சாது மிரட்சி

5
(1)

வெளியில்.. வெயில் விஷம் போல ஏறிக் கொண்டிருந்தது. காலை பத்து மணிக்கே காற்று வெளி எங்கும் அனல் வெள்ளம்!

புதிதாக மந்திரிப் பதவி ஏற்றுள்ள உள்ளுர் எம்எல்ஏ முதன் முதலாக வருகிறார். வரவேற்க ஊரெல்லாம் தோரணம், ‘கட் அவுட்’கள் அமர்க்களம்! திரைப்படப் பாடல்கள் தெருவோரங் களில் காதைக் கிழித்தன.

பச்சை பசும் பூச்செடிகளை ஒற்றைப் பூக்களோடு பிடுங்கி வந்து மைதானத்தில் வரிசை வரிசையாய் நட்டு வைத்தது போல பள்ளிச் சிறுமிகள் சோர்த்து போய் நின்றிருந்தனர். மிரட்டியபடியும், மிரண்டுபோயும் வகுப்பு ஆசிரியைகள் பக்கத்தில் நின்றிருந்தனர்.

மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் வண்ணத் திரையில் பலநிற எழுத்துக்கள் ஜிகினா ஒட்டுகளில் மிளிர்ந்தன. மேடைக்கு முன்னால் மந்திரியின் மனம் குளிர்விக்க ஒரு செயற்கை நீருற்றினை ஏற்படுத்தியிருந்தனர். பொங்கி வழியும் நீருற்றின் ஊடே தெரியும் மேடையலங்காரம், வானவில்லை மைதானத்திற்கு கொண்டு வந்து வர்ணஜாலம் செய்வது மாதிரியிருந்தது!

மைதானத்து வாசலருகே கோவில் யானை ஒன்று மந்திரியை மாலைபோட்டு வரவேற்க நிறுத்தி இருந்தனர். காதுகளையும், தும்பிக்கையையும் ஆட்டி ஆட்டி வெப்பத்தை ஓட்டிக்கொண்டிருந்தது. அந்த யானை வெயிலில் வதங்கி நின்று கொண்டிருந்த சிறுமிகளுக்கு வெயில் சூட்டினை மறக்கச் செய்து கொண்டிருந்தது யானை!

“இதோ மாண்புமிகு அமைச்சரும் நமது தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய அண்ணன் பயணியர் விடுதியிலிருந்து வந்து கொண்டிருக்கிறார்.. வந்து கொண்டிருக் கிறார்…” என்று ஒலி பெருக்கியில் பனி ரெண்டாவது முறையாக நீட்டி முழங்கிக் கொண்டிருந்தார் ஒரு தொண்டர்.

அமைச்சர் வந்ததும், “சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாப் போம்! இயற்கை வளம் பேணுவோம்!” என்ற கோஷத்தோடு பள்ளி மாணவியர்கள் பங்கேற்கும் பேரணியைத் தொடங்கி வைத்து பேரணி அந்த நகரில் முக்கிய சாலைகளில் வழியாகச் சென்று மீண்டும் அந்த மைதானத்தை அடைந்ததும் அந்தக் தொகுதி சார்பாக மந்திரிப் பதவி ஏற்றமைக்கு முக்கிய பிரமுகர்கள் பாராட்டவும், அமைச்சர் ஏற்புரையோடு சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் மழை நீரை சேமிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் பற்றிப் பேசுவதாக ஏற்பாடு…!

வெயில் உச்சிக்கு உயர உயர…. நெருப்புக் கூடாரத்தின் கீழ் சிக்கியது போல புழுக்கமும் பெருமூச்சும், யானை இருப்புக் கொள்ள விடவில்லை. கால்களை மாற்றி மாற்றி வைத்து நகர்ந்து பார்த்தது. பாகன் விடவில்லை, முன்னங்காலைச் சுரண்டி, சுரண்டி ஏதோ சமிக்ஞை செய்து கொண்டிருந்தான்.

வண்ணத்துப் பூச்சிகளைப் பிடித்து உடலில் பசைதடவி, நட்ட குச்சிகளில் ஒட்டி வைத்தது மாதிரி, பல வண்ணச் சீருடைகளில் வந்திருந்த, பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் பறக்கவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் துடித்துக் கொண்டிருந்தனர். முகத்தில், உடலில் ஊற்றெடுத்து வழிந்த வேர்வை சீருடைகளைத் தொப்பலாக்கியது.

“அதோ, பாரு.. யானைப்பாகன் கையில வச்சிருக்காரே அதற்கு பெயர்தான் அங்குசம்! இவ்வளவு பெரிய விலங்கான யானை, அந்த அங்குசத்திற்கு சத்தியத்திற்கு கட்டுப்பட்டது போல கட்டுப்பட்டு இருக்கும்….” ஆசிரியை ஒருவர் மாணவி களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்!

திரைப்படப் பாடல்கள், அலங்கார நீருற்று, யானை போன்றவை சலிப்பை ஊட்டி உடல் அலுப்பை வெளிப் படுத்தின! இவை எல்லாம் எவ்வளவு நேரம்தான் சூரியச்சூட்டை மறக்க வைக்க முடியும்?

யானை நீருற்றுப் பக்கம் தும்பிக்கையை ஆட்டி ஆட்டி ஏதோ சொல்வது மாதிரித் தோன்றியது. பாகன் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்! வெறும் தும்பிக்கையை வாய்க்குள் கொண்டு போவதும் எடுப்பதுமாக இருந்தது. கருகருத்த நவ்வாப்பழக் கண்ணில் சாரை சாரையாக நீர் வழிந்தது. பசியைச் சொல்லு கிறதோ என்று எண்ணத் தோன்றியது. பாகன் முன்னங்காலைத் தடவி தடவி ஏதோ சமாதானம் சொல்வது போல் பட்டது.

பாடல்களும் மந்திரியைப் பற்றிய பெருமை பொங்கும் அறிவிப்புகளும் பதினெட்டாவது முறையாகத் தொடர்ந்தது! அப்படா ஒரு வகையாய் மந்திரி, கார்கள் பல சூழ, பாதுகாப்பு ஒலி முழங்க மைதானத்தின் நுழைவாயிலுக்கு வந்திறங்கினார். பவுர்ணமிக்கு முந்தின நாள் நிலாவை வெட்டி சட்டை தைத்தது போல வெள்ளை வெளேர் சட்டைகளில் மந்திரியும் முக்கியப் பிரமுகர்களும். சட்டைக்கு ஒத்துப் போகாத வாய்மணம்! “பேண்ட் வாத்தியக்குழு” இசை முழங்க ஆரம்பித்தது. யானை வாசலுக்கு அழைத்து வரப்பட்டது. தும்பிக்கையில் ஆளுயர மாலை கொடுக்கப்பட்டது.

வேடிக்கை பார்க்க வந்த நண்பர்களில் ஒருவர் சொன்னார். “இங்க பாருய்ய ஜனநாயகக் கொடுமையை..! நேற்று வரைக்கும் சாதாரணமாகத் திரிந்தவர் மந்திரியானதும் யானை மாலை போட்டு வரவேற்கிறதை பாரு! பந்தாவைப் பாரு!”

மற்றொரு நபர் சொன்னார், “சாதாரண மனிதர் மந்திரியாவது ஜனநாயகக் கொடுமை இல்லை! ஜனநாயகப் பெருமை! ஆனால் அவர் மந்திரி ஆனதும் எல்லாவற்றையும் மறந்து மக்களை வஞ்சிப்பதும் அதைப் பார்த்துக் கொண்டு மக்கள் மவுனமாக இருப்பதும்தான் கொடுமை.”

யானை மாலையை வாங்கி ஒரு சுழட்டு சுழட்டியது. ஏதோ லாவகமாகப் போடப்போவது போல..

இப்போது எல்லோருடைய பார்வையும் யானையின் மீதும் மந்திரியின் மீதும் தான்… யானை, கழட்டிய மாலையைத் தூரஏறிந்தது. பாகன் அங்குசத்தால் யானையின் முன்னங்காலைத் தட்டினான்.

இன்னொரு மாலைத் தரப்பட்டது. யானை அந்த மாலையையும் வீசி எறிந்து விட்டு முன்னே நின்ற பாகனை கீழே தள்ளிய நொடியில் தும்பிக்கையால் துளாவி மந்திரியைத் தூக்கி வீசியது! மந்திரி அலறலோடு ஜனத்திரளின் மேல் விழுந்தார்.

ஒரே பரபரப்பு. குய்யோ முறையோ குமுறலும், அய்யோ அம்மா அலறலும் மைதானம் முழுவதும் எதிரொலித்தது! யானைப் பாகன் எழுந்திருப்பதற்குள், யானை குறுக்கும் நெடுக்குமாக ஓட பள்ளிச் சிறுமிகள், ஆசிரியைகள் அலறி வாசல் பக்கம் ஓட விழுந்தவர்கள் மிதிபட ஒரே களேபரம்! அச்சத்தின் ஆட்சி! மிதிபட்ட பிஞ்சுகள்!

ஓடிய யானை செயற்கை நீருற்றில் உடல் நனைத்து தும்பிக்கையால் நீரூருஞ்சி தாகம் தணித்துக் கொண்டிருந்தது. தாகம் தணிந்ததும் நீருற்றினைச் சுற்றி வைத்திருந்த தொட்டித் தென்னை இலைகளை உருவி மென்று கொண்டிருந்தது. காயம் ஏதுமின்றி சற்று ஊமைவலியுடன் எழுந்து நின்ற மந்திரி, அதிகாரிகளின் துணையுடன் காரில் ஏறி கண்ணாடி வழியாக யானையைப் பார்த்துக் கொண்டே சென்றார்.

யானைப் பாகன் மிரண்டு ஓடி வந்தான்.

“அப்பாடா.. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படலை,” என்றார் ஒருவர்.

“காத்திருப்பும், பசியும், தாகமும் எல்லை மீற ஐந்தறிவு யானைக்கு கூட கோபம் வருது..” என்றார் மற்றொரு நபர்! மைதானத்தில் அமைதி திரும்பிட மீட்பு வேலை நடந்து கொண்டிருந்தது…!”

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “சாது மிரட்சி”

  1. அரசியல்வாதிகளின் தன்மையை இதை விட அழகாக யாரும் கூறி விட முடியாது. ஐய்ந்தறிவு யானை கூட கோபப்படுகிறது ஆனால் இந்த மனிதர்களால் தான் தன உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் அடிமையாய் உள்ளான் என்பதை சிறுகதை மூலம் வெளிப்படுத்தியமைக்கு நன்றி ஆசிரியர் அவர்களுக்கு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: