சோம்பல்

0
(0)

சைக்கிளைத் துடைக்க வேண்டும். அழுக்கும் தூசியும் பிடித்து கலர் மாறிவிட்டது. துடைத்து ரொம்ப நாளாகிறது. ஒரு மாதமோ இரண்டு மாதமோ இருக்கும். கூடுதலாகவும் இருக்கும்.

மழையில் தெரித்த சகதி ரிம்மிலும் செயின் கவரிலும் காய்ந்திருக்கிறது. மழை பெய்தே இரண்டு மாதம் ஆகிறது. அப்போது கூட துடைக்கவில்லை. சீட்டை ஒரு தட்டு தட்டி விட்டு உட்கார்ந்ததுதான்.

அதன் பிறகு ஒரு முறை ரேசன் கடைக்குப் போன ஞாபகம். காற்றில்லாமல் உருட்டிக் கொண்டே போய், வரும் போது ஏறி வந்தது. அது போன மாதமா? அதற்கு முந்திய மாதமா? ஆனால் அப்போதும் துடைத்த நினைவில்லை.

சைக்கிளை எடுப்பதே குறைந்து விட்டது. எப்போதாவது தேவைக்கு மட்டும் எடுப்பது. அப்போதெல்லாம் காற்று இருக்காது. உருட்டிக் கொண்டே போக வேண்டும். இதற்குச் சள்ளைப்பட்டு எடுப்பதே இல்லை .

ஆபீஸ் குவார்டர்சுக்கு வந்த பிறகு இப்படி ஆகிவிட்டது. சைக்கிள் ஏறி ஆபீசுக்குப் போக வேண்டியதில்லை ஆபீஸ் காம்பவுண்டிலேயே வீடு. ஊருக்குள் போவது என்றாலும் போவதற்கு அவசியம் வராது. இராசிங்காபுரம் சின்னக்கிராமம். ரேசன் கடையும் லைப்ரரியும் இருக்கிறது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தை மாலை நேரத்தில் நடந்து போகத்தான் மனசு வரும். சைக்கிளிலேயே போகலாம் என்றாலும் காற்று இருக்காது. உருட்ட வேண்டும் உருட்டிக் கொண்டு நடப்பதற்கு உருட்டாமலே நடந்து விடலாம். டயர் பஞ்சரா? சைக்கிள் ரிப்பேரா என்று போகிறவர்களும் வருகிறவர்களும் பார்க்க வேண்டியதும் கேட்க வேண்டியதும் இருக்காது. சகதியும் தூசியும் ஒட்டி ஊருக்குள் உருட்டிக் கொண்டு போவதும் நன்றாக இல்லை.

அல்லி நகரத்தில் இப்படி இல்லை. வீடு அல்லி நகரத்தில், ஆபீஸ் தேனியில். சைக்கிள் அவசியம் வேண்டும். எங்கு போவதானாலும் சைக்கிளோடு தான் வீட்டை வீட்டே இறங்குவது. காற்று புல்லாக இருக்கும். துடைத்துத் துடைத்து பச்சைக் கலர் பளபளக்கும். பார்வையை இழுக்கும்.

வாங்கியது செகண்ட் ஹேண்டில் தான். டைனமோ, கண்ணாடி பாரில் ஒரு சின்ன சீட் எல்லாம் வாங்கி புதிதாக மாட்டி, இரண்டு சக்கரத்திலும் கலர் பூ கட்டி ஓட்டும் போது தங்கவேலுக்கே நம்ப முடியவில்லை. இதை செகண்ட் ஹேண்டில் வாங்கிக் கொடுத்ததே அவர் தான். புதிதாகப் பூட்டியது போல் கண்ணைப் பறித்தது. சுற்றிச் சுற்றி வந்து மூக்கில் விரலை வைத்தார்.

இதில் காமுத்துரைக்கும் உதயகுமாருக்கும் பொறாமை. காமுத்துரை புதிதாகத்தான் சைக்கிள் பூட்டினார். பூட்டி ஒரு மாதம் புதிதாக இருந்தது. அவர் வீட்டில் ஐந்து பேர். ஒருவர் மாற்றி ஒருவர் ஓட்டிக் கொண்டிருப்பார்கள். ஒய்வு என்பது சைக்கிளுக்குக் கிடையாது. வாய் இருந்தால் அழுதிருக்கும். படாதபாடு படுத்துவார்கள்.

இவர் போய் வந்து நிறுத்தினால் இவர் அப்பா வருவார். அல்லது தம்பிகளில் யாராவது வருவார்கள். அப்பாவாக இருந்தால் எங்க போய்ட்ட? எவ்வளவு நேரமாக் காத்திருக்கிறது? என்று சொல்லி எடுப்பார். தம்பியாக இருந்தால் ஒன்றும் சொல்லமாட்டார்கள். இந்தா வந்துர்றேன் …… என்று மட்டும் திசையைப் பார்த்து சொல்லிவிட்டு உருட்டிக் கொண்டே போய் ஒரே தாவலில் நச் சென்று உட்கார்வார்கள். கிரீச் சென்று சீட் கத்தும்.

இதில் துடைப்பது, எண்ணை போடுவது என்பதற்கெல்லாம் நேரம் கிடைக்காது. காமுத்துரை மட்டும் முனகிக் கொள்வார். அதுவும் இந்த சைக்கிளைப் பார்த்தால் தான் அந்த முனகலும் வரும். ஒரு நாளைக்கு ஒரு தரமாவது இந்த சைக்கிளைப் பார்த்து இப்படி வைத்துக் கொள்ள முடியவில்லையே, என்று சொல்லாவிட்டால் அவருக்கு நிம்மதி இருக்காது.

அவர் சைக்கிள் பழசாகி, அங்கங்கே உரசி பெயிண்ட் உதிர்ந்து, பார்க்கவே பரிதாபமாக ஆகிவிட்டது. இந்தப் பாடுபடுத்தினால் அது என்ன செய்யும்?

இவரிடமாவது ஒரு சைக்கிள் தான். உதயகுமார் இரண்டு வைத்திருக்கிறார். ஆனால் இவர்களைப் போல் இல்லை. ஒரே சைக்கிளை இப்படி ஐந்தாறு பேர் ஒட்டுவதில்லை. இதில் ஓசியும் சேர்த்தால் ஏழெட்டுப் பேர். இவர் ஒருவர் தான் ஓட்டுவார். இவர் ஒன்றும் இவர் அப்பா ஒன்றும் வைத்துக் கொள்வார்கள்.

ஆனால் இரண்டு சைக்கிளும் ஒரே நேரத்தில் ஓடி யாரும் பார்த்ததில்லை. ஒன்று ஓடினால் இன்னொன்று ரிப்பேரில் இருக்கும். அது சரியாகி வந்தால் இது கடைக்குப் போய்விடும். பால்ரஸ் போட, ரிம்மை நிமிர்த்த, போக்ஸ் மாட்ட, பஞ்சர் ஓட்ட என்று சைக்கிளில் என்னென்ன இருக்கிறதோ அத்தனையிலும் ரிப்பேர் வரும்.

ஒரு சாமானை சரியாக்கினாலும் அல்லது புதிதாகவே மாற்றினாலும் அடுத்த சாமானில் ரிப்பேர் வந்து விடும். இது மாற்றி அது, அது மாற்றி இது என்று ஒயாத வேலை தான். பதிவாக ரிப்பேர் செய்யும் ஆளுக்கு இதுவே போதும், அந்தப் பதிவுப்படி சைக்கிள் வராமல் இருந்தால் என்ன? ஏது? என்று பார்க்க அவரே வந்து விடுவார் அப்படி ஒரு வழக்கம்.

இப்படி சைக்கிள் ரிப்பேருக்குப் போகும்போது துடைப்பதும் எண்ணை போடுவதும் உண்டு. உதயகுமாராகச் செய்ததில்லை. ரிப்பேர் வராமல் சைக்கிள் ஓடுவதே இவருக்கு ஆச்சரியம். இப்பத்தான் டயர் வாங்கிப் போட்டேன். இருபத்தைந்து செலவு….. பால்ரசை மாற்றினேன் ஆறு செலவு, என்று இந்தச் சைக்கிளைப் பார்க்கும் போதெல்லாம் சொல்லுவார். ஹேண்டில் பாரை பிடித்து இரண்டு திருப்புத் திருப்பி, கண்ணாடியில் முகம் பார்த்து, நாக்கைத் துருத்தி, ஈக்காட்டி விட்டு சைக்கிளை ஒரு தட்டு தட்டுவார் அவர் பொறாமையை இப்படி காட்டுவார்.

காமுத்துரை கண்ணாடியெல்லாம் பார்க்க மாட்டார். ஆள் அட்டக் கருப்பு. பவுடர் போட்டதை சரியாகப் போட்டிருக்கிறோமா என்று மட்டும் பார்த்துக் கொள்வார். இதை மற்றவர்கள் கவனிக்கிறார்களா என்று கவனித்து விட்டுத்தான் கண்ணாடியில் முகத்தைக் காட்டுவார்.

இதில் பழக்கடை கருப்பையாவுக்கு மட்டும் பொறாமை கிடையாது. அவர் நல்லவர் வீட்டுக்குப் போவதற்கும், பழக்கூடை கொண்டு வருவதற்கும் என்று ஒரு சைக்கிள் வைத்திருக்கிறார். அது எந்தக் காலத்தில் செய்ததோ! பெயின்டெல்லாம் போய் துருவேறி கருப்பாக நிற்கும் ஏறி உட்கார்ந்தால் வீடு போய்ச் சேருமா என்று கூட நினைக்கத் தோன்றும். யாரும் ஒசி கேட்கமாட்டார்கள். அதை பூட்டியும் வைத்துக் கொள்வார். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொல்வார்கள். அப்படி இருக்கும்.

அந்த சைக்கிளை வைத்துக் கொண்டு மற்ற சைக்கிளைப் பார்த்து பொறாமைப் படவா முடியும்? பொறாமை இல்லாமல் இந்தச் சைக்கிளைப் பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொல்லக் கூடியவர் இவர் ஒருவர் தான்.

அப்படி இருந்த சைக்கிள் இப்போது இப்படி நிற்கிறது. சைக்கிள் அதே சைக்கிள் தான். தூசு துரும்பெல்லாம் ஏறி அடையாளமே மாறிவிட்டது. துடைத்து விட்டால் பழைய சைக்கிளை, அதாவது பழையபடி அந்தப் புதுச் சைக்கிளைப் பார்க்கலாம். முன் சக்கரத்திலிருந்து பின் சக்கரம் வரை, சீட்டிலிருந்து ஸ்டாண்டுவரை துடைக்க வேண்டும்.

முதலில் சகதிதான் துணுக்காகத் தெரிகிறது. துடைத்தால் போகாது. கழுவ வேண்டும். முன் சக்கரம், பின் சக்கரம் செயின் கவர் பெடல் எல்லா இடமும் கழுவ வேண்டும். மற்ற இடங்களில் சகதி இல்லை. தூசி ஒட்டி இருக்கிறது. அந்தத் தூசியும் சகதி மாதிரித்தான் அப்பி இருக்கிறது. கழுவினால் தான் போகும். சைக்கிள் முழுவதையும் கழுவ வேண்டி வரும். அதற்கு வாசலில் நிறுத்தி இரண்டு வாளி தண்ணீர் எடுத்து, மாட்டைக் குளுப்பாட்டுவது போல் குளுப்பாட்டினால் தான் முடியும். சோப்பு போட்டாலும் நல்லது தான்.

அடுத்து நன்றாக ஈரம் போகத் துடைத்து, இடுக்கெல்லாம் துடைத்து சுத்தப்படுத்த வேண்டும். ரிம்மையும் போர்க்லையும் துடைக்காவிட்டால் துருப்பிடித்து விடும். துடைத்து எண்ணை தடவினால் இன்னும் நல்லது. இதற்கே ஒரு மணி நேரம் ஆகும்.

ஹேண்டில் பார், சைக்கிள் பார், கேரியர் என்று எல்லா இடத்தையும் துடைத்து, பாலீஷ் ஏற்ற இரண்டு பக்கமும் துணியை இழுக்க வேண்டும். விறு விறு என்று இழுத்தால் பளபளப்பு வரும். பார்களையெல்லாம் கழுவுவதற்கு முன்பு தூசியையும் கழுவிய பிறகு ஈரத்தையும் துடைக்க வேண்டும். ஒரு பாடு வேலை தான். துடைத்து நிறுத்தினால் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

செயினுக்கும் சக்கரத்திற்கும் எண்ணை போட்டு சுற்றி, குடத்திற்கும் எண்ணை போட்டு சாய்த்து ரிம் போக்கெல்லாம் எண்ணைத் துணியால் தடவினால் தான் சைக்கிள் கெடாமல் இருக்கும். மினுமினுப்பும் வரும்.

புல் செயின் கவராக இருக்கிறது. உள்ளே எப்படியோ! தெரியவில்லை. அதையும் கழற்றி உள் பக்கமும் துடைத்தால் நல்லது தான் அதற்காக தனியே துடைக்க முடியாது. விட்டுப் போகும்.

பிரேக் கண்ணாடி டைனமோ சீட் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து துடைக்காவிட்டால் விட்டுப் போகும். மறுபடியும் துடைக்க முடியாது. இதற்கே இரண்டு மணி ஆகிவிடும். ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. பாதி துடைத்தும். துடைக்காமலும் விட்டால் அசிங்கமாக இருக்கும். ஒரேயடியாய் உட்கார்ந்து ஒரே மூச்சில் முடித்தால் தான் முடியும். அதற்கு இரண்டு மூன்று மணி நேரமாவது ஒதுக்க வேண்டும்.

பழைய துணி எடுத்து ஆயில் கேனைத் தேடி எடுத்து கட்டிங் பிளேயர் ஸ்பானர் இருந்தால் இன்னும் வசதி எல்லாவற்றையும். டைட் வைத்து விடலாம். ஆனால் வேலை தான் கூடிக் கொண்டே போகிறது. எதையும் விட முடியாது. ம்…… இப்போது நேரமில்லை அப்படியே துடைத்தாலும் வெளியே எங்கும் போகப் போவதில்லை. துடைத்து மறுபடியும் மூலையில் தான் வைக்க வேண்டி வரும். தூசியும் துரும்பும் திரும்பவும் ஒட்டும்.

அதற்காக இப்படியே விட்டால் சைக்கிள் கெட்டுப் போகுமே. ஆனால் அவசரமில்ல. இப்போது ஆரம்பிக்க முடியாது. செய்தால் முழுவதும் துடைக்க முடியாது. சிப்ட்டுக்குப் போக வேண்டும். அசதியாகவும் இருக்கும். ஏதாவது லீவு நாளாகப் பார்த்த ஓய்வாக இருக்கும் போது துடைத்து விடலாம். எப்படியும் துடைக்க வேண்டும்.

என்ன இது? … இருட்டி விட்டதே! மணி என்ன? ஏழா? அடேங்கப்பா…! நேரம் போனதே தெரியவில்லையே, உட்கார்ந்த நேரத்தில் துடைக்க ஆரம்பித்திருந்தால் இன்னேரம் இரண்டு சைக்கிள் துடைத்திருக்கலாம். யோசனையில் உட்கார்ந்து வெட்டிய பொழுதாய் போய் விட்டதே…ச் சேய் ….

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top