திடுக் …… திடுக் …..

0
(0)

போன வாரம் ராத்திரி பதினோரு மணி இருக்கும்… வெள்ளையா… ஒயரமா அந்த கேட்லருந்து இந்த கேட்டு வரைக்கும் நடந்து வந்துச்சு… இங்க வரவும் மறஞ்சுருச்சு… ஒன்னுமே தெரில… இத கோபாலு பாத்திருக்கான். இதுக்கு என்ன சொல்ற?

“பேய் இருக்கோ இல்லையோ… ஏதோ ஒரு சக்தி இருக்கு …! பத்து நாளைக்கு முன்னால …. ராத்திரி ஒரு மணி இருக்கும். ரெண்டு நாயிக கொலச்சுட்டே வருது…. ஆனா ஒன்னுமே தெரியல, அப்படியே கொலச் சுக்கிட்டே இந்த வழியாப் போயிருச்சு. வழில வேற எந்த நாயும் கொலைக்கல …. காளவாச வீட்ல ரெண்டு நாயி இருக்கு… கடைக்காரு வீட்லயும் நாயி இருக்கு… தெருவுல மொத்தம் ஏழெட்டு இருக்கு… ஒரு நாயி கொலச்சா எல்லா நாயும் தெருவுக்கு வந்து கொலைக்கனும்ல? ஆனா அன்னக்கி வேற எந்த நாயும் கொலைக்கல…. இதுக்கு என்ன சொல்ற?”

“நடமாட்டம் இருக்கு. அது அந்த நாய்களுக்கு மட்டுந் தெரிஞ்சுருக்கு. நடமாட்டம் இருக்குற எடத்துல ஜாக்றதையா இருக்கணும், குறுக்க மறுக்க போனம்னா அடிச்சிரும்.”

“நம்ம பெரிய நாய்க்கருக்கு ஓடத் தெருவுல ஒரு மச்சு வீடு இருக்கு, அந்த வீட்ல நடு ஹால்ல எங்க படுத்தாலுஞ் சரி நல்லா அசத்திக்கிட்டு தூக்கம் வரும். அப்படியே அமுக்குன மாதிரி இருக்கும். காலை எந்திருச்சா ஒடம்பெல்லாம் வலிக்கும்.”

ஒவ்வொன்றாகச் சொன்னார்கள். எல்லோருக்கும் ராமசாமியை மடக்கி விட்ட திருப்தி, பதில் சொல்ல முடியாமல் திணற, அடுத்தடுத்து சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அதில் சாமாண்டி சொல்வது, அந்தக் காட்சிகளையே கண் முன்னால் நிறுத்தியது. மொட்டைத் தலையும், உருட்டித் திரட்டிய விழியும் பொருத்தமாக இருந்தது. கையையும் காலையும் ஆட்டி, ஆட்டி, “ஊய்… ஊய்…” என்றோ உஸ் … உஸ் … ” என்றோ காட்சிக்குத் தக்கபடி சவுண்டு கொடுத்துச் சொன்னான். அது பய உணர்ச்சியைத் தூண்டியது.

ராமசாமிக்குத் தங்கராசின் நினைவு வந்தது. அவன் ஒரு ஜாலிப் பேர் வழி. எல்லாப் பேச்சுக்களிலும், எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வான். எதைப் பேசினாலும் விரசமில்லாமல் பேசமாட்டான். இது போல் எல்லோரும் பேய்க்கதை பேசிக் கொண்டிருந்த போது அவனும் ஒரு உண்மைக் கதையைச் சொன்னான்.

இரண்டாவது ஆட்டம் சினிமாப் பார்த்து விட்டு அவனது கிராமத்திற்குப் போய்க் கொண்டிருந்தான். வழியில் ஒரு சிறிய பாலம். மங்கலான நிலா வெளிச்சம் தூரத்தில் அந்தப் பாலம் தெரிந்தது. பெண் போல் இருந்தது. பெண்ணே தான். அதிலும் இளவயதாக இருந்தாள்

இவனுக்கோ நம்ப முடியவில்லை. இந்த நேரத்தில் அதுவும் பாலத்தில் உட்கார்ந்திருப்பதென்றால்? சந்தேகம் வந்தது. பக்கத்தில் வர… வர…. அழகாகத் தெரிந்தாள். அருகில் வந்த பிறகு நன்றாகத் தெரிந்தாள். அழகு தெரிய உடுத்தி இருந்தாள். அவன் நினைத்தது சரியாக இருந்தது. நெருங்கிப் பார்த்தான். அவள் லேசாகச் சிரித்தாள். முயன்று பார்த்தால் என்ன?

முயற்சி திருவினை ஆனது. பாலத்திற்கு வந்து உட்கார்ந்தான். ஏதாவது பணம் கொடுக்க வேண்டும் பாக்கெட்டில் பார்த்துக் கொண்டான். அவள் வரட்டும் என்று காத்திருந்தான். கீழே குனிந்து பார்த்தான். இன்னும் என்ன செய்கிறாள்? வரும் போது வரட்டும் என நினைத்தான். யார், எவர்? என்று விசாரித்துக் கொள்ள வேண்டும். வீட்டையும் கேட்டு வைத்துக் கொண்டால் நல்லது என்று நினைத்தான் அவள் வரவில்லை. குனிந்து குனிந்து பார்த்து விட்டு கடைசியாக கீழே இறங்கினாள். அவளைக் காணவில்லை. சுற்றிலும் பார்த்தான். எங்கும் இல்லை யாரும் இல்லை பேயாக இருக்குமோ? மோகினிப் பேய் தான். அவனுக்குப் பயம் வரவில்லை. பயத்திற்குப் பதிலாக அவளின் சுகம் தான் வந்தது. சிரித்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தான்.

இவ்வளவையும் சொல்லி, இதை நம்புகிறீர்களா என்று இவர்களிடம் ராமசாமி கேட்க நினைத்தான். ஆனால் சொல்லவில்லை. அப்படிக் கேட்டால் பேய்க் கதைகளுக்குப் பதிலாக ஆபாசக் கதைகளை ஆரம்பித்து விடுவார்கள். அதனால் அந்தக் கதையையே சொல்ல வேண்டாம் என்று நினைத்தான்.

ஆனால் ராமசாமியை அவர்கள் விடவில்லை. “இதுக்கு என்ன சொல்ற?” என்று பிடித்துக் கொண்டார்கள்.

“என்ன சொல்றது? …. எல்லாத்துக்கும் பொதுவா, விஞ்ஞானக் கல்வி வளரணும் விஞ்ஞான அறிவு வளர்ந்தா பேய்க்கதைக இல்லாமப் போயிரும்.”

தங்கராசு நடத்திய லீலையை எப்போதும் போல் தான் சொல்ல வந்தான். எல்லோரும் பேய்க் கதை பேசியதால் அவனும் பேய்க் கதையாகவே அதையும் சொல்லிவிட்டான். பேய்க்கதை எப்படி பிறக்கிறது என்பது ராமசாமிக்கு அப்போது தான் தெரிந்தது.

டூரிங் சினிமாவில் ஒரு பெண்ணைக் கடத்திக் கொண்டு வந்தது முதல், அந்தப் பாதையும், அந்தப் பாலமும் சொல்லி, வீடு போய்ச் சேர்ந்தது வரையிலும் ஏற்கனவே எல்லாவற்றையும் இவனிடம் சொல்லி இருக்கிறான். அதையே திறமையான பேய்க் கதையாக மாற்றி இப்போது சொல்லிவிட்டான். அவன் திறமையை நினைத்தால் ராமசாமிக்கு வாய்ப்பு. ஆனால் அந்தக் கதையை இவர்களிடம் சொல்ல அருவருப்பாக இருந்தது. அவன் போல் இவனால் சொல்லவும் முடியாது.

வேறு ஏதாவது சொல்ல வேண்டும். ஆனால் இது போல் மாற்றியோ, புனைக்கதை புனைந்தோ சொல்லக் கூடாது. யோசித்துக் கொண்டிருக்கும் போதே குமுளி நினைவுக்கு வந்தது.

அது நடந்து பல வருடங்கள் இருக்கும். அப்போது ராமசாமி படித்துக் கொண்டிருந்தான். ஒரு விடுமுறையில் நண்பர்களாய் ஏழெட்டுப் பேர் குமுளிக்குப் போனார்கள். தேக்கடியெல்லாம் சுற்றிவிட்டு இரவில் நண்பன் வீட்டில் தங்கினார்கள். அது ஓட்டலும் வீடும் இணைந்தது. மாடியில் வாடகை அறைகள். கருங்கல் அஸ்திவாரம். மற்றதெல்லாம் மரம். தூணும் மேல் தளமும் மாடியும் தேக்கு மரப்பலகைகளால் அடைத்திருக்கிறார்கள்.

இரண்டு அறைகளில் நன்றாக அடைத்து, கம்பளி போர்த்திப் படுத்துவிட்டார்கள். வெளியே நிலா காய்ந்து கொண்டிருந்தது.

மணி ஒன்று இருக்கும். ராமசாமிக்கு முழிப்பு வந்தது. புது இடம் சரியான உறக்கம் இல்லை. உட்கார்ந்து சிகரெட் தீப்பெட்டியைத் தேடினான். அது மேஜை மேல் இருந்தது. சுற்றிலும் நண்பர்கள் உருண்டு கிடந்தார்கள். எழுந்து சோம்பல் முறித்தான். குளிர் குறைந்திருந்தது. சிகரெட்டை எடுத்து, கதவைத் திறந்து நடைபாதைக்கு வந்தான். அது வெளிப் பக்கம் நீட்டிக் கொண்டிருந்தது. அதில் நின்று கொண்டான்.

சிறுநீர் கழிக்க கீழே இறங்க வேண்டும். இயற்கை காட்சிகள் அவனை நிறுத்தின. நிலவொளியில் அந்தக் காட்சிகள் கனவுலகில் மிதப்பது போல் தெரிந்தன. சுற்றிலும் தேக்கு மரங்கள். தூரத்தில் தேயிலை தோட்டங்கள். சிற்றாறுகளின் சலசலத்த ஓட்டம். அதிகம் ரசிக்க முடியவில்லை. சிறுநீர் அவசரப்படுத்தியது.

வேகமாக நடந்தான். டக்….. டக்.. என்ற சத்தம் பலகையில் எழுந்தது. மற்றவர்களின் தூக்கம் கெட்டு விடும் என்று, அவசரத்தை சமாளித்தவாறு சத்தமில்லாமல் நடந்தான். இடது பக்கம் திரும்பி படிகளில் இறங்கினான்.

எங்கும் தேக்கு மர இருட்டு. நிழல் திட்டுத் திட்டாய். நிலவின் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான்.

இப்போது தான் ஆசுவாசம் ஏற்பட்டது. உடம்பே லேசாகிப் போனது போல் இருந்தது. அந்த சுகத்தோடு சுகமாய் சிகரெட்டைப் பற்ற வைத்தான். குளிருக்கும் இதம்.

‘டக் ….. டக் ….’ என்ற சத்தம் இப்போதும் கேட்டது. யாரோ கீழே வருகிறார்கள். இவர்களைத் தவிர மற்ற அறைகளிலும் தங்கி இருக்கிறார்கள். அதனால் நண்பர்கள் இல்லாமல் வேறு யாராகவும் இருக்கலாம். நண்பனாக இருந்தால் இவன் வந்திருப்பது தெரிந்திருக்கும். அதனால் கூப்பிடுவான். யாரும் கூப்பிடவில்லை.

எழுந்து நின்று சிகரெட் புகையை ஊதினான். நிலவு, தூரத்துக் காட்சிகளை மங்கலாய் காட்டியது. மேலே நின்று பார்த்ததற்கும். கீழே நின்று பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம். இரண்டு விதமான அழகுகள், ரம்மியமான காட்சிகள், தேக்கு மரங்களின் உச்சியில் நிலவு காய்த்திருந்தது. ஏறினால் எட்டிப் பறித்து விடலாம். கந்தல் கந்தலான ஆடை உடுத்தி தாயும் மகளும் நிற்பது போல் பாதையில் இரண்டு மரங்கள் நின்றன. கையில் தட்டைக் கொடுத்து விட்டால் ஓட்டலுக்கும் அதுக்கும் சரியாக இருக்கும். இப்படி ஒவ்வொன்றாக கற்பனை செய்து பார்த்தான்.

யாரோ இறங்கியது நினைவுக்கு வந்தது. ஆனால் யாரும் தென்படவில்லை. மீண்டும் சிகரெட்டைப் பற்ற வைத்து விட்டு தீக்குச்சியை உயர்த்திப் பிடித்தான். யாரும் தெரியவில்லை கொஞ்சம் கூர்ந்து பார்த்தான். தீக்குச்சி அணைந்தது. சத்தம் கொடுத்தான்.

“யாருங்க?”

பதில் இல்லை. யாரும் வரவில்லையோ! டக்… டக்… கென்று இறங்கி வரும் சத்தம் கேட்டதே! நிச்சயம் யாரோ வந்திருக்கிறார்கள். மீண்டும் குரல் கொடுத்தான்.

“யாருங்க அது? … கேக்றது காதுல விழலயா?”

அப்போதும் பதில் இல்லை. சந்தேகம் வலுத்தது. அப்படியே நின்றான். நின்றபடியே ஒவ்வொரு இடமாகக் கூர்ந்து பார்த்தான். திடுக்கென்று ஒரு உதறல் சுரீரென்று சிகரெட் விரலைச் சுட்டது. உடம்பு ஆடியது நெஞ்சில் ஒரு பயம். நல்ல வேளை கத்தப் போனவன். எப்படியோ சமாளித்து விட்டான். கையை உதறி, வாயில் விரலைச் சப்பினான். சுட்ட வேகத்தில் ஏற்பட்ட பயமும், திக்திக் கென்ற நெஞ்சின் அடிப்பும் குறையவில்லை.

யாராக இருக்கும்? யாருமே இல்லையோ! இல்லை… கீழே இறங்கிய சத்தம் கேட்டது. உண்மை தான். ஆள் இல்லாமல் வெறும் சத்தம் மட்டும் வராது.

கொஞ்சம் மூச்சிழுத்து ஆசுவாசப்பட்டான். நின்று நிதானித்து யோசித்தான். பேய், பூதம் என்பதெல்லாம் வெறும் கற்பனை, மனப் பிரமை, இதை எப்படியும் பார்த்து விட வேண்டும்.

மீண்டும் தீக்குச்சியை உரசி, ஒவ்வொரு இடமாக நகர்ந்தான். சுற்றிலும் முள் கம்பி போட்டு, ஆள் உயரத்திற்கு அடைத்திருக்கிறார்கள். உள் பக்கமாகப் போவதைத் தவிர வேறு பாதை இல்லை. அந்தக் கதவும் அடைத்திருக்கிறது. அதனால் மீண்டும் மேலே ஏற வேண்டும். அல்லது கீழேயே இருக்க வேண்டும். மேலே ஏறிய சத்தம் கேட்கவில்லை.

ஒவ்வொரு இடமாக நகர்ந்தான் மனதும் ‘திக்….. திக்…’ கென்று அடித்துக் கொண்டிருந்தது. தேக்கு மரங்கள் பக்கம் பார்த்து விட்டு, முன் கம்பியை ஓட்டி நடந்து ரோட்டு ஓரம் வந்தான். இங்கு மிகவும் நெருக்கமாக கம்பியைப் பின்னி இருந்தார்கள். தீக்குச்சியை உரசிப் பார்த்துக் கொண்டே நகர்ந்தான். யாரும் இல்லை. எதுவும் இல்லை.

லேசாக வேர்க்க ஆரம்பித்தது. கொஞ்சம் நேரம் நின்று மூச்சிழுத்து விட்டான். அடுத்த சிகரெட்டைப் பற்றவைத்து யோசித்தான். துணைக்கு யாராவது இருந்தால் நன்றாக இருக்கும். பெரும்பாலும் தனிமையில் தான் இதுபோல் ஏற்படுகிறது. அது ஏன் என்று தெரியவில்லை. ஆட்கள் நிறைய இருந்தால் பேய் வராதோ! ச்சே …! பேயாவது பூதமாவது!! மனதை தைரியப்படுத்தி மீண்டும் நடந்தான்.

சுவர்ப் பக்கமாக வந்தான். சுவரை ஒட்டி, இறங்கி வந்த படி இருக்கிறது. உற்றுப் பார்த்துக் கொண்டு படிப்பக்கம் வந்தான். அடியில் ஏதோ தெரிந்தது. எச்சரிக்கை அடைந்து மெதுவாக, ஜாக்கிரதையாக நடந்தான். பக்கத்தில் வந்ததும் சட்டென்று தீக்குச்சியை உரசினான். படுத்திருந்த நாய் வேகமாய் தலையைத் திருப்பியது.

இவனுக்குப் போன உயிர் திரும்பியது. அதுவரையிலும் இருந்த பய உணர்வு மாறி, நாயின் மேல் கோபம் வந்தது. ஒரு கல்லை எடுத்து ஓங்கி எறிந்தான். இவன் குனிந்த உடனேயே நாய் ஓட்டம் எடுத்தது. எறிந்த கல் மரத்தில் பட்டு கீழே உருண்டது.

ஒரு நிம்மதியோடு வேர்வையைத் துடைத்தான். கண்டு பிடித்து விட்டோம் என்ற நினைப்பும், கண்டு பிடிக்க வேண்டும் என்ற முயற்சியும் செயலும் மன நிறைவைக் கொடுக்க லேசான சிரிப்போடு மாடிப் படியில் ஏறினான்.

பயந்து போய் படுத்திருந்தால், காலையில் நண்பர்களிடம் பேய்க்கதை சொல்ல வேண்டியதிருக்கும். அதைக் கண்டு பிடித்தது பெருமையாக இருந்தது.

இதைச் சொல்லிவிட்டு மற்றவர்களைப் பார்த்தான். குறிப்பாக மொட்டைத்தலை சாமான்டியைக் கவனித்தான். “பேய்க்கும் நாய்க்கும் ஏதாவது வகைல தொடர்பு இருக்கு.”

எதையும் நம்ப முடியல … இருக்குன்னாச் சொல்ல முடியல இல்லேன்னுஞ் சொல்ல முடியல …. யோசிச்சுப் பாத்தா பேய் பிசாசெல்லாம் இல்ல தான்.”

ஆனா அவனவனுக்கு வரும்போது ஆடிப் போயிறானுக.”

“எதுக்கும் தைரியமா இருந்தது, யோசிக்கக் கண்டு பிடிக்கிறது தான் நல்லது. அப்பத்தான் உண்ம தெரியும்.”

முதலில் பேசிய தொனி மாறி, வேறு விதமாகப் பேச ஆரம்பித்தார்கள். ராமசாமியும் சிரித்துக் கொண்டான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top