டேவிட் செல்லையாவின் கலைப்பயணம் – சில குறிப்புகள்

0
(0)

டேவிட் செல்லையா வேத ஞானபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு பாயிண்ட்ஸ் மேனாக வந்து பத்து நாளாகியிருந்தது. வந்த புதிசில் அந்த ஸ்டேஷனும் அதைச் சுற்றியிருந்த காடும் மனசில் பயத்தையும் தனிமையுணர்வையும் ஏற்படுத்தியது. நிரந்தர குடிகாரன் கிடையாது என்றாலும் மனசு சமானமில்லாத பொழுதுகளில் குடித்துவிட்டு வருவான். பின் வழுக்கை விழுந்திருந்த தலையில் தீவுகளாக மயிர் இருந்தது. தினசரி சவரம் செய்கிற மீசையில்லாத முகத்தில் எப்போதும் ஒரு சோக பாவம் குடியிருந்தது. அன்றைக்கு நாள் அபூர்வம். பௌர்ணமி போல. சாயந்திரமே நிலவு பெரிசாய் உதித்தது. அவன் எழுந்து ஊருக்குள் போனான்.

அந்த ஸ்டேஷனைக் கடந்து போகிற ரெண்டு எக்ஸ்பிரஸ் டிரெய்ன்களும் கடந்து போன பிறகு விளக்குகளையெல்லாம் பூச்சிகளின் தொந்திரவிற்காக அணைத்து விட்டு வெளி வராண்டாவில், சேரைப்போட்டு, எதிரே முழு நிலவின் ஒளியில் முழுகிக் கொண்டிருந்த காட்டிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றை அனுபவித்தவாறு ஸ்டேஷன் மாஸ்டர் உட்கார்ந்திருந்தார். ஆளரவம் கேட்டு திரும்பிப் பார்த்தார். டேவிட் செல்லையா வந்து அவருக்கு கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு,

“குட் நைட் சார்…”

“வாங்க என்ன தூங்கலியா…”

அவன் ஒன்றும் சொல்லாமல் சிரித்தான். நிசப்தம். மங்கலான வெள்ளையொளி நதியென பாய்ந்து கொண்டிருந்தது. ராப்பூச்சிகளின் இன்னிசை. எதிரேயிருந்து வீசும் காற்று தண்ணென குளிர்ந்திருந்தது. நிறைந்துத தும்பி அசைந்து கொண்டிருந்த ஆல மர இலைகள், டேவிட் செல்லையா வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நினைவை எங்கோ தொலைத்த மாதிரி. திடீரென்று ஸ்டேஷன் மாஸ்டருடன் எதிர்பாராத வகையில் பேச ஆரம்பித்தான்.

டேவிட் செல்லையாவுக்கு சிறு வயசிலிருந்தே நாடகக் கோட்டி உண்டு. அவனூரிலோ அல்லது பக்கத்து ஊர்களிலோ நாடகம் எங்கு நடந்தாலும் சரி போய் பார்த்து விடுவான். அப்போது டாக்கீஸ் பெரிய பெரிய பட்டணங்களில் மட்டுமே இருந்தது. பள்ளிக்கூடம் போக துணியில் கட்டிக்கொடுத்த புளிச்சோற்றை எடுத்துக் கொண்டு நாடகம் கூத்து என்று அலைவான். செல்லையா பள்ளிக்கூடம் வராததற்காக இவனுக்கு அடிக்கடி நிமிட்டாம் பழம் கொடுத்து உக்கிபோடச் சொல்லும் வெத்திலை சக்கு வாத்தியார் வாயில் வெத்திலையை அதக்கிக் கொண்டே பேசுவதைப் போல நடித்துக் கொண்டிருக்கும் போது பிடிபட்டுக் கொண்டான். அன்று வாங்கிய அடியில் காய்ச்சல் வர, கசந்த பள்ளிக்கூடத்தை காய்ச்சலோடு தொலைத்து விட்டான். கூத்து பார்த்துவிட்டு வந்தால் அதில் நடித்த எல்லோரையும் போல நடித்துக் காண்பிப்பான். அதைப் பார்க்க அவன் வீட்டு முன்பு கூட்டமே கூடிவிடும்.

பவளக்கொடி ராஜமாணிக்கத்தைப் போலவே நிமிஷத்துக்கு ஒரு தடவை குண்டியைத் தடவி விடுவான். ஹரிச்சந்திராவில் வரும் லோகிதாசனைப் போல அழுது கொண்டே பாடிக் காண்பிப்பான். அம்மாவும் அய்யாவும் பார்த்து பார்த்துச் சிரித்தார்கள். ரொம்பப் பெருமையாயிருந்தது. யாராவது கடுப்பாய் பேசினால் அவர்கள் மாதிரியே பேசிக் காண்பித்து சிரிப்பு மூட்டி விடுவான். அதனால் ஊரில் எல்லோருக்கும் அவன் மேல் பிரியம்.

திடீரென்று ஒரு நாள் காணாமல் போய் விட்டான் செல்லையா. அய்யாவும் அம்மாவும் அலமந்து போனார்கள். தவியாய்த் தவித்து அவனைத் தேடியலைந்தார்கள். கடைசியில் எங்கேயோ மதுரையில் நாடகக் கம்பெனியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு போனார்கள். அங்கே செல்லையா ஸ்திரி பார்ட் வேஷம் கட்டி நடித்துக் கொண்டிருந்தான். அய்யா அம்மாவின் எந்தக் கெஞ்சலுக்கும் மனமிரங்கவில்லை. சாம தான தண்ட பேதங்கள் செல்லையாவின் கலை உறுதிக்கு முன்னால் சக்தியிழந்தன. கடைசியில் எக்கேடும் கெட்டுத் தொலையட்டும் என்று விட்டு விட்டு வந்தார்கள், அய்யாவும் அம்மாவும்.

இப்படித்தான் செல்லையா தன் லட்சியக் கலைப் பயணத்தை ஆரம்பித்தான்.

எல்லா கலைவாணர்களின் கனவு பூமியான சென்னைப் பட்டணம் நோக்கி செல்லையா போகிற போது கைவசம் நிறையவே லட்சியங்கள் ஸ்டாக் இருந்தன. ரோஜாப் பூக்கள் தூவிய மலர்ப் பாதையை எதிர் பார்த்துப் போன செல்லையாவை கல்லும் முள்ளும் கீறிக் காயப்படுத்தின. கலைப் பசியை வயிற்றுப் பசி முழுங்கி ஏப்பம் விட்டது. கூலி வேலை பார்த்தான் செல்லையா. கொஞ்ச நாள் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்திலும் அப்புறம் பக்கத்திலிருந்த ஒரு குப்பத்திலும் இருக்க இடம் தேடிக் கொண்டான். எப்பொழுதும் துடிப்புடன் இருந்த செல்லையாவின் கலைத் தாகம் புலவர் சிவசாமி என்ற செகண்டரி கிரேடு வாத்தியாரின் கலைத் தாகத்தோடு இணைந்து காட்டாறாய்ப் பெருகி சென்னையைச் சுற்றியுள்ள குப்பங்களையும் கிராமங்களையும் மூழ்கடித்தது. புலவர் எழுதிய நாடகங்களில் அவன் முக்கிய வேடங்களில் நடித்தான். அவ்வப்போது வெளிவந்த சினிமாக் கதைகளையொட்டி சுயமாக புலவரின் கற்பனையில் உதித்த கலைச் சிகரங்களாக வந்தன.

சாதாரண ஜனங்களின் பேராதரவு பெற்றதும் நாடகத்தில் சாதித்த கலை உன்னதங்களை சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றியதில் வியப்பில்லை. இப்போதே முப்பதை எட்டிக் கொண்டிருந்த செல்லையா எப்படியும் தன் முகத்தை சினிமாவில் பார்த்துவிட உறுதி பூண்டான். அது மட்டும் நடந்து விட்டால் அவன் கீர்த்தி பூரணமடைந்துவிடும். உடனே சினிமா ஸ்டுடியோக்களை முற்றுகையிட்டான்.

பல தடவை பகீரதப் பிரயத்தனங்கள் செய்து ஸ்டுடியோவுக்குள் எடுபிடி ஆளாய் சேர்ந்தான். அவன் வெகு காலமாக கண்டு கொண்டிருந்த கனவுகைக்கருகில் தொங்கிக் கொண்டிருந்தது. எட்டிப் பறித்து விட தகுந்த சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். எப்படியாவது ஒரு சின்ன ரோலில் தலையைக் காட்டி விட்டால் போதும். அப்புறம் அவன் வேண்டாம் என்றாலும் விடவா போகிறார்கள். ஆனால், அவன் துரதிருஷ்டம் அவன் வேலை பார்த்த டைரக்டர்களும் முதலாளிகளும் அவன் எடுபிடி ஆளாக இருப்பதிலேயே மகிழ்ச்சி அடைந்தார்கள். நாலைந்து வருடமாய் எதுவும் திகையவில்லை. ஒரு பெரிய நடிகருக்கு டைரக்டர் சீனை விளக்கிக் கொண்டிருக்கும் போது அதிகப்பிரசங்கித்தனமாக தலையை நீட்டி கூடுதல் விளக்கமளிக்க ஆரம்பித்த கணத்தில் செல்லையாவின் சினிமா மோக காதை பிரேக் ஆனது.

மறுபடியும் குப்பத்து ஜனங்களை கலை வெள்ளத்தில் மூழ்கடிக்க நினைத்த போது அய்யா செத்துப் போன சேதி வந்தது. செல்லையாவும் லட்சியப் பயணத்தில் களைப்புற்றிருந்தான்.

அம்மா கூட மாறியிருந்தாள். ஏலியாள். அய்யா லாரன்ஸ்அய்யா சாமியாய் செத்துப் போனார். கர்த்தரின் ஆசீர்வாதத்தாலேயே இந்த ரயில்வே போர்ட்டர் உத்தியோகம் அய்யாவுக்குக் கிடைத்த தென்றும் அதுவே செல்லையாவுக்கும் கிடைக்கும் என்றும் அம்மா சொன்னதோடு மட்டுமல்லாமல் புதிதாய் அவனூரில் முளைத்திருந்த புனிதமேரி ஆலயத்துக்குக் கூட்டிப் போய் ஞான அப்பம் வாங்கி புனித நீர் தெளித்து டேவிட் செல்லையாவாக்கினாள். அதே கையோடு பக்கத்திலிருந்த வின்சென்ட் பெரியசாமியின் குமாரத்தியான ரோசலின் செல்வியைக் கல்யாணம் முடித்து வைத்தாள். ரோசலின் இதுவரை நாடகம் பார்த்ததில்லை. சினிமா தான் பார்த்திருக்கிறாள். அதற்கும் கர்த்தரிடம் பாவ மன்னிப்பு வாங்கிவிடுவாள். அதனால் கணவரின் கலைப்பித்தம் அவளுக்குப் புரியவில்லை.

இந்தக் கட்டத்தில் டேவிட் செல்லையாவின் கலைப்பயணம் முடிந்ததாக நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். அவன் வேலை பார்க்கிற ஊர்களின் தன்மையைப் பொறுத்து கூத்து அல்லது நாடகம் போட முயற்சி செய்வான். எப்பொழுதும் கைக்காசு செலவழியும். கடனும் வாங்குவான். கலைக்கும் கடனுக்கும் ரத்த சம்பந்தம் உண்டு போல. ரிகர்சல் ஆரம்பித்தால் வேலைக்குப் போகமாட்டான்.

ரோசலின் எத்தனை நாள் வேண்டுமானாலும் நாடகக் கிறுக்கின் அட்டகாசங்களைப் பொறுத்துக் கொள்வாள். அந்த சாத்தானை ஒழித்துக் கட்டுவதற்காக கர்த்தரிடம் ஜபிக்கவும் செய்வாள். ஆனால், பசியை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? டேவிட் செல்லையா வீட்டுக்கு வராமலேயே இருந்த நாட்களில் ரோசலினுக்கு பசியை அமர்த்தி ஆதரவளித்த பாயின்ட்ஸ் மேன் சுப்பிரமணி நிரந்தரமாகவே அவளை அழைத்துக் கொண்டு போய்விட்டான். அதற்கடுத்த ஒரு மாசம் டேவிட் செல்லையா எங்கேயும் போகவில்லை. சம்பளத்தை வாங்கிக் கொண்டு ரோசலினைத் தேடிப் போனான். அவனைப் பார்க்கக் கூட முடியாது என்று சொல்லிவிட்டாள்.

இன்னமும் அவளுடைய ஞாபகம் தீராதரணமாக இருக்கிறதென்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே திடீரென எழுந்து நின்றான். கைகளிரண்டையும் முன்னால் கட்டிக்கொண்டு,

“கொண்டவனை வஞ்சித்த குலக்கொடியே! உன் கணவனைக் கொல்லாமல் கொன்ற கொலைகாரியே. கண்ணே, கரும்பே, கண்மணியே என்று பாராட்டி, சீராட்டிய மணவாளனை துரோகித்த பாதகியே நீ குடித்தது பழரசமல்ல… விஷம்… ஹ்ஹா… ஹாஹா… ஹாஹாஹ்… ஹாஹாஹ்…

அப்போது அவன் உருவமே பிரமாண்டமாய் தெரிந்தது. அந்த நிலவின் ஒளியில் நிசப்தமாய் இருந்த காடே அலறியது. ஸ்டேஷன் மாஸ்டர் திடுக்கிட்டுப் போனார். டேவிட் செல்லையா மனசை கீழே சிந்திவிட்டவன் போல அப்படியே குனிந்து உட்கார்ந்தான். முழங்கிய அவன் குரல் இழுவையாய் இழுத்து கார்வையாய் இறங்கி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான். அவ்வளவு பெரிய மனிதனின் அழுகைச் சத்தம் மனசை என்னவோ பண்ணியது. ஆறுதல் சொல்லலாமென்று ரெண்டடி எடுத்து வைத்தார் ஸ்டேஷன் மாஸ்டர். அதற்குள் டேவிட் செல்லையா எழுந்து சிரித்துக் கொண்டே,

“இது ஒரு நாடகத்தில் வந்த வசனம், சும்மா பேசிக் காட்டினேன். நாம ஒரு நாடகம் போடுவோமா? ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடியாயிருக்கு. நீங்க ஹீரோவா ஆக்ட் பண்ணுங்க, நான் அப்பா வேஷம் போடறேன்.”

இன்னமும் அவன் முகத்தில் கண்ணீர் காயவில்லை. நிலவில் பள பளத்தது. ஸ்டேஷன் மாஸ்டர் ஏதோ சொல்ல வாயெடுக்கும் போது அவன் மறுபடியும்,

“எனக்கிருக்கிற ஆசையெல்லாம் நான் நடிச்சிக்கிட்டிருக்கும் போதே செத்துரணும் சார்… நான் கலைஞன் சார்… கலைஞன்”என்று அவன் சொல்லும் போது அவன் முகத்தில் இருந்த பாவத்தை வார்த்தைகளில் சொல்வது கஷ்டம். ஸ்டேஷன் மாஸ்டர் அவனருகில் வந்து நின்றார். சில கணங்களுக்குப் பிறகு நீண்ட பெரு மூச்சுவிட்டுக் கொண்டே ஸ்டேஷனுக்குள் போய்விட்டார்.

நிலா இப்போது உச்சிக்கு வந்திருந்தது. குளிரும் அதிகமாகிக் கொண்டே போனது. டேவிட் செல்லையா இன்னமும் எதிரேயிருந்த காட்டையும் நிலவையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top