சிதைவுகள்

0
(0)

அந்த பகல்நேர ரயில் விழுப்புரத்தில் நின்றதும் பழம், கடலை, முந்திரிப்பருப்பு கூடைவியாபாரிகள் பொதுப்பெட்டியில் ஏறிக்கொண்டனர். “மல்லாக்கொட்டை, பட்டாணி, உப்புக்கடலை” என்றும், “கொய்யப்பழம் இரண்டு பழம் இருவது ரூபாய்” என்றும் கூவிக்கூவி தம்தம் பொருள்களை விற்றுக் கொண்டே நகர்ந்தனர். இருக்கையில் உட்கார இடமில்லாதவர்கள் கீழே உட்கார்ந்து இருந்தனர். சிலர் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டும், சிலர் அங்குமிங்கும் வேடிக்கை பார்த்தபடியும் இருந்தனர். கால் வைப்பதற்கும் கூட இடமில்லாத அந்த பெட்டிக்குள் கூடைகளில் தின்பண்டங்களை நெஞ்சில் ஏந்தியபடி யாரையும் மிதித்து விடாமல் நடப்பதே கம்பிமீது நடப்பது போன்ற கலை கொண்டு வந்த தின்பண்டங்களை விற்றால் அன்றாட வட்டிக்கு வாங்கிய முதலை வட்டியுடன் கொடுத்தது போக மிஞ்சியது கொண்டு அன்றைய வயிற்றுப்பாடு தீரும். விற்கா விட்டால் பழமும் வாடும்; வட்டியும் கூடும். சாமர்த்தியமாகப் பேசி விற்றுவிட்டால் தொல்லை இல்லை. பழக்கூடைப்பெண் ஆளுக்கு தகுந்த மாதிரி விலை கூறினாள்.

பயணிகள் முகத்தைப் பார்த்ததும் இவர்கள் வாங்குவார்கள். இவர்கள் விலை மட்டும் கேட்பார்கள் என்று மதிப்பிட்டுவிடும் சாமர்த்தியம்! எங்கிருந்து கற்றுக் கொண்டாள்? தெரியவில்லை! சிலர் முகத்தைப் பார்த்ததும் இருபது ரூபாய்க்கு இரண்டு என்கிறாள். சிலரை பார்த்ததும் மூன்று பழம் எடுத்துகிட்டு இருபது ரூபாய் தாங்க என்கிறாள். ஒரு சிறுமி அழுகிறாள். அம்மாவிடம் காசு இல்லை போல. விடாமல் சிறுமி அழுகிறாள். பழக்காரி ஒரு சிறிய கொய்ய பழத்தை எடுத்து சிறுமி கையில் கொடுத்து நகர்கிறாள். தரையில் உட்கார்ந்திருந்த அம்மா வானத்தைப் பார்ப்பது போல அவளது முகத்தை நன்றியும் வெட்கமும், இயலாமையும் கலந்து பார்வையில் ஏறெடுத்துப் பார்க்கிறாள். பழக்காரி கண்டும் காணாமல் “கொய்யாப்பழம் கொய்யாபழம்” என்று ஒருகைக்குள் அடங்காத இரண்டு பழங்களை ஏந்திக்காட்டியபடி மெல்ல மெல்ல நகர்கிறாள். ரயிலின் ஓட்டத்தில், பெட்டியின் ஆட்டத்தில் இடதுகையில் கூடையை அணைத்து வலக்கையில் பழமேந்தி நடக்கும் வித்தையே விந்தைதான். கையில் பழம் கனிவு; குரலில் கறார்த்தனம்; கவலை படர்ந்த முகம்; வயது முப்பத்தைந்து முப்பத்தெட்டு இருக்கலாம். உழைப்பில் இறுகிய உடல்வாகு சுருண்ட முடியை இறுக்கிப் போட்ட கொண்டை ஈர்ப்பான தோற்றம்.

“அம்மா கொய்யாப்பழம், அண்ணே கொய்யாப்பழம், சர்க்கரை நோய், மலைச்சிக்கல், மனச்சிக்கல் தீர்க்கும்!; அம்மா கொய்யப்பழம்” இருபது ரூபாய்க்கு இரண்டு என்று ராகமாய்ச் சொல்லி பழமேந்தி வரும் போது வாங்கிடத் தூண்டும்.

பழம் கேட்பவருக்கு பழம். காய் கேட்பவருக்கு நான்காகப் பிளந்து அதில் காரப்பொடி தூவி எவர் கண்ணிலும் பட்டுவிடாமல் தரும் லாவகம். இதை எல்லாம் கவனித்த நான் பத்து ரூபாய் கொடுத்து ஒருக்காயை வாங்கி அரிந்து பொடி தூவச் செய்து ஒவ்வொரு பத்தையாகத் தின்று கொண்டே சுற்றிலும் நடப்பவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு பதினைந்து பதினெட்டு வயசு பையன் “ந்தா பத்து ரூபாய்க்கு பழம் குடு”

“ஒண்ணுதான் கிடைக்கும் தரவா?”

“பெரிசா தா” பழக்காரி பழம் கொடுத்தாள்.

“என்ன சின்னதா தர்ரேஞ் . கூடையில் இருக்கிறதை விட வெளியில் தெரியறது பெரிசா இருக்கு” என்றான்.

பழக்காரி தனது முந்தானையை சரி செய்து கொண்டு கூடையை இடது இடுப்பில் இடுக்கிக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பளார் என்று ஒரு அறை அந்த பையன் கன்னத்தில் அறைந்தாள். ரயிலின் தடதட சத்தத்தை மீறிய பளார் சத்தம் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் எல்லாம் திடுக்கிட்டு அந்தப்பையனைப் பார்த்தனர். அந்தப் பையன் கொய்யாப்பழத்தை தவற விட்டு கன்னத்தை தடவியபடி வாயடைத்து நின்றான். கண்ணில் பொலபொலவென்று நீர் உருண்ட து.

“முளைச்சு மூனு இலை விடலை, வாயில் சாராய நாத்தம், பார்க்கிற பார்வையும் பேச்சையும் பாரு? எவ, எப்படிப் பெத்த பிள்ளையோஞ்” என்று சொன்னபடி கூடையோடு வாசல் பக்கம் விரைந்தாள். அவள் முகமும் சிவந்து நீர் திரண்டிருந்தது. அந்தப்பையன் எதிர்ப்பக்கம் போய் வாசலருகே உட்கார்ந்து தலைகுனிந்தபடி விம்மிக் கொண்டிருந்தான்.

“எங்கே பார்த்தாலும் இந்தக் கருமாயம் தானாஞ்?” என்று எதிர் சீட்டிலிருந்த பெண் வெடித்து புலம்பினாள். கண்ணீர் திரண்டிருந்தது. பக்கத்திலிருந்த பெண் கேட்டாள் “என்னம்மா பிரச்சினை?” மதகு திறப்புக்காக் காத்திருந்தது போல அலைமோதிய சோகத்தை திறந்தாள். என் தங்கச்சியை, எங்க மாமன் மகன் போலிஸ் உத்தியோகம் நல்லா பார்த்துக்குவான்னு கட்டிக் கொடுத்தோம். பாவிமகன் நித்தம் குடிச்சுப் போட்டு வந்து தொல்லை குடுக்கிறான்னு தீயை வச்சுகிட்டா! 16 வயசு மகளையும் எரிச்சிட்டா. காப்பாத்தப்போன புருசன் போதையில் தடுமரி அவனும் கருகிட்டானாம். நேத்து ராத்திரி டீவி செய்தி பார்த்துட்டு கிளம்பிப் போய்கிட்டுருக்கேன். ராத்திரி முச்சூடும் தூக்கமில்லை. நல்லவேவீளை டியுசனுக்குப் போன ஒத்தை மகன் மட்டும் தப்பினான். குடும்பம் குடியால் சிதறி சீப்பட்டுப் போச்சு! ஆத்தே, தங்கச்சியை பறிகொடுத்திட்டேன் மகனை எப்படிக் காப்பாத்தப்போறேன்”. எனக்கு ஒரு மாதிரியாக மனசு பிசைந்தது எழுந்து கழிவறைப் பக்கம் போனேன்.

பழக்காரி பக்கம் பார்த்தேன். அன்றாட பயணத்தில் எத்தனையோ பயணிகளின் பார்வைகள் அவளது மேனியில் ஊர்ந்திருக்கும். அவற்றை எல்லாம் அவள் ஈ கொசுபோல புறக்கணித்திருக்கூடும். அந்தப் பையனின் பேச்சு மட்டும் ஏன் அவளை அப்படி உலுக்கி இருக்கிறது? பளார் என்று அறைந்திருக்கிறாள். என்ன காரணம்? வாசலருகே கூடையை இறக்கி வைத்த அவளது பார்வை வெளியே… ஆவேசமாய் காற்றுவெளியில் ஏதோ பேசுவதுபோல் தலையாட்டினாள். பிறகு வாசல்கம்பியை பிடித்து வாசலருகே பெருமூச்சு விட்டபடி உட்கார்ந்து கொண்டாள். அவள் முகத்தில் பல நிகழ்வுகள் நிழலாடியது போல் தெரிந்தது.

அரைக்காப்படி அரிசி சீவன் இருந்திருந்தா… எனக்கு இந்தக்கதி வந்திருக்குமா. இப்படி ரயிலு ரயிலா ஏறி பழக்கூடை சுமந்து வித்து திரிவேனா? பெத்தப்பிள்ளைதான் ஓடிப்போகாம இருந்திருந்தா என்னை ஒருத்தன் இப்படி ஒரு கேள்வி கேட்டிறமுடியுமா…? கழுத்துப்புருஷன் தான் இப்படி பாதிவழியில் விட்டுட்டுப் போய்ச் சேர்ந்தார்ன்னா, வயித்துப் பிள்ளையாவது ஒழுங்கா இருப்பான்னு பார்த்தா – பள்ளிக்கூடத்தில் வாத்தியாரை அடிச்சிட்டு ஓடிட்டானே…! எங்கே போனானோ… சாப்பாட்டுக்கு என்ன செய்யுறானோ? அவனுக்காக இந்த சீவனை நிறுத்தி வச்சு சீப்பட்டு அலையறேன். என்னைக்காவது அம்மாவைத் தேடி வருவான்னு நாளும் பொழுதும் ஓஞ்சிருக்கையில் வேண்டாத தெய்வமில்லை. போடாத நேர்த்திக்கடனில்லை. விதை ஒன்னு போட்டா செடி வேறா முளைக்கும்? குடிகாரனுக்கு பிறந்த பிள்ளை ஒடு காலியாப் போயிட்டானே. பத்து வருஷமாச்சு, போன திசை தெரியலை, இருக்கிற திக்கு அறியலை…!

ஏழையாப் பிறந்தாலும் நுட்பமான தொழில்காரனை கட்டினேன்னு நிம்மதியா அஞ்சு வருஷம் பறந்தது! அவர் கலர்கலரா வரைகிற ஓவியங்கள் மாதிரி வானவில்லா வாழ்க்கை பளிச்சுன்னு இருந்தது. இவ்வளவு சீக்கிரம் இருண்டு போகும்ணு நினைக்கலை! கட்டையில் போவான்க சாராயக்கடை திறந்தான். தேனை மண்டின ஈ மாதிரி மனுஷன் தள்ளாடாம வீட்டுக்கு வந்ததில்லை. சம்பாதிக்கிற பாதிப்பணம் சாராயக்கடைக்குத் தான் போகும்! அடிக்கல்லாம் மாட்டாரு! குடிக்க சாராயம் கிடைக்கல்லன்னாத்தான் வெறி பிடிச்ச மாதிரி இருப்பாரு. கண்ணுக்குப் பட்டதை எல்லாம் தூக்கி எறிவாரு. காந்தி ஜெயந்தி, புத்தர், மகாவீரர், வள்ளலார் பிறந்தநாள்னு சாராயக்கடை மூடியிருப்பாங்க அன்னைக்கு சரக்கு கிடைக்கிலைன்னு அவர் படுத்திறபாடு சொல்ல முடியாது.

இப்படித்தான் ஒரு நாளில் கடையடைப்பு. எங்கோ போய் உருண்டை உருண்டையா காய்ஞ்ச பூ மாதிரி வாங்கி வந்தார். என்னவென்று கேட்டேன் கசகசாப்பூ என்றார். ஒரு பாத்திரத்தில் வெந்நீரைக் கொதிக்கச் செய்து அதில் அந்தப் பூவைப் போட்டுக் காய்ச்சினார். பாத்திரத்தின் நீர் பூவோடு கொதித்து பாதியாய்ச் சுண்டி தேன் நிறமாக வந்ததும் ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டினார் அந்தக் கசாயத்தை இரண்டு தம்ளர்களில் ஊற்றி ஆறவைத்தார். இதமான சூடுவந்ததும் அச்சுவெல்லத்தைக் கடித்துக்கொண்டு கண்ணை மூடிக் குடித்தார். நான் கருவாடு கத்தரிக்காய் மொச்சைக்கொட்டை போட்டு குழம்பு வைத்திருந்தேன். குடிப்பதற்கு முன் உடல் தளர்ந்து அப்பாவி மாதிரி இருந்த மனுஷன் நரம்பு விடைச்சு பயில்வான் மாதிரி நிமிர்ந்தார். தட்டில் சோறைப் போட, போடத் தின்னுக்கிட்டே இருந்தார். நெற்றியில் வியர்வை பூத்து வழிந்தது. பனியன் நனைந்து உடம்போடு ஒட்டிக்கொண்டது. என்னைக்கும் இவ்வளவு சோறு சாப்பிட்டதில்லை. சாப்பிட்டு முடித்து எழுந்திருக்க முடியவில்லை. தலை நிமிரவில்லை. ஏதேதோ முனங்கினார். வாய் கோணலாகி நெற்றிப் புருவம் வளைந்தும் நிமிர்ந்தும் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது. கையைக் கழுவாமல் அப்படியே தட்டின் முன் படுத்துவிட்டார். கையை வாயை துடைத்து தலையணை வைத்தேன். எனக்கு பயமாய் இருந்தது. பக்கத்து வீட்டில் யாரையும் உதவிக்கு கூப்பிட முடியாது. அவர்களது ஏளனமும் எகடாசிப் பேச்சும் பெரும் நரகவதை. விளையாடிக்கிட்டிருந்த பையனை கூப்பிட்டு வந்தேன்.

“என்னம்மா அப்பாவுக்கு காய்ச்சலா? இப்படி படுத்திருக்காரு” என்று கேட்டவனுக்கு வாயை இறுக மூடிகிட்டுத் தலையாட்டினேன்.

அவரு காலு விரைச்சு கழுத்து நரம்பு விடைச்சு, தலை தொங்கி வாய் கோணி படுத்திருக்க பார்த்ததும், எனக்கு பயமாகி விட்டது இது கடுமையான போதையுள்ள மருந்து என்று மிஞ்சியிருந்தததை யாருக்கும் தெரியாமல் தெருமுனையிலுள்ள பெரியசாக்கடையில் ஊற்றிவிட்டேன். சாக்கடை விளிம்பில் சிந்திய கசாயத்தை முகர்ந்து நக்கிப் பார்த்த நாய் சாக்கடையோரம் சுருண்டு கிடந்தது. அந்தப் பாத்திரத்தில் படிந்த கறையை மூணுநாள் ஊற வச்சு வச்சு விளக்கினேன்.

இன்னொரு நாள் சரக்கு கிடைக்கலைன்னு தொழிலுக்கு வாங்கிய வார்னீஷை ஒரு டம்ளரில் ஊற்றி எலுமிச்சம்பழத்தை பிழிஞ்சு கலக்கி, உப்பில் தொட்டு பச்சை மிளகாயைக் கடிச்சுகிட்டு குடித்தார். நாற்றம் குடலை பிடுங்கியது. மனுஷன் சோறுகூட சாப்பிடலை. சுருண்டு படுத்திட்டார். ஒரு சொம்பு தண்ணியில் புளியைக் கரைச்சு வாயை நான் திறக்க, மகன் ஊற்றினான். குடிச்சதை எல்லாம் வாந்தி எடுத்தார். நாற்றம் தாங்க முடியலை. இப்படி அடிக்கடி வார்னீஷ் குடித்ததில் வயிற்றுவலி வந்தது. அடிக்கடி வயிற்று வலின்னு வீட்டுக்குள் உருள்வார். ஒருநாள் வயிற்று வலின்னு உருண்டவரை அக்கம் பக்கத்தார் சேர்ந்து ஒரு ரிக்ஷாவில் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனார்கள். டாக்டர் பரிசோதித்துவிட்டு குடல் வெந்து புண்ணாக இருக்கு! ஆப்ரேஷன் பண்ணினாத்தான் பிழைப்பார்’ என்றார். மனுஷன் ஒருநாள் தான் பெட்டில் இருந்தார். மறுநாள் எங்களை அனாதை ஆக்கிட்டுப் போய்விட்டார். வாழ்வு கசந்து போனது. அவர் குடிக்காமல் இருந்த காலத்தில் எங்கள் இருவரையும் வரைந்த ஓவியங்களைப் பார்த்தபோது நாம் வாழனும் பையனை படிக்க வைத்து அப்பாவை விட கெட்டிக்காரனாக்கி நல்ல நிலைக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் எழுந்தது!

நான் இரண்டு வீடுகளில் பாத்திரம் தேய்ப்பது, துவைப்பது என்று வேலை பார்த்தேன். பையன் ஒருநாள் வீட்டு வாடகைக்காக வைத்திருந்த பத்துரூபாயை எடுத்துக் கொண்டு சினிமாவுக்குப் போய்விட்டான். ஊரே தேடி அழுது ஓய்ந்திருந்த நேரம் வீட்டுக்குள் நுழைந்தான். அவனை பிடித்து அடித்தேன். அப்பனை மாதிரி தான்தோன்றியா அலைவியா என்று காலிலும், கையிலும் அடித்தேன். இந்தக்கைதானே காசு எடுத்தது என்று வலது கை மணிக்கட்டில் சூடு வைத்துவிட்டேன். பாவம்! புழுவாய்த் துடித்தான். வெறித்தனமாக நடந்து கொண்டோமே என்று தலையில் அடித்துக் கொண்டு அவனை அணைத்துக் கொண்டு அழுதேன். அவனைத் தேடி அலைந்ததில் சோறு ஆக்கவில்லை. பக்கத்தில் இருந்த ஓட்டலுக்கு அழைத்துப்போய் அவன் கேட்பது எல்லாம் வாங்கிக் கொடுத்து சமாதானப் படுத்தினேன். அவன் வலக்கை சூட்டுக்காயத்தை பார்த்தபடியே வீட்டிற்கு வந்தான். புண்ணுக்கு தேங்காய் எண்ணெய் தடவி ஆறுதல் படுத்தி தூங்க வைத்தேன்.

காலையில் எழுந்து பார்த்தேன். அவனைக்காணவில்லை. எட்டு வயசுப்பையன் எங்கே போனான்? தெரியவில்லை. பஸ்ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன் எல்லாம் தேடிப்பாத்தேன். ஒரு வாரம் ஆச்சு பையன் நினைவாகவே இருந்ததால் வீட்டு வேலைக்குப் போகவில்லை. அவர்கள் வேறு ஆள் அமர்த்திக் கொண்டார்கள். கோயில் கோயிலாக வேண்டி அலைந்தேன். ஒரு சாமிக்கும் கண்ணில்லை, காதில்லை. என்றைக்காவது அவன் வருவான் என்ற நம்பிக்கை மனதில் கடல் நடுவே பாறையாக நின்று கவலைகளை சிதற அடித்துக் கொண்டிருந்தது. ஓடியகால் தேடிவரும் என்று காத்திருந்தேன். வயிற்றுப் பிழைப்புக்காக ரயில் ஏறி பழம் விற்பது கூட எந்த ரயிலில் எங்காவது மகன் கண்ணில் பட்டுவிட மாட்டானா, பட்டுப்போன பிழைப்பு முளைவிடாதாஞ் என்ற ஏக்கம்தான் இன்றுவரை தேடிக் கொண்டே இருக்கிறேன்.

பழக்காரியைப் பார்த்துக் கொண்டிருந்த நான் எதிர்த்திசையில் பார்த்தேன். அந்தப் பையன் அழுத கண்ணைத் தேய்த்தபடி இருந்தான். அவனருகில் சென்றேன். சாராயநெடி நரியது. மெல்ல ஆதரவாய்த் தொட்டு “ஏன்டா தம்பி அழுகிறே என்னப் பிரச்சினை” என்று கேட்டேன் “ஒன்றுமில்லை. அந்தப் பழக்காரம்மா அடிச்சிருச்சு என்று கன்னத்தைத் தடவினான். கன்னம் சிவந்திருந்தது மூன்று விரல் தடம் தெரிந்தது. பார்க்க பதினைந்து பதினெட்டு வயசு பையன்னாட்டம் இருக்கான். சிறுபிள்ளையாட்டம் தேம்பி அழுகிறானே என்று நினைத்தப்படி அவனிடம் கேட்டேன்.

“தம்பி உனக்கு அப்பா அம்மா இல்லையா?” “அப்பா செத்துவிட்டார். அம்மா இருக்கு. நான் சின்னப்பிள்ளையிலே வீட்டை விட்டு ஓடியாந்துட்டேன். ரயிலிலேயே காசிக்குப் போயிட்டேன். ரயிலில் வந்த ஒருத்தர் என்னை பிச்சைக்காரங்க கிட்டே வித்துட்டார். நான் பிச்சை எடுக்கத் தோதாக என் காலை ஒடிக்க பார்த்தாங்க. அவங்களை தள்ளி விட்டுட்டு ஓடிப் போலிஸ்காரங்ககிட்டே சொன்னேன். அவர்களுக்கு டீ, காபி, பீடா வாங்கிக் கொடுத்துக் கொண்டு கொஞ்சம் நாள் இருந்தேன். அங்க வந்த ஒருத்தர் என்னை படிக்க வைக்கிறேன்னு அழைச்சிட்டுப் போனார். நல்ல சாப்பாடு, துணிமணி வாங்கிக் கொடுத்து பள்ளி கூடத்தில் சேர்த்துவிட்டார். பகலில் படிப்பேன். சாயந்திரம் பஜார் பக்கம் கூட்டிட்டுப் போய் எப்படி பிக்பாக்கட் அடிக்கிறதுன்னு பழகிக் கொடுத்தாங்க. பிக் பாக்கட் அடிச்சதில் பணம் நிறைய கிடைச்சா குடிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் நிறைய கிடைக்கும். மறுநாள் பள்ளிக்கூடத்தில் பாடம் கவனிக்க முடியாது. தூக்கமா வரும். வாத்தியார் அடித்தார். கூட படிக்கிற மாணவர்கள் கேலி செய்தார்கள். அது எனக்கு பிடிக்கலை. அங்கிருந்து தப்பிச்சுப் போக முயற்சிப் பண்ணினேன். முடியலை என்னை அடித்தார்கள். பட்டினியாய் போட்டார்கள். என் கண் முன்னால் என்னைப் பார்க்க வைச்சுகிட்டே குடித்து ருசிருசியான ஆகாரங்களை சாப்பிட்டாங்க. அவர்கள் சொன்னதைக் கேட்டாக்கா வசதியா வச்சுக்கோவோம் என்றார்கள். பசிதாங்காமல் திருட ஒத்துகிட்டேன். எனக்கு நல்லவசதி செய்து கொடுத்தார்கள். அந்த வீட்டுக்கு வந்த ஒரு அம்மா என்னை அவருக்கு துணைக்கு அனுப்பச் சொல்லி அழைத்துப் போனார்.

அந்த அம்மா என்னிடம் பிரியம் காட்டினாள். ஆனால் அந்த அம்மா ஒரு விபச்சாரி. அவர் வீட்டுக்கு வருவோர் போவோர் சிலர் என்னைப் பார்க்கும் பார்வையே பிடிக்கவில்லை. என்னை தவறாக பயன்படுத்தினார்கள். வலி பொறுக்காமல் அங்கிருந்து தப்பி அலகாபாத் போனேன். ரிக்ஷா இழுத்தேன். போலிஸ்காரர்கள் என்னை பிக்பாக்கட் செய்யச் சொல்லி அடித்தார்கள். சுற்றி, திருடர்கள், விபச்சாரிகள் என்ற சூழலுக்குள்ளே தள்ளினார்கள். இதெல்லாம் பிடிக்வில்லை. எனக்கு அப்பா அம்மா ஞாபகம் வந்து கொண்டே இருந்தது. அப்பா இல்லை தெரியும். அம்மா முகம் மறந்து போனது. எந்த ஊரில் எப்படி இருப்பாள் என்று ஞாபகம் இல்லை. இந்த ரயிலே துணைன்னு ஓடிகிட்டே இருக்கேன்” என்றான். அவன் பேச்சு இந்தி, உருது, தமிழ், தெலுங்கு என்று பல மொழிகள் கலந்து இருந்தது. இந்த பிஞ்சு வயதில் இத்தனை துயரம், தொல்லைகளாஞ் என்றபடி வெளியே பார்த்தோன். நான் இறங்கவேண்டிய ஊர் வந்துவிட்டது. சட்டுன்னு பெட்டியை தூக்கிட்டு ரயிலை விட்டு இறங்கிய பின்தான் என் மீதே எனக்கு ஆத்திரமும் கோபமும் வந்தது. என்ன மனுஷன் நான்? அந்தப் பையனை அம்போன்னு விட்டுட்டு வந்துட்டேன். அந்த அம்மாவும் அந்தப் பையனும் உறவா, வெவ்வேறா? இந்த குடிப்பழக்கத்தால் சமூகச்சூழலில் ஏற்பட்ட சிதைவுகளா? என் மனசு பொறுக்கலை. சுமையை யாரிடம் இறக்கி வைக்க? தெரியலை. இது மாதிரி குடியால் உருக்குலைந்து எத்தனை மனிதர்கள் உறவைப்பிரிந்து தடம்புரண்டு நிலைதிரிந்து திரிகிறார்களோ ஞ் ரயில் கடகடவென்று கேலிச் சிரிப்போடு கடந்து ஓடி மறைந்து கொண்டிருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top