தவளவாயன்

4
(1)

“பாட்டி ஒரு கதை சொல்லு….”

 

நீண்ட நேரமாக மொபைல் போனில் வாட்ஸ் அப் செய்திகளில் மூழ்கியிருந்த கிருஷி, தன் பாட்டியைப் பார்த்துக் கேட்டாள்…

எப்பவும் செல்லை நோண்டிக் கொண்டிருக்கும் பேத்தி முதல்முறையாக தன்னிடம் கதை கேட்டதில் கமலா பாட்டிக்கு ஆச்சரியம்தான். கிருஷி, கமலா பாட்டியின் மகன் வழி பேத்தி. பிறந்து இருபது வருசங்கள் கழித்து முதல் முறையாக விருந்தாளி வந்திருக்கிறாள். அவள்  விருப்பத்தைப்  பூர்த்தி செய்யலாம் என எண்ணி என்ன கதை சொல்லலாம் என்ற யோசனையில் இருந்த பாட்டியை  கட்டிப் பிடித்து முத்தம் தந்து, “கதை சொல்லு பாட்டி….“ எனக் கொஞ்சினாள்.

“உனக்கு என்ன மாதிரியான கதை பிடிக்கும்?“

“நம்ம ஊருல வாழ்ந்தவங்க கதையைச் சொல்லு, பாட்டி….“

“அப்பிடின்னா “தவளவாயன் கதை சொல்லட்டா….?“

“தவளைவாயன் கதையா…?”

ஆமாம். அவனோட உண்மையான பேரு  யாருக்கும் தெரியாது. ‘தவளவாயன்’னு சொன்னாத்தான் எல்லோருக்கும் தெரியும்.

”அப்பிடியா……! வெரி டிபரண்ட்டா இருக்கு….. சொல்லு,… சொல்லு.“

”பங்காருச்சாமி” தான் அவன் பேரு. அந்த வருசம் தான் மொதமொதல்ல அவன் ஓட்டுப் போடப்போனான். அப்பெல்லாம் அடையாள அட்டை கெடையாது. கட்சிக்காரங்க எழுதிக் குடுக்கிற பெயர் சிலிப்பத்தான் எடுத்திட்டுப் போகணும்.”””“

 

“ம்….  நான் எப்ப வோட் போடலாம் பாட்டி….?

“அடுத்த வருசம் போடலாம். இப்ப கதை சொல்லவா…. நான் தூங்கவா….?” பாட்டியின் பொய்க் கோபம் கண்ட பேத்தி,  “கெழவிக்கு  கோபத்தைப் பாரு” என்று கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினாள்…

“சரி மேல சொல்லு…“

“நம்ம தவளவாயனும் ஓட்டுப்போடப் போனான். காலை நேரம். பெரிய்ய வரிசை. முக்கால்மணி நேரமா கால் கடுக்க நின்னு, கடைசியில் பூத்துக்குள் நுழைஞ்சான். “பங்காருச்சாமி, த/பெ அங்குசாமி“ ன்னு  ஆபீஸர் வாசிச்சார். கையில் மை வைக்கிறவர் இவனை விரலை நீட்டச் சொல்லி மையும் வச்சுட்டார். ஓட்டுச் சீட்டை கையில் வாங்கப் போனவனை ”கொஞ்சம் பொறு” ன்னு ஒரு கட்சிக்கார ஏஜெண்ட் தடுத்தான்.

”இவரு பேரு இது இல்ல. இவரு தவளவாயன். பங்காருச்சாமி வேறாளு.” ன்னு அவர் வாதம் பண்ணினார்.

”எம்பேரு பங்காருச்சாமிதான். கூப்புடுறதுதான் தவளவாயன்”ன்னு இவன் சொன்னான்.

”பங்காருச்சாமி இவரில்லப்பா” ன்னு இன்னொரு ஏஜெண்டும் சொன்னான்.

”இல்ல எம்பேரு பங்காருச்சாமி தான்” ன்னு இவன் திரும்பத் திரும்ப  சொல்லிக்கிட்டே இருந்தான்.

”சரி…சரி. ஒங்கபேரு பங்காருச்சாமின்னா… நீங்க ஒங்க ரேசன் கார்ட எடுத்திட்டு வந்து காட்டுங்க”ன்னு போலிங் ஆபீஸர் சொன்னாரு.

உடனே இவன் ”ரேசன் கார்டுல பங்காருச்சாமின்னு தான் போட்டிருக்கு”ன்னு சொன்னான்.

”அப்ப ரேசன் கார்ட கொண்டு வாங்க”ன்னு போலிங் ஆபீசர் திரும்பவும் சொன்னாரு.

”அர்த்தமில்லாம பேசாதீங்க. ரேசன் கார்ட அடகு வச்சு ஒரு வருசமாச்சு. ரேசன் கார்டு இருந்தா நான் எதுக்கு கண்ட கண்ட நாய்கிட்டெல்லாம் பேச்சு வாங்கணும்”ன்னு கோபமா இவன் சொல்ல…. போலிங் ஆபீஸருக்கும் இவனுக்கும் வாக்குவாதம் முற்றப் போகும் சூழலில் போலீஸ்காரர் இவனை இழுத்துட்டு வந்து வெளியில விட்டுட்டாரு.

 

”அவரு ஓட்டு போட்டாரா… இல்லையா……?“ கிருஷி இடைமறித்துக் கேட்டாள்

”அன்னக்கி அவன் ஓட்டுப் போடவேயில்ல. பிள்ளையார் கோயில் திண்ணையில படுத்தவன் பொழுது மசங்குற நேரம் வரைக்கும் எழுந்திரிக்கல. பொழுது மசங்கிட்டு இருக்கு. தெருவுல ரெண்டு நாய்கள் பலமா சண்டை போடுது. யாரோ ஒரு சின்னப்பயல் கல்லைக்கொண்டு நாய்களப் பாத்து எறிஞ்சான்.  எறிஞ்ச கல்லு நாய்மேல படாம ”சிவசிவா”ன்னு படுத்துக் கெடந்த இவன் மேல பட்டுச்சு. நல்லவேள காயம் ஒண்ணும் இல்ல. திடுக்கிட்டு எந்திருச்சவன் கல்லெறிஞ்ச சின்னப்பயல வெரட்டிக்கிட்டு ஓடுனான். ஓடுற ஓட்டத்திலேயே குனிஞ்சு கல்லெடுத்து சின்னப்பயலப் பாத்து எறிஞ்சான். கல்லு அந்தப் பய மேல படாம தண்ணி சுமந்திட்டுப்போன பொம்பள மேல பட்டிருச்சு. திரும்பிப் பாத்த அவள் பேசுன பேச்சு இவனோட ஏழேழு தலைமுறைக்கும் போதும் போதும்னு ஆயிடுச்சு.”

 

மூச்சு விடாமல் பாட்டி சொன்னதைக் கேட்டு, கிருஷி கலகலவென சிரித்தாள்….. பேத்தியின் சிரிப்பலையில் ஒரு நிமிடம் நனைந்து இளைப்பாறிய கமலா பாட்டி மீண்டும் கதையைத் தொடர்ந்தார்.

 

”ச்சே… நமக்கு நேரக்கழுதையே சரியில்ல. இந்தப் பொழப்பு பொழக்கிறதுக்கு பேசாம செத்தே தொலையலாம்”னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டு மூஞ்சியத் தொங்கப்போட்டுக்கிட்டு யாருகிட்டயும் பேசாமல் தவளவாயன் அலஞ்சான். அடுத்த ரெண்டுநாளும் ஆளே காணோம்.”“

 

”அப்புறம்….?”

இப்போது பேத்தி கதைக்குள் மூழ்கி விட்டாள்….. அவள் கண் முன் தவளவாயன் முகம் நிழலாடியது. அவன் தெருவில் நடமாடுவதும்…. மற்றவர்கள் அவனை ஏளனம் செய்வதும் அவளுக்கு பிம்பமாகத் தெரிந்தது. பேத்தியின் ஆர்வமறிந்து பாட்டியும் கதையைத் தொடர்ந்தார்.

 

”மந்தைக் கரட்டுல யாரோ ஒருத்தன் தூக்குப் போட்டுத் தொங்குறானாம்.  அது நம்ம தவளவாயனாத் தான் இருக்கணும்”ன்னு ஒருநாள் காலையிலேயே டீ கடையில் பேசிக்கிட்டாங்க. சொந்த பந்தங்கள் எல்லாமே மந்தைக்கரட்டை சல்லட போட்டுத் தேடினாங்க. ஒரு மரத்துல கூட பிணம் இல்ல. அவன் சாகலைங்கிற நிம்மதி இருந்தாலும் எங்க போய் தொலைஞ்சானோங்குற எரிச்சல் மட்டும் அவங்க வீட்டாளுகளுக்கு கொறையில.”

 

“ அவருக்காக யாரும் வருத்தப்படலையா பாட்டி..?”

”வருத்தமா…. அட.. நீ வேற…………. அவன் செத்தா தொல்லை கழியட்டும்னு காத்திருந்தாங்க……”

”அவரு எங்கே இருந்தாரு…?”

”அதுக்கடுத்த ரெண்டுநாள் கழிச்சு மண்ணெண்ணை ஏத்திட்டு வந்த லாரியில தவளவாயன் வந்தான். வீட்டுல ஆளாளுக்கு பிடிபிடின்னு பிடிச்சுட்டாங்க. எல்லாரும் திட்டி முடிச்சதுக்குப் பெறகு தெற்கு வீட்டு சக்கரை மாமா நிதானமா கேட்டார்.

”சாகப் போறேன்னு சொல்லிட்டு ஓடுனவன் எங்கடா ஊர் சுத்திட்டு வர்றே?.?”

”தேனியில போய் ரயில் தண்டவாளத்துல தலையக் குடுத்து படுத்தேன். ரயில் ஒரு நாளைக்கு ஒரு தடவதான் வருமாம். நான் போறதுக்குள்ள ரயில் போயிடுச்சு.  மொதநாள் ராத்திரி சாப்பிட்ட சாப்பாடு. பசி எடுத்துச்சு. பக்கத்துல வீரப்ப அய்யனார் கோயில்ல கெடா வெட்டுனாங்க. கறிக் கொழம்பு வாசம் ஆளத் தூக்குச்சு. சரி, சாகுறதுக்கு முந்தி கறி திங்கலாமேன்னு போனேன். நல்லா சாப்புட்டேன். அப்பறம் நெதானமா யோசிச்சேன். செத்து என்னத்த சாதிக்கப்போறோம்? என்னத்தவோ கடைசி வரைக்கும் காலத்த ஓட்டுவோம்ன்னு நெனச்சு நடந்தே வந்தேன். கண்டமனூருக்குத் தெற்க வர்றப்ப ரேசன் கடைக்கு சீமத்தண்ணி (மண்ணெண்ணை) ஏத்திக்கிட்டு லாரி வந்துச்சு. அதுல ஏறி   வந்திட்டேன்”ன்னு   நிதானமாச் சொன்னான்.

”இவன இப்பிடியே விடக்கூடாது. ஒரு கலியாணத்த முடிச்சு வச்சா எல்லாம் சரியாப் போகும்” என்றார் சக்கரை மாமா.

”ஆமா… .இந்த கூறு கெட்ட தாயோ……. மகனுக்கு எந்த மயிராண்டி பொண்ணு குடுப்பான்? ” என்று

கோபப்பட்டார் இவனது அப்பா.

”நம்ம பிள்ளைய நம்மலே கொறச்சுப் பேசலாமா?  பொண்ணுப் பாக்குறது எம் பொறுப்பு” என்று சொல்லி விட்டு சக்கரை மாமா போய்விட்டார்.

”அவருக்கு கல்யாணம் நடந்துச்சா…?” பேத்தி ஆர்வமாகக் கேட்டாள்.

 

“ம்ம்… நடந்துச்சு. அங்க…இங்கன்னு  அலைந்து கடைசியில் உள்ளூர் பெண் ஒருத்தியே வாக்கப்பட்டு வந்தா. வந்தவ கடுமையான உழைப்பாளி. பாடுபாடுன்னு இருவத்திநாலு மணிநேரமும் பாடுபட்டாள். இவன் வழக்கம் போலவே பிள்ளையார் கோயில் திண்ணையும், பூவரச மரத்து நெழலும் கதின்னு கெடந்தான்.

ஒரு பையனும் பெறந்துட்டான். குடும்பத்துல பங்கு பாகம் பிரிச்சுட்டாங்க. இவன் பங்குக்கு ஒரு காளமாடும், ஒரு ஏக்கர் தரிசுக்காடும் கெடச்சிச்சு. இத வச்சு குடும்பம் நடத்துறது செரமம். மழை இல்ல. நெலத்த தரிசாப் போட்டுட்டு, பொண்டாட்டி கூலி வேலக்குப் போனாள். இவன் அந்த ஒத்த மாட்ட மேச்சிட்டு இருந்தான். இப்பிடி இருக்கிற நாள்ல தான் எங்க ஊருக்கு சினிமா படம் எடுக்க வந்தாங்க.”“

 

“அப்பிடியா…! இங்க சினிமா சூட்டிங் எல்லாம் நடந்துச்சா….?“ ஆச்சரியமாகக் கேட்டாள் கிருஷி.

”ஆமா..  வயக்காட்டு வரப்புல குஷ்பு கஞ்சி சுமந்திட்டு நடக்குற மாதிரி படம் எடுத்தாங்க. ஊரு சனமே அங்கதான் கெடக்கு.  தவளவாயன் சும்மா இருப்பானா? மாட்டக் கொண்டு போயி தரிசில கட்டிப் போட்டிட்டு, சினிமா எடுக்குறதப் பாக்கப் போய்ட்டான். படம் எடுத்து முடிஞ்சு, எடுத்தவங்க, நடிச்சவங்க எல்லாரும் போனதுக்குப் பெறகு சாவகாசமா வந்து பாத்தா… மாட்டக் காணோம்.!“

 

”அடப்பாவமே….. அப்புறம் மாடு வந்துச்சா இல்லையா?”

”ம்ஹூம் வரவேயில்லை. ரெண்டு வருசமாவே மாடுகளவு நடக்குது. அதுவும் திங்கக்கெழம கேரளாவுக்கு மாடு ஓட்டிக்கிட்டுப் போறவங்க, தப்புன மாட்டையும் ஓட்டிட்டுப் போயிடுறாங்க. கோளாறா மாடு மேய்க்காம மயித்தவா புடுங்கிட்டு இருந்த? எக்கேடு கெட்டாவது போ. ன்னு கத்திட்டு சக்கரை மாமா போயிட்டார்.“

 

இவன் பொண்டாட்டி ஒன்னும் பேசல. கஞ்சியும் காய்ச்சல. மகன் அழுதுக்கிட்டே இருந்தான். பொண்டாட்டி கண்டு கொள்ளவேயில்ல. அப்ப தவளவாயன் யோசிச்சு முடிவு செஞ்சான். பொண்டாட்டியவும் சமாதானம் செய்யணும். பிள்ள அழுகிறதவும் நிப்பாட்டணும். என்ன செய்யலாம்னு யோசிச்சு… யோசிச்சு கடைசியில மகனத் தூக்கி வச்சிக்கிட்டு ‘திருவாய்’ மலர்ந்தான்.

“என்ன சொன்னாரு?”

”பொறுடா மகனே.. காணாமப் போன நம்ம காள மாட்டத் தேடிப் புடுச்சு, அதுக்கு ஒரு ஜோடி புடுச்சு, தரிசாக் கெடக்குற பொறசம்பாறைக் காட்ட உழுது, அதுல சாமையும் பருத்தியும் வெதச்சு, சாமைய கஞ்சிக்கு வச்சிக்கிட்டு, பருத்திய எடுத்து தேனிச் சந்தைக்கு அனுப்பி, அந்தக் காசுல ஒரு பால்மாடு புடுச்சு, பாலும், மோருமாச் சாப்பிடுவோம். அப்பிடிச் சாப்பிடுறப்ப ஒங்க அம்மா, அவங்க அண்ணந் தம்பிகளுக்கு பாலு, மோரு தர்றேன்னு குடுத்தான்னு வச்சிக்கோ….அவள ஓங்கி ஒரு உதை இப்பிடி உதைக்கனும்டா”ன்னு சொல்லிக்கிட்டே எத்தினான்.

எதிர்பார்க்காமல்  இவன் உதைச்சதால நிலை தடுமாறியவள் சுதாரித்துக்கிட்டு ”பால், மோரு குடுக்குறது இருக்கட்டும், ஒங்கப்பன் அவங்க அக்கா, தங்கச்சிகளுக்கு நெய்யி தர்றேன்…. வெண்ண தர்றேன்னு குடுத்தா… மண்டையில இப்பிடித்தான் போடுவேன்”னு சொல்லிக்கிட்டே கரண்டியால் மண்டையில் போட்டாள்

பாவம் அவனுக்கு முன் வலுக்கை. ரத்தம் திபுதிபுன்னு கொட்டுது. ஒரு கையால காயத்த அமுக்கிப் புடுச்சிக்கிட்டு ”எப்பிடி என்னய அடிக்கலாம்?”னு சொல்லிக்கிட்டே தலைமுடியப் புடுச்சு இழுத்துக்கிட்டு வீதிக்கு வந்துட்டான். அப்புறம்…“

 

தொடர்ந்து கதை சொல்ல முடியாமல் கமலா பாட்டி சிரித்தாள்…..  ‘கெக்கக்கெக‘வென அப்பிடியொரு சிரிப்பு…..  இங்கு வந்து இத்தனை நாட்களில், பாட்டி இப்பிடி சிரித்ததை கிருஷி இது வரையில் பார்க்கவில்லை. இவளாலும் சிரிப்பை நிறுத்த முடியவில்லை. சிரிப்பை அடக்கிக்கொண்டு   “ம்ம்…. பாட்டி சிரிச்சது  போதும். கதையைச் சொல்லு“ என்றாள். பாட்டி கதையைத் தொடர்ந்தார்,

“சண்டை பெரிய சண்டையா மாறிடுச்சு. ஒரு பயலும் வெலக்கி விடல. கடைசியில வழக்கம்போல தெற்கு வீட்டு மாமா தான் வெலக்கி விட்டாரு.“

”என்னடா மண்டையில காயம்? ”

”இவ அடிச்சிட்டா மாமா”

”ஏம்மா அடிச்சே? ”

”என்னைய எத்துனா… சும்மாவா இருப்பேன்? ”

”ஏன்டா எத்துனே? ”

”ஆமா…  வம்பாடு பட்டு, புல்லுச் செமந்து, சாணியள்ளி நான் பால் பீச்சி வச்சிருப்பேன் அவ நோகாம அவங்க அண்ணன் தம்பிகளுக்கு எல்லாம் எங்க வீட்டு பாலு, மோரு எல்லாத்தையும் ஊத்தி ஊத்திக் குடுப்பாளாம்…  இதப் பாத்துக்கிட்டு சும்மா இருக்கணுமாக்கும். என்னைய என்ன இளிச்சவாயன்னு நெனச்சீங்களா? ” ன்னான்.

”பால்…மோரா…..? ” இப்பத்தான் அவருக்கு பொரி தட்டிச்சு.

”ஏன்டா… இருந்த ஒத்த மாட்டையும் களவாணி கிட்ட தோத்திட்டு மயிரு போச்சுன்னு நிக்கிற. இந்த லட்சணத்துல பாலு எங்கடா ஊறும்? மோரு எங்கடா மோளும்? ” ன்னு’ கோபமா கத்தினாரு..

”அதுவா…” ன்னு இழுத்தவன் நடந்த கதையைச் சொல்லச் சொல்ல அவருக்கு கோபம் உச்சத்திற்கு ஏறி ‘சப்’ ன்னு அவன் கன்னத்துல அறைஞ்சாரு.“

இப்போது பேத்தி கண்கள் சிவக்கச் சிவக்கச் கலகலவென சிரித்தாள்… சிரித்து முடித்துவிட்டு, “அப்புறம் என்ன நடந்துச்சு?” என்று கேட்டாள்.

“அப்புறம் என்ன… அன்னக்கிச் சாயங்காலமே தன் மகனையும் தூக்கிக்கிட்டு, வீட்டைப் பூட்டி சாவிய எடுத்திக்கிட்டு தாய்வீட்டுக்குப் போயிட்டா பொண்டாட்டி. பாவம் தவளவாயன். பிள்ளையார் கோயிலே கதின்னு கெடந்தான்.

“அவரு இன்னும் இருக்கிறாரா….?

“நேரமாகுது தூங்கலாம்..“

“ப்ளீ்ஸ் பாட்டி“

“காலையில சொல்லுறேன்டா, செல்லம்”

”போ… கிளவி உன் கூட கா…” கோபத்துடன் படுக்கச் சென்றாள் கிருஷி. கமலா பாட்டியால் தூங்க முடியவில்லை.

காலையில் பேத்தி கேட்டால் என்ன சொல்வது? கணவனோடு சண்டை போட்டுவிட்டு தான் தாய் வீடு போனதையும், தனது வறுமையை வாய்ப்பாக வைத்து தன்னை அக்கா புருசன் வைப்பாட்டியாக்கிக் கொண்டதையும், இதைக் கண்ணால் பார்த்த தவளவாயன் தற்கொலை செய்து கொண்டதையும், தன் மகன்வழிப் பேத்தியிடம் எப்பிடிச் சொல்வது? எப்பிடிச் சொல்ல முடியும்?

(காமதேனு மார்ச்- 2019 இதழில்  வெளியானது)

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தவளவாயன்”

  1. ந.ஜெகதீசன்

    தங்களது உள்ளத்தில் பதிந்துள்ள நினைவுகளை பேரன் பேத்திகளுக்கு கதைகளாக சொல்லி அடுத்த தலைமுறைக்கு கடத்தும் இயல்பை சிறப்பாக சொல்கிறது இந்த சிறுகதை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: