சாந்தி விலாஸ்

0
(0)

சாந்தி விலாஸ் ஹோட்டலின் முன்புறமாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் பைக்கின் பக்கக் கண்ணாடி விளிம்பில் உட்கார்ந்து கொண்டு முகம்பார்ப்பதும்,  கண்ணாடியினைக் கொத்துவதுமாக சிறகடித்துக் கொண்டிருந்தது. ஒருசிட்டுக் குருவி. கண்ணாடியில் உட்காரத் தோது இல்லாமல் கால்கள் வழுக்குவதும், கீழே விழாமல் சிறகடித்துச் சமன்செய்து மறுபடி கண்ணாடி பார்ப்பதுமாய் ஒரு ஆலவட்டம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தது அது.

சாந்திவிலாஸில் காலைநேர உணவு முடியும் தருணம். டேபிளில் ரெண்டொரு ஆட்கள் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நீளவாக்கில் கடை அமைந்திருந்தது இருபுறமும் மும்மூன்று மேசைகள். மேசைக்கு மூன்றுபேர் மொத்தம் பதினெட்டு நபர்கள் உட்காரலாம். அதையடுத்து அடுப்பங்கரை .தொடர்ந்து சமையல்கட்டு தகர சார்ப் போட்டு, கீழே வழுக்கிவிடக் கூடாதென்பதற்காக கருங்கல் பதிக்கப்பட்டிருந்தது. மேல்மாடியில் வீடு. ஸ்டோர் ரூமும் அங்கேதான்.

”சாதத்துக்கு ஒலபோட்டாச்சு. அரிசி, கீழ எறங்கி வரட்டும்.”- அடுப்படி மாஸ்டர் மீசை கிருஷ்ணன் ‘காலிங்பெல்லை’ அழுத்தி கூடவே குரலையும் மேலே அனுப்பினார். “எவ்ளோ மாமா..?”  சாந்திவிலாஸின் உரிமையாளர் நடேசனின் மனைவியின் குரலும் உடனடியாய் எதிரொலித்தது.

அங்கே வேலைபார்க்கும் அத்தனைபேருமே ஒருகும்பு வகைமக்கள். அதனாலேயே சாந்திவிலாஸுக்கு ஊருக்குள் நல்ல பெயருண்டு. ‘வீட்டாளுக கைச் சமையல்க்கட.. மெஸ்ஸு..”

வெளியூரில் சிரமத்தில் இருக்கிற தன் சுற்றத்தாரின் வீடுகளில் நடேசன் அனாயசமாய் நுழைவார். அதற்கு அவர் தேர்வு செய்யும் இடம்,மகாசிவராத்திரி சாமிகும்பிடு. அந்தநாளில்தான் பங்காளிகள்  பூராவும் ஒன்றுகூடுவார்கள். இரண்டுநாள் கும்பிடு. முதல்நாள் அம்மனுக்கு பூங்கரகம் எடுப்பும், மறுநாள் பிள்ளைகளுக்கு முடியிறக்கி காதுகுத்துபவர்களும் அன்றுஇரவு ’முத்தால் ராவுத்தனு’க்கு பல்லயம் கொடுத்து அருள்வாக்குக் கேட்பும் நடக்கும். இரண்டு நாளைக்குமே பொதுச்சாப்படுதான்..

அப்போது எழுகிற பேச்சுப்பழக்கத்தில் நடேசன் தனது ஊசியினை நுழைப்பார். “அந்தப் பட்டிக்காட்டுல கெடந்து என்னத்துக்கு இன்னமும் கருமாயப்பட்டுக் கெடக்கணும்..? பேசாம  பிள்ளய எங்கூட அனுப்பிச்சு விட்ருங்க..கடைல  நமக்கும் நம்பிக்கையான ஆளு வேண்டிருக்கு. வரட்டும்.  கல்லாவுல ஒக்காந்து காசவாங்கிப் போடட்டும். ஏண்ட வேலய தாயா பிள்ளயாச் சேந்து செய்யட்டும்.. வேணுங்கறதச் சாப்புட்டுக் கறட்டும்.. சொந்தக் -காரங்கறதால நானென்னா சம்பளங் குடுக்காமயா விட்ருவே..?.”

ஆரம்பத்தில் காசுவாங்கிப் போடத்தான் சொல்லுவார். கூட்டநேரம் பார்த்து, சட்னிசாம்பார் விளம்பச் செய்வார். அப்புறம் இலைபோடச் சொல்வார். அப்படியே ஒருநாள் டீ பட்டறைக்கு அனுப்புவார். அவன் போடுகிற டீ சுமாராய் இருந்தாலும் ஆகா என பாராட்டுவார். பிறகு சமையல்கட்டில் உதவிக்கு நிற்கச் செய்வார். ஆக, கடையின் அத்தனை வேலைக்குமான ஆளாய் மாற்றி விடுவார். இதில் அவன் லயித்துப்போய் மீசைக்காரரைப்போல பதினஞ்சு வருசமாய் நீடிப்பதும், ஒன்ரிரண்டு மாசத்தில் சம்பளம் வாங்காமல் சொந்த ஊருக்கு ஓடிப் போவதும் நடக்கும் அடுப்படி மீனாட்சியம்மாள் ஏழுவருசமாய் மாவாட்டிக் கொண்டேதான் இருக்கிறார். புதுகிரைண்டர் வாங்கியநாளிலிருந்து ஆள் மாறவே இல்லை. காலைஇட்லி மாலைதோசை, இடையில் உளுந்தவடை, ஆட்டுபோண்டா, மசால்வடை மற்றும் குழம்புக்கான மசால், சட்னி என எந்தநேரமும் ஓட்டம்தான். மீனாட்சியம்மாளின் கைரேகை பூராவும் மாவோடு கரைந்து போய்விட்டது.

இவர்களோடு சாந்திவிலாஸில் ச்ம்பளம் வாங்காமல் வெறும் பத்துக்காசு வெத்திலைக்கும் அஞ்சுகாசு மூக்குப்பொடிக்கும் கடையைச் சுற்றிக்கொண்டிருக் கிற இன்னொரு ஆத்மா, ‘கம்பத்தா’ என்று கிழடுகட்டைகளாலும், அப்பத்தா என அன்பாய் இளவயதுக்காரர்களாலும் விளிக்கப்படுகிற நடேசனின் ஆத்தா மாரியம்மாள்தான். கம்பத்தில் பிறந்தமையால் அவரது இயற்பெயர் மறைந்து போனது. ஆறேழு பிள்ளைகளைப் பெற்றிருந்தாலும்கூட, மூத்தவரான சாந்திவிலாஸ் நடேசனைவிட்டு வேறு பிள்ளைகளிடம் அப்பத்தா செல்லுவதில்லை. ஏதாவது விஷேசம் என்றால்மட்டுமே எட்டிப்பார்த்துவிட்டு வருவார். அப்பவும் எந்தவீட்டிலும் ஒருவாரமோ பத்துநாளோ சேர்ந்தாற்போல தங்கிடமாட்டார். ‘கடக் காரனம்மா பத்துப்பேருக்கு வேல குடுத்து அம்பது நூறுபேருக்கு அன்னம் போடுற பொழப்பு. இங்கன நா வெட்டியா ஒக்காந்து கெடக்கறதுக்கு அங்கன இருந்தாலும் ஒரு கருவப்பில்ல உருவிக் குடுத்தேன்னா அது அவனுக்கு ஒரு ஒத்தாசதான..” என்பார். ஆரம்பத்தில்  தான்நடத்திய இட்லிக்கடையை கூடவே நின்று ஓட்டலாய் மாற்றியதில் நடேசன் பேரிலான விசுவாசம்.

”ஒங்க ஆத்தாளுக்கு ஒங்க அய்யாவக் கட்டிவச்சீகளோ இல்லியோ சாந்திவிலாஸ்ல இறுக்கமாக் கட்டிப்போட்டுட்டாக.. எங்க விட்டாலும் மாடு, கட்டுத்தொறயத் தேடி ஓடுறமாதிரி அவுகளுக்கு காப்பிக் கட தான இழுப்பா இழுக்குது.” – ஏனைய மருமக்கமார் இடித்துப் பேசுவர்.

ஆனாலும் நடேசனின் மனைவிக்கோ எந்தநாளிலும் மாமியாரைக் கொண்டாடிய வழக்கமில்லாதிருந்தது. ‘இவக என்னத்த அங்கவந்து தூக்கி நிமித்திக்கிட்டிருக்காக.. அய்யோசாமி, சின்னப்பிள்ளயிலயும் சேத்தியில்லம பெரிய மனுசியிலியும் சேக்கமுடியாம, அடுப்படிக்கும் சமையக் கட்டுக்குமா ‘டர்ருபுர்ருன்னு’ சண்டிங் அடிச்சமானைக்கித்தே திரிவாக கால் ஒரெடத்தில நிக்காது.  நாப்பதுவயசுல நமக்கு ஒருதடவ மாடியேறுனாலே தஸ்சுபுஸ்சுனு வருது இவக ஓட்டத்தப் பாக்கணுமே எங்கிட்டும் வழுக்கி விழுந்துருமோன்னு.. நாமல்ல பயக்கவேண்டியிருக்கு’ அதுபற்றியெல்லாம் அப்பத்தாக்குக் கவலையில்லை. காலையில் எழுந்திருப்பதும் இரவில் உறங்குவதும் யாருக்கும் தெரியாது. எந்தஇடத்தில் படுக்கிறார் என்பதும்கூட யாரும் கண்டதில்லை. ஒருநாள் கடைக்குள் படுக்கை, ஒருநாள் மாடி, இன்னோருநாள் அடுப்பங்கரை., வெளிவராந்தா என்று நினைத்த இடத்தில், படுத்துக் கொள்வார். ராத்திரி ஏவாரம் முடித்து பாத்திரங்களை எல்லாம் கழுவிப் போட்டுவிட்டு மீனாட்சி யம்மாளும் அப்பத்தாவும் மறுநாளைக்கான காய்கறிகளை நறுக்குவார்கள். அது முடிந்ததும் மீனாட்சி படுக்கைக்குச் செல்வார். க்டைக்கணக்கு முடித்து அன்றைய சம்பளத்தைக் கொடுத்ததும் நடேசபிள்ளை மறுநாளைக்கான பலசரக்கு சிட்டையை சரிபார்த்து விட்டு, வாழையிலையை நறுக்கி அடுக்கிக் கட்டிவைத்து, பார்சலுக்கான நியூஸ்பேப்பர் கிழித்துத் தொங்கவிட்டு தயிருக்கு உரைஊற்றி வைத்துவிட்டு மாடிக்கு படுக்கப் போவார்.

கடைப்பையனுக்கும் அங்கே நாளின் இறுதிக்கட்ட வேலை உண்டு. கடை அடைத்தவுடன் நாலு எலிக்கூண்டை எடுத்து தேங்காய்ச்சில்லு கோர்த்து, மேலமாடி, அடுப்படி, பலகாரஸ்டால் என நாளுக்கொரு இடமாக மாற்றிவைக்க் வேண்டும்..

அவன் படுத்தபிறகும் அப்பாத்தாவுக்கு வேலை ஓயாது. மருமகள் ஏசுவாள்  என்பதால் மாடியைத்தவிர எல்லா இடத்தையும் ஒருசுற்றுவருவார். விட்டது தொட்டது சரிபார்த்து, மூடியது மூடாததை ஒழுங்குபடுத்திவிட்டு தனக்கான ஒருபோர்வையோடு கடைவாசலில் வந்து உட்கார்ந்துகொள்ளுவார். சாவகாசமாய் வெத்திலையை மென்று துப்பிவிட்டு, கடைசியாய் எச்சில் இலைபோடுகிற தொட்டியை இறுக்கமாகமூடி மேலே ஒருகல்லை பாரமாக ஏற்றி வைத்துவிட்ட் பிறகே படுக்கச்செல்வார். இல்லாவிட்டால் ராத்திரியில் தொட்டிக்குள் நாய்கள் இறங்கி சண்டை போட்டுக்கொண்டிருக்கும். இவ்வளவுக்கு பிற்கும் அகால நேரத்தில் நடக்கிற அத்தனைக்கதைகளும் அப்பத்தாவுக்குத் தெரிந்துவிடும். குடுகுடுப்பைக்காரன் சொன்ன குறி, மாஸ்டர் செக்கண்ட் ஷோ சினிமாக்குப் போனது. கடைப்பையன் வயிற்றுப் பொருமல்வந்து நாலுதடவை ‘ஆய்’ போனது. மாடியில் பேரப்பிள்ளை வீறிட்டு அழுதது…. அப்பத்தாக்கு ஒரு கெட்டபழக்கம் உண்டு என்றால், அது, பகலில் மதியவேளையில் நின்ற இடத்திலேயே நின்றபடிக்கு உறங்குவதுதான். ’கர்கர்’ என சிலசமயம் குறட்டையும்கூட வரும்.

அந்தநேரத்தில் மருமகள் கண்ணில்பட்டால் சிரமம்தான். ”என்னா கேடுகெட்ட ஒறக்கம்..? வேலசெஞ்சிகிட்டு இருக்கும் போதே…! அப்பிடியா தன்னறியாம தூக்கம்வருது..? ஒரல்லகிரல்ல தலமுட்டிகிட்டா ஆர் பாக்கறது..? அடுப்படில ஒறங்கி கொதிதண்ணீல விழுந்தா என்னத்துக்காறது.. ராவெல்லா ஒறங்காம என்னாதான் வெட்டிமுறிக்கிற வேலயோ..?”  அலுத்துக் கொள்வாள்.

ஆனால் இப்போதுவந்த கடைப்பையன ரவிக்கும் அப்பத்தாக்கும் நல்ல ஒட்டுதல் ஏற்பட்டிருந்தது. ரவி பச்சைக்கூமாச்சி மலையிலிருந்து வந்திருந்தான். ஆறாப்போ ஏழாப்போ படிப்பு ஏறவில்லை என வீட்டார் சாந்திவிலாஸ்க்கு அனுப்பியிருந்தனர். மாடியிலிருந்து சமையலறைக்கும், அடுப்படிக்கும் சாமான்களை டெலிவரி செய்வதற்கும், குறிப்பாக கடைகண்ணிக்கு ஓடவும் அதோடு சப்ளைவேலையும் தெளிவாகப் பார்த்தான். டீ பட்டறைக்கு வயசும் உயரமும் எட்டவில்லை.. அப்பத்தாவுக்கு மட்டும் சொந்த பேரப்பிள்ளையாய் மாறிப்போனான். ராத்திரி வெத்திலை போடும்போது கூடவே அவனும் வந்து உட்கார்ந்து கொள்வதும், சாமத்தில் அப்பத்தாவுடன் கதைபேசி அவருடனேயே உறங்கிப்போவதும் உண்டு. அவன் வந்த பிறகு, அப்பத்தா நேரடியாய் கல்லாவில் வெத்திலைக்கும் மூக்குப்பொடிக்கும் காசுகேட்கச் செல்வதில்லை. ரவியே வாங்கி வந்துவிடுகிறான்.” அப்பத்தாக்கு வெத்தல வாங்க பத்துக்காசு குடுங்க. மூக்குப்பொடி வாங்கணுமாம் அஞ்சுகாசு எடுத்துக்கறட்டா..?’ என்று  அப்பத்தாக்கு ஒரு அலைச்சலை மிச்சப்படுத்தி இருந்தான்.   .

ன்றைக்கு மீனாட்சியம்மாள் கடைக்கு வரவில்லை. ஊருக்குப்போய் விட்டது. அதனால் வடைபோடுவதை நடேசன் நிறுத்தச்சொன்னார். வெளியிலிருந்து கமிசனுக்கு வாங்கி சமாளித்தார். இட்லி தோசையை நிறுத்தமுடியாது. இருக்கிறவர்கள் சமாளித்து வேலை பார்த்தார்கள். இந்தமாதிரி சமயத்தில் நடேசனின் மனைவிகூட மாடியைவிட்டு இறங்கிவருவாள். ‘அப்பத்தா இன்னிக்கி வசவுகள் பெறுகிறநாள்.’ ரவி, கேலிசொல்லிச் சிரிப்பான். “போடா நாயி.. மாமியா மருகளுக்குள்ள நாலொன்னு ஏசிக்குவக பேசிக்குவாக..அந்தக் கணக்கு நமக்கெதுக்கு, சின்னப்பய நீ அதெல்லா பேசக்கூடாது..” என அவனை அதட்டினார் மீசைக்காரர்.

அப்போது மீனாட்சியம்மாளின் இடத்தில் நின்று இரவு டிப்பனுக்காக அப்பத்தா மாவாட்டிக் கொண்டிருந்தார்.. அரிசிமாவு அரைத்து முடிந்து, உளுந்து கடகட்வென ஓடிக் கொண்டிருந்தது, அதுமுடிந்ததும் குழம்புக்கு மசால் எதுவும் ஆட்டத் தேவையா, மிக்சியில போட்டுக்கொள்கிறார்களா…… கேட்பதற்காக மெல்ல நடந்து அடுப்படியில் போய்நின்றார்.. அடுப்பில் சோறு, கொதி வந்து கொண்டிருந்தது. மூன்று அடுப்புகள் போட்டிருந்தார்கள். ஒன்றில் தோசைக்கல் இறக்கப்படாது கிடந்தது. மற்றொண்டில் சாம்பாரோ, காயோ வெந்து கொண்டிருந்தது. அத்தனை அடுப்பின் வாயிலும் கடலைப்பொட்டும் முந்திரித்தோடும் திணித்து தீ வளர்த்துக் கொண்டிருந்தார் மீசை.

“என்னாத்தா..? என்னா எட்டிப் பாக்கற..?” புருவத்தை உயர்த்தியபடி கேட்டார்.

”ம்.. சோறு வடிச்சாச்சா..?” மெல்லிய குரலில் அப்ப்த்தா கேட்டது.

”ஒருகொதி வ்ந்திருச்சு.. அதேன் அடுப்பத் தணிச்சுவிட்டுருக்கெ.. மறுகொதி வந்ததும் வடிச்சு எறக்கணும். அதுசரி, நீ எதுக்கு இங்கிட்டுவார.. தர பூராம் ஒரே நசநசன்னு கெடக்கு வழுக்கிகிழுக்கி விழுந்துறப் போற.. போய் மாவப்பாரு, மருமவ வந்திரப்போவுது..”

அந்த வார்த்தைக்கு அப்பத்தா பின்வாங்கி மறுபடி உரலுக்கு வந்தார். தரையைக்கூட்டி சுத்தம் செய்துவிடலாமா என யோசித்தார். அது ரெம்பநேரம் பிடிக்கும் அதற்குள் உளுந்தமாவு தாங்காது. வத்திப்போகும் மருமகள் கண்டால் சத்தம் போடலாம் ஆனால் அண்டாவில் தண்ணீர் குறைச்சலாய் இருந்தது. மாவு தோண்டியதும் உரலைக்கழுவ நிறையத் தேவைப்படும். ‘நாலுகுடம் ரெப்பி விட்டால் தேவல’ ஈயக்குடத்தை எடுத்துக்கொண்டு கோடியில் இருந்த பிளாஸ்டிக் ட்ரமை நோக்கிச் சென்றார்.

மீசை, கடைப்பையனைக் கூப்பிட்டார். “ஒண்ணுக்குப் போகணும். இங்கவந்து கொஞ்சநேரம் நின்னுக்க. எதுனாச்சும் கொதிவ்ந்ததுனா கரண்டியவிட்டுக் கிண்டிவிடு. தீய எரிக்கவோ கொறைக்கவோ வேணாம்..ம்..? ”

“யாராச்சும் தோச கேட்டா..?”

“மாஸ்டர் இல்ல்ன்னு சொல்லீடு… போனதும் வந்திர்றேன்..’’

எப்படியும் மாஸ்டர்வர அரைமணி நேரம் ஆகும். வெத்திலைவாங்கி மென்று துப்பிவிட்டு, சிகரட் ஊதிவிட்டு எதிர்ப்படுகிற  நபரிடம் ஒருபேச்சு நடத்திவிட்டுத்தான் வருவார்.

முதலாளி கல்லாவில் இருந்தார். சப்ளைஹாலிலும் ஒராள்நின்று கொண்டிருந்தார்.

ரவி அடுப்படிக்கு வந்தான்.

அப்பத்தா குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டிருந்தது.

ரவிக்கு அந்த பெரியகல்லில் தோசைவார்த்துப் பார்க்க ஆசை வந்தது. யாராவது தோசைகேட்டு வரமாட்டார்களா என வெளி வாசலைப் பார்த்தான். கண்ணெட்டுமட்டும் ஒர்த்தரும் வரவில்லை.

திடுமென மாவாட்டும் இடத்தில் ‘டமால்’ என்ற சத்தம்கேட்க ரவி உள்ளே பார்த்தான். அப்பத்தா தண்ணீர்க் குடத்தோடு கீழே விழுந்து கிடந்தது. ரவி ஓடிப்போய்த் தூக்கினான். அப்பத்தாவின் முன்புறம் பூராவும் தொப்பலாய் நீர் ஒழுகியது. உடம்பில் நடுக்கம். “கால் வழுக்கீருச்சு..” என்றது.

“அப்பத்தா கொடம் நெளிஞ்சிபோச்சு பாரு.. !”  குடத்தின் நடுப்பகுதி அப்பளமாய் சப்பளிந்து கிடந்ததைக் காட்டினான் ரவி. அப்பத்தா விசுக்கென எழுந்தது. ‘அய்யோ’ என்று குடத்தை. திருப்பிதிருப்பிப் பார்த்தது. குடத்துக்குள் கைவிட்டு நெளிசலை நிமிர்த்த முயற்சித்தது. குடம் இறுக்கமாய் நின்றது. நெளுவெடுத்த விரல்களில் வலியெடுத்தது. அப்பத்தாவின் முகம் விகாரமானது. “ மாடில இருக்கவ வந்தா ஆஞ்சு பொடுவாளே..”. கையைமடக்கி உள்புறமாய்க் குத்தி குடத்தோடு போராடியது.

”என்னடா சத்தம்..? ‘ மாடியிலிருந்து மருமகளின் குரல் இறங்கி வந்தது.

அப்பத்தாவின் பரபரப்பைக் கண்டரவி, “ஒண்ணுமில்லம்மா.” என மாடிக்குப் பதிலுரைத்தான்.

“அப்பத்தா.. ஒன்நெத்தீல ரத்தம் வருது.பாரு.” அப்பத்தாவின் வலதுபக்க நெற்றி பொட்டிலிருந்து வடிந்து கொண்டிருந்த ரத்தத்தைக் காண்பித்தான்.

“கல்லுகில்லு குத்தீருக்கும்’ என சொன்ன அப்பத்தா, ”அய்யா சாமி, பருப்புக் கட்டய எடுத்துத் தாரெ, கொடத்த தட்டி நெளுவ எடுத்துவிடு அப்பனு.. மேலருக்கவ கண்டா தொலச்சுப்பொடுவா..”  சொல்லிக்கொண்டே பருப்புக் கட்டையைத் தேடிப் போனது.

அதற்குள் கைக்குச் சிக்கிய உருளைக்கல்லை எடுத்து குடத்துக்குள் கைவிட்டு நெளிந்தபகுதியை மெதுவாய்த் தட்டி நிமிர்த்தினான் ரவி. அப்பத்தா வருவதற்குள் குடம் ஓரளவு சரியாகி இருந்தது. பழைய குடமாதலால் புதிய நெளிசல் அவ்வளவாய் வெளித் தெரியவில்லை. ”போதுமா அப்பத்தா..”  சரிசெய்த குடத்தைக் அப்ப்த்தாவிடம் கொடுத்தான். “போதுஞ்சாமி போதும் நல்லாருப்ப..”  குடத்தைத் திருப்பிதிருப்பிப் பார்த்துவிட்டு குடத்தை ஓரமாய் வைத்தது அப்பத்தா.

“அப்பத்தா இன்னமும் ரத்தம் வந்துட்ட்ருக்கு..கட்டுப்போடு ” நீளமாய்க் கீறி இருந்த காயத்தைப் பார்த்த ரவி மறுபடியும் சொன்னான் .

“கொஞ்ச நேரத்தில சரியாப்போகும் கண்ணு. கட்டுப்போட்டா என்னத்தப்போட்டு ஒடச்சன்னு சத்தம் போடுவாக..” என்றபடி வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை முந்தானையால் ஒற்றி எடுத்துக் கொண்டது அப்பாத்தா.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top