சூறையாடல்

4
(3)

ரொம்ப நேரம் ஆற்றையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். காடு போல அடர்ந்த தோப்பு மண்டிக்கிடந்த இடம் இப்போது சுள்ளென்று அடிக்கும் வெயிலுக்கு ஒதுங்கி நிற்க நிழல் தர ஒரு மரம் கூட இல்லாமல் வெறுமை பூசிக் கிடந்தது நொய்யல் ஆற்றின் கரை..!, முபாரக் அலி எதுவும் பேசாமல் என்னையே பார்த்தபடி நின்றிருந்தான். வற்றாமல் ஓடிக்கொண்டிருந்த நொய்யல் ஆறுதானா இது என்று சந்தேகமாக இருந்தது..! கடந்த பத்து வருடங்களுக்கு முன் பார்த்ததை விட குப்பையும் ,சேறும் சகதியுமாக பசியால் வாடிக்கிடக்கும் வயதானவர் போல இன்னும் சுருங்கிக் கிடந்தது ஆறு. வடக்குப் பக்கம் மேட்டில் ஆற்றின் கரையோரம் முழுக்க அபகரிக்கப்பட்டு வரிசையாக பிளாஸ்டிக் குடோன்களும், பழைய இரும்புக் குடோன்களுமாக காட்சியளித்தன. இந்த குடோன்களின் கழிவுகள் எல்லாம் குழாய்களின் வழியே ஆற்றில் கலந்து கொண்டிருந்தது. தென்பகுதியில் வீடுகள்.  காலனியின் கடைசியில் ஆற்றை ஒட்டி வீடு கட்டியவர்களாவது ஆற்றின்மீது கொஞ்சம் இரக்கப்பட்டு கொஞ்சம் போல கரையை விட்டு வைத்திருந்தார்கள். பின்னாளில் பிரச்சனை ஏதும் வந்து முழு வீடும் போய்விடுமோ என்ற பயம் போலும்..! ஆனால் இந்த முதலாளிகளுக்குத்தான் ரொம்பவும் பேராசை.

அப்போது பார்த்த போது இரண்டு மூன்று குடோன்கள்தான் இருந்தது. நாதியற்றுப் போன ஆற்றுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லாத தைரியம்தான் இப்படி புறம்போக்கு இடங்களையும், ஆறு, குளங்களையும் சிறு வணிகர்களும், பெரும் முதலாளிகளும், கார்பரேட் நிறுவனங்களும் வகைதொகை இல்லாமல் அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களின் ஜீவநதி இந்த நொய்யல்! செம்மேடு, ஆலந்துரை, தொண்டாமுத்தூரில் ஆரம்பித்து இப்படி வழி நெடுக குப்பையும், கழிவுமாக மாசடைந்து கிடக்கிறது நொய்யல். அரசாங்கமும் கூட ஒரு காரணம். உக்கடத்தில் வாலங்குளத்தைத் தூர்த்துத்தானே பேருந்து நிலையமும், சேரன் போக்குவரத்துக் கழகத்திற்கு பணிமனையும் (இப்போது அரசு போக்குவரத்துக் கழகம்) கட்டியிருக்கிறார்கள். தட்டிக் கேட்க வேண்டிய அரசாங்கமே மாவட்டம்  தோறும் இதுபோல நிறைய இடங்களில் ஆறுகளையும், குளங்களையும் ஆக்கிரமித்து அரசு நிறுவனங்களுக்காக அத்து மீறும் போது, அபகரிக்கும் கார்ப்பரேட் மற்றும் பணம் படைத்தவர்களுக்கு சொல்லவா வேண்டும் ! பயமில்லாமல் போய்விடுகிறது.

சென்ற முறை வந்த போது அந்தப் பெரிய ஆலமரம் நின்றிருந்தது. சிறு வயதில் எங்களையெல்லாம் பயமுறுத்திய – பயமுறுத்தும் ஆலமரம். பேய், பிசாசுகள் மட்டுமல்ல, சகலவிதமான ஜீவராசிகளுக்கும் அந்த ஆலமரம்தான் குடியிருப்பு! சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்கள் கூட வருவதற்குப் பயப்படுவார்கள். எப்போதும் இருட்டு கவிந்து கிடக்கும். அந்த இடத்தில் ஆறு மிக  ஆழமாக இருக்கும்.  ஆலமரத்தை ஒட்டி ஒரு பெரிய பள்ளம் இருக்கும். அதில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்கும். குளிக்க இறங்கி இரண்டு சிறுவர்களும், ஒரு இளைஞனும் இறந்து போயிருக்கிறார்கள். அதிலிருந்து அந்த இடத்திற்கு மேலும் அமானுஷ்யம் கூடிவிட்டது. ஆலமரத்தின் கூடவே டக்கென்று ரங்கசாமியும் ஞாபகத்தில் வந்தான்.  பள்ளிக்கூடம் செல்லும் காலங்களில் மதிய உணவு இடைவேளையின் போது சில சமயம் எதையாவது சொல்லி அதைக் காட்டுறேன்…..இதைக் காட்டுறேன்..  என்று மேல் தோப்பு, துரை தோப்பு, அணைமேடு, குறிச்சிக் குளம், ஆத்துக்கு அந்தப் பக்கம் இப்படி எங்கேயாவது எங்களை அழைத்துச் செல்வான் ரங்கசாமி. அப்போது எங்களுக்கு அவன் ஒரு சாகசக்காரன்.!

அந்த ஆலமரத்தில் அஞ்சு தலை நாகம் குடியிருப்பதாக சொல்லி ஒரு முறை எங்களை அழைத்துப் போனான். பயம் இருந்தாலும் அஞ்சு தலை நாகம் பார்க்க ஆவல் பொங்கியது. ஒரு குரூப்பாக அவன் பின்னாடி சென்றோம். ஆற்றில் முழங்காலளவுக்கு தண்ணீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. புளியமரத்தின் அருகே கரையோரம் நிறையப் பாறைகள் இருக்கும். பெண்கள் துணி துவைக்கும் பகுதி இது. சிறுவர், சிறுமியர் குளிப்பதும், துண்டு விரித்து மீன் பிடிப்பதுமாக சனி, ஞாயிறுகளில் இந்தப் பகுதி ஒரே கும்மாளமாக காட்சியளிக்கும். துணி துவைக்க பாறை கிடைக்காமல் பெண்கள் காத்திருப்பார்கள். கலர் கலராக சின்னச் சின்ன கெண்டை மீன்களைப் பிடித்து நீளமான மருந்து குப்பிகளிலும், பாட்டில்களிலும் வளர்ப்பது சந்தோஷ அனுபவங்கள்.  அந்த இடத்தில் ஆத்துக்குள் இறங்கி மேடேறி ஆலமரத்தை நெருங்க நெருங்க, அஞ்சு தலை நாகம் சீறிக்கொண்டு வந்து விடுமோ என்று இன்னும் அச்சத்தைக் கொடுக்க, மெல்ல நடந்தோம். ஒத்தையடிப் பாதையில் நடக்கவே பயமாக இருந்தது. ரங்கசாமி அவன்பாட்டுக்கு வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தான். பயமற்றவன் அவன். துணிச்சல் பேர்வழி ! எந்த இடத்திற்கும், எந்த நேரத்திலும் தனியாளாக சென்று வருவான். ஆத்துப்பாலம் சுடுகாட்டுக்குள் சின்னப் பசங்கள் யாருமே போகமாட்டார்கள். ஆனால் இவன் தைரியமாகப் போவான். மதியம் உச்சி நேரத்தில் சென்று வந்து, ” நா உள்ள     போறண்டா, அரச மரத்து மேல ஒண்ணு உக்காந்துட்டிருக்குடா ! ஆவியா, முனியானு தெரில…” என்பான். நண்பர்கள் சிலர் நம்பாமல், “போடா…” என்பார்கள். “நீ வா காட்டுறேன்..” என்று சுடுகாட்டுக்குள் போக கூப்பிடுவான். எவனாவது ஆவியையோ பேயையோ நேரில் பார்க்கப் போவானா என்ன..? பயந்துபோய் ஒரே ஒட்டம்தான்.

சரசரவென்று ஏதோ சத்தம். எங்களுக்கு மூச்சே நின்று விட்டது.  முபாரக் அலி , ” அல்லாஹ்…” என்று கத்த, திரும்பி எடுத்தோம் ஒரு ஓட்டம். இங்கே வந்து திரும்பிப் பார்த்தால் சிரித்தவாறு ரங்கசாமி அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

“எதுக்குடா..கத்துனே..?” முபாரக்கிடம் கேட்டதுக்கு , “எங்காலுக்கடில பாம்பு ஓடுச்சுடா….” என்றான் கீழே குனிந்து குனிந்து காலைத் தூக்கியபடி. பொய் சொல்கிறானா….இல்ல உண்மைதானா என்று எங்களால் அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை. ரங்கசாமி அங்கேயே நின்றபடி “வாங்கடா..” என்று கையாட்டினான்.  போகலாமா..வேண்டாமா என்று தயங்கி நின்றோம்.

கொஞ்சம் தயக்கத்துக்குப் பிறகு பயம் உதறி மெல்ல நடந்தோம். மரத்திலிருந்து பத்தடி தள்ளியே நின்றோம். “அங்கிருந்து பாத்தா எப்டிட தெரியும்..? உன்னும் கிட்ட வாங்கடா..” என்றான். இன்னும் கொஞ்சம் முன் நகர்ந்தோம். “கீழ ஒரு பொந்து தெரியுதல்ல… அங்கயே கொஞ்ச நேரம் பாருங்க..” என்றான் ரங்கசாமி வித்தை காட்டுபவன் செய்யும் லாவகத்துடன். எல்லோரும் பயந்து பின் வாங்கினோம். “கண்ணெடுக்காம பாத்துட்டே இருங்க..” என்று மறுபடியும் பீதி கிளப்பினான். அந்த சிறு வயது மாணவப் பருவத்திலேயே இந்த மாதிரியான விஷயங்களில் ரங்கசாமி ஒரு கை தேர்ந்த கலைஞன் போல பேச்சு சாதுரியத்துடன் செயல்படுவான்.

நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தோம். விஸ்க்..விஸ்க் என்ற சத்ததுடன்      காற்று சுழன்று சுழன்று வீசிக் கொண்டிருந்தது. அது மேலும் அச்சமூட்டியது. ”எங்கடா…? அஞ்சு தல நாகமாம்…பொய் சொல்றாண்ட இவன்..” காஜா உசேன் மௌனத்தை கலைத்தான். “சத்தம் கேட்டா வாராதுடா…” என்றவன், பிறகு       ‘’சத்தம் கேட்டு சீறிட்டு வந்துரும்டா..” என்று சொல்ல, பயந்து பின் வாங்கினோம்.  கொஞ்ச நேரம் அப்படி இப்படி என்று எங்களை வித்தைக்காரன் போல போக்கு  காட்டிக்கொண்டே இருந்தான். ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டே இருந்தோம். பொந்தில் நிழலாடியது. “ பாருங்கடா…பாருங்கடா….’’ என்று எங்களை பின் புறமிருந்து நோண்டினான். அது ஒரு தலைப் பாம்பு கூட அல்ல! ஆனாலும் அவன் அஞ்சு தலை நாகம் என்றே சாதித்தான். நாங்கள் மறுத்துக் கொண்டே இருக்க, ”டே…! சீறுதுடா..” என்று கத்திக்கொண்டே ரங்கசாமி ஓடினான். அவனே ஓடும்போது நாங்கள் அங்கே நிற்போமா என்ன..? இப்படியாக அஞ்சு தலை நாகம் அந்த ஆலமரப் பொந்தில் வசிப்பதாகவும் அவன் பார்த்ததாகவும் ரொம்ப நாட்களாகவே எல்லோரையும் ரங்கசாமி நம்ப வைத்துக்கொண்டிருந்தான். என்னையறியாமல் சிரிப்பு பொங்கியது. “ ஏண்டா சிரிக்கிறே..?”  மௌனத்தைக் கலைத்து முபாரக் கேட்டான். “ நம்ம ரங்கசாமி ஞாபகம் வந்துருச்சுடா…..ஒருக்க இங்க அஞ்சு தல நாகம் காட்டுனானே ஞாபகமிருக்கா…? “ என்றேன். “ என்னா பீலா உட்டு நம்மள பயப்படுத்தினான்…..அதெல்லாம் மறக்க முடியுமாடா..” என்று கெக்க போட்டு சிரித்தான் முபாரக்.

“நீயும்தாண்டா காலுக்கடில பாம்புனு கத்தி பீலா உட்டே….” என்றேன். கொஞ்ச நேரம் யோசித்து விட்டு ,”நானா..? “ என்றான்.

“ எல்லாம் மறந்துட்டியாக்கும்..?” என்றேன்.   “அதெல்லாம் மறக்குமா என்ன..” என்று சிரித்தான் முபாரக்.

எல்லோரையும் பயமுறுத்திக் கொண்டிருந்த அந்த ஆலமரம் நின்றிருந்த இடத்தை இப்போது அடையாளம் கண்டு கொள்ளவே முடியவில்லை. மேல் தோப்பு, துரை தோப்பு எல்லாம் கான்கிரீட் காடுகளாகியிருந்தன. அன்றைய நினைவுகள் இன்னும் அப்படியே பசுமையாக சுழன்று கொண்டே இருக்க, மெல்ல திரும்பி நடக்க ஆரம்பித்தோம். மேடேறி சாலைக்கு வந்தோம். ஆத்துப்பாலத்தில் இப்போது ஆறு இல்லாமல் பெயர் சொல்ல வெறும் பாலம்தான் இருந்தது. அதுவும் புதிய பாலம்.  “சைட் எங்க பாக்குற..? இங்க இட்டேரிக்குள்ளயா…இல்ல சாரமேட்டுக்குள்ளயா..?” என்று கேட்டான் முபாரக் “இங்க தண்ணி வசதியெல்லாம் இருக்கா..? “ என் சந்தேகத்தைக் கேட்டேன். “நல்ல தண்ணி இன்னும் இந்தப் பக்கம் வரல…” என்றான்.  “அப்ப சாரமேட்டுக்குள்ளயே பாக்கலாம்..” என்றேன். ரோட்டோரத்தில் நிறுத்தியிருந்த டூவீலரை ஸ்டார்ட் செய்தான். பாலம் தாண்டி டோல்கேட்டை ஒட்டியிருந்த இடது பக்க சாலையில் வண்டியைத் திரும்பினான். அம்புக்குறி போட்ட போர்டு ‘பூங்கா நகருக்கு’ வழி காட்டிக்கொண்டிருந்தது. “மேல் தோப்புடா இது..” என்றான். பூங்காநகர் என்ற ஒரு பெரிய குடியிருப்புப் பகுதியாக மாறியிருந்தது மேல்தோப்பு !       ஆற்றின் கரையை ஒட்டி கம்பி வேலி போடப்பட்டு, வேலிக்குள் ஆற்றின் கரை உயர்த்தப்பட்டு கட்டிடம் உருவாகிக் கொண்டிருந்தைக் கண்டு வியப்படைந்து, “என்னடா இது?” என்று கேட்டேன்.   “எது..?“ என்று கேட்டு வண்டியை நிறுத்தியவன். என்னைத் திரும்பிப்பார்த்தான். நான் கையை நீட்டி,” ஆத்தின் கரையான பொறம்போக்கு இடத்தை யாரும் அபகரிக்கக் கூடாதுணு வேலி போடுவாங்க ! இதென்னடா வேலிபோட்டு வெளிக்குள்ள பில்டிங் கட்டுறாங்க..?” வியப்பு மாறாமல் கேட்டேன்.“ ஓ இதுவா..?” என்றவன்,” இதான் பணக்காரத் திருட்டு..! சூறையாடல்னும் சொல்லலாம்..’’ என்று பலமாகச் சிரித்துவிட்டு, “பொது எடத்தையும், பொறம்போக்கு எடத்தையும் இப்படித்தான் வேலி கட்டி அபகரிப்பாணுங்க…” யாரும் எதுவும் கேக்க மாட்டாங்க! அதுவே குடியிருக்க வீடில்லாதவன் குடிசை போட்டா, போலீசும் புல்டோசரும் வந்து இடிச்சுத் தள்ளும்..  அங்க நிறைய குடோன்களப் பாத்தியே…. எல்லாம் இப்பிடித் திருடிக் கட்டுனதுதான்..”  என்றான். நான் பேசாமல் அவனைப் பார்க்க, ” ஏழை ஏன் ஏழையாவே இருக்கான்…? பணக்காரன் எப்படி மேலும் பணக்காரன் ஆயிட்டே இருக்கான்னு புரியுதா…? இதான் சூட்சுமம்..” சொல்லிவிட்டு இன்னும் பலமாகச் சிரித்துக்கொண்டே வண்டியை முடுக்கினான்  முபாரக்.  .

இரண்டு சந்துக்குள் நுழைந்து சாரமேட்டு சாலையைத் தொட்டான். விளை நிலங்கள் எல்லாம் ராஜீவ் நகர் , வள்ளல் நகர், ராயல் நகர் என்று ஏகப்பட்ட நகர்களாக உருமாறியிருந்தன. என்ன ஒரு வளர்ச்சி..! வியப்புடன்வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். சாலையோரங்கள் முழுக்கவும், ஊருக்குள்ளும் கரும்பு பயிரிடப்பட்டு கரும்புக்காடாக இருந்த கரும்புக்கடை இப்போது கான்கிரீட் காடாகவும், இரும்புக்கடையாகவும் மாறிப்போயிருந்தது.

இப்போதெல்லாம் மழை கூட நின்று நிதானமாகப் பேய்வதில்லை ! சடசடவென்று அவசரமாக கொட்டித் தீர்த்து விட்டு, சட்டென்று நின்று விடுகிறது. அப்போதெல்லாம் தூவானம் போல மெல்ல சிறு தூரலாக ஆரம்பித்து நின்று நிதானமாக நிலம் குளிர மணிக்கணக்கில் மழை பெய்யும். நீர்த்துளிகள் மண்ணில் செறிவாக உள் இறங்கும். நிலத்தடி நீர் பெருகும். மண்ணில் இறங்கியது போக , மீதமாகும் மழை நீர் யாவும் சிறிய சிறிய நீர்க்கால்களாக ஓடி அருகில் உள்ள குளம்,  குட்டைகளுக்குச் சென்று தேங்கும். குளம் ,குட்டைகள் நிறைந்தவுடன், அப்படியே ஓடையாக பெரிய எரிகளுக்குச் செல்லும். ஏரி நிரம்பி வழிந்து சிற்றாறுகளின் வழியாக பெரிய நதிகளில் பெரும் வெள்ளமாக பெருக்கெடுத்து கடலை நோக்கிப் பாய்ந்து ஓடும். ஆண்டு தோறும் மழைக்காலங்களில் தவறாது எங்களின் இந்த நொய்யல் ஆற்றில் செந்நிற புது வெள்ளம் கரைபுரண்டு ஓடும். நாளெல்லாம் பாலத்தின் மீது நின்று குதூகலத்துடன் பரவசம் பொங்க பார்த்துக் களிப்போம்.   நேரம் போவதே தெரியாது. இன்று அந்த நொய்யல் ஆறு கதைச் சுருக்கம் போல காய்ந்து போய் சுருண்டு கிடக்கிறது! பெரும் மழை காலங்களில் கூட ‘ஒரு நாள் கூத்துக்கு மீசையை வச்சான் மேடையிலே..’ என்பது போல இடுப்பளவுக்கு ஒரு நாள்  மட்டும் கொஞ்சம் போல ஓடுவதாகவும்,“ ஏய்! ஆத்துல தண்ணி வந்துருச்சும்பாங்க….” என்கிறார்களே என்று மறு நாள் பார்க்கபோனால் தண்ணி வந்ததுக்கு அடையாளமா சின்ன ஓடையாட்டம் வெளிர் நிறத்துல சாக்கடை கலந்து பரிதாபமாக காட்சியளிப்பதாகவும் ஒரு முறை அலைபேசியில் பேசும் போது முபாரக் அலி சொல்லி வருத்தப்பட்டது ஞாபகம் வந்தது.

இன்றைய பாஸ்ட் புட் யுகத்தில் எல்லாமே பாஸ்ட் ஆகிவிட்டது! பெய்தால் பெரும் மழையாக ஆவேசமாக கொட்டித் தீர்த்து அழிவை ஏற்படுத்துகிறது. அல்லது நிலத்தினுள் இறங்காத சிறு மழையாகத் தூறி விவசாயிகளை மட்டும் அல்ல எல்லோரையுமே மிக ஏமாற்றுகிறது. நானும் இந்த ஆத்துப்பாலத்தில் பெற்றோர்களுடன் வசித்த அன்றைய ரம்மியமான காலகட்டம் நினைவடுக்கிலிருந்து மீண்டும் வெளிப்பட்டது. அப்போதெல்லாம் மழைக்  காலங்களில் தவளைச் சத்தம் ஊரையே அசரடிக்கும். வீதிகளில் குட்டிக் குட்டி தவளைகள் குதித்து குதித்து வீடேறி வரும். அவைகளை தள்ளித் தள்ளி விட்டு அப்புறப் படுத்துவதே பெரும் வேலையாக இருக்கும். தவளை வந்தால் பாம்பும் வரும் என்று வீட்டுப் பெருசுகள் பயமுறுத்தும்.  “தவளச் சத்தம்னா என்ன.?“ என்று நம் குழந்தைகளும், பேரன் , பேத்திகளும் கேட்கும் காலத்தில் வாழ்கிறோம். என்னுடைய பேத்திகளும் ஒரு மழைக் காலத்தில் பேசிக்கொண்டிருந்த போது இதே கேள்வியைக் கேட்டார்கள். பாட புத்தகத்தில் உள்ள தவளையின் படத்தைக் காட்டி, “மழை பெய்யும் போது இதுக கத்தும்…அதான் தவளச் சத்தம்” என்ற போது, கண்களை விரித்து ஆச்சிரியம் பொங்க, ” எப்பிடிக் கத்தும்..?” என்று கேட்டாள் குட்டிப் பேத்தி அனீஸ். விடாமல் கத்திக்கொண்டிருக்கும் தவளைகளின் அந்த சத்தம் எப்படியிரும்..கொஞ்ச நேரம் யோசித்தேன். “கொட்..கொட்…” என்றேன். என் முகத்தை உற்றுப் பார்த்து விட்டு ,”இப்பல்லாம் கத்த மாட்டேங்குது….ஏன்..?” என்றாள். “ இப்பத்தான் தவளயே இல்லயே.” என்றேன். “அதா மழ பெய்யுதல்ல….அப்ப ஏன் தவள வரல..? “ சுட்டித்தனத்துடன் மிகச் சரியான எதிர் கேள்வி கேட்டாள் பேத்தி அனீஸ். என்ன பதில் சொல்வது..?

இன்று எல்லாம் பழைய கதையாகிவிட்டது ! எல்லாம் மாறும் இந்த நவீன உலகில் இயற்கை சூழலும் கூட மிக மாறிவிட்டது. சிட்டுக் குருவிகள் காணாமல் போய்விட்டன. காக்கைகளைப் பார்ப்பது கூட அரிதாகிவிட்டது…! உயிரற்ற ஊர்களில் வாழும் இன்றைய நம் தலைமுறைக்கு நம் குழந்தைகளுக்கு இதை எப்படிச் சொல்லிப் புரியவைப்பது..? உடனடியாக பதில் சொல்லமுடியாமல் பேத்தியின் முகத்தையே பார்த்தபடியிருந்தேன். “ என்ன பெத்தா ஒனக்கு தெரிலயா..?” என்றுகேட்டு விட்டு மழலையாகச் சிரித்தாள். வாரியணைத்து முத்தம் கொடுத்தேன்.

இயற்கையை மனிதன் என்று சூறையாட ஆரம்பித்தானோ அன்று பிடித்தது அழிவு ! தொழில் வளம் நிறைந்த நகரம் இன்று நலிவடைந்த நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இன்று மோட்டார் பம்புசெட், வெட் கிரைண்டர்  தயாரிக்கும் தொழில்கள் மட்டுமல்ல எல்லாத் தொழில்களும் இங்கு மிகவும் நசிந்து விட்டன.  பருத்தி ஆலைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. தொழில் நகரமான தென் இந்தியாவின் மான்செஸ்டர் இன்று “அப்பிடினா என்ன..”? என்று கேட்கும் நிலமைக்கு வந்துவிட்டது ! தொழில் சாலைகளில் வாரத்திற்கு நான்கு  நாளுக்குத்தான் வேலையிருக்கு. அதிலும் கரண்ட் கட் ஆயிருச்சுனா அதுவும் இல்ல. இந்த நாலு நாள் கூலிய வச்சு எப்பிடி குடும்பம் நடத்துறது..?” முபாராக்கின் ஆதங்கம் மட்டுமல்ல இது. கோவைவாசிகள் ஒவ்வொருவரின் நிலையும் இதுதான். மிகவும் இக்கட்டான சூழ் நிலைக்குத் தள்ளப்பட்டு  தினம் தினம் நொந்து வாழும் வாழ்க்கையாகிவிட்டதாக  தொழிலாளிகளும், அன்றாடம் காய்ச்சிகளும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோரது நிலையும் இப்போது இப்படித்தான் இருக்கிறது. வசதி படைத்தவர்களுக்கான உலமாக சுருங்கி விட்டது இன்றைய நவீன உலகம். உலகமயமாக்களின் விளைவு இது.

நானும் ஒரு ஒர்க் ஷாப் தொழிலாளியாகத்தான் என் வாழ்க்கையை அப்போது ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் மதிய உணவு சாப்பிட்டவுடன்  பத்து நிமிஷம் ஓய்வு எடுக்கக் கூட முடியாது! எல்லாம் அவசர வேலைகள். உடனுக்குடன் முடித்தாகணும். தினம் ஓவர் டைம் செய்தாகணும். ஒரு நாள் கூட நேரமாகக் கிளம்பி வர முடியாது. இன்னிக்காச்சும் மாலை சினிமாவுக்குப் போகலாம் என்று நினைத்துக் கொண்டிருப்போம். அஞ்சு மணிக்கு டானென்று வந்து விடுவார் முதலாளி. “யாரும் போயிராதீங்க. ஃபைவ் எச்பி  மோட்டார் காலைல டெலிவரி குடுக்கணும். இதா இப்ப ரப் காஸ்டிங்க் வந்துரும். ஆஃப் நைட் இருந்து முடிச்சுட்டுப் போயிருங்க..” என்பார். அதே போலவே சனிக்கிழமை  தோறும் புல் நைட் வேலை செய்தே ஆகவேண்டும். செய்யாவிட்டால் அந்த வாரத்தின் சம்பளம் தரமாட்டார்! அடுத்த வாரம் வாங்கிக்குங்க என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பிப்போய் விடுவார். அன்று வேலை செய்ய சங்கடப்படுவோம். ‘நோ ஒர்க்..’ என்று வேலை இல்லாமல் சங்கடப்படுகிறார்கள் இன்று! காலமாற்றம் செய்யும் கூத்து! கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து விட்டன. பெற்றோர்களை மதிக்காத தலைமுறை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. கணவன், மனைவிகளிடையே கருத்தொற்றுமை இல்லை! குடும்பத்தில் சகோதரத்துவம் குலைந்து விட்டது. மதப் பூசல்கள் பெருகி விட்டன. நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை பெருகி நிம்மதியற்ற  வாழ்க்கையாகி விட்டது! உள்ளங்கையில் உலகம் சுருங்கி விட்டதைப் போல   மனித மனமும் சுருங்கி விட்டது.

முபாரக் வண்டியை செலுத்திக்கொண்டே இருந்தான். தோட்டச்சாலைகள் எல்லாம் காணாமல் போய் சாரமேட்டின் கடைப் பகுதி வரை குடியிருப்புகள் நீண்டு கிடந்தன. “என்னடா இது சாரமேடா..? இப்பிடி மாறிப்போச்சு..!” என்றேன். கரும்புக்கடை மெயின் ரோட்டிலிருந்து உள்ளே ஒரு கிலோமீட்டர் தூரம் வரைதான் சாரமேடு. கடைசிப் பகுதியின் அடையாளமாக சாலையின் இரண்டு பக்கமும் பெரிய புளியமரங்கள் சாலையை ஆக்கிரமித்துக்கொண்டு நின்றிருக்கும். அதன் வேர்பகுதியில் வீடு வேயும் மட்டை பின்னுபவர்கள் மட்டை பின்னிக் கொண்டிருப்பார்கள். இங்கே வந்துதான் வீடு வேய மட்டை வாங்கிச் செல்வார்கள். எத்தனை.செமை வேண்டும் என்பதை முன் கூட்டியே ஆர்டர் கொடுக்க வேண்டும்.   இங்கிருந்து அடர்ந்த தோப்புக்குச் செல்லும் ஒத்தயடிப் பாதை ஆரம்பமாகிவிடும்.

இப்போது அங்கே கிரசண்ட் மெட்ரிகுலேசன் ஸ்கூல் வந்து இடமே மிக மாறிப்போய் இருந்தது. அதையொட்டி இங்கும் நிறைய குடியிருப்புகள். இங்கிருந்தும் இன்னும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளே குடியிருப்புகள் நிறைந்திருந்தன. எல்லோரது வீட்டின் முன்பும் மூடி மீது துணி கட்டப்பட்டு பிளாஸ்டிக் டிரம் வரிசையாக இருந்தது. “இங்கெல்லாம் நல்ல தண்ணி இருக்கா..?” என் சந்தேகத்தைக் கேட்டேன். “லாரித்தண்ணிதான் …எல்லா வீட்டு முன்னாலயும் பாக்குறியே டிரம்… ரெண்டு வாரத்துக்கு ஒருக்கா வரும். ”

மக்கள் எங்கும் குடியிருக்கத் தயாராகிவிட்டார்கள்..! எத்தனை வயல்வெளிகளை, காடுகளை அழித்தாலும் போதவில்லை. என்னைப் போல மக்கள் எல்லோரும் மனை வாங்க அலைந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு பயிரிடவும் , வெள்ளாமை விளைவிக்கவும் விளை நிலங்களும் வயல்வெளிகளும் இருக்கவே இருக்காது ! பேராசை பிடித்த மனிதர்களால் மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்ச இயற்கையும் சூறையாடப்பட்டு விடும் ! இன்னும் உள்ளே செல்லச் செல்ல , மிச்சம் இருந்த வயல்வெளிகளில் கல் நட்டு , சைட் பிரிக்கப்பட்டு போயஸ் கார்டன் பேஸ் I என்று போர்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில்  வண்டியை நிறுத்தினான் முபாரக். கொஞ்சம் தள்ளி போயஸ் கார்டன் பேஸ்II, ஜெஜெ. நகர் என்ற பெயர்களிலும் சைட் பிரிக்கப்பட்டிருந்தது. போயஸ் கார்டன் சென்னைல இருக்கு..! இங்க கோவைல ஒரு கிரமத்திற்குள் தோப்பை அழித்து போயஸ் கார்டனா..? என் சந்தேகத்தை முபாரக்கிடம் கேட்க, “எல்லாம் கட்சிக்காரங்கதா அப்பத்தானே அரசு அனுமதி கிடைக்கும்….” என்று சிரித்தான். “என்ன ரேட்..?” என்றேன். “கம்மிதா. சென்ட் அஞ்சு லட்சம்…” என்றான். மெயின் ரோட்டுக்குப் போக நாலு கிலோமீட்டர் நடக்கணும். “நல்ல தண்ணி…?” “வீடு கட்டி ஜனங்க குடி வந்ததும், லாரித் தண்ணி வருமே…..” வீடு கட்டத் தண்ணி வேணுமே..?” “நீதான் போர் போடணும்…..”

“எந்த வசதியும் இல்லாத இந்த எடத்துல ஒரு சென்ட் அஞ்சு லட்சம்..! பகல் கொள்ளைடா ! “ என்றேன் வருத்தத்துடன். “இங்க இதுதா கம்மி ரேட். வர்ற வழில முன்னாடி ஒரு இடம் காலியாக் கிடந்ததே அங்க ஏழு லட்சம். அதுக்கும், இதுக்கும் எவ்வளவு தூரம்..? குனியமுத்தூர்ல ஒரு சென்ட் ஒன்பது லட்சத்திலிருந்து பண்ணண்டு லட்சம் வரைக்கும் போகுது. அதும் ஜெஜெ நகரத் தாண்டி…இன்னும் உள்ளுக்குள்ள..” என்றான். அரசு உத்தியோகம் கிடைத்ததும்  மனைவி குழந்தைகளுடன் வேறு மாவட்டம் சென்று இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருந்ததன் விளைவு விரும்பிய இடத்தில் தோதான விலைக்கு இடம்  கிடைக்காமல் அலைய வேண்டியதாகி விட்டது. சொந்த ஊரான இங்கு அப்பவே இடம் வாங்கிப் போட்டிருக்கணும்…பணி ஓய்வுக்கு இன்னும் நான்கு வருடங்கள் இருக்கும் நிலையில் சொந்த ஊரில் வந்து செட்டில் ஆக நினைத்தது தப்பாகி விட்டது. முன்னமே இடத்தை வாங்கிப் போட்டிருக்கலாம்….இப்ப இரண்டரை சென்ட் வாங்க பதிமூணு லட்சத்துக்கும் மேல் வேண்டும். என்ன செய்வது…? அவ்வளவும் இப்போது உடனே புரட்ட முடியாது.   ”என்னடா யோசன.?” சிந்தனையைக் கலைத்தான் முபாரக். நான் எதுவும் பேசாமல் அவனைப் பார்க்க, ”சொந்த வீட்ட விட்டுட்டுப் போகும் போதே நா சொன்னேன். நீ கேக்கல…..உம்மாவும், தம்பிகளும் வச்சுட்டுப்போட்டும்னு பெருந்தன்மையா விட்டுட்டுப் போனே… இப்ப அந்த சொத்து உனக்கு உபயோகப்படுதே….உன்னோட பங்கக் கேட்டு வாங்குடா. அந்தப் பணத்துல இங்க எடம்  வாங்கலாமல்ல..?  உடனே பணத்த வாங்குற வழியப்பாரு…. யாரையுமே நம்ப முடியாத காலம்டா இது….” என்றான் முபாரக்.

‘’அதுக்குத்தா வந்திருக்கேன். நாளைக்கு முடிவு சொல்றேன்..” என்றேன்  நம்பிக்கையுடன். “உம்மா வீட்டுக்குத்தானே….?” என்றான். ‘‘ஆமாடா..”

‘நா கொண்டுபோய் இறக்கிவிடவா…?”’வேண்டாம். பக்கம்தானே அப்பிடியே நடந்து போயிக்கிறேன்..”   ‘‘நாளைக்கு முடிவச் சொல்லிட்டினா அட்வான்ஸ் கொடுத்துரலாம்..என்ன..” என்றபடி   பேருந்து நிறுத்தத்தில் என்னை இறக்கி விட்டான் முபாரக்.

வாப்பாவின் சொத்தில் எனக்கான பங்கு  ஆறேழு லட்சம் வரும். மீதியை நாம் போட்டு பிறந்து வளர்ந்த ஊரிலேயே ஒரு இடம் வாங்கி வீடு கட்டி வரலாம் என்பதுதான் என்னுடைய நீண்ட நாள் கனவு. குடும்பச் சொத்தை விற்பது தொடர்பாக ரொம்ப நாட்களாகவே பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. தம்பிகளிடம் பொறுப்பை   ஒப்படைத்திருந்தேன். அதன் பிறகு கொஞ்ச காலமாகவே இந்தப் பக்கம் வரவே இல்லை. மெயின் ரோட்டிலிருந்து வலது புறம் திரும்பி நடந்தேன்.தெரிந்தவர்கள் யாரும் கண்ணில் அகப்படவே இல்லை!  சந்து முனை திரும்பியவுடன் எங்கள் பரம்பரை வீடு தெரிந்தது. வீட்டின் தோற்றம் மிக மாறியிருந்தது! விற்கப் போகும் வீட்டை எதற்கு புதுப்பித்திருக்கிறார்கள் என்று எனக்குள் கேள்வி எழுந்தது. விற்க வேண்டாம் எல்லோரும் ஒன்றாகவே இருக்கலாம் என்று தம்பிகள் முடிவு செய்திருப்பார்களோ….! பலவாறு யோசனைகள் ஓட வீட்டை நெருங்கினேன். சாத்தப்பட்டிருந்த கதவை மெல்லத் தட்டினேன். உம்மாதான் திறப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பில் சட்டென்று உள்ளே நுழைய முற்பட, வேறு ஒரு பெண் காதவருகே நின்று கொண்டு ” யார் நீங்க..?” என்றாள் கோபத்துடன். அதிர்ச்சியடைந்தவனாக  விலகி நின்று, “எங்கம்மா வீடு இது….நீங்க ?” என்றேன் தயக்கத்துடன். “ஓ ! ஸாரி….இந்த வீட்ட நாங்க வாங்கி நாலஞ்சு மாசமாச்சே…..உள்ள வாங்க“ என்றாள். மேலும் அதிர்ந்து போனேன்.

நான் வாசலில் நின்றபடியே வெளியூரில் இருக்கும் என் விவரங்களைச் சொல்லி  இந்த வீட்டை வாங்கிய விவரங்களைக் கேட்டேன். சுருக்கமாக சில தகவல்களை மட்டும் சொன்னாள். இப்போது அவர்கள் எங்கு குடி போயுள்ளார்கள் என்கிற விவரம் தெரியுமா என்று கேட்டேன். “அந்த விவரம் ஏதும் தெரியாது சார்..” என்றாள். என்னை என் தம்பிகள் ஏமாற்றியிருப்பதை அவள் புரிந்து கொண்டதை அவளுடைய கண்கள் எனக்குக் காட்டியது. மேற்கொண்டு எதுவும் கேட்காமல் கனத்த மனதுடன் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். வீட்டை விற்கும் போதும் என்னிடம் தகவல்  சொல்லவில்லை. சரி உடனே கைமாற்றியிருக்கலாம்…..இப்போது அவர்கள் குடி வந்து நான்கு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது…உம்மாவும் ,தம்பிகளும் வேறு வீட்டுக்கு குடி பெயர்ந்தும் விட்டார்கள் ஏன் என்னிடம் எதையும் சொல்லவில்லை..? என்ன காரணம்…? உம்மா எப்படி இதற்கு சம்மதித்தார்கள்..? எதுவும் புரிபடவில்லை.

எல்லோரும் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டார்களோ…. தம்பிகளை நம்பி பொறுப்பை ஒப்படைத்தது தவறாகிவிட்டதோ…! எல்லாம் ஒண்ணு சேர்ந்து வீட்டை விற்று பங்கு பிரித்துக் கொண்டு எனக்குத்  தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி விட்டார்களா …? என் கையெழுத்து இல்லாமல் எப்படி பத்திரம் எழுதியிருப்பார்கள்…..இந்தக் கேள்வி என்னைக் குடைந்தது! இது எப்படி சாத்தியம்..? இருக்காது…..பிறகு ஏன் இதுவரை என்னிடம் எதுவும் சொல்லவே இல்லை!  எல்லோரும் எங்கு போய்விட்டார்கள்..? இதையெல்லாம் மனைவியிடம் போய் எப்படி சொல்வது?. முபாரக்கிடம் சொல்லி தீர்வு கேட்கலாமா..? அவனிடம் சொல்ல ஒரு வித அவமான உணர்வு எழுந்தது. எனவே சொல்ல மனம் வரவில்லை. என்னை  ஏமாளி என்று கண்டபடி திட்டுவான். ‘விடாதே..’ என்று .சண்டை கூட போடச் சொல்வான்…..கேஸ் கூட போடச் சொல்லலாம்… முபாரக் சொன்னதைப் போல இதுவும் ஒருவகை அபகரிப்பு….. திருட்டு அல்லது சூறையாடல்தானே..!

வெகுண்டு பேசத் தெரியாத என்னை, அண்ணன் என்று கூட பார்க்காமல்- மதிக்காமல் தம்பிகள் செய்த துரோகத்தை என்னால் தங்க முடியவில்லை. என்னையறியாமல் கண்ணீர் வழிந்தது. மெல்ல கண்களைத் துடைத்துக் கொண்டேன். இப்போது என்ன செய்வது..? முபாரக்கிடம் சொல்லக் கூட மனம் வரவில்லை. உடனே ஊருக்குக் கிளம்பிவிட மனம் பரபரத்தது. ‘’யாரையுமே நம்ப முடியாத காலம்டா இது..” முபாரக் அலியின் இந்த நிதர்சனமான கூற்றை எண்ணி வியந்தவாறு மனம் முழுக்க ரணத்துடன் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். பாலத்தின் மீது நடக்கும் போது கீழே பார்த்தேன்.  வெறும் சகதியாய் வறண்டு வரியவனின் ஒட்டிய வயிறு போல அல்லது கதைச் சுருக்கம் போல சுருண்டு கிடந்தது சூறையாடப்பட்ட நொய்யல் ஆறு ! .

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “சூறையாடல்”

 1. நகரமயமாக்கலையும் நீர் ஆதார ஆக்கிரமிப்புகளையும் குறித்த கதை… படிக்க சற்று கட்டுரை வடிவில் வரட்சியாக உள்ளது.. ஆனால் முபாரக்கின் இளம்பிராய அனுபவம் கவிதை…

 2. சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய சமீபத்திய உரை ஒன்றைக் கேட்ட பின்பு மிகவும் மனம் நொந்து போய்
  இருந்தேன்.அப்போது வாசிக்க நேர்ந்ததால் கதையில் வரும் மனித ஆக்கிரமிப்புகள் பெரும் கோபத்தையும், அதன் விளைவாக நம் பங்குக்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் உணர வைத்தது கதையோட்டம்! ஆனால் தனிமனித முயற்சியின் சாத்தியக்கூறுகள் இவ்விஷயத்தில் மிகவும் சொற்பமே என்று உணரும் போது ஏற்பட்ட சோகம் தான் சொல்லில் அடங்காதது.

  சத்யா ராமராஜ் உத்தமபாளையம்

 3. பா மோகனசுந்தரபாண்டியன்

  ஆசிரியரின் கதையை படிக்கும் போது ஏதோ ஒரு உறுத்தல் மனதில் எழுகிறது. இயற்கையோடு வாழ்ந்தவர்களின் அடுத்த தலைமுறை முற்றிலுமாக செயற்கையாக வாழும் நிலையில் உள்ளோம். அனைவரும் தத்தம் தேவையை குறைத்து இயற்கை சார்ந்து வாழ வேண்டும் என தோன்றுகிறது.

  பா மோகனசுந்தரபாண்டியன்
  காரைக்குடி
  8220119462

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: