சாவக்கட்டு

5
(1)

இன்று முதல் போயம்பாளையம் ‘சாவக்கட்டு’ களைகட்டத் துவங்கி விட்டது. கொங்கு வட்டாரத்தில் விரல் சூப்பும் குழந்தைகளுக்குக் கூட ‘பாளையத்து சாவக்கட்டு’ என்றால் தெரியுமளவுக்கு ரொம்ப பிரபல்யம். வருசமெலாம் படித்து ஓய்ந்து போன பள்ளிக்கூட இளவட்டங்களுக்கு, சித்திரைக்குப் பிறகு துவங்குகிற விடுமுறையோடு, சாவக்கட்டும் தயாராகும். போன முறை சாவக்கட்டு போலீசுக்குப் பயந்து கலைந்த பிறகு, இந்த வருஷத்துக்காக அனைவரும் காத்திருந்தனர். ஊரே ஏங்கி, எதிர்பார்த்திருந்த சாவக்கட்டு இதோ… இன்று முதல் கனஜோராக ஆரம்பமாகிறது.

சாவக்கட்டு ஆரம்பிக்கிற சந்தோஷத்தை விட, ரவியின் சேவலை தோற்கடிக்கப்போகிற வெறிதான் அதிகமிருந்தது சண்முகத்துக்கு! இருப்பது இயல்புதானே? சென்ற சித்திரைச் சாவக்கட்டில், ரவியின் சேவலை எதிர்த்து பந்தயம் கட்டியிருந்தான் சண்முகம். சாமுண்டிபுரம் சேவல் கூட போட்டி போட முடியாமல் தோற்றுப் போனது ரவி கட்சி. அந்த கோபத்தை சண்முகத்தின் மீது காட்டி, ‘காலணா பெறாத’ வாண்டுகளின் மத்தியில் சத்தமாய் சவால் விட்டிருந்த ரவியின் குரல் இப்போதும் சண்முகத்திற்கு நினைவிருக்கிறது.

‘எலே… சம்முவம்… பவுசு காட்டி பந்தயங்கட்டி செயிச்சுப்புட்டீல. வேடிக்க பாத்து காசு செயிக்கிறது வீரமில்ல. பந்தயக் கட்டுல சேவல வளத்து, எறக்கி விடுறதுதாம்ல வீரம். நிய்யி ஒரு ரோசமான ஆம்பளன்னா… வர்ற கட்டுல வாடா… மோதிப்பார்ப்போம்..’ அப்போதே தீர்மானித்து விட்டான் சண்முகம். அடுத்த வாரமே, தேனிக்கு போன அண்ணனிடம் கெஞ்சி, ஒரு முத்துலாபுரம் சேவல் குஞ்சை வாங்கி வரச் சொன்னான். இதோ… பதினோரு மாத இடைவெளியில் குரும்பாட்டுக் குட்டியைப் போல.. என்னமாய் வளர்ந்து விட்டது. மற்ற வட்டாரச் சேவல்களை விட, கழுகுத் தோற்றமுடைய முத்துலாபுரம் சேவல்கள் போர்க்குணம் மிகுந்தவை என்று பெரிசுகள் சொல்லிக் கொள்வார்கள். சண்முகத்தின் சேவலும் கழுகு போலத்தான் பார்ப்பதற்கு இருக்கும். ‘பொன்னி’ என்று பெயர் வைத்திருந்தான் சண்முகம். எட்டாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்து, விளையாடி, அழுது – சிரித்து ஒன்றாகவே சுற்றித் திரிந்த சினேகிதி, ‘அம்மை விளையாண்டு’ செத்து போனாள். அவள் பெயர் தான் – பொன்னி, சேவலை – அவளைப் போலவே துறுதுறுவென பார்க்கிற போது ‘பொன்னி’ என்றுதான் கூப்பிடத் தோன்றும். அதுவே பழக்கமாகி விட்டது.

சண்முகம் வருவதும், போவதும் எப்படித் தெரியுமோ பொன்னிக்கு. அவன் காலடிச் சத்தம் சந்து திரும்புகிற போதே கேட்டு விட்டு, வாசலில் நிற்கும். சண்முகமும் பள்ளி முடிந்து திரும்பியவுடன் நேரே வீட்டுக்கு வந்து பொன்னியைப் பார்த்து விட்டுத்தான், டியூசனுக்குப் போவான். அவன் வருவதற்கு தாமதமானால் பொன்னி அங்குமிங்குமாய் அலைந்து, வீட்டையே சுற்றிவரும். அந்த சமயத்தில் பொன்னியை யாராவது சீண்டிப் பார்க்க வேண்டுமே? கண்கள் சிறுத்துப் போய், உடல் சிலிர்த்துக் கொள்ளும். மெலிதான நடுக்கத்தோடு ‘கெக்.. கெக்.. கெ..’ சத்தமிடுகிற அதன் முகத்தைப் பார்க்கவே பயமாயிருக்கும்.

பொன்னியை சனி, ஞாயிறு விடுமுறைகளில் ‘சாக்கி’ ஆசாரியிடம் கொண்டு போய் சண்டை கற்றுக் கொடுப்பான் சண்முகம். இதோ… இப்போது வளர்ந்து ‘சாவக்கட்டு’க்குத் தயாராய் நிற்கிறது பொன்னி.

அன்று அதிகாலையிலேயே வெளியே கிளம்பத் தயாராகி விட்டான் சண்முகம். அப்பா இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தார். அம்மாவின் அருகில் வந்து, கிசு கிசுப்பாய்ச் சொன்னான்

“அம்மாவ்.. நா சாவக்கட்டுக்கு போறே…” பெருக்கிக் கொண்டிருந்த ஈச்சை மாரோடு நிமிர்ந்து பார்த்தாள் அம்மா.

“போயிட்டு இருட்டுறதுக்குள்ள வந்துரு… எவங்கூடவும் மல்லுக் கட்டிட்டு வந்து நின்ன… அப்புறம் அப்பாட்ட சொல்லிப்புடுவே… ஆமா…”

“சரிம்மா… நா கௌம்புறேன்…” பூனைப் பாதம் பதித்து, வாசலுக்கு வந்தான். “ஏலே… சம்முவம்… வௌக்கு வெய்க்கறதுக்குள்ள வீட்டுல இருக்கணும்… தொழுவத்துல பெருக்கேந் தொல்ல கூடிப் போச்சு… அந்த பொடவுயெல்லா அடய்க்க ணும்… வந்துர்றா …”

“சரிம்மா…” எரிச்சலோடு சொல்லிவிட்டு, பொன்னியை அடைத்து வைத்திருந்த பஞ்சாரத்தை நிமிர்த்தினான். பொன்னி சிலிர்ப்போடு, உடலை ஆட்டியபடியே வெளியே வந்தது. சண்முகம் பொன்னியை அப்படியே அமுக்கிப் பிடித்து தூக்கி, மார்போடு அணைத்த படியே நடந்தான்.

‘சாக்கி’ ஆசாரி வீடு இரண்டு தெரு தள்ளியிருந்தது. அவர் வீட்டு வாசலை ஒட்டிய, திண்ணையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தார். சண்முகத்தைக் கண்டவுடன் சரக்கி ஆசாரிக்கு முகம் மலர்ந்தது. வெற்றிலைக் கறை படிந்த பற்களைக் காட்டினார். “வாப்பா… சம்முவம், ஏ.. இத்தன தாமசம்..? இன்னக்கி

அம்மாபாளையம், இடுவாய், கவுண்டப்பாளையத்துகாரெங்கன்னு அத்தன மக்களயும் விட்டுப்புட்டு ஒனக்காகத்தே ஒக்காந்திருக்கே… போலாமா..?” அவர் தனது சாமாணங்களையெல்லாம் இட்டு, வெற்றிலைப் பெட்டி சைஸில் இருந்த தகரடப்பாவை எடுத்துக் கொண்டார். பொன்னியை ஆச்சரியமாகப் பார்த்தார்.

“பொன்னிய… போன மாசம் பாத்ததுக்கும், இப்ப பாக்குறதுக்கும் நெறய வேப்பாடு இருக்கு.. என்னத்தப் போட்டு கட்டையா வளத்தியோ… தெரியல, திருப்பூரு டிச்சுத் தண்ணியில விடாம… கெணத்து தண்ணியிலெயே ஊறி வளர்ந்தது போலிருக்கே…” சாக்கி ஆசாரி, சண்முகத்துக்கு இணையாக நடந்தவாறே பேசினார். “ஏஞ்சாக்கி… பொன்னிக்கு எத்தனாவது பந்தயம்? என்னா கத்தி கட்டி விடப் போற..? ..பொன்னி கலருக்கு இன்னிக்கு சரியா வருமா..?” கேள்விகளாக அடுக்கினான் சண்முகம்.

சாக்கி ஆசாரிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“என்ன சம்முவம்… சாக்கியப் பாத்து இப்படிக் கேட்டுப்புட்ட… இதெல்லாம் பாக்காமயா சாவக்கட்டுக்கு கூட்டிட்டுப் போவே..? ரெண்டாவது பந்தயத்துல பொன்னிய எறக்கி விடுவோம். இப்ப நடக்குற வளர்பொறக்கி வலது கால்லதா கத்தி கட்டணும்… வலதுங்கறது சாமி அம்சம்.. அதுனால ‘வளவு’ கத்திய கட்டிடலாம்னு இருக்கே… நீ என்ன சொல்ற?” சண்முகத்திற்கு எல்லாம் திருப்தியாகவே இருந்தது. “அதெல்லா… எனக்கெங்க தெரியும்..? நீ சொன்னா சரித்தே… ஆமா… இந்த நாளு பொன்னிக்கு சரியாவுமா?” சாக்கி ஆசாரி கணக்குப் போட்டார்.

“அமாவச… பாட்டும்… கழிஞ்சி பொற பொறந்து நாலு. எல்லாங்கூடி… அட.. பிரகஸ்பதி நம்பரு! பொன்னியோட கலரு கருஞ்சாம்ப… அதுவும் குருவோட கலருதேன்…! எலேய் மாப்புள சம்முவம்… இன்னெக்கி விசாலக் கெழமடா… கண்டிப்பா பொன்னிதே வருங்கிறே…” சண்முகத்துக்கு ஒரே சந்தோசமாக இருந்தது. சாக்கியோட கணக்கு தப்பாது. ‘இந்த வட்டாரத்துல சாக்கி முத்து ஆசாரின்னா கணக்குப் புலியிண்ணுல பேரு’.!

கடந்து போன மினிபஸ்ஸை கைகாட்டி நிறுத்தினார் சாக்கி. இருவரும் படிக்குப் பக்கத்தில் காலியாய் இருந்த சீட்டை பிடித்துக் கொண்டார்கள். கண்டக்டரின் விசிலுக்கு, கட்டை வண்டியாய் நகர ஆரம்பித்தது பஸ்.

“யே… நிறுத்துப்பா… விட்டா கொடுவாயில போயி எறக்கி விடுவ போலிருக்கு… அபிராமி தேட்டரு வந்தாச்சுல… நிறுத்த வேண்டியது தான…” கத்திக் கொண்டே, சண்முகத்தை கைகாட்டி அழைத்துக் கொண்டே இறங்கினார் சாக்கி. பெரியதும், சிறியதுமாய் சேவல்களை சுமந்தபடி இளவட்டங்கள்,

“என்ன சாக்கி… கூட்டம் இந்த தவண அதிகமா இருக்கும் போல” சண்முகம் நடந்து கொண்டே கேட்டான்.

“இருக்காதா பின்ன…? போன தவண கெடா மீச வச்ச எவனயோ பாத்து போலீசுண்ணு பயந்து ஓடிட்டாணுக இல்லயா… அதுதா எல்லாப் பயலும் ஒட்டுக்கா வந்துருக்காக…” – சாக்கி.

பந்தய மண் வட்டத்தைச் சுற்றி, இளைஞர்கள் முன் வரிசையிலும், சின்னப்பயல்கள் பின்னாலுமாக நின்று கொண்டிருந்தனர்.

“பந்தயங் கட்டாத சாக்கிக யாராவது இருக்கீங்களா?” யாரோ கூட்டத்தில் சத்தமாய் கேட்டார்கள். பல்லடத்திலிருந்து வந்திருந்த ஒரு சாக்கி முன்னால் வந்தார். “இவரு தான் இன்னக்கி பந்தயத்துக்கு நடுவரு… சாக்கி! சரிதானா? ” பல வருடங்களாய் பந்தய அனுபவம் வாய்ந்த ராஜேஷ் அண்ணா கேட்டார். முன் வரிசையில் நின்ற இளசுகள் “ஓ…” எனக் கத்தினார்கள். “சாக்கிக்கு ஒரு ‘ஓ’ போடு…” எவனோ ஒரு குசும்பன் கூட்டத்திலிருந்து கத்தினான். மீண்டும் முன்வரிசை “ஓ…” என இசை லயத்தோடு சத்தம் கொடுத்தார்கள்.

“மொதப் பந்தயம்… மேட்டுப்பாளையம்… பாலு சேவலுக்கும், கருமகவுண்டம்பாளையம் ராசா சேவலுக்கும்… பந்தயங்கட்டுறவுங்கெல்லாம் சீக்கிரமா கட்டுங்க…” சாக்கி அறிவிப்பைத் தொடர்ந்து நூறும், அம்பதுமாய் மாறி – மாறி கட்டினார்கள். சண்முகம், பொன்னியை அணைத்துப் பிடித்தபடி முன் வரிசைக்கு வந்தான்.

பந்தயம் ஆரம்பமாகிவிட்டது. பாலு சேவலும், ராசா சேவலும் சிலிர்த்துக் கொண்டு மோத ஆரம்பித்தன.

ராசாவின் செவலைச் சேவல், காலில் கட்டியிருந்த கத்தியை பாலுவின் வெள்ளைச் சேவல் மீது இறக்கியது. “கெக்… கெக்…” கழுத்துப் பகுதியிலிருந்து ரத்தம் கசியத் துவங்கியது. வெள்ளை இறகுகளில் சிவப்பு, சிவப்பாய் வடிந்தது. கூட்டம் ஆரவாரம் செய்தது. கண்கள் சிறுத்துப் போய், வெள்ளைச் சேவல் கால்களை முன்னே நீட்டியபடி ஆக்ரோசமாய் பாய்ந்தது. ஒன்றை ஒன்று கொத்தி, இறகுகள் காற்றில் பறந்தன. செவலைச் சேவல் பதுங்கியபடியே சண்முகத்தின் முன்னால் நின்றிருந்தது. வலது ஓரத்திலிருந்து ஓடி – பாய்ச்சலாய் வந்த வெள்ளைச் சேவல், அப்படியே செவலை மேல் விழுந்து அமுக்கியது. கழுத்து, முதுகுப் பகுதிகளில் ரத்தம் கொட்ட செவலைச் சேவல் எழுந்து நின்றது. வெள்ளையை நோக்கி ஒன்றிரண்டு அடி முன்னால் வைத்த செவலைச்சேவல், சுமோ மல்யுத்த வீரனைப் போல அப்படியே சரிந்து விழுந்தது.

“மண்ணுல தல சாய்ஞ்சுருச்சு…” பாலு ஆரவாரம் செய்தான். வேகமாய் ஓடி வந்து, ராசா தன் சேவலை உற்றுப்பார்த்தான். கழுத்தில் குமிழியிடுகிற ரத்தத்தோடு செவலைச் சேவல், ராசாவை பார்த்தபடியே அசைவற்றுக் கிடந்தது. ராசா, அதன் தலையை தன் உள்ளங்கையில் ஏந்திப் பார்த்தான்.

“எலேய்… தோத்து செத்துப் போனத என்ன கொஞ்சுற…? அது இப்ப என்னது…” ஓடி வந்து, புறங்கையால் ராசவாவைத் தள்ளினான் பாலு. அவன் கூட வந்திருந்தவர்களில் ஒருவன் “இன்னக்கி பாலு வீட்டுல சிக்கன் சிக்ஸ்டி பைவுதே” என்றான்.

இன்னமும் தன் சேவல் அருகிலேயே உட்கார்ந்திருந்த ராசா, பாலுவைப் பரிதாபமாகப் பார்த்தான். “பாலு… இந்தச் சேவல எனக்கே குடுத்துட்ரா… பந்தயப் பணத்துக்கு மேல தனியா காசு தர்றண்டா …” பாலு தன் தலையைத் தடவியவாறே மறுத்து அசைத்தான். “அதெப்புர்றா மாப்ள..? தோத்த சேவலு செயித்தவனுக்கு சிக்கனுதே…! போ… போ… வேற சேவ வாங்கி அடுத்த பந்தயத்துக்கு கொண்டா…”

சண்முகம், பொன்னியை மார்போடு இறுக்கிக் கொண்டான். தன் உருவத்திற்கு சற்றும் பொருந்தாமல், கண்களில் கண்ணீரோடு தேம்பிக் கொண்டிருந்தான் ராசா. போன பந்தயத்தில் இடுவாய் சாமிக்கண்ணுவின் தோற்றுப் போன சேவலை தூக்கிப் போன அந்த ராசாதானே இவன்? பாலு, தன் சகாக்களோடு செவலைச் சேவலையும், வெற்றி பெற்று உயிருக்கு போராடுகிற தன் வெள்ளைச் சேவலையும் தூக்கிக் கொண்டு குதூகலமாய் நடந்து போனான்.

சண்முகத்தின் சாக்கி, முத்து ஆசாரி, நடுவரின் அருகில் நின்று கொண்டிருந்தார். அவர் கையில் தயாராய் ‘வளவு கத்தி’! நடுவர் தன் அறிவிப்பைத் துவங்கினார்.

“ரெண்டாம் பந்தயம்… கெணத்துக் கடவு ரவி சேவலுக்கும், திருப்பூர் சண்முகம் சேவலுக்கும்…”

அந்த அறிவிப்பு சண்முகம் காதில் தேய்ந்து போய் ஒலித்தது. சண்முகம் மிக விரைவாய் போயம்பாளையம் பஸ் நிறுத்தத்தை நெருங்கிக் கொண்டிருந்தான்.

அவன் கைகள், பொன்னியை மார்போடு இறுக அணைத்திருந்தன.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “சாவக்கட்டு”

  1. ஜல்லிகட்டிற்கு நிகரான சாவக்கட்டு…
    நமது கலாச்சாரத்தில் ஊறிப்போன ஒரு வீர விளையாட்டு. அதன் ஒவ்வொரு நுணுக்கங்களையும் இந்த சிறுகதையின் மூலம் தெளிவாக ஆவணப்படுத்தியுள்ளார் தோழர். கதையை படிக்கும்போது இதை எழுதியவர் பெரிய சோக்காளியாகாத்தான்( சண்டை சேவல் வளர்ப்பவர் மற்றும் பந்தயங்களில் கலந்து கொள்பவர்களுக்கு எங்கள் வட்டாரப்பெயர்)இருப்பார் போலிருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. களத்தில் பொன்னியை இறக்காமல் ஊருக்கும் திரும்பும் சண்முகம்… மனம் நிறையும் முடிவு.. சிறப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: