோ..” – என்றார் பெருமை கொப்பளிக்க சுப்பிரமணி ஐய்யர். செல்வத்தால் நம்பமுடியவில்லை. ஐய்யர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே

“ஐய்யரே மொதல்ல குருபகவான பெட்ரோல் வெலையக் கொறைக்கச் சொல்லுங்க.. பஜனைல்லாம் அப்புறம் பாப்போம்..” என்றார் சிதம்பரம்.

“யாரு.. நீங்களா.. அதெல்லாம் பகவானோட டிஸைன் வோய்.. நீங்க இப்படி பகவான கிண்டல் பண்றத கொறச்சாலே எல்லாம் சரியாயிடும்.. நானே ஒங்க கடைக்கு வரலாம்ன்ருந்தேன்.. பகவான் புண்ணியம் எடயிலேயே பாத்தாச்சு.. ஒரு மிட்டாய்ப் பாக்கெட் கொடுங்கவொய்.. சாயங்கால பஜனைக்கு அண்ணி வரப்போ பகவான் பாதத்தில இருக்கிற எலுமிச்சங்கனி கொடுத்தனுப்புறேன்.. வண்டி சக்கரத்தில வச்சு ஏத்திப் போடுங்கோ.. நல்லது நடக்கும்.” என்று சொல்லிக் கொண்டே சிதம்பரத்தின் பிக்சாப்பரிலிருந்த ஒரு மிட்டாய்ப் பாக்கெட்டை சிதம்பரத்தின் அனுமதியில்லாமலே எடுத்துக் கொண்ட சுப்பிரமணி ஐய்யர் அவரின் செயலுக்கு சிதம்பரத்தின் முகச்சுளிப்பை கண்டுகொள்ளாமல் செல்வத்திடம் திரும்பினார்.

“என்ன செல்வம் சின்னச்சாமியப் பாத்தேளா.. அடுத்தவாரம் ரெண்டு பஸ்ல ராமேஸ்வரம் டூர் போறோம்.. எல்லா அரேஞ்மெண்டும் சாட்சாத் நானேதான்.. சின்னச்சாமிக்கு பத்திரிக்கை கொடுக்கணும் அப்படியே நீங்களும் வாங்கோ புண்ணியம் கிடைக்கும்..” என்று டூர்போகும் பிட் நோட்டிஸை செல்வத்தின் கைகளில் திணித்தார்.  செல்வம் அதிர்ந்து போனான். சின்னச்சாமி அப்படிப் போகிற ஆள் இல்லை. ஐய்யர் காமெடி ஏதும் செய்கிறாரா என நினைத்துக் கொண்டே சொன்னான்

“நீங்க வேற சாமி அவனாவது பஜன டூர்ன்னு வந்திட்டாலும், இப்படிச் சுத்துற பூமி அப்படிச் சுத்திறாது நானே காலைலேர்ந்து அவனத்தான் தேடிக்கிட்டிருக்கேன்..” என்றான் சலிப்பும் எரிச்சலுமாக.

சின்னச்சாமி காணாமல் போன விபரங்கள் வேறேதும் கேட்காமல்.. “ பாத்தாச் சொல்லிடும்வோய்”  எனக் கிளம்பிவிட்டார் ஐய்யர்.

தலையாட்டிவிட்டு உருமிக் கொண்டிருந்த யமஹாவை மேலும் உருத்தி ஆலமரத்திட்டுக்குக் கிளம்பினான் செல்வம். பல நேரங்களில் சின்னசாமியை கடைசியாக அங்கே பார்க்கலாம். ஆலமரத்திட்டு ஊரிலிருந்து ஐந்துகிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. செல்வம் சின்னப்பயலாக இருந்தபொழுது பால் வியாபாரியான இவன் அப்பாவோடு சந்தை கூடுகிற ஞாயிற்றுக்கிழமைகளில் சென்றுவிடுவான். தமிழகம் ஆந்திரா கர்நாடகா குஜ்ராத் என தேசங்களின் பல பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு வரும். செல்வத்தின் அப்பாவிற்கு தெலுங்கு கன்னடம் மலையாளம் குஜராத்தி இந்தி என பலமொழிகள் பேசுவார். இத்தனைக்கும் படிக்காத அவருக்கு இந்த வியாபரம் இந்த மொழிகளைக் கற்றுக் கொடுத்திருந்தது. ஆனால் படித்த செல்வத்திற்கு தமிழைத் தவிர வேறெதுவும் தெரியாது. மாட்டுச் சந்தை நாளை அனுசரித்து மற்ற வியாபாரங்களும் சிறப்பாக நடக்கும்.   இன்று இருக்கிற மெயின் மார்க்கெட்டைக் கடந்து தான் அங்கே போகவேண்டும். ஏற்கனவே மார்க்கெட்டுக்குள் இவன் சின்னச்சாமியை விசாரித்ததில் சிலரின் பதிலை நம்பி இரண்டு முறை போய்வந்து விட்டான். மார்க்கெட்டின் கூட்டத்தை நினைக்கிறபோதே செல்வத்திற்கு தலைசுற்றியது. வேறு என்ன செய்ய அங்கே செல்வதென்று அவன் முடிவெடுத்துவிட்டான். பைக் கிளட்ச் சரியாக இல்லாவிட்டாலும் அந்த மக்கள் கூட்ட நெருக்கடியை கடந்து தான் போக வேண்டும். இப்போதெல்லாம்  பாலுக்கான ஹைபிரிட் இனமாடுகள் வந்துவிட்டதாலும்  விவசாயம் நவீன முறையில் பயணித்ததால் நாட்டுமாடுகள் தேவை இல்லாமல் போனதாலும் சந்தை கூடாமல் போனதாலும் ஆலமரத்திட்டு சிதிலமடைந்துவிட்டது. வீட்டைப் பிடிக்காதவர்களுக்கும் கஞ்சா இழுப்பவர்களுக்கும் சீட்டு விளையாடுவர்களுக்குமான அடைக்கலமாய்ப் போய்விட்டது.

அந்த சிதிலமடைந்த இடத்தில் சின்னச்சாமி ஒய்யாரமாகப் படுத்துக்கிடப்பது போல் காட்சி செல்வத்தின் மனக்கண்ணில் ஓடியது. அது அவனுக்கு உற்சாகத்தை ஊட்ட கல்பனாவோடு இன்று எப்படியாவது இருந்துவிட வேண்டுமென்கிற எண்ணம் பைக்கை வேகமெடுக்க வைத்தது. மார்கெட்டுக்குள் நுழைந்தான்.

”ஏம்பா ஏய்.. “ என்ற உரத்த அழைப்புக்கு வண்டியை நிறுத்தித் திரும்பினான்

”ஏம்பா ஏய் செல்வம் காலைய்லேர்ந்து இந்தவாக்கிலேயே சுத்திக்கிட்டிருக்க.. நானும் ரெண்டு லோடு மூட்டைய ஏத்திட்டேன்., என்னப்பா சமாச்சாரம்..?”, கையிலிருக்கிற கொக்கியூசியை இடுப்பில் செருகிக் கொண்டே கேட்டார் பரமன். அவர் எப்பொழுது பேச ஆரம்பித்தாலும் ஏம்பா ஏய் என்பதைச் சேர்த்தே பேசுவார். அது அவரது பழக்கமாகிவிட்டது. பரமன் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்தி வந்தாலும் கிடைக்கிற கூலியில் டீக்கடையில் செலவழித்துவிட்டு ஊர் நடப்பு பேசுகிற பேர்வழி. ஒரு நேரம் கூட யாரிடமும் ஓசி டீ குடித்ததில்லை. அந்தப் பெருமையிலேயே அவர் வாழ்வும் தொழிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.

”நீ வேறக் கடுப்பக் கெளப்பிக்கிட்டு சும்மார்ண்ணே.. ஏகப்பட்ட டென்சன்ல இருக்கேன்., …….மவன் எங்க போய்த் தொலஞ்சான்னு தெர்ல.. அவய்யவன் நெலம தெரியாம..”

”ஏம்பா ஏய் கொஞ்சம் பொறுமயக் கடபிடி.. ஒரு டீயக் குடி.. நிதானமா அண்ணங்கிட்ட சொல்லு., ஒனொக்கொரு வழியப் பாப்போம்..” பரமனுக்கு வேலை செய்த களைப்பு பெரியவிசயமல்ல. ஒரு டீயையும் பருப்புவடையும்  யாரிடமாவது பேசிக்கொண்டிருப்பதும் அவர் வழக்கம். செல்வம் சிக்கிக் கொண்டான்.

”கெக்கம்ங்..” செருமிய செல்வம், “போண்ணே போய் வேலயப் பாரு.. இங்க இருக்கிறதுல நீ வேற..”

“ஏம்பா ஏய் செல்வம் என்னயேதுன்னு சொன்னாத்தானப்பா ஒரு வழி கெடைய்க்கும்.. இல்லன்னா கண்ணக் கட்டி காட்ல விட்ட மாதிரி அலஞ்சிக்கே திரிய வேண்டியதேன்.. வா டீயக் குடிச்சுக்கிட்டே பேசுவோம்.” செல்வத்தை நிதானப்படுத்தினார் பரமன்.

”சர்ண்ணே.. வா வெங்கடேசன் கடையில சாப்பிடுவோம்..”

”அவய்ங்கிட்ட வேணாமப்பா பாக்கட் பால்லு.. கட்டமுத்துட்ட சாப்பிடுவோம்..”

“செல்போனுக்குச் சார்ஜ் போடலாமா அங்க.. இல்லைன்னா சொல்லு இங்கேயே போவோம்..” ஒரு சின்னத் தடுப்பைப் போட்டுப் பார்த்தான் செல்வம், பரமன் அவனை மிஞ்சினார்

“வாப்பா ஏய் அங்க இல்லாட்டி என்னா.. அண்ணே ஒனக்குப் போட்டுத்தாரேன்..”

நடந்தார்கள்., கட்டமுத்து கடை வந்தது. இடுப்பில் வேட்டிக்கு மேல் தூக்கிக்கட்டிய துண்டோடு நெற்றியில் அடித்த விபூதிப்பட்டை வியர்வையில் கூட கரையாத பக்குவத்தோடு டீ அடித்துக் கொண்டிருந்த கட்டமுத்து சிரித்தமுகத்தோடு பரமனை வரவேற்றார். பரமன் ஆரம்பித்தார்..

“கட்டமுத்து டீக்கடைப் பட்டறையில் நின்னாலும் அவன் எஃப்எம் மாதிரி எப்பப்பாரு சலசலன்னு பேசுற ஆளு, நானும் அவனும் ஒரு சோடு. சிபிஐ யை மிஞ்சுற அளவுக்கு ஒலக ரகசியம் தெரிஞ்சவெம், கேள்வி ஞானத்துல நாவிதங்களத் தூக்கித் தின்றுவான்னா.. பாத்துக்க..” என்று பரமன் செல்வத்திடம் சொல்ல கட்டமுத்து..

“விடுண்ணே..” என்று வெட்கப்பட்டுக் கொண்டே பரமனிடம்,

“ஒங்களுக்கு டீ தம்பிக்கு…” என இழுத்தார்.

“ஏம்பா ஏய் கட்ட ரெண்டு பேருக்குமே டீயப் போடுப்பா.. இங்கவாரு.. தம்பி ஓன் டீயக் குடிச்சுப்புட்டு மறக்கக் கூடாது அப்படியிருக்கனும் ” என்றவாறு பருப்புவடையை எடுத்துக் கடித்தார் பரமன்., “ அப்படியே இந்தப் போனுக்குச் சார்ஜப் போட்டு விடுப்பா..” என்று செல்வத்தின் போனை வாங்கி கட்டமுத்துவிடம் கொடுத்தார்.

“ஏம்பா ஏய் கட்ட.. கொடைக்கானலப்  போடுய்யா.. இதென்னா இந்தியில் பேசுறாய்ங்க..”

“கொடைக்கானல்லதேம் பாடுது பரமாய்.. இப்பெல்லாம் தெனமும் நாலஞ்சு மணி நேரம் இந்திதேம்.. எவனுக்குப் புரியுதுன்னு தெரிய்ல.. இல்ல எவனுக்குப் போடுரான்னுந் தெரிய்ல.. கருமம் என்ன செய்ய..”

நெற்றியில் அடித்த பட்டையோடு கட்டமுத்து டீ அடித்துக் கொண்டே பரமனிடம் பேசிய மொழி அரசியல் செல்வத்திற்குப் பிடிக்காவில்லை

“பரமண்ணே நாங்கெளம்புறேன்… கையும் ஓடல காலும் ஓடல ஒத்த எடத்துல நிக்க முடிய்ல..” கல்பனாவின் மீதான இவனது காதலும் சின்னச்சாமி காணாமல் போனதும் செல்வத்தை ஆட்டிக் கொண்டிருந்தது.

“ஏம்பா ஏய் மொத ஒக்கார்ப்பா.. கட்ட நமக்கு டீ போட்றாய்ன் ஓஞ்செல்லு வேற சார்ஜுல கெடக்கு., பதர்ற., சரி விசயத்தச் சொல்லு..” அதட்டி செல்வத்தை உட்கார வைத்தார் பரமன். அவனும் சற்று எசவாக அமர்ந்து கொண்டான். கொடைக்கானல் இந்தி ஒலிபரப்பு அவன் மண்டைக்குள் ஏதோ செய்தது. உள்ளூர ஏற்பட்ட எரிச்சலை வெளிக்காட்டாமல் கொஞ்சம் கோபமாக..

“கட்டண்ணே அந்த ரேடியோவ ஆஃப் பண்ணு.. எரிச்சலா..” கடுப்பான செல்வத்திற்கு ”சரிப்பா தம்பி ஆப் பண்ணிட்டா போச்சு..” என்ற கட்டமுத்துவின் பணிவான உரிமை தோய்ந்த வார்த்தை காலையிலிருந்து அலைந்த அவனுக்கு கொஞ்சம் ஆசுவசமாயிருந்தது.

“சொல்லு செல்வம்..” பரமன்

“சின்னச்சாமியக் காணோம்ணே.. அவகம்மா இங்க தேடி வந்து ஒரே அழுக..”

“யாருப்பா.. இந்தக்காலத்துல..” ஆர்வமாய்க் கேட்டார் பரமன்

“அதேண்ணே போன ரெண்டு மூனு வருசம் முன்னாடி பாதாளச் சாக்கட தோண்றோம்ன்னு மூடாத குழிக்குள்ள விழுந்து செத்தாப்லய்ல பூசாரி ராமசாமி..”

“ஆமா..” பரமன் இடுக்கான சின்னக் கண்கள் விரிந்தது

“அவரு மகந்தேன்..” செல்வம் சொல்ல, ”….ய்யேகெம்”, ஆச்சரியப்பட்ட பரமன் கேட்டார்.

“அவகம்மா நல்லாருக்காப்பா.. நல்ல அம்சமான பொம்பளப்பா.. பூசாரிப்பயலுக்கு இப்படியொரு புள்ளையான்னு போதமப்படுவோம்..” உதடுகள் விரிய கரிசனமானார் பரமன்.

“சும்மார்ணே எந்த நேரத்துல எதப் பேசுறதுன்னு..” கடுப்பானான் செல்வம்

“ஏம்பா ஏய் செல்வம் விடுப்பா.. மேட்டரச் சொல்லு.. சின்னச்சாமி அவக அம்மாட்ட சொல்லலயா எங்க போறம்ன்னு..”

“சொல்லிருந்தா அந்தம்மா ஏன் என்னையத் தேடி வருது..” சலித்துக்கொண்டான்.

“நீதானப்பா அவஞ்சிநேகிதன் அதேன் வந்திருக்கும்..”

“அப்படியொன்னும் பெருசா சொல்லிக்கிற மாதிரில்லாம் இல்லண்ணே.. அவெம் ஊதாரி வேற. போக வரயில பாத்தாக்கூட சிரிக்க மாட்டான்.”- என்றான் செல்வம்

“ஏம்பா ஏய் பெறகெதுக்குப்பா அவக ஆத்தா ஒன்னயத் தேடி வந்துச்சு..” குரலுயர்த்தினார் பரமன்.

“பல வருசமா நம்ம வீட்டுப் பக்கத்துலதேன் அவக சொந்தவீடு.. அவக அப்பாவுக்கு தொழில் நட்டம். பெறகுதேன் அவரு கடன் தொல்ல தாங்க மாட்டாம பூசாரியானாரு. பூசாரியானப் பெறகு காசு நல்ல ஓட்டம். சாமிகேக்க ஆளுக கூட்டம் பொறுக்காம பெரிய வீடாப் பாத்து கெழக்க குடி போய்ட்டாக..”

“ஆமா அந்தாளுக்கு சின்னச்சாமி மட்டுந்தான..” பரமன் கேள்வியை இழுக்க..

“ஆமாண்ணே.. அதேம் பிரச்சனையே., ரெண்டு மூனுன்னா அந்தம்மாவும் கண்டுக்காது.. ஒத்தப்புள்ளங்கிறதால இங்க ஓடி வந்திருது.., அவகளுக்கு நம்மள விட்டா வேற வழியில்ல., சொந்த பந்தம்ன்னு போனா ஒனக்கும் ஒம்மகனுக்கும் இதேன் வேலையான்னு திட்றாய்ங்களாம்..” வருத்தப்பட்டான் செல்வம்

“அதேன் நானுங்கேக்றேன் ஒனக்கும் இதே வேலதானா.. நீ சொல்றதப் பாத்தா அந்தப் பய அடிக்கடி ஓடிருவாம் போல..” சகிக்கமுடியாமல் கேட்டார் பரமன்.

“ஆமாண்ணே.. ஒவ்வொராட்டையும் ஒவ்வொரெடத்தில அவனக் கண்டுபிடிக்கணும். யெவெனெவ்வனையோ வீட்டுக்குக் கூட்டுவந்திருவான். முன்னாடில்லாம் புத்தகம் படிக்க லைப்ரரிக்கு, சினிமாப் பாக்க கிரிக்கெட் வெளையாடன்னு ஒன்னாப் போவெம்ண்ணே., பெறகு நம்ம லைன் மாறிக்கிருச்சு. யெனக்கு ஆன்மீகத்துல ஆர்வமாயிப் போச்சு. அவனுக்கு அது பிடிக்காது அப்பேர்ந்து எங்க ரெண்டு பேருக்கும் வம்புதேன்,  திடீர்ன்னு விட்டத்தப் பாத்து பேசுவாய்ம்.., கஞ்சாப் பழக்கம் வேற, அந்தமாவும் பல டாக்டர்ட்ட கூட்டுப்போயிருக்கு ஒண்ணுமில்லன்ட்டாய்ங்க.. கோயிலுக்கும் மந்திரிக்கவும் போயிருக்கு ஒன்னும் சரிப்பட்டு வர்ல போல., அப்படியே இருக்காக பாவம். எங்கிட்டாவது செத்துத் தொலஞ்சலும் பரவாய்ல்ல அந்தம்மா நிம்மதியாவாது இருக்கும்.. நமக்கும் தொந்தரவில்லாமப் போகும்..” செல்வத்தின் வார்த்தைகள் அறுத்த தண்ணிப்பழத்தின் விதைகளாய் உதிர்ந்தது.

“பரம்மாய் தம்பியோட போனடிக்குது எடுக்கவா..” என்றார் கட்டமுத்து

“விடுண்ணே இருக்கட்டும்..” என்றான் செல்வம்

“ஏம்பா ஏய் செல்வம் முக்கியமான சோலியாதும் இருக்கப் போதுப்பா எடுத்துப் பேசு. ஏற்கனவே அவனெ வேறத் தேடிக்கிட்டிருக்க.” என்றார் பரமன்.

செல்வத்திற்கு எடுத்துப் பேச மனமில்லை.. பிறகு பேசலாம் என்றிருந்தது. “இருக்கட்டும்ண்ணே..அவனா கூப்டப் போறாய்ன்” என்றான் ப்ச் கொட்டி.

பரமன் கொக்கியூசியை எடுத்து முதுகைச் சொரிந்து கொண்டே.. கட்டமுத்துவிடம் பேச்சை மாற்றினார்.

“ஏம்பா ஏய் கட்ட ஏதோ நம்ம பக்கத்தூர்ல யாரோ டாக்டருப்பய காலேஜு படிக்கிற புள்ளய கூப்பிட்டுப் போய்ட்டானாம்யா.. காலைல அந்தூர்ல லோடு எறக்கெய்ல பேசிக்கிட்டாய்ங்க..” கட்டமுத்துவிடம் கேட்டால் கூடுதல் தகவல் கிடைக்கும் ஆர்வத்தோடு கிளறினார். ஏனென்றால் உள்ளூர் பத்திரிக்கை ரிப்போர்ட்டர் எல்லாம் கட்டமுத்து கடை வாடிக்கையாளர்கள்.

செல்வம் கிளம்ப எத்தனித்தான். பரமன் அவனை அழுத்தி அமர வைத்துவிட்டு கட்டமுத்துவிடம் தொடர்ந்தார். “ஏம்பா ஏய் கட்ட ஒனக்கெதும் செய்தி வந்து சேர்லயா..” எகத்தாளமானர் பரமன்.

“அதெப்டி பரமா நம்மளத்தாண்டி மில்லிகிராம் செய்திகூட டீவிக்கோ பேப்பருக்கோ போகாது..” இடுப்பிலிருந்த துண்டை சரிசெய்து கொண்டே தொடர்ந்தார் கட்டமுத்து.

“எப்பா இந்த விஷ்ணு ரைஸ்மில் ஓனரு மருமகந்தேன் அந்த டாக்டர் பய., அந்தாளு தம்பியோட மகதேம் காலஜுல படிக்கிறபுள்ள., அந்த டாக்டர் பையனுக்கு ஸ்ரீலஸ்ரீசித்தியானந்தா சாமி இருக்காப்லயில..” என இழுத்தார் கட்டமுத்து.

“ ஆமா.. ஏற்கனவே மடத்துச் சொத்துப்பிரச்சனையில அடிவாங்கிட்டுப் போன சாமியாரு. அவம் பொடிப்பயல்ல…” ஆர்வமானார் பரமன். கோபமானான் செல்வம்.

”பரமண்ணே எங் குருநாதர இந்த மாதிரி பேசுற வேலையெல்லாம் வேணாம்ணே..” கொதித்தான். செல்வத்தின் கையைப்பிடித்து அமைதியாக்கினார் பரமன்.

கட்டமுத்து செல்வத்தின் கோபத்தைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்தார். பரமனுக்கும் ஆர்வம் மிதந்தது.

“அவனேதே விட்றாத.. அந்தச் சாமியார இந்த டாக்டர் பயலுக்குப் பிடிக்கும். அந்தச் சாமியாரு ஏதோ தீட்ச தரதாச் சொல்லி அந்தப்புள்ளையக் கூப்பிட்டுப் போனவெம் அந்தப் புள்ளையொட அங்கேயே இருந்துக்கிட்டு வீடு திரும்ப மாட்டேங்கிறானாம். நம்ம ஊரு ஸ்டேசன்ல தான் கம்ளைண்டு., இத்தனைக்கும் அந்த டாக்ட்ரு பையன் நல்லவனப்பா. ஒரு கெட்ட பழக்கமும் கெடையாது. ஆனா சமீபமா முக்தி ரகசியம் அதிதுன்னு டூட்டி நேரத்திலேயே போதையப் போட்டு பேசிருக்காம். பாத்துக்கங்களேம்.” ஆர்வத்தோடு ஒரு இழுவைப்புள்ளி வைத்தார் கட்டமுத்து.

“அட..” பரமன் வியந்துகொண்டிருக்க

“எங்கண்ணே.. இப்பெல்லாம் மனுசங்க மேல நம்பிக்க இல்லாமத் திரியுறாய்ங்க.. உழைக்கச் சங்கடப் படுறாய்ங்க.. ஆன்மீகம் அது இதுன்னு திக்குத் தெரியாம அலையுறாய்ங்க.. மோட்சம் கெடச்சாப் போதும்ன்னு கெளப்பி விட்டாய்ங்கண்ணே.. என்ன செய்யிறது. அங்கங்க பணம் இருந்தாலும் இல்லாட்டியும் மனச நெருக்கடியாக்கிட்டாய்ங்க. இத வச்சு சாமியாருக முக்தி ஆனந்ததாண்டவம் காத்துவரட்டும் யோகான்னு பொழப்ப ஓட்டிற்றாய்ங்க.” என்றார் கடையில் டீகுடிக்க வந்த முருகன் பன்ரொட்டியை கடித்துக்கொண்டே.

“ஏம்பா ஏய் மேல சொல்லுப்பா அங்க என்னா முருகம்வாயில கப்பலா ஓடுது..” பரமனின் வார்த்தைக்கு கட்டமுத்து தொடர்ந்தார்

“அது மட்டுமில்லண்ணே.. ஊருக்குள்ள யாராவது ஏதாவது பேசுண்ணா.. அந்தச் சாமியார் மடத்துல இருந்து சின்னச்சின்ன பொம்பளப் புள்ளைகள வச்சு அசிங்க அசிங்கமாப் பேசி விதவிதமா வீடியோப் புடிச்சி நெட்ல போட்டுற்றாய்ங்க.. அந்தப் புள்ளைகளும் நாக்கூசுற வார்த்தைகள என்னா அழக்காப் பேசுதுன்றீங்க..” பேஷ் போடும் தொனியில் சான்ஸே இல்லங்கிற அளவுக்குத் தலையாட்டினார்.

“நானும் பாத்திருக்கேனப்பா.. எங்கப்பா இந்தப் புள்ளைகளுக்கு ட்ரெய்னிங் குடுக்குறாய்ங்க.. தனியா வாத்தியாரேதும் வச்சிருப்பாய்ங்களோ.. இம்பூட்டு நடக்குது ஆனா அங்கதே ஓடுறாய்ங்க..” கிண்டலாய் இழுத்தார் பரமன்.

“பரமாய்.. அங்க போறவெய்ங்க அவய்ங்களா அங்க இருந்துகிறாய்ங்களா.. இல்ல அவெய்ங்க மெரட்டி வச்சுக்கிறாய்ங்களா.. இல்ல மயக்குறாய்ங்களா.. ஒரு எழவும் புரியல போ.. மாசத்துக்கு ஒன்னு ரெண்டு இந்த மாதிரி நடக்குதுள்ள., கவருமெண்டுல இருந்து ஏதாவது கேக்றாய்ங்க..” கட்டமுத்து நியாயத்தொனியோடு பேச்சுக்கு புள்ளி வைத்தார்.

“கவர்மெண்டு……..” பரமன் ஒத்த வார்த்தையில் இழுத்தார்

செல்வம் எரிச்சலானான். பரமனிடம்

“இதேன் வேண்டாங்கிறது என்னையக் கூப்ட்டு ஒக்கார வெச்சுக்கிட்டு அங்கென்னணே பேசுற.. கட்டமுத்தண்ணே அந்த செல்லெடுங்க நாங்கெளம்பனும்..” என்றான் செல்வம்.

“ஏம்பா ஏய் செல்வம் இரப்பா.. சின்னச்சாமி மேட்டருதான வா நானும் வர்றேன் கெளப்பு வண்டிய..” என்றவர் செல்வத்தை நிதானப்படுத்தினார். கட்டமுத்து சார்ஜிலிருந்த செல்வத்தின் செல்போனை எடுத்துத் தந்தார். செல்போன் திரும்ப அலறியது.

போனில் செல்வத்தின் அம்மா..

அழைப்பு பட்டனை அழுத்தி “சொல்லும்மா..” என்றான்

செல்வத்தின் அம்மா பதட்டத்தில் பேசியது சரியாக இவனுக்குக் கேட்கவில்லை.

“இங்கபாரும்மா ஏற்கனவே டென்சன்ல இருக்கேன்.. பொறுமையாச் சொல்லு..” என்று சடசடத்தான்.

“ஓந்தங்கச்சி ராதிகா பாவிமக ஓடிப்போய்ட்டாடா., போன்ல கூப்புட்டா., சின்னச்சாமிகூட இருக்கேன் தேடாதீங்கன்னு சொல்லிட்டு  ஆப் பன்ணிட்டாடா..” என்று கதறினார்.

செல்வம் பதறி நின்றான். மார்கெட்டின் இரைச்சல்கள் எல்லாம் மடத்தின் மணியோசைகளாகக் கேட்டன. சுப்பிரமணி ஐய்யார் சின்னச்சாமி பற்றி சொன்ன வார்த்தைகள் மணியோசைக்களுகிடையே அசரீரியாய் ஒலித்தது. அவனை கடந்து போவோர் வருவோரெல்லாம் சன்னியாசிகளாக சந்நியாசிகைகளாக வலம் வந்தனர். செல்வம் ஏற்கனவே சென்று வந்திருந்த அந்தமடத்தின் ஒரு மூலையிலுள்ள வில்வமரத்தடியில் சின்னச்சாமியும் ராதிகாவும் ஒய்யாரமாகப் படுத்துக் குலாவிக் கொண்டிருந்தனர்.

“ஏம்பா ஏய் போன்ல என்னப்பா சேதி..” என்ற பரமனின் குரல் அவனுக்குக் கேட்கவேயில்லை.

“நனச்சு அடிச்சா நாலு பக்கந் தெறிக்கத் தான செய்யும்.. ஒதுங்கும்மா..” என்று எங்கேயோ இருந்து சத்தமாக வந்த குரலுக்கு செல்வத்தின் மனக்கண்ணில் ராதிகாவும் சின்னச்சாமியும் நெடுந்தூரத்தில் மறைந்து கொண்டிருந்தனர். ஸ்ரீலஸ்ரீசித்தியானந்தா ஸ்ரீத்துக்கொண்டிருந்தார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 3.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

1 thought on “நனச்சு அடிச்சா நாலு பக்கந் தெறிக்கும்…”

  1. sakthi bahadur

    இளைஞர்களின் சிந்திக்கும் திறனை முடக்கி வைக்கும் போலி ஆன்மீக வாதிகளை கிழித்தெடுக்கும் புனைவு. யாதார்த்தமான இரு மாறுபட்ட குணம் கொண்ட இரு நண்பர்கள். காலையிலிருந்து காணாமல் போன தன் நண்பனை தேடிக்கொண்டிருக்கும் போதே தன் காதலியுடன் இணைய முடியா ஏக்கத்துடன் தவிப்பு. வெள்ளங்கிரியான பரமு போன்ற மனிதர்கள். என்று அருவியை போல தடையில்லாமல் நகரும் கதை அமைப்பு. கடைசியில் காணாமல் போன தன் நண்பனுடன் தன் தங்கையும்…. என்ற தகலை தாய் மூலமாக கேட்ட செல்வத்திற்கு….முன்பு பேசிய ”நனச்சு அடிச்சா நாலு பக்கந் தெறிக்கும்…” வாசகம் நினைவிற்கு வருவது செம டச்… சிறப்பு தோழர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: