சேதாரம்

3
(2)

“இதுக்குத்தான்யா பொண்டாட்டி பேச்சைக் கொஞ்சமாவது கேட்கணும்ங்கிறது. எம் பேச்சைக் கேட்டிருந்தின்னா… இப்படி சொந்த ஊரை விட்டுட்டு ஆள் பேர் தெரியாத அத்துவானச் சீமையில சீப்படுவமா?” சின்ன வீரனுக்கு பெண்டாட்டி பொம்மி சொல்வது நியாயமா படறது மாதிரிதான் தெரியுது. ஆனால் நகராட்சி வேலையை விட்டுட்டு வந்ததும் சரியாகத்தான் தெரியுது!

ஆமாம். சின்னவீரனும் பொம்மியும் அந்த ஊர் நகராட்சியில் நகரசுத்தித் தொழிலாளர்களாக வேலை பார்த்தவர்கள். வரக் கூடிய சம்பளத்தில் கைக்கும் வாய்க்கும் எட்டாமலும் ஒட்டாமலும் பிழைப்பை ஓட்டினாலும் நிரந்தரமான பிழைப்பு என்ற நிலை இருந்த வரைக்கும் சரிதான்.

ஆனால் ஒரே நாள் ராத்திரியில் இடி இடிச்சு புயல் மழை பெய்து வீடு வாசல் உடமை எல்லாம் அபாயத்தில் மிதக்கிற மாதிரி ஏப்ரல் மாசம் ஒண்ணாந் தேதியிலிருந்து நகரசுத்தி தொழிலாளர்கள் எல்லாம் தனியார் காண்ட்ராக்ட் காரர் கண்ட்ரோல்ல வேலை செய்யனும்! மாசம் மூவாயிரம் தான் சம்பளம். ரெண்டு சீருடை. மற்றும் தொழில் கருவிகள். குப்பை அள்ளும் வண்டி எல்லாம் காண்ட்ராக்ட்காரரே கொடுப்பாரு. ஒவ்வொருத்தரும் அவங்கவங்களுக்கு கொடுத்த சாமான்களை பராமரிக்கனும்.

முன்னால தற்காலிகமா வேலைக்கு சேர்ந்தாலும் நிரந்தரமான பிழைப்பு. சட்டப்பாதுகாப்பு. இப்போ நிரந்தரமா தற்காலிகம் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம். சம்பளம் குறைவு, படிகள் இல்லை. பென்ஷன் இல்லை. இத்தனையையும் தாங்கினாலும் ஐம்பது வயசு வரைதான் இந்த வேலை. அப்புறம் நடுத் தெருவில்தான் குடியிருப்புகூட இல்லை .

இரத்தம் செத்து நாடித்துடிப்பு அடங்கி நடுத்தெருவில் நிக்கிறதுக்கு இப்பவே வெளியே வந்துறலாம்! இப்போ நஷ்ட ஈடு கிடைக்கிற பணத்தை வச்சு எதாவது கூலி வேலை பார்த்து வயிற்றைக் கழுவலாம் என்றுதான் வேலையை விட்டுட்டு இன்னிக்கு இந்த ஊருக்கு வந்திருக்கோம். பாவம் பொம்மி. கல்யாணம் ஆகி மூணு வருஷம் கழிச்சு இப்பத்தான் வாயும் வயிறுமா இருக்கா.. இவளை கூட்டிக்கிட்டு இந்த ஆள்தெரியாத ஊருக்கு வர வேண்டியதாயிருச்சு!”

அந்த சாக்கடையில் தற்காலிகமா ஒரு சின்ன தடுப்பு வைத்தான் ஓடிய நீர் போக கெட்டியான குப்பை கூளங்கள் மிதந்தன. அவற்றை அள்ளி ஒதுக்கினான். இலேசாக அடைப்பை எடுத்துவிட்டு மேல் தண்ணியை ஓடி வடிய விட்டான். வழக்கமான மூக்கை அரிக்கும் வாடை சிறு கண்ணாடி சிறு கல்லு, ஆணின்னு கிடந்ததை எல்லாம் ஒதுக்கினான். மீண்டும் மேல் மட்டத்திலிருந்த தண்ணீரை ஓடவிட்டான். இப்போ சாக்கடையில் வண்டலாகக் கருமண் மட்டும் படிந்திருந்தது. அதில் காக்கா பொன்னாக துகள்கள் கண் சிமிட்டின. அந்த சாக்கடை மண்ணை தட்டுகளில் அள்ளி பெரிய பிளாஸ்டிக் வாளியில் கொட்டினான். இப்படி அள்ளி அள்ளி கொட்டியதும் வாளி நிரம்பியது அந்த சாக் கடையில் தெளிந்த தண்ணியில் கைகழுவினான். ஒரு குச்சி கொண்டு சாக்காடை அடைப்பை எடுத்துவிட்டான். தண்ணீர் ஓடத் தொடங்கியது. பக்கத்திலிருந்த தெருக்குழாயைத் திறந்தான் காற்றுதான் வந்தது. குழாயடி பள்ளத்தில் கொஞ்சம் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. அதில் கையை சுத்தமாகக் கழுவிக் கொண்டான். தலை துண்டில் துடைத்துக் கொண்டான்.

பக்கத்தில் இருந்த நாயர் கடையில் பொம்மிக்கும் அவனுக்கும் ஆளுக்கு ரெண்டு வடை, டீ சாப்பிட்டார்கள். சாயந்திரம் வந்து காசு தருவதாகச் சொல்லி, பொம்மியை வாளியைத் தூக்கிவிடச் சொல்லி வாகாய் குனிந்து தலையில் வாளியை இருத்தி நிமிர்ந்தான். கழுத்தே வாளிக்குள் போவது போல் ஈர மண்ணின் கனம் அழுத்தியது. கண்மணிகள் பிதுங்க நிதானமாய் முன்னால் நடந்தான். பொம்மி வயிற்றுச் சுமையோடு இரு இரும்புத் தட்டுகளை இடுப்பில் இடுக்கிக் கொண்டு நடந்தாள். வெயில் கடுமையாகச் சுட்டது. உடலெல்லாம் வேர்வை பிசுபிசுப்பு. சாக்கடை நமநமப்பு. மூக்கை அடைக்கும் அமிலக்கரி நாற்றம். மெல்ல மெல்ல நிதானமாய் நடந்து தெருக்களை, ரோட்டைக் கடந்து ஆற்றங்கரைக்கு வந்தார்கள்.

ஆறு பெரிய சாக்கடையாகத் தேங்கிக் கிடந்தது. நடுநடுவே கருவைமுள் புதர்கள் கண்ட கண்டகழிவுத் துணிகள், குப்பைக் கூளங்கள், சிறுசிறு மணல் மேடுகள். சிறு புல்தரைகள் எனத்தோற்றம் கொண்டிருந்தது. அரைகுறையாய் மழித்த புண்வந்த தலைபோல் ஒரு அருவருப்பு. கரையில் ஒரு ஓரமாய் நின்று, நின்றபடியே உடம்பை குறுக்கி பொம்மியை தலைச்சுமையை இறக்கிவிடச் சொன்னான். முழுச்சுமையையும் கைகளிலிலும் நெஞ்சிலும் தாங்கி அப்படியே மெதுவாக இறக்கி வைத்தான். வாளி மண்குதிர் போலக் கனத்திருந்தது. பெருமூச்சுவிட்டு தலைத் துண்டை உதறி முகத்தில் வழிந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டான். பொம்மியிடம் வெற்றிலை பாக்கு கேட்டு வாங்கி வாயில் ஒதுக்கிக் கொண்டான். இல்லாவிட்டால் சாக்கடை நாற்றத்திற்கு எச்சில் ஊறிக் கொண்டே இருக்கும். குப்பை மணலை அலசுவதற்குத் தோதுவாக ஒரு சிறு பள்ளக்காலை தேர்ந்தெடுத்தான். பொம்மியும் அவனும் மெல்ல வாளியைத் தூக்கி அருகில் வைத்துக் கொண்டார்கள்.

பொம்மி ஒரு இரும்புத் தட்டில் மணல்குப்பையை அள்ளித் தந்தாள். அவன் வாகாய் உட்கார்ந்து இன்னொரு தட்டில் கொஞ்சம் குப்பை மணலை இட்டு அதில் அளவளவாய் நீர்விட்டு அலசினான். அலசி அலசி பெருமணலை ஒதுக்கி கழித்து கீழே தள்ளிவிட்டு, மேலும் கொஞ்சம் நீர்விட்டு சன்ன மணலை அலசினான். அலச அலச தங்கத்துகள்கள் தகதகத்தன. நீரை வடிகட்டி இறுத்துவிட்டு அந்தச் சன்ன மணலை ஒரு சிறு வாளியில் வடித்து பத்திரப்படுத்தினான். இப்படிக் கொண்டு வந்த மண்ணை எல்லாம் அலசி சன்னங்களை வடித்து சேர்த்து பொம்மியிடம் கொடுத்தான். நல்ல தெளிந்த நீராய் இருக்கும் பள்ளத்தில் குளித்து உடலை சுத்தப்படுத்திக் கொண்டு சாமான்களோடு புறப்பட்டார்கள் குடிசையை நோக்கி.

இப்படி அலசி எடுத்த தங்ககத்துகள்களை ராஜதிராவகம் ஊற்றி சுத்தப்படுத்தி. வெந்த கழிவுகளை ஒதுக்கிவிட்டு, ஒரு குமுட்டி அடுப்பில், ஒரு மண் குகைக்குடுவையில் தங்கத்துகள், நவச்சாரப் பொடிக் கலவை இட்டு ஊதி ஊதி உருக்கினான். உருக்கியதை ஒரு உடைந்த ஒட்டுத் துண்டு பள்ளத்தில் வார்த்தான். அதிகாலைச் சூரியப்பந்து போல உருண்டு ஓட்டுக் காடியில் விழுந்து உறைந்தது. சிறிது நேரம் ஆறவிட்டு அதை ஒரு குறட்டில் பற்றி ஒரு சிறு தண்ணீர் சட்டியில் போட்டான். ஒரு குண்டு மணியளவு (சைக்கிள் பால்ரஸ் அளவு) தங்கக்கட்டி சுர்ரென்று சத்தத்தோடு தயாராகிவிட்டது.

இத்தனை தொழில் நுட்பத்தையும் அவன் இந்த ஊருக்கு வந்து பத்துநாளாக வேலையில்லாமல் அலைந்தபோது கற்றுக்கொண்டான். இந்த தொழிலில் யாரும் அவனைத் கூட்டாகச் சேர்த்துக் கொள்ளத் தயங்கினார்கள். தன் கை தனக்குதவி என்று இறங்கியவன் கரை ஏறிவிட்டான். இப்படி சாக்கடை மண்ணில் அலசுவதில் ஒரு நாளைக்கு ஒரு கிராம் தங்கம் கிட்டலாம். மூணுகிராம் கிட்டலாம் ஒருநாளைக்கு ஒன்றும் தேறாமல் போகலாம். ஆக சராசரியாய் வாரத்திற்கு தொள்ளாயிரம், ஆயிரம் ரூபாய்யென்று கிடைத்துவந்தது. ஓட்டு வீட்டிற்கு மாறினார்கள். கிடைக்கும் தங்கத்தை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மனைவிக்கு தோடு மூக்குத்தி செய்து போட்டான்.

இப்படியாக ஒரு ஆறுமாதம் கடந்தது. பொம்மி ஒன்பது மாதக் கர்ப்பிணியாக இருந்தாள். பிரசவச் செலவுக்கு கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தான். சாக்கடையில் உட்கார்ந்து தொழில் பண்ணுவதும், நைட்ரிக் திராவகத்தில் புழங்குவதும் அவனது உடலை பாதிக்கவே செய்தது. இருந்தாலும் நித்தமும் மலக்குப்பைகளுடன் உழன்றதுக்கு இது பரவாயில்லை! யாரும் தனக்கு எஜமானர் இல்லை என்ற திருப்தி!

ஆனால் இந்த திருப்தியும் நிம்மதியும் ஆறுமாதம்தான். ‘இப்பவெல்லாம் சாக்கடை மண் அலசினால் ஒரு செப்புத்தகடு கூட கிடைப்பதில்லை! நகைத் தொழில் நடக்கவில்லை. தங்கவிலை எக்குத் தப்பாக ஏறிப் போச்சு! விலைவாசி ஒரு நிலையில் இல்லை என்பதால் தொழில் மந்தம். இந்தச் சூழ் நிலையில் பெரிய பெரிய முதலாளிகள் வெளிமாநிலத்திலிருந்து ஆள்கூட்டிவந்து எல்லா வேலைகளும் மெஷின் வச்சு நகை தயாராகுது. சேதாரம் விழுவதில்லை. உள்ளுர் ஆசாரிகளுக்கு வேலை இல்லாமல் ராத்திரியோட ராத்திரியாக ஊரை காலி பண்ணிட்டு போறாங்க! பிள்ளைக்குட்டிகளோட இந்த ஊரை விட்டுப் போக முடியாதவங்க, கடன் கப்பியில் சிக்கினவங்க பலர் குடும்பங்களோட ஸயனைடு சாப்பிட்டு தற்கொலை பண்ணிக்கிறாங்க! இதெல்லாம் பார்த்தா பொம்மி சொன்ன மாதிரி சொந்த ஊரை விட்டு வந்தது தப்பாகத்தான் தெரியுது!

நகைத் தொழிலாளர் கிட்டே ஒற்றுமை இல்லை! துப்பரவுத் தொழிலாளி அளவுக்குகூட சங்கம் சேர்ந்து பாதிப்புகளைச் சொல்லி போராட வீதிக்கு வருவதில்லை. நகைத் தொழில்ல கொடிகட்டிப் பறந்தவங்க எல்லாம் சொத்து சுகங்களை இழந்து சுக்கல் சுக்கலாகி ஒட்டாஞ்சில்லுகளாகச் சிதறிப் போகிறார்கள். ஒன்றுதிரண்டு தொழில் பாதுகாப்புக்கு குரல் கொடுக்கக் காணோம். அரசாங்கமும் இதை எல்லாம் கண்டுக்கலை. பிரச்சனைக்கு எதிரா போராடணும்ங்கற எண்ணமில்லாம இருக்காங்க. நம்மலும் இதில் வந்து மாட்டிக் கிட்டோமே.. எப்படி மீள்றது…?’

கலகலப்பாக இருந்த நகைக்கடைத் தெருவெல்லாம் ஈ எறும்பு ஆடலை. நகைக் தொழிலாளிகள் நடந்து போறத் தூசு மண்ணை எல்லாம் கூட்டி சுத்தம் செய்து பார்த்தால் செம்புத்தூள் கூட கிடைப்பதில்லை. சட்டியில் இருந்தால்தானே அகப் பையில் ஒட்டும். அகப்பையில் ஒட்யிருந்தால் தானே கீழே சிந்தும் ஆஹா.. பொழப்பு சிதறி சீர் கெட்டுப் போச்சே.. பொம்மிக்கு பிரசவ கெடு நெருங்கிக்கிட்டே வருது. கையில் இருக்கிற காசும் கரைஞ்சுகிட்டே வருது. என்ன பண்ண..ஏது பண்ண..? யோசனையில் புரண்டான்.

மன ஆறுதலாக இருக்கும் என்று வெளியே நடந்தான். நகைத்தொழிலாளர்கள் சிலர் பரபரப்பாகப் பேசிக் கொண்டே வந்தார்கள். என்னவென்று கேட்டான். “முருகேசன் ஸயனைடு சாப்பிட்டுவிட்டார்…” என்ற பதில் ஈரக்குலையைப் பிடித்து உலுக்கியது. “ஆஹா.. நம்ம ஏரியாகாரர் பார்க்கும் போதெல்லாம் ‘என்ன வீரா பிழைப்பு எப்படி போகுது ஏதாவது வேணும்னா வீட்டுப்பக்கம் வாப்பா…” என்று வாஞ்சையாப் பேசுவார். அவரா இப்படிக் கோழைத்தனமா ஸயனைடு சாப்பிட்டுட்டார்?” ..ம்ம் நகைத் தொழில் சீரழிந்து போச்சு வேலை இல்லை. கடன் தொல்லை தாங்கமுடியவில்லை. குடும்பத்துக்கு இரைபோட முடியலை எல்லாம் ஸையனைடு சாப்பிட்டா சரியாகிருமா? இப்ப குடும்பம் இல்ல நடுத்தெருவில் நிக்கிது? புலம்பிக்கொண்டே முருகேசன் வீட்டை நோக்கி நடந்தான்.

காலில் ஏதோ குத்துவது போல் இருந்தது. குனிந்து பார்த்தான். சிறு ஆணி அதனை மெல்லப் பிடுங்கினான் ரத்தம் வழிந்தது. ஒரு காகிதம் எடுத்து துடைத்தான். காலை தூக்கியபடியே நகர்ந்து பக்கத்துப் பெட்டிக்கடையில் கொஞ்சம் சுண்ணாம்பு எடுத்து ஆணி குத்தியவாயில் தடவி அதன் மீது ஒரு துண்டு காகிதத்தை ஒட்டினான். காலை தூக்கியபடி மெல்ல நகர்ந்து, ஒரு அடைத்த கடையின் வாசலில் உட்கார்ந்தான். ரத்தம் பொங்குவது நின்றது. வலித்தது ஒரு யோசனை பளிச்சிட்டது.

“ஆமாம் இந்த மாதிரி ரோட்டில் கிடக்கிற ஆணி. இரும்புத் துண்டு. தேய்ந்த நட்டுக்கள் போல்ட்டுகள் இவை எல்லாம் பொறுக்கி விற்றால் என்ன? இன்னும் நகைத்தொழிலை நம்பி இருக்கமுடியாது. இந்த ஊர்லதான் இரும்புத் தொழில் லேத் பட்டறைகள் நிறைய நடக்குதில்ல! ஒரு நாளைக்கு ஒரு ரெண்டு கிலோ இரும்புக் கழிவுகளை பொறுக்கிச் சேர்த்து விற்றால் கூட ஒரு இருபது இருபத்தஞ்சு ரூபா தேறுமே..”

காலை உதறி ஒரு பழைய இரும்புக் கடைக்குப் போனான். பழைய இரும்பு என்ன விலைக்கு வாங்கப்படுகிறது என்று கேட்டுத் தெரிந்து கொண்டான். அந்தக் கடையில் ஒரு பழைய சவுண்ட் பாக்ஸில் இருந்து எடுத்த காந்த வளையத்தினை வாங்கினான். அதனை ஒரு மூன்றடிக் கம்பில் லாவகமாக இறுக்கமாய்ப் பொருத்தினான். அதை ரோட்டோரம் கிடக்கும் புழுதி மண்ணில் உராயவிட்டான். அது மண்ணில் கிடந்த சிறுசிறு குண்டூசிகள் ஸ்குரூ ஆணிகள் நட்டுகள், போல்டுகளை, ஊக்குகளை ஈர்த்து அதனில் ஒட்ட வைத்துக் கொண்டது.

ஒரு பிளாஸ்டிக் பையில் அவற்றை சேர்த்தான். இப்படி இரண்டு தெருக்கள் காந்தக் கம்போடு ரோட்டில் உராயவிட்டு நடந்தான். இரும்புக் கழிவுகள் சேர்ந்தன. இரும்புத் தொழில் பட்டறை இருக்கும் தெருக்கள் பக்கம் இழுத்துக் கொண்டே போனான். பிளாஸ்டிக் பை தாங்கும் அளவு இரும்பு கழிவுகளை சேர்த்தான். அது ஒரு நாலு கிலோ எடை இருக்கும். அவனுக்கு பெண்டாட்டி பிள்ளையை காப்பாற்ற ஒரு புதுத் தொழில் கிடைத்து விட்டது.

இப்போது ஆணி குத்திய கால் வலிக்கவில்லை. வலது கையில் காந்தக் கம்பும் இடது தோளில் இரும்புகழிவு சேர்க்கும் பையுமாய் நடந்தான். இப்போது அவனுக்கு வாழ்க்கை கனமாக இல்லை. நெஞ்சு இலேசாக மிதந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 3 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top