ஜீவனம்

0
(0)

போராட்ட அலை தூக்கி எறிந்ததில், தொலைதூர தலைநகரில் அவனுக்கு மீண்டும் பிரம்மச்சரிய தனி வாழ்க்கை . கவலையால் அலைப்படும் மனதினை ஒருநிலைப்படுத்த கடற்கரைக்குப் போனான்.

எத்தனை கோடி மனங்களின் துயரங்களை வெளுக்கிறது இந்த அலை நுரை! பார்க்கப் பார்க்க மனம் பஞ்சாகிறது. செருப்பைக் கழட்டி ஒரு பைக்குள் பத்திரப்படுத்திவிட்டு நெரு நெரு மணலில் நடக்க நடக்க மணலின் மெதுத்தன்மை இதயத்திற்கு ஒத்தடம் கொடுக்கிறது. மெல்ல நடந்து அலையும் நுரையில் கால் நனைக்கப் போனான்.

நால்வர் அடங்கிய குடும்பம். வித்தியாசமான சூழலில் கடலை நோக்கிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு அமர்ந்திருந்தது. முகத்தில் சந்தோஷ வெளிச்சமில்லை. முகங்கள் இருண்டு கறுத்து சாவின் விளிம்பில் இருப்பது போல் தோற்றம்..

மறுபடியும் அவர்களை உற்றுக் கவனித்தான் எங்கோ பார்த்த முகங்கள்! அதுவும் சமீபத்தில் தான்! ஆம். ரயிலில் அவனோடு மதுரையிலிருந்து பயணித்த முகங்கள். ஊர்ப்பற்று. வேர்ப்பற்று இழுத்தது. அவன் அருகில் போக அவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். அவசர அவசரமாய் நால்வரும் அனிச்சையாய் கண்களைத் துடைத்துக் கொண்டனர்.

அவர்கள் மதுரை பக்கம் ஒரு குக்கிராமத்திலிருந்து பஞ்சம் பிழைக்க சென்னை போவதாகச் சொன்னார்கள். “மழையில்லை. ஆற்றில் தண்ணீர் வரலை! கிணற்றிலும் தண்ணியில்லை. நஞ்சை காய்ந்து புஞ்சையாகி புஞ்சையும் தீஞ்சு வெவசாயப் பொழைப்பே கருகிப் போச்சு சாமி!” சோகத்திலும் கவித்துவமான வெள்ளந்தியான மொழிநடை அவனை உருக்கியது. ரயில் பயணத்தில் அவர்களது உணர்வுகளை அவனிடமும், அவனது போராட்டம் நிறைந்த வாழ்க்கை அனுபவம் அவர்களிடமும் பகிர்ந்து கொண்டது நட்பை ஆழ அஸ்திவாரமிட்டது.

“அப்புனு பரம்பரையா குத்தகைக்கு எடுத்து வெவசாயம் பார்த்து வந்தோம். மழைத் தண்ணி சரியா இல்லாம அஞ்சு வருஷமா நொம்பலப்பட்டுப் போனோம். குத்தகைப் பணம் கொடுக்க வக்கில்லை. ஒரு வாய்க் கஞ்சிக்கும் வழியில்லை. பிறந்த மண்ணில் செத்துச் சுண்ணாம்பா போறதுக்கு டவுனு பக்கம் போனாலும் கூலி வேலை கீலி வேலை பார்த்து சீவனைக் காப்பாத்தலாம்னு மெட்ராசுக்கு வண்டி ஏறினோம்!” என்றவர்கள் வழிநெடுக தங்களது அனுபவங்களை எண்ணங்களை பகிர்ந்து கொண்டே வந்தார்கள்.

தாய், தகப்பன் இருபது வயது வாலிபன், பதினேழு வயது மதிக்கத் தக்க பெண். இந்த நால்வரின் முகத்திலும் வறுமையும் இயலாமையும் வாசம் கொண்டு பெருமூச்சை வெளியேற்றி ‘திக்திடுக்’ பயணம் தொடர்ந்தது.

“…ம் … ஹூம். கெட்டும் பட்டணம் போய்ச் சேரும்பாங்க! அந்த மீனாட்சி தாயும். பதினெட்டாம்படி கருப்பனும் தான் வழி காட்டணும்!” என்றாள் அம்மா.

இரவு வேளை சாப்பாட்டுப் பொட்டலங்களை சக பயணிகள் பிரித்துச் சாப்பிடத் தொடங்கினார்கள். ஒரு அலுமினியச் சட்டியில் துணியால் ‘வேது’ கட்டியிருந்த கம்மங்கூழை இன்னொரு அகலபாத்திரத்தில் ஊற்றி பாட்டிலில் கொண்டுவந்த மோர் கலந்து உப்பு போட்டு அம்மா நொறுங்க கரைத்தாள். வெக்கையான இரவில் கம்மங்கூழின் மணம் மனதை ஈர்த்தது, எச்சிலை ஊற்றெடுக்கச் செய்தது. அம்மா, அவர்களுக்கு ஆளுக்கொரு டம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள். மோர் மிளகாய். கடித்துக்கொண்டு முகம் குளிர அவர்கள் குடிக்கும் லாவகம் அவன் வெட்கத்தைவிட்டு ஒரு டம்ளர் கேட்டு வாங்கிக் குடித்தான் தேவாமிர்தமாக இருந்தது. தொண்டை குடலெல்லாம் கமகமப்பும், ஜிலுஜிலுப்பும்! அவனது பொட்டலத்தை அவர்களிடம் கொடுத்து விட்டு இன்னொரு டம்ளர் கேட்டு வாங்கிச் சாப்பிட்டான்.

அந்தக் கிராமத்து வெள்ளை உள்ளங்கள் அவனை ஈர்த்து மனதில் நேசத்தைப் பதியம் போட்டது. அவன் இடப்பெயர்வில் வருகிறான். பணியில் சேர்ந்தபின் தான் தங்க ஜாகை தேட வேண்டும். அதுவரை சங்க அலுவலகம்தான் புகலிடம். அதனால் அவர்களுக்கு விலாசம் தர இயலவில்லை . அவர்களும் ஏதாவது வேலை கிடைத்த இடத்தில் தங்குவது என்ற முடிவில் இருந்ததால் விலாசம் கொடுக்க வழியில்லை. அன்பொழுக பரஸ்பர நம்பிக்கை யோடு சந்திப்பதாக ரயில் நிலையத்தில் பிரிந்தார்கள். இப்போது தான் ஒருவாரம் கழித்துச் சந்திக்கிறார்கள்.

அதிர்ச்சியில் இருந்து மீண்ட அவர்களில் அந்த அம்மா “ அப்புனு. என் ராசா. வேலையில் நல்லபடியா நீங்களாச்சும் சேர்ந்திட்டீங்களா, ஊருக்கு தங்கச்சிக்கு காய்தம் போட்டீங்களா?” பாசத்தோடு கேள்விகளை அடுக்கினார்.

அவர்களது முகத்தில் தெரிந்த விரக்தி இருட்டை, அதன் முடிவை யூகித்த அதிர்ச்சியிலிருந்து அவன் இன்னும் மீளவில்லை!

“சரிம்மா. அய்யா என்ன ஏதாவது வேலை கிடைச்சுதா? எங்கே தங்கி இருக்கீங்க? ஏன் ஒரு மாதிரியா இருளடிச்ச மாதிரி இருக்கீங்க!” அவன் கேட்க கேட்க அவர்கள் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென உருண்டு ஓராயிரம் சோக அனுபவங் களைச் சொன்னது.

“என்ன அய்யா ஆச்சு? நடந்ததைச் சொல்லுங்க!” அப்பாகாரர் சொன்னார். “என்ன தம்பி. பட்டிணத்துக்கு வந்தது புத்தி கொள் முதலாப் போச்சு! ஒரு வேலையும் கிடைக்கல. மூட்டை தூக்கி பிழைக்கலாம்னா.. அதுக்கும் வழியில்லை! அதுக்குன்னு ஒரு சங்கம் அமைப்புன்னு வச்சுகிட்டு புதுசா வர்றவங்களை விடமாட்டேங் கிறாங்க! கட்டட வேலை. சித்தாளு. எடுபிடி வேலைன்னு போனா அங்க காண்ட்ராக்ட்காரங்க அவங்களைச் சேர்ந்த ஆளைத்தான் வேலைக்கு வச்சுக்குவாங்களாம்! வேலையும் கிடைக்கல!

தண்ணியை குடிச்சுகிட்டு எங்கிட்டாவது கோவிலு கோவுர வாசல் மறைவில நொடக்குவோம்னு பார்த்தால் கோயில்ல கொஞ்சம்கூட விடாம அத்தனையும் இரும்புக் கேட்டுப் போட்டு மூடிவச்சிருக்காங்க! மூடின கடைத் தாவாரத்தில் படுக்கலாம்னா ரவுடிகள்கிட்ட இருந்து இந்தக் குமரியை பாதுகாக்கிறது பெரும்பாடா இருக்கு! கண் அசந்தா போதும் கார்த்திகை மாச நாயாட்டம் சுத்தி, சுத்தி வர்றானுங்க.

கையில இருந்த தானியம் தவசு காசெல்லாம் கரைஞ்சு போச்சு. ஊர் திரும்ப வழியில்லை. ஊருபோய்தான் என்ன பண்றது. இப்படியே இந்த சமுத்திரக்கரையில முடிச்சுக்கிட வேண்டியதுதான்.

பெரியவர் சொல்லச் சொல்ல மற்றவர்கள் மூவரும் தேம்பித் தேம்பி வழி மொழிந்தார்கள். மகள் தாவணியில் முகத்தை மூடிக் கொண்டு கேவினாள். மகன் அழவும் முடியாமல் அழாமலிருக்கவும் முடியாமல் தடுமாறினான். அவள் நிலையும் அப்படித்தான் இருந்தது.

அப்பாகாரரின் இடுப்பில் ஒரு பாட்டில் துருத்திக் கொண் டிருந்தது. அவர்கள் எதிர்பாராமல் விருட்டென்று அதைப் பிடுங்கினான். பாலிடால் விஷம்! கடலில் எறிந்தான். கரைக்கு ஓடி வந்த ஓர் அலை அதை எடுத்துக்கொண்டு வேகமாய் கடலுக்குள் ஓடி மறைந்தது.

“இங்க பாருங்க. முகத்தை தொடச்சுட்டு என் கூட வாங்க! என் கூடவே இன்னைக்கு ஒரு நாளைக்கு சங்க ஆபிஸ்ல தங்குங்க! நாளைக்கு ஏதாவது வழி செய்வோம்! சாகிறது பெரிசல்ல! வாழ்ந்து காட்டறது தான் பெரிசு! வாங்க போவோம்!”

கடலலைகள் ஹோவென்று கூவி ஆமோதித்தன. அவர்கள் அவன் பின் தயங்கித் தயங்கி நடந்தார்கள். அருகிலுள்ள ஒரு கையேந்திபவனில் இட்லி வாங்கிக் கொடுத்தான். அவர்களது முகங்களில் ஜீவகளை மீண்டது.

மறுநாள் அவன் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு அவர்களை அழைத்துக்கொண்டு சங்கத்தினர் மூலம் இரண்டு இடங்களில் விசாரித்தான். உடனடியாக வேலை கிடைக்கவில்லை இருநாள் தாமதமாகும் போலிருந்தது.

அவனுக்கு திடீரென்று ஒரு யோசனை மின்னியது! ‘கடுமையான சென்னை வெப்பத்தில் காய்ந்து போன மக்களுக்கு குளிர்ச்சியான கம்மங்கூழை அறிமுகப்படுத்தினால் என்ன…?’

யோசனை மறுநாள் செயலானது. ரிக்ஷாக்காரர்கள், ஆட்டோ காரர்கள். பலவகை பாதசாரிகள் கடற்கரை நோக்கி போகும் அந்த பேருந்து நிறுத்தத் திட்டில் ஒரு ஸ்டால் உருவானது. புதிய மண் பானையில் குளிர்ந்த ஐஸ்மோர் விட்டு கரைத்த கம்மங்கூழ்! அந்தப் பானையை பார்க்கவே வெகு லட்சணமாக இருந்தது. விபூதிப்பட்டையும் நடுவில் குங்குமப் பொட்டும் அதன் இரு பக்க வாட்டிலும் விபூதியால் நிலாப் பிறையும் சிலுவையும் ஒளிர்ந்தன. பசி எல்லா மதத்திற்கும் பொதுவான ஒன்றுதான்னு சொல்வது போல் இருந்தது.

ஒரு கிளாஸ் கம்மங்கூழ் ஒரு ரூபாய் வெஞ்சனமாய் ஊறுகாய்த் துண்டு மோர் மிளகாய் வத்தல்.. வேண்டியவர்க்கு வேண்டியது எடுத்துக் கொள்ளலாம்!

“சார் வாங்க! சார் வாங்க!

உடல் உஷ்ணத்தைத் தணிக்கும் கம்மங்கூழ்!

குடல் புண்ணை ஆற்றும் கம்மங்கூழ்!

வாங்க அய்யா வாங்க

வாங்கிச் சாப்பிட்டு பாருங்க!”

மகன் கிராம மொழியும் விடாமல். டவுன் மொழியும் அண்டாமல் கலந்து அழைத்தான்! சுத்தமான கண்ணாடி கிளாஸில் கரண்டியில் முகந்து ஊற்றிக்கொடுத்தாள் பெண், பெரியவர்கள் மேற்பார்வை.

வியாபாரம் களைகட்ட ஆரம்பித்தது. அவர்கள் அவனை தெய்வமாகப் பார்த்தார்கள். நான்கு சக உயிர்களை காப்பாற்றிய ஆத்ம திருப்தி அவனுக்கு!

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top