சத்தியம்

0
(0)

காலை பதினோரு மணி இருக்கும் மொட்டை மாடியில் காயப் போட்ட துண்டை எடுத்துக்கொண்டு திரும்புகையில், கீழே தெருவைப் பார்த்தான் அவன். தெருவில் அந்த ஆட்கள் – ஆணும் பெண்ணுமாய் – நான்கு பேர் அவனது வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மீண்டும் நெஞ்சை அடைப்பது போல உணர்வு.

“ஆ…ஹா…. அன்றைக்கு பஸ்ஸில் அப்புறம் முச்சந்தியில் அவமானப் படுத்தின கும்பல் இன்றைக்கு வீட்டுக்கே தேடி வருது.. என்ன செய்ய…!”

“விஜயாவிடம் சொல்லி, நான் இல்லை” என்று சொல்லி அனுப்பச் செய்யலாமா”

ஒரு பொய்யைச் சொல்ல, அதற்கான நோக்கத்தைச் சொல்லு வதற்குள், அவர்களே வீட்டிற்குள் நுழைந்து கையும் மெய்யுமாய் அசிங்கப்படுத்திவிட்டால்… யோசித்தபடியே கீழிறங்கி கழிப்பறைக்குள் நுழைந்து கொண்டான்.

கழிவறை மங்கிய இருட்டு. அன்று நடந்த நிகழ்ச்சிகள் மனத்திரையில் தோன்றி வதைக்கத் தொடங்கின.

பஸ்ஸிற்குள் ஒரே நெருக்கடி. கோடை வெயில், காலை ஒன்பது மணிக்கே வறுத்தெடுக்கத் தொடங்கியது. முகூர்த்த நாள் வேறு; பஸ்ஸிற்குள் கல்யாணக் கூட்டம் ஏறிக்கொண்டே இருந்தது. அவன் ஜன்னலோரம் உட்கார்ந்து இருந்தான். நகரும் பஸ்ஸிற்குள் ஆறுதலோடு வந்த காற்று நெருக்கியடித்து நிற்கும் பயணிகளிடையே மோதி புலம்பலோடு வெளியேறியது.

ஒரு பெண்மணி ஆறுமாதக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு, நிற்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள். எழுந்து அந்தப் பெண்ணுக்கு இடம் கொடுக்க ஆசைதான். மற்ற இருவருமே ஒத்துக்கணுமே…! அதுவும் நாற்பத்தைந்து கிலோ மீட்டர் நின்று பயணித்துவிட்டு அலுவலகத்தில் வேலை செய்வது சிரமமாக இருக்கும்.

“அம்மா, அந்தக் குழந்தையை கொண்டாங்க, நான் மடியில் வச்சிக்கிறேன்” என்றான்.

வெட்கமும், தயக்கமும், நன்றியும் கலந்த முகபாவனையில் குழந்தையைக் கொடுத்தாள். அழகான பெண் குழந்தை. அவனிடம் வந்ததும் ஜன்னலோரக் காட்சிகளைப் பார்த்தபடியே, காற்றின் தாலாட்டில் கண்ணயர்ந்தது.

அவனும் வெக்கைப் பயணக் களைப்பில் காற்றின் அரவணைப்பில் கண்ணயர்ந்தான்.

“ஏங்க, ஏங்க குழந்தையைக் கொடுங்க, இறங்குற இடம் வந்திடுச்சு. நாங்க இறங்கப் போறோம்.” என்ற குரல் கேட்டு பக்கத்தில் இருப்பவர் அவனை எழுப்ப, உலுக்கி விழித்தவன் குழந்தையைக் கொடுத்தான். அவர்களும் இறங்கினார்கள். அவனுக்கு மடியில் பூஞ்சுமை குறைந்தது ஏதோ கனத்த பொருளை இழந்தது போல் உணர்வு.

நிறுத்தத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தை பலர் கை தட்டி சத்தமிட்டார்கள்.

வண்டி குலுங்கி நின்றது. குய்யோ முறையோ சத்தம் “திருடன், திருடன், பிள்ளை போட்டிருந்த மோதிரத்தை திருடிட்டான்” என்று பெண்ணின் குரல்.

“எங்கே யாரவன், அவனைக் காட்டு” முரட்டுக் குரல்கள் முழங்கியது.

அந்த பெண் அவனை நோக்கி கை காட்ட, அந்த ஆள் அருகில் வந்து “எந்திரிடா ராஸ்கல்! பார்த்தா டீஸெண்டா இருக்கே, பச்சைப் பிள்ளை போட்டிருந்த மோதிரத்தையா திருடுற….? வெட்கமில்லை!”

அவன் வெலவெலத்துப் போனான். “எந்திரிடா, என்ன முழிக்கிறே…” என்று அவனை நோக்கி ஒரு கை நீண்டது!

அதற்குள் கண்டக்டர் வந்துவிட்டார். “சார், அவரு ஆபீஸ்ல வேலை பார்க்கிறவரு.

எங்கள் பஸ்ஸில் ரெகுலரா வர்ராரு. நீங்க நினைக்கிற மாதிரி ஆளில்ல!”

“ஓஹோ, இவன் ரெகுலர் கஸ்டமர்னா நீ இவனுக்கு இதில் பார்ட்ன ரா ?”

“யோவ், மரியாதையா பேசு, என்னைய்யா கொஞ்சம்கூட தராதரம் இல்லாம?”

“யோவ் கண்டக்டர், வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடச்சொல்லு! இது அது, அவரு இவருங்கிறதெல்லாம் அங்க வந்து பேசிக்கிங்க!”

பயணிகள் எல்லோருக்கும் அவனையே பார்த்தது – பார்வையால் உறிப்பது போல் இருந்தது.

“இந்த வண்டி போய் டைம் எடுத்து திரும்பி வரணும். அவரை இறக்கிவிடுறேன் நீங்க பேசித் தீர்த்துக்குங்க!” என்று சொல்லவும்.

“யோவ் இறங்குய்யா, உனக்கெல்லாம் பேண்ட் சர்ட், ஆபீஸ் உத்தியோகம், வெட்கமில்லை!” பிடறியைப் பிடித்து தள்ளுவது போல் கத்தினார் அந்த ஆள். அவன் வேறு வழியில்லாமல் கைப்பையோடு இறங்கினான். வண்டி தப்பித்தேன், பிழைத்தேன் என்று உறுமி மறைந்தது.

அந்த பஸ் நிறுத்தத்தில் அவனைச் சுற்றி கூட்டம் கூடி ஆளாளுக்கு கேள்வி கேட்டு, கொச்சை வார்த்தைகளால் உமிழ்ந்தார்கள்.

“அய்யா, ‘நா(ன்) கண்ணியமான குடும்பத்தாளு அந்தப் பள்ளிக்கூட ஆபிஸ்ல கிளார்க்கா இருக்கேன். என் ஒரு மாதச் சம்பளத்தில் இந்த பாப்பா மோதிரம் மாதிரி நாலு வாங்கலாம். எதோ அந்த அம்மா பஸ்ஸில் குழந்தையை வச்சிகிட்டு நிற்க முடியாம நின்னுகிட்டு சிரமப்படுதேன்னு இரக்கப்பட்டுதான் குழந்தையை வாங்கினேன். இரக்கப்பட்டதுக்கு நல்ல புத்தி கொள்முதல் தானய்யா!

“யோவ், நீ குழந்தை மோதிரத்தை எடுக்கலைன்னு உங்க சாமி மேல் சத்தியம் பண்ணுய்யா, உன்னை வுட்டுற்றோம்!” அந்தப் பெண் சீறினாள்.

அவனுக்கு இடிமேல இடி விழுந்த மாதிரி இருந்தது. அவனுக்கு இந்த மாதிரி எல்லாம் அதீத நம்பிக்கை இல்லை! ‘அந்த சாமி இருந்தா அப்பாவி மேல திருட்டுப்பட்டம் வருமா? அப்பாவிகள் அவதிப்படறதும் அக்கிரமக்காரர்கள் ஆனந்தமா ஆடம்பரமா வாழறதும் நடக்குமா?’ என்ற எண்ணத்தை அவனால் வெளியில் சொல்ல முடியவில்லை. அப்படி சொன்னால் அவன் மீது திருட்டுப் பட்டம் சுமத்தியவர்கள் தர்ம அடியையும் தரலாம்! சத்தியம் பண்ண மறுப்பதே கூட திருட்டை உறுதி செய்து விடலாம்? சிந்தனை வாயை அடைத்தது.

தயங்கி நின்றான். நடுத்தெருவில் நிறுத்தி அவனை நிர்வாணப் படுத்தியதுபோல் உணர்வு. உடலில் துடிப்பும் படபடப்பும் கூடியது. வியர்த்துக் கொட்டியது. இன்றைக்கு ஏதோ நடக்கப் போகுது!

அவன் கைகால்களை உதறி சட்டை, பேண்ட்டில் எதுவுமில்லை என்று உறுதிபடுத்தி நம்பிக்கையை திரட்டிக் கொண்டு சொன்னான்.

“அய்யா இங்க பாருங்க, எனக்கு திருட வேண்டிய அவசிய மில்லை. உங்க பொருளை இன்னொரு தரம் தேடிப்பாருங்க! தேவையில்லாம என்னை நடுத்தெருவில் நிறுத்தி அசிங்கப்படுத்தாதீங்க! இந்தாங்க நான் ஆபீஸ்ல வேலை பார்க்கிறதுக்கு அத்தாட்சியா அடையாள அட்டை! இதை வச்சிக்குங்க! உங்க மோதிரம் கிடைக்கலைன்னா ஆபீசுக்கு வாங்க!”

“யோவ், என்ன டபாய்ச்சுட்டுப் போலாம்னு பார்க்கிறயா? கால்பவுன் மோதிரத்தை வச்சிட்டு வேற வழியைப் பாரு!” – என்றான் ஒருவன்.

நடப்பதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் “ஏய்யா, அவருதான் மோதிரத்தை பார்க்கலங்கிறாரு, அவரு நம்பிக்கைக்கு ஆபீஸ் கார்டு தர்ராரு, மோதிரத்தை நல்லா தேடிப் பாருங்க கிடைக்காட்டி, அவரு ஆபீஸ்ல போய் அதற்கான ரூவாயை வாங்கிட்டு போவீங்களா! இப்படி நடுத்தெருவில் நிறுத்தி அசிங்கப் படுத்தறீங்களே, உங்களுக்கு நல்லா இருக்கா?”

பெரியவரின் நியாய வார்த்தைகள் அவர்களைச் சுட்டின.

“சரிய்யா, பெரியவரே நாங்க இப்போ ஒரு கல்யாணத்துக்குப் போறோம். மோதிரத்தைத் தேடி பார்ப்போம். கிடைக்காட்டி அவரு ஆபீஸ்ல போய் அசிங்கப்படுத்த வேண்டியிருக்கும்?”

அவனும் ஒத்துக்கொண்டான். பெரியவருக்கு நன்றி சொல்லி கிளம்பினான். சாணியிலும் சாக்கடையிலும் புரட்டப்பட்டு நடந்து போவதுபோல் உணர்வு அவனுக்கும். அந்தக் கூட்டம் அவனைத் திரும்பித் திரும்பி பார்த்தபடி சென்றது.

அவன் ஒரு ஆட்டோ பிடித்து அலுவலகம் சென்று, மூன்று நாள் மருத்துவ விடுப்பு விண்ணப்பித்து ஊர் திரும்பினான். மனம் ஒருப்படவில்லை. நிம்மதி இல்லை; தூக்கமில்லை. நெஞ்சு வலிப்பது போல் உணர்வு மருத்துவரிடம் சோதித்துக் கொண்டான். நல்ல வேளை ஒன்றுமில்லை! உடல்வலி நிவாரணியாக, தூக்கம் வரும்படி யாக மாத்திரை கொடுத்தார் டாக்டர். ஒரு வகையாய் அவன் அன்று தூங்கினான்.

x x x

கழிவறை இருட்டில் கண்ணும் காதும் கூர்மையாக இருந்தன. வீட்டிற்குள்ளே புதுக்குரல்கள் கேட்டன.

“சார் இருக்காங்களா!”

“இதோ பாத்ரூம் போயிருக்கார், வந்திருவார். உட்காருங்க.”

பேச்சுக்குரலில் சாந்தம் தொனிப்பதாக உணர்ந்தான். ‘எப்படி வெளிவருவது. எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பது? சாந்தமாகப் பேசி சண்டைக்கு வந்திருக்கிறார்களா?’ அவன் உள்ளேயே புழுங்கி கொண்டிருந்தான்.

மனைவி, வந்திருக்கிறவர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுத்து உபசரிப்பது கேட்டது.

அடர்த்தியான மவுனம், விஜயா தான் உடைத்தாள். “நீங்க யாரு? உங்களுக்கு சார் என்ன செய்யனும்? எதும் ஸ்கூல் அட்மிஸனுக்கு சொல்லனுமா?…”

“இல்ல.. சாரை சும்மா ஒரு விஷயமா பார்த்துட்டு போலாம்னு…” தொண்டை இறுக்கத்தோடு குரல் கேட்டது.

‘ஒளிஞ்சிருந்து கற்பனையில் புழுங்கிச் சாவதைவிட பிரச்சினையை நேராக எதிர்கொள்வது உத்தமம்’ என்று எண்ணி வெளியே வந்தான்.

‘அவனுக்கு குரல் எழவில்லை. “வாங்க, வாங்க” என்பது போல் தலையாட்டியபடி போய் மனைவி அருகில் நின்றுகொண்டான்.

அந்தப் பெண்ணும், கணவனும் காலில் விழுவது போல் குனிந்தனர்.

“சார் எங்களை மன்னிச்சிருங்க! தப்பு நடந்து போச்சு. அன்னைக்கு கல்யாணம் முடிந்து வீட்டிற்குத் திரும்பி துணி மாற்றும் போது சேலை முந்தானை மடிப்பில் மோதிரம் ஒட்டிக் கிடந்துச்சு. அன்னைக்கி பாப்பா என் தாலியைப் பிடித்து விளையாடிக் கிடே இருந்துச்சு. புதுமோதிரம், கொஞ்சம் லூசலா இருக்குன்னு நூல் சுத்தி போட்டிருந்தோம். அது எப்படியோ கழண்டு முந்தானை மடிப்புக்குள்ளே சொருகிருச்சு. அது எனக்கும் தெரியலை” குரல் தழுதழுத்தது. அவளால் பேசமுடியவில்லை .

ஊர் அறிய முச்சந்தியில் திருட்டுப்பட்டம் கட்டி, அசிங்கப்படுத்தி விட்டு இப்போ வீட்டில் வந்து கமுக்கமாக மன்னிப்பு கேட்கிறாங்களே இது என்ன நியாயம்?

சரி, அதுக்காக ஊர் அறிய தண்டோரா போட்டா மன்னிப்பு கேட்க முடியும்? இப்பவாவது தப்பு உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாங்களே, மனசுக்கு ஆறுதுல் தர்றாங்களே.. அவங்க தன் தப்பை உணர்ந்தும் சொல்லாமலே இருந்திருந்தா நமக்குத் தானே மன வேதனை தீராம இருந்திருக்கும்!’

“சார். எப்படியோ தெரியாம நடந்திருச்சு. உங்களை அவமானப் படுத்திட்டோம் “எங்களை மன்னிச்சிட்டோம்னு சொன்னாதான் நாங்க இந்த வீட்டை விட்டுப் போவோம்.”

அவனுக்கு உடலெல்லாம் குப்பென்னு புல்லரித்தது. சரசரவென உதிர்ந்த இலைகளெல்லாம் தளதளவென துளிர்ப்பது போல் இன்பவலி. மனைவி விஜயாவும் ஒரு வகையில் நடந்ததைப் புரிந்து கொண்டாள். அந்தக் குழந்தை, விஜயாவை நோக்கி கை நீட்டியது.

அவளும் மவுனத்தை உடைத்து “அதனாலென்னங்க தெரியாமத் தானே நடந்துச்சு!” விஜயா அந்தக் குழந்தையை வாங்கியபடி “இப்போ மோதிரம், கீதிரம் போடலையே” என்றாள்.

அவர்கள் எல்லோரும் குபீரென்று சிரித்தார்கள். அந்தக் குழந்தை பிஞ்சுவிரல்களை ஆட்டி இதழ் விரித்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top