தொப்புள் கொடி

0
(0)

“ஹாய், ஹாரிபாட்டர் போடுடா,” “அது வேண்டாம் அந்த ஸ்போர்ட்ஸ் சானல் போடுடா!”

“இல்ல, இல்ல குத்துச்சண்டை சானல் போடு, இல்லைன்னா சுட்டுருவேன்” என்று ரவிசரவணன் துப்பாக்கியைக் காட்டி மற்ற இருவர்களையும் மிரட்டினான்… சக சிறுவர்கள் மிரண்டு போய் நின்றனர்.

அது கலிபோர்னியாவின் புறநகர்ப்பகுதியில் உள்ள இந்தியர்கள் கலாச்சார சங்கத்துக்குச் சொந்தமான கூடம். ஐம்பதுக்கு மேற்பட்ட குடும்பங்களின் இருநூறுக்கு மேற்பட்ட மனிதர்களின் மூச்சுக் காற்றின் கொதிப்பு, சிறுவர்களின் கத்தல், ஒவ்வொரு மூலையிலும் ஒளிரும் டீவிக்களின் வெப்பம் எல்லாம் சேர்ந்து அந்தக் குளிர்ப் பதனக் கூடத்தில் புழுக்கத்தை உருவாக்கியது.

“டேய் புல்லட் இல்லாத துப்பாக்கியால் சும்மாமிரட்டாதே! எங்கே சுடு பார்ப்போம்!” என்றான் ஒருவன்.

“டேய்… வேணாம்டா” என்று ஒருவன் தடுத்தான். வலது மூலையில் டீவியில் பங்குச் சந்தை சரிவு நிலவரத்தைப் பார்த்து பதறிப் போன குடும்பத்தலைவர்களில் ஒருவர், சிறுவர்கள் சத்தம் வந்த திசை நோக்கி, “டேய், சத்தமில்லாம டீவி பார்க்க மாட்டீங் களாடா?” என்று சத்தம் கொடுத்தார். அவர்கள் பார்த்த கணத்தில் ரவிசரவணன் துப்பாக்கி விசையை அழுத்த, இன்னொருவன் தடுக்க, கை தடுமாறி, துப்பாக்கிக் குண்டு மேற்கூரையைத் துளைத்தது. சத்தம், புகை கூடமே அதிர்ந்தது.

“டேய், ஏன்டா மேல பார்த்து சுட்டே, எங்களை சுடுடா, எல்லாத்தையும் சுடுடா. இருக்கிற டாலர்களையும் பொழப்பையும் பங்குச் சந்தையில போட்டுட்டு எல்லாத்தையும் இழந்து நடை பிணமா திரியாம ஒரேயடியா நிம்மதியா கண்ணை மூடியிறலாம் பாரு! வாடா, சுடுடா” என்று சரவணன் முருகப்பன் கத்தினார். மற்றவர்கள் அவரை தேற்றினர்.

இடது மூலையில் டீவி நாடகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் துப்பாக்கி சத்தம் கேட்டு அலறிக் கொண்டு சிறுவர்கள் இருக்கும் திசை நோக்கி ஓடினர். அவரவர் பையன்களுக்கு ஏதும் காயமா என்று பதறிப் போய்க் கட்டி அணைத்துக் கொண்டனர்.

இந்தக் கூடத்தில் தங்கியிருப்பவர்கள் 15, 20 வருடத்துக்கு முன்னால் இந்தியாவிலிருந்து வந்து இங்கு குடியேறியவர்கள். மென்பொருள் பொறியாளர்களாக, வடிவமைப்பாளர்களாக, கட்டிடப் பொறியாளர்களாக, அறிவியல் ஆசிரியர்களாக யோகா குருவாக இங்கே வந்து தொழில் செய்து வீடு வாசல்களோடு நிரந்தரக் குடிமக்களாக நிலை நிறுத்திக் கொண்டவர்கள். வங்கிக் கடன்கள் பெற்று வீடு கட்டியவர்கள். பங்கு மார்க்கெட் ஜூவாலையில் சிக்கிய விட்டிலானவர்கள் இன்று வீடு வாசல் இழந்து இந்தியக் கலாச்சார சங்கத்தில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

ஓடிப்போய் தனது பிள்ளைகளை அணைத்துக் கொண்ட காயத்ரி கழிவிரக்கத்தில் பெருமூச்சுவிட்டாள். …….ம் என்ன செய்ய? இதே புறநகர் பகுதியில் தன்வீடு அனைத்து வசதிகளும் நிறைந்த பிருந்தாவனமாக இருந்தது. கணவனுக்கு தனி அறை! பிள்ளைகள் ஆகாஷ், அக்ஷயாவுக்கு தனித்தனி அறைகள். ஒவ்வொரு அறை யிலும், குளிர்பதனம், டீவி, ஃபோன், ஹீட்டர், படுக்கை அறை, படிக்க, எழுத வசதிகள், அழகான பாத்ரூம் என்று எல்லா வசதிகளும் உண்டு. அமெரிக்கா வந்து பதினைந்து ஆண்டுகள் எவ்வளவு சொர்க்கமாக இருந்தது!! இன்று இருவரும் வேலைபார்த்த நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டன. வெவ்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்த பங்குகளும் “ஸ்வாகா” ஆகி, வாங்கிய கடனுக்கு வீடும் பறிபோயிற்று. ஒரே வாரத்தில் வாழ்க்கையின் உச்சியிலிருந்து அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டாயிற்று. பட்டுச் சேலைகளை, நகைகளை விற்றாயிற்று.

இப்போது இங்குள்ள இந்தியர்கள் நலச் சங்கக் கூடத்தில் அகதியாக தங்கியிருக்கும் அவலம். பாவம், ரமேஷ், துரும்பா இளச்சிட்டார். மென்பொருள் பொறியாளர் வேலை பறிபோனதும் நம்பிக்கையை தளரவிடாமல் மனுஷன் பல்வேறு நிறுவனங்களில் ஏறி இறங்கினார். இணையதளத்தில் எல்லா பெரிய நிறுவனங் களுக்கும் விண்ணப்பித்தார். ஒன்றிலிருந்தும் வேலை அழைப்பு இல்லை. பொருளாதார நெருக்கடி கேத்ரின் புயல் மாதிரி சுழன்று சுழன்று இவ்வளவு வேகத்தில் தாக்குமா? சரி, பங்கு வர்த்தக்கத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகையை எடுத்தாவது தாய் நாட்டுக்குத் திரும்பலாம் என்றால் அதற்கும் வழி இல்லை. முதலீடு செய்த வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் கூட திவால் நோட்டீஸ் கொடுத்துவிட்டன. ஆமாம் எல்லாருக்கும் நஷ்டம். அந்தப் பண மெல்லாம் எங்கே, யார்கிட்ட போச்சு?! ஒண்ணுமே புரியலை.

ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் வரும் செய்திகளைக் கேட்கும் போது, நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. வேலை பறிபோனவர்கள் தற்கொலை வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் போல் உள்ளனர். குடுபம் குடும்பமாக சாகிறார்கள். நல்ல வேளை வீடு பறிபோன நேரத்தில் இந்த இந்தியர் நலச் சங்க நண்பர்கள் உதவி செய்தார்கள். ரமேஷ் அன்று இருந்த மனநிலைக்கு என்ன விபரீதம் நடந்து இருக்குமோ? இன்னும் அவரை தனியே விட காயத்ரிக்கு மனத்துணிவில்லை. அவளுக்கு ரமேஷ் மீதுதான் கண்.

பங்கு வர்த்தக புள்ளி விவரங்களைப் பார்த்து பார்த்து குழி விழுந்து பூஞ்சை பூத்த கண்களோடு தளர்ந்து நின்றிருந்த ரமேஷை தனியே அழைத்தாள். “வாங்க, இப்படி தளர்வா உட்காரலாம்.”

“உட்கார்ந்து என்ன செய்ய, எப்படி உசிரை விடலாம்னு யோசிக்கலாங்கிறியா?”

காயத்ரி துடித்து துள்ளி . அவரது வாயைப் பொத்தினாள். “என்னங்க இப்படி எல்லாம் பேசுறீங்க, தைரியமாக இருங்க எப்படி யாவது பிழைக்க வழி பார்க்கலாம்!”

“என்னடி, இந்தியாவா இது? எப்படியாவது, கைவண்டி இழுத்தாவது, மூட்டை தூக்கியாவது, பல சரக்குக் கடையில் வேலை பார்த்தாவது பிழைச்சுக்கலாம்! அட வேற வழியில்லனாக்கூட கோயில்ல உண்டைக்கட்டி வாங்கித் தின்னாவது பிழைசுக்கலாம்! இங்கே தங்க இடம் இல்லைன்னா விரைச்சு சாக வேண்டியதுதான். யாரும் எதுவும் கேட்கமாட்டாங்க! கொடுக்கவும் மாட்டாங்க!”

“பிளீஸ், ரமேஷ் கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க. பிள்ளைகளைக் காப்பாத்தணும் அதனால ஊருக்கு போலாம்!”

“ஊருக்கா? அம்மா அப்பாவை அனாதை விடுதியில விட்டுட்டு வந்தோம். ஒரு வருஷமாய் பணம் அனுப்பல. அந்தக் கிழடுக என்ன கதியாச்சோ….? அங்கே போய் யாரு முகத்தில முழிப்பே….? உங்க சொந்தக்காரங்களாவது நல்லா இருக்காங்களா? நம்ம போனோம்னா என்ன பொருள் கிப்டா கொண்டு வந்தோம்னு பேக்கை பார்ப்பாங்க! இங்கேயே எல்லாத்தையும் முடிச்சுக்க வேண்டியதுதான் வேற வழி இல்லை!” “பிளீஸ், மனசை தளர விடாதீங்க ரமேஷ். நீங்கள் தான் தைரியமாக இருக்கணும்”.

“ரமேஷ் கிருஷ்ணசாமி, ரமேஷ் கிருஷ்ணசாமி” என்றுக் குரல் கேட்டு இருவரும் திரும்பினர். சங்கச் செயலர் அழைத்துக் கொண்டே வந்தார். அவர் கையில் ஒரு கடிதம் முதலீடு பண்ணின நிறுவனம் ஏதேனுமிலிருந்து காசோலை வந்திருக்குமோ….!? ஆவலாகப் பார்த்தனர் இருவரும்.

“ஒண்ணுமில்லை இந்தியாவிலிருந்து நேற்று ஒரு கடிதம் வந்தது. அங்கே இங்கேன்னு தேடி அலைந்து போஸ்ட்மேன் இங்கே வந்து கொடுத்துட்டுப் போனார். நிவாரண உதவி கேட்டு அலைஞ்சி கிட்டு இருந்தேன். அந்த அலைச்சல்ல உடனே கொடுக்க மறந்துட்டேன் சாரி.”

“பரவாயில்லை, கொடுங்கோ சார்.” செயலர் நகர்ந்ததும் முனங்கினார் ரமேஷ், “…….அந்தக் கிழடுக போட்டுருக்குதா? நாமே இப்போ சாவோமா, அப்புறம் சாவோமான்னு தவிக்கையில் அதுகளுக்கு என்னத்த அனுப்ப? சாகப்போறோம்னு சொல்லக்கூட தபால் செலவு செய்ய வக்கில்லை.”

“சும்மா இருங்க, இப்படி அவ நம்பிக்கையா பேசாதீங்க”

காயத்ரி கடிதத்தை வாங்கிப் பிரித்தாள்.

“….சிரஞ்சீவி மகன் ரமேஷ்க்கு , அப்பா அம்மா எழுதியது. நீ எப்படி இருக்கே. காயத்ரி, குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்காங்க? கடந்த ஒரு வருஷமாய் உன்கிட்ட இருந்து கடிதம் ஒண்ணும் வரலை. ஃபோன் போட்டாலும் துண்டிக்கப்பட்டுள்ள துன்னு தகவல் வருது. உன்னை தொடர்புகொள்ள மூணு கடிதம் போட்டேன் பதில் இல்லை.

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி, சாப்டுவேர் என்ஜினியர்களை எல்லாம் தாய்நாட்டுக்கு அனுப்பறாங்கலாம். கேள்விப்பட்டோம். ரெண்டு மூணு குடும்பங்கள் தற்கொலை பண்ணிக்கிட்டதாகச் செய்திகள் வந்தன. மனசைக் கலக்குது. எங்களுக்கு நீ எதுவும் கொடுத்து உதவாட்டியும், நீ பொண்டாட்டி பிள்ளைகளோட நல்லா இருக்கணும்னு. நானும் உன் அம்மாவும் வேண்டாத தெய்வம் இல்லை.

உனக்கு அங்க நிலைமை சரி இல்லைனா எப்படியாவது குடும்பத்தோட புறப்பட்டு வரப்பாரு! நாங்க இப்போ முதியோர் இல்லத்தில் இல்லை. எங்கள் முதியோர் இல்லத்தில் இருந்தவர் களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் வேலை பார்க்கிறவங்களாக இருந்தாங்களா…. அங்கே பொருளாதார நெருக்கடியினால இனி பணம் வந்து சேராதுன்னு சேவை இல்லத்தை மூடப் போறேம்னு சொல்லி எங்களை அனுப்பிட்டாங்க, இந்த விவரத்தை போன கடிதத்தில் எழுதி இருந்தோம்.

பதில் இல்லை. உனக்கு அந்தக் கடிதம் கிடைக்காம இருந்திருக் கலாம்னு மறுபடியும் எழுதறேன். எங்கிட்ட இருந்து கொஞ்ச பணத்தை வச்சுக்கிட்டு சோழவந்தானுக்கு வந்துட்டோம். நம்ம கருப்பன்கிட்ட நிலம் ஒரு ஏக்கர் குத்தகைக்கு விட்டிருந்தோம்ல, அதுல, அவன் கிட்ட சொல்லி அரை ஏக்கர் நிலத்தில் மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, ரோஜா, சம்பங்கி பூக்களை கருப்பன் உதவியால நட்டோம். எங்க கூட முதியோர் இல்லத்தில் அனாதை யாக இருந்த அஞ்சு பேரைக் கூட்டி வந்திருந்தோம். அவங்க பூப் பறிக்க, களை எடுக்க உதவி செய்றாங்க. கருப்பனும் பறித்த பூக்களை மதுரையில் கொண்டுபோய் விற்க உதவி செய்யறான். நாங்க நிம்மதியா இருக்கோம். உடம்பு நல்லா இருக்கு.

அங்கே உனக்கு நிலைமை சரி இல்லைனா கிளம்பி வந்திருங்க. நீ வந்தேன்னா இந்த பூ வியாபாரத்தையே நல்லா விரிவா பண்ணலாம். உன்னோட அறிவுத் திறமையை வச்சு வெளிநாட்டுக்கெல்லாம் அனுப்பலாம். ஏழை பாழைகளுக்கு உதவலாம்.

அம்மாவும் நானும், நீ எங்களுக்கு பணம் அனுப்பலைன்னு தப்பா நினைக்கல. உன் மீது கோபமும் இல்லை. நாங்க கேள்வி படற செய்தி நல்லாவே இல்லை. நீ எப்படியாவது குடும்பத்தோடக் கிளம்பி வரணும். பிள்ளைகளை இங்க படிக்க வச்சுக்கலாம். நாங்க உன்னைப் படிக்க வச்சு என்ஜினியராக்கலையா?

இந்தக் கடிதம் பார்த்ததும் உடனே இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணிட்டு கிளம்பு. எங்க உசுரு எல்லாம் உன்குரலை எதிர் பார்த்து துடிச்சிகிட்டு இருக்கு!-இப்படிக்கு அன்பு அப்பா அம்மா.

கடிதத்தை வெடுக்கென்று பிடுங்கி படித்தான். சவக்களையாய் வெளுத்திருந்த அவர் முகத்தில் விடியலின் ரோஜா ரேகைகள் ஜொலித்தன.

உடனே பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு இருபாட்டில்களை எடுத்தார். அதைப் பார்த்ததும் காயத்ரி அதிர்ந்தாள். “என்னங்க இது” அலறினாள். அவர் நேரே கழிவறைக்குப் போனார். அவள் பின் தொடர்ந்து ஓடினாள். பாட்டிலை உடைத்து கழிவறையில் கொட்டி விட்டு முகம் கழுவினார். காயத்ரிக்கு புது மூச்சு வந்தது. அம்மாவின் அலறல் கேட்டு பிள்ளைகள் இருவரும் வந்தனர். அந்த நால்வருக்கும் சிறகு விரிந்தது. இந்தியாவை நோக்கி தொப்புள் கொடி ஈர்த்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top