தோஷம்

0
(0)

ஆவணி மாதம் பிறந்து விட்டால் வத்சலா மாமிக்கு இன்பமும் ஆரவாரமும் பெருகத்தான் செய்கிறது. இழப்பின் சோகம் ஊற்றெடுக்கத்தான் செய்கிறது. மனக்குளத்தில் பல ஞாபகக் கற்கள் விழுந்து சலன வளையங்களைப் பெருக்கி, பெருக்கி மனதை மரத்துப் போகச் செய்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்படி இல்லை. அப்பொழுதெல்லாம் ஆவணி மாதம் நோன்புகளானாலும், திருநாட்களானாலும் மக்களும் பொங்குவதாக இருந்தது.

பாலகிருஷ்ண அய்யர் இருக்கும்போதும் சரி, இறந்த பின்னும் சரி அதே சிறப்பு மாறாது ஓணம் பண்டிகை முதல் நவராத்திரி கொலு உற்சவங்கள் வரை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தன. காயத்ரி வரிந்ததுகட்டிக் கொண்டு ஒவ்வொன்றையும் சிரத்தையாக அழகாகச் செய்வாள். பாலக்காட்டு பிராமணக் குடும்பத்தின் ஐதீகமும் சீலமும், கறார் தன்மையும் கடைபிடிக்கப்பட்டு வந்தன.

ஓணம் பண்டிகையில் ஆரம்பித்து நவராத்திரி விழாக்கள் முடியும் வரை வீடே ஒளியின் ஊற்றாக, சந்தோஷப் பிரவாகமாக இருக்கும். சுற்றமும் நட்பும் அண்டை வீட்டாரும், அயலாரும் உறவாடும் நேசப்பாலமாக இருக்கும். காயத்ரி போனதும் எல்லாம் போனது போல் இருக்கிறது. துயரத்தின் புழுக்கத்தில் மன வவ்வால் தலை கீழாகத் தொங்குகிறது. வெளிச்சமே குருடாகி மயங்கி வெளி உலகமே வத்சலா மாமிக்கு அந்நியப்பட்டு போகிறது. வெளி உலகின் ஓயாத வாயில் மெல்லப் படாமல் தப்பிக்கவே வத்சலா விரும்பினாள்.

மூத்தமகள் சாவித்திரி ஒரு வயசு மகனோடு வாழா வெட்டி’யாக வந்தாள்.

அந்தத் துயரம் பாலகிருஷ்ண அய்யரின் உயிரை விலை பேசி எடுத்துக் கொண்டது. பால கிருஷ்ண அய்யர் ‘முன் என்ஜின்’ என்றால் நீண்டநெடிய கூட்ஸ் வண்டிக்கு ‘பின் என்ஜின்’களாய் இருந்த மகன்கள் இருவரும், அப்பா இறந்ததும் ஒவ்வொரு சாக்கு சொல்லிக் கழன்று கொண்டனர், தனிக்குடித்தனம் நடத்தினர். தடைபட்டுப்போன வாழ்க்கையை இழுத்துச் செல்ல காயத்ரி தலை எடுத்தாள்.

அந்த ஆண்டுதான் பி.எஸ்.சி கணிப்பொறியியல் படித்து முடித்த, அவள் வயிற்றுப் பாட்டுக்காய் அந்த சிறுநகரில் உள்ள ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் பயிற்றாளராகப் பணியை ஏற்றாள். மாதம் ஆயிரத்து நூறு சம்பளம். இதோடு அப்பாவின் பென்ஷனுமாய் சேர்ந்து வாழ்க்கை பயணத்தை நகர்த்தியது. இந்தச் சிரமத்தோடு சின்னவள் சியாமளா இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

காயத்ரியின் அழகும் அறிவும் சுறுசுறுப்பும் பொறுப்பணர்வும் அந்தப் பகுதி பிராமணக் குடும்பங்களிலே பிரசித்தமாய் இருந்தது. நிறைய வரன்கள் வரத் தொடங்கின. குடும்பச் சூழலைச் சொல்லி தவிர்த்த போதும், மாப்பிள்ளை வீட்டார் வரத்தான் செய்தார்கள். காயத்ரியின் திருமண வாழ்வு மூலமாவது இக்குடும்பத்திற்கு விமோசனம் பிறந்து விடாதா என்ற நப்பாசை! வத்சலா மாமி மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க வேண்டியதாயிற்று.

கூட்டமாய் வருவார்கள். காயத்ரியின் பாடும் திறமையை, சமைக்கும் திறமையை, படிப்பை, வேலை வாய்ப்பைக் கேட்பார்கள். வரதட்சணை எதிர்பார்ப்பை பட்டியலிடுவார்கள். கடைசியாய் “அடடே, செவ்வாய் தோஷ ஜாதகம்! மூல நட்சத்திரத்தில் ருதுவாகி இருக்கிறாள். பெண்மூலம் நிர்மூலம்! மாமனார் மைத்துனர்களுக்கு ஆகாது” என்று சாபக் கழுவேற்றிக் கரைவார்கள்.

நான்கு ஐந்து வரன் வீட்டார் வந்து போனார்கள். காயத்ரியின் செவ்வாய் தோஷ ஜாதகமும், மூல நட்சத்திரத்தில் ருது எய்தியதுமே இப்போது பிரபலமானது. கல்யாணம் காயத்ரிக்கு கசந்து போனது. வேண்டாத ஒன்றாகத் தோன்றியது. எப்பொழுதும் சுறுசுறுப்பாய் இருந்த மனமும் வாடத் தொடங்கியது.

ஒரு ஆவணியில் இந்த நேரத்தில் தான் கல்லூரித் தோழன் ராஜா முகமது, சென்னையில் தான் பணியாற்றும் ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் நிகழ்வமைப்பாளர் பணி காலியாக இருக்கிறது என்றும் சம்பளம் ஐந்தாயிரம் வரை கிடைக்கும் என்றும் சொன்னான்.

இந்த தோஷச் சிலுவையிலிருந்து விடுதலை கிட்டும், மனதுக்கு ஆறுதல் கிட்டும். குடும்பமும் கடனிலிருந்து மீளும், அக்காவுக்கும், தங்கைக்கும் உதவியாக இருக்கும் என்ற காயத்ரியின் கருத்தை வத்சலா ஏற்றுக் கொள்ள காயத்ரி சென்னை பயணமானாள்.

சென்னையிலிருந்து மாதம் இரண்டாயிரம் வீதம் பணம் இருமுறை வந்தது. அடுத்த மாதம் காயத்ரி துபாயில் ஒரு கணிப் பொறி நிறுவனத்தில் பணியில் சேரப் போவதாகவும் ராஜா முகமதுவும் அதே நிறுவனத்தில் பணிபுரிய வருவதாகவும் கடிதம் வந்தது.

கண்காணாத அடுத்த தேச வாசம், என்ன செய்வாளோ? எப்படி சமாளிப்பாளோ மனுசாள் உதவி எப்படியோ? என்ற சஞ்சலம் வத்சலா மாமியை வாட்டியது. ராஜா முகமது நல்ல பையன். காயத்ரிக்கு பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்வான் என்ற நம்பிக்கை சஞ்சலப் புயலுக்கிடையே பிடிமானமாக, ஆறுதலாக இருந்தது.

ஆனால் இந்த இரண்டு வருஷமாக காயத்ரியிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. மனம் கன்னா பின்னாவென்று கற்பனை செய்து வதைத்தது. இம்மாதிரி நேரங்களில் மனத்தைவிட கொடூரமான நரகம் வேறு இல்லை . குடும்பச் சுமை. வெறும் ஐ.நூறு ரூபாய் பென்ஷனை வைத்து எப்படி ஓட்ட? பெற்ற மகன்களிடமிருந்து அன்போ அனுசரணையோ உதவியோ, உபசரணையோ இல்லை. அவரவர் வாழ்க்கைக் கூட்டைச் சுமந்து நகர்கிறார்கள்.

மூத்தவள் சாவித்ரி பஞ்சாயத்து அலுவலகத்தின் மூலமாக வைரப்பட்டை தீட்டும் வேலைக்குப் போகிறாள். சின்னவள் சியாமளா நர்சரி பள்ளிக்கு வேலைக்குப் போகிறாள். சம்பளம், டியூஷன் என இரண்டும் சேர்ந்து ஒரு ஆயிரம் ரூபாய் தேறும். வரவும் செலவும் இணையாது எட்டி ஓடும் தண்டவாளத்தில்தான் ஒரு வகையாய் வாழ்க்கை ஓடுகிறது. தட்டுத் தடுமாறல் உண்டு. ஆனால் இதுவரை கவிழவில்லை என்பதே ஆறுதல்.

இந்த ஆவணி மாதமும் இப்படி நிறைய துயரப் புழுதியைக் கிளப்பிக் கொண்டு தான் பிறந்தது. சோகத்தின் மூச்சுத் திணறல். வீசி ஓயாத ஆடிக்காற்றின் உக்கிரத்தோடு மனதில் கவலை சுழன்று வீசிக் கொண்டிருந்தது.

இந்நிலையில்தான் காலையில் ஒரு கடிதம் காயத்ரியிடமிருந்து வந்தது. தங்கை கல்யாணத்துக்கு என்று ஐம்பதாயிரம் ரூபாய் பண வரைவு அனுப்பி இருந்தாள். “இத்தனை வருசங்களாக கடிதம் எழுதாதற்கு மன்னிப்பு கோரி இருந்தாள். தனக்கு வழிகாட்டிய ராஜா முகமதுவோடு தன் வாழ்க்கை இரண்டு ஆண்டுகளாகத் தொடர்கிறது. அம்மாவுக்கு காயத்ரியாகவும், ராஜா முகமதுவுக்கு கதிஷா பானுவாகவும் நாமகரணம் பூண்டுள்ளதற்கும் பல கோடி முறை மன்னிக்குமாறு மன்றாடி எழுதி இருந்தாள்.

வத்சலா மாமிக்கு இந்தக் கடிதத்தைப் படிக்க படிக்க கண்ணீர் பொங்கியது. மகளை நோவதா? மகளை விரட்டிய சமூக சந்தர்ப்பங் களை நோவதா? மனசுக்குள் புழுங்கி, குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

சியாமளாவும் காயத்ரியின் கடிதத்தைப் படித்தாள். காயத்ரியைத் திட்டவும் தோன்றவில்லை. சுயநலப் பிசாசு என ஒதுக்கவும் தோண வில்லை. சுயநலத்தோடு தன் குடும்பத்தைக் கவனிக்க, தாயையும், தங்கையையும் விட்டுச் சென்ற அண்ணன்மார்களை விட காயத்ரி உயர்ந்து நின்றாள். தோஷ சடலம் கட்டிய இந்த சமூகத்தின் கட்டிடங்கள் நொறுங்கி விசுவரூபித்திருந்தன.

சியாமளா மூன்றாம் நபருக்குத் தெரியாமல் பணவரையை வங்கியில் போட அம்மாவை அழைத்துச் சென்று வந்தாள் சோகத்தையும் துக்கத்தையும் மறைத்து சேணம் இட்ட குதிரை போல் வத்சாலா மாமி சியாமளாவுடன் வங்கிக்குப் போய் வந்தாள்.

வீட்டிற்குள் வந்ததும்தான் மறைந்திருந்த சோகம் உடைந்தது. மகளின் அறிவார்த்தம், காரிய சாமர்த்தியம் தன்னோடு இருந்து பார்க்க வழியில்லாமல் கண்காணாத தேசத்தில் வேற்று ஆளாகிப் போனாளே……?

இனி சியாமளாவுக்கு இந்தச் சமூகத்தில் மங்களகாரியம் எப்படி நடக்கப் போகிறதோ? இவளுக்கும் செவ்வாய் தோஷமாம்!

வத்சலா மாமிக்கு விபரம் தெரிய யாருக்கும் எந்த உயிருக்கும் தீங்கு செய்ததில்லை. பக்தி பாட்டையிலிருந்து, சாஸ்த்திர சம்பிரதாய அனுஷ்டானங்களிலிருந்து விலகியதில்லை.. மாமி குடும்பத்திற்கு மட்டும் சோதனைகள், தோஷங்கள் எப்படி வந்து சேர்ந்தன? ஆனால் இந்த சாஸ்திர சம்பிரதாயங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் வாழ்க்கைப் பாட்டை பார்த்துக் கொண்டு போகிறவர்கள் தோஷங்களால் சிரமப்படப் பார்த்ததில்லை. சம்பிரதாயங்களை அனுஷ்டிப் பவர்களைத் தான் தோஷமும் சாபமும் பாவமும் அணுகுமோ? சிரமத்தின் சிந்தனைத் தாக்கமும், நல்வாழ்வு கிட்டாத ஏக்கமும் வத்சலாவின் மனதை மத்தாகக் கடைந்து கொண்டிருந்தது.

சியாமளா உள் அறையில் கூடு கட்டியிருக்கும்ம் குருவிகள் அங்கு மிங்கு ஓடி குந்துவதை, அவை ‘கீச்கீச்’ சென்று கொஞ்சு மொழியில் உறவாடி கவலையற்று இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கூட்டிலிருந்து குஞ்சுக் குருவி ஒன்று இறக்கையை விரித்து விரித்துப் பயிற்சி செய்வது போலிருந்தது.

வீட்டு வாசலில் நிழலாடியது. செறுமலோடு நாராயணன் நுழைந்தார், “என்ன மாமி சௌக்கியமோ? சுகசேமங்கள் எல்லாம் எப்படி?” முகத்தில் வெளிச்சம் அறைந்த வவ்வாலாக மாமி திக்கு முக்காடினாள். சியாமளா உள் அறையிலிருந்து வெளியே வந்து, “வாங்க மாமா” என்று வரவேற்று தண்ணீர் குடிக்க கொடுத்துப் போனாள். நாராயணன் கைக்குடையை ஊன்றி ஜாதகப் பையை மடியில் இடுக்க சேரில் உட்கார்ந்தார்.

“என்ன மாமி சியாமளா முகத்தில் கல்யாணக்களை வந்துட்டதே.”

“வாங்கோ மாமா வந்ததும் வராததுமாய் ஏதோ பீடிகை போடறேளே?”

“வத்சலா மாமி, நம்ம சியாமளாவுக்கு ஏத்த ஒரு செவ்வாய் தோஷ வரன் ஜாதகம் வந்திருக்கு. பையன் எம்பிஏ படிச்சிட்டு பேங்கில ஆபிஸரா இருக்கான். நல்ல பெர்ஷனாலிட்டியா இருப்பான். ஸ்டேட்ஸ்க்குப் போறதுக்கு ஏற்பாடு பண்ணிண்டு இருக்கான். ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உங்களால முடிஞ்ச நகை நட்டு போட்டேன்னா இந்த வரனை முடிச்சிடலாம். சியாமளாவும் புருஷனோட ஸ்டேட்ஸ்ல செட்டிலாயிடலாம். நீங்களும் கூட அவாளோடயே ஸ்டேட்ஸ்க்குப் போயிடலாம்! என்ன சொல்றேள் மாமி?”

“அட, குருவாயூரப்பா, அவ்வளவு காசுக்கு நான் எங்க போவேன்?”

என்னமாமி காயத்ரி தான் துபாயில செட்டிலாயிட்டாளோ இல்லையோ அவ கிட்ட கேட்டா தங்கை கல்யாணத்துக்கு அனுப்பி வச்சிடப் போறா? அவதான் இப்ப நன்னா இருக்காளோம்ல! ஊர்ல பலபேர் பல மாதிரி பேசிக்கிறாளே! நீங்க கேட்டேன்னா அவா கொடுக்காமல் இருப்பாளோ?”

சோகை பூத்த மாமியின் கண்களில் ஆத்திரம் மின்னிது.

“ஆமாங்கனும், நீங்கதாம் அவளை இந்த தேசத்தை விட்டு விரட்டினேள். இன்னும் மனசு தீரலையா? அங்கேயும் தொல்லை தரனுமா? ஆமாம் தெரியாமல்தான் கேட்கறேன், அவாளை அந்த செவ்வாய் தோஷமும், மூல நட்சத்திரமும் ஒண்ணும் செய்யலையே?”

“என்ன மாமி உங்களுக்குமா புரியலை? அவா ரெண்டு பேரும் இந்த சேதத்தை விட்டுப் போயிட்டாங்க! வேறு மதத்திலையும் சேர்ந்திட்டா! தேசமும் மதமும் மாறும்போது தோஷம் விலகி தோஷ பரிகாரம் ஆயிடறதே!

இறக்கையை விரித்து விரித்து பறக்கப் பழகிக் கொண்டிருந்த குருவிக் குஞ்சை பார்த்துக் கொண்டிருந்த சியாமளாவின் காதில் இந்த வார்த்கைதள் விழுந்தன. அறிவில் ஒரு மின்னல் கீற்று வெட்டி பார்வையில் எதிரொலித்தது.

நாராயணனின் வார்த்தைகளால் மாமியின் ஆத்திரம் ஆவேஷமாய் பரிணமித்தது. “என்னவேய் நீங்களும் உங்க ஜோஸ்யமும்? என் பிள்ளையை தேசத்தை விட்டு விரட்டிட்டு தோஷப் பரிகாரம் ஆயிடுச்சுங்கிறேளே! இனிமே இந்த வாசல்படி ஏறாதீரும்! போரும் வெளியே!” மாமியின் விழியில் ஓர் யுகத்தீயின் ஜோதி ஒளிர்ந்தது.

வெலவெலத்துப் போய் நாராயணன் எழுந்தார். மடியிலிருந்த பை விழுந்ததில் சிதறிய ஜாதகக் குறிப்புகளை விரைவாகப் பொறுக்கி நடக்கலானார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top