தூண்டில் மீன்கள்!

5
(1)

“சீக்கிரமா வெளியேறுல.” முதலாளி துரத்தினார். “ஆபீசரு அடுத்த கடைக்குப் பேரிருக்காரு| இங்க வாரதுக்குள்ள வெளியேறு. எங்குட்டாச்சும் திரிஞ்சுட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வா!”

நாகேந்திரனுக்குப் புரிந்து போயிற்று. சிறுவனான தன்னை வேலைக்கு வைத்திருப்பது சட்டப் படி குற்றம். அந்தக் குற்றத்தில் இருந்து தப்புவதற்காக முதலாளி தனக்குத் தருவது ஒரு மணி நேரச் சுதந்திரம். காபி டீ வாங்க ஓடாமல், மிளகாய் மூடைகளைத் தட்டி உலர வைக்காமல், பருத்திப் பொதிகளுகத்கு விலாசம் போடாமல் ஒருமணி நேரம் சந்தோஷமாய்த் திரியலாம்.

மூன்று மாதங்களுக்க முன்பு இதே மாதிரி ஒருமுறை முதலாளி விரட்டிய போது அந்தக் கடையில் பல வருஷங்களாய் வேலை பார்க்கும் வீராச் சாமி அண்ணனை விசாரித்தான்.

“ஆபீசரு வந்தாக்கா மொதலாளி என்னய எதுக்குண்ணே வெளிய போகச் சொல்லி வெரட்டுறாரு?

“நீ வயசுக்க வராத சின்னப் பய இல்லியா? அதனாலதான்” என்றார் வீராச் சாமி அண்ணன்.

“ஏன், சின்னப் பயல கடையில வச்சுக்குறப் படாதா?”

“ஆமா” என்றார் வீராச் சாமி அண்ணன். “இது படிக்கிற வயசு| படிப்பக் கெடுத்துப் போட்டு வேலக்கி வச்சுக்குறது சட்டப் படி குத்தம்| இது ஆபீசருக்குத் தெரிஞ்சா அபராதம் போடுவாரு.”

ஏறத்தாழ எல்லாத் தொழில் ஸ்தாபனங்களிலும் சிறுவர்களை எடுபிடிகளாய் அமர்த்திக் கொள்வது ஷாப் செட் ஆபீசருகு;குத் தெரிஞ்ச ரகசியம்தான் என்றும் அவர் ரெய்டு வரும் போது மட்டும் அந்த எடுபிடிகளைக் கண்ணில் காட்டாமல் இருப்பது அவருக்கும் சட்டத்துக்கும் அளிக்கப் படும் மரியாதை என்றும் விளக்கினார் வீராச் சாமி அண்ணன்.

மனசெல்லாம் அலையலையாய் சந்தோஷம் பாயக் கடையை விட்டு வெளியேறினான் நாகேந்திரன். மிளகாய்க் கமறலில் இருந்தும் பஞ்சுத் துகள்களில் இருந்தும் விடுபட்ட நாசி, காற்று மண்டலத்தின் வெற்று வெளியில் ஒருவித வசீகரமான வாசனை பரவியிருப்பதாய் உணர்ந்தது. தகிக்கத் தொடங்கிய வெயிலின் ஆவேசத்தில் கூட ஒரு வகையான குளுமை குடிகொண்டிருப்பதை உணர்ந்தான். உஷ்ணத்தால் உக்கிரமடைந்து கொண்டிருந்த பூமி அவன் உள்ளங்கால்களை சோதிக்க வில்லை. ஒருமணி நேர சின்னச் சுதந்திரம், அந்த மனித ஜீவனை ஆகாயம் பூமியெங்கும் விளையாட வைத்தது.

எங்கே போவதென்று தெரியாமல் நடந்து  கொண்டிருந்தான். வீட்டுக்குப் போகலாமா என்று தோன்றியது.

வேண்டாம்! அம்மா கோபிப்பார். கடையில் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவந்து விட்டதாக நினைத்து அடிக்க வருவார்.

மிளகாய், பருத்தி போன்ற விளை பொருட்களை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகளுக்குக் கைமாற்றுகிற அந்தக் கமிஷன் மண்டியில் சேர்ந்த சில நாட்களில் அம்மாவிடம் அவன் வாங்கிய அடி இன்னும் நினைவுகளில் வலிததது.

அன்று கடைக்குப் போகவே எரிச்சலாய் இருந்தது. மிளகாய்க் கொடோனுக்குள் நுழைந்ததும் மூக்கும் கண்ணும் எரியத் தொடங்கின. தும்மல் வந்து மண்டையில் புரையேறியது. மூளையைக் குடைந்தெடுக்கிற மாதிரி காறியது. கண்ணிடுக்கில் நீர்த்திவலைகள் முட்டிக் கொண்டு வந்தன.

கணக்குப் பிள்ளையிடம் போய் ஆள்காட்டி விரலை நீட்டி ‘ஒண்ணுக்கு’ என்றான்.

அவனை வெறித்துப் பார்த்தார் கணக்குப் பிள்ளை. “என்னலே, பொழுதன்னக்யும் இதுதான் வேலையா?”

‘அவசரம்’ என்பதுபோல் பாசாங்கு செய்தான்.

‘போ’ ‘போ’ என்று தலையாட்டினார்.

வெளியேறியவன் திரும்பவும் கடைக்குப் போகாமல் வீட்டுக்குப் போனான்.

புளித்தட்டு இல்லாததால் அம்மா வீட்டில் ஓய்வாக இருந்தார். ”என்னடா இந்நேரத்துல?” அதிர்ச்சியுடன் கேட்டார்.

அழுதுகொண்டே சொன்னான் நாகேந்திரன். “மொளகா வாட தாங்க முடியல. கண்ணு காந்துது. மூக்கு எரியுது. கடக்கிப் போகப் பிடிக்யல.”

“அடப் பாவி!” என்றாள் அம்மா. “வெண்ண தெரளும்போது தாழிய ஒடக்கிறியேடா.”

விறகுக் குச்சியை எடுத்து வீசினாள். இடது கையைப் பிடித்துக் கொண்டு கால் தொடைகளில் சுரீர் சுரீர் என அடித்தார்.

“பன்னண்டு வயசு எளந்தாரி, மொளகாக்கிப் பயந்துகிட்டு ஓடியாந்திருக்கியே? ஒனக்கு வீணெழவு கஞ்சி ஆரு ஊத்துவா?” கண்கள் பனித்திருக்க மூக்கைச் சிந்தி மதிலில் துடைத்தாள்.

கோடு கோடாய் வீங்கி நின்றன அவன் கால்கள். கன்றிச் சிவந்து எரிச்சல் தந்தன.

அன்றிலிருந்து நாள் தவறாமல் கடைக்குப் போகிறான். மொதலாளியம்மா சாணி தட்டச் சொல்லி, துணி துவைக்கச் சொல்லி வேலை ஏவினாலும், முதாலாளியானவர் ‘ஆத்தா’ ‘அம்மா’ என்று வாய் கூசாமல் வைத போதும் வியாபாரப் பொருட்கள் அவன் உடலையும் உள்ளத்தையும் உருக் குலைத்த போதும் நாள் தவறாமல் கடைக்குப் போய்க் கொண்டிருந்தான்.

‘டைங்’ ‘டைங்’ ‘டைங்!’

‘ஆர் சி நடுநிலைப் பள்ளி’ என்ற பெயர்ப் பலகையைத் தாண்டி ஓங்கி வளராத கட்டிடத்தின் இரு தூண்களுக்கிடையில் தொங்கிக் கொண்டிருந்த வெங்கல மணி ஓங்காரக் குரல் எழுப்பி நாகேந்திரனின் கற்பனையைக் கலைத்தது.

“அடேயப்பா! இம்புட்டுக் தூரம் வந்துட்டமா?” அவன் உள்மனம் ஆச்சர்யப் பட்டது.

பிள்ளைகள் எல்லாம் வெளியே ஓடிவந்து ஜலதாரைப் பக்கம் ஒதுங்கினார்கள். இடைவேளை விட்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டான்.

கேட் அருகே சென்று வேடிக்கை பார்த்தான். அவன் விழிகள் ஏக்கத்தோடும பரிதாபத்தோடும் அகல விரிந்தன. பெருமூச்சு ஒன்று பிரவாகமெடுத்தது.

அவன் படித்த பள்ளிக் கூடம்! அவன் ஓடி ஆடி விளையாடிய மைதானம்! அவனால், அவனைப் போன்ற மாணவர்களால் நீர் வார்த்து வளர்க்கப் பட்ட பூஞ்செடிகள்!

கல்யாணமாகிப் போன மூத்த மகள் முதன்முறையாயப் பிறந்தகம் திரும்பும் போது, அவளை ஆரத் தழுவி அரவணைத்துக் கொள்ளும் தாயைப் போல அந்தப் பள்ளி வளாகத்தைவிழிகளால் அரவணைத்தான் நாகேந்திரன்.

காம்பவுண்டின் எல்லா மூலைகளிலும் ஓங்கி வளர்ந்து கூந்தல் பரப்பிய அசோக மரங்கள்! பள்ளிக் கூடத்தின் மதிலை ஒட்டிய நீளவாக்கில் வரிசையிடப்பட்ட பூந்தொட்டிகளில் வண்ணத்துப் பூச்சிகளாய்க் குரோட்டன்ஸ் செடிகள்! கட்டிடங்களுக்கப்பால் முக்கோண விடிவங்களில் புல் தரைப் பாத்திகள்! அதற்கு பார்டர் அமைத்தாற்போல சின்னச் சின்ன பூச்செடிகள்!

இன்றைக்குத்த்hன் அதைப் புதுசாய் தரிசிப்பது போல ஒரு பிரம்தை! பழகி அறியாத புது கிராமத்தின் பசுமை படர்ந்த புல் வெளியில் நடப்பது போல ஒரு சந்தோஷம்!

போன வருஷம் வரை அவனுக்கு அடைக்கலம் தந்து படிப்புக்கு வழிவகை செய்து, சிறுவர்களோடு சேர்ந்து, நொண்டி விளையாடவும் கண்ணாமூச்சி ஆடவும் உறுதுணையாய் இருந்த அந்த காம்பவுண்டு, இன்று அன்னியமாகி ஏதோ ஓரிடத்தில் விலகிப் போய் நிற்கிறது.

அதோ! போன வருஷம் அவன் படித்த ஐந்தாம் வகுப்பு! ஜன்னல் வழியே கரும்பலகையும் டீச்சர் மேஜையும் தெரிந்தன. பிள்ளைகள் ‘காச்’ ‘மூச்’ என்று கத்திக் கொண்டிருந்தார்கள்.

அவனுக்கு சொல்லிக் கொடுத்த பிரேமா டீச்சரை நினைத்துக் கெர்ணடான். மிகவும் நல்லவர்கள். எப்போதும் கோபப் பட்டதே கிடையாது. மாணவர்களுக்குப் புத்திமதிn சொல்வதென்றால் கூட ஒரு கதை மூலம்தான் சொல்வார்கள்.

நாகேந்திரனைப் பற்றியும் ஒருமுறை கதை சொன்னார்கள்.அதை இப்போது நினைத்தாலும் கர்வமாக, பெருமையாக இருந்தது அவனுக்கு.

“ஒரு காட்டுக்கு இருபது மாடுகள் ஒரே தொழுவமாச் சேந்து மேயப் போகுது” என்று ஆரம்பித்தார்கள். பிள்ளைகள் எல்லாம் அமைதியாகக் கேட்டன. “அதுல ஒரே ஒரு மாடு மட்டும் எந்தப் பக்கமும் கவனம் செலுத்தாம மேயிறதுலயே கவனமா இருந்துச்சு| ஆனா மத்த பத்தொம்பது மாடுகளும் கொஞ்ச நேரம் மேய, கொஞ்ச நேரம் சண்டை போட, கொஞ்ச நேரம் பராக்குப் பாக்க, இப்படியுமா இருந்துச்சு| நல்லா மேஞ்ச மாடு மட்டும் கொளுகொளுன்னு பூரிப்பா வளர, மத்த மாடுகள்லாம் ஏலும்பும் தோலுமா சத்தில்லாம வரண்டு போச்சு.”

கதையை நிறுத்திவிட்டு எல்லாரையும் ஏறிட்டுப் பார்த்தார்கள்.

“கடைசியில என்ன ஆச்சு தெரியுமா? அந்த ஒரு மாடு மட்டும் நெறையப் பால் குடுத்து ஜனங்களுக்குப் பயனுள்ளதா இருந்துச்சு| மத்ததுகள்லாம் யாருக்கும் பிரயோஜனப் படாம அடிமாடுகளா விற்பனையாகி கசாப்புக் கடைக்கிப் போயிருச்சு. இங்க நம்ம கிளாஸ்ல நாகேந்திரன் ஒருத்தன்தான் ஒழுங்காப் படிக்கிறான்| அவன் மட்டும்தான் நம்ம நாட்டுக்குப் பயனுள்ளவனா வரமுடியும். மத்தவங்கள்லாம்…..” இன்றும் அந்த வார்த்தைகள் அவனைக் குளிர்ச்சிப் படுத்தின.

இருந்தும் என்ன செய்ய?

‘புஸ்தகம் வாங்கப் பணம் இல்லை, நோட்டு வாங்கக் காசு இல்லை’ என்று சொல்லிக் கொண்டு நாகேந்திரனைப் பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டாள் அம்மா.

“வேணாம்மா, நான் படிக்யப் போறேன், ஆசையா இருக்கு.” நாகேந்திரன் கெஞ்சினான்.

“இதுக்கு மேல படிக்ய வக்ய எனக்குச் சத்துப் பத்தாது. பாட்டம் பூட்டன் ஏதும் சம்பாதிச்சு வச்சுட்டுப் போயிருக்காகளா?”

பேயறைந்த மாதிரி போயிற்று நாகேந்திரனுக்கு. பிரேமா டீச்சர் கூட வீட்டுக்கு நேரடியாக வந்து எவ்வளவோ சொல்லிப் பார்த்;தார்கள். அவன் படிப்பை நிறுத்துவது என்பது, அவனைத் தீக்குண்டத்துக்குள் நிறுத்துவது போல என்று வற்புறுத்தினார்கள்.

அம்மா மசியவில்லை. அவனைப் படிக்க வைக்க வசதி இல்லை என்றும், அப்படிப் படிக்க வைத்து விட்டாலும் வேலை வாங்கித் தர தகுதி பத்தாது என்றும் கூறிவிட்டாள். அவன் படிப்பு வெட்டுண்டு போன போது கமிஷன் கடை வாசல் பச்சைக் கொடி காட்டி வரவேற்றது. அன்று அவன் அழுத அழுகை….அப்பா உயிரோடு இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்குமா?

“ஏலே ராகவா! இங்க பாருடா, நம்ம கைசூம்பி நாகேந்திரன்.”

நினைவுகளை அறுத்துக் கொண்டு சுய நினைவுக்கு வந்தான் நாகேந்திரன். சக மாணவனான பாபு நின்றிருந்தான்.

“என்னடா இங்க நிக்கிற?”

போன வருஷமாய் இருந்திருந்தால் ‘கைசூம்பி’ என்று சொன்னதற்கு இந்நேரம் ஓர் அரை விழுந்திருக்கும். அப்படித்தான் ஒருநாள் முருகேசனும் கந்தசாமியும் சண்டை போட்டுக் கொண்டார்கள். முருகேசன் பக்கத்து வீட்டுக்காரன். அதனால் அவனுக்கு ஆதரவாக நாகேந்திரன் கந்தசாமியோடு சண்டைக்குப் போனான்.

“ஏலே கைசூம்பிப் பயலே! நீ என்னடா வக்காலத்துக்கு வார?” என்றான் கந்தசாமி.

கண்கள் சிவக்கப் புலிபோலப் பாய்ந்தான் நாகேந்திரன். கூர்மையான கல் ஒன்றை எடுத்தெறிந்து காயப் படுத்தினான். சொலசொலவென்று ரத்தம் ஒழுகியது கந்தசாமிக்கு.

பிரேமா டீச்சர் நாகேந்திரனைக் கூப்பிட்டு அடித்தார்கள். “நீ படிக்கிறதுல மொத ஆளா இருக்க மாதிரி கிசும்பு பண்றதுலயும் மொத ஆளா இருப்ப போல்ருக்கே.”

பாபு இப்போது ‘கைசூம்பி’ என்று சொன்னதும் கோபம் வரவில்லை. ‘இன்னொரு தடவ சொல்லுடா’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது. அவர்கள் வைதுவிட்டு ஓட, அவர்களை விரட்டி விரட்டி ஓடிய சம்பவங்கள் அநஞ்சோரம் நிழலாடின. “என்னடா நாகு! இங்கன நிக்கிற?” பாபு மீண்டும் கேட்டான்.

“ஒண்ணுமில்ல, ஒரு மணி நேரம் ரெஸ்டு| சும்மா இங்குட்டு வந்தேன்.”

“இந்தா மிட்டாயி, தின்னு.”

“வேண்டாம்.”

“சும்மா தின்னுடா.”

வாங்கிக் கொண்டான்.

சிவப்பு நிறமான ஜவ்வு மிட்டாயை வாங்கிச் சுவைத்துச் சுவைத்து இனிப்பான எச்சிலை விழுங்கி, அந்த இனிப்பின் கடைக் கோடியில் கிடைத்த லேசான கசப்பை அனுபவித்ததும் மிட்டாய்ச் சிவப்பைத் தன்னுள் வாங்;கிக் கொண்ட நாக்கை வெளியே நீட்டிக் கீழ்ப் பார்வையால் அதை ரசித்துப் பூரிப்படைந்ததுமான அந்தப் பருவம் மீண்டும் வராதா?…..கோவென்று கதற வேண்டும் போல் இருந்தது.

‘டைங்’ ‘டைங்’ ‘டைங்!’

இடைவேளை முடிந்து பிள்ளைகள் எல்லாம் வகுப்பறைகளுக்கு ஓடினார்கள். அங்கு முளைத்துக் கிடந்த அசோகைப் போல், குரோட்டன்ஸைப் போல், பூஞ்செடிகளைப் போல் தானும் ஒரு ஜடப் பொருளைப் போல் பிறந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது.

புறப்பட்டான்.

மிளகாய்க் கமறலும் மஞ்சத் தூளும் இப்போதே அவன் நாசியை ஆக்கிரமித்துக் கொண்ட மாதிரி இருந்தது. ஒடிந்து போன பள்ளிப் படிப்பு, வரட்சி மிகுந்த கமிஷன் கடைச் சூழல் இவை இரண்டும் நினைவுகளைச் சுரண்டின. அவன் விரும்பியது அன்னியமாகிப் போக விரும்பாதது அன்யோன்யமாகி அரவணைக்க வாழ்வின் முரண்பாட்டுக் களம் அவன் அகக் கண்ணுக்கு நன்றாகவே புலப்பட்டது. ஏக்கத்தின் தீ நாக்குகள் அவன் இதய நாளங்களைச் சுட்டுச் சுட்டுப் பொசுக்கின. கண்ணோரம் சீழ் கட்யடின மாதிரி நீர்த்திவலைகள்!

கடை இருக்கும் திசையில் நடக்கத் தொடங்கினான. முகம் கருத்துப் போக, கண்கள் இருட்டித் தவிக்க பூமியைப் பிரிய விரும்பாத மாலைச் சூரியன் போல பையப் பைய நடை போட்டான்.

 

செம்மலர் ஆகஸ்ட் 1983

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top