சடச்சாமியும் குருசாமியும்

5
(1)

ஆட்டோக்காரன் சம்சாரத்தோடு மூணாவது முறையாகவும்

ஓடிப்போன சடச்சாமியைக் கண்டுபிடித்துக் கூப்பிட்டு வந்திருந் தார்கள். சடச்சாமி குத்துக்கல்லிலும் கேவலமாய் சுவரோடுசுவரா ய் நின்றிருந்தான். காலடியில் அவனது மனைவி லட்சுமி குத்த வைத்தவாக்கில்… வீடெங்கும் சொந்த பந்தங்களின் கூட்டம்.

 

“போ.. டேய்.. நிய்யெல்லா.. ஒரு மனுசண்டு..!“– நழுவிய துண்டை. கையில் பிடித்துக் கொண்டு தவங்கிய நடையுடனும் தொங்கிய முகத்துடனும் வீட்டிலிருந்து வெளியேவந்தார் குருசமி ; சடச்சாமி யின் அய்யா.

 

“யே.. யென்னா..! யேவ் கெழட்டு மூதி., என்னத்த விசுக்கார மசுரு. அட, நில்லு..!’ – அவருக்குப் பின்னாலேயே தன் கனத்த உடம்பை அசைக்க முடியாமல் இழுத்துக்கொண்டு புருஷனைப் பின் தொடர்ந்து வந்தாள். குருவம்மா.

 

அவர்கள் இரண்டு பேரது செய்கையும் மற்ற மக்கமார்களை கோபம் கொள்ளச் செய்தது.

 

“என்னா… சனியங்களா…! “ – மூத்தவன் கணேசன் காட்டுக்கத்தல் கத்தினான். “வீட்ல எழவா விழுந்திருச்சு… ? ஒண்ண வெரட்டி ஒண்ணு ஓடுறீங்க…!”

 

அவனது அதட்டலுக்கு குருவம்மாள் நின்றாள். அப்படியே அவன் பக்கம் திரும்பி “அந்தாள் என்னா சொல்லிட்டுப் போகுதுன்னு கேட்டியாடா…? “ – ஒப்பித்தாள்.

“யே குருவம்மா…ம்மா..! “ – இது மூணாவது மகன் மூக்கன். மூன்று ஆண், இரண்டு பெணமக்கள் குருசாமி-குருவ்ம்மா தம்பதி யர்க்கு. புருஷனிலிருந்து பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வரைக்கும் குருவம்மாளை பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார்கள்

 

’நீ லூசா அந்தாள் லூசா.. ? “ வேகமாய்க் கேட்ட மூக்கன் – அந்த தகர வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்தான். இன்னமும் அங்கே இவர்கள் இரண்டு பேர்களின் பொண்டாட்டிமார்கள், தங்கச்சிமார், அத்தனை பேரின் பிள்ளைகள் என ஒரு பெரிய கும்பலே உள்ளே அடைந்துகிடந்தது.. வீட்டின் வெக்கையிலிருது தப்பிக்கவே ஒவ்வொருத்தராய் வெளியே வருகிறார்களோ என சந்தேகம் இருந்தது.

 

வெளியில் வெய்யில் காய்ந்தாலும், மிதமான காற்றும் அக்கம் பக்கத்து மரத்தடி நிழலும் இருந்தது.

 

”அந்தப் புருசனோளியோட ஓந்தம்பிய இன்னொருக்கா ஓட்டிவிடப் பாக்குறாப்லடா.. அந்தாளு.. ங்ஙொப்பெ..!” – கைகள் இரண்டையும் விரித்து சோளம் புடைக்கிற பாவனையில் ஆட்டி ஆட்டி பேசினாள் குருவம்மாள்.

 

”யே..மா.. ஒனக்கு அறிவே இருக்காதா…? சோத்தத்தான திங்கிற.. “ கணேசன் கண்களை இடுக்கிக் கொண்டு சொன்னான். “அந்த மனுசெ சும்மா வீட்டக் கடக்கவே மூணு நாள் ஆகும். இதுல அவுக ரெண்டுபேரையும் கையைப் பிடிச்சு இழுத்து ஓடிப்போங்கன்னு அனுப்பிச்சுவிடப் போகுதாக்கும்..? போ… போயி ஒரெடத்துல அடங்கு… ஒருவாரமா அலஞ்சி திரிஞ்சி உஸ்சுன்னு ஒக்கார்ர நேரம் ; ஒங்க ரெண்டுபேருக்கும் மோட்டுமோளம் போடுதூ..? “

 

சொன்னதைப் போலவே குருசாமி ‘தய்யத் தக்கா’ என்று நடைநடந்து இப்போதுதான் வீட்டைத்தாண்டி பூவரச மரத்தடியில் இருக்கும் பெட்டிக்கடையை நோக்கி பயணப் பட்டுக்கொண்டு இருந்தார்.

 

சடச்சாமியின் லீலையின் காரணமாய் ஒருவாரமாய் வீடு அல்லோகல்லப் பட்டுக்கொண்டிருந்தது. போலீஸ் ஸ்டேசனுக்கும் வீட்டுக்கும் ம்ட்டுமின்றி, காட்டிலும் மேட்டிலுமாய் தேடி அலஞ்சதில் கால்மூளை செத்துப்போனது. அலச்சலும் குடச்சலும் அல்லாது பணச்செலவும் பத்தாயிரத்துக்கு மேல் ஆகியிருந்த்து. எல்லாம் குருசாமி செலவுதான். ரிட்டய்ராகிற வயசில்கூட “எந்தப் பயலும் சல்லிக்காசு ஒத்தாசை கிடையாது. பீ – மூத்தரம் அள்ளி, பென்சன் வாங்கக் கூடிய நேரத்திலும் அய்யனுக்கோ-ஆத்தாளுக் கோ எவனும் அரையணா தந்து ஒதவுனது கிடையாது.’ கேட்டால், “ஒன்னிய மாதிரி எங்கள என்னா கவர்மெண்டு வேலைக்கா சேத்து விட்ட..? “ என்று எகடாசி செய்வான்கள். அதிலும் ஆட்டோக்காரன் சம்சாரத்தை இழுத்துக் கொண்டு ஓடி இருக்கா னெ சடச்சாமி…! வெஷம்..- வெசப்பய. அவனுக்கு வெவரம் தெரிஞ்ச நாளைல இருந்து இன்னிவரைக்கும் சண்ட , சச்சரவு.. திருட்டு, கோல்மாலு… ஆடாத ஆட்டமில்லை.

 

அதையெல்லாம் கூட வயசுக்கோளாறு, சரியில்லாத சேர்க்கை, என்று சொல்லி ஆறுதல் பட்டுக்கொள்ளலாம் ; ஆனால் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனான பிறகும் , ஒரு பொம்பளை யோடு ஓடிப் போவது…?

 

”இது தர்மமா சாமி..? தெய்வம் ஏத்துக்குமா.., “ – பூவரசு நிழலில் குளித்திருந்த நாயக்கர் பெட்டிக்கடையில் வெத்திலை பாக்கு பீடி வங்கிக் கொண்டே அவரிடம் ஒப்பித்தார் குருசாமி.

 

நாயக்கருக்கு பெட்டிக்கடையில் ஏவத்தைக்காட்டிலும் இதுபோல வில்லங்க விவ்காரங்கள்தான் அதிகம் தேடிவரும். அத்தனையும் மிச்சமில்லாம்ல் வாங்கிக் கொள்வார். அவசரப்பட்டு  யாருக்கும் எந்தத் தீர்ப்பும் சொல்லிவிடமாட்டார். அடித்து மண்டை உடைத்துக் கொண்டவர்கள் அன்றைக்குச் சாயங்காலமே ஒன்றாய்ச் சேர்ந்து ‘த்ண்ணி’ யடித்து வருவார்கள். ‘ நீ தேவ்டியா.. நீ பச்சத்தேவ்டியா..” என ஏலம் போட்டு குடுமிப்பிடி நடத்திய பெண்கள் , கொஞ்சநேரத்தில் வீட்டுக் குழம்பை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு சிரிப்பார்கள். அதனாலேயே தன்னிடம் வந்து ஒப்பிக்கிறவர்களிடம் – சாகசங்களை வியந்து பாராட்டுவதும், சோகங்களை உச்சுக் கொட்டி வருத்தப்படுவதுமாய் ஒரு ந்டிகனுக்குரிய சகல பாவங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

 

”கட அமஞ்ச எடம் அப்பிடி. என்ன செய்ய..? எளிய சனங்கள நம்பின ஏவாரம்.. “ என்பார். “ஆனா எனக்குத்தெரிய இந்த சனங்க யாரையுமே எதிரியா நெனைக்கிறதில்லப்பா.. மூணாம் மனுசெ ரூவத்திலதான் உருவாகிறான் ங்கறது என்னோட அனுமானம்.” என்றும் சொல்லுவார்.

 

குருசாமி பீடியைவாங்கி அதன் அடிப்பக்கமுள்ள முனையால் பல்லைக்குத்தினார்.

 

”என்னா குருசாமி.. செல்ல்க் கெஞ்சியா…?” – கறிக் கஞ்சியை அவர்களது பாஷையில் கேட்டார்.

 

”செல்லாவா.. வீட்ல ஒருவாக் கஞ்சி குடிக்க நீதி இல்லசாமி கூச்சலு கொமர்ச்சந்தே.. பல்லுக்குள்ள போயளக்காம்பு சிக்கிக்கிச்சு போல, கொடகொடன்னு கொடயுது.. “ பீடி முனை எச்சில்பட்டு நமத்துப் போனதால் விரல்விட்டு நோண்டலானார்.

 

”அந்தப்பிள்ளையும் கலியாணம் முடிச்சதாம்ல…?” – மீதி விஷயங்களையும் சேகரிக்கத் தயாரானர் நாயக்கர்.

 

”அது ஒரு லூசுக்கழுத சாமி.. அதுக்கும் ஒரு புள்ள இருக்கு. வீமெம் போல புருசெ இருக்கான்.. ங்க”

 

“பெறவு ஏன்..? “

 

”ம்..? வெரப்பு ,வீம்பு, வீரப்பு..தே. அய்யா, கேக்கறேன்னு கோச்சுக்கக் கூடாது. இப்ப ஒங்கமேல பகுடர் மணக்குது. வெயில்ல நடந்து வீட்டுக்குப் போனா.. “

 

“வேர்வை மணக்கும் “

 

“ம்ஹூம் நாறும். மணத்தாத்தே ஒங்ககூட ஒறவு.. நாறுனா வராத..ன்னு வீட்ல சொன்னா எப்படி இருக்கும்..?”

 

நாயக்கர் மௌனத்தைக் கைக்கொண்டார். அரிய தத்துவ விசாரமாய் தெரிந்தது.

 

“அதேஞ்சாமி , பிள்ளவேணும்னா பிய்யுஞ் சேத்துத்தான் கெடைக்கும். பிள்ளையத் தொடுவேன்.. அது பேழ்ற பிய்ய அள்ளமாட்டேன்..னா எப்பிடி..?’ – சொல்லிவிட்டு கடையைத் தாங்கிநின்ற கனத்த மரக்கால்களில் சாய்ந்து உட்கார்ந்தார். கடைக்கு அடியில்கிடந்த பெருக்குமாரின் ஊசிமுனையை ஒடித்து மறுபடியும் பல் குத்தத் தொடங்கினார்.

 

சடச்சாமியும் ஆட்டோக்காரன் சம்சாரமும் முதல் இரண்டுமுறை ஓடிப்போனபொழுது சாதிக்காரர்களை வைத்து பஞ்சாயத்து நடத்தி அவரவர் வீட்டில் சேர்த்து விட்டார்கள். அபராதமும் நாலு தப்படியும் வாங்கி அடங்கிப்போனார்கள். மூன்றாவது முறையாகவும் காணாம்ல் போனபோது சாதிக்காரர்கள் வரமுடியாதென கைவிரித்து விட்டார்கள்.

 

”சின்னஞ்சிறுசுகளா இருந்தா தாலியக் கட்டி ஒண்ணு சேத்து வக்கெலாம். இதுபோல வெளஞ்ச கட்டைகள சேத்து வச்சம்னா… சாதி கேவலப்பட்டுத்தேம் போகனும். பேசாம போலீஸ்டேசனுக்கு போங்க.. ”

 

குருசாமியும் அவரது மக்கமார்களும் தேடுவதை விட்டு விட்டார்கள். தானா வந்து சேரட்டும் என திண்ணக்கமாய் நிற்க, சடச்சாமியின் சம்சாரம் லச்சுமி மட்டும் பொங்கிப்பொங்கி அழலானாள்.

 

“எந்தவகைல அவனுக்குக் கொறவச்சே.. நாலுபேரு பாக்க மூணுபேரு சிரிக்கவச்சிட்டானே பாவி..! எதுல கொறையிதுன்னு இப்பிடி என்னிய கேவலப்படுத்திடான்..?”

 

சடச்சாமி சொந்தமாய் ஒரு டயர்வண்டி வைத்து லோடு அடித்துக் கொண்டிருந்தான். அபேஆட்டோ, மினிடோர் வாகனங்களின் வருகையாலும் , காளைமாட்டைக் க்டடி தீவனம் போட்டு மாளாத துன்பத்தாலும் வண்டிமாடு காலியானது.

 

பழைய இரும்புக்கடைகளுக்கு சரக்குப் பிரிக்கப் போனான். அங்கே லோடு ஏற்றவருகிற லாரிகளுக்கு ஆள்பிடித்து பாரம் ஏற்றி அனுப்புகிற ஏஜெண்டு வேலையும் பார்க்கலானான். ’டன்’ கணக்கில் கூலி. கடைகடையாய் சரக்குப் பார்த்து லாரியை நிரப்ப இரண்டுநாள் ஆகிவிடும். பழைய இரும்புச் சாமான் என்பதால் வேலையில் அவசரம் காட்ட முடியாது.

 

அப்படி, அங்கே சரக்குப் பிரித்துப் போட வந்தவள்தான் ஆட்டோக்காரனின் சம்சாரம். ஏதோ ஒருவகையில் சடச்சாமிக்கு மொறமைக்காரியாய் இருந்தாள். கேலியும் கிண்டலுமாய் துவங்கிய பழக்கம், ஒட்டிக்கொண்டது. காந்தத்தைப் போல விலக்க விலக்க ஈர்ப்பு அதிகமானது. ஓட்டத்தில் இறங்கலாயினர்.

 

கைப்பிள்ளையின் தொந்தரவு தாங்கமாட்டாமல் ஆட்டோக் காரன் போலீசில் புகார் கொடுத்துவிட்டான். வக்கீலும் , வஞ்சகமே இல்லாமல் வார்த்தைகளைக் கொட்டி எழுதித் தந்து விட்டார். ‘சடச்சாமியும் எனது சம்சாரமும் வீட்டிலிருத ரொக்கப்பணம் ஐம்பதினாயிரதையும் எடுத்துக்கொண்டு ஓடிப் போனார்கள்..  கண்டுபிடித்து என்னைக் கரைசேர்க்குமாறு கரம் சிரம் தாழ்த்தி பணிவன்புடன் …..’

 

குருசாமியின் வீட்டில் யாரும் உறங்க முடியவில்லை. இரண்டு பேர்களையும் வீட்டார்கள்தான் ஒளித்து வைத்திருப் பார்கள் என சந்தேகப்படுவதாக கூடுதலாய் ஒருவரியும் சேர்த்து விட, காவல்துறை, வீட்டைப் பெயர்க்கத் தொடங்கியது. இலவச சட்ட உதவிகேட்டு ஒரு வக்கீலை அணுகினார்கள். அவரோ, ’விவாகரத்து, பிசிஆர், கொலை என கொஞ்சம் ‘குவாலிட்டி’யாய் இருந்தாலே ‘பாய்ண்ட்’ கிடைக்கும். ஆகையால் இந்த கேசை லோக்கல் ஸ்டேசனிலேயே ‘டீல்’ ப்ண்ணிக் கொள்ளலாம் என அனுப்பி வைத்தார்.

 

நகரபிரமுகர் ஒருவரோடு போய் ஓடிப்போனவர்களைக் கண்டுபிடித்துத் தர இரண்டுநாள் தவணை வாங்கினார்கள்.

 

”போன் பேசுனத வச்சுக் கண்டு பிடிச்சீகளாம்ல…?-பெட்டிக் கடை நாக்யர் , உட்கார்ந்து கிடந்தவரை உசுப்பினார்.

 

அந்தக் கேள்விக்கு ஆயிரம்முறை பதில் சொன்னாலும் அலுக்கவில்லை குருசாமிக்கு. உட்கார்ந்தே பதில் சொல்லாம்தான் எழுந்து நின்று நாக்யரின் முகத்துக்கு நேராய் பேசவே விருப்பம் இருந்தது.

 

”ஆமாங்யா… சடயங்கிட்டருந்து போன் வந்துச்சு. நாம போட்டம்னா எடுக்க மாட்டேன்னான்.. எங்கடா இருக்கேன்னு கேட்டா அமத்தீருவான்… வந்திர்ரே வந்திர்ரேன்னு மட்டும் பதுலு சொல்லிட்டே இருந்தியான். கடசீல… மூத்தவெ இருக்கான்ல சாமி..”

 

”கணேசன்..?”

 

“அவெந்தெஞ்சாமி.. அவெ ஒரு விஞ்ஞானி..ங்ய்யா…!” இந்த இடத்தில் அவர் முகத்திற்கு தனியாக கரண்ட் எடுத்து பல்பு மாட்டியது போல அத்தனை வெளிச்சம். “நேரா அந்த போன் கம்பனிக்குப் போயி… கம்பூட்டரப் பாத்து அடிமாலிப் பக்கம் திரியறாகன்னு கண்டுட்டான்யா…

 

”ஓ.. கேரளாவுக்கு…!”

 

“ம்..! இத்தனைக்கும் பத்தாப்புதான்யா படிச்சிருக்யா..!. ஒரு காலேஜீ கீலேஜீ போயிருந்தியான்னா… வக்கிலா ஆகியிருப்பா  எடைல கோட்டித்தனஞ் செஞ்சு ரேடியோசெட்டு போடப் போய்ட்டான்…” –  பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

 

 

கணேசன் மைக்செட் ஆப்பரேட்டராக இருந்தாலும் தனது பொதுஅறிவால் டி வி மற்றும் ஏனைய எலக்ட்ரிக் -எலக்ரானிக்ஸ் பொருள்களை ‘பிரித்துமேயும்’ தொழிலையும் பழகிக்கொண்டான்.

 

“பெர்சூ.. இங்கவந்து என்னத்த ஓட்டிக்கிட்டு இருக்க..” மூக்கன் வேகமாய் வந்து குருசாமியின் தோள்த் துண்டை உருவி முகம் துடைத்தான். அவனைத்தொடர்ந்து கணேசன், அவனது பொண்டாட்டி, சின்னமருமகள், குருவம்மா, நடுவிலவள், பேரப்பிள்ளைகள்.. அத்தனைபேரும் பள்ளங்கண்டு பாயும் மடைநீரைப் போல மளமளவென, பெட்டிக்கடைக்கு வந்து நிஎறனர்.

 

“நாக்யரய்யா.. எனக்கு ஒரு கலர் குடுங்க.. நாக்கு ஒணந்து போச்சு.” – என வந்த்தும் முதல் வியாபாரத்தைத் துவக்கி வைத்தாள் குருவம்மா.

 

“ய்யே.. எண்ட்ட காசு இல்ல. வாணாம்.. அய்யா , எந்தச் சாமானும் குடுக்காதீக..” –குருசாமி அபயக் குரல் விடுத்தார்.

 

யாரும் அவர்குரலை சட்டை செய்யவில்லை. க்ணேசன் ஸ்டாலில் அடுக்கியிருந்த குண்டுபாட்டிலை விலக்கி ‘அமிர்தம்’ எடுத்து கட்டைவிரலால் குண்டை அமுக்கினான். குண்டு ‘விஸ்க்’ என்ற சத்தத்துடன் கீழிறங்கியதும் குபுகுபுவென நுரைத்துக் கொண்டு பொங்கி வந்தது அமிர்தத்தின் இனிப்பு வாசனி. அவ்வளவுதான், குருசாமியைத் தவிர்த்து அத்தனைபேரும் ஆளுக்க்கொரு ஏவாரம் கொடுத்தனர். முட்டாய், முறுக்கு, கலர், மட்டுமல்லாது பீடி தீபெட்டி என , அந்த மத்தியான – வெட்டைப் பொழுதில் சுமார் நூறுரூபாய்க்கு வியாபாரம் ஆனது. ஒவ்வொரு வ்ருக்கும் பொருளை நாயக்கர் தருகிற போதெல்லாம் ,’வேணாம்டா.. போதும்டா.. அய்யா.. எனக்குத் தெரியாது.. எங்கிட்ட காசு கேக்கக்கூடாது.. தரமாட்டேன்யா.. “ என அலறி கொண்டே இருந்தார். நாக்யருக்குத் தெரியும் இந்தக் காசுக்குப் பழுதில்லை என்பது.

 

“எல்லாரும் வாங்கிக்கிட்டீங்க..சரி.., வீட்டுக்குள்ள ‘பொண்ணு மாப்ள ரெண்டுபேரு இருக்காங்கள்ல.. அவுகளுக்கு..? “ நாயக்கர் துல்லியமாய்த் தூண்டிலைத் தூக்கிப்போட்டார்.

 

“ஆ மா அவெங்க மட்டும் என்னா அயலானுக்குப் பொறந்ததுகளா.. அங்க ரெண்டு கலரக்குடுத்து விடுங்கசாமியோவ் கடனோட கடனா சேரட்டும்..”  குருசாமி கண்ணை மூடிக்கொண்டு சொன்னார்.

 

இந்தக் களேபரத்தில் கணேசன் நாயக்கரிடம் கண்ணடித்து ஒரு கணேஷ் புகையிலை வாங்கிச் சேர்த்துக் கொண்டான். கூடவே,”ஆமா.. நீ பேசிக்க.. “ எனறு குருசாமியைப் பார்த்து சடைப்பாகப் பேசினான். “ கல்க் கஞ்சிகாச்சி அத கக்கூஸ்ல ஊத்துன கததே ஒம் பேச்சும் நடத்தையும்.” பொடிவைத்துப் பேசினான்.

 

குருசாமி கண்களை மேலே உயர்த்தியவாறு அவனைப் பார்த்தார். “ அறிவாளி என்னா சொல்றாரு..?” என்றார்.

 

அது தன்னை நோக்கிய கேள்வியாக எண்ணிய குருவம்மா, கலர் பாட்டிலை ஸ்டாலில் டக் கென சப்த்தத்தோடு வைத்தாள். தொடர்ந்து, “ம்..? சோத்தவிட்டு பிய்யத் திங்கறேன்னு சொல்றான்…” – கையால் வாயைத் துடைத்துக் கொண்டு சாவகாசமாகச் சொன்னாள்.

 

அவர்களின் அந்த சம்பாஷனை நாக்யருக்குப் புரியவில்லை.

 

“ நீங்க கேளுங்க நாக்யரய்யா..! ஓடுனவங்கள எம்புட்டு அலச்சல் அலஞ்சி, எம்புட்டுக் காசு செலவழிச்சி, டேசன்லவச்சு பேசிமுடிச்சு பிரிச்சு வச்சிருக்கம்..இன்னிமே அவங்க சாவகாசத்த விட்றனும்னு  பேசி எழுதிவாங்கியும் கூட்டிவந்தாச்சு. இல்லியா.. ஆனா இந்த தாயோளி மகெ (குருசாமி) அந்த ஓடுகாலி முண்டைக்கிச் சப்போட் பண்ணி பேசறாப்ல..ங்யா ..!” – கணேசன் ஆவேசம் பொங்கச் சொன்னான்.

”அந்தமுண்ட தனிய இருக்கான்னா… நீ கூட வச்சு வாழு..! என்னாடா,..!” குருவம்மாளும் சேர்ந்து கொள்ள மறுபடி காச்முச்சென சச்சரவு உருவானது. குருசாமி மட்டும் எதும் பேசவில்லை.

 

எல்லோரையும் நாக்யர் அமைதிப் படுத்தினார். “ ஒங்க பேச்சே எனக்குப் புடிபடல..யாராச்சும் ஒராள் தெளிவா சொல்லுங்க..” என்றவர் மறுபடி தன்னைக் குழப்பிவிடுவார்களோ என்பதால் “நானே சொல்றேன் பதில் மட்டும் சொல்லுங்க… ஒந்தம்பிய அவெ தன்பொண்டு பிள்ளைகளோட் சேந்துக்கணும் அதுபோல அந்தப் பிள்ளையும் அந்த ஆட்டோக்காரனோட போயி குடும்பம் நடத்தணும்னு பேசி எழுதி வாங்கியாச்சு.. இல்லியா . அதான..!”

 

“அதேதான்ங்யா.. ஆனா .. அந்த ஆட்டாக்காரெ தம் பொண்டாட்டிய வேணாம்னுட்டான்…!  வீட்ல சேக்க மாட்டேனுட்டான்“

 

”யே..ன்..? “

 

“ என்னா…ங்..யா.. அடுத்தவெங்கூட ஒண்ணுக்கு மூணுதரம் ஓடுன ஓடுகாலிய எந்தப் புருசெ ஏத்துக்குவான் .நாம அறியாத ஓசனயா..?” – குருவம்மாள் பதில் சொன்னாள்.

 

சடச்சாமிய மட்டும் அவெம் பொண்டாட்டி ஏத்துக்கலியா.. இந்தக் கேள்வி யாருக்கும் எழவில்லை. நாயக்கருக்கும்தான்.

 

“ சரி.. இதுல குருசாமிய எதுக்குக் குத்தஞ் சொல்லுறீக..” மெதுவாய்க் கேட்டார் நாயக்கர்.

 

“ அது என்னா சொல்லுதுனு நீங்களே கேளுங்கமே… நரகலத் தொட்டுத்தொட்டு பொழப்பே நாத்தம் புடுச்சுப் போச்சு.. சாமி..!” – புலம்பினாள் குருவம்மாள்.

 

“ யே… குருவு… வேணாழா.. அம்ம பெரச்சன தீந்திருச்சினு வெலகீறக் குடாது. ஆர் வகுத்துப் புள்ளன்னாலும் அதும் ஒரு பொம்பளபிள்ளதான..பாவம்..!.” – குருசாமி பவ்யமாய்ச் சொன்னார்.

 

குருவம்மா கையை மடக்கிக் கொண்டு அவரது குவட்டில் குத்த வந்தாள். “ ஒன்  நாயத்த இவர்ட்டச் சொல்லு இவருஞ் சிரிக்கட்டும்.. “ – என்றாள்.

 

“ அய்யா நா ஒண்ணும் சொல்லலீங்யா.. அந்தப் புள்ளிய கட்டுன ஆட்டாக்காரணும் ஒதறிட்டான், கூப்புட்டுப் போன இவனும் ஒதுங்கீட்டான்… அது, கைப்பிள்ளய வச்சிக்கிட்டு நடுத்தெருவில நிக்கிது.. அதுக்கொரு நாயம் வேணாமா சாமீ…! “

 

குருசாமி சொல்லி முடிக்க திரும்பவும் அவர்களுக்குள் வாய்ச்சண்டை ஆரம்பித்தது. அதற்கு பதில் சொல்ல முடியாமல் தய்ய தக்காவென்ற நடையுடன் கடையை விட்டு நகராலானார்          குருசாமி.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “சடச்சாமியும் குருசாமியும்”

  1. ஊரில் இங்கொன்றும் அங்குன்றுமாக நடக்கும் நிகழ்வுதான். இதை கள்ள காதல் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடுவார்கள். காதலில் நல்லது கெட்டது ஏது.நடந்தது எதுவாயினும் பாதிப்பு பெண்ணிற்கு மட்டுமே… மலம் அள்ளி குடும்பத்தை நகர்த்திய வயதான தகப்பனின் நியாயமான பேச்சும் யதார்த்தமான மக்களின் வாழ்வியலும். நாயக்கர்கடையில் நின்றுகொண்டு அவர்கள் பஞ்சாயத்தை வேடிக்கை பார்த்தது போன்ற கதை அமைப்பு சிறப்பு தோழர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: