சூடுபரவுதல்

4
(29)

மூத்தவன் பிள்ளைகள் இரண்டும், கதவோரமாய் உருண்டு போய்க் கிடந்தார்கள். தன்னைப் போலவே அவர்களும் விரிப்பானைத் துறந்து தரையில் உறங்கிக் கொண்டிருந்தது கண்டாள் சரசு எழுந்துபோய் பேரப்பிள்ளைகளை ஒழுங்குபடுத்திப் படுக்கச் செய்ய எண்ணமில்லாத அரிதுயிலில் இருந்தாள் .

 

அதுஎன்னவோ விடியற்காலையில்தான் – அதிகச் சிந்தனை இல்லாத – ஆழமான உறக்கம் வந்து தொலைகிறது. வெக்கையும் வியர்வைக் கசகசப்புமாய் ராப் பொழுது முழுக்க உருண்டு புரண்டே கழிகிறது. பாய் விரித்தாலும் சமுக்காளம் போட்டாலும் வெறுந்தரையில் தான் படுக்கப் பிடிக்கிறது.

 

தரைத்தளம் பெயர்ந்து சொள்ளைசொள்ளையாகக் கீடக்கிறது. ஆனாலுமந்த சொரசொரப்பும், முள்முள்ளாய்க் குத்தும் அதன் கடினத் தன்மையும் சரசுவுக்கு, சந்தியா அப்பாவின் சவரம் செய்யாப்படாத தாடிமயிர்க்குத்தலைப் போல புருபுருக்கும்.

 

கலியாணம் முடிச்ச கொஞ்சகாலம்தான் அது, தாடி சிரைத்து மழுமழு வெனத் திரியும். அந்த நாளில் கன்னத்திலும் முதுகிலும் நெஞ்சிலும் ஒரு சூடு பரவும். கதகதப்பாய்.. ஒத்தடம் போல; ரெண்டு பிள்ளைகள் பிறந்தது தான் தாம்சம் ; முள்ளம் பன்றியாகத்தான் கண்டிருக்கிறாள். “குத்துது மசுரேய்..” – என்று விலகினாலும் கூட, அந்தச் சுகம் உடம்பெங்கும் பரவிவர விருப்பமாகவே இருந்தது. சந்தியாஅப்பாவும் அந்தவிசய்த்தில் பெரிய களவாணி. மனசில் ஓடுவதை மறுபேச்சில்லாமல் நடத்தி முடிச்சிவிடும்..

 

விசுக்கென படுக்கையிலிருந்து எழுந்தாள் சரசு. “ச்சே என்னா ஈனத்தன மான நெனப்பு…? பேரம்பேத்தி எடுத்த நாளைல.. சீச்சீ…!”

 

கூந்தலை அவிழ்த்து தட்டி கொண்டை போட்டுக்கொண்டாள். பிள்ளைகளைத் தூக்கி படுக்கையில் போட்டு தலகாணியை அணைக் கொடுத்தாள் .

 

கதவைத்திறந்து வெளியேபோய், ஆளரவம் பார்த்து சாக்கடையில் கால் அகட்டி-நின்றவாக்கில்  சிறுநீர் கழித்து, முகத்தைக் கழுவிக்கொண்டு வாசல் தெளிக்கலானாள். தலைக்குமேலே நிலா பழுத்தபழமாய்த் தொங்கிக் கொண்டிருந்தது. மேகத்துணுக்குகள் அதனை மறைப்பதும், பின் விலகிப் போவதுமாய் நாடகமாடிக் கொண்டிருந்தன. வீட்டுக்கு முன்புறம் இருந்த ஒரு குப்பைமேட்டில் நின்று கொண்டிருந்த சேவலொன்று தன் நீண்ட கழுத்தை நீட்டிமடக்கி பெருங்குரலெடுத்துக் ‘கொக்கரக்கோ..கோ ‘ எனத் தொடர்ச்சி யாய் நாலைந்து முறை கூவியது.

 

“அங்கிட்டுப் போ.. கூட்டித்தெளிச்ச வாசல்..ல பேண்டு வச்சிட்டுப் போயிறாத..!’ – என்றபடி சிறுகல்லெடுத்து அந்தச் சேவலை விரட்டிவிட்டாள் ச்ரசு.

 

கோலம் போட்டுமுடிக்க, தெருவிளக்கு அணைந்தது. அடிகுழாயில் போய் உப்புத்தண்ணி எடுத்துவந்து தொட்டியை நிரப்பிக் கொண்டிருந்தபோது, மேற்குத்தெருவிலிருந்து சீட்டுக்கார சுமதியின் மகள் ‘கொடுவா’ வடிந்த வாயும் கொட்டாவியுமாய் வந்து நின்றது.

 

“என்னா ஆத்தா இன்னேரம்..?” – சரசு.

 

“மம்மி சீட்டுப்பணம். வாங்கியாரச் சொல்லுச்சு..!” சாவி கொடுத்த பொம்மையைப் போலப் பேசியது அந்தப்பிள்ளை. முழங்கால்வரைக்கும் குட்டைப் பாவாடை போட்டிருந்தது. கெண்டங்கால்கள் ரெண்டும் சதைப் பற்று மிகுந்து கரணைகரணையாய் மினுங்கியது. கன்னங்களும் ஊதிவச்ச பலூனைப்போல கிள்ளிப்பார்க்க ஆசையாய் இருக்கும்.

 

”காலைல, படிச்சுக்கிருந்தியா கண்ணூ… மொகங்கூட கழுவாம வந்திருக்க..” சரசுவுக்கு அந்தப் பிள்ளையின் வாய்க் கறையை கழுவிவிட கைதுடித்தது.

 

“அதெல்லாம் பேசக்கூடாது.. ரெண்டு… ரெண்டுவாரம் சீட்டுப்பாக்கி இருக்க்..தூ..!” – கீச்சுக் குரலில் பெரியமனுஷியாய்ப் பேசியது.

 

“வாய்ல கொடுவா எறங்கியிருக்கு ராசாத்தி.. தொடச்சு விடட்டுமா..?” – கை நீட்டினாள் சரசு.

 

கொண்டைச்சேவலாய் விசுக்கென விலகியது. அந்தப்பிள்ளை. சடாரெனக் குனிந்து தனது பாவடை நுனியால் வாயைத்துடைத்துக் கொண்டது. ஆன்லும் கறை மறையவில்லை.

 

“தண்ணிய வச்சுத் தொடைக்கணும் கண்ணு..”

 

“வாணாம்…. அம்மாட்ட கழுவிக்கறே… பணத்தக் குடுங்க..”

 

“சித்த கழிச்சு.. ஆயாவ வந்து பாக்கறேன்னு சொல்லு கண்ணு…”

 

“இப்பிடியே ஆளாளுக்குப் பணத்த வெச்சுக்கிட்டா, வாங்குனவங்களுக்கு குடுத்தவகளுக்கு எப்பிடி நாயமா நடக்குறது..? மொதல்ல பணத்தக் எடுங்க. இல்ல… வட்டி போடவான்னு கேட்டாங்க மம்மி..”

 

“அய்யோ.. அதெல்லாம் வேணாங்கண்ணு.. இன்னிக்கி காசு கெடச்சுரும்”…- என்ற சரசு, முந்தானை முடிச்சிலிருந்து ஒருரூபாய் நாணயம் ஒன்றை அவிழ்த்துக் கொடுத்தாள்.  “வச்சுக்க முட்டாய் வாங்கித் தின்னுக்க..”

 

ஒரு தட்யக்கத்தின் பிறகு வாங்கிகொண்ட சிறுமி, ” மம்மி கிட்டக்க என்னா சொல்ல…? “ எனக் கேட்டது.

 

“சாயங்காலம்.. இல்லாட்டி நாளைக்கி கண்டிசனா காசு குடுத்துரு வாங்களாம்.. பிள்ளைக பூராம் காச்சலாப் படுத்திருக்குனு சொல்லுதாயி..”- என உறங்கிக் கொண்டிருந்த பேரப்பிள்ளைகளைக் காண்பித்தாள்.

 

வெளியிலிருந்து எட்டிப் பார்த்த சிறுமி, “ஓ பீவரா.. செரி..” தலையாட்டியது ;தொடர்ந்து, “டூ ரூபீஸ் இருக்குமா… மஞ்ச் டூ ரூபீஸ் சொல்றாங்க…” என்று சரசுவிடம் மேலும் ஒருரூபாய் வாங்கிக் கொண்டே நகர்ந்தது.

 

கணக்குப் போட்டுப் பார்த்த சாரசுவுக்கு, இன்னமும் யார்யார் வருவார்களென தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை… வரட்டும்.

 

வேலைக்குக் கிள்ம்புவதற்குள் அழுக்குத்துணிகளை எடுத்து துவைத்து அலசிப்போட்டாள். அதற்குள் பிள்ளைகள் முழித்துக் கொண்டன. தூக்குவாளி தந்து கடையில் காப்பிவாங்கி வரச்சொன்னாள். பெரியவனிடம் கும்பாவைக் கொடுத்து நடுவீட்டுக்காரம்மாளிடம் இட்லி பணியாரம் வாங்கிவரச் செய்தாள், தனக்கென நாலு பணியாரம் மட்டும் பழைய பேபபரில் சுருட்டி மடியில் கட்டிக்கொண்டு, மீதியை பேரபிள்ளைகளுக்கு தின்னக் கொடுத்தாள்.

 

”பணியாரத்த தின்னொபோட்டு அவுகவுக வீடுகளுக்குப் போய்ச்சேருங்க அப்பத்தா வேலக்கிப் போய்ட்டு சாய்ங்காலமா வருவேன்…” பிள்ளைகளின் கன்னம் பிய்த்துக் கொஞ்சி அனுப்பிவிட்டாள். துவைத்த துணிகள் காற்றுக்கு பற்க்காமலிருக்க, முனைகளை இழுத்து முடிச்சிப் போட்டுவிட்டாள். வீட்டுக் கதவைப்பூட்டி சாவியை மேற்கூரையில் சொருகிவிட்டு நடந்தாள்.

 

ஜின்னிங்பாக்டரி எனப்படுகிற பருத்தி அரவைமில்லில் கங்காணி வேலை. வேலையாட்கள் வருவதற்கு முன்னால் போய் நிற்கவேண்டும். ஆட்கள் தேர்வு ; வேலைபகிர்வு, எல்லாம் சரசுதான். எதிர்பார்த்தது போலவே மில்வாசலில் வேலையாட்கள் குழுமியிருந்தனர். கணக்கப்பிள்ளையிடம் போய் வேலைவிபரம் தெரிந்துவந்து ஆட்களைப் பிரித்துவிட்டாள்.

 

பதினோறுமணிவாக்கில் வெளியூரிலிருந்து லாரியில் பருத்தி வந்து இறங்கியது.முன்னெல்லாம் சரக்கு வந்து இறங்கியடும் தராசு நிறுத்தி எடை சரிபார்த்த பிறகே பருத்தியை களத்தில் தட்டுவார்கள். இப்போது வேப்ப்ரேஜ் வந்துவிட்டதால் தாட்டுகளை(பருத்திச்சாக்கு) எண்ணி சரிபார்க்கும் வேலையும் கிடையாது. நேரடியாய் களத்தில் பருத்தியைக் காய்ச்சலுக்கு அனுப்பிவிடலாம்.

 

மில்லைவிட்டு லாரி வெளியேரியதும், யாரோ தன்னைத் தேடிவந்தி ருப்பதாக வாட்ச்மேன் வந்து சொன்னார்.

 

அரிசிக்கார பிச்சையக்கா.

 

கணக்காப்பிள்ளை மகள் சடங்குக்கு, முக்கால் குண்டால் அரிசி தன்கணக்கில் வாங்கிக் கொடுத்திருந்தாள். அது ஆறேழுமாதம் இழுவயாய் ஓடிவிட்டது.

 

“எத்தன தரம் டீ அலயிறது…? கால் செருப்புகூட தேஞ்சிபோச்சி..”

 

“நாந்தே இன்னிக்கித் தாரேன்னு சொல்லி இருந்தேன்..ல..க்கா.. கனகு அத்தாச்சிகிட்ட கந்து முடியிது.. சாய்ங்காலம் டாண்னு வந்திரும்க்கா….”

 

”இது ஒனக்குத் தேவையா..? யாரோ ஒருமகராசனுக்கு நீ ஏஞ் செமக் கனும்..? ஆளக் காமிச்சா கணக்கு முடிஞ்சிஒரும்ல..”

 

“வாணாம்..க்கா, வர்சமெல்லா வேல குடுக்குற சாமி அது. வாய்விட்டு அரிசி வாங்கிக்குடு சரசுன்னு கேட்டாரு.. அதுக்காக அவர்ட்ட காசக்கேட்டா.. அதப்போல ஒரு தர்த்திரம் ஆகாதுக்கா..”

 

உண்மையில் கணக்காப்பிள்ளை பணம் வாங்கிக் கொள்ளத்தான் சொன்னார். ஒருதரம் ரூபாயை எண்ணிநீட்டினார். மறுத்துவிட்டாள். ஐநூறு ஆயிரம் வரலாம். அது அவரிடமே உறைமோராய் தங்கிவிட்டால் வருசமெல் லாம் தட்டுப்பாடில்லாத வேலைநிச்சயம். தவிரவும், அம்பது நூறு கைமாத்து விற்குக் பஞ்சமிருக்காது.

 

பிச்சையக்காள் கிளம்புமுன் மீசைக்கார பாண்டி வந்துவிட்டார்.,”ரகள பண்றியா..? நாலுமாசம் வட்டி பாக்கி…!” – அசலைப் பற்றி எப்போதுமே பேச்சு கிடையாது.

“பொம்பளப் பிள்ளையாச்சேன்னு ஈவுசோவு பாத்தா, ரெம்பத்தே படங்காட்ற…?

 

அவரிடம் கொஞ்சம் பொய்யும் மெய்யுங்கலந்து  பதில் சொல்ல வேண்டியிருந்தது. வேலை மத்துவம்..; வீட்டுக்காரர் சைக்கிளில் போனபோது ஆட்டோ இடித்து ஆஸ்பத்திச் செலவு ஆகிப்போனது… அவருக்கும் கனகு அத்தாச்சி கதையே ஒப்பித்தாள்.

 

“சாயந்தரம் தரலைனு வையி… எதிர்வட்டிதே.. அப்பறம் யெம் பொண்டாட்டி வந்தான்னா… நைட்டு தங்கல் போட்டுத்தெ வசூலிப்பா..ஆமா.”

 

இரண்டுபேரையும் சரிக்கட்டி அனுப்பிவிட்டு வேலைத்தளம் திரும்புகிற போது கணக்காப்பிள்ளை திட்டுவார் என எதிர்பார்த்தாள். அப்படி நடக்கவில் லை. உள்ளெ வேலை செய்யும் சிலபேருக்கு மதியச் சாப்பாடு வந்திருந்தது. அதை உரியவர்களிடம் சேர்க்கச் சொன்னார் வாட்ச்மேன்.

 

முன்னெல்லாம் சரசுவுக்கும் மக்கமார் வீட்டிலிருந்து இதுபோல் சாப்பாடு வரும். மத்தியானம் ஆவிபறக்கத் தின்னுகிற அந்தக் கொடுப்பினை அற்றுப்போய் ரெம்ப காலமாகி விட்டது. சமயத்தில் என்றாவது ஒருநாள் மகன்வீட்டிலிருந்தோ மகள்வீட்டிலிருந்தோ..’கறிச் சோறும்மா.. கேப்பக்கழி கிண்டுனம்.. ஒன் ஆவுகம் வந்திச்சி.. பச்சமொச்சக் கொழம்புன்னா ஆசயா திம்ப..!’ என்று கொண்டுவந்தால் சரசுவுக்குக் குலை நடுங்கும் ஒருநேரத்துச் சோத்துக்கு என்னவெல கேக்கப் போறாகளோ…!’ இந்த பயத்திலேயே உண்ணுகிற பண்டத்தில் ருசி கிடைக்காது. கோரிக்கை தெளிவான பிறகே மனசு ஆசுவாசப்படும்.

 

சந்தியாஅப்பா வீட்டுப்பக்கம் வருவதே கிடையாது. வந்தாலும் குளித்து துணிமாற்றிக்கொண்டு போய்விடுவார். காசுதருவது கிடையாது. ‘எம்புட்டுக் குடுத்தாலும் ஒனக்கு கடனடைக்கப் பத்தாது.. நிய்யே ஆண்டு ஒலப்பித் திரி’ சொல்லிவிட்டுப் போய்விடுவார். பெத்தபிள்ளைகள் ஏழும் பேரப்பிள்ளைகளை மட்டும் அனுப்பி வைப்பார்கள். தான் தின்னாலும் தின்னாவிட்டாலும் தன்னைத் தேடிவருகிற ‘பக்கிபதவல்’களை. பசியமத்தி நாலுவார்த்தை பேசி அனுப்பி மனசாறிக் கொள்வாள்.

 

சீட்டுப் பணமோ கந்துக்காசோ ஏதாவது இவள் கைக்குவருகிறதெனத் தெரிந்த மறுநிமிசமே பெத்தது ஆறும் – ஒன்று வெளியூர் – வரிசைகட்டி வந்து நிற்கும். எப்படித்தான் அது தெரியுமோ எந்த சோசியன் எடுத்துக் கொடுப்பானோ.. தெரியாது.

 

கணக்காப்பிள்ளை வீட்டிலிருந்தும் மதியச் சாப்பாடு வந்திருந்தது. சரசு திண்டுக்கல்காரர் கடைக்குப் போய் குடல்குழம்பு வாங்கிவந்தாள். புதன் சனி, கிழமைகளில் அவருக்கு வெடுக்கு’ இல்லாமல் சாப்பாடு செல்லாது. சாப்பிட்ட பாத்திரங்களை சரசுதான் கழுவிவைப்பாள். சரசுவுக்கென்றே சாப்பாட்டில் கொஞ்சம் மீதம் வைத்திருப்பார் கணக்கப்பிள்ள. அவரது வீட்டம்மாளும் கைப்பிடிச் சோறு சேர்த்துத்தான் அனுப்புவார், அந்தச் சாப்பாடே சரசுவுக்குப் போதுமானது. அடுத்து ராச் சோறுதான்.

 

முதுகைப் பொசுக்கிய வெய்யில், நாவை உள்ளிழுத்துக் கொண்டதைப் போல வெம்மை குறைந்திருந்தது. ஆனால் மேகக்கூட்டமாய் குவிந்திருக்கும் பருத்திக்குள் அது பதுங்கி இருந்து பருத்தியைத் தொட்ட கைகளெல்லாம் சுட்டு நிரூபித்தது.

 

தலை முக்காடுகளை களைந்துவிட்டு அன்றைய நாளின் இறுதிக்கட்ட வேலையினைத் துவக்கினர் பெண்கள். சொத்தைப் பருத்தி, அம்பாரப் பருத்தி என தரம் பிரித்து மேவலானார்கள். சரசுவும் உடன் நின்று வேலையை வேகப்படுத்தினாள். அவ்வப்போது ஜின்னிங் பக்கமும் தலைகாட்டிக் கொண்டாள். இதனிடையில் கனகு அத்தாச்சியும் நினைவில் வந்து போனது.

 

ஒண்ணுக்குப் போய்விட்டு களத்துக்குப் போக நினைத்த வேளையில் இளையமகன் தனது மகள் அசினோடு உள்ளேவந்தான். தாயைப் பார்க்க விரும்பியதால் வாட்ச்மேன் தாராளமனதோடு அனுப்பிவிட்டார் போலிருக்கிறது.

 

கையில் ஒரு பலகாரப் பொட்டலம்.

 

“வாடீ…வாடி என்னப்பெத்த ஆத்தா.. “ இரண்டு கைகளையும் நீட்டி பேத்தியை தூக்கினாள். கையிலிருந்த பொட்டலத்தை அப்பாவிடம் தந்து விட்டு பாட்டியிடம் மாறியது.எட்டுவயசுப்பிள்ளையை அப்படியே கட்டித் தூக்குவது சுலபமாயில்லை. இருந்தாலும் எட்டிய இடமெல்லாம் மொச்சு மொச்சு என கட்டிமுத்தம் தந்தாள்.

 

“அப்பத்தாவ மறந்திட்டியா..டி..ம்..? ஆளயே காணம்..?”

 

ஒவ்வொரு ஊரிலும் நடைபெறும் திருவிழாக்களுக்கு போய் பாயாசம், சர்பத், சுக்குமல்லி என்று தடம்பார்த்து வியாபாரம் செய்துவருவான். எப்போது எந்த ஊரில் இருப்பான் என்று யாரும் கண்டுபிடிக்க முடியாது. சில ஊர்களுக்கு பொண்டாட்டி பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு போய்விடு வான். நாலுபேரைப் போல இல்லாமல் நாடோடியாய்த் திரிகிறானே என்கிற வருத்தமும் சரசுவுக்கு அவன்மீது உண்டு

 

“இந்தா, இத அப்பத்தாளுக்குக் குடு..” – பலகாரப் பொட்டலத்தை அசினிடம் நீட்டினான் .

 

“அம்மாளுக்கு..? “

 

“ வேற வாங்கிக்கலாம்…! “

 

“சே…ரி..” என்றபடி பாட்டிக்குக் கொடுத்தது. “ எனக்கென்னாத்துக்கு கண்ணு.. “ சொல்லிக்கொண்டே சரசு பொட்டலத்திலிருந்து ஒரு பலகாரத்தை எடுத்துப் பிய்த்து அசினுக்கு ஊட்டி விட்டாள்.

 

“ எப்படா வந்த..?”  மகனை விசாரித்தாள்.

 

“ நால் நாளச்சு..! “

 

“யேவாரம் நல்லாருக்கா.. “ என்றவள் திடீரென ஞாபகம் வந்தவளாய், “இவுக ஆத்தா மாசமா இருக்காளமே.. எப்பிடி இருக்கா..?’

 

“ ம்.. உசுரோடதே இருக்கா..! “

 

அவனது அந்தவார்த்தை சரசுவின் செவியைக் கிழித்து, மூளைக்குள் குத்தியது.

 

“ஏவாரத்துக்கு வெளியூர் போனமகெ வந்தானா போனானா ; செத்தானா பொழச்சானா.. ஒரு விசாரிப்பு செஞ்சிருப்பியா..? வகுத்துப் புள்ளக்காரி என்னா செய்றா ஏதுசெய்றான்னு ஒரு எட்டு வந்து எட்டிப் பாத்திருப்பியா..? அதெல்லாங்கூட விடு இதும் ஓம்பேத்திதான.. ஊர்ப்பக்கிகள எல்லாம் வீட்டுக்குக் கூப்பிட்டு ஒறவு கொண்டாடுறீல்ல.. இதென்னா ஓங்கண்ணவா புடுங்குச்சு… ஒரு காலணாக் காசு இந்தான்னு கையில தந்திருப்பிய..?”

 

அவன்பாட்டுக்கு அடுக்கிக் கொண்டே போனான். சரசுவுக்கு காதே கேட்கவில்லை. பிரமை பிடித்தது போல நின்றாள் சரசு. மகன் போனானா மில் கேட்டுக்கு வெளியில் அவனும் நிற்கிறானா…

 

மேற்கில் சாய்ந்த அந்திவெய்யில் சுளீரென சுடுவதாய் உணர்ந்தாள். கேட் வாசலிலிருந்து வாட்மேன் அழைப்பது தெரிய அருகில் போனாள். நடந்தது முழுவதையும் அறிந்தவர். ” ஒருபேச்சு சொல்றேன் கேக்கறியா “ என்றார்.

 

கேட்டாள்.

 

அது கொஞ்சம் திகைப்பாய், திகில்மிகுந்ததாய் இருந்தது. அதே போதில் ஒருதீர்வாகவும் அது இருக்கக் கண்டாள்.

 

மெல்ல அதனைச் சொல்லிப் பர்ர்த்தாள். “எவனாச்சும், எவளாச்சும் காசுன்னு கேட்டு வந்தீக… பிஞ்சு போகும்.. குடுக்கமுடியாதுன்னு சொன்னா என்னா செஞ்சிருவ..? குடுக்க்த்தே முடியாது..!”

 

சொல்லச் சொல்ல உடம்பில் சூடுபரவுவதாய் உணர்ந்தாள்.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 29

No votes so far! Be the first to rate this post.

217 thoughts on “சூடுபரவுதல்”

 1. Mallikapadmini, 9840239881

  தாய்மை என்பது புனிதமானது தியாகத்தில் வளர்ந்தது என்று கூறுவதன் விளைவே இந்த சூடு பரவுதலில் வரும் தாய்க்கு ஏற்பட்டுள்ள அவல நிலைமை… தாய்மை என்பது அன்பின் பிறப்பிடம் என்று கூறாமல்… தியாகம் என்று கூறப்படுவதால் தன் தேவைகளையும் தன் விருப்பத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டு தாயனவள் குழந்தைகளுக்கு அவர்களது திருமணத்திற்குப் பின்பும் சேவை செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகும் மோசமான நிலைமையை தோலுரித்துக் காட்டியுள்ளார் கதாசிரியர். இது இன்றைய காலகட்டத்தில் பல பெற்றோர்களுக்கு குறிப்பாக தாய்மார்களுக்கு இது ஒரு உளவியல் பிரச்சினை…குழந்தைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அவர்களை சுதந்திரமாக வளர்க்காமல் தன்னை சார்ந்தே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு என்று கூட கூறலாம் .. மிக அருமையான கருவை கையாண்டுள்ளார் ஆசிரியர்.

 2. சிபானா சஸ்லீனா

  சூடு பரவுதல்
  காமுத்துரை வட்டாரவழக்கு படைப்புகளுக்கு பெயர் போனவர் .அதில் சில நாவல்களையும் பல சிறுகதைகளையும் படைத்துள்ளார்.

  இந்தக் கதை புதிய வாசிப்பாளர் களுக்கு ஏற்ற வகையில் எளிய நடையில் அமைந்திருக்கிறது .வட்டாரச் சொற்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பூத்து நிற்கின்றன

  சரசு, மேற்கு தெரு வீட்டுக்கார சுமதி ,அவளுடைய மகள் ,வாட்ச்மேன் ,அரிசி கார பிச்சை அக்கா ,கணக்கா பிள்ளை ,மீசைக்கார பாண்டி ,சந்தியா அப்பா ,கணக்கா பிள்ளை வீட்டு அம்மாள் ,இளைய மகன் ,அசின் இப்படி கதை முழுக்க 12 கதாப்பாத்திர படையையே நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். கதாபாத்திரங்கள் வழியாக கதை சுவாரஸ்யமாக நகர்கிறது கதையின் நாயகி சரசு பேரப்பிள்ளைகளை எடுத்து விட்டாலும் நடுத்தர வயது காரி என்று சொல்லும் அளவுக்கு உழைப்பும் தாய்மையையும் அள்ளி கொடுக்கிறார்.

  நமது வாழ்க்கையில் கடந்து செல்கிற பல பேர்கள் சரசுவை போல் பேரப்பிள்ளைகள் எடுத்தும் தனது குடும்பத்தினரால் பயன்படுத்தப்படுகிறார்கள். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் உடல் உழைப்பு இருக்கிறவரை எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்களுக்கு என்று ஒன்றும் வைத்துக் கொள்ள மாட்டார்கள் .அவ்வளவு அன்பும் கருணையும். பிள்ளைகள் பெற்றெடுத்த ஆளாகும் வரை அவர்களது கடமை முடிந்துவிட்டதாக நினைப்பதில்லை அவர்கள் உயிரோடு இருக்கும் வரை நீள்வதாக எண்ணுகிறார்கள்.
  பாத்திரப்படைப்பு பற்றியும் கதை களத்தை உருவாக்குவதைப் பற்றியும் ஆசிரியரை கேட்கவா வேண்டும் சொல்லை சொல்லையா இருக்கிற வீடு மேற்கூரையின் மீது வைக்கும் சாவி கொடுவா வடிந்த முகத்தோடு வந்த பெண் பலகார பொட்டலம் ஜின்னிங் பேக்டரி இப்படி ஆசிரியர் என்ன கற்பனை காண்கிறாறோ அதை வீடியோ எடுத்தது போல் நம்மையும் காண வைக்கிறார்.
  ஜின்னிங் பாட்டரியில் பழைய காலத்தில் பருத்தியை எடை போடுவார்கள் இப்பொழுது வேப்ரேட்ஜ் வந்துவிட்டது ,ஒவ்வொரு கதைக் களத்தையும் உள் சென்று நேரடியாக பார்த்திருப்பாரோ என்று எண்ணும் அளவுக்கு ஒரு படைப்பு.
  இவர் கதை நெடுக பயன்படுத்தும் உவமைகள் கற்பனையிலும் கண்டிராத து. சொரசொரப்பு முள்ளு முள்ளாய் குத்தும் தரைதளம் தன் கணவனின் தாடி மயிரை ஒப்பாக்குகிறார் .சாவி கொடுத்த பொம்மை. பெண்; ஊதி வச்ச பாலுன், கண்ணம்; கொண்டைச் சேவல் விலகியது, சடாரென குனிந்தது; சேமிப்பு பணம்,உறைமோர் முதலியன.
  சேவல் வீட்டுவாசலில் கழிந்து விடாதே ! நின்ற நிலையில் சிறுநீர் கழிப்பது ;இந்த வயதிலும் கணவருடனான நெருக்கத்தை நினைப்பது ;பொய்யும் மெய்யும் கலந்த சமாளிப்பது இப்படி எதார்த்தத்தை மீறாத கதை.
  உடம்பினில் சூடு பரவுதல் என்பது பயம் வரும் பொழுது நடப்பது அதனால் நினைத்ததைச் சரசு செய்திருக்க வாய்ப்பில்லை .எவ்வளவுதான் மற்றவர்கள் அறிவுரை கூறினாலும் சரசுவை போன்றவர்கள் மாறவே மாட்டார்கள் அப்படியே வாழ்ந்து விட்டுப் போவார்கள் .

  இந்தக்கதையை பார்த்து நாம் எங்கு நிற்கிறோம் என்று தெரிந்து கொள்ளலாம்..வாழ்க்கையில் ஒரு பக்கத்தை படித்தது போன்ற உணர்வை தருகிறது இச்சிறுகதை.

  சிபானா
  7395915560

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: