தறிகெடதோம்

0
(0)

எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் தெரு துடிப்பின்றி கிடந்தது. வீடுகள் சோகப் பெருச்சில் சுரத்தின்றித் தோன்றின. எப்பொழுதும் ‘டக் டக் டகா டக் டக் டக் டகா டக்…’ என்ற தறி ஒலிகளும் அதனிடையே மாறுபட்டு இசையை இழைந்து தரும் இலங்கை வானொலி ஒலிபரப்பும் பழைய பாடல்களின் ஒலிகளும் காணோம்!

பொன்னுத்தாய் வாசல்படி கதவு நிலையில் சாய்ந்தபடி அமர்ந் திருந்தாள். பார்வை எல்லாம் வங்கிக்குப் போயிருக்கும் கணவனை எதிர்பார்த்து இருந்தது. வானவில்லை சுருட்டிக் கொண்டு வந்து தறியில் விரித்தது போல எப்பொழுதும் பாவுக் கட்டையில் பரப்பி விடப்பட்ட நூல் இழைகளின் வர்ணஜாலம் இப்பொழுது இல்லை! வண்ணச் சோலை இழந்த நிர்வாணம் மறைப்பது போல் தறியின் மேற்பரப்புகளில் சிலந்திகள் மென்துகிலைப் பின்னி போர்த்திருந்த தோற்றம் பகீர் என்றது!

தறியடிக்கும் கைப்பிடி கயறுகள் கையறு நிலையில் ஊசலாடிக் கொண்டிருந்தன. மூஞ்சூறு போல சுறுசுறுப்பாய் பாவின்மீது ஓடி ஓடி இருமுனைகளையும் இணைத்து இழைகளைத் துணியாக்கிக் கொண்டிருந்த “நாடாக்கட்டை,” ‘பேட்டின்’ மீது தூசு அப்பிக் கிடந்தது. வர்ணஜாலங்களை விதவிதமான வடிவங்களில் சிறைப் படுத்தும் ‘ஜாக்காட் பெட்டி’யில் எலிக் குஞ்சுகள் அடைந்து கீச் கீச்சென்று கத்திக் கொண்டிருந்தன.

மகள் லட்சுமி தூசுகளை விலக்க மாற்றால் அடித்து நூலாம் படைகளைக் களைந்து சுத்தம் செய்து கொண்டிருந்தாள். நூல் சிட்டங்களை இராட்டையில் சுற்றிக் கண்டுகளாக ஆக்குவதும், தறியில் பாவிய இழைகளின் பிரிதலை மென்முடிச்சுக்களால் இணைப்பதுமாய் அவளுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும். நிற்கவோ உட்காரவோ நேரம் ஒழியாது. இப்பொழுது வேலை இல்லாத அசதியே அவளை மூதேவியாய் அழுத்துகிறது! சோம்பிக் கிடந்தால் என்ன ஆவது. தறியில் சிலந்தி மட்டுமல்ல, கரையானும் குடியிருக்கத் தொடங்கிவிடும். தறியைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்.

தறியிலே வேலை செய்து, தறிகளுக்கிடையே உண்டு, உறங்கி அதன் சங்கீத லயம் இல்லாத வெறுமை! அதனால் வந்த வறுமை!

பொன்னுத்தாய் வேதனை மறக்க வெற்றிலை மென்று பார்த்தாள், இலைகளைக் காம்புகளின், நரம்புகள் உரித்து வாகாய்ச் சுண்ணாம்பு தடவி மென்று கொண்டிருப்பதால் திரண்ட பாக்கின் சாற்றோடு வெற்றிலையையும் மெல்ல மெல்ல மனதிற்கு இதமான ஒருவரிடம் பேசிக் கொண்டிருப்பதுபோல் தனிமைகளையும்!

“என்ன பேங்கிற்குப் போன மனுஷனை இன்னும் காணோமே!.. மணி மூணாகப் போகிறது.. காலாகாலத்தில் பணம் கொண்டு வந்தா வீட்டில் நல்லதை பொல்லதைச் செய்யலாம்…”

“இப்படித்தான் பதினைந்து நாளைக்கு முன்னால சொஸைட்டிக்கு காலை பத்து மணிக்குப் போன மனுஷன் சாயந்திரம் அஞ்சு மணி வரைக்கும் வீடு திரும்பலை! என்ன போன மனுஷன் சொஸைட்டியில ஆடுபுலி தாயம் விளையாட உட்கார்ந்திட்டாரா….”

நூல் சிட்டங்களை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கவும், அவர்கள் நெய்த துணிகளை வாங்கிச் சரிபார்த்து ரகம் வாரியாக அடுக்கி வரவு வச்சிகிட்டு முன்பணம் தரவும் எனச் சுறுசுறுப்பாக இருக்கும் சொஸைட்டியில் இப்பொழுதெல்லாம் இளவட்டங்கள் சீட்டாடவும், வயசானவங்க ஆடுபுலி தாயம் ஆடும் இடமாகவும் ஆகிப்போனது! நெய்த துணிகளை விற்க வழியில்லை. காய்ந்த வயிறுக்கு அன்னத்தண்ணி ஊத்த வகையில்லை!…. ம்ம் இந்த பொழப்பு இன்னும் எத்தனை நாளைக்கோ.. எப்ப விடியுமோ….

தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மகன் செல்வ முருகனை அனுப்பி அப்பாவை அழைத்து வரச் சொல்லியிருந்தாள். அவன் மூச்சிறைக்கத் திரும்ப ஓடிவந்தான்.

“அப்பாவும் மாரியப்பன் மாமாவும், கணக்குப் பிள்ளை மாமாவும் பெங்களூருக்குப் போயிருக்காங்களாம்…!”

“என்னடா பொழைப்பு கெட்ட மனுஷன் பெங்களூருக்கு எதுக்குப் பேனாரு, காசு பணம் இல்லை!கஞ்சித் தண்ணிக்கு வழி வகை செய்யாம ஒரு வார்த்தைகூட வீட்டில் சொல்லாம இப்படிப் போக மாட்டாரே…”

புலம்பியபடி விடுவிடுவென்று வீட்டுக்குள் போனவள் ஒரு பழைய சாக்கு மூடையில் கழிவு நூல்களைச் சேர்த்து வைத்திருந்ததை எடுத்துத் தந்தாள்!

“செல்வம், இந்தா இதப் போய் நீ வேலை பார்த்த லேத் பட்டறையில் வித்திட்டு 3 கிலோ அரிசிக் குருணை வாங்கிட்டுவா, கஞ்சியாச்சும் காச்சுவோம்! மிச்சக் காசு இருந்தா கால்கிலோ கத்தரிக்காய், ஒரு ரூவாய்க்கு வெங்காயம், ஒரு ரூவாய்க்கு தக்காளி, ஒரு ரூவாய்க்கு பச்சமிளகாய் வாங்கிட்டுவா, வெஞ்சனம் வதக்கிக்கலாம்!”

பனிரெண்டு வயது பாலகன், அவனது உயரத்திற்கு முக்கால் உயரமிருந்த குட்டிச்சாக்கை சுமந்து எடையை சமப்படுத்தத் தெரியாமல் தள்ளாடித் தள்ளாடி நடந்தான்.

நம்மதான் தறியில கைக்கும் வாய்க்கும் அடிச்சிக்கிறோம். ஒத்த ஆம்பிளைப் பிள்ளையையாவது பள்ளிக்கூடம் அனுப்பலாம்னா காசு பணத்திற்கு வழியில்லை! சரி லேத் பட்டறையிலாவது வேலை கத்துக்கிடட்டும்னு ஊரிலே பெரிய லேத் பட்டறைக்கு அனுப்பினால்.. ஒரு மாதம் போனான்; அங்கும் வேலை இல்லைன்னு திரும்பி வந்து பசங்களோட விளையாடித் திரியறான்.

கழிவு நூல் மூடையை லேத் பட்டறை முதலாளியிடம் கொடுத்து பணம் கேட்டான். “ஏன்டா செல்வம், வேலை இல்லைன்னு நாங்களே கேரம் விளையாடிக்கிட்டு இருக்கோம்! கை துடைக்க வேஸ்ட்டு எடுக்குடா….? அதை பெட்ரோல் பங்லே போய் கொடு, வாங்கிக்கிடுவாங்க!” லேத் பட்டறை முதலாளி சொன்னபடி பெட்ரோல் பங்குக்குப் போனான். இருபது ரூபாய் கொடுத்தார்கள். இரண்டு நாள் அடுப்பு எரிந்தது.

பொன்னுத்தாய் சொஸைட்டி கேஷியர் வீட்டிற்குப் போய் விசாரித்தாள். அவர் வாய் வரை வந்த வார்த்தைகளை மறைத் தவராக, “பெங்களூருக்கு பணம் ஏற்பாடு பண்ண ஏதோ வேலையாகப் போறதாகப் பேசிக்கிட்டாங்க! அது என்ன விஷயம் ஏது விவரம்னு எங்கிட்ட சொல்லலைக்கா…” சுருக்கமாக பட்டும் படாமல் சொன்ன ‘க்கன்னா’ வார்த்தைகள் மனதில் துயரக் சலனங்களை எழுப்பி அலைக்கழித்தன.

“முன்னே பின்னே பெங்களூருக்கே போகாத மனுஷன் பொண்டாட்டி பிள்ளைக கிட்டக்கூடச் சொல்லாம, காசு பணம் செலவுக்கு வகை பண்ணாம ஏன் போனார். எப்படிப் போனார்? கவலை தறியடித்து நெய்தது.

மனுஷன் மறுநாளும் வரக் காணோம். மாரியப்பன் விட்டிலும் கணக்குப்பிள்ளை வீட்டிலும் இதே புலம்பல்; தேடல்; தெரு வெல்லாம் கசமுச பேச்சுக்கள். உருவம் தெரியாத பயம் நெஞ்சை அழுத்தி வேதனை செய்தது.

மூன்றாம் நாள் ஜாமத்தில் இராமசாமி வீடு திரும்பினார். கையில் பூ பழம், பலகாரம், பையனுக்கு பனியன் சட்டை..! காய்ந்து வாடிய முகத்தில் ஒட்டாத பணப்பூச்சு! சொல்லாமல் போனதற்கு குழைந்து குழைந்து பேசி, சாந்தப்படுத்த முயன்றார்.

“பட்ட கடன்களைத் தீர்க்கவும், மகள் கல்யாணத்திற்கு பணம் புரட்டவும் ஏற்பாடு பண்ணப்போயிருந்தோம்…!”

அவர்கள் நம்பாமல் பார்த்தனர். அவர்களது நம்பிக்கை யின்மையும், பயம் கலந்த மவுனத்தின் சூடும் அவரால் தாங்க முடியவில்லை. மன இறுக்கம் உடைந்து குரல் கலகலத்தது. “இங்க பாரு, நான் குதிரை ரேசுக்குப்போய் பணம் சம்பாதிக்கவோ, நோட்டு இரட்டிப்பு செய்யவோ போகலை! மனுஷனுக்கு தேவைக்கதிகமா உள்ள ஒரு கிட்னியை வித்து பணம் கொண்டாந்திருக்கேன்…”

ஒடுங்கிய குரலில் வார்த்தைகள் பொலபொலவெனக் கொட்டினார் குற்ற உணர்வை மறைக்க தனது செயலை நியாயப்படுத்த ரூபாய் பத்தாயிரத்துக்கான ஒரு நூறு ரூபாய் நோட்டுக் கத்தையையும் அறுபதாயிரத்துக்கான செக் ஒன்றையும் கை நடுங்கியபடி பொன்னுத்தாய் மடியில் வைத்தார்.

அடக்கி வைத்திருந்த உணர்வு வெள்ளம் உடைத்துப் பாய்ந்தது அடப்பாவி மனுஷா, உயிர்த்தலத்தை வித்து உயிர் பிழைக்கணுமா.. பொன்னுத்தாய் குமுற வீடே அலறியது.

“அட, நடுச் சாமத்தில கத்தாதே, அக்கம் பக்கம் எழுந்திருச் வந்தா அசிங்கம்! நம்ம துயரம் நம்மளோட போகட்டும்!”

இனம் புரியாமல் விம்மி, கேவிய செல்வமுருகன் நோட்டுக் கட்டை ஆவலோடு எடுத்து மெல்லிய குரலில் எண்ணிப்பார்த்தான். பொன்னுத்தாய்க்கு ஈரல்குலை பிடுங்கிய மாதிரி யாரோ தாலிக் கயிறை வெடுக்கென்று சுண்டி இழுத்தது மாதிரி உணர்வு, குமுறி குமுறி அழுதாள். பயணக் களைப்பு உயிருறுப்பை இழந்த ஆயாசம் அழுத்த ராமசாமி சாய்ந்து படுத்தார்.

வீட்டைச்சுற்றி நெருக்கிய சில்லறைக் கடன்களை அடைத்தது போக, அந்தப் பத்தாயிரம் ரூபாயில் லட்சுமிக்கு ஒரு பவுனில் சங்கிலி, அரைப் பவுனில் ஜிமிக்கித் தொங்கல்; பொன்னுத்தாய்க்கும், செல்வத்திற்கும் ஒரு செட் நல்ல துணிமணிகள் என செலவழித்தது போக மீதமுள்ள பணத்தில் இந்த பத்து நாட்களும் அடுப்பு எரிந்தது. வீட்டில் வைத்த சாப்பாடு, குழம்புகள், துணி மணிகள் எல்லாம் இராமசாமியின் இரத்தக் கவிச்சி வீசுவதாக உணர்வு,

ராமசாமி தள்ளாட்டமான நடையில் அக்கம் பக்கம் சொல்லி, விசாரித்து லட்சுமிக்கு மாப்பிள்ளை தேடும் வேலையையும் தொடங்கி இருந்தார். ஓரிரண்டு மாப்பிள்ளை விலாசங்கள் கிடைத்தன. ‘ஜாதகம் பொருந்தனும்; நகை நட்டு சீர் சினத்திகள் திகையனும்…’ என்ற கவலையோடு வங்கியில் போட்டு வைத்த செக் வசூலாகி * விட்டதா எனக் கேட்க வங்கிக்கு நடந்து போய்க் கொண்டிருந்தார்.  இடையிடையே தவிப்பும் இளைப்பும் வாட்டுவதால் அங்கங்கே அமர்ந்து ஆயாசம் அடங்கியபின் நடந்தார். முன்னமெல்லாம் எங்கு போனாலும் சைக்கிளில் தான் போவார்; வருவார். இப்பொழுது சைக்கிள் மிதித்தால் உயிருக்கு ஆபத்து என்ற டாக்டரின் எச்சரிக்கை மிரட்டிக் கொண்டிருந்தது.

இவர் தளர்ந்து தளர்ந்து நடப்பதைப் பார்த்து இவரைச் சுற்றி எல்லோரும் எது எதுவோ பேசிக் கிசுகிசுத்துக் கொள்வதாக – எண்ணம் வதைத்துக் கொண்டிருந்தது. –

கடந்த மூன்று நாட்களாக இப்படி அலைந்துகொண்டிருக் கிறார். “இன்னும் செக் பணம் வசூலாகி வரவில்லை ” என்ற பதிலே வந்து கொண்டிருந்தது. முச்சந்திப் பிள்ளையாரை வேண்டிக் கொண்டார் – “அப்பா பிள்ளையாரப்பா செக் பணமாகி சீக்கிரம் வந்துட்டா 108 சிதறுகாய் போடுகிறேன், கருணை காட்டப்பா…”

வங்கி நெருங்க, நெருங்க ஆர்வமும் ஐயமும் மனத்தை உலுக்கி இதயத் துடிப்பைக் கூட்டிக் கொண்டிருந்தது. ராமசாமிக்கு முன்னரே வேலாயுதமும், மாரியப்பனும், கணக்குப்பிள்ளையும் வந்து காத்திருந்தனார்.

தயங்கி, நாக்கு வறண்டு கணக்கு அலுவலரிடம் விசாரித்தனர். “நல்ல பதிலா வரணுமடா கடவுளே, “வேண்டியபடி பதிலுக்காக எதிர்நோக்கினர்.

நிமிர்ந்து பார்த்த அலுவலர், “நீங்க போட்ட செக் எல்லாம் திரும்பி வந்துட்டதே!”

“அப்போ இன்னிக்கே பணம் எடுத்துக்கலாமுங்களா சார்’ மூவரும் ஒரே குரலில் கேட்டனர்.

“அட முடியாதுங்க! செக் கொடுத்த வங்கிக் கணக்கில பணம் இல்லைன்னு திரும்பி வந்துட்டுதுங்க! பணம் எடுக்க முடியாதுங்க!

மாரியப்பனும், வேலாயுதமும் ஒருவரையொருவர் முந்திக் கேட்டார்கள். “சார் என் செக்குக்கு பணம் வந்துருச்சா சார்!”

“அட, உங்க அஞ்சு பேரின் செக்குகளும் திரும்பி வந்துடுச்சு யாரோ உங்களை நல்லா ஏமாத்திட்டாங்க!”

கணக்கு அலுவலரின் வார்த்தைகள் வல்லிடியாகத் தாக்கின “ஐயோ! மோசம் போயிட்டோமே. “ராமசாமி தலையில் அடித்தபடி விழுந்தார். மற்றவர்களும் கதறியபடி அவரைத் தூக்க முயன்றனர் வங்கியில் கதறல், களேபரம், பரபரப்பு. மேலாளர் உடனே விஷயத்தைப் புரிந்துகொண்டு உதவியாளர் மூலம் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கச் செய்தார்.

ராமசாமிக்கு அதிர்ச்சியில் உடலில் ஒரு பக்கம் இயங்கவில்லை வீட்டிற்கு தகவல் பறந்தது. பொன்னுத்தாய் தலையிலும் நெஞ்சிலும் மாறி மாறி அடித்தபடி கதறி வந்தாள். லட்சுமியும் செல்வமும் விம்ம் விம்மிகேவியபடி வந்தனர்.

பெங்களுருக்கு அழைத்துப்போன சொஸைட்டி கணக்கும் பிள்ளை தூக்குப்போட்டுக் கொண்டதாக பொன்னுத்தாய்க்கு தகவல் வந்தது. அதிர்ச்சி தரக்கூடிய செய்தி எதுவும் ராமசாமிக்கு சொல்லக்கூடாதுன்னு டாக்டர்கள் எச்சரித்திருந்தனர்.

மாரியப்பனுக்கு நெஞ்சுவலி வந்து பெரியாஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர். மாலை பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக சிறுநீரக மோசடி பற்றி, நெசவாளர்கள் கொதிப்பு பற்றி பத்தி பத்தியாக வந்தன. தொலைக்காட்சிக்காரர்களும் வாரப்பத்திரிகைக்காரர்களும் படையெடுத்து வந்தனர்.

“அய்யா என் புருஷனைக் காப்பாத்தணும், கொஞ்சம் தூங்கி உயிரோட இருக்க விடுங்க!” பொன்னுத்தாய் கையெடுத்துக் கும்பிட்டு யாரையும் அண்டவிடாது விரட்டினாள். போலீஸ்காரர் களும் வந்தார்கள். தூர இருந்து போட்டோ எடுத்துப் போனார்கள். பலன் இல்லை .

ஓரளவு குணமானதும் வீட்டுக்கு அழைத்து வந்தாயிற்று. “ஏன் என்னைக் காப்பாத்தினீங்க!” ராமசாமி தலையில் அடித்துக்கொண்டு அழுதார். பொன்னுத்தாய் பிள்ளைகளைக் காட்டி ஆறுதல்படுத்தினாள்.

அந்தச் சம்பவத்தை யாராவது நினைவுபடுத்தி விசாரித்தால் வாய் கோணி ஏதோ புரியாத ஒலிகளில் புலம்புகிறார் இராமசாமி.

தறிகெட்டு தரித்திரம் தாண்டவமாடியது. வாங்கின நகைகள் விலைக்குப் போயின. இராட்டையில் நூல் சுற்றிய லட்சுமி கை முறுக்குச் சுற்றினாள். அம்மா பக்குவமாக எண்ணெய்யில் வேக வைத்துத் தர ஒரு பாத்திரத்தில் எடுத்து கடைகளுக்கு கொண்டு சென்று விற்று வருகிறான் செல்வமுருகன். கையில் கம்புடன் சுவற்றில் சாய்ந்தபடி வாயில் எச்சில் ஒழுக ராமசாமி போவோர் வருவோரை வெறித்துப் பார்த்தபடி இருக்கிறார். கண்ணில் கசியும் நீரைத் துடைக்கக் கைவரவில்லை! கொசுக்கள் முகத்தில் ஆடி முகாரி பாடித்திரிகின்றன.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top