சூடாது கெடுத்த மாலை

0
(0)

அத்தை திடீரென்று வந்து நின்றது அதிர்ச்சியாக இருந்தது. மதுரையில் ஒன்றுவிட்ட பெரியப்பா மகனான அண்ணன் வீட்டில் தங்கி வேலை தேடிக் கொண்டிருந்தேன். நானே ஒட்டு, ஓசிச்சோறு! ஒட்டுக்கு ஒட்டா… அத்தையும் வந்திட்டாங்களோ…’ திகைப்பில் நலம் விசாரிப்பதற்குள் “கிளம்புப்பா மன்னார்குடிவரை போயிட்டு வரணும்” என்றது அத்தை.

அண்ணி, தண்ணீர் கொடுத்து உபசரித்து சாப்பிடச் சொன்னார்கள். “வரும் போதுதான் திண்டுகல்லில் சாப்பிட்டேன். பசி இல்லை!” என்று மறுத்து அண்ணியிடம் காபி மட்டும் வாங்கி அண்ணாக்க ஊற்றிக் கொண்டது.

“மன்னார்குடியில யாருத்தே”

“நமக்கு வேண்டியவங்க தான். உடம்பு சரியில்லை. பார்த்துட்டு வருவோம். புறப்படு.”

அண்ணனிடம் தகவல் சொல்லுமாறு அண்ணியிடம் சொல்லி விட்டுக் கிளம்பினோம். அத்தை மவுனமாகவே வந்தது. அத்தை எப்போதும் அளவாக அழுத்தமாக தீர்க்கமாகவே பேசும்! வம்பு வழவழப்பு கிடையாது. சிரிக்காது. யாரும் பிடிக்கலை என்றால் பேச்சைக்குறைத்து ஒதுங்கிக் கொள்ளும் சுபாவம்! நாற்பத்தைந்து வயதுக் கிழவனுக்கு மூன்றாம் தாரமாக பத்துவயதில் வாழ்க்கைப் பட்டு நான்கு பிள்ளைகள் பெற்றவர். புருஷன் சாகும்வரை சண்டையும் சமாதானமுமாய் வாழ்க்கையை ஓட்டியது. இருபது வயதில் கணவனை இழந்து கட்டுப்பெட்டியாய் வாழ்ந்ததால் எதிலும் நறுக்கு சுருக்கென்று கறாராய்த் தான் இருக்கும்! அப்பாவிடமும், அப்பா இறந்தபின் என்னிடமும் அளவற்ற அன்பு காட்டுபவர்.

என் அப்பாவுக்கு அப்போது வயது பதினெட்டு. அப்பா ரோஜா நிறத்தில், பாகவதர் கிராப் வைத்து பார்க்க ஈர்ப்பாக துறுதுறுன்னு இருப்பாராம். அப்பவே கதர்வேட்டி கதர் ஜிப்பாதான் போடு வாராம். தாய்மாமன் என்ற முறையில் செல்லம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அத்தையும், பாட்டியும் அப்பாவை வற்புறுத் தினார்களாம். “அடப் போக்கா எனக்கு எட்டு வயசு இளையவ. நான் தூக்கி வளர்த்த பிள்ளையை எப்படிக் கட்டிக்கிறது?” என்று தான் அவர் சொன்னதில் அத்தைக்கு வருத்தம். அந்த பேச்சில் உள்ள நியாயத்தால் அத்தை வாயைத் திறக்க முடியவில்லை.

தனக்கு இனையவராக இருந்தாலும் அப்பா சொல்வதை அத்தை தட்ட மாட்டாராம். பெயரைக் கூட முழுப்பெயர் சொல்லாமல் என்னப்பா ராஜு என்றுதான் அழைப்பாராம்!

ஒருமுறை அத்தையின் கணவர் அடித்து மண்டையை உடைத்து விட்டாராம்! தலையில் கட்டோடு அழுது புலம்பி பிள்ளை குட்டி களைக் கூட்டிகிட்டு அம்மா வீட்டுக்கு அத்தை வந்துவிட்டதாம்.

“இங்கே எதுக்கு வந்தே! செத்தாலும் அந்தக் கிழவன் கிட்டேயே போய்ச்சாவு. அவன்கிட்டே இருந்து ஜெயிக்கப் பாரு!” என்று சொல்லி அந்த வேகாத வெயிலில் ஒரு வண்டியைக் கட்டி அத்தை யையும், பிள்ளைகளையும் கூட்டிட்டு போய் புருஷன் வீட்டில் விட்டுட்டு வந்தாராம் அப்பா! இதை என்னம்மாவிடம் அத்தை பெருமையாக ஜாடை பேசியிருக்கிறது.

செல்லம்மாவுக்கு அப்பாவைக் கட்டிக்க ஆசை! அப்பா மறுத்து வேலை தேடி திருச்சிக்கு போய்விட்டாராம்! புருஷன் இல்லாத வீட்டில் குமரியை வச்சுக்க முடியாதுன்னு அத்தையின் கணவனது அக்கா மகனுக்கு, நாற்பது வயது கிழவனுக்கு ரெண்டாந்தாரமா கட்டி வச்சிட்டாங்களாம். செல்லம்மா அவரோட தள்ளி முள்ளி ஒரு ஆறு மாதம் அழுகையும் வீம்புமாய் குடும்பம் நடத்திப்பார்த்தது. ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போயிருச்சாம். ஆறு கிணறு, குளம், குட்டை மலை, கரடுன்னு கிராமமே வலைப்போட்டு தேடுச்சாம் கிடைக்கலை. இனி ஓடிப் போனவளை தேடுவதில்லைன்னு கருமாதி பண்ணி தலைமுழு கியிருச்சாம் அத்தை!

ஒரு ஆறு மாதம் கழித்து தஞ்சாவூர் கோயிலில் செல்லம்மாவைப் பார்த்ததாகத் தகவல் வந்தது. “தலை முழுகி கருமாதி எல்லாம் முடிஞ்சப் பின்னே அந்தச் சிறுக்கி இருந்தா என்ன செத்தா என்னா என்று செல்லம்மா என்ற பெயரையோ தனக்கு அப்படி ஒரு மகள் இருந்ததாகவோ யாரிடமும் சொல்வதில்லை. இதற்குப் பின், ஐந்தாறு வருஷம் கழித்து நடந்த தனது பிரியமான தம்பியான அப்பாவின் கல்யாணத்துக்கும் அத்தை போகவில்லையாம். நான் பிறந்தபின்தான் லேசு பாசா பேசத் தொடங்கியதாம்.

இதற்குப்பின் அத்தையின் இளைய மகள் சரோஜாவை தனது சித்தப்பா மகனுக்கு கட்டித் கொடுத்து அதுவும் ஒரு குழந்தையைப் பெற்றுத் தந்து ஆறு மாதத்தில் தீபாவளிப் பலகாரம் சுடும்போது எண்ணெய்ப் பொங்கி தீப்பிடித்து இறந்து விட்டதாம்! அந்த பேத்தி சந்திராவை ஒரு பணக்காரர் தத்தெடுத்து வளர்க்க முன் வந்தார். அந்தப் பெண்ணை நினைத்து தன் ஆயுளை நீட்டித்து வந்தது அத்தை. அந்தப் பெண்ணும் ரெண்டு பெண்பிள்ளைகள் பெற்றுத் தந்துவிட்டு இறந்துவிட்டது. இப்படி தொடர்ந்து துயரம் துரத்துவது கண்டு மனம் கல்லாகிப் போனது. அத்தையின் சிரித்தமுகம் ஞாபகத்தில் இல்லை. புலம்பலும் இல்லை.

புருஷனை உதறிவிட்டு வந்த செல்லம்மா திருச்சியில் அப்பாவைத் தேடி இருக்கு. கண்டுபிடிக்க முடியவில்லை. ரயிலேறி தஞ்சாவூர் வந்து பஜாரில் தேடி அலைந்திருக்கு. கண்டுபிடிக்க முடியவில்லை. மன்னார்குடி கோயில் போய் சாமி கும்பிட்டுப் பசி மயக்கத்தில் வெளி பிராகாரத்தில் படுத்திருக்கு. அந்த ஊரு சமையல்காரர் பழனிவேலு என்பவர் பரிதாபப்பட்டு எழுப்பி இருக்கிறார். தண்ணீர் தெளிச்சு ஆகாரம் கொடுத்து ஆசுவாசப் படுத்தி, யாரு எந்த ஊரு என்ன விவரம்னு கேட்டிருக்காரு!

“குடும்பத்தோட தஞ்சாவூர் கோயிலுக்கு வந்தோம். பஸ்மாறி ஏறிட்டேன் வழி தவறி வந்துவிட்டேன்.” என்று செல்லம்மா சொன்னதாம். மற்ற விவரங்களைக் கேட்டால் அழத் தொடங்கி விடுமாம். அதனால் ஆற அமர கேட்டுக் கொள்ளலாம் என்று செல்லம்மாளைத் தனது வீட்டிற்கு அழைத்து போனாராம். நல்ல கல்யாண சீசன். துணை சமையல்காரராக இருந்த பழனிவேலுக்கு செல்லம்மா போன நேரம் அவர் பெரிய காண்ட்ராக்ட் காராயிட்டாராம் துணைக்குச் செல்லம்மாளை அழைத்துக் கொண்டுபோனவர். ஆறு மாதத்தில் செல்லம்மாவைத் திருமணம் செய்து கொண்டாராம். “அவரு எந்த சாதியோ என்ன இழவோ” என்று பேச்சோடு காறி உமிழ்ந்தது அத்தை.

செல்லம்மாளுக்கு பிள்ளை இல்லை. பெத்த வயிற்றை தவிக்க விட்டுப் போனவளுக்கு எப்படியோ எலும்புருக்கி நோய் தொற்றிக் கொண்டது. வாட்டசாட்டமாய் இருந்தவ கருத்து உடம்பு மெலிந்து இரத்தம் செத்து ஈர்க்குச்சியாய்ப் போனாள். இப்பெல்லாம் வேலைக்கு போறதில்லையாம்! ராஜ கோபாலசாமி கோயில் பிராகாரத்தில் வந்து சாய்ஞ்சு கிடந்து பொழுதை ஓட்டறாளாம். அவளுக்குத்தான் முடியலையாம். அவளைத்தான் பார்க்க போறாம் என்றது அத்தை. எனக்குள் ஒரு மின்னல்! “அப்பா பேரு ராஜகோபால் தானே…!”

சிந்தனையும் பேச்சுமாய் வீடு வந்து சேர்ந்தோம். வீட்டருகில் ஒரு குளம் இருந்தது.

அத்தை கால்கழுவப் படிக்கட்டில் இறங்கியது. தடுமாறி விழுந்திடக்கூடாதேன்னு நானும் இறங்கினேன். தண்ணீருக்குள் கால் வைத்ததும் சுண்டல் பிரசாதம் வாங்கப் பிள்ளைகள் மொய்ப்பது போல சிறுகுறு மீன்கள் மொய்த்து காலில் விரலிடுக்கள் உள்ள அழுக்குகளைச் சுரண்டித் தின்றன. கூச்சமும் அச்சமும் எழ கால்களை விருட்டென்று மேலே இழுத்துக் கொண்டேன். அத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கால்களைத் தேய்த்து மேலேறியது எனக்குள்ளே சிரிப்பு பொங்கியது. “மனித அழுக்குகளை இயற்கை சுத்தம் செய்கிறது. மனிதன்தான் அசுத்தம் செய்வதையே பிழைப்பாக இருக்கிறான். சுத்தம், சுய சாதின்னு பேதம் பேசி தன்னைத்தானே அழுக்காக்கிக் கொள்கிறான்!

அத்தை, காலை படியில் மெல்ல உதறி சற்று தள்ளி உள்ள ஒரு ஓட்டு வீட்டிற்குள் நுழைந்தது. நானும் பின் தொடர்ந்தேன். பழனிவேல் எங்களை வரவேற்றார். இரண்டு புறாக்கள் குமுறுவது போல், பெரிய தலையணை வைத்துப் படுத்திருந்த செல்லம்மாள் நெஞ்சுக்குள்ளிருந்து சத்தம் கேட்டது. பல்லைக் கடித்துக்கொண்டார். செல்லம்மா மெல்ல தலையைத் தூக்கி சாய்ந்து உட்கார முயன்றார். பழனிவேல் முதுகுப் பக்கம் கை கொடுத்துத் தாங்கி உடம்பு நிமிர உதவினார். மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க “வாம்மா என்று செல்லம்மா அழைத்தது. செல்லம்மா முகத்தில் ரத்தப்பசை இல்லாமல் காய்ந்து கருத்து இருந்தது. எனினும் கண்களில் அசாதரணமான ஒளி பளிச்சிட்டது. அத்தை குரல் உடைந்து குமுறினார். முந்திச் சேலையைப் பந்தாகச் சுருட்டி வாயைப்பொத்திக் கேவினார்.

அத்தை சற்று நகர்ந்ததும் என்னைப் பார்த்து துள்ளலோடு முன் நகர்ந்து “வா மாமா” என்று சொல்லி செல்லம்மா என் கையை இழுத்து மடியில் உட்கார வைத்தது. எலும்புக்கூடு மேல் உட்கார்ந்தது மாதிரி உணர்வு! நெளிந்தேன். செல்லம்மா இறுக்கமாக இருகைகளால் பற்றியது… நெற்றியிலும், கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டது. சளியின் பிசுபிசுப்பு கூச்சமாக இருந்தது. மெல்ல விடுவித்து எனது கைகளைக் கால்களை தடவிப் பார்த்தது. நெற்றியை, காது மடல்களைத் தடவியது. இராஜகோபால் மாமா… என்று விம்மலோடு ஒரு சத்தம். வாய்பிளந்து கண்கள் நட்டுக் கொண்டன. விழியில் அப்பாவின் உருவம் தெரிந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top