தீராக்கடன்

0
(0)

வீட்டின்  மேல்மாடியில் அவர்கள் குடியிருந்தனர். கீழ்வீடும் கடையும் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. வீட்டினுள் நுழைந்தபோது பெண்கள் அனைவரும் ஆளுக்கொரு வேலையில் இருந்தனர். சின்னப்பெண் லதா, இதழ்க்கடையில் குறுஞ்சிரிப்புடன். அனைவரையும் வரவேற்றாள்.

“என்னா எல்லாரையும் கூட்டிட்டு வந்திருக்க…”   பாஸ்கரின் மனைவி ரேவதி மட்டும் சின்ன அதிர்ச்சியுடன் கேள்விபோட்டாள். மற்றபடி அவர்கள் எங்களது வருகையை எதிர்பார்த்திருந்தது போல நீட்டியிருந்த தங்களது கால்களை மடக்கி உட்கார்ந்து கொண்டனர்.

“என்னா கேள்வி…? “ என்ற பாஸ்கர், “வந்தவங்கள மொதல்ல வாங்கன்னு கேட்டுப்பழகு.” என மனைவியைக் கண்டித்தார்.

எப்போது வீட்டுக்கு வந்தாலும் இன்முகத்துடன் வரவேற்கும் இயல்பான பெண் தான் ரேவதி. ஆனால் இன்றைய சூழல் அவரை குழப்பத்திற்கு ஆளாக்கி உள்ளது. அதை பாஸ்கரோடு வந்த என்னாலும் வேலுவாலும் உணர்ந்து கொள்ளமுடிந்தது. ”அதனால் ஒண்ணும் பாதகமில்லை பாஸ்” என்றார் வேலு .

“இல்ல சார். நீங்க புரிஞ்சிகிட்டீங்க மத்தவங்களாயிருந்தா…? ”

“அது எங்களுக்கும் தெரியும்…” விட்டுக்கொடுக்காமல் பேசினாள் ரேவதி. “இவங்கள எதுக்கு தேவையில்லாம கூட்டிட்டுவாரன்னுதான் கேட்டேன்”

“சும்மா ஒரு டிஸ்கசனுக்குத்தான்…”

என்னத்தப் பெரிய அஞ்சாறு மில்லுகட்டி ஆயிரம் பேருக்கு வேலையக் குடுக்கப் போற.., அதுக்கு. யோசன சொல்ல கூட்டிவந்திருக்க…! யேண்ணே… நீங்களும் இது கூப்புட்டுச்சுன்னு ஒங்க வேல வெட்டியப் போட்டுட்டு வந்திட்டீங்க. ?”

”நாலுபேரக் கலந்து முடிவெடுக்கறது தப்பா…? “

“ஒரு காரியம் பண்ணனும்னா கலந்துக்கலாம். முடிக்கத்தான போறம் ..” ரேவதி தனது முடிவில் தீர்மானகரமாக இருப்பது தெரிந்தது.

“சரிம்மா எதுன்னாலும் ஒரு குழப்பம்னு வாரப்ப  ஆள்தேடுறது இயல்புதான விடு..“ வேலு பாஸ்கருக்கு சாதகமாகப் பேசினார்.

“கடைய விட்றனுமுன்னு பேசியாச்சு. இப்பபோயி ஒங்களக் கூட்டிவாரது கொழப்பம்தானன்னு அம்மா சொல்லுது. “ சின்னப்பெண் லதா எப்போதும் போல சிரிப்பு மாறாமல் அம்மாவுக்கு ஆதரவாக பதில் சொன்னது.

“எல்லாம் இந்த இந்தக் கழுதையாலதான். இதுதான் கடைய இழுத்துச் சாத்தரதில முழுமூச்சா நிக்கிது. “”பாஸ்கர் கடுப்புடன் லதாவைஅடிப்பதுபோல கையை நீட்டிப் பதில் பேசினார்.

“இந்தப் பிள்ளதான அத்தன வேலயும் பாக்குது. வாத இருக்கவதான வலிக்குதும்பா “ நடுப்பெண் தன் தங்கைக்கு ஆதரவாகப் பதில் சொன்னது.

“எல்லாருந்தான் வேலபாக்குறாக…நீங்கதா அருவத்துக்குச் செய்யறதா தம்பட்டம் அடிச்சுக்காதீக… வேலபாக்காம யாரும் ஒருவாச் சோறு சாப்புட முடியாது. இவரு வீட்ல யெல்லா…. “ என வேலுவை உதாரணத்துக்கு இழுக்க,

‘”பாஸ்கர், , , ஒப்பீடெல்லா வேணாம். பிரச்சனயப் பேசலாம்” வேலு கையமர்த்தினார். .

விஷயம் இதுதான்.

பாஸ்கர் ஒரு பாக்டரியில் வேலைபார்க்கிறார். மூன்று பெண்கள் ஒருபையன். இரண்டு பெண்களை கரைசேர்த்தாயிற்று மூன்றாவது காலேஜ் போய்க் கொண்டிருக்கிறது. பையன் பள்ளிஇறுதிவகுப்பு. சராசரியான வீட்டுச்செலவுகள் தவிர்த்து கல்விச்செலவும், கலியாணமான பிள்ளைகளின் பிரத்தியேகமான  செலவுகளும் பாஸ்கரை அழுத்தியதில் எத்தைத் தின்றால் பித்தம்தீரும் எனும் பரிதாப நிலைக்கு வந்துவிட்டார்.

வீட்டில் ரேவதி அவருக்கு பக்கபலமாய் இருந்ததால் சுமையில் ஒருபகுதி குறைந்தது.  எப்போதும் வீட்டு நிலமைகளை இருவரும் கலந்துபேசி நடத்துவதும சமயத்தில் பிள்ளைகள் அத்தனை பேரையும் உட்காரவைத்து முடிவெடுக்கும் வழக்கமும் கூட அவர்களிடமிருந்தது. அதன்படிதான் வீட்டின் கீழ்ப்பகுதியிலிருக்கும் திண்ணையினை வேஸ்ட் பலகைகள் கொண்டு சுற்றிலும் கடைபோல மறைத்து , உழவர்சந்தையில் போய் காய்கறிகள் வாங்கிவந்து சில்லரை விற்பனைகடை போடலாமென பேசினார்கள். அதற்கு. கல்யாணம் முடித்த பிள்ளைகள் உட்பட ஆளுக்காள் உதவிசெய்வது என்றும் முடிவெடுத்து கடையை உருவாக்கினர். நல்லவிதமாகத்தான் அதுவும்  ஒடிக்கொண்டிருக்கிறது. சாப்பாட்டுச் செலவு மொத்தமும் கடைவருமானம் சரிக்கட்டுவதாகக் கேள்வி. .

திட்டப்படி. கடைக்கு மேல்புறம் தகரசார்ப் மட்டுமல்லாது கதவுவரை செய்து பக்காவான கடையாகவே அமைத்தனர்.. அதில் எல்லோருக்கும் பரமதிருப்தி. அதிலும் காய்கறியில் துவங்கி மெல்லமெல்ல சாசே பாக்கெட்டுக்களில் ஷாம்பு,  தேங்காய் எண்ணெய், சாம்பார்பொடி, மிளகாய்பொடி எனக் கொண்டுவந்து பருப்பு, புளி,,அரிசி என வளர்ந்து  மூன்றேமாதத்தில் பலசரக்குக் கடையானதில் பாஸ்கருக்கு அளவில்லாத ஆனந்தம். ஏவாரத்தை நம்பி ஒரு ஏலச்சீட்டு வேறு போடத்துவங்கினார்.

அதிகாலை ஐந்துமணிக்கெல்லாம் எழுந்து உழவர் சந்தைக்குப் போவது பாஸ்கருக்கு நித்தியக் கடமையானது. ஆறுமணிக்கெல்லாம் ஈரம் சொட்டச் சொட்ட தக்காளியும் கத்தரிக்காயும் மட்டுமின்றி  கருவேப்பிலை கொத்துமல்லி வரை கடையில் வந்திறங்கின. பலசரக்கு அய்ட்டங்களும் ஃபாக்டரி வேலைமுடித்து வருகையில் தனது இருசக்கர வண்டியிலேயே வாங்கி வந்துவிடுவார். காலையில் வேலைக்குக் கிளம்பும்போது தீர்ந்துபோன சரக்குகளைச் எழுதிக் கொடுத்துவிடவேண்டும். சிலசமயம் போனில் கேட்டுக்கொள்வதும் உண்டு. அவசரத்துக்கு உள்ளூர் மொத்தக்கடைகளிலும் வரவுசெலவுவைத்து வந்தார்கள். அதுபூராவும் இளையமகனின் பொறுப்பு. அவனும் அவன் வயசுக்கு சங்கடப்படாமல் போனான்.

சிரமம் என்னவென்றால் வீட்டில் காலைசமையல் செய்யமுடிவதில்லை. ரேவதி கடைக்கு வந்துவிட்டால் எழுந்திருக்க மதியம் ஆகிவிடுகிறது. சின்னப்பெண் லதாவும் பையனும் பள்ளிக்கூடம் செல்லவும், பாஸ்கர் ஃபாக்டரிக்குப் போகவும் பெரும் திண்டாட்டம்தான். ஆனாலும் விரும்பிச் ஏற்ற வேலை என்பதால் தெருக்கடையில் இட்லியும் பணியாரமும் வாங்கி காலைப் பொழுதைக் கடத்தினார்கள். அடுத்தடுத்த வேளைகளில் பெருத்த இடைவெளி உண்டானது. கலியாணமுடித்த பிள்ளைகள் வந்து கடையை மாற்றிவிட்டாலும் நேரத்துக்குப் பசியாற முடியவில்லை. அதுகூட எதையாவது வெந்தும் வேகாமல் உள்ளேதள்ளி முடித்துவிட்டாலும் வீடுவாசல் கூட்டிப்பெருக்க, துணிமணிகள்  அலசிப்போட என்கிற வீடுபார்க்கும் காரியம் முடியாமல் வீடே நாறிப்போனது. அது ரேவதிக்கு பெரும் பாதிப்பு. அவள் பெயருக்கு இழுக்கு.

ஊருக்குள் – இவர்கள் சொந்தபந்தத்திற்குள் ரேவதிக்கு ஒரு நல்லபெயர் உண்டு. ”வீடு சிறுசோ பெருசோ எந்தந்தப்பொருளு எந்தந்த இடத்தில இருக்கணுன்றத பழனியம்மா மக கிட்டக்க படிச்சிட்டு வரணும்.” என்று ரேவதி காதுபடவே பாராட்டக் கேட்டதுண்டு. அதெல்லாம் பொய்யாகிப் போனது.

“புதுசா ஒரு வரவு இருக்குன்னா பழய இருப்பு ஒண்ணக் கடன்குடுத்துத்தே ஆகணும். கலியாணத்துக்கப்பறமும் கன்னியாவே இருப்பேன்னா கேக்கறவே கேணப்பயலாத்தான இருக்கணும்.” பாஸ்கரின் படுபிற்போக்கான வசனத்தைக் கேட்ட எவரும் சிரிப்பதைத்தவிர பதில் சொல்ல முடியவில்லை.

“எப்பிடி பாஸு இப்பிடியெல்லா யோசிக்க முடியுது…? “ “அது ஒரு ஃபுளோவுல வாரதுதான் சார்.. “ ”ரெம்ப யோசிக்காதீங்க நண்பா, குடும்பம் குப்பறக் கவுந்துடும்.”  “தெரியுது சார். ஆனா இப்பிடி அடிக்காட்டி வீட்ல நம்ம பேச்சு எடுக்க மாட்டேங்குதே … “ மொத்தத்துக்கு எடுபடாம போயுரும் பாத்து நடந்துக்கங்க…”

எச்சரிக்கை செய்து ஏழெட்டு நாள்தான் கழிந்திருக்கும். அரக்கப் பறக்க ஐந்தாறு முறை பாஸ்கர் போன் செய்துவிட்டார். “சார் முக்கியமான ஒருபேச்சு. சாயங்காலம் எனக்காக வீட்டுக்கு வரணும்…”

பாஸ்கர் தனது வேலைமுடித்து வழக்கமாய் இரவு ஏழுமணிக்குத்தான் வீடு நுழைவார். என கணக்குப்போட்டு ஏழேகாலுக்குக் கிளம்பத் தயாரானேன். அதற்குள் வேலுவை அழைத்துக்கொண்டு எனது வீட்டுக்கு வந்துவிட்டார். சம்பிரதாய வார்த்தைகளெல்லாம் போடாமல் நேரடியாய் களத்தில் வந்திறங்கினார்.

“வீட்ல இருக்க பொட்ட நாய்களெல்லாம் சேந்து கடைய மூடிடணும்னு பேசிட்ருக்குக.. இப்பதான் கொஞ்சம் சில்லர செலவுகளுக்கு அல்லாடாம மூச்சு விடுற நேரம்…” கண்களில் சிவப்பு நின்றிருந்தது கோபமா பயமா என அனுமானிக்க முடியவில்லை..  ஏற்கனவே அங்கிருக்கும் நிலவரம் ஓரளவு தெரியுமாதலால் , “சரி இது அவுக – பொம்பளப் பிள்ளைகள் சமாச்சாரம் நாம என்ன செய்ய முடியும்  பாஸு “ என்றேன். “அப்பிடியில்ல சார். ஏவாரம் அவகளுக்குப் புதுசு. அதனால மெரள்ராங்க கொஞ்சம் பக்குவமா எடுத்துச் சொன்னா சரியாகும். நீங்களே பாத்தீங்கள்ல கடைவச்ச கொஞ்ச நாளிலேயே எத்தன கஸ்டமர்…. டெய்லி மூவாயிரத்துக்கு போகுதுசார். குருட்டுக்கணக்குப் போட்டாலும் முன்னூறுரூபா நிக்கிமில்லியா.. மாசம் பத்தாயிரம். என்னோட சம்பளத்த தாண்டிருது அது இந்த நாய்களுக்குத் தெரியமாட்டேங்கிது.. “ பதறினார்.

’’சரி, மொதல்ல அவங்க தரப்பையும் கேட்டுக்குவம் அப்பத்தான நமக்கும் பேச சரியா இருக்கும்.” அதன்படிதான் மூவரும் பாஸ்கர் வீட்டினுள் நுழைந்தோம்.

ஆளுக்காள் கஷ்டத்தைச் சொல்ல ஆரம்பித்தார்கள். “கடைக்குள்ள எறங்கியாச்சுன்னா ஒண்ணுக்குப் போகக்கூட வழியில்லண்ணே. கீழ்வீடு நம்மதா இருந்தாலும் அடுத்தாளக் குடிவச்சிருக்கம். மாடியேறித்தான் போகணும். ஏறிஏறங்க எம்புட்டு நேரமாகும் பாருங்க.”

“மாத்தாள் என்னாச்சு…” நடுப்பிள்ளையைக் கேட்க, பாஸ்கரே மறுத்தார். ”கட்டிக்குடுத்த பிள்ளைய சொல்ல உரிமை இல்லசார். அதுங்களா அக்கறைப் பட்டுவரணும். அதேன் நா என்னா சொல்றேன். காலைல ஆறுமணிக்கு கடயத் தொறந்து பதினோறு மணிக்கு மூடிடு. சாயங்காலம் நாலுமணிக்கு தெற. என்ன சார்…? “

”வீட்ல கடைய வச்சுக்கிட்டு அது சரிப்படாதுண்ணே யாராச்சும் வேணுன்னு நிக்கிறப்ப இல்லேன்னு சொல்லமுடியுமா..”

“காலைல வாசத்தெளிக்கறதிலருந்து டிபன் செய்யறது மதியத்துக்கு சாப்பாடு கட்டிவிடுற வரைக்கும் நானே செய்யவேண்டிருக்குண்ணே. இதுல அம்மாக்கு காப்பி , அப்பாக்கு டீ , தம்பிக்கு பால். பத்தாதுக்கு குளிக்க வெந்நி வேறவக்கெணும். இவ்வளவும் முடிச்சிட்டு நா என்னிக்கி காலேஜ் கெளம்பறது. ரெண்டுமாசமா  எம் படிப்பே போச்சு. மண்டைல ஒண்ணும் ஏறமாட்டேங்குது.” சின்னப்பெண் லதா அழாக்குறையாக ஒப்பித்தது.

இதற்கு என்ன பதில் சொல்வது என விளங்கவில்லை. படிப்பு விசயம் அதும் பெண்பிள்ளை. வேலு என்னைப்பார்க்க நான் அவரைப் பார்த்தேன். எங்கள் இருவரையும் பார்த்த பாஸ்கர் நாங்கள் இது  விசயத்தில் உதவமாட்டோம் எனத் தெரிந்தோ என்னவோ லதாவுக்கு தானே பதிலளிக்கலானார்.

“காலைல சமைக்கறதில்லன்னாங்க… தெருக்கடைல பணியாரம் வாங்கிக்கறீங்களாமே… “

“அது தனி… . அப்பாவுக்கு டெய்லி கீரையும் கோதுமைக் களியும் யார்கிண்டுவா… அவக அம்மாவா வந்து கிண்டித்தாராக..? கேளுங்க…” லதா பாஸ்கரை குத்துவது போல கையை மடக்கிக் கொண்டு பக்கத்தில் வந்து  நின்று  பேசியது.

“சுகருக்கு கோதுமக் களியா. . . ! “

“சும்மாவே எதுனாச்சும் செய்யச் சொல்வார் ணே…”

பெண்பிள்ளைகள் இரண்டும் பாஸ்கர்மேல் புகார் கொடுத்ததும் நேரடியாய் அவர்கள்மேல் பாயத் துவங்கினார்.

“அந்தக் காலத்தில நாங்கல்லா என்னென்னா வேல செஞ்சம் தெரியுமா..? வீட்ல மாடு இருக்கும் காலைல பள்ளிக்கூடத்துக்குப் போகறதுக்குள்ள இங்கருந்து ’இடுக்குகளம்’ போயி ஒருகட்டுப் புல்லறுத்துட்டு வந்து மாட்டுக்குப் போடணும். அதுங்குள்ள எங்கப்பா பாலப்பீச்சி வச்சிருப்பாரு அத நாலுவீட்டுக்கு கொண்டுக்குப் போயி வித்து காசாக்கிட்டு வரணும் ஒவ்வொரு நாளக்கி பால் மிஞ்சிப் போச்சுன் னா அதக்காச்சி எங்கம்மா மோராக்கி வச்சிருக்கும் அந்தமோர தலைல சொமந்து வித்துட்டு வரணும் அதுக்கப்பறமா இருக்கறதச் சாப்பிட்டு இல்லேன்னா புளிச்ச தண்ணியக் குடிச்சிப்பிட்டு பள்ளிக்குடம் போவணும். .  . ! “

“அப்ப எங்களையும் புளிச்சதண்ணியக் குடிக்கச் சொல்றியா. . .?”

“இப்பமட்டும் என்னா வாழுதாம் டெய்லி ஆர்லிக்ஸும் பூஸ்ட்டுமா குடிச்சுக்கிருக்கம்.” ரேவதி குறுக்குச் சால் ஓட்டியது. அவர்களது பேச்சில் காரநெடி வீசினாலும் உடலசைவு சிரிப்பைக் கொண்டுவந்தது. வேலு தன்னை அறியாமல் சிரித்துவிட பாஸ்கருக்கு அது கொஞ்சம் அவமான உணர்ச்சியைத் தூண்டிவிட்டது.  உடனே தலையைத் தொங்க விட்டுக்கொண்டார்.

“சரிங் சார் கடைய மூடச்சொல்லீருங்க .  .  . !”

சட்டென ஒருகணம் அந்த வீடு புயல் ஓய்ந்த கடற்கரைபோல வெறிச்சோடியது. கரகரவென ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் சத்தமும் வீதியில் தெருப்பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்த ’’ஐஸொண்ணு’’ என்கிற விளையாட்டுக் கூச்சலும் மட்டுமே  நின்றன.

“இல்லண்ணே.. இன்னம் ஆறுமாசத்தில கீவீடு காலியாயிரும். அதக் கொஞ்சம் இடிச்சுவிட்டு , இல்லாட்டி நாம கீழ குடியிருந்துக்கிட்டு கடையப் பாத்தம்னா…” என ரேவதி தனது தரப்பை வலியுறுத்தும் வண்ணமாக பேச்சை நீட்டித்தபோது பாஸ்கர் கர்ணகடூரமாகக் கத்தினார். “அதே நிறுத்தச் சொல்லி யாச்சுல்ல.. போங்க… ஆத்தாளும் மக்களும் போய்ப் படுத்துத் தூங்குங்க..”

பாஸ்கரின் நிலை வருத்தத்துக்குரியதாய் இருந்தது. ஒவ்வொரு குடும்பத் தலைவனுக்கும் பாஸ்கரின் சூழல் ஏதாவது ஒருகட்டத்தில் வந்துதான் போகிறது. வேலு மறுபடியும் என்னைப் பார்த்தார் அவருக்கும் ஏதோ சொல்லத் தோன்றியிருக்க வேண்டும். சொல்லலாமா வேண்டாமா என மனசுக்குள் அவர் அசைபோடுவது தெரிந்தது. இருந்தாலும் வேறு ஒரு கோணத்தில் பேசிப்பார்க்கலாம் என எனக்கொரு யோசனை வந்தது.

“ ரேவதிம்மா ஒரு சின்ன யோசன. தப்பாருந்தா விட்ருங்க.” என பீடிகை போட்டுக்கொண்டு, “இன்னவரைக்கும் கடைய மூடுறதப்பத்திப் பேசிக்கிட்ருந்தம். எந்த எந்த வகைல கட நமக்கு எடஞ்சலாயிருக்குன்னு பேசுனம். இப்ப கடையத் தொயந்து ஓட்டணும்னா என்னென்னெ செய்யணும்னு பேசிப்பாக்கலாமா…” சொல்லிவிட்டு எல்லோரது கண்களையும் பார்த்தேன். வேலு ஆள்காட்டி விரலை உயர்த்தி தொடரச் சொன்னார். பாஸ்கர் தாழ்த்திய தலையினை நிமிர்த்தி நம்பிக்கையுடன் நேராக உட்கார்ந்து கொண்டார். பிள்ளைகள் இருவரும் குழம்பிய நிலையில் இருந்தார்கள் அல்லது இந்த வியூகத்தை எப்படி உடைப்பது என்கிற சிந்தனையில் இருக்கக்கூடும். ரேவதி மட்டும் இதனை எதிர்பார்த்தவள் போல நேருக்கு நேராய்ப் பார்த்தாள். .

“ நான் காலேஜ்க்குப் போறத நிறுத்திட்டா கடய ஜெகஜோதியா நடத்தலாம். என்னாக்கா…” லதா அம்மாவை முந்திக்கொண்டு தன்சகோதரியை துணைக்கு வைத்துக்கொண்டு பதில் சொன்னது.

“ஸ்சோ சும்மாரு பிள்ள ” என லதாவை அதட்டிய ரேவதி,

‘’ வீட்ல அவருக்கு மட்டுந்தே அக்கற மத்தவகளுக்கெல்லா ஒண்ணுமில்லன்னு நெனச்சுட வேணாம்ணே எல்லாருமே நாயாப் பேயா பாடுபடப்போய்த்தே இத்தன நாளும் கஞ்சிகுடுச்சாலும் குடிக்காட்டியும் கிருமமா வண்டி ஓடுது. யாராச்சும் நல்லா ஓடுற பொழப்ப நிப்பாட்டுவாங்களா.. மத்த காரணங்கள விடுங்கண்ணே ஒண்ணுக்குப்போறம் போகல. கஞ்சிகாச்சறம் காச்சல… அதெல்லா ரெண்டாவதுதே கடயில டெய்லி மூவாயிரத்துக்கு ஓட்றதா சொன்னவரு ரெண்டுமாசத்துல எம்புட்டு கடன் போயிருக்குன்னு சொன்னாரா.. “

ரேவதி பெரிய குண்டைத்தூக்கிப் போட்டது. கடன் நிலவரத்தை பாஸ்கர் சொல்லவில்லைதான். !.. வேலு அவரைப் பார்க்க , பாஸ்கர் புகார் சொன்ன ரேவதியின் பக்கம் திரும்பியிருந்தார்.

“சரி,  நிய்யே சொல்லும்மா..” வேலு ரேவதியைத் தூண்டினார்.

“நேத்து அவருதான் கணக்குப் பாத்தாரு. அவரயே சொல்லச் சொல்லுங்க..? “ ரேவதி பாஸ்கரது வாயாலேயே கேட்க ஆசைப்பட்டாள்.

“கடைன்னு வச்சா கடன் வரத்தான் செய்யும். நாம ரெண்டு பேர்கிட்ட வாங்குவம் நம்மகிட்ட நாலுபேர் கடன் சொல்லுவாங்க. . .  எல்லாமே ரொக்கமாவே நடத்த முடியுமா “

பாஸ்கர் நேரடியாய் பதில் சொல்லாமல் வியாக்யானம் செய்தது அவர்மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.

“நீங்களே சொல்லுங்கண்ணே… இந்தக்கடைக்கி எம்புட்டுக் கடன் நிக்கலாம் ? ” பாஸ்கரின் மூத்தமகள் வேலுவைக் கேட்டது. வேலு தர்மசங்கடத்துடன் என்னை நோக்கினார்.

நிறையக் கடன் நிற்கும் போலிருக்கிறது. அதனால்தான் பெண்பிள்ளைகள் பயந்து ஒதுங்குகிறார்கள் ஆனாலும் தொடர்ந்து கடை நடத்தினால்தான் பாக்கி வசூலாகும் அந்த சூட்சுமம் தெரியாமல் பின்வாங்குகிறார்கள் என அனுமானித்து கொஞ்சம் கூடுதல் தொகையாகச் சொல்லி அவர்களது அச்சத்தைப் போக்கினால் நல்லது. கடையை தொடர்ந்து நடத்துகிறார்களோ இல்லையோ பாக்கிப் பணத்தையாவது வசூல் செய்யட்டும். என்ற எண்ணத்தில், மொத்த பாக்கி என்னவாக இருக்கும் ? அதும் இவர்கள் கடையை மூடுமளவுக்கான தொகை எவ்வளவுதான் வெளியில் நிற்கும்..? என யோசித்தேன்.

சில்லரைக்கடைதான். ஒவ்வொருவரும் பாக்கிவைத்தால் பத்து இருபது அதிகபட்சம் ஐம்பதுகூட இருக்கட்டும்.பத்துப்பேரென்றால் ஐநூறு… இருபதுபேர் ஆயிரம்.. ஆளுக்கு நூறென்றாலும் இரண்டாயிரம்… முப்பதுபேர் மூவாயிரம்… நாற்பதுபேர் நாலாயிரம். ! என கணக்குப்போட்டேன். என்கணக்கு எப்போதும் தப்பியதில்லை. ஒருவேளை தப்பிவிட்டால் …

“என்னா ஒரு அஞ்சாயிரம் இருக்குமா…” சொல்லிவிட்டு வேலுவைப் பார்த்தேன்.  உடனே வேலுவும் தனது பங்கிற்கான உரையினைத் துவங்கினார். அழைத்துவந்த பாஸ்கருக்கு நியாயம் செய்ய ஒரு சந்தர்ப்பம் வாய்க்கிறது இதையும்விட்டால் அடுத்தொரு வாய்ப்பு கிட்டுமா .  .  . !

“இதப்பாரு ரேவதி அல்லாருமே சின்னசின்ன எவரத்தப் பாக்குறவகதே புதுசா நீ செய்றதால ஒனக்கு எல்லாமே மலப்பாத் தெரியுது. ஏவாரம்னா மூணுமொதல் போடணும் தெரியுமா. அதாவது ஒருமொதல் கடைல சரக்கா இருக்கணும் அடுத்தொண்ணு வெளில கடனா நிக்கிம் இன்னொண்ணு கையில  கொள்முதலுக்கு தாயாரா இருக்கோணும். அப்பத்தான் நமக்கு ஏவாரம் ரொட்டேசன் ஆயிட்டே இருக்கும். ”  உற்சாகமாக உரையைத் துவக்கியவரை இடைமறித்த லதா,

“அப்பா ஒங்ககிட்ட பாக்கியச் சொல்லலியா… “ எனக்கேட்டுவிட்டு, ” சரி நானே சொல்றே.. “ என்ற லதா, “மொத்தக் கொள்முதலே அஞ்சாயிரதான் சில்ர சில்ரயா போட்டதச் சேத்தா எட்டாயிரம் வரும், சரியாப்பா… ஆனா , நிக்கிற கடன்பாக்கி இருபதாயிரம்… நம்புவீங்களா.. ரெண்டுதடவ தவணைக்கு வாங்கிப்போட்டுருக்கு பத்தாயிரம் பத்தாயிரமா..அதுக்கு  டெய்லி நூறுநூறு எறநூறு ரூவா கட்டணும்.”

”நீங்கதான கடன் குடுத்தீங்க. நானா கடைல ஒக்கார்ரே… “ சடாரென பின்வாங்கினார் பாஸ்கர்.

“தப்பு பாஸ்கர்.” சடாரென பாஸ்கரை தடுத்த வேலு, “ இப்ப நீங்க பேசறது தப்பு. இம்புட்டு நேரம் அவுங்களப் பேசுனம். அவுங்க தந்த கடன்ல உங்க பங்கு எதும் இல்லியா..” என கிடுக்கிப்பிடி போட்டார்.

“மாசக்கடன் பூராம் அப்பா சொல்லித்தான் குடுத்தம். அதுவே பத்தாயிரம் வரும். “ லதா கையை ஆட்டி அப்பாவைக்காட்டிக் கொடுத்தது.

“நேத்துக்கடன இன்னிக்கி வசூலிக்கணும்சார் இன்னிக்கிக்குக் கடன நாளைக்கி வசூல்பண்ணனும். மொத்தமா கேக்காமலே விட்டா …”

“கேக்காமயா இருக்கம். ஒவ்வொருத்தர்கிட்டயும் டெய்லி சண்டை போட்டுகிட்டிருக்கம்ணே இத்தனநாள் அமைதியா இருந்துபுட்டு இந்தக் கடை ய வச்சப்பெறகு எத்தன பேரத்தே பகச்சுக்கறது. அதுக்குத்தான். முக்காவாசி கடையே வேணான்றது.”

“அப்ப, வெளிய நிக்கிற இருபதாயிரம் …? “

“அது கூடப் போகட்டும் டெய்லி தவணக்காரன் வந்து வாசல்படியில நிப்பானே… யார் பதில் சொல்றது…?”

”ந்தா கடக்குட்டியக் காமிக்க வேண்டியதுதான்…” பாஸ்கர் லதாவைப் பார்த்துச்சொல்ல.. லதாவுக்குக் கோபம் வந்துவிட்டது. “என்னய எதுக்குக் கட்டச்சொல்ற… நீ கட்டு இல்ல ஒம்புள்ளய கட்டச்சொல்லு நாந்தே இளிச்சவாச்சியா.. பாருபிள்ள ரூட்ட..” தன் அக்காவிடம் வந்து ஒண்டிக்கொண்டது.

ஆளுக்காள் தனித்தனியாகவும் அணிசேர்ந்தும் பேச ஆரம்பித்தனர். அந்த இரவுப்பொழுதில் சத்தம் கூடுதலாகக் கேட்டது. கிளம்பலாம் என வேலு சமிக்ஞை காட்டினார்.

“சரிசரி யாரும் தனியா மெனக்கிட வேணாம்.” என அவர்களை ஒழுங்கு படுத்திவிட்டு “ வேலுசொன்னமாதரி நம்மளப் போல சின்னச்சின்ன ஏவாரம் பண்றவங்க பாடெல்லாம் இதுதேன் நெலவரம். இப்பதக்கிக் கடைய மூடவேணாம்.” என்று சொல்லிக்கொண்டிருந்தபோது இடையில் குறுக்கிட்ட பாஸ்கர், “ கேவலம் சார். வெவரமான வீடுன்னு பேரெடுத்துட்டு மூணேமாசத்தில கடையக்காலிபண்ணுனா அசிங்கமில்லியா…? “ என்றார்.

“அசிங்கத்தப்பாத்தா வீட்டவித்து கடைய நடத்தணுங்கிறயா…” ரேவதியின் குரல் பாஸ்கரிலும் உண்ர்ச்சிமயமாய் இருந்தது.

“ சரி சரி பொறுங்க யாரும் எதையும் விக்க வேண்டாம் சொல்றத கொஞ்சம் வாங்கிக்கங்க… “ என அமைதிப்படுத்திவிட்டு மறுபடி தொடர்ந்தேன். “ஆளுக்கொரு நேரம் கடைல ஒக்கார்ரமாதரி வேலைய பிரிச்சு பாத்துக்கங்க. இன்னிமே யாருக்கும் புதுக்கடன் இல்லேண்டு சொல்லீருங்க.. பழச வசூல் பண்றது முக்கியம். வசூல்செஞ்சிட்டு அதுக்கப்பறமா கடைய நடத்தறதா நிறுத்தறதான்னு முடிவு பண்ணிக்கலாம். சரியா ? “

அதற்கப்பறமும் சின்ன கூச்சலும் குழப்பமும் வந்து கசமுசாவென பேச்சு வந்தது உடனே பாஸ்கர் சற்று வேகமாய்ப் பேசலானார். “வீட்டுக்கு வந்து ரெண்டுபேர் பேசுறாகன்னா அவகளுக்கு மரியாத குடுத்து நடக்க தெரிஞ்சுக்கங்க… அவகென்னா வெட்டியாளா… சும்மா சொல்றதுக்கெல்லா பதில் பேசிகிட்டு…” என எங்களை அரணாக்கி சாந்தப்படுத்த முயற்சித்தார்.

ரேவதியும் தன் பங்கிற்கு பிள்ளைகளை அமர்த்தினாள். “சரிண்ணே அதயும் பாப்பம்.”

எல்லோரிடமும் விடைபெற்று வெளியில் வந்தபிறகு பாஸ்கர் அங்கலாய்த்தார். ”அம்புட்டுநேரம் ஒக்காரவச்சும் ஒங்களுக்கு ஒருவாய் காப்பி வாங்கித்தரலியே சார்.. தப்பா நெனச்சுக்காதீங்க… “ என்றபடி தெருமுனையிலிருந்த ஒரு டீக்கடைக்கு இழுத்துப்போனார்.

கடையின் முகப்பில் “தயவுசெய்து யாரும் கடன் சொல்லாதீர்கள் “ என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top