சிகப்பி

5
(1)

“இந்த பொட்ட நாய்க்கு இவ்வளவு வீம்பு வீராப்பு ஆகாது கஞ்சி ஊத்தினா குடிக்க மாட்டேங்கிறது. நல்லதைப் பொல்லதை ஆக்கிப் போட்டா மோந்துகூட பார்க்க மாட்டேங்குது..! பொட்டக் குட்டின்னு தூக்கியாந்து வளர்த்ததுக்கு அது காட்ற விசுவாசமா இது?” ஆதங்கமும் ஆத்திரமுமாய் அக்கா பொங்கிப் பொங்கிப் புலம்பினாள்.

“விடுக்கா ரெண்டு நாள்ல சரியாப் போயிடும்,” என்றேன்.

நாலஞ்சு வருஷத்துக்கு முன் தெருவில கண்ணுகூடத் திறக்காமல் கிடந்த நாய்க்குட்டியை தூக்கிப் பார்த்தவர் எல்லாம் பெண் குட்டி என்று விரட்டி விட்டார்கள். அது மெல்ல மெல்ல ஊர்ந்து அக்கா வீட்டு முன் வந்து முணங்கிக் கொண்டு கிடந்துள்ளது. நல்ல செவலை நிறத்தில் புஸ் புஸ் என்று இருந்ததை அக்கா தூக்கி வந்து பாலூற்றினாள். பெண் நாயை வளர்ப்பதைப் பார்த்து எல்லோரும் கேலி செய்திருக் கிறார்கள். “ரெண்டு பொட்டைகளை பெற்று, கட்டிக் கொடுத்தது போதாதன்னு பொட்ட நாயை வேற வளர்க்கிறியா” என்ற கிண்டல் மொழிகள்.

“ஏன் பொட்டைன்னா மிதமா, அதுவும் ஆண் நாய் மாதிரி விசுவாசமா பார்த்துக்கும்!” என்றாள். அதன் நிறத்தை வைத்து ‘சிகப்பி’ ன்னு பெயரிட்டு வளர்த்தாள். குழந்தைகள் இல்லாத வீடு என்பதால் அது செல்லமாக முணகி காலைச் சுற்றி சுற்றி வந்தது. போகிற இடமெல்லாம் நிழல் போலத் தொடர்ந்தது. அக்காவும் மாமாவும் அதை ஒரு பிள்ளையாகவே பாவித்தனர். இந்த நாலு வருஷமா அவர்கள் அதனைப் பிரிவ தென்பது அபூர்வம்தான். வெளியூருக்குப் போக வேண்டியது வந்தாலும் சிகப்பியை சாக்கிட்டு மாலை ஊர் திரும்பி விடுவார்கள்.

முந்தா நாள் காலையில் அக்கா எழுந்து வாசலைக் கூட்டித் தெளிக்க வந்தாள். அந்த நேரம் பஞ்சாரக் கூடைக்குள்ளே இருந்து திறந்துவிட்ட கோழியும் குஞ்சுகளும் படுத்திருந்த சிகப்பி அருகே போகவும் அது ‘வள்ளென்று குரைத்து விரட்டுவதுபோல் பாய்ந்து பாசாங்கு காட்டியிருக்கிறது.

கோழி குஞ்சுகளை நாய் கடித்துக் குதறப் போகிறதென்று நினைத்து பதட்டத்தில் அக்கா கையிலிருந்த விலக்குமாரை நாய் மீது எறிந்துவிட்டாள. விலக்குமார் மேலே விழுந்த கோபத்தில் வெளியே போன சிகப்பி, ரொம்ப நேரமா வீட்டுப் பக்கம் வரவில்லை. சாயந்திரமா மாமாதான் தேடி அழைத்து வந்திருக்கிறார். வழக்கம்போல அது சாப்பிடும் அலுமினியத் தட்டில் சோறு குழம்பு போட்டிருக்கிறார்கள். அது சாப் பிடாமல் அந்தப் பக்கமாகத் திரும்பிப்படுத்துக்கொண்டது. காலை வரை சாப்பிடவே இல்லை. தட்டில் சோறு காய்ந்து ஈமொய்த்து எறும்பு ஊறிக் கிடந்தது.

மாமா சிகப்பியை அருகில் அழைத்து உடல் தடவி, உண்ணி பிடுங்கி தாஜா செய்து, அக்காவை வேறு கஞ்சி ஊற்றச் சொல்லி, அதைச் சாப்பிட சொன்னார். வாலை ஆட்டி ஆட்டிக் குழைந்தது. கண்ணில் நீர் தாரை தாரையாய் ஊற்றியது. மாமாவுக்கும் அழுகை வருவதுபோல் இருந்தது. முகத்தைத் துடைத்துக்கொண்டார். சிகப்பியை மெல்ல நடத்தி ஆற்றைக் கடந்து பக்கத்தூர் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனார்.

“நாய்க்கு ஒண்ணுமில்லை! சாப்பிடாமல் இருப்பதால் பலவீனமாக உள்ளது,” என்று பசியைத் தூண்ட மாத்திரையை தூள் பண்ணி தண்ணீரில் கலந்து கொடுக்கச் சொல்லிக் கொடுத்தார். டாக்டர் அதுக்கு ஒரு ரொட்டித் துண்டைப் போட்டார். அதைக் கவ்விச் சாப்பிட்டது. மாமா ஊர் திரும்பு வதற்குள் பெட்டிக் கடையில் பன்ரொட்டி வாங்கிப்போட்டார். சாப்பிடவே இல்லை. மாமாவுக்கு ஆச்சரியமாயும், அதிர்ச்சியு மாயும் இருந்தது. இத்தனை வருஷம் தான் வளர்த்த நாய் டாக்டர் போட்ட ரொட்டியைத் தின்கிறது; தான் வாங்கிப் போட்ட ரொட்டியை சாப்பிட மறுக்கிறது. இதேபோல் அடுத்தவர்கள் போடும் உணவைத் தின்கிறது. தன் வீட்டார் கொடுக்கும் எதையும் தின்பதில்லை! ஆனா, ராத்திரி பகல்னு எப்பவும் போல் வாலாட்டி சுற்றி சுற்றி வருகிறது. இந்தப் புதிரை மாமா அடுத்த தெரு பெரியவர்களிடம் சொல்லி விசாரித்துப் பார்த்தார்.

“ஏம்பா, ஒம் பொஞ்சாதி என்ன இப்படி கூருவாரு இல்லாம நடந்துகிட்டா? பிள்ளையா வளர்க்கிற நாயை வெலக்கு மாத்தால அடிக்கலாமாப்பா..? நாயின்னா இளப்பமா? வெலக்குமாறு செருப்புக்காட்டி ஒங்கினாலே எந்த நாயும் கிட்ட அண்டாதப்பா…! அது வைராக்கியக்கார ஜீவனப்பா,” என்றார் பெரியவர். மாமா அக்காவிடம் இதைச் சொன்னார்

அக்கா தலையிலும் மாரிலும் மாறி மாறி அடித்துக்கொண்டு அழுதாள். தான் செய்த தப்புக்கு என்ன பரிகாரம் என்று கேட்டபடி மாலை மாலையாய் கண்ணீர் விட்டு அக்கா கதறினாள். அழுதபடியே சிகப்பியை தாவிப்பிடித்து அணைத்துக் கெஞ்சியும், கொஞ்சியும் அழுதாள். சிகப்பி வழக்கம்போல வாலைக் குழைந்து ஆட்டிக் குனிந்து கொண்டது. அதன் கண்ணிலும் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது. வீடு முழுவதும் சோகம் கப்பிக் கொண்டது.

“என்னடா நாம அக்கா வீட்டுக்கு வந்த நேரம் இப்படியா….?” எனக்கு ஒரு மாதிரியான தர்மசங்கடமாக இருந்தது. தீர்க்க முடியாத இக்கட்டாக இருந்தது.

இந்த நேரம் சூழ்நிலையை மாற்றுவதுபோல, “என்ன ராமசாமி, என்ன விசேஷம்? வீட்டுக்கு விருந்தாள்க வந்திருக்கிற மாதிரி தெரியுது!” என்ற குரல் கேட்டதுதான் மாயம்! அடுத்த நொடி சிகப்பி அக்காவின் பிடியிலிருந்து எகிறி வீட்டுக்குள் நுழைய இருந்த அந்த மனிதர் மீது பாய்ந்து குரைத்தது.

“அடடே, ராமசாமி, சிகப்பி இருக்கா.. நான் தெரியாம நுழைஞ்சிட்டேன்…” என்றபடி அவர் குடையை பாதுகாப்பு கேடயமாக்கிக்கொண்டே ஓட்டமும் நடையுமாய் வெளி யேறினார். மாமா சிகப்பியை அதட்டினார். அது வாலை ஆட்டிக்கொண்டு நின்றது. இதையெல்லாம் பார்த்த அக்கா அழுவதை நிறுத்தி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

நடப்பதை எல்லாம் பார்த்து எனக்கு புதிராகவும், குழப்பமாகவும் இருந்தது.

“என்னக்கா நடந்தது? அந்த ஆளு யாரு, ஏன் சிகப்பி இப்படி பாய்ந்து விரட்டிச்சு”

“தம்பி அவரு பேரு கப்பஞ்செட்டி. நாங்க உலக பேங்க் கப்பஞ்செட்டின்னுதான் கூப்பிடுவோம்!”

“ஆமா, அவரு ஒவ்வொரு வீட்டில்ல நடக்கிற நல்லது கெட்டதை எப்படியோ விசாரிச்சு தெரிஞ்சுக்குவார். அந்த வீட்டுக்கு வலியப் போய் பேச்சுக்கொடுத்து உதவி செய்யிற மாதிரி கடன் கொடுப்பார்! ஆறு மாசத்தில் அந்தக் கடனை வட்டியோட திரும்பக் கொடுக்கலைன்னா.. அந்தக் கடன் வாங்கினவங்க நல்லது பொல்லது சாப்பிட முடியாது. ‘வாங்கின கடனை குடுக்க முடியாதவனுக்கு எதுக்கு கறியும் கனியும்? நாணயமில்லாதவனுக்கு நல்ல துணி எதுக்கு, நாக்குக்கு ருசி எதுக்குன்னு ஊரு முச்சந்தியில் உட்கார்ந்து அவங்க போகையில வரையில ஜாடைபேசுவார்! இப்படி இம்சை மூணு மாசம் கொடுப்பார். நாலாவது மாசம் அடியாட்களை ஏவி சாமான் செட்டுகளை எடுக்கச் செய்வார். அதனால அவரை நாங்க உலக பேங்க் சுப்பஞ்செட்டின்னு சொல்வோம்!”

ஆச்சரியத்தில் எனக்கு கண்ணும் காதும் விரிந்தன.

அக்கா தொடர்ந்து சொன்னாள், “அந்த மனுஷன் காலடி எடுத்து வச்சவீடு விளங்காது துலங்காது. அதனாலதான் சிகப்பி விரட்டிருச்சு! இவ்வளவு அறிவான என் செல்லம் சாப்பிடமாட்டேங்கிதே..! எப்படி சமாதானப்படுத்துவேன்?” என்றபடி அழ ஆரம்பித்தாள். அக்காவை எப்படி ஆறுதல் படுத்துவது. எனக்கு ஒன்றும் தெரியவில்லை !

சிகப்பி வாசலில் நின்று வாலாட்டிக்கொண்டிருந்தது. கண்கள் ஈரம் பொங்கியிருந்தன. சிகப்பியை சமாதானப்படுத்த முடியவில்லை. அது பகலெல்லாம் எங்கு போகுமோ தெரியாது. பொழுது சாயவும் வீட்டு வாசல் முன் வந்து படுத்துக்கொள்ளும். மாமாவும் அக்காவும் துடித்துப் போனார்கள். இரண்டு பெண்களை பெற்று வளர்த்து கல்யாணம் பண்ணிக் கொடுத் தவர்கள். இந்த மாதிரியான பாசப்போராட்டத்தினை அனுபவித்ததே இல்லை! மாமா மூன்றாம் வீட்டு முத்தையா விடம் சொல்லி சிகப்பிக்கு கஞ்சி ஊற்ற ஏற்பாடு செய்தார். சிகப்பி இந்த ஏற்பாட்டை உணர்ந்ததோ உணரலையோ தெரியவில்லை. ஆனால் முத்தையா வீட்டில் வயிற்றை நனைத்து ஜீவனைத் தக்க வைத்துக் கொண்டு வந்தது.

ஒருநாள் அதிகாலை 4 மணி இருக்கும். சிகப்பியின் குரல் கேட்டது. அதைத் தொடர்ந்து பிற நாய்கள் குரைக்கும் ஒலி கேட்டது. வீட்டுக் கதவை பதட்டத்தோடும் பலவீனத்தோடும் தட்டும் சத்தம் கேட்டது. நாய்கள் இப்படி குரைக்கும்படியாக யார் இந்நேரம் கதவைத் தட்டுகிறார்கள்? அதிகாலை நேரத்தில் வீட்டில் பரபரப்பு பற்றிக்கொண்டது. மாமா எழுந்து வாசல் விளக்கைப் போட்டு வீட்டுக் கதவைத் திறந்தார். நாங்கள் எல்லோரும் பரபரப்போடும் பின்னால் நின்றோம்.

கதவருகே சிகப்பி ஏதோ சொல்லத் துடிப்பதுபோல் வாயை வாயை பிளந்தபடி நின்றது. அதன் கழுத்திலும் காலிலும் இரத்தக்கறை வீட்டுச் சுற்றுச் சுவரருகே தெருநாய்கள் பதட்டத்தோடு நின்றிந்தன.

அக்கா டார்ச் லைட் கொண்டு வந்தாள். சிகப்பி மாமாவின் காலருகே வந்து வேட்டியைப் பிடித்து இழுத்தும் மாமா கீழே பார்த்தார். நாலடி நீளம், அரையடி கனத்தில் ஒரு மலைப்பாம்பு கழுத்து குதறப்பட்டு குற்றுயிராய் கிடந்தது. வால்மட்டும் துடித்து சுழன்று சுழன்று உயிர் இருப்பைக் காட்டிக்கொண்டிருந்தது. எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மலைப்பாம்பு எப்படி ஊருக்குள்ளே வந்தது?

சிகப்பி பதற்றத்தோடு மாமாவின் வேட்டியைப் பிடித்து இழுத்துக் கொண்டு தெருவழியே ஒடியது. அக்கா போட்ட சத்தத்தில் அக்கம் பக்கத்து வீட்டார் எல்லாம் எழுந்துவிட்டனர். நாயின் பின்னே மாமா ஓட மாமாவைத் தொடர்ந்து நானும் பக்கத்து வீட்டுக்காரர்களும் ஓடினோம்.

சிகப்பியும் மற்ற நாய்களும் தெற்கு நோக்கி ஓடி • ஆற்றங்கரைப் பக்கம் ஓடின! நாங்களும் பின் தொடர்ந்தோம்! ஆற்றில் திடீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கரை இப்போ உடையுமோ அப்புறம் உடையுமோ என விளிம்பில் வெள்ள நீர் தளும்பிக் கொண்டிருந்தது. மலைப்பாம்பு ஆற்று வெள்ளத்தோடு அடித்துவரப்பட்டிருக்குமோ…. ஆற்றோர வீட்டுக் கோழி வாடைக்கு ஊருக்குள்ளே புகுந்து விட்டதோ…

நொடிப் பொழுதில் ஊருக்குள் தகவல் பறந்தது. வீட்டுக்கொருவர் என்றில்லாமல் ஆண்கள் பெண்கள் எல்லாம் மண்வெட்டி, தட்டு, கடப்பாறைகளைக் கொண்டு வந்தார்கள். தென்பட்ட மேடுகளை வெட்டி மண் கொண்டு வந்து பலவீனமான கரையோரம் கொட்டி கெட்டிப்படுத் தினார்கள். கரையை உயர்த்தினார்கள். ஒரு வகையாய் ஊருக்குள் புக இருந்த வெள்ளத்தை தடுத்தாகிவிட்டது. சிகப்பியை பற்றி பேசியபடி ஊருக்குள் திரும்பினார்கள். சிகப்பியைத் தேடினார்கள் தென்படவில்லை.

வீட்டின் முன் அக்காவும் பிற பெண்களும் வாயில் முந்தானை துணியால் பொத்தியபடி நின்றிருந்தனர். நாய்கள் வட்டமாய் படுத்திருந்தன. நடுவில் சிகப்பி கால்கள் விரித்தபடி கிடந்தது. ஆண்களைப் பார்த்ததும் நாய்கள் கதறின. மாமாவைப் பார்த்ததும் அக்கா ஓவென்று கதறியது.

“பொட்ட நாய் வைராக்கியமாய் ஊருகாத்து உறவுகாத்து ஒரு வாய் கஞ்சி குடிக்காமப் போயிடுச்சே…”

மாமா சிகப்பியைத் தொட்டார். கழுத்திலும் உடம்பிலும் காயங்கள். உயிரின் துடிப்பிருந்தது. இரண்டு கையால் தூக்கி குழந்தையை ஏந்துவதுபோல் மாமா தூக்க, அக்கா வாங்கிக் கொண்டது. மாமாவும் அக்காவும் கால்நடை ஆஸ்பத்திரி நோக்கி ஓட, ஊரே அவர்கள் பின்னால் தொடர்ந்தது…

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top