தம்பியுடையோன்

0
(0)

“நா முண்டச்சி.. என்னோட வயித்தெரிச்சல் அவனச் சும்மா விடாது. நா மண்ணள்ளித் தூத்தி  விட்டேன்னா அவனுக்கு ஏழு தலமொறையும் வெளங்காமத்தாம் போயிரும்..ஆமா..!”

 

அதுவரைக்கும் கத்திப் பேசிக்கொண்டிருந்த அழகுத்தாய், ஜாலி சங்கரைக் கண்டதும், ஊசி குத்திய பலூனாய் –  தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டாள். சேலையைத் திருத்தி, மாராப்பை இழுத்துவிட்டு கொந்தளித்து நின்ற முகபாவத்தை இயல்பாக்கினாள்.

 

ஜாலி, புதியதாய் வாங்கியிருந்த தனது ஹீரோ ஹோண்டாவை அருகிலிருந்த கட்டிடத்தின் நிழலடியில் பதனமாய் நிறுத்தி, பக்கவாட்டு பூட்டையும் பூட்டிவிட்டு – சரியாய் இருக்கிறதா என்று அதன் கழுத்தைத் திருப்பிப் பார்த்து விட்டு, வண்டிச்சாவியை கைக்குள் அடக்கியபடி சன்னாசியப்பன் ஜவுளிக் கடைக்குள் நுழைந்தான்.

 

வாசலில், போடப்பட்டிருந்த பைபர் ஸ்டூலில், ஆனந்தன் உட்கார்ந்திருக்க, அழகுத்தாய் நின்றிருந்தாள். இன்னமும் இரண்டு ஸ்டூல்கள் காலியாகயிருந்தது

இந்த இடத்தில் முன்பு தையல் மெசின்கள் போடப்பட்டிருந்தன. காலமாற்றத் தில் கடை பிழைத்திருப்பதே பெருமாள் புண்ணியம்.

 

கடைக்காரர் உள்ளே கால்மடக்கி சம்மணம் போட்டு உட்கார்ந்து பேப்பர்படித்துக் கொண்டிருந்தார். கடைப்பையன், விரிப்பான்களில் படிந்திருந்த தூசுகளைத்தட்டி வாசலுக்கு வெளியில் தள்ளிக் கொண்டிருந்தான். வாடிக்கையளர்களை உட்கார வைத்து வியாபாரம் பார்க்கிற ஸ்டைல் இன்னமும் மாறவில்லை. ”நடக்குற ஏவாரத்துக்கு இது போதும் போதும்…“ – சன்னாசியப்பர் விரக்தியாய்ச் சொல்லுவார்.

 

கடைவாசலில் கால்வைத்ததும் கடைப்பையனின் முதுகில் செல்லமாய்த் தட்டி “டேய் “ என்ற சங்கர்,. கடைக்காரரைப் பார்த்து இரண்டு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டான். “கைய எடுக்குறேன் தலைவா…! – என்றான்.

 

“என்னா ஜாலி, ரெம்ப நாளா ஆளக் காணாம்..? டூர் எங்கியும் போயிட்டியா…?”

 

“அடப் பாவியா நாலுநாள் இருக்குமா..! அது ரெம்ப நாளாச்சா… ச்சே ஊர் ரெம்பக் கெட்டுப் போச்சப்பா…..”  என அலுத்தவன், கதவை ஒட்டி இருந்த ஸ்டூலை ஆள்க்காட்டி விரலில் கோடு கிழித்துப் பார்த்தான். “தொடைக்கலியா வெள்ள வேட்டிக்கும் அதுக்கும் அச்சடிச்ச மாதிரி அழுக்கு ஒட்டிக்கப் போகுது.” சொல்லியபடி கடைக்குள் கிடந்த பழைய துணி ஒன்றை எக்கி எடுத்துத் துடைத்துக் கொண்டான்.

 

வண்டிச் சாவியை கடைக்குள் அட்டளை ஓரமாய் வைத்துவிட்டு ஸ்டூலில் விஸ்தாரமாய் உட்கார்ந்தான். அவனது உடம்புக்கு அந்த ஸ்டூல் போதவில்லை  பின்புறச் சதை கொஞ்சம் பிதூங்கி வழிந்தது.

 

“டேய் தம்பி அண்ணனுக்கு ரெண்டு சீரட்டு வாங்கியாப்பா..”- கடைப்பையனுக்கு உத்தரவிட்டவன், அப்போதுதான் அழகுத்தாயைப் பார்த்தான்.  “வாம்மா தாயி, அழகுத்தாயீ…! ம்… நா இங்கதா இருப்பேன்னு கரெக்டா.. தேடிவந்திட்ட..,” என்றவன், அருகிலிருந்த ஆனந்தனையும் அப்போதுதான் பார்ப்பவன் போல சடாரென எழுந்தான். “தோழரே… ஆனந்தண்ணே, நீங்கதானா…? அய்யோ.. மன்னிச்சுக்கங்க..! கவனிக்கவே இல்ல… வாங்க வாங்க..!” –  அவரது கையைப் பிடித்துக் குலுக்கினான்.

 

“நல்லாருக்கீங்கல்ல… சந்திச்சு கூடுதல் நாளாச்சு.” என்றவன் கடைக்காரர் பக்கம் திரும்பி , “ தலைவா, தோழரத் தெரியும்ல.. நமக்கு ரெம்ப தோஸ்த்..! ஒரே ஸ்கூல்ல படிச்சிருக்கம்.. இல்லி யாண்ணே…..!”  –  விடாமல் பேசினான்.

 

“ஆமா  ஆமா…! “ – ஆனந்தனுக்குக் கூச்சமாய் இருந்தது அவனது அந்த அறிமுக தோரணை.

 

“பத்து இருவது வருஷமா அரசியல்ல இருக்கார்னு நெனைக்கிறேன்.., இன்னம் சைக்கிள் தாண்ணே ஓட்டறீக….! உம்மையீலேயே நீங்கல்லாம்…”  என இழுத்தவன், அதற்குமேல் வார்த்தை வராமல் திணறி, “அத நாஞ் சொல்லக் கூடாது.” – என முடித்தான்.

 

“தோழரே… ஒண்ணு சொல்லட்டுமா, உண்ம, மனசறிஞ்சு சொல்றேன்.. கச்சி அது இதெல்லாந் தனி, “ என பீடிகை போட்டவன், “நீங்க மட்டும் இல்லாட்டா, – ஒங்க கட்சி மட்டும் இல்லாட்டா, நாடு என்னிக்கோ நாசமாத்தேம் போயிருக் கும். சரியா..? இப்ப பாருங்க, மாசத்துக் கொருக்கா பெட்ரோல் வெலயக் கூட்றாங்க; நீங்க கூட்டணியில இருக்கப்ப ஊடு கட்டயப் போட்டு மக்களக் காப்பாத்துனீங்க.. ஆனா இதெல்லாம் சனங்களுக்குத் தெரியும்றீங்களா..? எங்களுக்குத்தான் தெரியும். ரைட்டா..!” – சொல்லி முடித்ததும் சிகரட் வந்தது.

 

”சீரட் சாப்பிடுறீங்களா…. ?” நீட்டினான்.

 

“பழக்கமில்ல…”

 

“டீ சாப்பிடலாம்ல.. “ – என்றவன், “தலைவா காலங்காத்தால கடைக்கு வந்திருக்கம். காப்பி சாப்பிடுறியா, டீ சாப்பிடுறியான்னு கேக்க மாட்டீங்கிறீங்க எவ்வளவு பெரிய ஆளெல்லாம் ஒங்ககடைக்கு வந்திருக்காங்க.. கஸ்டமரப் பிக்கப் பண்ணவே தெரியலியே..! “

 

வந்த விசயம் நெஞ்சில் அலையடிக்க, ஒரு நிமிடம் அதனை ஒதுக்கி வைத்துச் சிரித்த ஆனந்தன். “யேன் சங்கர், கடக்கார்ரு ஏதோ பாவம்னு நமக்கு சேர் போட்டு ஒக்கார வச்சிருக்கார். ஒக்காந்த கடமைக்கி நாமதான் அவருக்கு எடத்து வாடகை தரனும். அதவிட்டுப்புட்டு ஏவாரமே ஆரம்பிக்காத நேரத்துல அவருக்குக் கஷ்டத்த தராதீக..!” – என்றார்.

 

கடைக்காரர் அப்பவும் பேப்பரை மேய்வதிலிருந்து மீளவில்லை. அலட்சியமா.., செய்தி   மீதான கவனமா.. அனுமானிக்க முடியாதபடிக்கு தலையை மட்டும் பேச்சுக்கேற்றார் போல ஆட்டிக் கொண்டிருந்தார்.

 

“என்னா தோழரே இப்பிடிப் பேசிப்பிட்டீக.. அவரு ஆரு தெரியும்ல.. வார்டு பொருளாளரு.. வார எலக்‌ஷன்ல நம்ம வார்டு கவுன்சிலரா நிக்கப்போறாரு.. சும்மா சொல்லமாட்டான் இந்த ஜாலி.”

 

“சாமீ… ஒம் பகுமானத்த நிப்பாட்டப்பா….! இன்னம் ஒருவருசம் கெடக்கு அதுக்குள்ள என்னத்தியாச்சும் பேசி…. ஓஞ் ஜோலிய மட்டும் பேசி அனுப்பு” – சட்டென சுண்டிப் பேசினார்.

 

”தலைவா, பேச்சுக்குப் பேசல.. எங்கம்மாத்தான சொல்றேன்…, இந்த வாரடுக்கு நீதான் கவுன்சிலரு.. எழுதி வச்சுக்க. நா என்னிக்கோ முடிவு பண்ணிட்டே. பெறகு இத்தன வர்சமா இங்க வந்து குப்ப கொட்னதுக்கு ஒரு அர்த்தம் வேணாமா..! என்னா தோழரே..”

 

”ஆமா, பொறுப்பான ஒர்த்தர் கவுன்சலரா வாரது நல்ல விஷயந்தான்.” என்ற ஆனந்தன், “அப்பறம் சங்கரு .., வந்த விசயம் என்னான்னா..”

 

ஜாலி சட்டென மறுபடியும் எழுந்து ஆனந்தனின் கைபிடித்து வணங்கினான். “ஸாரி.. ஸாரி, ஆனந்தண்ணே, தப்பா எடுத்துக்கிடாதீங்க. வந்த காரியம் கேக்காமலேயே நாம் பாட்டுக்கு நேரம் போக்கீட்டேன். சொல்லுங்க..!”

 

“வேற ஒண்ணுமில்ல இந்த அம்மா காரியம்மாத்தான்..” – அழகுத்தாயைக் காண்பித்தார்.

 

அழகுத்தாய் கையெடுத்துக் கும்பிட்டார்.

 

“ஒக்கார்மா.. அதேன் ஸ்டூல் இருக்குல்ல ஒக்கார்…”

 

“இருக்கட்டும் தம்பி, ரெண்டு வருசமாச்சு.. போன ஆவணி பதினெட்டுல செவ்வாக்கிழம குடுத்தது..”

 

“ம்..! என்னாதுமா.. முதியோர் பென்சனா.. விதவயா…”   –  பதட்டமில்லாமல் கேட்டான்.

 

”ம்” என விழித்த அழகுத்தாய் பொத்தாம் பொதுவாய் தலையாட்ட,  ஆனந்தனுக்குமே சரியாய் விளங்கவில்லை. ‘வார்டுச் செயலாளரிடம் காஸ் குடுத்து இழுபட்டுக் கிடப்பதாகத்தான் சொன்னாரே.. தவிர, அது இது என்று விபரமாய்ச் சொல்ல வில்லை. ஒருவேளை அந்தம்மாளுக்கே எதற்காகக் கொடுத்தோம் என்பது தெரியாமலிருக்கலாம்.

 

“அழகுத்தாய் தானம்மா…! வந்திருக்கணுமே..! தாசில்தார் ஆவீசுல பாத்த ஞாவகம் இருக்கே.. அனுப்பிச்சிட்டதா   வேறச் சொன்னாக… போஸ்ட்மேனக் கேட்டீகளாம்மா…!”

 

“மாசம் முப்பதும் கேட்டுக்கிட்டுதே இருக்கேன்யா.. அவகல்லாம் இப்ப என்னியப் கண்டாலே சடச்சுப் பேசறாக..”

 

“இல்ல தோழரே.. இவங்க பாவம் பாமரசனங்களா…. படிப்பறி கம்மி, வந்ததக் கூட வரலேன்னு சொல்லி ஆபீஸ்ல அபேஸ் பண்ணிக்கராங்க.. இருந்தாலும் இந்த அரசு ஊழியர்க பண்ற அழும்பு இருக்கே.. ரெம்ப்பக் கொடும..”  உதட்டைப் பிதுக்கிச் சொன்னான்.

 

“ஆளுங்கச்சிக்கார நீங்களே இப்பிடிச் சொன்னா.. !”  ஆனந்தன் பகடி செய்தார்,

 

“மூணுமாசத்துக்கு முந்திப் பாத்தப்பவும் இதுமதிரித்தேஞ் சொன்னீக நானும் தாலுகாவீஸ் போய்க் கேட்டுப் பாத்துட்டே..,”    –  அழகுத்தாய்

 

“ ம் “

 

”அழகுத்தாய் ன்ற பாரமே இங்க வரலெ.. ந்னுட்டாக..”

 

“ தாலுக்கா ஆவீஸ்ல தான, நாம போனா நீ உசுரோடயே இல்லண்டு கூடச் சொல்லுவானுக பெரிய பிக்காளிப்பயக. ஒவ்வொருத்தனும் சாயந்தரமாச்சுனா வீட்டுக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு எண்ணிக்கிட்டுப் போகணும்னுதே வேல பாக்குறாங்களே ஒழிய, இந்தமாதிரி அப்பிராணி சப்பிராணிகளக் கண்டுக்கறதே இல்ல..” ஆவேசமாய்ப் பேசினான், ஜாலி.

 

அழகுத்தாய்க்கு அவனது பேச்சில் அச்சம் பிறந்தது. வீர வசனம் பேசி தன் குற்றம் தள்ளி, வாங்கிய பணத்துக்கு மோசம் செய்திடுவானோ.. ” அய்யா ராசா நாலாயிரம் ரூவா குடுத்திருக்கேஞ்சாமீ கடெவாங்கித் தந்திருக்கே.. வாங்குன காசுக்கு வட்டி கட்டக் கூடத் தெம்ம்பில்ல அய்யா… சாமி சாமி.. ஓங்கால்ல கூட விழுகிறேன். எனக்கு அந்தக் காசவாச்சும் திருப்பிக் குடுத்துருசாமி, ஓம் புள்ள குட்டி நல்லாருக்கும்..!”   கை உயர்த்திக் கும்பிட ஆரம்பித்த அழகுத்தாயின்  வற்றிப்போன தேகம் பேசுகிற போதே கிடுகிடுவென நடுங்கியது.

 

அந்தக் கிழவியின் தழுதழுத்த வார்த்தைகள், பேப்பர் படித்துக் கொண்டிருந்த கடைக்காரரை பாதித்தது போலும், பேப்பரை மடித்து வைத்துவிட்டு கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்துக் கொண்டார். ஆனந்தனுக்கும் கோபம் கொஞ்சங் கொஞ்சமாய் உயர்ந்து கொண்டிருந்தது. ஸ்டூலில் உட்கார்ந்திருந்த நிலை மாற்றி நிமிர்ந்த நிலைக்கு மாறினார். அதனை ஜாலியும் புரிந்து கொண்டான்.

 

உடனடியாய் பதறியவன் போல். “பொறுமா பொறுமா.. நாலாயிரம் ரூவாய ஏங்கிட்டியா குடுத்த – எனக்கா குடுத்த, ஆவுகம் பண்ணிச்சொல்லு..! ரூவாய மொத்தமாவா குடுத்த…?”

 

ஜாலி பதறிய நேரத்தில், சாலையில் ’108’ ஆம்புலன்ஸ் ஒன்று அலறிக் கொண்டு ஓடியது. பள்ளிவாகனம் உட்பட அவசரமாய் சென்று கொண்டிருந்த அத்தனை வாகனங்களும், வழி அமைத்துக் கொடுத்தன. கீழ்வானில் பப்பளவென சிரிக்கிற சிறுமியாய் வெய்யில் வெதுவெதுப்பாய் கிளம்பி வந்து கொண்டிருந்தது.

 

கைவிரல் அத்தனையும் மொத்தமாய் விரித்து கணக்குச் சொல்லலானார் அழகுத்தாய். “மொதமொத ஐநூறு.. குடுத்தே.., அப்பறம் வி ஏ க்குன்னு ஒர்க்கா, ஆரைய்யிக்கி மருக்கா, அதுக்கப்பறம் எல்லாங் கையெழுத்தாகி இருக்குமாண்டீக தாலுக்காவீஸ்ல நிக்கிதுன்னு முழுசா குடுத்தது.. கூட்டிப் பாருங்க …. வருதா..? வாண்டாஞ்சாமி.. அடுத்தாள் காசு.! வந்தகாசயே வச்சுத் திங்க முடீல.. ஊராகாசு ஒடம்புக்குக் கெடுதி…”    எங்கே… வாங்கிய காசை இல்லை என்று சொல்லி விடுவானோ என்ற பதட்டத்தில் தன்னுடைய ஒட்டுமொத்த ஞாபசக்தியையும் பிரயோகித்துப் பேசினார்.

 

ஆனால் ஜாலி, எதையும் மறுக்கவில்லை. “பாத்தீங்களா தோழர், எனக்குன்னு எதியாச்சும் வாங்கீருக்கேனா.. அந்தம்மா வாயிலேயே வருது பாத்தீங்கள்ல.. பூராம் அப்பைக்கப்பயே செட்டுல் மண்டுத்தே.. வக்கனையா வாங்கிவச்சுக்கிட்டு இப்ப பெறகுன்னு இழுத்தடிக்கிறாங்கே ஆபீஸ்ல.. பரவால்ல.. இலவச டிவி சம்பந்தமா இன்னிக்கிப் பேசவேண்டியிருக்கு நாந்தேம் போறேன். ன்னிக்கி கண்டிசனா இதப் பேசி முடிச்சாந்திர்ரேன். சரியா..?”

 

மிகப் பெரிய பேச்சாளனாய் தோரணையோடு அவன் பதிலளித்த விதம் ஆனந்தனுக்கு எரிச்சலூட்டியது. வழியில்லை வந்தவுடன் மோதுவது வீம்புக்கு வந்த மாதிரி ஆகிவிடும். போகவிட்டுத்தான் திருப்பவேண்டும். “பொதுவா சங்கரு, இந்தமாதிரி உதவித்தொகை ஓய்வூதியப் பிரச்சனையெல்லாம் நம்மளப் போல பொதுஜன சேவை செய்றவங்க பொறுப்பெடுத்து வாங்கித்தர வேணும். அந்தம்மா முடியாத காலத்திலேயும் சக்திக்கு மீறிய காசையும் குடுத்துருக்காங்க.. இல்லியா, வாங்கிட்டீக அது ஒங்களுக்கில்லதா, யாருக்கோ..! விடுங்க.வேலய சட்டுன்னு முடுச்சுக் குடுக்கப் பாருங்க. அதான நல்லது. “

 

“ஆனந்தண்ணே இப்பிடியெல்லாம் பொடிவச்சுப் பேசக்கூடாது. நீங்க அறியாத சேதியில்ல. கவர்மெண்ட் ஆவீஸ்பூராம் ஒவ்வொரு வேலைக்கும் அதிகாரிங்க தனித்தனி ரேட் எழுதித் தொங்கவிட்டிருக்காங்கே இல்லியா.. கடவுளே போனாலும் கைக்காசு எழுதாம காரியம் நடத்தமாட்டாங்கெ.. சரியா.. இது ஏதோ எனக்கு வாங்கிக்கிட்ட மாதிரி நீங்க பேசவர்ரீங்க.. தப்புண்ணே..!”   மெல்ல தனது அரசியலை உட்செலுத்தி ஆழம் பார்த்தான் ஜாலி.

 

“கடவுள் வேணுமனா காசுதரலாம் சங்கர். நாங்கள்லாம் சல்லிக்காசு தரமாட்டம்

 

“சந்தோசம். வாங்கிக் குடுங்க தங்கமாப் போச்சு. என்னா தலைவா..!” கடைக்காரர் அப்போதுதான் பேப்பரை முழுசாய் முடித்திருந்தார். அடுத்த படியாய் நாலாய் மடித்து கையில் வைத்து விசிறத் தொடங்கலானார். ஜாலி மேலும் தொடர்ந்து பேசலானான். “நாங்களா வீடுவீடாப் போயி வாஙக வாங்கன்னு கூப்புட்டு வர்ரம். ஏதோ ஒரு பொறுப்புல இருக்கறம் அதவச்சு ஒர்த்தர் ரெண்டுபேருக்கு நம்மனால முடிஞ்சதச் செய்யலாம்னு செஞ்சுதர்ரம்” என்றவன்,. ”ரேசன் காரடெல்லாம் எத்தன பேருக்கு ஓசியாவே வாங்கிக் குடுத்திருக்கேன், இந்தா அழகுத்தாயம்மா.. நீயும் தான வங்குன..! –  சட்டென பிடி கிடைத்து விட்டது ஜாலிக்கு.

 

“ஆமா, அதெல்லாந் நெசந்தே.. ஆனா, நூத்தம்பது ரூவா வாங்குனீகள்ல..”

 

“ச் இன்னிக்கெல்லா நீ ஆயிரத்தைந்நூறு குடுத்தாலும் வாங்கமுடியாது. எத்தன பேருக்கு பட்டா, பென்சனூ..,கர்ப்பத்துக்குப் பணம், கல்யாணதுக்குக்காசு.., இன்னிவரைக்கும் அம்ம ஊர்ல யாருக்கும் டிவிப் பொட்டி தரல. ஆனா பலபேருக்கு நா வாங்கிக் குடுத்திருக்கேன். தெரிமா..” – பக்கத்துத் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தபொழுது எக்குத்தப்பாய் வழங்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டிகளில் நாலைந்தைக் கடத்தி வந்து விநியோகித்த வீர கதையினை பல்முறை சொல்லி இருக்கிறான். அது இந்த இக்கட்டான நேரத்தில் வந்து கைகொடுத்தது ஜாலிக்கு பெருமிதமாய் இருந்தது.

 

ஆனந்தனுக்கு மட்டுமில்லாது, கடைக்காரருக்கும் அவனது பெருமை கடுப்படித்தது. ஆனாலும் ஜாலி, தன் உரையை நிறுத்தியபாடில்லை. தொடர்ந்தான், “கடக்கார்ரே என்னா அப்பதபுடிச்சு கம்முன்னு இருக்கீக.. கஸ்டமர் வந்திருக்காக கச்சிக்காரெ நா வந்திருக்கே.. ஒருகாப்பி கீப்பி ஆடர் செய்யமாட்டீங்கிறீக.. ! தோழரு நம்மளப் பத்தி என்ன நெனப்பாரூ..” –  சட்டென அவன் பேச்சின் தடத்தை மாற்றலானான்.

 

ஆனந்தன் இருக்கையினை விட்டெழுந்தார். “இருக்கட்டும் சங்கரு டீ சாப்பிட வரல, இந்தம்மாவோட பிரச்சனைக்கு என்னா சொல்லப் போறீங்க..” இறுக்கிப் பிடித்தார்.

 

கொஞ்சம் நிலைகுலைந்த ஜாலி, “பார்ரா.. இவ்வளவு நேரம் அதத்தான பேசுனம் தோழரே..!”

 

”இல்லியே..”

 

“இல்லியா..? த்டுமாறினான். ஆனாலும் சிரித்தான். “இல்லாட்டி நீங்க போராட்டம் பண்ணுவீங்க.. பாவம் தோழரே நானு. என்வீட்ல கொடிபிடிச்சிராதீக நடந்தத விட்ருவம். இன்னிக்குப் போயி இத முடிச்சு விட்டுடுறேன்” என்றவன், அழகுத்தாயைப் பார்த்து, “ ஏம்மா நாம் பல சோலிக்காரே அப்பப்ப என்னிய யாவகப்படுத்துமா தோழர முன்னுக்கு வச்சா எங்கிட்ட ரூவா குடுத்த..? பாவம் அவர வேற இழுத்துக்கிட்டு.. ம்..?  சரி. உறுதியா இன்னிக்கி முடிச்சிருவம்..” –  கை கூப்பினான்.  ”காப்பி சாப்பிடச்  சொன்னா வேணாங்கிறீக “

 

“ஒவ்வொருக்காவும் இப்பிடியேதாம்ப்பா சொல்ற.. வாங்குன காசுக்கு வட்டி கட்டமுடீலப்பா வித்துக்குக் குடுக்கவும் வீட்ல பண்டமில்ல.. “ புலம்பியபடியே ஆனனதனைப் பின் தொடர்ந்தார்.

 

முச்சந்தியில் பிரிகிறபோது ஆனந்தன் சொன்னார், “எல்லாருமே ஆளுக்கொரு தப்பச் செய்யிறோம். ஆளில்லாதப்ப ஆக்ரோஷமாப் பேசறதும், மண்ணவாரித் தூத்தி சபிக்கிறதும், நேர்ல கண்டதும் பம்மிப் பேசறதும்…  என்னையும் சேத்துத்தேஞ் சொல்றேன். எந்த நெலையிலயும் பாந்தமா பவ்யமா பேசறத விட்டுப்புட்டு சிண்டப்பிடிச்சு செகில்ல அறஞ்சு கேக்குறப்பதான் இதுவெல்லாம் சரியாகும். பரவால்ல, அடுத்து செய்வம் . நாளைக்கு வாங்க பாப்பம்.” அழகுத்தாயை வழியனுப்பிவிட்டு தன் சைக்கிளில் ஏறிப் புறப்பட்டார் ஆனந்தன்.

 

அவர்கள் கடையைவிட்டு அகன்ற பத்தாவது நிமிடம், ஜாலியைத்தேடி ஓடிவந்தான் ஒரு சுருட்டை முடிக்காரன்.

 

“அண்ணா .. பேப்பரப் பாத்தீங்களா.. குடிசைகளப் பூராம் கான்கரீட்டா மாத்தப் போறாகளாம் தலைவரு அறிக்க விட்டுருக்காரு..”  சத்தமாய் சொன்னான்.

 

சிகரெட்டின் ஆழமானதொரு புகையினை வெளிவிட்ட ஜாலி, “ராத்திரி டிவிலே          பாத்துட்டேன்..கொஞ்ச நேரத்துல அழகர்சாமி காலனில இருந்து கும்பல் வரும் மொதபில்லு ஆயிரத்த மட்டுமபோடுவம். பிற்பாடு பாத்துக்குவம். ரைட்டா..” என்றவன்,

 

கடைக்காரரைப் பார்த்து, “ கடைசிவரைக்கும் காப்பி வாங்கித்தரவே மாட்டீன்னுட்டீகள்ல.. இப்ப  பாருங்க, நம்ம தம்பி ஒங்களுக்கு சிகரட்டோட வாங்கீட்டு வருவான்.. என்னா தம்பி..!“ – வந்தவனை தோளில் தட்டி உற்சாகப்படுத்தினான் ஜாலி.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top