தொடக்கம்

5
(1)

குப்பைக்கருப்பன் இறந்து விட்டார் என்ற தகவல் மனதைப் பிசைந்தது. புதையுண்ட அவரது நினைவுகள் புத்துயிர்ப்பு பெற்று எழத்தொடங்கிவிட்டன. இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கிளம்பினேன்.

ஒரு கோடைவிடுமுறையில் மாமாவின் ஊருக்குப் போன போதுதான் முதன் முதலில் குப்பைக் கருப்பனை பார்த்தேன். நல்ல உச்சி வெயில் நேரம்; ஞாயிற்றுக் கிழமை சந்தைக்கு வந்த குப்பைக் கருப்பு, மாமா பட்டறைக்கவந்தார். கறுத்த மேனி, புழுதிபூத்த வெள்ளை வேட்டி, சட்டை, கருப்பட்டி வட்டு மாதிரி பளபளக்கும் வழுக்கைத் தலையில் வெண்புல் ஒரு வேலியாய் வட்ட வாட்டத்தில் ஒளிர்ந்த நரைமுடிகள்; சிரைக் காத நரைத்த முகத்தில் எப்பொழுதும் வெள்ளந்தித் தனமும் பெருந்தன்மையும் சம அளவில் கலந்த புன்னகை.

“அப்பச்சி இருக்காகளா?” என்று கேட்டபடியே முன் பெஞ்சில் உட்கார்ந்தார்.

துண்டை எடுத்து வேர்வையைத் துடைத்தார், மாமா மதுரைக்கு போயிருக்கிறார் “என்றேன், “வா, கருப்பு, காப்பி கீப்பி வாங்கியாறச் சொல்லவா?” என்று வேலை பார்த்துக் கொண்டிருந்த மகாலிங்கம் அண்ணன் கேட்டார்.

“வேண்டாம் சாமி, பஸ்ஸை விட்டு இறங்கினதும் இப்பத்தான் ராஜா கடையில் காபி குடிச்சிட்டு வாறேன்” என்றவர் நகைப்பட்டறையை உள்ளே ஒரு நோட்டம் விட்டார். சாமி படங்கள் காலண்டர்கள் மாமா லைசென்ஸ் போட்டோ இதுகள் தாம் தென்பட்டன, அப்படியே பட்டறைக்குள்ளும் வெளியே ரோட்டையும் பார்த்துக் கொண்டிருந்தவர் கொஞ்சம் கழித்து “நான் சந்தைக்குப் போயிட்டு வர்றேன் சாமி” என்று கிளம்பிவிட்டார்.

குப்பைக் கருப்பன் கடையை விட்டு நகர்ந்ததும், குனிந்து வேலைபார்த்துக் கொண்டிருந்த மகாலிங்கம் அண்ணன் நிமிர்ந்து, பார்வையை ஒரு சுழற்று சுழற்றி, “பாருய்யா,, ஆடு அறுக்கிறவனைத் தான்யா நம்புது…” நக்கலும் நையாண்டியுமாய் அங்கலாய்த்தார். உதவியாளர் மூர்த்தி “ஆமாண்ணே, உனக்கு ஏன் வயித்தெரிச்சல், நீ வேணும்னா திறமையா இப்படி ரெண்டு கிராக்கிகளை வளைச்சுப் போட வேண்டியதுதானே?”

பள்ளி மாணவனாக இருந்த எனக்கு இவர்களது பேச்சு புரியவில்லை அப்புறம் அடுத்தடுத்த விடுமுறைகளில் நான் வந்த போதுதான் புரிந்தது. குப்பைக்கருப்பன் தலித் இனத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. பக்கத்து கிராமத்தில் நில புலன்களோடு விவசாயம் பண்ணி வருகிறார். அவருக்கு இரண்டு மனைவிகள், குழந்தைகள் இல்லை. மனைவிமார் களுக்கு தண்டட்டியும் தங்கச் சங்கச் சங்கிலிகளும் செய்யக் கொடுத்திருக்கிறார். மாமா, உடனே செய்து தராமல் இழுத் தடித்துக் கொண்டே இருக்கிறார் என்பதும் குப்பைக் கருப்பனும் பொறுமையாக அலைந்து வெகுநாள் கழித்து ஒன்று ஒன்றாக செய்து வாங்கினார் என்பதும், அதற்குப் பின்னரும் நகைகள் செய்ய பணமும் கொடுத்து உதவுகிறார் என்றும் நிலத்தில் விளையும் பயறு வகைகள், பருப்பு வகைகள் கொடுத்து வருவார் என்றும் தெரிய வந்தது.

ஆனால் மாமா வீட்டுல நல்ல நாள் பெரிய நாள் விசேஷம், அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டும் நாள், இப்படி பல சந்தர்ப்பங்களில் குப்பைக் கருப்பனையும் அவரது மனைவிமார் களையும் பார்த்திருக்கிறேன். வீட்டு வராந்தா திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை பாக்கு புகையிலை குதப்பியபடி வறண்ட முகத்தில் ஒரு வித பெருமிதம் தவழ்ந்தபடி இருப்பார்.

குப்பைக் கருப்பன் பட்டறைக்கு வரும் பெரும்பாலான சமயங்களில் மாமா பட்டறையில் இருக்கமாட்டார். மகாலிங்கம் அண்ணன் நக்கலும் நையாண்டியும் கலந்து கிண்டலடிப்பார்.

ஒருமுறை இப்படித்தான் மகாலிங்கம், குப்பைக் கருப்பனிடம் “கருப்பு நீ நகைக்கு கொடுத்த பணமெல்லாம் உங்க அப்பச்சி செலவு பண்ணிட்டாரப்பா, நீ எப்படி வாங்கப் போறே…?” என்று சொல்லி இருக்கிறார்

“அட, போங்கய்யா, இப்போ என்ன அந்தப் பணத்தை அவருதகாத வழியிலா செலவு பண்ணிட்டாரு? பிள்ளைக படிப்புக்குத் தானே செலவு பண்ணினாரு! பண்ணிட்டுப் போராரு போ!… அவுக கொடுக்கும் போது கொடுக்கட்டும்!! நான் கடைக்கு வர்றது பணத்தை நகையை கேட்கறதுக்கு இல்ல! டவுனுக்கு வர்றோமே, அவரைப் பார்த்தட்டுப் போவோம்னுதான்..” என்று கருப்பன் சொல்லவும், மகாலிங்கம் அண்ணன் அப்படியே வாயடைச்சு உறைஞ்சு போனார்.

ஒரு கடுங்கோடையில் மாமா ‘ மாரடைப்பில் இறந்து போனார் துக்கம் கேட்க வந்த குப்பைக் கருப்பனும் மனைவி மார்களும் விம்மி நெஞ்சலடித்து அழுதார்கள். பணம் போயிருச் சேன்னு அழுவதாக சுற்றியிருந்தவர்கள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.

“எங்களை ஈனசாதி எளிய சாதின்னு பார்க்காமா தங்குடும்பத்தாளுக மாதிரி நினைச்சி நடத்துனீங்களே, தொலை தூரத்துச் சீமை கோயிலு குளம் எல்லாம் கூட்டிப் போய்க் காமிச்சிகளே, பிள்ளைகளையும் எங்களையும் தவிக்க விட்டு பொக்குன்னு போயிட்டிகளே மகராசனே! இந்தப் பிள்ளைகளுக்கு இனியாரு இருக்கா? எங்களுக்கு இனியாரு இருக்கா?” என்று அழுதது ஒரே உணர்ச்சிப் பெருக்காக இருந்தது. சொந்தமும் பந்தமும் தெருக்காரர்களும் அன்னம் பாரித்து பெருமூச்சு விட்டனர்.

மாமாவுக்கான காரியங்கள் யாவும் முடிந்தன. மூன்று மாதம் கழித்து அவர்வீட்டை விற்று கடனை எல்லாம் அடைச்சிட்டு பிள்ளைகளையும் அக்காவையும் மதுரைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு நடந்தது. வீட்டை விற்றதில் கணிசமான தொகை வந்தது. குப்பைக் கருப்பனும் குடும்பத்தாரும் வரவழைக்கப் பட்ட னர்.

குப்பைக் கருப்பனிடம் முப்பதாயிரம் ரூபாய் கொடுக்கப் பட்டது. அவரும், அவரது மனைவிமார்களும் வாங்க மறுத்துவிட்டனர். அப்பச்சியே போயிட்டார், இந்தப் பணம் வந்தா நெறையப் போகுது? என்று புலம்பினார்கள். அக்காவும் பிள்ளைகளும் மன்றாடி கெஞ்சியபின், பணத்தை வாங்கி அதில் பதினைந்தாயிரத்தை கட்டாயப்படுத்திக் பிள்ளைகளிடம் கொடுத்து விட்டனர்.

மனமில்லாமலே கனத்த நெஞ்சோடு பிரிந்தனர் நாட்கள் நகர்ந்தன ….

பேருந்து நிறுத்தத்தில் இறங்கினேன், ஒலிபெருக்கி சோகரசத்தை கொட்டிக் கொண்டிருந்தது. நையாண்டி மேளக் குழுவினரின் ஆட்டம் பாட்டம் அமர்க்களப்பட்டது. விசாரித்ததில் “பெரிய சாவு சந்தோஷமாக வழி அனுப்புவோம்” என்றனர். சாக்கடைக் கவிச்சியும் மதுபான நாற்றமும் மூச்சுத் தடுமாறச் செய்தன. ஆட்டம் பாட்டத்தைப் பார்த்து பன்றிகளும் நாய்களும் பம்மி பதுங்கின. ஒரு ஓரமாக பூப்பல்லாக்கு போல பாடை ஜோடனை நடந்து கொண்டிருந்தது.

பறை ஒலி சங்கு சேகண்டி ஒலி முழங்க சொந்தக்காரர்கள் பெண்களும் ஆண்களுமாய் தனித் தனியே நீர்மாலை எடுத்து வந்தனர். வேட்டி மறைப்பு கட்டி குளிப்பாட்டினர்.

முன் நின்று சடங்குகளை நடத்திக் கொண்டிருந்த நாவிதர் “பிறந்த வீட்டுக் கோடி, புகுந்த வீட்டுக் கோடி போடறவங்க வாங்க” என்று கத்தினார். சொந்தங்கள் அங்கங்கே குழு குழுவாய் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தனர். “பாவம் பிள்ளை இல்லாதவர், உடன் பங்காளிமார் யாரும் இருந்தா வாங்கப்பா, செய்யிமுறை செய்யுங்க” நாவிதர் கூப்பாடு போட்டார்.

அங்காங்கே குழு விவாதம் தொடர்ந்தது. யாரும் இந்தப் பக்கம் வரவில்லை. நேரம் ஆகிக் கொண்டிருந்தது. “ஏம்பா எம்புட்டு நேரம் பொணத்தை வாசல்ல வச்சுருக்கிறது! பொழுது விழப்போகுது! பங்காளிக யாராச்சும் வாங்கப்பா முறை செய்ய!” நாவிதர் மீண்டும் சத்தம் கொடுத்தார். மிச்சமீதி சொத்து என்ன தேறும் என்ற விவாதம் அங்கே நடந்து கொண்டிருந்தது.

நான் கொண்டு வந்திருந்த சேலைகளை குப்பைக்கருப்பன் மனைவிமார் தோளில் போட்டேன். விம்மி பெருமூச்சு விட்டு அழுதனர். கையிலிருந்த புது வேட்டியை முகத்தில் புன்னகை உறைந்தபடி கிடந்த குப்பைக்கருப்பன் உடலில் போர்த்தினேன். குழு குழுவாய் பிரிந்திருந்தவர்கள் ஓரணியாய் ஓடி வந்தனர்.

“ஏய்யா அங்காளி பங்காளி நாங்க இருக்கோம்ல, நீ எப்படியா கோடிபோடலாம்? நீ என்ன எங்க இனத்தில, இந்தச் சேரியில் பிறந்த ஆளா?”… என்று ஒருவர் கத்த

இன்னொருவர் சாராய நெடியுடன் “ஏய்யா நீ பாட்டுக்கு கோடி போடறியே ஓம்புள்ளைகயை எங்க சாதி பயலுகளுக்கு கொடுத்து சம்பந்தம் பண்ணிக்குவியா?”

இதை எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. நிலைகுலைந்து திக்கு முக்காடி சமாளிப்பதற்குள் குப்பைக் கருப்பன் மனைவிமார் இரண்டு பேரும் எழுந்து அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிட்டு எல்லாரும் பேசாம இருங்க ராசா என்று அழுதனர்.

மீண்டும் மீண்டும் என்னை நோக்கி கேள்விகள் வீசப்பட்டன.

“நாமெல்லாம் ஒரே மனுஷ இனம்னு உணர்ந்தோம்னா, நம்ம பிள்ளைகள் சம்பந்தம் பண்ணிக் கொள்வார்கள். அது அவர்களது உரிமை. வேறுபாடு பாராமல் பழகுவது நமது கடமை” உலர்ந்த போன நாக்கில் தடுமாறிச் சொன்னேன், கிண்டலும் கேலியும் விசிலும் எழுந்தன. பெரியவர் கத்தி சத்தம் கொடுத்து சடங்குகளை விரைவு படுத்தினார். என்னை எல்லோரும் வித்தியாசமாய் பார்க்க நான் கொஞ்சம் ஒதுங்கி குப்பைக் கருப்பன் மனைவிமார் அருகில் நின்றேன். ஆட்டம் பாட்டத்தோடு குப்பைக் கருப்பனது இறுதிப் பயணம் தொடங்கியது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தொடக்கம்”

  1. மூர்த்தி சிறியது ஆனாலும் மூர்த்தி பெரியது என்ற பழமொழிக்கு ஏற்ப இருந்தது கதை. கதை சிறியது சொன்ன கருத்தோ பெரியது. மனிதன் மனம் பார்க்க தொடங்கிவிட்டால் சாதி மதம் அழிந்துவிடும் என்று கூறிய விதம் சிறப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: