சைக்கிள் ஓட்டியும் நானும்

5
(1)

அந்தச்சிறுவன் வெளிர்நீலநிற சைக்கிளில் மறுபடியும் வந்து இறங்கினான் சரியாக பிரேக் போடத் தெரியாமல் கால்களால் தரையைத் தேய்த்து நின்றான். அந்த சைக்கிள் அவனது சகோதரியுடையதாக இருக்க வேண்டும். அவன் ரெம்பவும் குட்டையாக இருந்தான்.

 

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டதும், இடுப்புக்கு கீழே இறங்கிய .ட்ரவுசரை மேலே ஏத்தி விட்டுக்கொண்டு மூக்கை உறிஞ்சிய வண்ணம் கடைக்கு வந்தான்.

 

“ண்ணே ,, பிச்சாலு மாஸ்டர் வந்தாரா.. ண்ணே, “ கடையின் முன்புறம் கிடத்திக் கிடந்த நீள பெஞ்சின் முனையினைத் தொட்டபடி நின்று கேட்டான். ரயில் தண்டவாளம் போல இணை கோடாக எதிர்புறம் இன்னொரு பெஞ்ச் கிடந்தது. அதில் உட்கார்ந்து ஸ்டாலில் சாய்ந்தபடி இன்றைய பேப்பரை வாசித்துக் கொண்டிருந்தார்; பிச்சாலு மாஸ்டர். “ 1.76 லச்சம் கோடிய என்னாண்டுதே எண்ணி அடுக்கி வச்சிருப்பாங்கெ…? “ – என்று கேட்டுக் கொண்டிருந்த போது , சிறுவனின் குறுக்கீடு.

 

நான் ஏதும் பேசாமல் அவரையே பார்த்தேன். “ நாலு நாளா அலயிறான்.. “ – என்றேன் மெதுவாக.

 

“ என்னா விசியம்..? “ – பிச்சாலு கேட்டார்.

 

“ எங்க அம்மா பாத்துட்டு வரச்சொல்லுச்சு.”

 

“ யாரு ஒங்க அம்மா.. ? “

 

“ சமயலு சேகரு பொண்டாட்டி. “

 

அச்சிறுவனின் அந்த பதிலுரைக்குப் பிறகு பிச்சாலு கொஞ்சம் பேச்சில் தேங்கினார்.

 

“ வேலைக்கிப் போன கூலி தரலியாம் அம்மா வையிது.. ! “

 

அதற்குமேல் அவர்களுக்கிடையில் குறுக்கிடக் கூடாது என முடிவு செய்தேன். எல்லைமீறல் நாடுகளுக்கு மட்டுமல்ல நாக்குகளுக்கும்தான். நட்க்கிற நாடகத்தைப் பார்க்க வேண்டியதே நமக்கான வேலை. இந்த பார்வையாளத்தனமே, பஜாரில் இந்த ஏழெட்டு வருஷங்களாய் கடை நீடித்திருக்க செய்திருக்கிறது.  சாதாரண பெட்டிக் கடைதான், பீடி சிகரெட், சர்பத், வாழைப்பழம்.. தற்போது சிம்கார்டு, ஈ சி ஏற்றுகிற வியாபாரம். ஓரளவு திருப்தியான பிழைப்புத்தான். அடுத்தாளிடம் வேலைக்குப் போய், இந்தச் சிறுவனைப் போல கூலிக்கு அழைகிற பாடு இல்லை

 

” பத்துமணிக்கு வா..! ‘ என்றார் பிச்சாலு.

 

“அப்ப வந்திடுவாராண்ணே….! “ – என்ற அந்த பதிலில்தான் எனக்கு அச்சிறுவன்மேல் பரிதாபமும், பிச்சாலுக்கு வெளிச்சமும் கிடைத்தது.

 

“ ம்…ம். வந்திருவார்.. ! “

 

பிச்சாலுவை பார்த்திராத அச்சிறுவன், “ கொஞ்சஞ் சொல்லுங்ண் ணே.. ‘சேமத்துக்கு’ கட்டணுமாம் அம்மாவ வந்து சண்ட போடுறாங்க..”- என்றான் பரிதாபமாக.

 

“ ங்கொப்பாவ எங்கடா..? “

 

“ வெளியூர்ல ’தங்கல்’ வேலைக்குப் போயிருக்காரு.. “

 

“ அவரு, பத்துமணிக்கு மேலதான் வருவாரு.. அப்பவந்து பாரு. “- கொஞ்சமும் தயக்கமில்லாமல் பதில் சொன்னார் பிச்சாலு.

 

பிச்சால் ஒரு சமையல் மாஸ்டர். ஊருக்குள் நல்ல மாஸ்டர் என்கிற பெயரும் உண்டு. அதனால் அவரது வேலைக்கு எப்பவும் ஆள் தட்டுப்பாடு வராது. ’ அஞ்சு பத்து கொறச்சுக் குடுத்தாலும் வேலத்தளத்திலயே ச்ம்பளத்தக் குடுத்துடுவார் ‘ என்பதுதான் பேச்சாய் இருக்கும். இங்கே மட்டும் எப்படி..?

 

“ ஸ்கூலுக்குப் போகணும் ணே, மதியானத்துக்கு வந்தா அந்த அண்ணே இருப்பாரா..? “.- தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டான்.

 

“ சாயங்காலத்துக்கு வாடா.. “

 

“ சரி, மத்தியானமே வாரே…! சேமத்துக்கு கட்டணும். அவரு வந்தா வாங்கி வையிங்க ணே “

 

“ ரெம்பக் கூடுதலாப் பேசுற.. ! ”

 

சைக்கிளை உருட்டிக் கொண்டு புறப்பட்டான் அச்சிறுவன்.

 

“ சைக்கிளு ஒசரம்கூட இல்ல.. இவெ ஒராள்னு , கடனக் கேட்டு அனுப்பிச்சிருக்காக பாரு.. ! “ – தலையை குலுக்கி பிரமையிலி ருந்து விடுபட்டு , மடியிலிருந்து பீடி எடுத்துப் பற்றவைத்தார்.

 

“ யே நேத்து புருசனும் பொண்டாட்டியும் வந்திருந்தாக தெரியுமா.”..- என்றேன்.

 

“ ஒரு முன்னூறு ரூவாப்பா.. அதுக்கு எம்பிட்டுக் கேவலம்பாரு.” அலுப்பாய்ச் சொன்னார் பிச்சாலு.

 

அந்த நேரம் ஏர்டெல் கார்டு ஒருஆள் வந்தான். பிச்சாலுவின் கையிலிருந்த பேப்பரைக் கண்டதும் அவனுக்கு ஒரு கேள்வி பிறந்தது. கேட்டான், “ ஏம் பிச்சால்ணே தேர்தல் கூட்டணி யெல்லா முடிவாயிருச்சா..” – சாவகாசமாய்க் கேட்டான்.

 

“ ம்.. ? “ என்று  அவனை முறைத்தவன், ”கருணாநிதிகிட்ட பேச்சு முடிச்சாச்சு.. அம்மாகிட்ட சாயங்காலம் பேசணும், பேசிட்டு வந்து சொல்றேன்… “ என்று மறுபடியும் பேப்பரை மேயலானார்.

 

“ எப்பவும் ஒங்களுக்கு எகடாசிதே…”  என்றபடி கிளம்பினார் அவர்.

 

’நேரம் சரியாக பத்துமனி நாற்பது நிமிடம்’ என்று கோடை பண்பலை வானொலி சொல்லிக் கொண்டிருந்தபோது, வேகவேகமாய் ஓடிவந்து கடையின் ஸ்டாலைப் பிடித்து நின்றான் அச்சிறுவன்.

 

“ பிச்சால் ணே வந்தார் ங்களா..? “ நெற்றியெல்லாம் வியர்வை அரும்பி இருக்க, பள்ளிக்கூட உடுப்பில் இருந்தான். “ ஸ்கூல் ரீசஸ் பிரியட்..” – அவனாகவே எனது கேள்வியை யூகித்து பதில் சொன்னான்.

 

இப்பொழுது கடையில் பிச்சாலு இல்லை. வேறு சிலர், புகைத்துக் கொண்டிருந்தன்ர்.

 

பிச்சால் சம்பந்தமாக என்ன சொல்லுவது என குழப்பமாய் இருந்தது. அவர் இல்லை என்கிற உண்மையைத்தான் சொல்லப் போகிறோம். இருந்தாலும் சற்றுமுன் அவரை வைத்துக் கொண்டே நாடகமாடியது நெஞ்சை அறுத்தது. பாவம் சிறுபயல்.

 

“என்ன செய்ய தலைவா, ஒங்கள மாதிரி ஏவாரம் பாத்துக்கிட்டு இருந்தம்னா வித்து வரவுல லாவத்தப் பாத்து, செலவு பண்ண வழிவகை இருக்கு, எங்க தொழிலு தேவ்டியாவ காட்டியும் கேவலப்பட்ட பொழப்பு… ஏன்னு கேளுங்க, வேலைக்கு அட்டுவா ன்சு வங்குனம்னா..அதுஎம்புட்டுன்னாலும் பிராந்திக்கடக்காரனுக் குதே.. அதிலயும் செட்டுசேந்துச்சுன்னா.. வாச்சு, செல்லு அடகுதே. அடுத்து, வேலதேதி வரங்குள்ள, பலசரக்கு சிட்ட எழுதிப்போய் குடுக்கும் போது இன்னொரு தவண.. அப்பறம் வேலக்கிப் போற அன்னைக்கி, தீர்த்தம்கட்டாம உள்ள நொழைய முடியாது. இப்பிடி மூணுதரம் நாலுத்ரம் காசவாங்கீட்டா..வேலசெஞ்சு வாரப்ப என்னா மிஞ்சும்.. சொல்லுங்க..! “

 

பரிதாபமாக சிலநேரம் ஒப்பிப்பார். இத்தனைக்கும் அடாதுடியான ஆளும்கிடையாது. யார்வந்தாலும் அன்பொழுகப் பேசுவார். காலை நேரம் கடைதிறக்க வந்து நிற்பார். சில நாட்களில் எனக்கு முன்னதாகவே வந்தாரானால், ஸ்டாலுக்கு அடியிலிருக்கும் பெருக்குமாரை எடுத்து, கடைவாசலை கூட்டிச்சுத்தம் செய்து, பெஞ்சுகளை ஒழுங்குபடுத்தி, பேப்பரை எடுத்து எழுத்துவிடாம்ல் வாசிப்பார். அதோடு விடுவதும் கிடையாது. அவரைக் கவர்ந்த செய்திகள் ஏதேனும் இருக்குமேயானால், பலரிடமும் அதனை திரும்பத்திரும்ப வாசித்துக் காட்டுவார். அவ்ருக்காகவே பேப்பரை மாலைவரை பத்திரப் படுத்தவேண்டி இருக்கிறது

 

அந்தச் சிறுவன் நின்று கொண்டிருக்கும் போதே அவனது தாயாரும் வந்தார்.

 

“ என்னாடா பள்ளீடம் போலீயா.. ? “ – பின்புறமிருந்து வந்த தாயின் குரல் கேட்டு திடுக்கிட்ட சிறுவன், “ பத்துமணிக்கு வருவார்னு சொன்னார்மா.. வந்திட்டுப் போய்ட்டாராம்ல..” என்றபோது, இருவரது முகமும் ஒருசேர வாட்டம் கண்டது.

 

அந்த சித்திரத்தை என்னால் கண்டு சகிக்க முடியவில்லை. பேசாமல் நாமே பணத்தைக் கொடுத்து விடலாமா என்ற எண்ணம் கூடத் தோன்றியது.

 

பெண்பிள்ளை வந்தமையால் கடை பெஞ்சில் அமர்ந்திருந்த வர்களுக்கும் விசயம் லேசாய்க் கசியலாயிற்று.

 

“இம்பிட்டு நேரம் இருந்துட்டு இப்பதான போனாரு.. ஏங்கடக்காரே ஒரு கா மணிநேரம் ஆயிருக்குமா..? ‘- ஒராள் என்னை சாட்சிக்கு இழுத்தார்.

 

“ எங்கியோ ஒருவீட்டுக்கு வளகாப்பு வேலைக்கு பல்ச்ரக்கு சிட்ட குடுக்கணும்னு போனாரு..”

 

“ இத கேக்கலியாண்ணே.. “ அவனது தாயார் இன்னமும் பவ்யம் மாறாது என்னிடம் பேசினார். ஏறுவெயிலில் வந்தமையல் முகத்தில் அலைச்சலின் சோர்வும், கழுத்துப் பிடறியில் விய்ர்வையின் கசகசப்பும் தெரிந்தது.

 

” ப்த்துமணிக்கு வ்ரச்சொன்னார்..மா, நா பத்தரைக்கி வந்தே.. போய்ட்டாரு..! ‘ அந்தச்சிறுவன் பாமரத்தனமாய் தன் தாயிடம் என் குற்றத்தை, தன் குற்றமாய் ஒப்பித்தான்.

 

“ மதியம் வருவார் மா.. உறுதியாச் சொல்றேன்..” எனறேன்.

 

“ புண்ணியமாப் போகும். எங்களுக்காக கொஞ்சம் பேசி வாங்கி வையிங்கண்ணே..”

 

“ இதெல்லாந் தப்பில்லியா.. வேலக்கிப் போனா சம்பளத்த சடார்னு அந்த எடத்துலயே வெட்டி விட்றனும். இப்பிடியா அலய வப்பாக…” – இது பெஞ்சில் அமர்ந்திருந்த முதல் ஆள்.

 

“ பொதுவா சமயல்கார ஆளுகளே இப்பிடித்தான்ப்பா வேலசெஞ்ச எடத்தில காஸ் வாங்காமயா இருப்பாங்க.. தண்ணியப்போட்டு காலிபண்ணீருப்பானுக.. மொதல்ல இந்த சாராயக் கடைகளக் காலி பண்ணாத்தே ஏப்பசாப்பெக பொழைக்க முடியும்…” – இது இரண்டாம் ஆள்.

 

”அப்பறம் எப்பிடி டி வி கெடைக்கும்..? “

 

“ யாரயும் குத்தஞ் சொல்லக் கூடாதுண்ணே.. நாம் பிய்யவா திங்கிறம்..? வேலத் தளத்திலயே கூலிய எண்ணி வாங்கிட்டு வந்திரணும்ணே.. இப்பிடியா நாயா இசிபடுறது.“ – அவனது தாயாரும் சாவகாசமாகவே பேசினார்.

 

“ சரி நீ போ தாயி, பிச்சாலு வந்தா நங்களும் சொல்றோம்.”

 

“ மதியம் இவன அனுப்பிச்சு விடவாண்ணே.. “

 

“ வேண்டாம் மா., ஒரேதா சாயங்காலம் நாலுமணிக்கு மேல வரச்சொல்லு.. சத்தம் போட்டு காசக் குடுக்கச் சொல்றேன். ‘

 

“ பொழுதுக்கு ஒரு செலவா வருதுண்ணே. எனக்காக செரமம் பாக்காம நீங்களே வாங்கி வச்சா நல்லது…” என்றவர், “ஆள் கண்ணுல சிக்க மாட்டேங்குறாரு சிக்கட்டும்..” என்று கறுவினார்.

 

அன்று மதியம்வரைக்கும் பிச்சாலு கடைக்கு வரவே இல்லை. ஒருவேளை சிறுவனுக்காக பயந்து வரவில்லையா.. வேறே வேலைக்கு எங்கும் போய்விட்டாரா.. தெரியவில்லை..

 

மதியச் சாப்பாட்டுக்கு மாற்றிவிட மனைவி வந்திருந்தாள். அவளிடம் பிச்சாலு வந்தால் மேற்படி நபர்களுக்கு பணம் வாங்கி வைக்கச் சொல்லிவிட்டு, வீட்டுக்கு வந்தேன். சாப்பிட்டு டிவி பார்த்துக்கொண்டே கிடந்ததில் லேசாய்க் கண்ணசர, மாலை 4.30 க்கு விழிப்பு வந்தது. முகம் கழுவி சட்டையை போட்டுக்கொண்டு கடைக்குக் கிளம்பி வரும் வழியில் , அந்தச்சிறுவன் சைக்கிளில் எதிரேவந்து என்னை முட்டி நின்றான்.

 

“ என்னாண்ணே கடைக்கிப் போவலியா..? – இன்னமும் சீருடையில் மாறாதிருந்தான்.

 

“ நீ போனியாக்கும்.. “

 

“ போனே.. ஒங்க அம்மா ஒக்காந்திருந்தாங்க..”

 

மனைவியைத்தான் அம்மா என்கிறான். சிரிப்பு வந்தது. ”மாஸ்டர் இருக்காரா.. ?”

 

“ ஆறு மணிக்கு வருவராம்ணே ..”

 

“ அம்மா சொன்னங்களா..!”

 

” இல்ல.. கடைல பேப்பர் படிச்சிகிட்டு இருந்தவங்க சொன்னாங்க..” என்றவன் தொடர்ந்து, ”ஆறுமணிக்கு ட்டீசன் போறப்ப வர்ரேண்ணே..” – பதில் வார்த்தைக்குக் காத்திராமல் கிளம்பினான்.

 

நான் நினைத்தது போலவே, பிச்சாலும் அவரது உதவி ஆட்களும்தான் உட்கார்ந்திருந்தனர். எனக்குக் கோபம் கண்ணில் பொங்கி நின்றது. மனைவியை மாற்றிவிடக்கூட எண்ணமில்லா மல் நேரே பிச்சால் முன்னால் சென்று சத்தம் போட்டேன்.

 

“ நீயெல்லா ஒரு ம்னுஷந்தானா.. ஒரு பச்சப் பயல இப்பிடி அலய வெக்கிறியே… கொஞ்சங்கூட நெஞ்சில ஈரங்கெடையாதா நந்தான்னு சொன்னா தலயவா சீவிருவான்..ஓம் புள்ள இதுமாதிரி அலய சம்மதிப்பியா.. ச்சீ..! “

 

எனது ஆவேசம் அவர்கள் அத்தனை பேரையும் பாதித்திருந்தது. பிச்சாலு உட்பட எல்லோருமே மன்னிக்க கேட்டனர். பிச்சாலு ரெம்பவும் இறங்கிப் பேசினார். சத்தியமாய் இப்போது சிறுவனை தான் கிளப்பிவிடவில்லை என்றார். தனது உதவியாள்தான் அப்படிச் செய்தது என்றும் தணிந்தகுரலில் பேசினார். தொடர்ந்து இன்னும் சிறிது நேரத்தில் ஒருவேலைக்கு அட்வான்ஸ் தொகை வாங்கப்போவதாகவும்,  இன்றுமாலை ஆறுமணிக்கு உறுதியாக அவர்களுக்கு பாக்கியினை தந்துவிடலாமென்றும் சொன்னார்.

 

” இது ஒங்களுக்குத் தேவதானா.. ? உள்ள ஏவாரத்த மட்டும் பாருங்க. ஊர்ப்பஞ்சாயத்துக்கு நாள் இருக்கு..” என மனைவி எனக்கு புத்தி சொல்லி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

 

மணி ஆறை நெருங்க நெருங்க வியாபாரத்தில் மனம் ஒன்றவில்லை. பிச்சாலுவைக் காணோம்.. சிறுவன் எந்த நேரத்திலும் சைக்கிளை ஓட்டிக் கொண்டுவரலாம்…

 

மாலை செய்தித்தாளை மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆள், “ஏண்ணே…. ரெண்டு ஜீ ரெண்டு ஜீ ங்கறாங்கெளே.. அது என்னாதுண்ணே.. யாரு… அது.. ? “ என்று பேப்பரைத் தூக்கிக் காட்டிக் கேட்டார்.

 

நெஞ்சம் கொதிக்க அந்தநபரை முறைத்தேன். பதில் வாங்காமல் பேப்பரை இறக்கமாடார் போலத்தெரிந்தது. ” ம்.. சோனியா ஜீ, ராகுல் ஜீ.. “ – கடுப்பாய் பதில் வந்தது எனது வாயில்.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “சைக்கிள் ஓட்டியும் நானும்”

  1. Sakthi Bahadur

    பாமர மக்களின் வாழ்வியலை அழகாக படம் பிடித்து கூறும் அற்புத படைப்பு சமையல் உதவியாளராக சென்ற கணவனின் கூலியை வாங்க அலையும் மனைவி மற்றும் மகனின் அலைச்சல்… அன்றாடங்கூலிகளின் பாட்டை கண்முன் நிறுத்தும் அற்புதப்பபடைப்பு… வாழ்த்துகள் தோழர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: