சிறுமை கண்டு

0
(0)

காம்பவுண்டில் உள்ள சிறுவர்களின் விளையாட்டு மைதானம் முத்துக் கிருஷ்ணனனின் வீடும், வீட்டைச் சுற்றிய தோட்டமும் தான். முத்துவோ தனிக்கட்டை, கேட்பாரில்லை. அதனால் இஷ்டம் போல் சிறுவர்கள் ஆட்டம் போடுவார்கள். இவ்வளவு சுதந்திரம் எந்த வீட்டிலும் கிடையாது.

பொதுவாக சிறுவர்களோடு தான் சிறுவர்கள் விளையாடுவார்கள். ஆனால் முத்து வீட்டில் சிறுவர்கள் கிடையாது. திருமண வயது வந்தும் இன்னும் முத்துவுக்கு கால்கட்டே போடவில்லை. அதற்குள் குழந்தைகள் எப்படி இருக்கும்? முத்துவே சிறுவனாக மாறிவிடுவானோ என்னமோ?

குளிக்க, சாப்பிட, பள்ளிக்கூடம் போக என்று பிள்ளைகளைக் கூப்பிட இங்கு தான் போவார்கள், அல்லது அவரவர் வீட்டு வாசலில் நின்று கத்துவார்கள். அங்கு போடும் கும்மாளத்தில் இந்தச் சத்தம் எட்டாது. கொஞ்சம் தம் பிடித்துக் கத்த வேண்டும். முடியாதவர்கள் நேராகப் போய் இழுத்து வருவார்கள்.

நேராகப் போவதில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. சிறுவர்களோடு விளையாடி முத்து சிக்கிக் கொள்வான். பையன்கள் அவனைத் தவிக்க விடுவதைப் பார்க்க நேரிடும். நேராய் போய் நிற்கும் போது சங்கடமாக நெளிந்து அசடாயும் சிரித்துக் கொள்வான்.

“ஐ.சி.” விளையாட்டில் இவள் எங்கு ஒளிந்தாலும் தெரிந்து விடும். எப்போதும் “ஐ.சி.” ஒன்று இவன் தான். அப்படிச் சிக்கி வரும் போது முதல் பையன் அல்லது இரண்டாவது பையனனத் தொட்டு விடுவான். செடி மறைவில் பதுங்கிக் கொள்வார்கள். இருப்பதே தெரியாது. யாராவது ஒரு பையனைப் பார்த்து “ஐ.சி ஓன்னு” என்று இவன் சொல்லி முடிப்பதற்குள் அடுத்தவன் பாய்ந்து விடுவான். மறுபடியும் இவன் தான் சிக்கி வர வேண்டும். யாரிடமும் சிக்காமல் “ஐ.சி. ஒன்னு “ஐ.சி. ரெண்டு” என்று எல்லோரையும் சொன்னால் தான் தப்பிக்க முடியும்.

எத்தனை முறை என்றாலும், வருத்தப்பட்டாலும், எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும், சிக்கி விட்டால் இவன் தான் வரவேண்டும். பையன்களும் விட மாட்டார்கள் விளையாட்டு என்றால் விளையாட்டு தான். சிக்கினால் சிக்கியது தான்.

அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் அரிசியோ, காய்கறியோ தான் இவனைக் காப்பாற்றும் அப்போது மட்டும் விட்டு விடுவார்கள். அடுப்பைக் கவனிக்கப் போய்விட்டால் திரும்பவே மாட்டான் சிக்குவதற்கும் கொஞ்சம் இடை வெளியோ, ரெஸ்டோ வேண்டாமா?

இவன் போன பிறகு தான் விளையாட்டே சூடு பிடிக்கும். அது வரையிலும் சிக்கப் போவது யார் என்பது தெரிந்த விசயம். அதனால் விறு விறுப்பு இருக்காது. இப்போது அப்படி இல்லை. யாரென்றும் சொல்ல முடியாது. அதனால் விறுவிறுப்பும், பதுங்கலும், ஜாக்கிரதையும் அதிகமாகும். ஜன்னல் பக்கம் வந்து முத்து வேடிக்கை பார்ப்பான். வேலை முடிந்து விட்டால் வெளித் திண்டில் உட்கார்ந்து கைதட்டிச் சிரிப்பான். இவர்கள் மறைந்து கொள்ளும் இடங்களையும் பார்த்துக் கொள்வான். ஆனால் பையன்கள் கில்லாடிகள். எந்த இடத்தில் எப்போது பதுங்குவார்கள் என்று சொல்லவே முடியாது. இடங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

காம்பவுண்டில் முத்து வீடு ஆறாவது. ஆபீஸில் ஹெல்பராக வேலை பார்க்கிறான். கடைசி வீட்டில் போர்மேன் சிதம்பரம் இருக்கிறார். பிள்ளைகள் கிடையாது. அவரும் அவரின் மனைவியும் தான். கொஞ்சம் சிடு மூஞ்சி, யாரும் அண்ட மாட்டார்கள். ஒரு முறை விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள் என்று இவர் வீட்டுத் தோட்டத்தில் இரண்டு வாழை இலைகளை பாபு அறுத்திருக்கிறான். இவரைப் பற்றி அந்தப் பையனுக்குத் தெரியாது.

“யாரக் கேட்ரா அறுத்த?”

“ம் ….. யாரக் கேக்கணும்?”

அவனும் பதில் கேள்வி போட்டான்.

“என்னடா எதுத்தா பேசுற? இனிமே அறுத்த… கைய ஒடுச்சுப் போடுவேன்”

பதிலுக்குப் பதில் அவனும் எச்சரித்தாள். “கைய ஒடிச்சா …… பல்லத்தட்டிப் போடுவேன்.”

சொல்லிவிட்டு சிட்டாகப் பறந்து விட்டான். போர்மேனுக்கு சரியான மூக்குடைப்பு ஒன்றுமே செய்ய முடியவில்லை. இவன் செய்தாலும் செய்வான். கல்லை விட்டெறிந்தால் என்ன செய்வது?

சங்கடமும் பயமும் சேர்ந்தது. கோபமும் சூடேற்றியது. நன்றாக கேட்டுவிட்டு ஓடிப் போய் விட்டானே! அவனது அப்பா லைன் மேன் பரமசிவத்திடம் சொல்லி கண்டித்தார். அதிலிருந்து இருவருக்கும் உள்ளுக்குள் லேசான பயம் இருந்தது.

அங்கு மொத்தம் பத்து வீடுகள். முதல் வீட்டில் ஆபீசர் பாஸ்கரன் இருக்கிறார். அவருக்கு இரண்டு பெண்கள் மூன்றாவதாக ஒரு பையன். அவர்கள் சிறுவர்கள் என்றாலும் எல்லோருக்கும் ஆபீசர் நினைப்பு தான். அவர் மனைவி பற்றி சொல்ல வேண்டாம். கட்டபொம்மன் கோட்டை போல், காம்பவுண்டிற்குள் ஒரு ஈ, எறும்பு நுழைந்தாலும் இவருக்குத் தெரியாமல் உள்ளே போக முடியாது. கொஞ்சம் அப்பிராணி சப்பிராணிகளை விசாரிக்காமல் விடமாட்டார்.

ஒருமுறை மூன்றாவது வீட்டு லைன் மேன் கோபாலின் அத்தை வந்து கொண்டிருந்தார். வயதும் பிரயாணக் களைப்பும் சோர்வைக் காட்டின. துணிப்பையா, துணிமூட்டையா என்று சொல்ல முடியாத ஒன்றை உடம்போடு அணைத்துக் கொண்டு தளர்வாக நடந்தார். பேத்திக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொல்லி இருந்தார். இரண்டொரு இடங்கள் கூடிவருவது போல் தெரிந்தது. தம்பி மகனிடம் விபரம் கேட்க வந்து கொண்டிருந்தார். முதல் வீட்டைத் தாண்டி இருக்கமாட்டார்.

“எங்க போற?”

கேள்வியே தப்பாகப்பட்டது. முகத்தில் ஒரு கசப்புணர்வு. எங்க போறன்னா அபசகுனம் புடிச்ச கேள்வி, அதிலும் மரியாத இல்லாம.

யாரென்று திரும்பி, ஒரு பார்வை பார்த்தார். அதிகாரி பாஸ்கரனின் மனைவி நின்றிருந்தாள். இவரின் பார்வை கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். சமாளித்துக் கொண்டு மீண்டும் கேட்டாள்.

“என்ன …. பாக்றீங்க?”

மரியாதை மட்டும் வந்தது. அதிகாரம் குறையவில்லை. பாட்டி கொஞ்சம் நிதானமாகக் கேட்டாள்.

“நீ யாரும்மா?”

‘எங்க வீட்டுக்காரரு தான் ஆபீசரு!”

“யாருக்கு?”

“எல்லாருக்கும்”

பாட்டி சிரித்துக் கொண்டாள்

“எனக்குமா?”

அவளிடம் ஒரு தடுமாற்றம்.

“ஓம் புருசந்தானே ஆபீசரு? நீ இல்லையே?”

முதல் கேள்விக்கே பதில் வரவில்லை இந்தக் கேள்வி மேலும் நிலை குலைய வைத்தது. அத்தைப் பாட்டி புரிந்து கொண்டு அமைதியாகச் சொன்னார்.

“நா …… வயசுல பெரியவ… அபசகுனமா கேக்காதம்மா …… நல்ல காரியமா தம்பி மகனைப் பாக்கப் போறேன். இனி என்ன ஆகப் போகுதோ!” சொல்லி விட்டு தலையை ஆட்டிக் கொண்டே நடந்தார்.

ஆபீசர் மனைவிக்கு கோபம் கோபமாய் வந்தது. ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்தக் கிழவியின் திமிரை அடக்க வேண்டும். யாரும் இப்படிக் கேட்டதில்லை. இவள் கேட்டு விட்டாளே! என்ன செய்வது? அவர் வரட்டும் ஆபீசர் என்பதைக் காட்ட வேண்டும்.

சட்டென்று திரும்பி வீட்டுக்குள் போனாள். வீட்டுக்குள் சென்றதும் மற்ற வீடுகளிலிருந்து பல தலைகள் எட்டிப் பார்த்தன. அது கிழவியை வரவேற்பது போல் இருந்தது.

இது கொஞ்சம் கிராமப்புறம். நெடுஞ்சாலையில் பஸ்ஸிலிருந்து இறங்கி இரண்டு கிலோ மீட்டர் மேற்காக நடக்க வேண்டும். அனல் காற்று ஆளையே எரிக்கும். கொஞ்சம் அசந்தால் ஒரு சுழற்று சுழற்றித் தள்ளி விடும். பொன் விளையும் பூமிகள் எல்லாம் தரிசாய்க் கிடந்தன. தண்ணீர் பஞ்சம் இந்தக் காம்பவுண்டில் தான் இல்லை என்று சொல்ல வேண்டும். நல்ல ஊற்று கிடைத்திருக்கிறது. மோட்டார் வைத்து மேல் தொட்டி கட்டி இருக்கிறார்கள்.

இப்போது இங்கேயும் தட்டுப்பாடு வந்து விட்டது. தண்ணீரை ஏற்ற மோட்டார் திணறியது. தண்ணீரும் குறைந்து விட்டது. ஆபீசர் கட்டுப் பாடு போட்டார். காலையில் இரண்டு மணி நேரமும் மாலையில் இரண்டு மணி நேரமும் தண்ணீரைத் திறந்து விட்டார்கள்.

எங்கும் வீசியடிக்கும் அனல் காற்று, ஆபீசர் வீட்டில் உற்பத்தியாகிக் கொண்டிருந்தது. இன்னும் கோபம் குறையவில்லை. சமையல் வேலை நடக்கவில்லை. நேரப்படி தண்ணீரைத் திறந்து நிறுத்தி விட்டார்கள். தண்ணீரும் பிடிக்கவில்லை. பத்து மணி இருக்கும். வெயில் கொளுத்தியது. அவர் மனைவி குதியோ குதியென்று ஆங்காரமாய் குதித்தாள். சும்மா விடக்கூடாதென்று ஆத்திரப்பட்டாள் ஆனால் எப்படிச் செய்வது என்ன செய்வது என்பது தான். ஆபீசர் மனைவிக்கும், ஆபீசருக்கும் புரியவில்லை. கிழவிக்கு மெமோ கொடுக்க முடியாது. அந்த லைன் மேன் கோபால் மீதும் இதற்காக ஆக்சன் எடுக்க முடியாது. பல தலைகள் வேறு எட்டிப் பார்த்து விட்டன.

இந்த நேரத்தில் ஊருக்குப் போன முத்து வந்து சேர்ந்தான். இங்கு நடந்தது எதுவும் தெரியாது. காலையிலேயே வர வேண்டியவன் பிரயாணக்களைப்பும் பசியுமாய் வந்தான். அவசர அவசரமாக வேலை பார்த்தான். ஞாயிறு விடுமுறை என்பதால் சிறுவர்களும் சேர்ந்து விட்டார்கள்.

வீட்டைப் பெருக்கிவிட்டு, சமையலுக்கு அரிசியை எடுத்தான். அரிசி களையத் தண்ணீர் இல்லை. குழாயைத் திருகினான். ஒரு நிமிடத்திற்கு ஒரு சொட்டாகத் தண்ணீர் வடித்தது. நான்கு சொட்டுகளில் அதுவும் நின்று விட்டது. ஒரு பத்து நிமிடம் மட்டும் திறந்து விட்டால் போதும். ஆபத்துக்கு என்ன செய்வது. குழாயடியில் வாளியை வைத்து விட்டு மோட்டார் ரூமுக்குப் போனான்.

குழாயைத் திறந்து விட்டு இவன் வருவதற்கும் ஆபீசர் கூப்பிடுவதற்கும் சரியாக இருந்தது.

“முத்தூ ….. இங்க வா”

வேகமா வந்தான்.

“யாரக் கேட்டு தண்ணிய தெறந்த”

“ஊர்லருந்து இப்பத்தான் வந்தேன். தண்ணியே இல்லங்க. ஒரு வாளி மட்டும் புடிச்சிட்டு நிறுத்திறேங்க.”

“என்னாடா ஒரு வாளி? … யாரக் கேட்டு தெறந்தன்னா .. ஒரு வாளி புடிக்கிறானாம் …. ஒரு வாளி…”

ஆபீசர் வீட்டுக் கோபம் முத்து மேல் பாய்ந்தது. கிழவியும் சரியாகச் கேட்டு விட்டாள். இவனே கேட்காமலே குழாயைத் திறக்கிறான். ஆபீசர் என்று இருந்து என்ன செய்ய? ஆபீசரின் மனைவிக்கு இது போதாதா?

“ஒரு இது இல்லாமப் போச்சு, அப்பப்ப கண்டிக்க வேண்டியதக் கண்டிக் கல்லன்னா இப்படித் தான் இருக்கும்.”

ஆபீசர் பாஸ்கரனுக்கு கோபம் கூடியது.

ஆபீசரு நீயா? நானாடா? … ஏங்கேக்காம தெறந்த?”

முத்துவுக்கு எதுவும் புரியவில்லை. எப்போதும் குழாயைத் திறப்பதும் அடைப்பதும் முத்து தான். இப்போது ஆபீசர் டயம் போட்டு விட்டார். அந்த டயப்படி திறப்பதும் அடைப்பதும் இவன் தான். இது மட்டுமல்ல, ஹெல்பர் என்பதால் எல்லா வேலைகளையும் இவன் தான் செய்வது.

அவசரத்திற்கு இப்படித் திறந்தது இவ்வளவு பெரிய குற்றமா தெரியவில்லை. சுற்றிலும் எல்லோரும் சேர ஆரம்பித்து விட்டர்கள். சிறுவர்களும் கூடிவிட்டார்கள். அவமானமாய் இருந்தது. யஹல்பர் என்றால் எதுவும் பேசலாமா? உள்ளுக்குள் ஆவேசம் வந்தாலும் அதிகாரி என்பதால் அடக்கி கொண்டான்.

“பதில் சொல்லுடா…”

உடம்பெல்லாம் ஆடியது, வலுவான உடம்பு கட்டுக் குலையாமல் வாலிப முறுக்கில் திணறியது. இவ்வளவு கேவலமாய் போய் விட்டதே விடுமுறை நாளிலா இப்படி நடக்க வேண்டும். எல்லாரும் கூடி விட்டார்கள். ஆட்கள் கூடக் கூட அதிகாரம் தான் பறந்தது. இது இவனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சேர்த்துத் தான் பாடம் என்று காட்டுவது போல் அதிகாரி கத்தினார்.

எல்லோருக்கும் முன்னால் இவன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது அதிகாரியின் நோக்கம். அது அவர் கேள்விலேயே தெரிந்தது.

“என்னையக் கேக்காம செஞ்சதுக்கு என்னா சொல்ற? பதில் சொல்றியா என்னம் சொல்லுடா?”

முத்துவும் புரிந்து கொண்டான். இதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பதில் சொன்னால் அது ஆத்திரத்தைக் கிளப்பி விட்டு விபரீதமாய் அடிதடியில் கூட முடிந்து விடலாம். அதனால் பேசாமலேயே இருந்தான்.

தள்ளி நின்ற கூட்டத்தில் அந்தக் கிழவியும் நின்றாள். இதை அவளால் நம்பவே முடியவில்லை. இப்படியும் நடக்குமா? மற்றவர்களும் ஊமையாக நிற்கிறார்களே! முத்து அவளது பேரனாக இருந்திருந்தால். இவ்வளவு கேட்ட அந்த அதிகாரியை இழுத்துப் போட்டு நாலு மிதியாவது மிதித்திருப்பாள்.

சிந்திச் சிதறி நின்ற சிறுவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து ஒன்று சேர்ந்தார்கள். அவர்களுக்கு லேசாகப் புரிய ஆரம்பித்தது. “முத்து மாமா” வைப் பார்க்கும் போது ஆபீசர் மேல் கோபமாய் வந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். முகத்தில் வெறுப்பைக் காட்டினார்கள். முத்து மாமாவை இழுத்துக் கொண்டு ஒடிவிடலாமா என்று கூட நினைத்தார்கள்.

கூட்டத்தில் நின்ற அத்தைப் பாட்டியை அடையாளம் காட்டி ஆபீசர் காதில் அவரின் மனைவி கிசுகிசுத்தார். இதனால் பேசாமல் நிற்கும் முத்து மேல் ஆபீசருக்கு கோபம் கூடியது.

“என்னாடா கேட்டுட்டே இருக்கேன் …… பதில் பேசாம இருக்க ….. என்ன நௌச்சே.” என்று கையை ஆட்டிக் கொண்டே ஆத்திரத்தில் அவனை நோக்கி நகர்ந்தார். அடிக்கப் போவது போல் சிறுவர்கள் உணர்ந்தார்கள். ஒவ்வொருவனும் பதறினான். பாபுவால் அடக்க முடியவில்லை.”

“யே…..ய்…..”

சத்தம் வந்த பக்கம் அவசரமாய் முத்து திரும்பினான். கோபத்தில் பாபு நின்றிருந்தான். பாபுவைப் பற்றி இவனுக்குத் தெரியும். முன்னால் சரளைக் கற்கள் கிடந்தன. சுற்றிலும் சிறுவர்கள் சேர்ந்து நின்றார்கள். நடக்கப் போவதைப் புரிந்து கொண்டு, சட்டென்று பாய்ந்து பாபுவின் கைகளைப் பிடித்துக் கொண்டான். மற்றவர்களும் புரிந்து கொண்டார்கள். அதிகாரி புரிந்தும் புரியாமலும் பார்த்தார்.

“சாரி சார்…… இனிமே செய்யல”

ஆபீசர் பக்கம் திரும்பி சொல்லிவிட்டு சிறுவர்களை முத்து பார்த்தான். இனிமேல் இந்தச் சூழ்நிலை நீடிப்பது நல்லதல்ல. பாபுவை இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான். மற்ற சிறுவர்களும் பின் தொடர்ந்தார்கள்.

சுற்றி நின்ற கூட்டம் கலைவதா? வேண்டாமா? என்பது போல் அசைந்தது. குழப்பமான மனநிலையில் அதிகாரி நின்றிருந்தார். அதிகாரி

என்பதைக் காட்டினாலும், அது எந்த அளவுக்கு வெற்றி என்பதை புரிய முடியவில்லை. வெற்றியா? தோல்வியா? என்றும் புரியவில்லை. இப்படியே நிற்பதா? வீட்டுக்குள் போவதா? அல்லது வெளியில் போவதா? சூழ்நிலை அளவுக்கு மீறிவிட்டது.

குழப்பமான சூழ்நிலையில் அதிகாரியின் மனைவிக்கு தான் முதலில் உணர்வு தட்டியது. சட்டென நகர்ந்து ஆபீசரை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் போனாள்.

கூட்டமும் கலைந்து போக ஆரம்பித்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top