சம்முகத்தண்ணாச்சி

0
(0)

எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க விஸ்வநாதன் சாக்கடைக்குள் விழுந்துவிட்டான். நல்ல போதை. சாலையில் தள்ளாடிக்கொண்டே வந்தவன் கடைவாசலில் படிக்கட்டை இறுகப் பிடித்து தன்னை சமன் செய்துகொள்ள முயன்றபோது தலைகுப்புற பல்டியடித்து சாக்க்டைக்குள் சரிந்தான். நல்லவேளையாய் கல்லில் முட்டிக்கொள்ளவில்லை ஆனால் வேட்டிசட்டை யெல்லாம் சகதி ஏறி உடம்பும் உடுப்புகளும் கறுத்துப் போனது.

 

”தூக்குங்க தூக்குங்க..”  வாசலிலும் சாலையிலும் நின்றிருந்தவர்கள் குரல்கொடுக்க, அப்போதுதான் கடையைப் பூட்டிவிட்டு நிமிர்ந்த சண்முகம் அண்ணாச்சியும் பதறி ஓடிவந்தார்.

 

”சம்முத்..தண்…ணே..” சாக்கடைக்குள் புரண்டவன் கண்கள் சொருகி நிற்க அழைப்பு விடுத்தான். அந்தப்பரபரப்பில் யார் காதிலும் அந்த அபயகுரல் விழவில்லை. சின்னக்காளை மட்டும் அணணாச்சியின் காதருகில் வந்து கிசுகிசுத்தார். “பாவிமட்ட, ஒங்கபேரச் சொல்லில்ல பொரள்றான். நீங்க அப்பிடியே நகந்து நைசா கெளம்பீருங்க.. “ சொல்லியபடி அவரை நெட்டித் தள்ளினார்.

 

அண்ணாச்சிக்கு அது உசிதமாய்ப்படவில்லை. கடைக்கு வரும் போதெல்லாம் ‘ஓனரண்ணே’ என்று உருகிக் கூப்பிடுவான். ‘’கிண்டலா.. ஆயிரம் தரம் சொல்லிட்டே என்னிய ஓனர்னு சொல்லாதன்னு’ என்று அண்ணாச்சி சொல்லுவார். மறுபடி வீம்புக்கே கூப்பிடுவான். ‘அடுத்தொருக்காக் கூப்பிட்ட கடையில நொழைய விடமட்டேன்’ என்பார்.’சரிசரி சம்முவத்தண்ணே.’  என்றபிற்பாடுதான் அண்ணாச்சி சமாதானப்படுவார்.

 

விஸ்வநாதன், ஈத்தை மூங்கிலைப் பிள்ந்து கூடைகள் செய்கிற வேலைக்காரன். மலைக்கிராமங்களில் இருந்து ஈத்தைக் கட்டுகளை விலைக்கு வாங்கி வந்து அண்ணன் தம்பி சித்தி சித்தப்பா என குடும்பமாகச் சேர்ந்து வீட்டுக்கு முன்னால் மறைப்புக் கட்டி வேலைபார்ப்பார்கள். பெண்கள் அடித்தட்டு போட்டு கொடுக்க, ஆண்கள் மேல்கட்டுமானத்தை முடைவார்கள். சாந்துக்கூடை,சரளை அள்ளும்கூடை, பஞ்சாரக்கூடை, சாப்பாட்டுக்கூடை என வியாபாரத்திற்கு என்னஎன்ன ரகங்கள் தேவையோ அத்தனையும் உடனடியாய் செய்து கொடுப்பார்கள். ஈத்தையின் ஈரம் உலர்வ்தற்குள் அதனைக் கிழித்து வேலை துவ்ங்க வேண்டும் காயவிட்டால் விறகுதான். .

அண்ணாச்சி கயிற்றுக்கடை நடத்திவருகிறார். நூல்கயறு, கொச்சக்கயறு, சாரக்கயறு, தாம்புக்கயறு இவற்றோடு மண்வெட்டி, களைக்கொத்து, என உழுபடைக்கருவிகளும், கொத்தனார் சாந்துக்கரண்டி, கூடை, பாய் என பலவிதமான பொருட்கள் விற்பனைக்கு வைத்துள்ளார் மாட்டுவண்டி புழக்கம் அதிகம் உள்ள கிராமம்இது. அது சார்ந்த வியாபாரம் என்பதால் மாட்டுவண்டி டயர்வண்டிக்கு மண் அள்ளிப்போட  ஈத்தைக்கூடைதான் அதிகம் தேவைப்படும். மூங்கில் கூடை விலைஅதிகம் என்பதால்  வாரச்சந்தை ஏவாரத்துக்கும் நல்ல கிராக்கி இருக்கிறது. ஆரம்பத்தில் விஸ்வநாதன், அண்ணாச்சியிடம் அறிமுகமாகிறபோது அவரை ‘அய்யா’ என்றுதான் அழைத்தான். மற்ற கூடைக்காரர்களை விடவும் இவனது சரக்கு தெளிவாகவும், கபடமற்ற பேச்சும் அண்ணாச்சிக்குப் பிடித்துப்போக அவனையே ஒப்பந்தமாக் கூடைகள் போடச் சொன்னார். கூடை எண்ணி இறக்கியதும் உடனடிப்ப்ட்டுவாடாதான். அவசரத்துக்கு அட்வான்ஸ் வாங்கிக்கொள்ளவும் அனுமதித்தார். அன்றுதான் முதன்முதலாய் ‘ஓனர்’ என கூப்பிட்டான்.

 

’’படைத்தல், காத்தல், அழித்தல்னு மூனையும் சேத்துச் செஞ்சு ஆள்ற ஒராள்தான் ஓனர். நாமெல்லாம் மண்மேடுமாதிரி, ஒருகாத்துக்கும் மழைக்கும் தாங்க மாட்டம். அதனால எனக்கும் ஒனக்கும் பெருசா வித்தியாசமெல்லம் கெடையாது விசுவு..’’  பாந்தமாய்ப் பதில் சொல்வார்.

 

‘’கேக்குறப்பவெல்லாம் காசு தரீங்கல்ல..காசு வச்சிருக்கவகதான ஓனரு” பெரிய கண்டுபிடிப்பு போலப் பேசுவான்.

 

“நீ சரக்கு வச்சிருக்க அத்னால் காசு தரேன்.. சும்மா ரோட்லபோற ஆளுக்கு தரமுடியுமா..?”

 

விஸ்வநாதனுக்கு காலையும் இரவும் ‘சரக்கு’ போடும் பழக்கம் உண்டு. கடிகாரத்தின் அலாரம்போல சரியாக காலை பத்துமணிக்கு உடல் அதிரத் துவங்கிவிடும். கைவிரல்கள் உதறல் எடுத்து கிடுகிடுவென நடுங்க ஆரம்ப்க்கும். அதனால் எங்கே என்ன வேலையிருந்தாலும் அதனை ஒன்பதே முக்காலுக்கு போட்டது போட்டபடி விட்டுவிட்டுக் கிளம்பி விடுவான். ‘கட்டிங் அளவிலாவது சர்க்கு உள்ளே இறங்கினால்தான் மனசும் உடம்பும் இயல்புக்கு திரும்பும்.அதுபோலவே இரவிலும். தொண்டையை நனைக்காமல் சாப்பாடு இறங்காது. உறக்கமும் வந்து தொலையாது. மார்கழி மாதத்து நாயைய்ப்போல ஊளையிட்டுக்கொண்டே கிடப்பான்.

 

மலையிலிருந்து ஈத்தை காண்ட்ராக்ட்டர்கள் வந்து விட்டநாளில், கடைகளில் மொத்தவசூல் ஆகிற கிழமைகளில், யாருக்காவது கல்யாணம், காதுகுத்து, கருமாதி எனற நிகழ்வுகளில் விஸ்வநாதன், உட்சபச்சமான போதைவயப்பட்டுவிடுவான். தள்ளாடியபடி ஏதாவது ஒரு அடைத்த கடைபார்த்து உட்காருவான், முடியாவிட்டால் படுத்துக்கொள்வான். ஓரளவு போதை குறைந்தபிறகே வீடு செல்வான்.

 

அந்தநேரம் அவனிடம் பேச்சுக் கொடுத்தால் அவ்வளவுதான் காது கிழிந்துவிடும்.  அப்படியான ஒரு நாளில் வந்த பேச்சில்தான் ‘அய்யா ஓனராகி, ஓனர் சம்முத்தண்ணாச்சி’ யானார்.ஆனால் பிறர் முன்னால் பேசுகிறபோது மட்டும் ‘எங்கஓனரு’ என்றுதான் கூப்பிடுவான்.

 

யாரோ இரண்டுபேர் சாக்கடைக்குள் இறங்கி விஸ்வநாதனின் கைகளையும் கால்களையும் வாங்கித் தூக்கினார்கள். உடம்பு தொங்கி, வேஷ்டி சட்டையிலிருந்து சாக்கடை நீர், சாயநீராய் வடிகட்டி வடிந்தது. பின்புறத்தில் முழுக்க தலைவரை ஈரம். அப்படியே அவனை தரையில் கிடத்தினார்கள். அவனால் விசும்பக்கூட முடியவில்லை. பெருத்த பன்றியைப்போல உறுமினான்.. கண்களை மூடியபடியே எதையோ முனகினான். நெற்றியின் மேற்புறத்திலும், தாடையிலும் ரத்தக்கசிவு தென்பட்டது. சாக்கடைச்சுவரில் மோதியதா, பீங்கான் எதுவும் கிழித்ததா…!

 

’’நெத்தீல ரத்தம் வருது.. கல்லுலு கில்லுலு முட்டீருப்பாம் போல..”

 

“ஒதட்டுக்குக் கீழயும் அடிபட்டிருக்கு..ஆஸ்பத்திரிக்கித் தூக்குங்க..”

 

“ஒடம்பெல்லாம் சகதியாக் கெடக்கான்.. இப்பிடியே எப்பிடி ஆஸ்பத்திரிக்கித் தூக்கிப் போறது..? யாராச்சும் ஒருகொடம் தண்ணி கொண்டுவாங்கப்பா.. மொதல்ல ஆள கிளீன் பண்ணலாம்”

 

கும்பல் கூடிவிட்ட்து. ஆளுக்கொன்றாய்ப் பேச்சுவளர, சின்னக்காளை மறுபடியும் அண்ணாச்சியின் கையைச்சுரண்டினார். ‘வாங்க நவந்துறலாம்’

 

அண்ணாச்சிக்கு கால்கள் நகரமறுத்தன. சின்னக்களையின் அழைப்பிற்கு உடல் அசையவில்லை. சாக்கடையில் தானே இறஙகி விஸ்வனாதனைத்தூக்கி இருக்கவேண்டும்  அதனை செய்யாத ஒரு குற்றஉணர்ச்சி உடம்பை இறுக்கியது.

 

‘’ஒரு ஆட்டாவக் கூப்புடுங்க, வீட்டுக்கு ஏத்திவிட்ருவம்.’’ – அண்ணாச்சி மெல்லிய குரலில் அங்கிருப்பவர்களிடம் சொன்னார்.

 

‘’ம்.. ந்தா.. ஓனர் வந்துட்டார்ப்பா..”

 

‘’சாக்கடைல கெடக்கவன.. எந்த ஆட்டக்காரே ஏத்துவான்.. அண்ணாச்சி.. தண்ணி எடுத்துவந்து மொதல்ல ஆளக் கிளீன் பண்ணச்சொல்லுங்க’’

 

அண்ணாச்சி முழித்தார். பக்கத்தில் குழாய்கூட இல்லை..அடிகுழாய் அடுத்த தெருவில் இருக்கிறது/ ‘’ அப்பிடியே குழாய்க்கி தூக்கிட்டுப் போயிறலாமா..?” அண்ணாச்சி பாவமாய்க் கேட்டார்.

‘’ஒங்களுக்கே நல்லாத் தெரியிதா அண்ணாச்சீ.. இவெ என்னா பொணமா..? தரதரன்னு இழுத்திட்டுப்போக.. ஒரு கொடத்த ரெடிபண்ணுங்க.. அடிகொழாய்ல பிடிச்சுட்டுவந்திரலாம்..”–அண்ணாச்சிக்குப் பின்னாலிருந்து ஒருகுரல் அவரை கட்டுப்படுத்தியது.

 

‘’கொடமா..’’ மறுபடி குழம்பினார். கடைக்குள் மண்குடம்தான் இருக்கிறது குடிதண்ணீர்க்குடம். அதுதாங்குமா.?” யோசித்துக் கொண்டிருக்கும்போதே சின்னக்காளை, ’’கடச் சாவியக் குடுங்க அண்ணாச்சி’’ எனக்கேட்டார்.

 

‘’எதுக்கு..?”

 

“கடயத்தொறந்து கொடத்த எடுப்பம்..”

 

“கடைய அடச்சிட்டு எஸ்கேப் ஆகலாம்ணு பாத்துருக்காரு போல”

 

“ஆளுகளக் கண்டதுனால..மாட்டிக்கிட்டாரு..”

 

“ஓனருனாலே எஸ்கேப் பார்ட்டிகதான..”

 

“அண்ணாச்சியெல்லா அப்பிடி இல்லப்பா. நிக்கிறார்ல..”

 

கூடி இருந்தவர்கள் ஆளூக்கொன்றாய்ப் பேச்சை வளர்த்தார்கள்.

 

”பாவம் இவர் கடையே கெதின்னு கெடப்பான்.”

 

”இவருக்குத்தான சரக்கு கொணாந்து போடுறான். வேறெங்க போவான்”

 

சின்னக்காளை கடையைத் திறந்து குடத்தை எடுத்து வந்தார்.”வெரசுனு ஓடிப்போயி தண்ணி புடிச்சிட்டு வாய்யா.”- சின்னக்காளையை ஒருகுரல் விரட்டியது.

 

அந்த நேரம் ரோந்துக்கு வந்த ஒரு போலீஸ்காரர் நின்றிருந்தவர்களை கலைத்து விரட்டினார். “ என்னா இங்கன கூட்டம் கெளம்புங்க கெளம்புங்க.. “

 

“சாக்கடைல ஒராள் விழுந்திட்டான் சார்.”

 

“எப்பிடி..? தண்ணியா..? துக்கியாச்சா..?” எட்டிப்பார்த்தார்., “யாரு இவெ?”

 

“கடைல வேல பாக்குறவன் சார்.”

யார்யாரோ சம்பந்தமில்லாமல் பதில் சொன்னார்கள். அண்ணாச்சி மறுக்கவும் முடியாமல் பேசவும் முடியாமல் நின்றார்.

 

”கடைக்குள்ள தூக்கிப் போடுங்க.. ட்ராபிக்க மறிக்கக் கூடாது.” லத்தியை ஆட்டிக்கொண்டே பேசினார்.

 

“பைப்ல தண்ணிபிடிக்கப் போயிருக்காங்க சார்.. “

 

“தலைல ஊத்தி எழுப்பிவிடுங்க. ” சொல்லிக்கொண்டே நகர்ந்தார்.

 

தண்ணீர் வந்ததும் விஸ்வநாதனை இரண்டுபேர் கைத்தாங்கலாய்ப் பிடித்து உட்க்காரவைத்துக் கொள்ள தலைவழியே ஜல அபிஷேகம் நட்ந்தேறியது. சகதியும்  துர்நாற்றமும் ஓரளவு உடையை விட்டுக் கழன்றது. தண்ணீர் கண்டதும் விஸ்வநாதன் லேசாய்க் கண்களைத் திறந்தான். எதிரில் நின்ற சின்னக்காளையைப் பார்த்து,’சம்முத்தண்ணே..’ என குழறினான். கண்கள் சுழன்றுசுழன்று வந்தது. அவனால் தலையை நேராக நிமிர்த்த முடியவில்லை. உடம்பு அப்படியே துவண்டது.

 

‘’சரிசரி அப்பிடியே தூக்கி கடைல படுக்க வப்பம் ‘’ முன்போலவே ஆளுக்கொரு கையைக் காலைப்பிடித்து தொங்கத்தொங்கத் தூக்கிவந்து கடையின்முன்புறம் கிடத்தினார்கள். கடைக்குள் படுக்க வைத்துவிடுவார்களோ எனப் பயந்த சின்னக்காளை, விரைந்து வந்து கடை வாசலை மறைத்து நின்று கொண்டார். கதவை இறக்கிவிட்டால் களேபரமாகலாம்.

 

ஈரத்தில் தோய்ந்த உடையும் உடம்பும் விஸ்வநாதனின் போதையை சற்று கலைத்திருக்க வேண்டும். மரக்கட்டையாய்க் கிடந்த நிலைமாறி சலனம் காட்டினான்.

 

‘’வீட்டுக்குச் சொல்லிவிடலாமா.- சின்னக்காளையிடம் கேட்டார் அண்ணாச்சி. ஊருக்கு தெற்கே தேரிமேட்டில் விஸ்வநாதனின் வீடு. ஒரு பங்காளி வகையாறா மொத்தமாய் குடி இருக்கிற்ர்ர்கள். அவனதுவீட்டில் ஆள் இல்லாவிட்டாலும் பக்கத்து வீட்டில் சொன்னால்போதும். அண்ணன்  தம்பி, அக்காள் தங்கை என யாரவது வந்துவிடுவார்கள். ஊருக்கு ஒதுக்குப் புறமான பகுதியானதால், நாய்களின் நடமாட்டம் கூடுதல். வீட்டுக்கொரு நாய் வளர்க்கிறார்கள். எந்தஒருநாயும் இரவில் வீட்டில் கட்டிக்கிடக்காது. தெருவீதிகளில்தான் படுத்துக்கிடக்கும். அதிலும் தனித்தனிப் படுக்கை எல்லாம் கிடையாது. ரெம்பவும் பாச்க்காரப் பயல்களைப்போல, நாலைந்து நாய்கள் ஒன்றின்மேல் ஒன்று உரசிக்கொண்டுதான் உறங்கி கிடப்பாகள். யாராவது புதுஆள் தெருவில் கால் வைக்கக் கண்டால் அண்டம் கிடுகிடுக்க குரைத்து குலை நடுங்கச் செய்துவிடும்.

 

‘’நெதானமில்லாமக் கெடக்கான் அண்ணாச்சி.. அடி வேற ஆழமா விழுந்திருக்கும் போலருக்கு. படக்குன்னு ஆஸ்பத்திரிக்கிக்குப் போயி ஒரு ஊசியப்போட்டு விட்டீகன்னா நல்லது. அதுக்குப் பெறகு வீட்டப் பாக்கலாம’’

 

‘’அடி நெத்திப்பொட்டுல பட்டுருக்கு பாருங்க.. பய வேற கொறாவிக் கெடக்கான்.” ஆளுக்கொரு யோசனைகள் சொல்லலானார்கள்.

 

‘’அதெல்லா ஒண்ணுமில்ல.. ஒரு விடுப்பு தூங்கி யேந்திருச்சிட்டான்னா பய தானா எந்திரிச்சுக் கெளம்பிடுவான்.” அண்ணாச்சியை முந்திக்கொண்டு சின்னக்காளை சொன்னார். ஆளுக்காள் பேசி அண்ணாச்சிக்கு செலவு இழுத்து விடுவார்களோ என்கிற அச்சம் இருந்தது.

 

கூட்டம் சின்னக்காளையை பொருட்படுத்தவில்லை. “அண்ணாச்சி, ஒங்க நல்லதுக்குத்தான் சொல்ற்ம். பய போதக்காரெ.. சாக்கட்க்குள்ள வேறவிழுந்துட்டான். ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா ஒங்க கடையிலதான் கெடந்தான்னு கேஸ் ஆயிடும்.. டக்குன்னு கடத்தி விடப்பாருங்க..’’

 

‘’அதுக்குத்தான வீட்டாளுக வந்தா கூட்டிப்போயிருவாக..” அண்ணாச்சிக்கும் பதற்றம் உண்டானது.

 

‘’ரைட் அப்ப ஆளனுப்பிச்சு விடுங்க..’’

 

சின்னக்காளை வீடு தெரியாதென்றார்.

 

ஒராள் வண்டி கேட்டான். ‘’நடந்தெல்லாம் போய்வர முடியாது’’-அந்த நபரதுமுகமும் அறிமுகமில்லாதிருந்தது. அண்ணாச்சி தயங்கினார்.

 

“யே ஒருஆட்டாவப் பிடிச்சு போய்ட்டுவாப்பா. அப்பிடியே கையோட அவுகளயும் கூப்பிட்டு வந்திரலாம்.” இது ஒருகுரல்.

 

“வாடக..?”

 

“அதெல்லா அண்ணாச்சி குடுத்துருவாரு..”

 

ஆட்டோ கிளம்பிய சிறிது நேரத்தில் விஸ்வநாதன் ஜன்னிகண்டதுபோல கையைக் காலை வெட்டலானான்.

 

ஆளும்பேருமாய் அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கித் தூக்கிப்போனார்கள். போதைவயப்பட்டவனுக்கு வைத்தியம் பார்க்க முணுமுணுத்த டாக்டர், ஒருஊசியைப் போட்டுவிட்டு நர்ஸை அழைத்து காயத்துக்கு மருந்து தடவச் செய்தார். அப்பவும் விஸவநாதன் தெளிச்சி காட்டவில்லை.. ”வீட்ல ஒறங்க விடுங்க தெளிஞ்ச பெறகு எப்பிடி இருக்குன்னு வரச்சொல்லுங்க..” என்றார்.

 

அதற்குள் ஆட்டோ விஸ்வநாதனின் சொந்தங்களைக் கொண்டுவந்து இறக்கி விட்டது. அதே ஆட்டோவில் விஸ்வநாதனை ஏற்றிச் சென்றனர். போக,வர என இரண்டு  வாடகையினை ஆட்டாவுக்கும், ஊசிமருந்து போட்டதற்கு ஆஸ்பத்திரிக்கும் பணம் கொடுத்துவிட்டுத்தான் கடையை அடைத்தார் அண்ணாச்சி.

 

சின்னக்காளை அவரைப் பரிதாபமாகப் பார்த்தார். “ நாந்தே சொன்னேன்ல… “

 

“இல்ல சின்னக்காள, இப்ப கொஞ்சம் செலவுதே.. ஆனா, அப்பிடியே பாக்காமப் போயிருந்தம்னு வையிங்க, பாக்காம விட்டுட்டமே..ன்ன குற்ற உணர்ச்சி மனச அரிச்சி கூறுபோட்ருக்கும்.” என்றார் அண்ணாச்சி.

 

,” சரிங்ண்ணாச்சி விடுங்க.. இன்னிம்மே குடுச்சுப்போட்டு எந்தப்பய வந்தாலும் கடைவாசல மிதிக்கக் குடாதுன்னு சொல்லிப்போடுவம் நனச்சுச் செமக்கணும்னு விதியா.” சொல்லிவிட்டு அண்ணாச்சிக்கு விடை கொடுத்தார் சின்னக்காளை.

 

மறுநாள் காலை கடைக்கு வந்ததும் முதல் வேலையாக சாக்கடையை மூடிபோட்டு மூடுகிற வேலையினைப் பார்த்தார் அண்ணாச்சி.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top