சின்னவிசயங்கள் பெரியசங்கதிகள்

0
(0)

”அந்தவீட்டுக்கு வந்ததிலருந்தே நேரம் சரியில்ல பத்மா. ” வார்த்தைகளை அப்படியே விழுங்கிக் கொண்டாள் பவானி. வெறும் காற்றுதான் கடைசி வார்த்தையில் மிஞ்சியது. பவானி இயல்பிலேயே சத்தமாய்ப் பேசக்கூடியவள். ஒருவார்த்தையை ஒன்பதாக்கி கடகடவென உருட்டுவாள்.

“எல்லாமே இந்த ஆம்பளைக நடத்தற கூத்துடி. பொண்ணாப் பொறந்தவள மண்ணா மிதிச்சு சேறாக்கி கூழாக்கி சகதியாக் கரைக்கிற வரைக்கும் ஓயமாடாங்கெ. பாவிப் பயலுக. ”  ரதியக்கா பக்கத்தில் நின்று பவானிக்காக பரிந்து பேசினார். உடனே பவானியின் கண்களில் நீர் துளிர்த்தது. இமைகளைச் சிறகடித்து நீரை, விழிகளுக்குள் அமிழ்த்தப் பார்த்தாள். கண்ணோரம் கசிந்து விட்டது.

“உள்ளாற வாங். “ அதுவரையிலும் இரண்டு பேரையும் வாசலில் நிறுத்தி வைத்துப் பேசியது தவறெனப்பட்டது பத்மாவுக்கு.  ”எப்பவும் போல ரெண்டுபேரும் சரசரன்னு வீட்டுக்கு உள்ளாற வரவேண்டியது தான. ? “ தனது தவறை அவர்களின் தலையில் ஏற்றிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.

பவானியின் கணவர் அவருடன் வேலைபார்க்கும் நர்சுப் பெண்ணொருத்தியோடு தலைமறைவாகி விட்டார். இரண்டு மூன்று நாட்களாய் தெருமுழுக்க இதேபேச்சுத்தான். பத்மாவின் காதுக்கும் உடனடியாய் எட்டிவிட்டது. என்னதான் அன்யோன்யமான பழக்கமென்றாலும் இப்படியொரு சேதியை எப்படிப் போய் விசாரிக்க ? பவானி என்ன நினைப்பாள் ? அதனாலேயே பவானி வீதியில் தென்படுகிற போதெல்லாம் பத்மா வீட்டுக்குள் ஒளிந்து கொள்வாள்.

“விசயத்தத் தெரிஞ்சிகிட்டு கேக்காம இருந்தா அந்தப்பிள்ள மனசு வேதனப்படாதா ? உத்திக்கு உத்தியா நின்ன சிநேகிதி. ஆபத்து காலத்தில வரலியேன்னு வருத்தப்படுவா ள்ல. இந்த மாதரி நேரத்திலதான் நாம ஆதரவா நிக்கணும். “ பத்மாவின் கணவர் பலவிதங்களில் அவளுக்கு எடுத்துச் சொன்னார். அதும் இரவில் படுக்கையைப் போட்டதும் அவருக்கு இப்படியான செய்திகள்தான் அவலாய்க் கிட்டும்.  மணமுடித்த நாள்தொட்டு  இதுபோலப் பேசித்தான் பத்மாவைக் கிறங்கடித்துத் தன்வயப்படுத்துவார்

பத்மாவுக்கும் அந்தமாதிரியான பேச்சில் ஒருகாலத்தில் மயக்கம் இருந்தது. அவளும் அவருக்கு இணையாகப் பேசியதும் உண்டு. ஆனால் இன்று வயசுக்கு மீறிய பிள்ளைகள் வந்துவிட்டனர். அதனால் அந்த’ மாதிரியான நேரத்தில் உசாராகவும் தெளிவாகவும் இருந்து சமாளிக்கக் கற்றுக் கொண்டாள். கணவரது தொல்லை எல்லை மீறுகிற போது மட்டும் தலையணையையும் போர்வையையும் எடுத்துக்கொண்டு மகளின் அறைக்குச் சென்று விடுவாள்.

“மனுசனுக்கு எல்லாத்திலயும் ஒரு அளவு இருக்கு. வயசு இருக்கு. தன்னறியாமயா கேக்குது ?“

மகள், அம்மா தன்னுடைய அறைக்குள் நுழையக் கண்டாலே. அலறுவாள்.  “ ஒனக்கு என்னம்மா பிரச்சனை ? ஒரு எடத்தில படுக்க மாட்டியா ? வேணும்னா அண்ணன் ரூம்ல போய்ப் படேன் .நான் னா ஒனக்கு தொக்கு ? “ பொய்ச் சிணுங்கலில் எதிர்ப்பைக் காட்டுவாள். அம்மா வந்துவிட்டால் கைபேசியை இயக்க முடியாது. தொடர்ந்து “ எனக்கு ஒறக்கம் வருதுடி.” என்று தொலைக்காட்சியைப் பார்க்கவும் தடை போடுவாள்.

“பொம்பளப்பிள்ள தனியாப் படுத்துருக்கேன்னு ஒங்க அப்பாதான் அனுப்பிச்சு விட்டாரு.” வாய் கூசாமல் பொய் சொல்வாள் பத்மா..

ஆனால், இன்று உண்மையிலேயே அக்கறையுடன்தான் கணவர் பேசினார். ” பவானி தப்பா நெனைக்கிறது ஒருபக்கமிருக்கட்டும் பத்மா, சின்னவயசிலிருந்து ஒண்ணுமண்ணா பழகுன பழக்கம்ங்கற . உனக்கே மனசாட்சி உறுத்தாதா .? ஓடிப்போனவங்களக் கூப்பிட்டு வந்து நீ பஞ்சாயத்தெல்லாம் பண்ணவேணாம். ‘என்னா பவானி .! என்னா ஆச்சு ? என்னா வெவரம் ? என்னால எதும்செய்ய  ஆகுமா .?’ அப்படி ஆதரவான ஒரு வார்த்தை, அவ்வளவுதான்.”

பவானியும் பத்மாவும் சமவயது தோழிகள். ஒரேஊர், ஒரேபள்ளி, ஒரேவகுப்பிலும் சேர்ந்து படித்தவர்கள். பத்மா எட்டாம் வகுப்புக்கு வந்ததும் வயசுக்கு வந்துவிட்டாள். அதற்குப் பிறகு வீட்டார், அவளை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை.. பவானியோ எட்டாம்வகுப்பு முழுசுமாய்ப் படித்து முடித்தாள். அது விசயத்தில் பத்மாவுக்கு பவானியின்மேல் பொறாமை அப்படி அவளின் கண்பட்டதாலோ என்னவோ முழுப்பரிட்சை லீவில் பெரியமனுசியான பவானியை ஒன்பதாம் வகுப்பு ஆரம்பித்த உடனேயே கல்யாணம் செய்து கொடுத்து விட்டார்கள். சொந்தத்தில் தாய்மாமனுக்கு வாழ்க்கைப்பட்டவள், அரைப்பரிட்சை சமயத்தில் வளைகாப்புக்கு வயிற்றைத் தள்ளிக்கொண்டு ஊருக்கு வந்தாள். முதல்குழந்தைக்குப் பின் கணவரை அழைத்துக் கொண்டு இந்த ஊருக்கே குடியும்வந்து விட்டாள். பத்மாவின் கல்யாணத்தில் பவானி மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தாள். இப்போது மூத்தமகளைக் கட்டிக் கொடுத்து பாட்டியாகி விட்டாள்.

“ ஏண்டி., ஒரு பெரச்சனையால எத்தனபேரு அவமானப்பட வேண்டியிருக்கு ? சொந்தப் பொண்டாட்டி புள்ளீக தும்பப்படலாம் சரி, சம்பந்தஞ்சாடி பண்ணியாச்சே அவங்கள் லாம் காறித்துப்பு வாங்களே ன்ன எண்ணம் ஒம் புருசனுக்கு இருக்க வேணாம் ? நாளைக்குப் பேரன் பேத்திகளைத் தூக்கி எந்த வாய்ல கொஞ்சமுடியும் .?” ரதியக்கா ஆத்திரம் தீராமல் பேசினார்.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் தன் வீட்டிலும் ஒரு பிரச்சனையை சந்தித்த அனுபவம் அவருக்கு உண்டு. ரதியக்காளின் புருசனும் பவானியின் புருசன்மாதிரி ஒருநாள் ஓடிப்போனார்.  ரதியக்காளின் சொந்த தங்கச்சி அதில் சம்பந்தப்பட்டிருந்தாள். பவானியைப் போல அக்கா, படபடக்கவில்லை பதறவில்லை. ரெம்பவும் அமைதியாய் இருந்தார்..

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு இரவில் இருவரும் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியபோது அவர்களை வீட்டுக்குள் இழுத்துப் போட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு உலக்கையால் சவட்டி எடுத்துவிட்டார். மறுநாள் காலையில் பஞ்சாயத்தார் வந்தபோது தனக்கும் – புருசன் இதுவரை வாங்கின – கடனுக்கும் சம்பந்தமில்லை என்று எழுதி வாங்கிக் கொண்டு பெண்பிள்ளையை புருசனோடு அனுப்பிவிட்டு பையனை, மட்டும் தன்னோடு வைத்துக் கொண்டார்.

”பொம்பளைகளுக்கு கர்ப்பத்தடை ஆப்பரேசன் செய்ற மாதிரி ஒரு வயசுக்குப் பெறகு ஆம்பளைகளுக்கும் எதாச்சும் ஆப்பரேசனச் செஞ்சு அறுத்து எடுத்தடணும். அப்பத்தே கொஞ்சமாச்சும் அடங்குவாங்கெ “ ரதியக்கா ஆவேசம் அடங்காதவர்போலப் பேசினார். .

பத்மா, இருவருக்கும் காப்பி கொண்டு வந்தாள்.

“ இப்பத்தே சுந்தர் கடைல வாங்கிக் குடிச்சிட்டு வர்ரேன்.” பவானி காப்பியை வாங்க மறுத்தாள்.

“வேல மெனக்கிட்டு அடுப்பப் பத்தவச்சு காப்பியப் போட்டுட்டு வந்திட்டாள்ல சும்மாகுடிடி. ஒருக்கா ஒண்ணுக்குப் போனா சரியாப் போயிரும் . “ ரதியக்கா, காப்பித் தம்ளரை வாங்கி வம்படியாய் பவானியின் கையில் திணித்தார்.

“ மானங்கெட்டதனமா காப்பியக் குடிச்சு ஊருக்குள்ள சீவிக்கறதக் காட்டியும். கொஞ்சம் வெசத்தக் குடுத்தா நானும் எம் பிள்ளைகளும் குடிச்சிட்டு நிம்மதியாப் போய்ச் சேருவோம்.” ஒரு விசும்பலுடன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் பவானி.

“ எவடி இவ, கேணத்தனமா பேசிட்டுருக்க,  இனித்தாண்டி நாம யாருங்கறதக் காமிக்கணும். பொட்டச்சின்னா எளக்காரமா நெனச்சவன் முன்னாடி நெஞ்சநிமித்தி பொழச்சு எந்திரிக்கணும்.”

”ஆனாலும் அவுக ரெண்டுபேரும் பழக நீயும் ரெம்பவே எடங் குடுத்துட்ட. வீட்டுக்கெல்லாம் அடிக்கடி வருவாளாம். ஒம் புருசெங்கூட பைக்குல உக்காந்து சோடிபோட்டுப் போவாளாம்ல ? ”

“ இப்பிடியெல்லாம் ஆகும்னு கெனாவா கண்டம் ? ரெண்டும் பண்டம் ஆகாததுக. பீசாப்போன கேசுன்னு நெனச்சம். “

”இப்பவெல்லாம் அப்பிடி பாராப் போனதுகதே மூஞ்சூறு கணக்கா மோப்பம் புடிச்சு அலையுதுக “

“ அதுகெடக்கட்டும், அவளெல்லா ஒரு மூஞ்சின்னு தேடிப் பிடிச்சுப் போயிருக்கானே ஒம்புருசெ. . நாயி மோளாது..! வ்வோ . .”

பவானியின் புருசனுக்கு, தேனியில் ஒரு மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக  வேலை. முதலில் இங்கே – ஊருக்குள்தான் ஒலிபெருக்கி அமைப்பாளராக ஒருகடையில் சம்பளத்துக்கு இருந்தார். கடையில் வாடகைக்குப் போய் வருகிற பொருட்களை சரிசெய்வது, ஃபேன், ஸ்பீக்கர்களுக்கு காயல் கட்டுவதுவுமாக இருந்தவர்,  ஐடிஐ யில் படித்த ஒருபையனோடு  சேர்ந்து வயரிங் வேலையும் கற்றுக்கொண்டார். அது சில இடங்களுக்கு தனியாகப் போய் வேலைசெய்யும் தைரியத்தைக் கொடுத்தது. அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் வாய்த்ததுதான் இந்த மருத்துவமனைப் பணி.. ஒரு சின்ன வேலைக்காக வந்தவர், தனது பொறுமையான வேலைத்தன்மையாலும் நேர்மையான செயல்பாட்டிலும் அங்கிருந்தவர்களின் நம்பிக்கையைச் சம்பாதித்தார். அதன் காரணமாய் அங்கேயே மாதச்சம்பளத்திற்கு வேலைசெய்ய அவரிடம் சம்மதம் கேட்டார்கள். உபகரணப் பையைத் தூக்கிக்கொண்டு கிளி ஜோஸ்யக்காரரைப் போல வீதிவீதியாய் அலைந்து கொண்டிருந்தவரை பவானிதான் அட்டியில்லாமல் சம்மதிக்கச் சொன்னாள். எதிர்பார்த்ததை விடவும் நல்லசம்பளம் கிடைத்தது. அதுமட்டுமல்லாது மருத்துவர்கள் மற்றும் அங்கே வேலைசெய்யும் ஏனைய பணியாளர்களுடைய வீடுகளிலிருந்தும் அவ்வப்போது சில்லரை வேலைகள் வந்தன. அதற்கெல்லாம் தனிக்கூலியோடு. காப்பி, டீ, சாப்பாடு என மணமாகக் கிடைத்தது. பசியறியாத வாழ்க்கை அமைந்ததில் பவானி ஒருசுற்றுப் பெருத்தும் போனாள்.

ஒருமழைநாளில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து. பிள்ளைகளோடு வீதியில் நின்றபோது  பெரியடாக்டரம்மாவே நேரில்வந்து மராமத்துப் பணிக்காக பெருந்தொகையினை முன்பணமாகத் தந்து உதவினார்கள். அந்த நன்றி உணர்வின் காரணமாய் பவானி தன்னுடைய பெயரை பிலோமினா என் மாற்றிக்கொண்டாள். அதோடு ஒவ்வொரு ஞாயிறும் மாதாக்கோயில் போய்வருவதை வழக்கமாக்கினாள்.

இன்றுவரை வீட்டில் யாருக்கு சுகவீனமென்றாலும் எல்லோருக்கும் இலவச வைத்தியம்தான். இப்போது மூத்தமகளின் பிரசவத்தைக்கூட டாக்டரம்மா பைசா வாங்காமல்தான் பார்த்தார்கள்.

“அம்புட்டுக்கு ஆஸ்பத்திரில உறுத்தா வேலபாத்த ’கொரங்கெ’ அவுகளே காறித்துப்பற அளவுக்கு ஆளாயிட்டானே . .” சொல்லிவிட்டு காப்பியை எடுத்தாள் பவானி. அது ஆறிப்போயிருந்தது.

“சூடு பண்ணவா ? “ பத்மா கைநீட்டினாள்.

“ஆமா . .இதுல வந்துதே இடிக்கப்போகுது விடு. “ மடக்கென வாயில் ஊற்றிக்கொண்டாள்.

” வேற எதும் தகவல் வந்திச்சா . . எங்க போனாக ஏதுன்னு ரூட்டு  தெரிஞ்சிதா . ? “

“ போலீஸ்ல ரிப்போட் குடுத்துருக்கு. அவுகளும் தேடுறாக. சுக்குவாடன்பட்டியில போய் மை போட்டு பாத்தம். தெக்கு திசைல தங்கீருக்காங்களாம். ஏழுநாள்ல ஆப்பட்டுருவாங்களாம்.! ”

“சரி , வீட்ல சோறுதண்ணி காச்சினியா .? பிள்ளைக என்னா செய்துக. “

“அதெல்லாங் கொறவுல்ல பத்மா. மக வீட்லருந்து செஞ்சு குடுக்குறா . இந்த பிக்காளிப்பய அந்தப்பிள்ள வச்சிருந்த பத்தாயிரம் ரூவாயவும் தூக்கிக்கிட்டுப் போய்ட்டான். பத்தாததுக்கு காது கம்மலவேற களவாண்டுகிட்டுல்ல ஓடிருக்கான். அவெ வாரானோ இல்லியோ எனக்கு இந்த ரெண்டு மட்டும் கெடச்சாப் போதும். அப்பறம் இந்தபிள்ள கல்யாணத்துக்கு வாங்குன கடன் கொஞ்சம்இருக்கு, அதயும் அந்தமாப்ள ஏத்துக்கணும். அதுக்கப்பறமா இங்க வருவானோ எவகூடப் போவானோ அவெ இஷ்டம். “

“ இதுக்குப் பெறகும் அவெங்கூட சோடிபோட்டு பொழச்சிட்டாலும் ஊரு மெச்சீரும்டி. ? “

அந்தநேரம் வாசலில் நிழலாடியது.  பத்மா எட்டிப்பார்த்தாள். பவானியின் மூத்தமகளும் இளைய மகளும் நின்றிருந்தனர். தோளில் கைக்குழந்தை.

“ வாங்கடி. உள்ள வாங்க. ங்ஙொம்மா இங்கதே இருக்கா. “

“ ஒர் நிம்சம் அம்மாவக் கூப்புடுங்க . “ மூத்தபெண் வாசலில் நின்றபடியே பேசினாள். அவள் இருக்கும் நிலையில் வீட்டுக்குள் வருவாள் என நம்பிக்கை இல்லை பத்மாவுக்கு.

“ கைப்பிள்ளக்காரி வாசலோட நிண்டு பேசாட்டி உள்ளவந்து கூப்புடு. ”

அதற்குள் பவானியும் ரதியும் வாசலுக்கு வந்துவிட்டனர்.

“ ஒன்னிய எங்கெல்லாம் தேடுறது ? ஆஸ்பத்திரியிலருந்து டாக்டரம்மாவும் சிஸ்டரக்காவும் வந்திருக்காகம்மா “

“ வீட்ல இருக்காங்களா . அயோ ? “ பதறினாள் பவானி. “கெளம்பறேன் பத்மா ! நீ வர்றியாக்கா  . “

“ இல்லடி வந்தவங்ககிட்ட என்னாண்டு பேசு. பெறகாட்டி வாரேன். “

அந்த நேரம் சட்டென யோசித்த பத்மா, “ நான் வரேன் பவானி. நீ முன்ன போ. வீட்டப் பூட்டிட்டு வந்திரேன். “

சொன்னது போலவே பவானியின் வீட்டுக்குச் சென்றாள். பழைய வீடுதான். சுவரை உயர்த்தி  புதுத்தகரம் போட்டிருந்தனர். மண்தரை சிமெண்டுத் தரையாகியிருந்தது. காத்தாடி, வானொலிப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, இரும்புக்கட்டில், பீரோ என வீட்டை அடைத்து பொருள்கள்  நிறைந்து இருந்தன.

“ உள்ளவா பத்மா . “ பவானி, பிலோமினாவாக மாறி இருந்தாள். முந்தானை, தலையில் முக்காடாகி  இருந்தது.

“இவங்க அம்மாவோட பால்யகாலத்து ஃப்ரண்டு  அம்மா, இவங்க வீட்டுக்குத்தே போயிருந்தாங்க . “ பவானியின் மூத்தமகள் அங்கிருந்தவர்களிடம் பத்மாவை அறிமுகம் செய்வித்தாள்.

“ வணக்கம் “ அம்மா எனச் சொல்வதா சிஸ்டராக கூப்பிடுவதா, டாக்டரம்மா என்று விளிப்பதா குழப்பமான மனநிலையில் கைகளைக்கூப்பி வணங்கினாள் பத்மா. இரண்டுபேருமே வெள்ளுடையில் காட்சி தந்தனர். வயதில் மட்டும் ஏற்ற இறக்கம். அனேகமாக முதியவர் டாக்டரம்மாவாகவும், வயதில் இளையபெண் தாதியாகவும் இருக்கவேண்டும்.

இருவருமே பதில் வணக்கம் சொன்னார்கள். டாக்டரம்மா காற்றில் சிலுவைக்குறி போட்டு, ”கர்த்தருக்கு ஸ்தோத்ரம்” என்றார்.

“பொலீஸ் ஸ்டேசன்ல கூப்பிட்டாங்களா . ? “

டாக்டரம்மாவின் குரலும் இனிமையாகவே இருந்தது.

“ சாயங்காலம் போய்ட்டு வரணும் மா . ! “ பவானி பதில் சொன்னாள்.

“ அவங்களா வந்து அழைக்காம நீங்களா போகாதீங்க. .“

” இல்லிங் மா, காலைல ஒரு பெரச்சன நடந்திருச்சு. “ பவானியின் மூத்தமகள் அம்மாவைப் பார்த்தபடி அதைச் சொல்லலாமா வேண்டாமா என தத்தளித்தாள்.

“ சொல்லு. வேற ஆர்கிட்டக்க சொல்லி ஆத்திக்கறது. “ அலுத்துக்கொண்ட பவானி, தானே அது சம்பவத்தை விவரித்தாள்.

“ இன்னிக்கி காலமபற, வீட்ல துணிதொவச்சு நாளாச்சுன்னு பூராத்தியும்  ஊறவச்சு, அடிச்சு அலசிக்கிட்டிருந்தேங் மா, அந்தநேரம் வீட்டுக்கு எதுக்க இருக்க புளியமரத்தடியில நர்சம்மா புருசெ சீரட்டு குடிச்சிகிட்டு ஒக்காந்திருந்தான்  என்னப்பார்த்துக் கிட்டே இருந்தவெ ஒரு கட்டத்துல வேகமா எந்திரிச்சு வீட்டுப்பக்கம் வந்தான். ”

“ எங்க ஒம்புருசெ ? “ ந்னு கேட்டான். நான், ஒண்ணும் பேசல. நமக்கே நேரஞ்சரியில்ல. யார்கிட்டக்கவும் வாய் குடுக்க வேணாம்னு உள்ள போய்ட்டேன்.

அந்தாளு தலவாசல்ல நின்னு மானாங்கன்னியாப் பேசுறான். ’எம்பொண்டாட்டிய எங்க ஒளிச்சு வச்சுருக்கீங்க. ? சம்பாத்தியம் பண்றவ வேணும்னு ரெண்டுபேரும் திட்டம்போட்டு அவள கடத்திட்டீகடீ ன்னு ’  கத்தி கூப்பாடு போட்டுக்கிட்டிருந்தான்

அங்கன இருந்தவகள்லாம் ’போடா குடிகாரப் பயலே ஒழுக்கமா பொண்டாட்டிய வச்சு வாழ வக்கில்ல, இங்க வந்திட்டான் நாயம் பேச ! “ ன்னு’ சத்தம் போட்டுக் கண்டிச்சுக் கிட்டிருந்தாங்க. அந்த முண்டப்பயலுக்கு என்ன கேடு தாடு வந்துச்சோ. ‘எம்பொண்டாட்டிய ஒம்புருசன் இழுத்துட்டுப் போனான்ல ஒம்பொண்ண நான் கூட்டிட்டுப் போறேன்னு’ திடுதிப்னு வீட்டுக்குள்ள பூந்துட்டான் ! “

கேட்டுக்கொண்டிருந்த எல்லோருக்கும் திகில் கதை கேட்டதுபோல திக்கென்றது.

“ நீ சும்மாவா இருந்த .? வெளக்கமாற எடுத்து வெளாசியிருக்க வேண்டிதான..!” பத்மா வெறி கொண்டவளாய் எடுத்துக் கொடுத்தாள்.

“ விடுவனா . ? பழைய மாரால அடிச்சாலும் புண்ணியம் பெத்துப் போவானேன்னு . ! புதூ மார் ஒண்ணு சிக்குச்சு இன்னொரு கையில செருப்பு, புடுச்சேம் பாரு தெருவுக் கடேசி வரைக்கும் அவன விடல. செருப்பும் வெளக்குமாறும் சல்லி சல்லியா பிஞ்சுபோச்சு. ஆமா. “ சொல்லி முடித்ததும் சந்நதம் வந்தது போல மூச்சை ஆழமாய் இழுத்து விட்டுக் கொண்டாள்.

“ ச்சே என்ன அநாகரிகமா நடந்துகிறாங்க “ டாக்டரம்மா உடன் நின்ற தாதியுடன் பகிர்ந்து கொண்டார்.

“ அதனாலதான் இன்னிக்கி பொலீஸ் ஸ்டேசன் போகணும்னீங்களா . . “

“ஆமாங் மா சாதிக்காரவக சொன்னாக. இதச் சொல்லாம விட்டம்னா அவன்ட்டருந்தும் தொந்தரவு வரும்ல “

“ நம்ம ஆஸ்பிடலருந்து வரோம்னு ஒருவார்த்தையும் சொல்லிக்கங்க. “.

திடுமென பவானி சேலைத்தலைப்பை வாயில் புதைத்துக்கொண்டு அழலானாள். “ பத்மாவக் கேளுங்கம்மா. எம்புட்டு செல்வாக்கியமா இருந்தவ நானு. இப்பிடி இங்கவந்து சீரழியணும்னு கர்த்தரு என்னியப் படச்சிட்டாரே . . ! “

“ அழாதம்மா . கர்த்தர் பிரியப்பட்டவங்களோடதான் அதிகமா ஊடுருவுவார். அவருக்குப் பிரியமான பெண்ணாக நீ மாறிக்கிட்டிருக்க. அதனால கூடிய சீக்கிரம் கர்த்தர் உனக்கு அதிகமான நன்மைகளை அள்ளித்தர வருவார். நீ செய்ய வேண்டியதெல்லாம் அவரை அனுதினமும் ஸ்தோத்ரம் பண்றதுதான். “ தென்றலைப்போல டாக்டரம்மா பவானிக்கு உபதேசித்தார்.

“ உங்களுக்குள்ள அடிக்கடி இதுபோல சண்டை வருவதுண்டா .? “ தாதியும் தன்பங்கிற்குக் விசாரித்தார்.

“ யார் வீட்லதான்  சண்டையில்ல சிஸ்டர். அதுக்காக இப்பிடியா .? “ பத்மா சினேகிதிக்காக பதில் சொன்னாள்.

“ சின்ன வயசில இதுபோல இன்னம் நாலுபேரோட போயிருந்தாலும் வயசு மப்புன்னு சொல்லி ஆத்திக்கலாம்மா. ! ஆஞ்சு ஓஞ்சு கட்டையேறும் நாளையில இந்தக்கூத்தா .? வெளில தலகாட்ட முடிலம்மா “

”சின்னஞ்சிறுசுக ஓடிப்போக நியாயமிருக்கு. இதுக அங்கிட்டு ஓரஞ்சாரமா ஒதுங்கி முடிச்சுக்க மாட்டாம இப்பிடிப் போயி எதுக்கு அசிங்கப்படணும். என்னா பத்மா  ? “ கணவரின் கேள்வி நினைவுக்கு வந்தது..

”வா, பிலோமி. உட்க்கார். அமைதி அமைதி. கர்த்தரை ஸ்தோத்ரம் பண்ணு. “ கண்களைமூடி துதித்தார். “லௌகீகமான வாழ்க்கையிலே நாம செல விஷயங்களை நுட்பமாப் புரிஞ்சிக்க வேண்டியிருக்கு. நான் சொல்றது ஒங்களுக்கு தப்பிதமாக்கூடப் படலாம். ஒரு டாக்டராவும் நின்னு பேசறேன். செல நேரத்தில சின்ன விசயங்களை பெரியதா நெனச்சு பயப்படுறம். பெரியசங்கதிகளை சாதாரணமா ஒதுக்கித் துன்பப்படுறோம். இப்ப ஒங்க கணவரும் அந்தப் பொண்ணும் என்ன காரணத்தினால போனாங்க . ? ” நிதானமாகப் பேச்சைத் துவக்கினார் டாக்டரம்மா.

பெற்ற மகளை வைத்துக்கொண்டு சொல்ல கூசினாள் பவானி.

“அப்பிடி ஒண்ணும் பெருசா சண்ட சத்தம் ஏதுமில்லியே. “ பவானியின் மூத்தபெண் சொன்னாள்

“ இல்லங் மேடம். இது ஒருசீசன். பேப்பர்ல பாருங்க. சின்னஞ்சிறுசுகள தொட்டுப் பாக்கறது தடவிப்பாக்கறது, பூராம் அறுவது வயசு, அம்பது வயசு ஆம்பளைக. அதுக்கு இப்படி ஓடிப்போற கேசு பெட்டர்.” தாதிப்பெண் விளக்கமளித்ததும், பத்மா நெளிந்தாள்.

“ ஏன் அந்தமாதரியெல்லாம் நடக்குது. கொஞ்சம் பொதுஆளா நின்னு யோஜனை பண்ணிப் பாருங்களேன். பொதுவாவே பெண்களுக்கு பிரியட் நின்னு போனதும் அவங்களுக்கான இச்சை தீந்து போகுது. இல்லியா .? ஏஜ்னு எடுத்துக்கிட்டா நாப்பது, நாப்பத்தஞ்சுல எல்லாமே முடிஞ்சிறுது. இல்லாட்டி அப்படி நெனச்சுக்கறாங்க. அது உண்மதான. ?”

“ பிள்ளைக முழுத்தாட்டியமா நிக்கிதேம்மா “

“ அய்யோ . . எங்கம்மாவெல்லா இதில ரெம்ப மோசம் டாக்டர். “ என்ற பவானியின் மூத்தமகள், “ எனக்கு கலியாணம் பேசறப்ப அவங்களுக்கு தீட்டு போறது தள்ளிட்டே போச்சு. அப்படியே பதறிட்டாங்க. ஒடனடியா ஆஸ்பத்திரிக்கிப் போயி கர்ப்பப்பை ஆப்பரேசன் செஞ்சுக்கிட்டாங்க. கேளுங்கமே “ என பவானியைப் போட்டுக் கொடுத்தாள்.

“மருமகெ வந்தப்பறமும் ’குளிச்சுக்கிட்டிருந்தா கேவலமில்லயா ம்மா .!

”அதுதான் ஒழுக்கம்னு பாக்கறீங்க. உள்ளுக்குள்ள ஆசை இருக்கும் சொல்லக் கூச்சப்படுறீங்க இல்லியா ? ஆனா ஆண்கள், அறுபதைத் தாண்டியும் ஃபிசிக்கலாவும் மெண்ட்டலியாகவும் துள்ளளோடவே இருக்கறாங்க. சில இடங்கள்ல அவங்களுக்கு  பேபியும் பொறந்திருக்கு. “

“ அசிங்கமா இல்லியா டாக்டர் ? “

சிரித்தார். “ இதுல என்ன அசிங்கம் ? அந்தக்காலத்தில தாசி வீட்டுக்குப் போய்வர்ரதும், சின்ன வீடுவச்சிக்கறதும் குடும்பப் பெருமையா இருந்துச்சு அது ஒங்களுக்குத் தெரியுமா ?”

“அப்பவெல்லாம் குடும்பம்பெரிசு டாக்டர். வீட்டுவேலை காட்டுவேலைனு ஏகத்துக்கு ஆள்த் தேவைப்பட்டது அதனால அக்கா, தங்கச்சிகளக் கட்டிவச்சி சண்ட சச்சரவில்லாமக் காலங்கழிச்சாங்க. ”

“ வேலைக்கு மட்டும்னா வேலக்காரங்களப் போட்டுக்களாமே.”

”ஜமீன்தார் கதைகள் சந்தி சிரிச்சுதுல்ல. “ பத்மா தான் அறிந்த ஜமீன்கதையினைச் சொன்னாள்.

” அதனாலதான் திருமணத்துக்கு பெண்ணைவிட ஆணுக்கு செல வயசு கூடுதலாப் பாத்தாங்க. ஆனா அதுக்காக தாதுபுஷ்டி லேகியம் சாப்பிடுற மனுசங்களையும், சோரம்போறவங்களயும் நியாயப்படுத்தல. புருசன் பெண்சாதிங்கறது நம்ம லைஃப் பார்ட்னர்தான ?, என்னென்னவோ விசயங்கள அவங்ககிட்ட பேசறோம், சண்டை போடறோமில்ல ?. இந்தமாதரி செல அசந்தர்ப்பங்கள் வார நேரத்தில தாம்பத்தியம் பத்தியும் பேசலாமே.! உங்களோட உடல்நிலை. இதுல ஆண்களோட எதிர்பார்ப்பு. .வீட்டு சூழல்  எல்லாம் பேசணும்..”

“ அம்மா நீங்க சொல்றதப் பாத்தா, . .”

”இயல்பான உந்துதலை நாம அலட்சியம் செய்றம். இறுக்கிப் பிடிக்கிறப்ப அது மீறிப்போயிடுது. இயற்கையை தப்புன்னு சொல்ல நமக்கு உரிமை இல்ல. மேலும் இன்னிக்கி எல்லாத்தியும் வியாபாரமா ஆக்கிக்கிட்டிருக்க நேரத்தில தனிமனுசங்கள குறை சொல்லவே முடியாது. அதப்புரிஞ்சு வாழ்க்கையை சுலபம் ஆக்கிக்கிறவங்க சந்தோசமா – இப்பவும் இருக்காங்க. புரிஞ்சதா ? “ டாக்டரம்மாவின் அந்த விளக்கம் அதீதமான அமைதியில் நிறுத்தியது.

அதனை உணர்ந்தவர் போல தொடர்ந்து , “ ஒண்ணுமில்ல, சம்பந்தப்பட்டவங்களோட மனசுவிட்டுப் பேசணும்னு சொல்றேன் அவ்வளவுதான். “

இந்த நேரம் ரதியக்கா. இல்லியே  என பவானி எண்ணிய நேரத்தில் : இதுபோல் கணவரோடு பேசமுடியுமா என யோசனை செய்தாள் பத்மா.

ஆனாலும் அங்கே உரையாடல் முடியவில்லை.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top