துக்கம் உண்டாக்கியவன்.

0
(0)

சாந்த ஸ்வரூபமான முகம்! வேறெங்கும் அலையாமல் ஒரே இலக்கில் ஊன்றியிருந்த விழிகள்! எல்லையற்று விரிந்து கிடக்கும் வான மண்டலத்துக்கப்பால் பரமண்டலத்தில் ஆட்சி புரியும் பரம பிதாவுடனான மானசீக உறவைப் பிரதிபலிக்கும் சிந்தனைகள்! இன்பமும் துன்பமும் சுகமும் சுகவீனமுமம் அற்றதோர் ஞான பூமியில் தனது ஜீவிதப் பயணம் தடங்கலின்றி நடந்துகெர்ணடிருப்பதாக நம்பிய ‘சகோதரி’ லூர்து மேரிக்கு பகீரென்றது. தேவாலயத்தின் வெளிவாசலில் அந்த உருவம் பிரவேசித்த போது உற்றுக் கவனித்தாள். அவன்தானா என்று சந்தேகிப்பதற்கு எந்த உபாயமும் இல்லை என்ற போதிலும் அவனாக இருக்கக் கூடாது என்ற பிரார்த்தனையோடு கூடிய பார்வையை அந்த உருவத்தின் மேல் வீசினாள். அதே நடை! சிரிக்கத் தெரியாத உதட்டுப் பருமன்! யானையைப் போல், உருவப் பருமனுக்கு ஒவ்வாத சின்ன விழிகள்! முடியும் மீசையும் கொஞ்சம் நரைத்திருந்தன. கிட்டதத்pல் நெருங்க நெருங்க அவனேதான் என்று உறுதிப் படுத்திக் கொண்டாள்.

மாயாண்டியை அழைத்தாள். தோட்டத் தொழிலாளியின் மகன்! ஜலத்தினாலும் பரமண்டலத்தில் இருக்கும் பிதாவோடு இணைந்த பரிசுத்த ஆவியினாலும் ஞபனஸ்நானம் செய்வித்து, தனது வாரிசாக வரித்துக் கொள்வது என்ற பாத்யதையுடன் கடந்த ஒருமாத காலமாய்த் தத்தெடுத்து வளர்த்து வருகிறாள்.

தன் வாழ்க்கைப் பயணத்திற்கு ஓர் ஊள்றுகொல் தேவை என்ற இகலோகச் சிந்தனையுடன் அவனை வளர்த்து வருகிறாள். சாத்தானின் கெட்ட ஆவி தீண்டாத புனித ராஜ்ய ஊழியனாய் அவனை வளர்க்கத் திட்டமிட்டாள்.

அருகில் வந்து அமைதியாய் நின்றான். ‘கூப்பிட்டது என்ன’ என்பது போல் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

“ஜெபம் பண்ணிட்டியா மாயாண்டி ?”

“பண்ணிட்டேன் தாயாரம்மா.”

“ஆனா, ஆவன்னா, ஏ. பி சி டி எல்லாம் எழுதிட்டியா?”

“ஓ! எழுதிட்டனே.”

“வா, சாப்பிடப் போகலாம்.”

“சாப்பிட்டேந்தாயாரம்மா.”

“எங்க?”

“ஃபாதர் கூப்பிட்டு பிஸ்கட்டும் பூஸ்டும் தந்தாரு.” என்று பெருமிதம் பொங்கக் கூறினான்.

கண்களை மூடி நெஞ்சில் சிலுவை வரைந்தாள். பரமண்டலத்தில் இருக்கப் பட்ட தேவனுக்கு நன்றி கூறினாள்.

கண்களைத் திறந்த போது அந்த உருவம் அறை வாசலில் வந்து நிற்பது தெரிந்தது. நெஞ்சில் பதட்டம் இருந்த போதிலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மாயாண்டியின் கையில் முத்தமிட்டாள். விரிக்கப் பட்ட ஜமக்காளத்தில் அவனை உட்கார வைத்தாள். “நாளக்கி ஒனக்கு ஞானஸ்நானம். யோர்தான் ஜலத்தால் முழுக்காட்டி ஒன்ன யேசுவின் விசுவாசியா மாத்துவார் பாஸ்டர். ஒன்னோட ஒடம்பில் இருந்தும் ஹிருதயத்திலிருந்தும் கெட்ட ஆவி காணாமல் போய்டும்: நாளையில இருந்து ஒம்பேரு மாயாண்டி இல்ல: பாஸ்டர் வேற பேரு சூட்டுவார்.”

“யோர்தான் ஜலம்னா என்ன தாயாரம்மா?””

“யேசு கிறிஸ்துவும் அவரோட சீஷர்களும் அவரைத் தமது ஜீவனும் வழியுமாய் ஏற்றுக் கொண்ட விசுவாசிகளும் பாவம் தொலைக்க ஜலம் கொடுத்த நதி அது. யூத தேசத்துல, பெத்தலஹேம் நகரத்துக்குப் பக்கத்துல ஓடியது.

அந்த உருவம் அங்கேயே நின்றிருந்தது. முகத்தில் சோகவனம் பரவிக் கிடந்தது.

மிகுந்த வைராக்கியத்தோடு, நெஞ்சைத் திடப் படுத்திக் கொண்டு, விவிலியத்தை எடுத்து விரித்து வைத்தாள். சூரியனும் சூல்கொண்ட சந்திரனும் வீசிய தேஜஸை விடவும் கூடுதலான ஒளிவீச்சு அதன் காகிதப் பக்கங்களில் இருந்தது. “இன்னக்கி நாம படிக்யப் போற அதிகாரம் எது தெரியுமா?”

அவன் பயபக்தியுடன் நெஞ்சில் சிலுவைக் குறி இட்டபடி ‘சொல்லுங்க தாயாரம்மா” என்றான்.

அவள் சொன்னாள் “மாத்தேயு எழுதின சுவிசேஷம் 11ஆம் அதிகாரம்…”

“சரி தாயாரம்மா?”

“கேட்கிறதுக்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன்” என்று சொல்லித் தர ஆரம்பித்தாள். வெளியில் நின்ற உருவத்தைக் கடைக் கண்ணால் நோக்கியபடி இந்த வசனத்தை உச்சரித்தாள்.

மாயாண்டி திருப்பிச் சொன்னான்.

அடுத்த வசனம் “இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்?” சந்தை வெளியில் உட்கார்ந்து தங்கள் தோழரைப் பார்த்து “உங்களுக்காக நாங்கள் குழல் ஊதினோம்: நீங்கள் கூத்தாடவில்லை: உங்களுக்காக நாங்கள் புலம்பினோம்: நீங்கள் மாரடிக்கவில்லை.”

மேற்கொண்டு அவளால் வாசிக்க முடியவில்லை. நிறுத்தினாள். நிலை கொள்ளாமல் அலைந்தன விழிகள். விவிலியத்தையும் வாசலையும் மாறிமாறிப் பார்த்தாள். நின்றிருந்த உருவம் ஏதோ ஓர் எதிர்பார்ப்போடு இவள் முகத்தை உற்றப் பார்த்தது. சின்னதாய் ஒரு சலனம்: ‘வாங்க’ என்று கூப்பிடலாமா? வே;ணடாம்: அது சைத்தானின் ஆவி. விவிலியத்துக்குத் திரும்பினாள்: மேற்படி வசனங்களை ஒப்பிக்கும்படி மாயாண்டிக்குச் சொல்லிக் கொடுத்தாள்.

“பவுல் ஆலோசனை சங்கத்தாரை உற்றுப் பார்த்து, ‘சதேரரே! இந்நாள் வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நம் மனசாட்சியோடே தேவனுக்கு முன்பாக நடந்து வந்தேன்’ என்று சொன்னான்.”

“அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனினா, அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி, ‘இவன் வாயில் அடியுங்கள்’ என்று கட்டளை இட்டான்.”

“அப்பொழுது பவுல் அவனைப் பார்த்து, ‘வெள்ளையடிக்கப் பட்ட சுவரே! தேவன் உம்மை அடிப்பார்: நியாயப் பிரம்மாணத்தின்படி என்னை நியயம் விசாரிக்கிறவராண் உட்கார்ந்திருக்கிற நீர், நியாயப் பிம்மாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கலாமா?” (அப்போஸ்தலர், அதிகாரம் 23.)

புரிந்தோ புரியாமலோ மாயாண்டி திருப்பிக் கூறினான். ஒருமுறை மட்டுமல்ல: பல முறை திருப்பித் திருப்பிச் சொன்னான்.

அருள் சகோதரி லூர்துமேரி, விவிலியத்தின் பக்கங்களைத் திருப்பிக் கொண்டிருந்தாள். மாற்குவினதும், லூக்காவினதும், யோவானினதும் ஆன சுவிசேஷங்களில் சில வசனங்களை வாய்விட்டு ஒப்பித்தாள். கெட்ட ஆவிகளுக்கு எதிராகவும் புனித ஆவிக்கு அனுசணையாகவும் வசனங்கள் சொன்னாள். அவை உதட்டு வசனங்களாய் ஒலித்தனவே தவிர நெஞ்சின் குரலாய் இல்லை.

நெஞ்சுக்குள் வேறு குரல் வேறு விதமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. “உணர்ச்சிகளையும் உன்மத்தமான உடல் நடுக்கத்தையும் உள்வாங்கி இருக்கும படிக்கு எமது ஆவியை ரட்சியும் தேவனே!” என அது ஒலித்தது.

இருபது வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அந்த வாழ்க்கைச் சம்பவம ;வரலாற்றுப் பட்டயமாய் ஆழ்மனசில் புதைந்து கிடந்தது. அது மண்ணரித்து செல்லரித்துப் போனதாய் நினைத்துக் கொண்டிருந்தாள். அதன் சிதைவுகளை இனி ஒட்டவைத்து உருவாரம் செய்ய முடியாது என திடமாய் நம்பியிருந்தாள். “கரப்பான் பூச்சிகளுக்கு அது உணவாகிப் போகட்டும் மகளே” என ஒருமுறை பாஸ்டர் சொல்லி, கலங்கிய கண்களைத் துடைத்துவிட்டார். அந்தச் சிதிலம் இன்று உயிர்த்தெழுந்து வந்திருக்கிறது: ஏசவைப் போல. ‘ஓ! ஜீஸஸ்!’

ஏசவைப் போல’ என்று உவமானப் படுத்தியதற்காகத் தன்னை மன்னிக்கும்படி தேவனிடம் வேண்டினாள். தேவலோகத்து இன்பத்தையும் சுகத்தையும் பூலோகத்தில் புனரமைக்கும் பொருட்டு அவர் உயிர்த்தெழுந்தார். ஆனால் இவன், ஜான் மோசஸ் என்ற இந்த விஷ ஜந்து ஏன் இங்கு மீண்டும் வரவேண்டும்? வரவேண்டாம். இவன் எனக்கு வேண்டவே வேண்டாம். உலகின் சகல பிணியாளர்களையும் சொஸ்தப் படுத்தும் தேவனே! இவன் ஒரு பிணி. சீழ் பிடித்து அழுகிப் போன புண்! புண் அகற்றி என்னை ரட்சிக்க வேண்டும் ஏசுவே!

தேவாலயத்திற்கு அனாதையாய் வந்து சேர்ந்த லூர்து மேரியை ஏசுவின் விசுவாசியாக மட்டுமல்லமல் பூலோக விசுவாசியாகவும் சகல சம்பத்துக்களின் மீது ஆசை கொண்டவளாகவும் வளர்த்து வந்தார் பவுல் ஜேகப். அவள் இறைச் சேவைக்கு இலக்காகி, ‘கன்னியாஸ்திரி’ என்ற பிரச்சாரகராய் மட்டும் சுருங்கி விடாமல் கணவன், குடும்பம், குழந்தை என்று விரிவடைந்த குடும்ப வாழ்க்கைக்கு வழிகாட்டினார். “அதுதான் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நியதி” என்று அறிவுறுத்தினார்.

“பாஸ்டரின் விருப்பமே என் விருப்பம்” என அங்கீகரித்தாள் அவள்.

அவள் ஓர் அனாதை என்பதையும் பாஸ்டரின் பராமரிப்பில் இருப்பவள் என்பதையும் அறிந்துகொண்ட ஜான் மோஸஸ் அவளை ஏற்க முன்வந்தான்.

பாஸ்டர் அவனைப் பாராட்டினார். அனாதைக்கு வாழ்வளிப்பதும் ஏழைக்கு உணவளிப்பதும் தேவ விசுவாசத்துக்குச் சமம் என்று பாராட்டினார்.

“நானும் அனாதைதான் ஃபாதர்” என்றான் ஜான் மோஸஸ்.

“அப்படியா?”

“எனக்கு அப்பா மட்டும்தான் உண்டு. உறவுன்னு சொல்ல யாரும் இல்ல: கெட்ட ஆவி நுழையாக பரிசுத்த மனிதனா அப்பா இருந்ததால தன் சொத்துக்களை எல்லாம் செலவழிச்சு ஃபாரின்ல எனனைப் படிக்க வச்சு, மும்பையில சுய தொழிலுக்கும் ஏற்பாடு செஞ்சிருக்கார்.”

“என்ன தொழில்?”

“காட்டன் ஃபேக்டரி.”

தட்டிக் கொடுத்தார். “ஏசு ரட்சிக்கட்டும்” என்றார். “என் மகள் லூர்து அனாதையா இருந்தாலும் அவளும் சம்பாத்தியக்காரிதான்: மேரிமாதா ஸ்கூல்ல டீச்சர் வேல: கைநெறையச் சம்பளம்.”

“தெரிஞ்சுதானே ஃபாதர் வந்தேன்” என்றான்.

“ஒத்த குல்வியும் ஒத்த செல்வமும் உள்ள குடும்பந்தான் சுபிட்சமா இருக்கும்.”

ஜான் மோஸஸின் தந்தை இளமையாய்க் காணப்பட்டார். உருவ ஒற்றுமையோ முக ஒற்றுமையோ காணப் படவில்லை. பாஸ்டருக்கு லேசான சந்தேகம்: சினிமாவில் வருவது போல கள்ளத் தகப்பனை அழைத்து வந்திருப்பானோ?

அப்படி இருக்காது என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.

எளிமையான முறையில் கல்யாணம் நடைபெற்றது. “வானங்களும் வானாதி வானங்களும் அவற்றின் கீழ் இயங்கும் வஸ்துக்களும் அவற்றின் சேனைகளும்” எனத் தொடங்கும் கல்யாண வசனங்களில் சில மாற்றங்களைச் செய்து ஸ்தோத்திரம் பண்ணிக் கல்யாணம் செய்வித்தார்.

மணமகனை அவர் சொல்லச் செய்தார். “இன்பமும் துன்பமும், சுகமும் சுகவீனமும், செல்வமும் வறுமையும், சாந்தமும் கேபமும் உண்டாகி, வாழ்க்கை சோதனைக்கு உள்ளாகும் எக்காலத்திலும் ஜான் மோஸஸ் ஆகிய நான் லூர்து மேரியாகிய உன்னை ஒரு வஸ்துவாக இல்லாமல், ஒரு ஸ்த்ரீயாக, ஒப்புயர்வற்ற மனுஷ ஜீவியாக பாவிப்பேன் என்றும் ஹிருதயத்தில் மட்டுமல்லாமல் தலைக்கு மேலாகவும் வைத்து மரியாதை செய்வேன் என்றும் கர்த்தரின் ரட்சக சாம்ராஜ்யத்துக்குள் உன்னில் நானும் என்னில் நீயும் ஒன்றி வாழ்வதை முழமைப் படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.”

இந்த உறுதிமொழியை ஒப்பித்த போது அருட்சகோதரர்களும் சகோதரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். ‘ஸ்த்ரீ என்பவள் ஒரு வஸ்து: கணவனுக்கு ஊழியம் செய்வது மட்டுமே இவள் வேலை: அவன் இவளை ஹிருதயத்தில் மட்டும் ஏற்றுக் கொள்ள முடியுமே தவிர தலையில் அல்ல’ என்ற விவிலியத்தின் வாசகங்களை மாற்றி விட்டாரே என்று விசனப் பட்டனர்.

ஃபாதர் பவுல் ஜேகப் தனது தீட்ச்ண்ய விழிகளால், அவர்கள் எல்லாம் சுருண்டு போகும்படி பார்வையை வீசினார். “யோர்;தான் ஜவாடாபவட ஞானஸ்நானம் பெற்று, தேவனாலும் பரிசுத்த ஆவியினாலும் அங்கீகரிக்கப் பட்ட அனைத்து மனுஷஜீவிகளும் சமம்” என்று அந்தப் பார்வை மொழிந்தது.

ஒருமாதம் ஆனபின் மும்பைக்குப் புறப்பட்டான் ஜான்மோஸஸ். வீடு அமர்த்தி லூர்து மேரியைக் கூப்பிட்டுக் கொள்வதாக வாக்குறுதி தந்தான். சரி என வழி அனுப்பி வைத்தாள். பாஸ்டர் பவுல் ஜேகப் அப்பமும் ஆசியும் வழங்கி வழியனுப்பி வைத்தார்.

“ஏன் தாயாரம்மா அழுகுறீங்க?” என்றான் மாயாண்டி.

கண்களைத் துடைத்துக் கொண்டு லூர்துமேரி சொன்னாள். “இது அழுகையோ கண்ணீரோ இல்ல மாயாண்டி: ஒரு பாவ வரலாற்றைக் கழுவத் துடிக்கும் புனித ஜலம்.”

திருதிருவென விழத்தான்.

“புரியல இல்லியா?”

ஆமம் என்று தலையாட்டினான்.

‘புரியவேட்டாம்’ அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

ஏங்கித் தவித்த தொண்ணூறு இரவுகள் கழிந்த பிறகுதான் அவனிடமிருந்து கடிதம் வந்தது. தொழிலுக்கு முதலீடு போதவில்லை. பத்தாயிரம் ரூபாய் அனுப்பி வை என எழுதி இருந்தான்.

சந்தோஷமாக அனுப்பி வைத்தாள். “தொழில் மேம்பட்டால் வாழ்க்கை மேம்படும்” எனக் கடிதம் போட்டாள்.

அடுத்த மாதம் விரிவான ஒரு கடிதம் எழுதியிருந்தான். ஒவ்வோர் இரவும் அவளுடனான இரவாக இருக்கப் போகும் எதிர்காலம் விரைவில் வரும் என உறுதி அளித்திருந்தான். “மாடு வாங்கியாயிற்று: சாட்டை வாங்க ஐயாயிரம் தேவை” என முடித்திருந்தான்.

அனுப்பினாள்.

அடுத்த மாதம் தந்தி வந்தது. “ஆபத்து: உடனடியாக மூவாயிரம் தேவை.” என்ன ஆபத்து எனக் குறிப்பிடவில்லை.

பாஸ்டருக்குச் சந்தேகம் வந்தது. “ஒருமுறை அவன் வந்து போகலாமே” என்றார்.

“ஆம்” என்று பட்டது: எழுதினாள்.

அவன் வரவில்லை. “தொழில் நொடித்துவிட்டது: வெறுங்கையுடன் எப்படி வரமுடியும்?”

“பரவாயில்லை: தொழில் கூடத்தை மூடிவிட்டு இங்கே வந்து விடுங்கள்: வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம்.”

“புலிவாலைப் பிடித்துவிட்டேன்: விடமுடியவில்லை லூர்து.”

பாஸ்டருக்குச் சந்தேகம அதிகரித்தது: மும்பையில் உள்ள சக ஊழியருக்குக் கடிதம் எழுதினார். ஜான்மோஸஸ் பற்றி அறிந்து எழுதும்படி.

மறுவாரமே பதில் வந்தது. “அந்த முகவரியில் இருப்வன் போதைப் பொருள் விற்பவன். ஆங்கிலோ இந்தியப் பெண்ணுடன் உறவு கொண்டுள்ளான்.”

அதிர்ச்சி அடைந்தாள். வானமும் பூமியும் இருண்டு போயின. பிதாவாகிய தேவனும் தேவகுமாரனாகிய ஏசு கிறிஸ்துவும் தன்னை ஏமாற்றி விட்டதாகப் புலம்பினாள்.

பாஸ்டர் ஆறுதல் படுத்தினார். அப்போஸ்தலானாகிய பலுல் கொருந்திருக்கு எழுதின நிரூபம் 1ல் இருந்து சில வசனங்களைக் கூறித் தேற்றினார்.

“நீ ஏசுக் கிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும் மற்றெல்லாவற்றிலும் சம்பூர்ணம் உள்ளவளாக்கப் பட்டிருக்கிறபடியால்

அவர் மூலமாய் உனக்கு அளிக்கப் பட்ட தேவ கிருபைக்காக, நான் உன்னைக் குறித்து, எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.”

“அப்படியே நீ யாதொரு வரத்திலும் குறை இல்லாதவளாய் நம்முடைய கர்த்தராகிய ஏசு கிறிஸ்து வெளிப் படுவதற்குக் காத்திருக்கிறாய்.

நம்முடைய கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவின் நாவிலே நீ குற்றம் சாட்டப் படாதவளாய் இருக்கும்படி, முடிவு பரியந்தம் அவர் உன்னை ஸ்திரப் படுத்துவார்.”

ஆகவே, ‘சமாதானமாய் இரு மகளே’ என்றார்.

மாயாண்டி கூறினான். “அழாதீங்க தாயாரம்மா.”

மீண்டும் கண்களைத் துடைத்தாள். துடைக்கத் துடைக்க வழிந்தது. மனசைத் திடப் படுத்தி ஆவியை உள் இழுத்தாள். பெருமூச்சொன்றைப் பீறிடச் செய்து சிந்தனையை ஆறுதல் படுததினாள்.

பிறகு விவிலியத்தின் பக்கங்களைப் புரட்டத் தொடங்கினாள். அப்போஸ்தலானாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிரூபத்திலிருந்து சில வசனங்களை வாசித்துக் காட்டினாள். மாயாண்டி மனனம் செய்தான்.

“…..ஏனெனில் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாய் இராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை செய்து கிறிஸ்து ஏசுவுக்குள் மேன்மை பாராட்டுகிற…..

…என்று வாசித்து நிறுத்தினாள்.

“சொல்லுங்க தாயாரம்மா.”

“சொல்றேன்” என்றாள். மீண்டும் பெருமூச்சு. “மேன்மை பாராட்டுகிற எனக்கே இந்தச் சோதனை என்றால்….”

மாயாண்டி திருப்பிச் சொன்னான்.

“வேண்டாம்: திருப்பிச் சொல்ல வேண்டாம்: இது பைபிள் வசனதில்ல: வாழ்க்கை வசனம்.”

ஏறிட்டுப் பார்த்தாள். ஜான்மோசஸ் அங்கிருந்து போய்விட்டிருந்தான். எங்கே போயிருப்பான் என்ற கேள்வி உள்ளத்தில் விதையாய் விழுந்தது. அது தளிர்விட்டுச் செடியாகி மரமாகிவிட வேண்டாம் என்று கட்டுப் படுத்திக் கொண்டாள். ஆனாலும் மன அந்தரங்கத்தில் கடுமையான கொந்தளிப்பு.

விவிலியத்தை மூடிவைத்தாளள். அந்தகாரமான மவுனவெளியில் பயணம் போனாள். நடப்பதும் பறப்பதுமான வேலைகளை மனம் செய்துகொண்டிருந்தது. மறக்கடிக்கப் பட்ட தீய சொப்பனம் ஒன்று சிறகு முளைத்துப் பறந்து வந்து அவள் தலைமேல் உட்கார்ந்து கொண்டது. கள்ளிகளும் சுள்ளிகளும் நிறைந்த கானகவெளியில் கடல் பாம்புகள் அவளை நோக்கிப் படமெடுத்து வந்தன.

கனவுகளோடு எத்தனை நேரம் மல்லாடிக் கொண்டிருந்தாள் என்று தெரியவில்லை. பாஸ்டர் பவுல் ஜேகப் உள்ளே நுழைந்து “மகளே மேரி!” என்று குரல் கொடுத்தபோதுதான் விழிப்புத் தட்டியது. சிவப்பு பெல்ட் இறுக்கிய வெள்ளை அங்கி! வெளுத்துப் போன தாடியும் தலைமுடியும்! உலக அனுபவங்களின் முதிர்ச்சி தாங்கிய விழிகள்! அவர் பின்னால் ஜான் மோஸஸ்.

எழுந்து நின்றாள். மாயாண்டி தூங்கி விட்டிருந்தான்.

“இது யார் தெரியுதா மகளே?”

கண்களை மூடினாள். பிழியப் படட் துணியாய்க் கண்ணீர் ஓட்டம்!

“ஜான் மோஸஸ்! உன் கணவன்.”

“முன்னாள் என்று சேர்த்து சொல்லுங்கள் ஃபாதர்.”

“இருக்கட்டும்! கோபம், குரோதம், குணவீனம் எல்லாமே மனுஷ ஜீவிதத்தின் மரித்துப் போகாத மன அடையாளங்கள்தானே?”

பதில் சொல்ல முடியாதபடி அவள் உதடுகள் கோணல் ஆயின.

“பாவ மன்னிப்புக்காகவும் சுய ரட்சிப்புக்காகவும் உன்னைத் தேடி வந்திருக்கான் மகளே.”

அவள் குறுகுறுவென விழித்தாள். அந்த விழிப் பார்வைக்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் தொக்கி நின்றன.

“என்ன லூர்து அப்படிப் பாக்குற?”

“மறந்து போன கனவுக்குத் திரும்பவும் உயிர் தரணுமா ஃபாதர்?”

“என்னை மன்னிச்சுடு லூர்து” என்றான் ஜான் மோஸஸ். அவன் குரல் கரடு தட்டிப் போயிருந்தது. “நான் ஒரு சைத்தான். நான் ஒரு பாபகாரகன்: எல்லாமே இழந்து வெறுங்கையோட வந்திருக்கேன். என்னை ஏத்துக்கணும்” என்று மண்டியிட்டான்.

“ஆமாம் மகளே” என்றார் பாஸ்டர்.

“அனாதைக்கும் விதவைக்கும் வாழ்வு தருபவன் உயர்ந்தவன்னு நம்ம வேதநூல் சொல்லுது இல்லியா? இப்போ இவன் ஒரு அனாதை.”

பதில் சொல்ல முடியாமல் திண்டாடினாள். “நான் யோசிக்கணும்: எனக்கு அவகாசம் வேணும் ஃபாதர்.”

“ஒண்ணும் அவசரமில்ல: நாளைக்கே பதில் சொல்லு.”

மறுநாள்

சூரியன் பிரகாசமாய் உதித்தெழுந்த வேளையில் மூவரும் மீண்டும் சந்தித்தனர்.

“யோசனை பண்ணியாச்சா மகளே!”

“எனக்கொரு நேர்தல் இருக்கு ஃபாதர்.”

“சொல்லுடா கண்ணு.”

“நல்ல மேய்ப்பனா இருந்தா நானும் அவருக்கு ஒருநல்ல மனைவியா இருக்கத் தயார்.”

“வெரிகுட்!”

“அதுக்கு முந்தி, நான் டீச்சர் வேல செஞ்சு சம்பாதிச்ச பணத்தை எல்லாம் அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வக்யணும்: டீச்சர் வேலைய ரிசைன் பண்ணிட்டு, அவர் சம்பாத்தியத்த வச்சு அவருக்குப் பணிவிடை செய்யிறேன் ஃபாதர்.”

“நிஜமாவா?”

“யெஸ் ஃபாதர்.”

மூவருக்கும் இடையில் இரைச்சல் நிறைந்த மௌனம்! யார் எதைப் பேசுவது என்று தெரியாமல் திணறினர். லூர்துமெரியே மௌனத்தை உடைத்தாள்.

“இன்னிக்கே இல்ல: அவர் நாளக்கி வந்து பதில் சொன்னாப் போதும்.”

தேக்குமரச் சிலுவையில் அறையப் பட்ட கையைப் போல ஜான் மோஸஸின் கண்கள் உதறுவதை உன்னிப்பாகக் கவனித்தாள் லூர்துமேரி.

அடுத்த நாள் காலை! ஆலயமணி ஆனந்தக் குரலெழுப்பி அனைவரையும் விழிப்பித்தது.

‘சாஷ்டாங்கம் செய்ய வாரீர்! ஏசவை

சாஷ்டாங்கம் செய்ய வாரீர்!’

என்ற தேவகானம் ஆலயச் சாளரத்தின் வழியாய் உலகமெங்கும் பரவியது.

“பரமண்டலத்தில் இருக்கும் பிதாவே! பாவிகளை மன்னித்து ரட்சிக்கும் உமது புனித ஆவிக்கு ஸ்தோத்திரம்! ஜீவஜலம் பரிமாறி ஞானஸ்நானம் செய்விக்கும் உமது ஆக்கினைக்கு ஸ்தோத்திரம்! எமது மாம்சத்தாலும் பாவம் நீங்கிய பரிசுத்த ஆவியாலும் ஸ்தோத்திரம் செய்கிறோம் பிதாவே! ஆமென்!”

பாஸ்டரின் உபதேச வாக்கியம் கூரையில் பட்டு எதிரொலித்த போது, ஜான் மோஸஸ், ஊர்தாண்டி, எல்லைதாண்டி வெகுதூரத்துக்கப்பால் பயணப் பட்டுக் கொண்டிருந்தான்.

 

செம்மலர். டிசம்பர் 20

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top