சுமை

5
(1)

‘சற்றே விலகிப்போ சூரியா…’ என்பதுபோல் சூரியக் கதிர்கள் நுழைய இயலாதபடி அடர்ந்த வானம். சரசரவென்று முரகோஸ் இசைக்கும் மரவண்டுகள் அந்த மலைப்பகுதியின் அமைதிக்கு அழுத்தமும் சேர்ந்தன. ஆங்காங்கே குருவிகள், பறவைகளின் ஒற்றைக் கத்தல்கள்! கருகரு நிழலுக்கும் தனிமைக்கும் எதிராய் வெள்ளியருவிகளின் ஹோவென்ற சிரிப் போசை. இந்தச் சூழல் மனைசை பரவசப்படுத்தியது.

உயரம் குறைந்த பாறைகளின் மீதிருந்து நழுவி ஓடும் பழத்தோட்ட அருவி சிறுசிறு பாறைகளுக்கு இடையே கலுங் கலுங்கென்று குலுங்கி ஓடிக்கொண்டிருந்தது. மிக முக்கிய பிரமுகர்கள் தவிரவேறு யாரும் அணுக முடியாத ஏகாந்தவனம்! வாகனங்களின் வேக அலறல்களும், ஒலி பெருக்கிகளின் பேரொலிகளும் கலந்த சூழலில் எந்திரத் தனமாய் இயங்கிய பெருநகர வாழ்க்கையில் சலிப்புற்று ஏங்கிய அமைதி தேடிகளான சின்னவாடன் மதுரைவீரக்குமார் ஐஏஎஸ் ஸ்ரீகலா ஐஏஎஸுக்கு அமைதி வனமாகத் தோன்றியது இந்த இடம்.

பழத்தோட்ட அருவியில் நின்றும் குளிக்கலாம், உட்கார்ந்தும் குளிக்கலாம், படுத்தும் குளிக்கலாம். பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட இந்த திறந்தவெளித் தனிமைதந்த உற்சாகத்தில் தங்களை மறந்து குளித்துக்கொண்டிருந்தனர். தழுவலும் நழுவலுமான நீர்த்தீயில் குளிர்காயும் குதூகலம்.

பதினோரு வயது மகன் அருண் குமாரை சற்று தூரத்தில் ஒரு பசுங்குடை மரத்து அடியில் உட்கார வைத்திருந்தனர். அவனைச் சுற்றிலும் தின்பண்டங்கள், பழங்கள், தனிமைக்குத் துணையாய் வீடியோகேம் கருவி. கொஞ்சநேரம் விளையாடிப் பார்த்தான். எரிச்சலாக இருந்தது. ஊரிலும் அப்படித்தான் அம்மாவும் அப்பாவும் அவரவர் அலுவலகத்திற்குப்போய் விடுவார்கள். பள்ளி முடிந்து, டியூசன் முடிந்து வீட்டுக்கு வந்தால் ஆயாம்மா ஊட்டிய தின்பண்டங்களை வேண்டா விருப்பாக கொரிப்பான். கை வலிக்க நிறைய ஹோம் வொர்க் செய்வான். சமயங்களில் எழுதிக்கொண்டே தூங்கி விழுந்ததுமுண்டு ஹோம் வொர்க் இல்லை என்றால் வீடியோ கேம் டிஸ்கவரி சேனல், கார்ட்டூன் படம்.. கண் அசரும் வரை பார்த்துக் கொண்டே தூங்கிவிடுவான். காலையில் அம்மா அப்பா முக தரிசனம் கிட்டும் பாசவர்த்தனைகள் பரவசப்படுத்தும்.

அம்மாவுக்கு குற்றாலம் அருகே ஒரு ஊரில் சப்கலெக்டராக இடமாற்றம் கிடைத்துள்ளது. அப்பாவுக்கு சென்னையில் செயலகத்தில்தான் பணி. அம்மா இல்லாமல் அப்பவால் அருணை பராமரிக்க முடியாது. ஊட்டியில் ஒரு கான்வென்டில் சேர்த்துவிட்டார்கள். நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும் சிறந்த நிர்வாகிகளாகவும் வெளியே வரலாமாம்! அந்தத் திறந்த வெளிச் சிறையில் சேர்ந்து ஒரு மாதமாகிவிட்டது. அம்மா முகத்தைப் பார்க்காத ஏக்கம். பாசநோய் காய்ச்சலாக வெளிப்பட்டது. பள்ளியிலிருந்து தகவல் வர மாறுதலுக்காக ஒரு வாரம் அம்மா அப்பா கூடவே இருக்கட்டும் என்று அழைத்து வந்துள்ளார்கள். இன்று ஒருநாள் குற்றாலம் பழத் தோட்ட அருவி பங்காளவில் முகாம். வருவாய்த் துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

காய்ச்சல் கண்டவன் அருவியில் குளிக்க கூடாதென்று அம்மா அவனை மரத்தடியில் விளையாட விட்டுச் சென்றார். அம்மாவும் அப்பாவும் அருவியில் உடல், மன அலுப்புகளை நழுவவிட்டுக்கொண்டிருந்தனர்.

அருணுக்கு மனக்களைப்பு தீரவில்லை. கான்வென்டில் பெரிய இடத்துப் பிள்ளைகள் பெற்றவர்களை பிரிந்த துயரத்தில் தனித்தனித் தீவுகளாகத்தான் இருந்தார்கள். சிலர் வக்கிரத்தோடு வம்பிழுத்து அடிப்பார்கள். சிலர் அடிவாங்கி, ஒதுங்கி அழுவார்கள். சிலர் வன்மம் கட்டிக்கொண்டு மிஸ்ஸிடம் சொல்லிக்கொடுப்பார்கள். அருணுக்கும் அங்கேயும் தனிமைதான். பாடச் சுமைகள் அழுத்திக்கொண்டே இருக்கும். மிஸ்களின் தண்டனை மிரட்டல்கள் தூக்கத்தில் பிறாண்டும்! அப்பா! காய்ச்சல் சாக்கில் தப்பித்தாயிற்று!

சுற்றிலும் கண்களைச் சுழலவிட்டான். ஜியாக்ரபிகல் சேனல், டிஸ்கவரி சேனல்களில் பார்த்ததுபோல் அடர்ந்த காடு! சூரியக் கதிராலும் வகிடெடுக்க முடியாத அடர்ந்த பரட்டைத் தலை மரங்கள். டேய் இங்கே வராதே!” என்று அதட்ட அதட்ட உள்ளே நுழையதுடிக்கும் சிறுவனின் முயற்சியாக சூரியக் கதிர்கள் ஆங்காங்கே ஊடுருவித் தோற்றன. புனுப் புனுவென்று பன்னீர் தெளித்தோடும் தூரல் மேகங்கள். விதவிதமான வண்ணத்துப்பூச்சிகள் அவன் மீது மோதிச் சென்றன. தொடச் சொல்லி விளையாட அழைத்தன!

பழவாசனைக்கு குரங்குகள் கூட்டமாக வந்தன. உர்ர் புர்ர் சத்தம் பயமாக இருந்தது. குரங்குகளை அருகில் பார்க்கும் பரவசம் பயத்தை விழுங்கியது. வயிற்றில் குட்டியை இடுக்கிக்கொண்டிருந்த குரங்கு முன்னால் வந்தது! அவனுக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. ஒரு வாழைப்பழத்தை எடுத்து உரித்துக்கொடுத்தான். வெடுக்கென்று பிடுங்கியதும் அவனுக்கு கோபம் வந்தது. தாய்க் குரங்கு அந்தப் பழத்தை முகர்ந்து பார்த்துவிட்டு குட்டியிடம் கொடுத்தது. குட்டி சிறு வாயைத் திறந்து லபக் லபக்கென்று தின்றது வேடிக்கையாக இருந்தது.

மற்ற குரங்குகளும் முன்னோக்கி வந்தன! எல்லாவற்றிற்கும் பழங்கள் கொடுத்தான். ஒரு பழத்தை எடுத்து உரித்தான். அவைகளும் உரித்தன. அவன் கைகளை மேலும் கீழும் அசைத்து ஆடினான். அவைகளும் அப்படியே ஆடின! நட்பு மலர, மனுஷ விலங்கு வித்தியாசம் மறைந்தது.

அருணுக்கு டிஸ்கவரி சேனல் ஆராய்ச்சியாளன் நினைவு வந்தது. திண்பண்டங்கள் பையை எடுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பழத்தைப் பிய்த்து போட்டுக் கொண்டே நடந்தான், அவை பின்னால் வந்தன. எல்லாவற்றிற்கும் தீனி உண்டென்று உணர்ந்ததால் அவை ஒன்றோடொன்று மோத வில்லை! போட்டியில்லை. அபகரிப்பு இல்லை, பழம் தீர்ந்தது. பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்தான் ஒன்றொன்றாகப் போட்டுக்கொண்டே போனான்.

ஒற்றையடிப்பாதை மேடும் சரிவும் வளைவுமாக நீண்டது. அவன் கவனமெல்லாம் குரங்குகளை தன் வசப்படுத்திவிட்ட குதூகலத்தில்தான்! தனிமையைத் தொலைத்தான்! வழி நீள நீள பாக்கெட்டுகள் தீர்ந்தன. அடுத்து என்ன செய்வதென்ற தெரியவில்லை நின்றான். குரங்குகள் அவனைச் சுற்றி சுற்றி வந்தன. காலியான பையை கீழே எறிந்தான். அவைபோட்டி போட்டு எடுத்து முகர்ந்து பார்த்தன. சிரிப்பதுபோல் அவனைப் பார்த்தன. அது பழிப்பதுபோல் தோன்றியது, அவனால் சிரிக்க முடியவில்லை. தேம்ப ஆரம்பித்தான்.

அம்மா அப்பாவை விட்டு காட்டுக்குள் வந்துவிட்டோம் என்ற பயம் கவ்வியது. அழ ஆரம்பித்தான். குரங்குகள் கிட்டே வந்து பார்த்தன. அவன் பயத்தோடு கை ஓங்கினான். அவை பயந்துபோய் ஓடிவிட்டன! பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித் தான். அலறலாய் எதிரொலி, அச்சமூட்டியது. பக்கத்து சரிவிலிருந்து சிறு ஓடையில் சலசல நீர் சத்தம். அழுகை அடையாளமிழந்தது. கால் போன போக்கில் அந்த மலையின் மறுபகுதிக்கே வந்துவிட்டான்.

வெகு நேரம் அருவியில் கிடந்து கண் பசபசவென்று எரிய ஆரம்பித்தது. அழுக்கெல்லாம் வெளுத்து பஞ்சாகிப் போனதில் உடல் அசதி! அம்மா ஸ்ரீகலா மகன் நினைவு வந்தவளாக “அருண் அருண்” என்று சத்தமிட்டாள். ஒலிப்பிசிறுகளாக எதிரொலித்தது பயம் பற்றியது.

“என்னங்க அருணைக் காணோம்ங்க” போய்பாருங்க!”

அவன் குளியல் சரஸத்திலிருந்து விடுபட்டு தன்னுணர்வுக்கு வந்தான். துண்டைக்கட்டிக்கொண்டு ஓடி மரத்தடியில் போய் பார்த்தான். வெறும் பழத்தோல்கள்.. சிதறிய பிஸ்கட் துணுக்குகள். கைவிடப்பட்ட வீடியோ கேம் கருவி! திடுக்கிட்டு நாலாத்திசையிலும் தேடிக் குரல் கொடுத்தான். எதிரொலிகள் கேலி செய்தன. அதிக சந்தோஷத்திற்குப்பின் வந்த துன்பமோ…?? மனம் பிதற்றியது. கைலியைக் கட்டிக்கொண்டான். அவளும் முழு ஆடைக்குள் நுழைந்துக்கொண்டாள். பயத்திலும் படபடப்பிலும் பரபரப்பிலும் உடல் ஈரம் காய்ந்து வேர்க்கத் தொடங்கியது.

பழத்தோல், பிஸ்கட் துகள் சிந்திய ஒற்றையடிப்பாதையில் கொஞ்ச தூரம் குரல் கொடுத்தபடியே சென்றனர். சாரலைத் தூவிச் செல்லும் வானம், உமிழ்வது போல் எரிச்சலைத் தந்தது. வளைந்து ஏறியும் இறங்கியும் சென்ற பாதையில் செல்லச் செல்ல அச்சமாக இருந்தது. ‘என்ன விபரீதம் நடந்திருக்குமோ…’ என்ற கற்பனை கொடூரமாக இருந்தது. கொண்டுவந்த செல்போன் மூலம் வருவாய் துறையினருக்கும் அவர்கள் மூலம் வனத் துறையினருக்கும் தகவல் பறந்தது. அழகழகாய்த் தெரிந்த மரங்கள் மோதிச் சாரலைப் பெய்து செல்லும் மஞ்சுமுட்டம். சிள்வண்டிசை எல்லாம் அமானுஷ்யமான சூழலை உணர்த்தியது. தைரியம் சிதையத் தொடங்கியது.

திரும்பி பழத்தோட்ட அருவி பங்களா செல்வதற்குள் இருட்டு ஜமுக்காளத்தை போர்த்திவிட்டது. சிள்வண்டுகள் ஓசை, தாமதமாக கூடு அடையும் வழி தப்பிய பறவையின் படபடப்பு எல்லாம் அச்சுறுத்தின. டார்ச் அடித்துதான் பங்காளவுக்கு போக முடிந்தது. அருணின் கதி? நினைத்து அவள் விம்மினாள். சப் கலெக்டர் என்ற உத்தியோகக் கவசம் வாய் விட்டு அழுவதைத் தடுக்க இயலவில்லை!

பங்களா வாட்ச்மேனிடம் சொன்னார்கள்…” இந்த இருட்டில் தேடுவது சிரமம்! உங்க குல தெய்வத்தை நினைச்சுக்குங்க! பையனுக்கு ஒன்னும் ஆகாது”.

எந்த தெய்வத்தை நினைப்பது? மதுரை வீரசாமியையா, ஆபயகுசலாம்பிகையயா…? இருவரும் தனித்தனியே புலம்பிக் கொண்டார்கள். செல்போனில் திரும்பத் திரும்ப தொடர்பு கொண்டார்கள். “வனச் சரகத்தில் சொல்லி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது! காலையில் பையனைக் கண்டுபிடித்து விடுவார்கள்?” என்ற பதில் வந்தது.

“அப்படீன்னா … இந்த ராத்திரியில் அருண் கதி? என்ன ஆகுமோ.. எந்த புலி, கரடி என்ன செய்யுமோ?” ஸ்ரீகலா புலம்பினாள்!

சி.எம்.வி. குமார் வனத்துறையுடன் மீண்டும் தொடர்பு கொண்டான். “இந்தப் பகுதியில் புலி கரடி போன்ற துஷ்ட மிருகங்கள் இல்லை . நரிகள் இந்தப் பகுதியில் மனிதர்களைத்தொல்லைப்படுத்திய சம்பவங்கள் இதுவரை இல்லை! கவலைப் படாமல் இருங்கள். விடிந்ததும் பையனைக் கண்டுபிடித்துச் சேர்க்கிறோம்…!” பதிலால் பதற்றத்தீ அணையவில்லை.

ரம்மியான குற்றாலம் மலை, மூலிகை மணம் கொண்ட காட்டு பூக்களின் தூக்கலான வாசனை, சிறுசிறு தூறல் களுடன் வழியும் மங்கிய நிலவொளி, தூரத்து அருவிகளின் சேர்ந்திசை, ஓடை நீரின் சிலுசிலுப்பு ஒலி எல்லாம் வேறு வகையில் மனதை வதைத்தது.

“இரண்டு பேரும் ஐஏஎஸ் ஆபீஸராயிருந்து என்ன பிரயோசனம்? ஒற்றைப் பிள்ளையை பக்கத்திலிருந்து பாசமாக வளர்க்க முடியவில்லை. பக்கத்திலிருக்க வாய்ப்பிருந்தா தொலைதூரத்து கான்வென்டில் விட்டிருப்போமா? பாசப் பிரிவால் காய்ச்சல்தான் வந்திருக்குமா? இப்படி கூட்டிட்டு வந்து தனியா தொலைச்சிட்டு அவதிப்படுவமா? சே.. நாணாவது வேலையை விட்டுடறேன். இல்லாட்டி அவனுக்கு 15 வயசு ஆகிற வரைக்கும் லீவு போடறேன் ….” அம்மா ஸ்ரீகலா புலம்பினாள். தோளில் தட்டி குமார் ஆறுதல் படுத்தினான்.

வனாந்திர அமைதியில் கடிகாரத் துடிப்புகள் சம்மட்டி அடியாய் அதிர்ந்தது. படுக்கவும் முடியவில்லை, கட்டிலில் உட்கார்ந்திருக்கவும் முடியவில்லை, அறைக்குள்ளேயே நடக்கவும் முடியவில்லை. மனம் பலவாறு வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. குளிர் நடுக்கம். மனநடுக்கம் இருவரும் தனித் திருந்த பொழுதுகளில் இப்படியானதொரு நரகத்தினை அனுபவித்ததில்லை !

மன உளைச்சலில் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தபடியே உறங்கிவிட்டனர். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு ஸ்ரீகலா பதறி எழுந்து குமாரை எழுப்பினாள். அவள் படபடப்பை அடக்கி மெல்லக் கதவருகே சென்று கவனமாகத் திறந்தான்.

வாட்ச்மேனோடு இரு வருவாய்த்துறை அலுவலர்களும், இரு வன அலுவலர்களும் வந்திருந்தனர். பனிக்குல்லா அணிந்த இருகிய முகத்தில் வாயில் ஆவி பறக்க பேச ஆரம்பித்தனர் நடுங்கும் குரல்கள். கையில் பிளாஸ்க் சற்று ஆறுதலைத் தர முயற்ச்சித்தன.

பிளாஸ்க் காப்பியின் சூடு இதம் தந்தது. அருணைப் பற்றிய விவரம் தெரியாதது நடுக்கத்தை அதிகப்படுத்தியது.

வந்தவர்களும் செல்போன் இயக்கி ஆங்காங்கே ஆணைகளை பிறப்பித்தனர். தேடும் படலம் வனத்தின் அமைதியைக் கிழித்தது. ராத்திரி சற்றே கண்ணயர்ந்தது போலிருந்த அருவிச் சத்தம் இப்போது கொஞ்சம் கூடுதலாகக் கேட்டது. ராத்திரி மழை பெய்திருக்கும் போலிருக்கிறது. இலைகளில் எல்லாம் தண்ணீர்த் துளிகள். பலவிதமான கற்பனைகள் நிம்மதியைத் தொலைத்து கந்தல் கந்தலாகப் பிழிந்து தொங்கவிட்டது.

பள்ளத் தாக்குகளிலும், அருவிக்கரைகளிலும் நீர்த்தேக்கங் களிலும் பாறை இடுக்குகளிலும் தேடும் பணி தொடர்ந்தது. காவல் துறைக்கு தகவல் தந்து அந்தப் பகுதியில் சமூக விரோதிகள் யார்? யார். அவர்களது குற்ற பாணி என்ன? பின்னணி என்ன? குமார், ஸ்ரீகலா ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகளின் தொழில் ரீதியான எதிரிகள் எவரும் பின் தொடர்ந்திருப்பார்களா? பலவித ஊகங்கள்! ஊஹும்.. ஒன்றுகூட தடயம் சிக்கவில்லை !

டைனிங் டேபிளில் டிபன் பொட்டலங்கள் விரிந்தபடி கிடந்தன. தேன் கொசுக்கள் அவற்றைச் சுற்றி சுற்றி வந்து கும்மி அடித்தன.

காலை மணி பதினொன்றிருக்கும் வனத்தின் பனி ஒட்டடையை சூரியக் கம்புகள் ஒட்டடை அடிக்க எத்தனித் திருந்தன. அந்த சிறு பங்களாவின் பின்புற ஜன்னல் வழியாக வித்தியாசமான பேச்சொலிகள் கேட்டன. குமார் விறுட்டென்று எழுந்து வெளியே பார்த்தான். கொழு கொழு வென்றிருந்த ஒரு வனவாசிச் சிறுமியுடன் அருண்! கூடவே சிறுமியின் பெற்றோர் வந்து கொண்டிருந்தனர்.

அருணின் முகத்தில் ஏக்கமோ, சோகமோ இல்லை! மகிழ்ச்சியும் பரவசமும் பூத்திருந்தது. குமாரும் ஸ்ரீகலாவும் உற்சாகத்தில் ஓடி அரவணைத்துத் தூக்கினர். வனவாசிகளைப் பார்த்து அதிகாரத் தொனியில் முறைத்தனர்.

அருண் பேசினான்! “இந்தக் காடு நல்ல இருக்குமா. ஏசி போட்ட மாதிரி ஜிலுஜிலுன்னு இருக்கு. டிஸ்கவரி சேனலில் பார்த்த மாதிரி மான், ஆடு, குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாகப் போகுது வருது, சூப்பரா இருக்கும்மா. கான்வென்ட் எல்லாம் வேண்டாம்மா! இந்த அங்கிள். ஆண்டி, மாடத்தி யோடவே இருப்போம்மா!” மழழைத்தேன் தெறித்தது.

மகன் பேச்சு மனதைத் தைத்தது. தூக்கி கன்னத்தில் முத்த மிட்டாள். தேன் வழவழத்த கன்னத்தில் முத்தமிட்ட உதட்டில் ஒட்டிய தேனை அருவருக்கவும் முடியாமல் சுவைக்கவும் முடியாமல் தடுமாறினாள். மாடத்தியின் அப்பா சுடலைமுத்து சொன்னான். “நேற்று பொழுதுசாய நாங்க விறகுச் சுள்ளி பொறுக்கிட்டு வீட்டுக்குப் போனோம், ஏதோ அழுகைச் சத்தம் கேட்டது அங்கே போனாக்க… இந்தப் புள்ளை யாண்டான் அழுதிட்டு இருந்தாக! அப்புறம் கேட்டாக்கா யாரு எவருன்னு விவரம் சொல்லுச்சு. நீங்க எங்க தங்கி இருந்தீங்கன்னு கேட்டாக்கா சொல்லத் தெரியலை. பொறவு அந்த வாக்கில வூட்டுக்கு கூட்டிட்டுப் போய் கொஞ்சம் தேனும் கிழங்கும் கொடுத்தோம்!

“எங்க வீட்டுக்கு எதுக்கால இருந்த குண்டுப்பாறை மேலேறி நின்னு அடையப்போகிற மான் கூட்டம், கேழைக்கூட்டம், பறவைக்கூட்டம், குரங்குகூட்டம்னு மாடத்தியோட இருந்து வேடிக்கை பார்த்துட்டு வந்தாக! மாடத்தியும் இவரும் மாறி மாறி கதை சொல்லிக் கிட்டாக! இருட்டுன்னுதும் இம்புட்டுண்டு சோறு தின்னுட்டு தூங்கிட்டாக! தூக்கத்தில் அம்மா, அப்பா அந்தக் கான்வென்டு வேணாம்மான்னு என்னவோ அர்த்தம் தெரியாம புலம்பினாக!”

மாடத்தி அம்மா சொன்னாள், “ஆமா, எஜமான் ராத்திரி பூராவும் கொசுக்கடிக்கமா தூக்கமில்லாமப் பார்த்துக்கிட்டோம். இந்தப் புள்ளையாண்டான் மனசில ஏதோ கொறை இருக்கிற மாதிரி தெரியுது, கொஞ்சம் கவனிங்கம்மா!”

“அப்புறம் விடிக்காலம் எந்திரிச்சு ஒவ்வொரு அருவிக் கரையா பார்த்துட்டு கடேசியா இங்கே வந்தோம். உங்களைப் பார்த்துட்டோம்!” அந்த அழுக்கு பூத்த மனிதர்களின் முகத்தில் உண்மையின் வெளிச்சம்.

அருண் ஓடிப்போய் டைனிங் டேபிளில் இருந்த டிபன் பொட்டலங்களை எடுத்து வந்து மாடத்தியிடம் கொடுத்தான் வாங்குவமா, வேண்டாமா? என்று மாடத்தி அப்பாவை பார்த்தாள்.

“வாங்கிக்க அம்மா..” ஸ்ரீகலா மாடத்தியின் கொழு கொழு கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சியபடி சொன்னாள்!

“அம்மா இவங்க எல்லாம் நம்பலோடவே இருக்கட்டும்மா! கான்வென்ட் புக்ஸ் எல்லாம் வேண்டாம்மா! டிஸ்கவரி சேனல் மாதிரி இவங்கள ரியலா பார்த்துகிட்டே இருப் போம்மா….!” அம்மாவின் கைபிடித்து வருடி கெஞ்சினான் அருண்! “சரிப்பா. நீ இனி குற்றாலத்திலேயே அம்மாகூட இருந்து படி! வேறெங்கும் போக வேணாம்!”

“ஏங்க முதல்ல பாசத்தைச் சொல்லித் தருவோம்! அப்புறம் நிர்வாகத்தை தெரிஞ்சிகிட்டும்!”

குமார் இசைவாய் தலையசைத்தான். செல்போன் இயக்கி எல்லோருக்கும் டிபன் கொண்டுவரச் சொன்னான்!

வெளியே சாரலை அள்ளி எறிந்து விளையாடிக் கொண் டிருந்தது வானம்! ஹோ வென்று ஆர்பரித்து சிரித்துக் கொண்டிருந்தன அருவிகள். நேற்று மாதிரி இன்றைக்கும் பழம் பிஸ்கட் கிடைக்குமா என்று பழத்தோட்ட அருவி பக்கம் குரங்குகள் தாவிச் சென்று கொண்டிருந்தன.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “சுமை”

  1. விறுவிறுப்பான கதை. அடுத்து என்ன நடக்குமோ என்ற ஏக்கத்தோடே கதையை படிக்கவேண்டியதாயிற்று. மனிதனுக்கு தானாக எது தேவை என்பது தெரிவதை விட ஒரு துயரம் நல்ல அனுபவத்தை வழக்கிவிடுகிறது என்பது நன்கு விளங்குகிறது. பிள்ளைக்கு தேவை தாய் தந்தையின் அன்பும் அரவணைப்பும் தானே அன்றி அவர்களின் பணம் அன்று. இயற்கை பற்றிய வர்ணிப்பு மிக அருமை. எழுத்து நடை மிக எளிமையாகவும் காட்சியாகவும் இருந்தது சிறப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: