டேனியல் பெரியநாயகத்தின் புல்லாங்குழல்

0
(0)

“ஏல… ஏசு… கொள்ளைல போறவனே… இங்கவால… ஓங்கையை முறிச்சு அடுப்பில் வைக்கேன்…”

தண்டியான உடம்பைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு குணசீலியம்மாள் ஓடி வந்து வாசலில் நின்று கத்தினாள். டேனியல் பெரியநாயகம், – குணசீலியம்மாளின் கடைசிப் புத்திரனான ஏசுராஜ் கைநிறைய சீனியை அள்ளி நக்கிக்கொண்டே ஓடினான். அளிபோட்ட வராந்தாவில் உட்கார்ந்து ஆபீஸ் கணக்கைப் பார்த்துக்கொண்டிருந்த டேனியல்பெரியநாயகத்திற்கு பத்து தடவை கூட்டியும் டேலி ஆகாத மன்த்லி ஸ்டேட்மெண்டை பதினோராவது தடவையாகக் கூட்டிக்கொண்டிருந்தபோது, குணசீலியம்மாளின் ஆங்காரக் குரல் கேட்டது. அந்தத் திடுக்கிடலில் கூட்டி வைத்திருந்த டோட்டல் மறந்துவிட்டது. இனி மறுபடியும் முதலிலிருந்து தொடங்க வேண்டும். மூக்கின் நுனிக்கு நழுவிக் கொண்டிருந்த கண்ணாடியைக் கழட்டிக்கொண்டே,

“ஏண்டி எரும மாடு மாதிரி கத்தறே… மனுசன் ஒக்காந்து வேலபாத்துக் கிட்டிருக்கானேன்னு… அறிவிருக்கா…”

“ஆமா… எம் மேலே பாய்ங்க… அந்த தடிப்பயல கண்டிக்கத் துப்பில்ல…”

“கடசி காலத்தில உசிர எடுக்க பொறந்திருக்கு அது…” என்று சொல்லிவிட்டு, ஈஸி சேரில் சாய்ந்தவர் தலை வலிக்கிற மாதிரி உணர்ந்தார். உடனே,

“குணா… கொஞ்சம் காபி இருந்தா கொடேன்… தலைய… வலிக்கி…”

குணசீலியம்மாளுக்கு இன்னும் கோபம் தீரவில்லை. மெல்ல ஆடி அசைந்து கொண்டே கோபத்துடன்,

“எடுப்பு எடுத்த முடிவான்… வரட்டும்…” என்று முணு முணுத்துக்கொண்டே உள்ளே போனாள்.

டேனியல் பெரியநாயகம் அப்படியே நெற்றியில் கை வைத்த படி ஈஸிசேரில் சாய்ந்து கொண்டார். ரிடையர் ஆன பிறகாவது நிம்மதியாகக் காலத்தைக் கழிக்கலாம் என்று ஒரு காலத்தில் நினைத்திருந்தார். ஆனால், இப்போது அவர் வேலை பார்த்து ரிடையரான நெடுஞ்சாலை பராமரிப்புத் துறையிலேயே தினசரி சம்பளத்துக்கு என்.எம்.ஆராக வேலை பார்த்தார். மூத்தவன் ஞானராஜுக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்கவில்லை. அவன் பெட்ரோல் பங்க் ஒன்றில் மாசம் இருநூத்தம்பது ரூபாய் சம்பளத்தில் இருந்தான். நடுவான் ஜெபராஜ் காலேஜில் படித்துக் கொண்டிருந்தான். கடைசியில், அவர் எதிர்பாராமல் பிறந்த ஏசுராஜ் பள்ளிக்கூடத்தில் அஞ்சாவது படிக்கிறான். போன வருடம் அவருடைய மகள் ஜுலியட் சசிகலாவை கட்டிக் கொடுத்ததில், பி.எப்., கிராஜுட்டி பணமெல்லாம் புயலில் சிக்கியதுரும்பு போலக் காணாமல் போய்விட்டது. குடும்ப காலட் சேபத்திற்காக அவரும் அவருடைய முப்பது வருட ராஜ விசுவாசத்தைக் காட்டி ஏ.இ.யிடம் மன்றாடி மறுபடியும் சுண்ணாம்பு பெயர்ந்த அந்தக் கறுப்புக்காரைக் கட்டடத்தின் இருண்ட மூலையில் நகல் எடுத்துக்கொடுத்து நம்பர்களை கூட்டிக் கூட்டி சரி பார்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு வாழ்க்கையில் பெரிய ஆத்தாமை ஒன்று உண்டென்றால் அது அவர் ரிடையராவதற்குள் நான்காவது சம்பளகமிஷன் வராமல் போய்விட்டதில் தான். எல்லோரிடமும் இதைப்பற்றி வாய்தீராமல் சொல்லி கடைசியில் எப்போழுதும் சொல்வதைப் போல “எல்லாம் ஏசுவின் கிருபை”என்பார். சொந்த ஊரான திருநெல்வேலியை விட்டு வந்து முப்பத்தஞ்சு வருஷங்களுக்கும் மேலாகிவிட்டது. அவருக்கே அவருடைய பூர்விகம், பால்யகால வாழ்க்கை எல்லாம் அநேகமாக மறந்துவிட்டது. எப்பவாவது அவருடைய ஒரே ஆப்த நண்பரான சுந்தரம்பிள்ளையிடம் பேசிக் கொண்டிருக்கும்போது,

“வேய்… அந்த வாழ்க்கையே தனி சுகம் தான்… சிந்துபூந்துறை அழகும், தாமிரபரணி ஆத்துதண்ணியும், ம்ஹும்… இதென்னஊரா… சவத்துப்பயஊரு… என்னவேய்… தூங்கிட்டீரா…”

அவ்வளவு தான் அதற்கு மேல் ஏதும் சொல்லமாட்டார். மனசுக்குள்ளேயே அசை போடுவார். எப்போதும் ஆபீஸ் விஷயங்கள் தான். ஆபீஸில் அவர் இருந்த நாற்காலிகள் மூன்று தடவை மாற்றப்பட்டன. புதிய நாற்காலிகள் வந்தன. ஆனால், அவர் மட்டும் அந்த இருண்ட மூலையை விட்டு மாறவேயில்லை. காலையில் எட்டு மணிக்கே வந்து மேஜை நாற்காலியெல்லாம் துடைத்து விட்டு ஒரு சுத்து வெத்திலையைப் போட்டு விட்டு வேலையை ஆரம்பிப்பார். இடையில் வெத்திலைச் சாற்றை துப்புவதற்கு எழுந்து வந்தால்உண்டு. சில சமயம் நகல் எடுக்கும் ஆர்வத்திலோ, நம்பர்களைக் கூட்டும் அவசரத்திலோ அதையும் முழுங்கி விடுவார். ஸ்டேட்மெண்ட் மட்டும் டேலி ஆகவில்லையென்றால் பாகவதர் கிராப்பைக் கலைத்து இழுத்து சுருட்டி மடக்கி படாதபாடு படுத்துவார். எழுதி எழுதி பெரு விரலின் உள்ளங்கைப் பக்கம் பேனாவின் வடிவம் பதிந்துவிட்டது. ஆபீஸ் என்றில்லாமல் வீட்டிலும் அதே பைல்கள் தான். ஏ.இ.யின்டி. ஏ. பில் முதற்கொண்டு இவர் தான் எழுதிக் கொடுப்பது வழக்கம். அவருக்குப் பிடிக்காத ஒரு பழக்கம் ஆபீஸுக்கு லீவு போடுவது தான். சனி, ஞாயிறு லீவில் கூட அவர் ஆபீசுக்கு ஒரு தடவையாவது போய் விட்டு வருவார். முதலில் குணசீலியம்மாளுக்கு கொஞ்சம் எரிச்சலாய் இருந்தது. அப்புறம் போகப் போக அவருடைய சுபாவத்தைப் பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டாள்.

அன்று சாயந்தரம் டேனியல்பெரியநாயகம், சுந்தரம்பிள்ளையுடன் வெளியே ஒரு நடை போய் விட்டு வீட்டுக்குள் வந்த போது புல்லாங்குழலின் ப்பூ… ப்பூபூபூ… ப்பூபூ சத்தம்கேட்டது. உள்ளே நடுவான் ஜெபராஜ் கையில் புல்லாங்குழலை வைத்துக்கொண்டு அப்படியும் இப்படியும் உருட்டிப்பெரட்டி ஊதிப் பார்த்துக் கொண்டிருந்தான். டேனியல்பெரியநாயகத்திற்கு புல்லாங்குழலைப் பார்த்ததும் கண்கள் பளிச்சிட்டது. அதற்குள் ஜெபராஜ்,

“யெப்பா… நீ தான் நல்லா புல்லாங்குழல் வாசிப்பியாமே… எனக்கு கொஞ்சம் சொல்லித்தாப்பா… மியூசிக் கிளாசில சேந்திருக்கேன்…”

“ம்… சரி…”

என்றவர் அமைதியாக வெளியே ஈஸிசேரில் உட்கார்ந்தார். வெளியே நிலவு உதித்துக் கொண்டிருந்தது. தெருவின் அரவம் இப்போது ஓயத் தொடங்கியிருந்தது. அவர் மனசில் என்னென்னவோ பழைய ஞாபகங்கள். வாய் தன்னையறியாமல்,

“ஜெபராஜ்”என்றது.

ஜெபராஜ் கொடுத்த புல்லாங்குழலை நடுங்கிய விரல்களால் வாங்கி மெல்ல வாயில் வைத்து, விரல்களால் சுர வரிசையை மூடித் திறந்து ஊதிப்பார்த்தார். முதலில் ஜெபராஜ் ஊதின மாதிரி ப்பூபூ… என்றது. மறுபடியும் ஊதினார். லேசாய் சீரான சத்தம் வந்தது. மீண்டும் மூச்சுவிட்டு ஊதின போது சுர வரிசையில் விரல்கள் தாளமிட ஆரம்பித்தன. கண்களை மூடிக் கொண்டு நிமிஷத்துக்கு ஒரு தரம் மூச்சு வாங்கிக் கொண்டு விடாது வாசித்தார் டேனியல்பெரியநாயகம்.

அமைதியான இரவு. சின்னச் சின்ன இரவுப் பூச்சிகளின் கீச் சொலிவிடாது முழங்குகிறது. தாமிரபரணி சின்ன சிரிப்புடனும், அந்தரங்கமான குசு குசுப்புடனும் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலே நிலவின் வெள்ளையொளி நீரின் மீது பட்டுத்தெறித்தது. அந்த ஒளியைத் தின்ன நீரின் மேற்பரப்பிலிருந்து மீன்கள் துள்ளிவிழும் ‘சளப்சளப் ’என்ற சத்தம் இடையிடையே கேட்டது. அப்போது அந்த இரவின் இழைகளை மீட்டிக்கொண்டு, இசைக்கீற்று

சிந்துபூந்துறை படித்துறையிலிருந்து மிதந்து வருகிறது. நீரில் ரெண்டு கால்களையும் தொங்கவிட்டபடி டேனியல்பெரியநாயகம் உட்கார்ந்திருந்தான்.

அவன் விரல்கள் புல்லாங்குழலின் சுர வரிசையில் தாளமிட தாளமிட புதிய இசை கிளம்புகிறது. அவன் பாதிக் கண்களை மூடி ஆனந்த போதையில் இருக்கிறான். காற்று கலைத்த அந்த சுருண்ட கேசம் அவன் நெற்றியில் விழுந்து கிடக்கின்றது. அவனது புல்லாங்குழலிலிருந்து வந்த இனிய கீதம் தாமிரபரணியிடம் சேதி சொல்கிறது. அந்தச் சேதி நிலவை, மேகங்களை, சிந்துபூந்துறையின் சுற்றுப்புறத்தை நிறைக்கிறது. அந்த இசையில் ஒழுங்கு இல்லை. ஆனால், சுதந்திரமான கற்பனை இருந்தது. அது பெயர் தெரியாத காட்டு மலரின் வன்மையான மணம் போல, காட்டுப் பறவையின் வினோத அழகு போல புதுமையாக இருந்தது. தூரத்தில் நகரத்தின் அடங்கிய ஓசை. அவன் எல்லாவற்றையும் மெய் மறந்திருந்தான். அவனே இசையாக இருந்தான்.

திடீரென மூச்சடைத்த மாதிரி நின்றது இசை. அதுவரை அவர் முகத்தை, முகத்தில் ஊறிய எத்தனையோ உணர்ச்சிகளைக் கவனித்துக் கொண்டிருந்தான் நடுவான் ஜெபராஜ். அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. அப்பாவா இது! தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்ட மாதிரி டேனியல்பெரியநாயகம் இருமினார். கண்களில் கண்ணீர் வரும்படி இருமினார். வேட்டித் தலைப்பால் கண்களைத் துடைத்து விட்டு நிமிர்ந்த போது டேனியல்பெரியநாயகத்திற்குப் பழைய முகம் வந்திருந்தது. ஒன்றும் பேசாமல் நடுவான் ஜெபராஜிடம் புல்லாங்குழலைக் கொடுத்தார். கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டே அவரிடம் ஏதோ கேட்க வந்த நடுவான் ஜெபராஜிடம்,

“ஒழுங்காபடிச்சி, முன்னேறதுக்கு வழியப்பாரு… இதெல்லாம் நமக்கு வேண்டாம்…” என்று சொல்லிவிட்டு இன்னமும் டேலி ஆகாத அந்த மன்த்லி ஸ்டேட்மெண்டை எடுத்து நம்பர்களைக் கூட்ட ஆரம்பித்தார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top