திசை மாற்றம்

0
(0)

இளவரசி கணவனைக் கண்கொட்டாமல் பார்த்தாள். அப்போதுதான் அவனை புதிதாகப் பார்ப்பவளைப்போல அவளது பார்வையும் பாவமும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் சரம்தொடுத்தன. நிஜமாகவே அவன் அழுதுகொண்டிருந்தான். கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீர், சாட்சியாய் காட்சி தந்தது. கன்னத்தில் வழிந்த நீரையும் துடைக்கும் நினைவின்றி இருந்த நிலைதான் அந்தக்கூட்டத்தில் அவனை முதன்மையாக்கியது.

இழவு விசாரிக்க வந்தவர்களில் பெரும்பாலோனோர் அவனருகிலேயே நிற்கலாயினர். ஆனந்தனின் மனைவி ரத்தினம் அவனை கழுத்தோடு சேர்த்து கட்டிக் கொண்டு அழுதது. “ வாணா ராசா, வாணா மய்யா இந்த நேரத்துல நீ கண்ணுத்தண்ணி சிந்தக்குடாது. “ சொல்லிக்கொண்டே அவனது கண்ணீரை தனது புடவைத் தலைப்பால் துடைத்துவிட்டது. “ தலமேல காரியத்த வச்சிருக்கவெ. ’அதுக, ஆயிரங்காலத்த ஆண்டு நிக்கெணும். மூத்தவெ நீயே இப்பிடி விசும்பி நிண்டா என்னா கணக்கு ? “ தேற்றிய வார்த்தைகளுடன் சட்டெனத் திரும்பிய ரத்தினம் இளவரசியை சாடைகாட்டி அழைத்தது. “தம்பிய உள்ள கூட்டிட்டுப்போயி சமாதானப்படுத்துடி. இம்புட்டு வெவரமானவ, அத்தாம் பெரிய காரியத்த வீட்ல வச்சுகிட்டு வீட்டு ஆம்பளய இப்பிடி கங்கலங்க காங்கலாகுமா ? “

ரத்தினத்தின் அருகிலிருந்த லட்சுமிப் பெரியம்மாவும், அக்காண்டி அத்தையும் ஆமோதிக்க, கணவனை கையோடு வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள் இளவரசி.

சங்கும் சேகண்டியும் போட்டி போட்டுக்கொண்டு ஒலித்துக் கொண்டிருந்தன, போதாக்குறைக்கு தெருக்கோடிவரை கூம்புவடிவ குழாய் கட்டி, ”அவள் பறந்து போனாளே” என டிஎம்எஸ்,சும், பி.பி.சீனிவாசும் சோககீதம் பாடிக் கொண்டிருந்தார்கள். பந்தல்காலின் விளிம்பினருகே கிடந்த ஒருசேரில் பட்டும்படாமல் உட்கார்ந்துகொண்டு “முனையில் துணிசுற்றிய கோலால் ட்ரம்மர்ரின் மையத்தை அறைந்து “டம் டம் டமென “ ஓசையினை பரப்பிக்கொண்டிருந்தான் அழகர் மகன் ரஜனி.

பந்தலை அடைத்து கூட்டம் . இன்னும் பத்தடி நீளம் இழுத்துப் போட்டிருக்கலாமென ஒருத்தர் ஆலோசனை சொன்னார். கூடவே ஒத்தக் கொட்டுக்குப் பதிலாக மேளசெட் ஏற்பாடு இருந்தால் சிறப்பாம் “ பயகதே ஒண்ணுக்கு நாலுபேரு இருக்கானுகள்ல “

எல்லாவற்றையும் தன் மௌனத்தால் வாங்கிக்கொண்டு கண்ணாடிப் பெட்டிக்குள் கண்மூடி சவமாய்க் கிடந்தார் அம்மா. பெட்டியின் மேற்புறத்தில் சேர்ந்த பூமாலைகளை எடுத்து வராந்தா மூலையில் குவித்தபடி இருந்தனர். வீடெங்கும் பூவாசமும் ஊதுபத்தி மணமும் மனித வெக்கையில் கலந்து விசும்பில் உலவிய காற்றின் குணத்தை மாற்றி விட்டிருந்தது. அந்த நறுமணத்தின் வாசனை சில பெண்களுக்கு ’மண்டையிடி’யைக் கிளப்பிவிட்டது. சிலர் முன்யோசனையாய் முந்தானையால் மூக்கைப் பொத்தியபடி அமர்ந்திருந்தனர்.

வீட்டினுள் ஸ்ருதி ஏதோவொரு நாளிதழைப் புரட்டிக்கொண்டிருந்தாள். இளைய பெண்ணையும் பையனையும் இளவரசி, அப்பாயி முகத்தைப் பார்க்காதிருக்கும்படி சொல்லி வெளியில் அனுப்பியிருந்தாள். அனேகமாய் இரண்டுபேரும் பந்தலடியில்தான் திரிவார்கள். ஸ்ருதியை அடுத்த தெருவிலிருக்கும் தன் அக்காவின் வீட்டுக்குத்தான் அனுப்ப எண்ணியிருந்தாள். ஊர்வாயைச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனால் இளவரசி நினைத்ததைவிட ஊராரின் ஆதரவு அவளுக்கு அபரிமிதமாகவே இருந்தது. ராசாத்திப் பெரீம்மா சாபமிடாத குறையாக இளவரசியைச் சத்தம் போட்டது.

“ நாளனன்னைக்கி பேரெம்பேத்தி எடுக்கப் போறவ, ஒனக்கு நல்லதுதே தெரியாது ! ஒரு கெட்டதாச்சும் தெரிஞ்சிருக்கவாணாம் ?  நாளக்கி மணவறைல நிக்கப்போற பிள்ளைய, தீட்டான எடத்துல வச்சிருக்கலாமா ? ஒனக்குத்தேந் தெரியாது வீட்டு பெருசுகளுக்காச்சும் புத்தி வாணாமா ? “ பொரிந்து தள்ளினார். அவரது சத்தம் கேட்டதிலிருந்து  ஸ்ருதி தன் அறையைவிட்டு வெளியில்வரத் துணியவில்லை. இல்லையானால்  கிறுக்குத்தனமாக எதையாவது கேட்டு சொல்லிக்கொண்டிருப்பாள். “காலம் மாறிப்போச்சும்மா, மூக்குத்தி, கம்மலு, தண்டட்டின்னு ஒங்க ஃபேவரட் ஃபாஷனெல்லாம் இன்னிக்கு காலாவதி ஆயிடுச்சு. நீ மட்டும் ஏம்மா இன்னம் அம்மாச்சியாவே இருக்க ? “ என பரிகசிப்பாள்.

“ என்னாச்சு ஒங்களுக்கு ? நெறஞ்ச சபையில துயிலுருஞ்ச துரோபதை கணக்கா கண்ணுல தண்ணிய ஒழுகவிட்டு அழுதுட்டுருக்கீங்க. அம்மா மேல கொள்ளப் பாசம் ? “ கேட்கும்போதே இளவரசிக்கு ஒரு தயக்கம். அவன் திடீரென கோபப்பட்டு விடலாம். ‘ இதுவே ஒன்னோட அம்மான்னா நீ அழாமத்தே இருப்பியா ? “ என, கேட்டுவிடலாம். அதற்குத் துணையாக, கணவனது சொந்தங்கள் பந்தலில் குழுமிக்கிடக்கும் நேரம்.. ஏனோ அவன் பதிலெதுவும் கூறாமல் அமைதிகாத்தான். அல்லது ஏதோவொரு குழப்பத்தில் அகப்பட்டு விடுபடாதிருந்தான்.

அப்போதும் பதில் சொல்லாமல் தலையினை மட்டும் ஆட்டி எதையோ மறுத்தான். ஸ்ருதி தன் அறையினில் அமர்ந்தபடியே இக்காட்சியினைக் கண்டுகொண்டிருந்தாள். எழுந்துவந்து அவர்களோடு கலந்துகொள்ளும் எண்ணமில்லை. அம்மாவிடம் பயமிருந்தது. தனக்கு திருமணம் பேசிமுடித்த நாளிலிருந்து முன்னால்போனால் கடிப்பதும் பின்னால்வந்தால் உதைப்பதுமாக அம்மா தன்னிலிருந்து ரெம்பவும் மாறித்தான் போயிருந்தாள்.

ஸ்ருதி அப்பாவுக்கு உட்கார சேர்எடுத்துப் போட்டாள். அமைதியாய் அமர்ந்தவனிடம் விசும்பல் சற்றுக் குறைந்திருந்தது. தோளில் கிடந்த துண்டால் முகம் துடைத்துக் கொண்டான். மூக்கை உறிஞ்சி சளியை விழுங்கினான். ” மார்க்கயன்கோட்டைக்கு சொல்லிவிட்டாச்சா ? “ சகஜநிலை எட்டுவதற்கான முயற்சியில் அவனது குரல் இன்னமும் மீளவில்லை கண்ணாடியில் ஆணி பதித்து இழுத்ததுபோல தொண்டை கிறீச்சிட்டது. ஓருமுறை செருமி விழுங்கினான்.         “ மார்க்க . .” மறுமுறை பேசமுயன்றவனின் முயற்சியை தடுப்பதுபோல அவனது தோளைப்பற்றி அழுத்தினாள். இளவரசி ” புரியாமப் பேசாதீங்க . . அதெல்லா நாம வாயாலகூடச்  சொல்லக் குடாதுங்க . . கடவுளே !. மனசறிஞ்சு யாருக்கும் எந்தத் தீங்கும் பண்ணதில்ல எங்களுக்கு எதுக்கு இப்பிடியொரு சோதன ?” இளவரசியின் கூற்றை அப்படியே ஆமோதிப்பவன்போல சற்று இடைவெளி கொடுத்த அவன், “எனக்கும் புரியுதுடி . .ஆனா நாம சொல்ல வேண்டியவங்களுக்கு நாமதான மா சொல்லணும். ?”

“ அப்பா, அமங்கலமான வார்த்தையே நாம பேசக்குடாதுன்னு சொல்ற நேரத்தில தகவல் சொல்லி விடறது எப்பிடிப்பா சரியாகும். ? “ உள்ளிருந்தபடியே ஸ்ருதி மெல்லியகுரலில் பேசினாள்.

“ சுருதி . . போ போய் வாயக்கழுவு. எதும் பேசக்குடாதுன்னு சொல்லீருக்கேன்ல. நூத்தியெட்டு ராமஜெயம் சொல்லு. அப்பவே ஒன்னிய பெரீம்மா வீட்டுக்குப் போகச் சொன்னேன்ல கெளம்பற வழியப்பாரு பெரியமனுசி கணக்காத்தேன் நொன நொனன்னு பேசிட்ருப்பா ! “ மகளுக்கு ஒரு பரிகாரத்தைச் சொல்லி வாய்ப்பூட்டு போட்டுவிட்டு மறுபடி அவனிடம் வந்தாள்.

“ அதெல்லா கிளீனா சேர வேண்டியவங்களுக்குப் போய்ச் சேந்துரும் வாரவங்க வந்துருவாங்க. இதுபத்தி வேற ஒண்ணும் நீங்க ஓசிக்க வேணாம். விசாரிக்கறவங்களுக்கு மட்டும் வதுலு சொல்லுங்க ரைட்டா ? “

தலையை ஆட்டினான். எப்போதும் அவனது பேச்சுக்குத்தான் வீட்டில் எல்லோரும் தலையாட்ட வேண்டும். “ கொஞ்சம் தண்ணிகுடு “ மீண்டும் தொண்டைச் செருமல் வந்தது. தண்ணீர் மொண்டு தர ஸ்ருதியைத் தேடினாள். கண்ணில் காணோம். உள்ளே போயிருப்பாள், அல்லது மாடிக்கு சென்றிருக்கலாம். தானே போய் மொண்டு வந்தாள்.

“ வேறெதும் சாப்பிடுறீகளா ? “

“ யேன் ? எதும் அப்பம் பணியாரம் சுட்டுவச்சிருக்கியா ? “ பழைய நக்கல் தலைதூக்கியது. வீட்டில் அடுப்பு பற்றவைக்கக் கூடாதென்பது அவனுக்கும் தெரியும். வேறொரு சமயமாய் இருந்தால் இளவரசியும் சூடாய் பதில் கொடுத்திருப்பாள். “ நேத்து சம்பந்தகாரவக வாங்கி வந்த கேக்கும், பன்னும் இருக்கு. சாப்புடுங்க. எம்புட்டு நேரம் வெறும் வகுத்தில தாக்காட்டுவீங்க. எப்பிடியும் காரியம் முடிஞ்சுவர இருட்டீரும்ல. “

“ பாப்பம். பெத்தவளுக்காக ஒருநா பட்டினி கெடப்போம்.”

அது அவனால் முடியாது என்பது இளவரசிக்குத்தான் தெரியும். இருப்பதை தெரிவித்தாயிற்று இனி அவன்பாடு. ஒருவேளை யாராவது நண்பர்களோடு கடையில்போய் சாப்பிட்டாலும் சாப்பிடலாம்.

ஆனால் அவனுக்கு இப்போது எண்ணமெல்லாம் சாப்பாட்டில் இல்லை. ” கொள்ளிய தம்பிகளுக்கு விட்டுத்தரப் போறியா “ என்று பூபதி வந்து போட்ட குண்டில் நெஞ்சு புகைந்து கொண்டிருந்தது. அதன் காரணமாய்த்தான் கண்ணீரும் கபக்கட்டும். இளவரசியிடம் சொல்லத்தான் வந்தான். இன்னும் நேரமிருக்கிறது. அதற்குள் முடிவுகள் மாறலாம். அதுவரை பொறுமை காத்தல் வேண்டும். அவளுக்கும் தகவல் வந்திருக்கும் தாயறியாத சூலா ? பொம்பளைகளுக்குத் தெரியாத ரகசியங்களா !

“ அண்ணே, கயத்துக்கடைக்காரர் வந்திருக்கார் “ தம்பி வெங்கடேசன் வந்து அழைத்தான்.

“ பெரியவரா ? “

“இல்ல நடுவுலவர். ராமசாமி யண்ணே “

தோள்த்துண்டை விரித்து முதுகில் போர்த்திக்கொண்டு வெளியில்வந்தான்.

“ வீடுவரை உறவு வீதிவரை மனைவி “ டி எம் எஸ் உருகிக்கொண்டிருந்தார்.

“ தொட்டிலுக்கு அன்னை, ய் ய் ய் கட்டிலுக்கு கன்ன்னி

பட்டினிக்குத் தீனி இ இ இ, செத்தபின்பு ஞா . .னி ! “

ஏனோ அவரைக் கண்டதும் அவனுக்கு துக்கம் மேலோங்கியது. “ வாங் . . “ வார்த்தைகள் வரவில்லை. கைகூப்பினான். கூப்பிய கையைப் பற்றிக்கொண்ட அவர், ஆதூரமாக முதுகைத் தடவிக் கொடுத்தார். இருவரும் உட்கார பந்தலில் இருந்தவர்கள் இடம் ஒதுக்கிக் கொடுத்தனர்.

“ ரெம்பநாளா முடியாமக் கிடந்தாங்களோ ? “

“ ம், .ஒரு அஞ்சாரு மாசம் மிருக்கும். இல்லியா மாப்ளெ ? “ அருகில் அமர்ந்திருந்த குமரேசக் கொத்தனார் அவனுக்குப் பதிலாய் குரல் கொடுத்தார்.

“ ம் “ மென தலையாட்டினான்.

“ அப்பா . . ? “

“ அவரு தவறி அதுவொரு நாலஞ்சு வருசமிருக்குமே !. என்னா மாப்ள, கணக்குச் சரித்தான ? நா ஒரு குத்துமதிப்பாத்தாஞ் சொன்னே. “ என்ற குமரேசக் கொத்தனார், அவனது பதிலை வாங்காமலே இன்னும் பேசலானார். “ அப்பா தங்கமானவரு. யாரையும் பேர்சொல்லியே கூப்ட மாட்டார். மாமெ, மச்சினா, அண்ணெ, தம்பி, மருமகெ, மாப்ள இப்பிடித்தேங் கூப்டுவாரு. என்னயெல்லா எங்கன கண்டாலும் தோள்ல கையப் போட்டுக்குவாரு. வாய் நெறைய மருமகனேன்னு கூப்டுவாரு. இப்பவும் காதுல கேக்குற மாதரியே இருக்கு. “

குமரேச கொத்தனாரின் அலப்பறையில் அடுத்த கேள்வி எதும் எழுப்பவில்லை கடைக்காரர். கூட்டத்தை வெறுமனே கண்களால் ஒரு அளப்பு அளந்தார், அவருக்கு சிலர் கையெடுத்துக் கும்பிட்டனர். பதில் கும்பிடும் போட்டார். அவருடன் வந்தவர்கள் இவரது வருகைக்காக பந்தலின் முகப்பில் அமர்ந்திருந்தார்கள். அவர் எழுந்ததும் காருக்குத் தாவி விடுவார்கள். அவர்களையும் பார்த்தார், கண்களால் பேசினார். ; ’ இந்தா . . கெளம்பீருவம் ! ‘

சங்கும் சேகண்டியும் வாசிப்பவர், தலைக்குமேல் கைகளை உயர்த்தி அவருக்கு தானும் ஒரு கும்பிடுபோட்டுவிட்டு வேகமாய் தன் வாசிப்பை நடத்தலானார். சங்கை வலக்கையில் பிடித்து மேல்நோக்கி ஊதியபோது அவரது வயிறு பள்ளத்தாக்காய் மாறிய நேரத்தில் கழுத்து நரம்புகள் புடைத்து நின்றன. அதேபோதில் இடக்கையிலிருந்த சேகண்டியும் இடைவிடாது ஒலித்தது. ஐந்து நிமிடம் அவர் தன்வசமில்லை. உடம்பை முறுக்கி சாறு பிழிவதுபோல வேலைபார்த்தார். முடித்ததும் மறுபடி கும்பிடுபோட்டார். சட்டைப்பையிலிருந்து பத்துரூபாய் எடுத்து கயத்துக் கடைக்காரர் நீட்ட துண்டை கைகளில் தவழவிட்டு தலைகுனிந்து பவ்யமாய் வந்து வாங்கிக்கொண்டார். அதுகண்டு ட்ரம்மர் ரஜனியும் தன்வேலையைக் காட்டலானான். அவனுக்கும் பத்து .

“ பேச்சுக்குச் சொல்றேன். நானெல்லா பதிமூணு வயசிலேயே தொழிலுக்கு வந்தவெ. ஊருக்குள்ள ஆராரு எப்பிடின்னு என்னயக்கேளு. எங்கிட்டயே டகால்ட்டி பண்ணணும்னு நெனச்சா ஆகுமா ? அவன் ட்டசொல்லி வச்சிரு ஒத்தக்காதும் ஒருசைடு மூக்கும் காணாமப் போயிரும் “ கைபேசியில் வாயையும் காதையும் கைகளால் மறைத்துக்கொண்டு ஒரு குள்ளமான மனிதர் சத்தமாய்ப் பேசிக்கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் குமரேசகொத்தனர் காணாமல் போனார்.

“ புள்ளக்கி கலியாணம் எப்ப வச்சிருக்கீங்க ? மறுபடியும் விசாரணையைத் துவக்கினார். கடைக்காரர்.

“ இருவத்தொம்பதாந்தேதி ”

“ இன்னம்  பத்து நாள்  இருக்கு.  பரவால்ல,  இதும்  ஒரு  நல்லதுக்குத்தே.  ‘அந்த நாளைல ’ பாத்து நடந்திருந்தா ? பெரிய சங்கடமில்லியா ?  என்னிக்கும்  இயற்கை  தப்பே  செய்யாதுங்கறதுக்கு இது ஒரு சாட்சி “  சொல்லிமுடித்ததும்  ஒரு  பெருமிதம்  கடைக்காரரிடம்  தெரிந்தது.  “ வேற ஒண்ணும் பிரச்சனை இல்லீல்ல “

இருந்தது. அதனை வெளிப்படையாய்ச் சொல்லத்தான், அத்தனைத் தயக்கம். சொல்லவா வேணாமா என்ற குழப்பத்தில் தலைதாழ்த்தியபடி சில வினாடிகள் யோசித்தவன்.  ” ஒரு டீ சாப்பிடலாமா அண்ணாச்சி “ என அழைத்தான்

கடைக்காரர் வியாபாரப் பழக்கம்தான். ஆனாலும் எழெட்டுவருசமான வரவுசெலவில் தொடர்பு கொஞ்சம் அன்னியோன்யத்தைச் சேர்த்து விட்டது. அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற துக்க காரியத்துக்கு என சில விதிவிலக்குகள் உண்டு. பெரியாள் சின்ன ஆள் வித்தியாசம் பார்க்காத தன்மையும் அதிலொன்று. ஆகவே கடைக்காரரும் சரியென எழுந்துவிட்டார். “ நல்லகட இருக்கா .? “

“ ம். ரோட்டுக்குப் போயிருவம் ண்ணாச்சி “

உடன்வந்தவர்களும் எழுந்தனர். “ இருங்க, டீ வாங்கிக் குடுத்துட்டு வந்திர்ரேன். நீங்க எதும் சாப்பிடுறீங்களா ? “ என்றவர் அவர்களின் பதிலை எதிர்பாராமல், “ தம்பிகளையும் கூட்டிட்டுப் போகலாமா. அவகளும் எதும் சாப்பிட்டிருக்க மாட்டாங்கள்ல ? “ எனக் கேட்டுவிட்டு, அவரே தம்பிகளைக் கூப்பிடலானார். அனைவரும் மறுத்துவிட்டனர். “ நீங்க போய்ட்டு வாங்க ண்ணாச்சி “

“ சரிசரி, எல்லாரும் வந்திட்டா. சபைல ஆள்வேணும்ல “ அவராக முடிவுக்குவந்து அவனோடு சேர்ந்து குறுக்குச் சந்தைக்கடந்து காப்பி கடைக்கு வந்தார்.

”சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை, அன்பு கொள்ள ஆதரவாய் யாருமில்லை உலகில்  . . .” பி . சுசிலா ஆன்மாவை நீவிவிடுவதுபோல பாடினார்.

சிறிய கடைதான். கடையாகத் தெரியவில்லை. வீட்டுத்தோற்றம் கொண்டிருந்தது. “ மெஸ்சா ?”

“ வீட்டுக் கட நல்லாருக்கும். ! “

“ ரெண்டு டீ ! அளவு சீனி ! “ என உள்முகமாய் குரல் விடுத்தான். அதுகேட்டு கனத்த சரீரமுள்ள பெண்மணி ஒருவர் வெளியில் வந்து எட்டிப்பார்த்தார். “ என்னாடா தம்பி ஆத்தா இப்பிடி பல்லக் காட்டிட்டுப் போய்ட்டா. இன்னம் ஒரு நாலுநாள் இருந்து சின்னஞ்சிறுசுகள ஆசீர்வாதம் பண்ணி, திண்ணீரு கிண்ணீரு போட்ருந்தா ஒனக்கும் சந்தோசமா இருந்திருக்கும். ம் ? சரி ஆண்டவெ அப்பிடி நெச்சான்னா அத மாத்த ஆராலமுடியும் ? ரெண்டும் டீ யாப்பா ? “

வடைகள் பொரிக்கப்பட்டு ஒரு தாம்பாளத்தட்டில் வைக்கப்பட்டிருந்தன. பக்கத்தில் அளவாய் கிழிக்கப்பட்ட காகிதத்துண்டுகள் ஒரு கருங்கல்லின் பாரத்தால் காற்றில் பறக்காதிருந்தன. ” வட சாப்பிடுறீங்களா . . எதும் சாப்பிட்டுருக்க மாட்டீங்க“ கடைக்காரர் குழைவாய்க் கேட்டார்.

“ நீங்க வேண்ணா சாப்பிடுங்க அண்ணாச்சி. நல்லாருக்கும் மாவு கலக்க மாட்டாங்க “

“ நமக்கு எண்ணைப் பண்டத்த விட்டு நாளாச்சு “

“ நானும் பெத்த வகுத்துக்காக ஒருநாள் நம்மவகுத்த காயப்போடலாம்லனு இருக்கேண்ணாச்சி.”

அவனது வார்த்தைகள் அவனுக்கே கூடுதலாய்த் தெரிந்தன. நேற்றுவரைக்கும் அம்மா, மொட்டைமாடியில் தனிஅறையில் அடைந்து கிடந்தது. வைத்தியம் பார்க்கவும், நேரத்திற்கு சாப்பாடு தரவும் அண்ணன் தம்பிகளுக்குள் அப்படியொரு பிரச்சனை. இதில் மூத்தமருமகள் என்கிற பாட்டில் இளவரசியின், வீம்பு பிரசித்தி பெற்றிருந்தது.

‘’கலியாணம் கட்டிவந்த நாளையிலருந்து இன்னி வரைக்கும் இருவது வருசமா இந்த வீட்டுக்கு நாஞ் செய்யாத வேல இல்ல. படாத பாடு இல்ல!, பார்க்காத பண்டுதம் கிடையாது. அடுத்தடுத்து மருமக்கமார் வந்தபெறகும் நா மட்டும் கெழடு கெட்டைகளைப் பாக்க வேணும்னு எங்கப்பன் யாருக்கும் பத்தரம் எழுதிக் குடுத்திருக்காரா ? இல்ல என் புருசந்தேன்னு பீ மூத்தரம் அள்ளனுண்டு ஓலயில ஒப்பந்தம் போட்ருக்கா ? “ நெற்றிக்கண் திறந்தது போலக் கேட்டாள் அந்தக் கேள்வியிலும் ஒரு நியாயம் இருந்ததாக அவனுக்குப் பட்டது. அதனால் அப்பாவின் மறைவுக்குப் பின் அம்மாவின் இருப்பு பற்றிய விசாரணையில் அக்கறை காட்டாதிருந்தான். அம்மாவுக்கு நடமாட்டம் இருந்ததுவரைக்கும் வாரத்தில் ஒருநாள் வந்து அவனிடம் பேசிவிட்டுப்போகும். என்ன சொன்னார் என்பது சரியாய் புரியாது. காதுகொடுத்துக் கேட்டால்தானே சேதி விளங்கும் ? அண்ணன் தம்பி நாலுபேர் வீட்டு நடப்பையும் சொல்லிக் கொண்டிருக்கும். போகும்போது “ துட்டு இருந்தா குடேன் “ என கை நீட்டும். சட்டைப்பையில் முகம் விட்டுப் பார்ப்பான். இருந்தால் அம்மாவின் அதிர்ஷ்டம்.

நடமாட்டம் குறைந்ததும் அம்மாவுக்கு ஒண்ணுக்கு ரெண்டுக்குப் பிரச்சனை தலைதூக்கியது. மக்கமார் நான்குபேர் வீட்டிலும் வைத்திருக்க முடியவில்லை. தினமொரு இடத்துக்கு பந்தாடி பந்தாடி அதிலேயே அம்மா, உடல் நொந்துபோனார். இதற்காகவே சாப்பிடுவதை குறைத்தார். சாப்பிட்டால்தானே ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போகும். சாப்பாட்டை நிறுத்தியதில் உடல்வலு குறைந்தது. உட்காரத் தெம்பு இல்லாமல் போனது. மகள்கள் ஏதாவது ஒருநாள்வந்து எட்டிப் பார்த்துவிட்டு கழுவித் துடைத்துவிட்டுப் போவார்கள்.

கீழே நாற்றம் தாஙகவில்லை என, ஸ்ருதியை பெண்கேட்டுவந்த நாளில் எல்லோருமாய்ச் சேர்ந்து அம்மாவைத் தூக்கி மொட்டை மாடியில் போட்டனர். ஆளுக்கொரு வாரம் உணவு மற்றும் பராமரிப்பு செய்து கொள்வதாக பேச்சு. சாப்பாட்டுத் தட்டைக் கொண்டுபோய் வைப்பதற்கே மூக்கையும் வாயையும் சேர்த்துப் பொத்திக்கொண்டு மாடிப்படி ஏறலானார்கள்.

அம்மாவின் இறப்பே குப்பை அள்ளும் துப்புரவு தொழிலாளி பெண் வந்து சொன்னபிறகுதான் எல்லோருக்கும் தெரிய வந்தது.

“ ரெண்டு வட குடும்மா “

டீ கொண்டுவந்து வைத்த பெண்ணிடம் கடைக்காரர் கேட்டார்,

“ வேணுங்கறத எடுத்துக்கங்க ண்ணே. அதுக்குத்தான பேப்பரெல்லா வச்சிருக்கம் ! “ சொல்லிக் கொண்டே தாளில் வடையைக் கொண்டுவந்து வைத்தது.

வடையைத் தீண்டுவதில் அவனது தயக்கம் நீங்காதிருந்தது.

“ செத்தவங்க யாரும் நம்மள பட்டினி கெடந்துதே சடங்கு செய்யணும்னு சொல்லல. போனவக போய்ச் சேந்துட்டாக. இருக்கவக தெம்பா இருந்தாத்தான காரியத்த நடத்த முடியும் ? சும்மா சாப்பிடுங்க “

“ அதெல்லா அந்தக்காலம் தம்பி. பேப்பய காலம். பொணத்தத் தூக்காம பல்லுத் தேய்க்க மாட்டாங்கே. இப்ப எழவு வீட்ல டீக் கேன் வச்சு வாரவகளுக்கு காப்பி வேணுமா சர்ப்பத்து வேணுமான்னு கேட்டுகேட்டு சப்ள பண்ணிகிட்டிருக்காங்க “ வடை விக்கிக் கொள்ளாமலிருக்க ஒரு தம்ளரில் தண்ணீர் மொண்டு வைத்துவிட்டு மறுபடியும் உள்ளேபோனாள் அந்தப் பெண்.

“ சொல்லுங்க என்னா பிரச்சன ? “

வடை ஒருவிள்ளலை முழுங்கி தண்ணீர் குடித்துவிட்டுச் சொல்லலானான்.

“ வீட்ல நாந்தா மூத்தாளு. அம்மாவுக்கு நாந்தே கொள்ளி போடணும். ஆனா சம்பந்தகாரவக நான் கொள்ளி வெக்கக்குடாது ங்கறாக “

“ ஓ ! கலியாணம் வச்சிருக்கதால மொட்டத் தலையோட வந்து மணவறைல வந்து நிக்க ஆகாது ங்கறாங்களாக்கும். ? ‘

“ ஆமா, ! ஆனா, கொள்ளி போட்டா மொட்ட போடணும்ல ? “

“ சரித்தேன். அவங்க சொல்றதுலயும் நாயம் இருக்கில்ல ! தம் புள்ள கலியாணத்துல கருமகாரியம் முடிச்சு தீட்டுப்பட்ட காலோட வந்து நின்னா சங்கட்டப்படுவாங்கள்ல “

“ அய்யர்கிட்ட கேட்டா எதாச்சும் பரிகாரம் இருக்குமா ?”

“ இருக்கலாம். சரி ஒங்க வீட்ல என்னா சொல்றாங்க. “

“ எவ் வீட்டுக்காரியும் அதத்தேன் சொல்றா . வீட்ல மொதக்காரியம் . !. “

“ அப்பறம் என்னா, அதேன் தம்பிக இருக்காங்கள்ல யாராச்சும் வச்சிட்டுப் போறாங்க. “

“ அது .  . .! “

“ சொத்து கெடைக்காதா ? “

“ அதெல்லாம் இல்ல சொத்து என்னா சொத்து. பெத்த தாய்க்கி செய்யவேண்டிய கடனச் செய்ய முடியாம போகுதேன்ன ஒரு கொழப்பம் “

“ ஓ , தாய்க்கி கொள்ளிவக்கிறதுதே முக்கிய கடமயா ? ” இந்த இடத்தில் கடைக்காரர் இடைவெளி கொடுத்துப்பேசியது அவனுக்கு தொண்டையில் விக்கியது. ஒருமடக்கு தண்ணீர் குடித்தான். ” அம்மா இருந்தவரைக்கும் எல்லாத்தையும் சரியா செஞ்சீங்கள்ல ? அவுங்கள . கண்கலங்காம பாத்துக்கிட்டீங்கள்ல ? “

அவனிடமிருந்து பதில் வரத் தாமதமானது.

“ அது யாராலயும் முடியாது. ஏன்னா கலியாணத்துக்கு முன்னால இருக்க சொந்தம் வேற கலியாணம் முடிச்சபிறகு உருவாகிற சொந்தம் வேற. அதனால எல்லாரும் நூறுசதம் சரியா இருக்க முடியாது. “

“ என்னால முடிஞ்ச அளவு செஞ்சேன். “ சொல்லும்போது அவனுக்கு குரல் நடுங்கத்தான் செய்தது.

“ ரைட். ஒண்ணுமில்ல அம்மா முன்னாடி போய் கண்ணமூடிக் கும்பிடுங்க நிச்சயமா பெத்த தாய் எந்த நிலமையிலும் நமக்கு வழிகாட்டத்தான் செய்வாங்க “

சாப்பிட்டதற்கான பணத்தை கயத்துக் கடைக்காரர்தான் கொடுத்தார்.

அவர் சொன்னதுபோல அம்மாவை நாடிச் செல்ல வாசலுக்கு வந்தான்.

” யேங்க . !. “ இளவரசி அவனை அழைத்தாள்.

அம்மாவின் வீட்டு வாசலிலிருந்து விலகி தன்வீட்டுக்குத் திரும்பின அவனது கால்கள்.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top