தென்றலாய் அழுதாள்

5
(1)

உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. வெட்ட வெளியில் ஆவி அனலாய் வீசியது. சுழன்றடித்த காற்று புழுதியை கிளப்பியது. அங்குமிங்குமாய் எழும்பும் கட்டிடங்கள் புதிய நகரை உருவாக்கிக் கொண்டிருந்தன.

கட்டிட வேலைகளுக்கு தண்ணீர் சுமந்த கட்டை வண்டிகள் லொடக் … லொடக் கென்று ஆடிச் சென்றன. காண்ட்ராக்ட் லாரிகள் அலைந்து திரிந்தன. புதிதாக உயரும் கட்டிடங்களில் தலையில் சும்மாடு’ கட்டி செங்கல்லும், சிமெண்ட் கலவையும் சுமந்த பெண்கள் சாரங்களில் ஏறி இறங்கினார்கள்.

மின்சார லயனுக்கு அடியில் நின்று புதிய வீட்டுக்கு அளவெடுத்துக் கொண்டிருந்தார் போர்மேன் பால்ராஜ். லைன்மேனும் ஹெல்பரும் டேப்பிடித்து அளந்து சொல்ல, குறித்துக் கொண்டார். இந்த லைனில் நான்கு வீடுகளுக்கும், அடுத்துள்ள தெருவில் புதிதாக லைன் இழுப்பதற்கும் அளவெடுக்க வேண்டும். இதே லைனில் ஏற்கனவே ஏழெட்டு சர்வீஸ்கள் இருக்கின்றன.

ஸ்டே கம்பியைப் பிடித்தபடி, வலது கை டைரியால் முகத்து வெயிலை மறைத்து நின்றார் போர்மேன் புதிய லைன் இழுக்கு மிடத்தை ஏ.இ.யும் இரண்டு வயர்மேன்களும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று ‘வீல்’ லென்று வந்த சத்தம் எல்லோரையும் உலுக்கியது திரும்பிப் பார்த்தார்கள்.

பால்கனியில் நின்று லைனைப் பிடித்துத் தொங்கியவாறு. ஒரு பெண் துடித்துக் கொண்டிருந்தாள். லைனைப் பிடித்த கையிலிருந்து நீளமான கயிறும், அதன் நுனியில் தண்ணீர் இறைக்கும் வாளியும் தொங்கின. நேர் கீழே தண்ணீர் நிரப்பிய பெரிய ட்ரம்கள் இருந்தன.

எல்லோரும் ஸ்தம்பித்து நின்றார்கள். போர்மேனும் ஹெல்பர்களும் ஓடி வந்தார்கள் கரண்டை நிறுத்த ட்ரான்ஸ்பார்மரை நோக்கி ஒரு வயர்மேன் ஓடினார். என்ன செய்வதென்று யாருக்கும் புரியவில்லை. எல்லோரும் பயந்து நின்றார்கள். கூட்டம் கூடிவிட்டது.

அடுத்த நிமிடத்தில் கரண்ட் நிறுத்தப்பட்டு தொப்பென்று பால்கனியிலேயே விழுந்தாள். எந்த அசைவுமின்றி விழுந்தது போல் கிடந்தாள். போர்மேன் சத்தங்குடுத்தார்.

‘யாராச்சம் மேலே ஏறி, கீழ கொண்டு வாங்க’

இரண்டு மூன்று பேர் ஏறினார்கள். தோளில் போட்டுக் கொண்டு ஒருவர் சாரம் வழியாகவே இறங்க, மற்ற இருவரும் தொடர்ந்து இறங்கினர்கள். கைகால்கள் அசைவற்றுத் தொங்கின தலையும் தொங்கியது. எந்த உணர்வும் தெரியவில்லை. ஒருவரை ஒருவர் பீதியோடு பார்த்துக் கொண்டார்கள். பெண்கள் குழம்பித் தவித்தார்கள். ஒரு சிலர் அழுது விடுவது போல் நின்றார்கள். அதில் ஒருத்தி உறவினராக இருக்க வேண்டும், கண்ணீ ர் வடிய வேகமாக வந்து, ‘கமலா… அம்மா..கமலா…’

லேசாகத் தட்டித் தட்டிக் கூப்பிட்டாள். ‘கமலா …… ‘ என்று கடைசியாக உச்சரிக்கும் போது குரல் கம்மியது. பதில் இல்லை.

‘ராசு …. ஒடிப் போயி ஏதாவது டாக்ஸி கூப்புட்டு வா….. ஓடு ….

‘வேணாங்க …. அதுக்குள்ள நேரமாயிடும் …. இப்படியே குறுக்க ஆஸ்பத்திரிக்கி போயிருவோம் … வாங்க ….. வாங்க …. போர்மேன் பால்ராஜ் அவசரப்படுத்தி முன்னால் நடந்தார். ஓட்டமும் நடையுமாய் பத்து இருபது பேர் சென்றார்கள். கண்ணீர் மல்கிய பெண்களும் நாலைந்து பேர் ஒடினார்கள் கட்டிட வேலைகள் அத்தனையும் நின்று விட்டது. கூடிக் கூடிப் பேசினார்கள். சுமந்து செல்வது கமலாவையா? அவளது உடலையா? என்பது புரியாத நிலையில் பார்த்ததை மட்டும் பேசினார்கள்.

கேள்விப்படக் கேள்விப்பட மேலும் ஆட்கள் ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தார்கள். ஐந்தே நிமிடத்தில் ஆஸ்பத்திரியை அடைந்து, வராண்டா கட்டிலில் படுக்க வைத்தார்கள். போர்மேன் உள்ளே ஓடி டாக்டரைத் தேடினார். எல்லா வார்டுகளிலும் தேடிவிட்டு, டாக்டர் வீட்டுக்கு ஆள் அனுப்பினார். கூட்டம் சேர்ந்து கொண்டே இருந்தது. கிசு கிசு வென்று பேசிக் கொண்டார்கள்.

இப்போதும் எந்த உணர்வும் இல்லாமல் அசையாமல் கிடந்தாள். லேசாகப் புரட்டி குப்புறப் படுக்கவைத்து, போர்மேன் பால்ராஜ் முதுகுப்பக்கமாக லேசாக அமுக்கி அமுக்கி மூச்சுப் பயிற்சி கொடுத்தார். லேசாக அசைவு தெரிந்தது. அதுவும் தொடர்ச்சியாக இல்லை. அதனால் அது அமுக்கியதால் ஏற்பட்டதா? இல்லையா என்பது தெரியவில்லை.

ஆனாலும் ஒரு நம்பிக்கை. மீண்டும் போர்மேன் முயற்சி செய்தார். கொஞ்சம் தொடர்ச்சியாக முதுகை அமுக்கி அமுக்கிக் கொடுத்தார். அதே அசைவு கிடைத்தது. லேசாக மூச்சு இழுப்பதும் தெரிந்தது.

வடிந்த கண்ணீரோடு பெண்கள் கூட்டமும் வந்து சேர்ந்தது. டாக்டர் இன்னும் வரவில்லை.

“கூட்டம் போட்டு காத்த மறைக்காதீங்க …. டாக்டர் வந்தா சத்தம் போடுவாரு. கொஞ்சம் வெளில் நில்லுங்க…”

எல்லோரும் வெளியில் சென்றார்கள். கமலாவின் உறவுப் பெண்கள் மரத்தடியில் சாய்ந்து தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டார்கள். நாலைந்து ஆண்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் படியிலும் மரத்தடியிலும் நின்றார்கள். டாக்டர் வருவதை எட்டி எட்டிப் பார்த்தார்கள்.

கமலாவின் அசைவு நம்பிக்கையைக் கொடுத்தது. தொடர்ச்சியாகவும் இருந்தது. இதை பயன்படுத்தி கொஞ்சம் புரட்டிப் போட்டு இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி தட்டிக் கொடுத்தார் பால்ராஜ்.

“தண்ணீர் கொண்டு வாங்க… சீக்கிரம் …”

ஹெல்பர் சுருளி கொண்டு வந்த தண்ணீரை சட்டென்று முகத்தில் அடித்தார். பலன் கிடைத்தது. கொஞ்சம் திரும்பிக் கொடுத்து, மூச்சிழுத்தாள். நல்ல அசைவும் இருந்தது.

“சுருளி…. அந்த அட்டைய எடுத்து லேசா விசிறி விடு”

சுவரில் தொங்கிய காலண்டர் அட்டையால் சுருளி விசிறினார். தண்ணீரை மீண்டும் முகத்தில் சட்டென்று அடிக்கவும் திடுக்கிட்டு முழித்துப் பார்த்தாள். நன்றாக விசிறிக் கொடுக்கவும் இழுத்து மூச்சுவிட்டு உணர்வுக்கு வந்தாள்.

உணர்வு வந்தவுடன் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து சுற்றிலும் பார்த்தாள். திடுக்கிட்டது போல் முழித்துப் பார்த்து தேம்பித் தேம்பி மூச்சு விட்டு, “அக்கா… என்று அமுங்கிய குரலில் அழுதாள். கண்ணீர் வடிந்தது. குத்த வைத்து முழங்காலில் தலை கவிழ்ந்து தேம்பினாள்.

குழந்தை பிறந்தவுடன் அழுவது அதன் உயிருக்கு அடையாளமாய் இருப்பது போல் இதுவும் இருந்தது.

எல்லோர் முகத்திலும் ஒரு தெளிச்சி, கொஞ்சம் கலகலப்பு தோன்றியது. மரத்தடியில் தலைகவிழ்ந்த அக்காவும் மற்றவர்களும் அவசரமாய் வந்தார்கள்.

“அக்கான்னு …. அழுதுட்டு இருக்கு”

சிரித்தவாறு சொல்லி விட்டு போர்மேன் பால்ராஜ் மரத்தடிக்கு வந்து பீடியைப் பற்ற வைத்தார்.

இன்னும் டாக்டர் வரவில்லை.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தென்றலாய் அழுதாள்”

  1. ஆபத்தன மின்சரம் அவசியமான ஒன்று. அதை பற்றிய விழிப்புணர்வு அளிக்கும் சிறுகதை. கூடவே படித்த டாக்டர் வரவில்லையென்றாலும் அனுபவசாலி ஃபோர்மேனின் முதலுதவி… சிறு பாடம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: